Loading

அத்தியாயம் 54

இரவு சுழலும் நிலவொளியில் கூட அமைதியில்லை.

வீட்டின் பின்னாலிருக்கும் கால்நடை தொழுவத்தின் இரும்பு மரக் கூடாரத்தின் ஓரத்தில் தனிமையாய் நின்றிருந்தாள் மேகநதி.

பனிகாற்றின் சில்லிப்பு மெல்ல அவளது தோள்களில் படிந்து கொண்டிருந்தது. ஆனால் அவளது உள்ளத்தில் கிளம்பி அடர்த்தியடையும் தீக்காற்றே அவளுக்கு பனியைவிட அதிகமாக தேகத்தை கவ்வியது. இறுக்கி பிடிக்கும் உணர்வு.

“நாளை?” என்று மெதுவாக தன்னிடையே கேட்டுக்கொண்டாள்.
“நாளை அவரை நேரில் பார்க்க வேண்டியிருக்கிறது… ஓர் வீரர் போல… ஆயிரக்கணக்கான பார்வைகளின் மத்தியில்… நிமிர்ந்து நிற்க வேண்டும்… ஆனால் என் இதயம்? அது எங்கே நிமிர்கிறது?”

அவள் விரல்களில் பிடிக்கப்பட்டிருந்த கம்பி வேலி அதே நேரத்தில் வெறுப்பின் வேகத்தையும், பயத்தின் நடுக்கத்தையும் சுமந்தது.

தன்னுடைய மறுப்புக்கு மரியாதை அளித்து தள்ளி நிற்பவனின் செயலில் குற்றம் சொல்லிட முடியாதே!

அவனது விலகலில் பெண்ணவளின் நெஞ்சம் வெதும்புகிறது.

கோவிலில் அவனை கண்டதும், அவனிடம் தாவி ஓடும் மனதை அடக்கப்பட்ட பாட்டின் நிலை அவள் மட்டுமே அறிவாள்.

அந்நேர தவிப்புகளின் மிட்சம் இந்நொடியும் அவளுள் எஞ்சி நிற்கிறது. இது தான் நேசத்தின் பித்துநிலை என்று உணர்ந்தபோதும், அவனது நிலைக்காக எட்டி நிற்கின்றாள். மனதில் திடத்தை ஏற்றி.

‘அவரது கண்கள்… பயிற்சி களத்தில் மேகோனை மீண்டும் எதிர்பார்க்கும் அந்த கணம்… நன் கண்கள் அவரை ஓர் அரசராக பார்ப்பதா? அல்லது?’ நினைத்த கணம் கன்னத்தில் நீர் இறங்கியது. புறங்கை கொண்டு அவசரமாக துடைத்துக் கொண்டாள்.

பல ஆண்டுகள் கொண்ட காதலல்ல… ஆயினும் உயிரோடு ஜீவித்து உறைந்துவிட்ட உணர்வு. கொண்ட நேசம் ஆழம் கொண்டிட, நூற்றாண்டுகள் ஆக வேண்டுமென்றில்லை… தூய அன்பினால் துணையை தனக்குள் ஸ்வீஹரிக்கும் உணர்வில் இதயத்திற்குள் ஆழ வேர்ப்பிடித்திடும்.

மேகோனின் நினைவுகள் அவளைத் தொடர்ந்து துரத்தின.

மேகோனின் சிறு அசைவும் அவளின் மனப்பெட்டகத்தில் அழியா சுவடாய்.

அவளிடம் அவன் கூறிச் சென்ற இறுதி வார்த்தைகள்…
“நன் வாழ்வின் மொத்தம் எம் நதியாவாள்.”

அந்த ஒரு வாக்கியம் போதுமானது… நிழலில் மறைந்திருந்த அவளது இதயத்தை வெளிச்சத்தில் இழுத்து வந்தது. ஆனால் தற்போது அவன் விலகியது, அதே ஒளியில்… மீண்டும் ஒரு நிழலாக.

அவளது உள்ளம் மெதுவாக உருகியது. அவனை மறுக்கும் சொற்கள்… அவளே கூறியது, ஆனால் அந்த வார்த்தைகளின் விசையால் அவனது மனமும் சிதைந்தது.

“என் மறுப்பு அவரை, அவரது விழிகளில் என்னைக் காண மறுக்க வைத்திட்டதே!” மனதில் சுழன்ற எண்ணங்களால் உடலிலும் தளர்வு கண்டாள்.

நாளைய பயிற்சிக் களத்தில்… மேகோனை அவள் எதிர்கொள்ள வேண்டும். ஒரு வீரராக தன்னைத்தானே மீட்டுக்கொண்டு நிற்க வேண்டிய தருணம்.

“யான் நடிக்க வேண்டிய சிரிப்புகள்… வீரமாய் எதிர்க்க வேண்டிய பார்வைகள்… ஆனால் நன் உள்ளம்? அது… அவர் நேர்கொண்டு வருகையில், பார்வை எம்மீது படிகையில், நன் நெஞ்சம் கசிந்து சிதறிவிடுமே!” இதயத்தை அழுத்தி பிடித்து உணர்வை சிறு விம்மலில் வெளியேற்றினாள்.

காற்று மெல்ல தூசி எடுத்துச் சென்றது. வானத்தில் மேகங்கள் நகர்ந்தன. அவளது மனதில் மேகோனைப் போல்… அவளது நினைவுகளும்.

அந்த தருணத்தில், திடும்பென ஒலித்த இரவுக்குரலில், மெல்ல திரும்பினாள்.

“நாளை பயிற்சி களம் செல்ல வேண்டுமென்றாய்… இந்நேரம் வரை இராவில் உலாவிக் கொண்டிருக்கிறாய்?” கேட்டது அவளின் அன்னை கற்பகாம்பாள்.

“வருகிறேன் அன்னையே” என்றவள், தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் சென்றிட, அவளின் சோர்வை அவதானித்தபடி பார்த்திருந்தார் கற்பகாம்பாள்.

_______________________

உணவு நேரம் முடிய, மண்டபத்தின் பக்கவாசல் வழியாக மேகோன், மயில்வர்ணருடன் தனிக்கூடத்திற்குள் நுழைந்தான். அந்த அறை, தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், கம்பீரமான அமைப்பு கொண்டது. சுவரில் தொங்கியிருந்த தாமிர ஓவியங்கள், மேமகிழ தேசத்தின் முந்தைய போர் காட்சிகளைத் தாங்கி நின்றன. நடுவில் பெரிய சுற்று மேசை. அதன் மேல் படர்ந்திருந்த தகடுகளில், செம்புக்கோலம் வரைந்த வரைபடம் ஒன்றை விரித்தான் மேகோன்.

“இது எம்முடைய நம்முடைய மேமகிழப் பரப்பின் எல்லைக் கோடுகள். உமது குறுநிலப் பகுதியும் இதில் அடக்கம்” என்றான்.

மயில்வர்ணன் தலையசைத்து ஆமோதித்தான்.

“தலைமை சரியாக இருந்தால்தான் அடி நாதம் வளமாக இருக்கும்.”

மேகோன் கூறவரும் உட்பொருள் மயில்வர்ணனுக்கு விளங்கவில்லை.

“எம்மை அழைத்ததற்கான காரணம் விருந்தல்லவோ” என்றான் சிறு புன்னகையுடன்.

“ஆம் காரணம் மட்டுமே” என்ற மேகோன்,

“நன் ஆட்சி நலமாகத் தொடர்ந்திட, தங்களின் ஆதரவு அத்தியாவசியமாயிற்றே! அதற்கே இந்த அணுகுமுறை” என்றான்.

“எதுவாகினும் நேரடியாக தெரிவித்தால் நன்று” என்ற மயில்வர்ணனை பார்த்து, ஒற்றை புருவம் உயர்த்திய மேகோன் தன்னுடைய கையிலிருந்த நீண்ட கம்பு குச்சியால், வரைபடத்தில் மயில்கண் பகுதியை சுட்டிக் காட்டினான். அங்கிருந்து தங் பரப்பிற்கு கோடிட்டு காண்பித்தான்.

“தேசத்தின் வட கிழக்கு பகுதியில் தங் தேசம் இருப்பினும், பெருங்கடல் பாதையாக, மயில்கண் வர்த்தக பாதை வழியாக மட்டுமே அவர்கள் மகிழப் பரப்பில் ஊடுருவ இயலும் அல்லவா?” என்ற மேகோனை நேர்கொண்டு பார்க்க முடியாது பார்வையை தழைத்தான் மயில்வர்ணன்.

“எதிரியென்று யாருமில்லை. நட்பு ஒன்றே போதுமானது என்ற எண்ணம் எம்மிடம் உள்ளது” என்று தன்னுடைய குரலில் கம்பீரத்தைக் கூட்டிய மேகோன்,

“நட்பு எண்ணத்தில் அல்ல… செயலில் இருத்தல் வேண்டும். அதற்காகவே இக்கூட்டம். தங் மன்னர் தூதிற்கு எவ்வித பதில் தாங்கள் கொடுத்தீர்கள் என்ற விளக்கம் எமக்கு வேண்டாம். உமது தேசப்பற்று யாமறிவோம்” என்றவனை விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தார் மயில்வர்ணன்.

மேகோன் பார்வையால் ஒரு தழுவல்.

மயில்வர்ணன் வதனம் விரிந்தது.

“எம்மை தாக்க வந்த வீரர்கள் இருவர் தற்போது உயிருடனில்லை. அவர்களிடத்தில் தங்களுக்கான இரண்டாம் தூது இருந்தது” என்று மயில்வர்ணன் கைகளில் மிகச்சிறிய பட்டுத்துணி ஒன்றை கொடுத்தான்.

அவ்வளவுதான். அவனுக்கான பொருளை அவனிடம் சேர்பித்துவிட்டான். அதுகுறித்து வேறொன்றும் மேகோன் கேட்கவில்லை.

“மயில்கண் கீழங்காடுகள் வழியாக வந்த பரிமாற்றச் சாலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. உங்கள் பகுதி வழியே செல்லும் புதிய பாதை ஒன்றை உருவாக்க வேண்டும்” என்றான் மேகோன்.

“ஆகட்டும் பேரரசே?”

“அது மட்டுமல்ல” என்ற மேகோன், “தங் தேசத்திற்கும் நமக்குமிடையேயான வாணிப பாதை பல மயில்கள் சுற்றல்லவா… இதனால் கால விரயம் மற்றும் பரிமாற்றத் தாமதங்கள் ஏற்படுகின்றன. ஆதலால், இரு தேசத்திற்கும் நேரடி வர்த்தக பாதையை அமைக்க இருக்கின்றோம்” என்றான்.

“இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க யான் என்ன செய்ய வேண்டும் அரசே?”, மயில்வர்ணன்.

“நம்பிக்கை குறித்த செயலன்று மயில்வர்ணரே! எச்சரிக்கை… எம் தேசத்தின் மீது ஆபத்துதவிகள் படர்ந்திடக் கூடாதெனும் எச்சரிக்கையின்” என்ற மேகோன், “இதிலும் நன்மை தானே… பல நாழிகை கடல் பயணத்தை தவிர்க்கலாமே” என்றான்.

“அரசரின் முடிவுக்கு யாம் என்றும் கட்டுப்படுவோம்” என்ற மயில்வர்ணன், “பாதை மேகப் போதியத்திலிருந்தா அரசா?” என்று வினவினான்.

“எண்ணம் செயல்முறையாகும் சமயம் யாவரும் அறிவோம்” என்று மென்னகை சிந்தினான் மேகோன்.

மேகோன் அருகில் வந்து, மெளனமாக ஒரு தகட்டினை உயர்த்திக் காட்டினான். அதில் செதுக்கிய பண்டைய எழுத்துக்கள். மகிழ வம்சத்தின் கடைசி யுத்தக் குறிப்பு.

“இதன் படி, தங்கள் பரப்பின் கீழ் புதைந்த ஒரு பழமையான அரண்மனையின் பிணைப்பு பாதை இருக்கலாம்.”

மயில்வர்ணன் கண்களில் சில்லென ஒளி.

“தாங்கள் சொல்வது?”

“அந்த பாதை, போர் நேரத்தில் பாதுகாப்பு பாதையாக இருந்திருக்கலாம். நமது மூத்தோர் தேவ மகிழோன் பயன்படுத்தியது. எமக்கும் சில தினங்களுக்கு முன்னர் தான் இக்குறிப்பு கிடைக்கப்பெற்றது. பெரும் ஆபத்து சூழும் வேளை… இப்பிணைப்பு பாதை நமக்கு உதவலாம். மகிழ் அரண்மனையின் பின் புறம் துவங்கும் இப்பாதை உம் அரண்மனை பகுதி கடந்து தேவ மகிழோன் ஆலயத்தில் முடிவடைகிறது. மக்கள் அறியாது பாதையை சீர்படுத்த வேண்டும். இப்பணியை உம் பொறுப்பில் ஒப்படைக்கவே இச்சந்திப்பு” என்றான்.

மயில்வர்ணன் அனைத்தும் உள்வாங்கியவராக தலையசைத்தார்.

மண்டபத்திற்கு மீண்டும் வந்த மேகோன், நயனனிடம் கண்களால் குறிப்புக் காட்டினான்.

_________________

இருள் நிழல்கள் மிதமான வாடைக் காற்றாக அரண்மனையின் தோட்டத்தில் பறந்துகொண்டிருந்தன. பூங்காற்றில் அசையும் காட்டு மல்லிகைப்பூக்கள் அவள் நெஞ்சின் பதட்டத்துக்கே ஒத்த இசைபோல் இருந்தன.

அரண்மனைக்குப் பின்புறம் உள்ள தன்னுடைய மண்டபத் தோட்டவழியில், சுனையருகே நின்று கொண்டிருந்தாள் அவள். மகிழ தேசத்தின் இளவரசியான வானவாமதி. மேகோனின் தங்கை.

அவள் பார்வையில் போர்க்கலத்தில் பல்லாயிரம் வீரர்களுடன் நின்று தன்னம்பிக்கையுடன் யுத்தம் புரியும் நயனன் நிரம்பியிருந்தான்.

அவளின் எண்ணத்து நாயகனே முன் தோன்றினான்.

“வணங்குகிறேன் இளவரசியாரே!” சிரம் பணிந்து மொழிந்தவன், “அழைத்ததன் காரணம்?” எனக் கேட்டான்.

“நயனனே…” அவள் மெதுவாக அவனை நோக்கி நடந்தாள்.

“இளவரசி…” என மரியாதையுடன் நோக்கியவனின் கரம், அவன் இடையில் சொருகப்பட்டிருந்த வாளின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்தது. அப்பிடியில் தன் தடுமாற்றத்தை மறைத்தானோ?

அவள் அருகில் வந்து நின்றாள். வார்த்தைகள் குறைய, அவள் பார்வையிலேயே தனது வேதனையை வடித்துக் கொள்கின்றவளாயிருந்தாள்.

“எப்பொழுதும் நன் அண்ணனின் நிழலாய் இருப்பவர், நன் மனதின் நிழலிலும் வந்துவிட்டீர்… அதைத் தடுக்க முடியவில்லை” என்றாள்.

நயனனின் பார்வை மண் தரையில் விழுந்தது. இதைப் பலமுறை அவள் சொல்லி கேட்டிருந்த போதும், ஒவ்வொருமுறையும் அவளின் வார்த்தைகளில் சீரும் உணர்வு அவனைச் சற்றே குலைய வைத்தது.

“இளவரசி…” என்றான் சற்றே மென்மையாக.

“இளவரசி என்று அழைக்காதீர்கள்,” அவள் குரல் நலுங்கியது.

“யான் இப்போது உம்மிடம் ஒரு பெண்ணாகவே பேசுகின்றோம்.”

அவளது கண்ணீர் ஒற்றை துளியாக விழுந்தது.

நயனன் பிடி இறுகியது. அவளை தனக்குள் இழுத்துக்கொள்ளத் துடிக்கும் கைகளையும் மனதையும் அடக்கும் மார்க்கமின்றி இறுகி நின்றான்.

“நன் உள்ளத்தின் நிம்மதியாக இருக்கின்றீர்கள். இது நேசமல்லவா?”

நயனன் மெதுவாக பின்னால் ஒரு அடி ஒதுங்கினான். அவனது கண்கள் நெருங்கிக் கொண்டிருந்த உணர்வுகளின் புயலை தாங்க இயலாமல், கடமை மற்றும் உணர்வின் இடையே சிக்கிக்கொண்டபடி தோன்றின.

“தங்கள் மீது யான் கொண்ட அவ்வுணர்வு நேசம் தானே?” என்று மீண்டும் கேட்டாள் அவள்.

“ஆம்,” என்றான் நயனன் மெதுவாக. “அது நேசம் தான்… ஆனால், அதைக் கொடுக்க என்னிடம் உரிமை இல்லை.” என்றான்.

“ஏன்?” அவள் குரலில் கூச்சமும் கோபமும் கலந்து இருந்தது.

“ஏனென்றால் நான் சாதாரண படைத்தளபதி… தங்கள் ராஜவம்சத்துக்குள் நுழைவது என்னால் இயலாது. தங்கள் அண்ணனின் நிழலில் வாழ்கின்றேன். அரச குடும்ப நம்பிக்கைக்கு விரோதமான எதையும் எம்மால் செய்ய இயலாது” என்றான், விழிகளை அழுந்த மூடியவனாக.

“எமது அண்ணன் நன் உயிரின் உணர்வானவர்… அவ்வுணர்வின் நிம்மதி தாங்கள் என்று அவரிடமும் சொல்வேன். அவர் ஒப்புக்கொள்வார்… அவர் வழி நன் அரச குடும்ப மாந்தர்களும் தம்மை ஏற்றுக்கொள்வர்” என்றாள்.

“தாங்கள் சொல்வது உண்மைதான். நிச்சயம் அரசரால் எம்மை அவரது குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுகொள்ள இயலும். ஆனால், நன் இதயம், எமது மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வேன்? உங்களை ஒரு பிழைக்கு இட்டுச் செல்ல எம்மால் இயலாது.”

அவள் மெதுவாக நெருங்கி, அவனது கையை பிடித்திட முயல, லாவகமாக விலகி நகர்ந்தான்.

“தாம் எம்மை உம் வாக்குகளால் விலக்கலாம்… ஆனால் உம் கண்கள் அதை மறுக்கின்றன. தாங்களும் எம்மை நேசிக்கின்றீர்.”

நயனன் அவளது விழிகளைக் கண்ணோட்டமின்றி பார்த்தான்.

“இதற்கு மேல் உம்மிடம் பேச எமக்குத் துணிவில்லை…”

“அது நன்மையேயாகும்…” என்ற நயனன், தனது முகம் மாற்றாமல், “அழைத்ததன் காரணம் இதுவென்றால் யான் புறப்படுகிறோம்” என்றான்.

வானவாமதி மௌனமாக நின்றிருக்க, கேட்டுவிட்டிருந்த நீர் மணிகள் ஒற்றை கண்ணிலிருந்து வழிந்தது. சட்டென்று துடைத்துக் கொண்டாள்.

அவனது மனம் கனத்துப் போனது.

“தங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி” என்றவள், அவனை செல்லுமாறு கை காண்பித்தாள்.

‘நம் மனம் நேசிக்கும் அனைவரையும் வாழ் முழுமைக்கும் அழைத்துச் செல்லும் உரிமை எவருக்கமில்லை’ என்ற மனதின் குமுறலோடு அங்கிருந்து சென்றான் நயனன்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்