அத்தியாயம் 55
வானம் உருமாறியது. பகற்கதிர்கள் படர்ந்தாலும், காற்றின் சுழற்சி வேறுபட்டது. அவனி நதியின் கரையோரத்தில் அமைந்திருந்த களப்பயிற்சி மைதானத்தில் இன்று கூடி இருந்தனர் படை வீரர்கள்.
பரிதி ஒளிரும் பசுமை மேடுகள், வரிசையாக வீரர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர். அனைவரும் மன்னன் மேகோனின் வருகையை எதிர்பார்த்து.
பெண்கள் பிரிவில் முதல் வரிசையில் மேகநதி நின்றிருக்க, அனைவருக்கும் நேர்கொண்டு தலைமையாக, தளபதி நயனன் நின்றிருந்தான்.
மேகநதி, நயனன்… இருவரும் எதிரே நிற்கையில் கண்கள் நேரில் மோதியதும் இருவருக்குள்ளும் ஒரு நொடித்தடை ஏற்பட்டது.
முன்தினம் இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடலை நினைவு கூர்ந்தனர்.
மேகோனை கோவிலில் பார்த்து அவனது அப்பட்டமான விலகலை ஏற்க முடியாது வருத்தத்தோடு வந்து கொண்டிருந்தவள் எதிரில் எதிர்பட்டான் நயனன்.
“வணங்குகிறேன் தளபதியாரே!” என்றவள், அவன் குதிரையிலிருந்து இறங்கியதும், தன்னிடம் பேச விழைகிறான் என்பதை புரிந்துகொண்டு,
“என்ன விடயம் நயனரே?” என வினவினாள்.
“எதிரில் உள்ளவர்கள் வந்ததன் நோக்கம் அறிந்திடும் வல்லமை இருக்குமாயின்… நேசம் சுமக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள் மட்டும் விளங்கவில்லையோ?” என்றான்.
“தங்களின் நண்பருக்கான தூதாக வந்திருக்கிறீர்கள் என்றால்… எம்மிடம் பதிலில்லை நயனரே!” என்றாள்.
அந்நொடி வரை மேகோன் சிறு பார்வையை கூட தனக்கு அளிக்கவில்லையே என்று மனதோடு குமுறியவள் தான்… இப்போது நயனனிடம் மறுப்பினை அழுத்தத்தில் அடர்த்தியாக மொழிகின்றாள்.
“தூது அனுப்பி யாசிக்கும் கோழையல்ல நன் நண்பன். அவன் வேண்டி ஒன்று ஈடேற வேண்டுமென்றில்லை. நினைத்துவிட்டால் போதும் கரம் சேர்த்திடும் வல்லமை கொண்டவன். வேண்டுமென்ற மனதில் வேண்டாமென்ற எண்ணம் பதித்து தள்ளிச் செல்பவனுக்கு ஒரே காரணம் தான். மறுக்கும் பெண்ணின் நிழலை தீண்டுவதும் இழுக்கு…” என்ற நயனனின் மேகோன் குறித்த வார்த்தைகள் அவளும் அறிந்தவையே! இருப்பினும் அவன் சொல்லிக் கேட்டிட கர்வமாக இருந்தது.
“நேசம் தைரியத்தைக் கொடுக்கும். எத்தகைய சூழலையும் சமாளித்திட முடியுமென்ற திடமளிக்கும். ஒருமுறை சரியெனும் பாதையில் மனதை வழி நடத்திப்பாரேன். உமது சிறு தலையசைப்பு போதும். பெரும் கண்டத்திலும் அவனது அகத்தில் உம்மை நிறுத்திக்கொள்வான்” என்ற நயனன், “முதல்முறை அவனது வதங்கிய வதனம் கண்டோம்” என்றான்.
“நயனரே!” பாவையாளுக்கு அதிர்வு.
சற்று முன்னர் அவள் கண்ட போதும் முகத்தில் தெளிவோடு மிடுக்காய் காட்சியளித்தானே! தான் கூறிய மறுப்பு அவனில் எவ்வித பாதிப்பையும் உண்டு செய்யவில்லையா? என வருந்தியவளுக்கு நயனனின் இறுதி வார்த்தைகள் நெஞ்சத்தை கசக்கி பிழிந்தது.
“அவரது மனதிற்கு ஒன்றுமில்லையே?” கலங்கிய குரலில் வினவினாள்.
“ஒன்றும் ஆகக்கூடாது என்பதே எம் வேண்டுதல்” என்ற நயனன், “ஒருமுறை… ஒரேமுறை, மேகாவிற்காக சிந்தித்துப் பாரேன்” என்றான்.
அக்கணம் இடும்பன் பேசியவை நினைவில் உதிக்க…
“படி அளக்கும் ஆண்டவனுக்கு பக்தியுடன் தொண்டு செய்திடலாம்… உடமைபட்டவளாக இயலுமா? பக்தி எனும் எல்லைக்குள் நின்றால் தான் இறை வழிபாடும் அழகாகும்” என்றாள்.
“உம் சொல்லுக்காக விலகி நிற்பவன், உம்மை நெருங்கிட நினைத்துவிட்டால், உமது மறுப்புகள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். நீ, மேகாவைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை” என்ற நயனன், “அவனாக விரும்பி நாடியது உம்மைத்தான். அதற்காகவே உம்மிடம் இதுகுறித்து பேசினோம். முடிவு உமது கையில்” என்றான்.
“எப்பொழுதும் நன் முடிவில் மாற்றமில்லை நயனரே” என்றாள்.
“சிறப்பு” என்றவன், “நாளைய தினம் அவனி நதியோர பயிற்சிக்களத்தில் படை வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்குகின்றன. உமக்கு அழைப்புள்ளது. வந்துவிடு” என்றான்.
“ஆகட்டும்” என்றவள் அவன் செல்ல வழிவிட்டு நகர,
“நண்பனுக்காக பேசிவிட்டேன். தங்கைக்காக சில வினாக்கள் கேட்டுக்கொள்ளட்டுமா?” என்றான். அவளை அழுத்தமாக பார்த்து.
“அண்ணன்!” அவளின் மெலிந்த அவ்விளிப்பே, அவனுக்கு கேட்க நினைத்த வினாக்களுக்கெல்லாம் விடை கூறியிருந்தது.
“உம் மனதிலும் விருப்பமுள்ளது” என்றான், தலையை அசைத்தவாறு.
“விருப்பமிருந்து என்ன பயன்?” என்றவள், “ஊர் அறிந்தால் எம்மை தூற்றுவாறே” என்றாள்.
“தூற்றும் ஊர் மேகோனின் ஒற்றை சொல்லுக்கு அடங்கிவிடுவர்.”
“உண்மை தான். அவரின் கண்ணின் அசைவிற்கு மகிழ தேசமே அசைந்து கொடுக்குமே” என்று புன்னகை சிந்தியவள், “இழி பேச்சு எமக்கு மட்டுமானதாக இருந்துவிடாது… சாதாரணப் பெண்ணின் மீது அகவை கோளாறு கொண்டு அரசர் நேச வயப்பட்டார் என்று அவரின் நாமத்திற்கும் கலங்கம் எழுப்புவர். சிலவற்றை சந்தித்து போராடி கடந்துவிடலாம்… பின்னால் மகிழ்வை கொடுக்குமென்று. ஆனால், இதில் போராடி அடைதலுக்கு அமைதியாக இருத்தலே நன்று. மானத்தின் தரத்தை குறைப்பதல்லவா இழி சொற்கள்” என்றாள்.
“இத்தனை தூரம் யோசித்திருக்கையிலே… உம் மனதின் விருப்பத்தின் அளவு விளங்குகிறது. அவனுக்காகாவது உம் பிறப்பு அரச வம்சத்தில் இருந்திருக்கலாம்” என்றான்.
“நம்மால் தேர்ந்தெடுக்க முடியாதல்லவா?” என்றவள், “இப்பேச்சுக்கள் இதுவே இறுதியாக இருக்கட்டும்” என்றாள்.
“நாட்டின் தளபதியாருக்கே கட்டளையா?” நயனன் மீசையை முறுக்கிக் கேட்டிட, “பயம் கொண்டோம்” என போலியாக நடித்தாள்.
அதில் நயனன் சத்தமிட்டு சிரித்திட,
“தாங்கள் மணம் செய்துகொள்ள விருப்பமில்லையெனக் கூறிவிட்டீர்களாம்? இன்று விடியல் பொழுதிலே பெரியதந்தை நன் தந்தையிடம் கூறி குறைப்பட்டார்” என்றாள்.
மேகநதியின் பெரிய தந்தை வல்லாளன், நயனனின் தந்தை. மேகநதியின் தந்தை இடும்பனின் அண்ணன்.
“நமது குடும்பத்தில் எமக்கு தெரியாமலும் உரையாடல்கள் நிகழ்கின்றனவா?” என்ற நயனன், “நன் உயிருக்கு உத்திரவாதமில்லா நிலையில் ஒரு பெண்ணை மணந்து, அவளது வாழ்வை அச்சத்திலே வைத்திருக்கவா?” என்றான்.
“படை வீரர்கள் யாவரும் மணம் முடிக்கவில்லையா என்ன?”
“நன் மனம், நன் கொள்கைகள் வேறு” என்றவன், “தந்தையிடம் யான் பேசிக்கொள்கிறோம்” என்று குதிரையில் ஏறிட,
“தங்களுக்கு ஒரு பெண்ணின் மீது நேசம்… அதற்காக மணத்தை மறுத்து வருகிறீர்கள் என்று நினைத்தேன்” என்றாள்.
“எல்லா நேரமும் நமது கணிப்புகள் சரியாகிவிடுவதில்லை” என்ற நயனன், “விரைந்து இல்லம் செல்” என்று புறப்பட்டிருந்தான்.
இருவரும் அண்ணன், தங்கையாக இருப்பினும், ஒருவரின் ஆசையை மற்றவர் நிறைவேற்றிட மறைமுகமாக முயன்றனர். பலன் என்னவோ இருபக்கமும் சுழியம் தான்.
அமைதியான இடத்தில் சட்டென்று மன்னனின் துதி பாடி ஆரவாரம் முழங்கிட, இருவரும் சிந்தையிலிருந்து நிகழ் மீண்டனர்.
“வணங்குகிறேன் அரசே” என்று சொல்லியவாறு, மேகோன் பக்கம் திரும்பிய நயனன், அவனுடன் பயிற்சி உடை அணிந்து வரும் வானவாமதியை கண்டு அதிர்ந்து போனான்.
வானவாமதியை சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
அவள் மேகோனின் தலைமையில் வீர கலைகள் பயின்று வருகின்றாள் என்பது தெரியும். ஆனால் இப்படி படைப்பிரிவில் வந்து இணைவாள் என எண்ணவில்லை.
இனி அவள் நாள்தோறும் தன்னுடன் இருப்பாள் என்பதிலேயே நயனனின் காதல் மனது சோர்வடைந்தது.
“எம்மை கண்டதும் முகத்தில் ஒளி குன்றிவிட்டது. காரணம் யாதோ?” மேகோன் நயனனின் தோளில் தட்டியவாறு வினவினான். காரணம் அறிந்துகொண்டே!
“இளவரசியார் இங்கெதற்கு?”
கேட்வனை மேகோன் மேலும் கீழுமாக ஆராய்வாக பார்த்து வைத்தான்.
அப்பார்வையில் நயனன் தடுமாற,
“இளவரசியார் படையில் இல்லையென்றால் எப்படி தளபதியாரே! நாளை போர் என்றால் அவருக்கும் வாள் ஏந்திட உரிமை உள்ளதே” என்றான் மேகோன்.
“யான் அவ்வர்த்தத்தில் கேட்கவில்லை” என்ற நயனன், முறைப்போடு பெண்கள் பிரிவு பக்கம் செல்லும் வானவாமதியை தவிப்போடு பார்த்தான்.
“ஆமென்று ஏற்றுக்கொண்டுவிட்டால்… இத்தவிப்புகளுக்கு இடமிருக்காதே!” மேகோன் அர்த்தமாகக் கூற,
“இங்கு இப்போது தாம் எமக்கு அரசர். இளவரசியாருக்கு உடன் பிறந்தோன். அந்த வகையில் எம்மிடம் நடந்து கொண்டால் போதுமானது” என்றான். தங்கைக்கு மேலாக அண்ணன் படுத்தி வைக்கின்றானே எனும் கடுகடுப்பு நயனாவுக்கு.
“தளபதியார் கட்டளையிட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் என்று உடனே பணிவாகக் கூறிய மேகோன், “எதிர் திசையில் காற்று திரும்பத்தானே வேண்டும்” என்றான்.
நயனன் புருவம் சுருக்கிட…
“உமக்கு எல்லாம் விளங்கும். போலி பாவனைகள் எம்மிடம் வேண்டாம்” என்றான்.
“ஆக வேண்டியவற்றை கவனிப்போமே!” நயனன் வீரர்கள் பக்கம் சென்றிட, பெரும் களத்திற்கு தலைப்பில் அமைந்திருக்கும் மேடையில் வீற்றிருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்தான் மேகோன்.
சிறு ஷணம் கூட மேகோனின் பார்வை மேகநதியின் மீது படியவில்லை.
பார்த்தால் தானே அன்பு கொண்ட மனம் வதைக்கொள்கிறதென்று முற்றும் முழுதாக தவிர்த்துவிட்டான்.
மேடையில் அமர்ந்தபடியே தொலை நோக்கி வாயிலாக அப்பெரும் பரந்த பரப்பில் சிறு சிறு குழுவாக பயிற்சி செய்திடும் ஒவ்வொருவரையும், அவர்களின் யுத்த முறைகளை நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் மேகோன்.
சட்டென்று ஓரிடத்தில் அவனது விழிகள் நின்றன. மேகநதி மீது. அவளது வாள் வீச்சில் அவனுக்கு தனி மயக்கமுண்டு. அவன் அவளில் கட்டுண்டதும் அவ்வாள் வீச்சில் தானே. தற்போதும், பார்க்கவே கூடாதெனும் முடிவில் இருந்தவனை அவள் பக்கம் கட்டி இழுத்திருந்தது. அவள் வாள் வீசும் வேகம்.
அவளில் லயித்து நின்றவன் சில நொடிகளுக்கு பின்பே அவளிடம் உள்ள மாற்றத்தைக் கவனித்தான்.
அவளது வாள் பற்றிய பிடியில் சிறிது சளித்தல், மூச்சில் சிறிய ஓசை, அவள் உடலில் வலிமைத் தளர்வு. மொத்தத்தில் அவளிடம் வழமையான அழுத்தமில்லை. இப்படியிருந்தால் முதல் வீச்சிலேயே வீழ்த்தப்படுவாள்.
மேகநதி வாளை சுழற்றி நின்றபோது, அவளது எதிரே நயனன்.
நயனனது பார்வை மெதுவாக மேகநதியை கடந்து, அவளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வானவாமதியினை தொட்டது.
அழகான, வெளிச்சம் பரவிய முகம். முதன் முதலாக தன்னைப் பார்த்து “யாம் உம்மை நேசிக்கின்றோம் நயனரே” என்று சொன்னதும், அதற்கு அவன் பதிலாக மெதுவாகத் திரும்பி விட்ட அந்த தருணம் தற்போதும் மனதிற்குள் ஓசை விடும்.
“வாளின் பிடியில் அடர்த்தியில்லை இளவரசியாரே… வீச்சின் ஓசை மாறுபட்டு ஒலிக்கின்றது. வாளினை கொடுத்தால் பட்டைத்தீட்டிட அனுப்பி வைத்திடுவேன்” என்றான்.
அவனுக்கு அவளிடம் பேசிட வேண்டும். அவளருகில் ததும்பும் மனதை அடக்கிட முடியாது பக்கம் வந்துவிட்டாலும், காதலாக ஏற்று பார்த்திட, நெருக்கம் கொள்ள அவனால் முடியவில்லை.
அவனின் மறை வேதனைகளை உணர்ந்த வானவாமதி, தனக்காக யாரும் துன்புறக் கூடாது என தன்னுடைய வாளினை அவனிடம் அளித்துவிட்டு மௌனமாக விலகியிருந்தாள். அங்கிருந்து செல்லும் முன், சில நாழிகைகளுக்கு முன்பு தான் தோழியாக அறிமுகமாகிய மேகநதிக்கு சிறு தலையசைப்பைக் கொடுத்தாள்.
வானவாமதிக்கு நயனனின் விலகல் புரிந்திட, தன்னுடைய சகோதரனின் கூற்றுக்கு மதிப்பளித்து மரியாதையாக ஏற்று, மீண்டும் நயனனிடம் அருகாமையை முயற்சி செய்யாமல் அகன்றிருந்தாள்.
நயனனும் வானவாமதியின் அன்பிற்கு மௌன மரியாதை செலுத்தியவனாக தன்னுடைய விலகலை ஆழப்படுத்தி தனது கவனத்தை வீரர்களிடம் நிலைக்கவிட்டான்.
இரண்டு மறுப்புகளும், ஒரே இடத்தில் ஒன்று கூடியது.
வேண்டியவர்கள் வேண்டுமென்ற எண்ணத்தில் ஆழம் கொண்டிருக்க, வேண்டாமென்றவர்களின் நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சரியத் துவங்கியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
20
+1
+1
1