Loading

அத்தியாயம் 53

சாயலொன்றின் நிழலில் சூரியன் மறையத் தொடங்கிய வேளையில், மகிழ நகரின் மேற்கு எல்லைக்கு அப்பால் விரிந்திருந்த மயில்கண் சிற்றரசின் தலைநகரான மணிக்கோட்டையின் தூண் நிழல்கள் நீளத் துவங்கின. செந்நிறக் கல் கட்டிடங்களில் தங்கமொட்டுகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அந்த நகரத்தின் ஆட்சி மண்டபத்தின் வாசல் வழியாக, கனமான காப்பணிகளுடன், ஒரு தனி அழகு கொண்ட நபர் நுழைந்தார்.

தலையில் மயில்வெண்கற்களில் செதுக்கிய பீடம் போன்ற குடை. தோள்மீது மயில் தோகை வஸ்திரம் தவழ கம்பீரமாய் நடந்து வந்தார் மயில்கண் சிற்றரசின் மன்னன், மயில்வர்ணன்.

மேகோனிடம் வந்த விருந்துப் பாசறையின் அழைப்புக்கு உடனடியாகத் தன் வருகையை உறுதி செய்திருந்தாலும், அவரது வருகையின் நோக்கம், அவருள்ளம் ஒரு பதட்டத்துடனும் கூர்மையுடனும் இருந்தது.

“காரணம் அறிவாயா?” தூது வந்த நபரிடம் வினவினார் மயில்வர்ணன்.

“அரசரின் ஆணையென தளபதியார் அனுப்பி வைத்தார். மேற்கொண்டு விடயங்கள் யாம் அறியாது சிற்றரசே” என்ற தூதுவன், “எந்த கிழமை வருவதாக தகவல் கொண்டுச்செல்லட்டும்?” எனக் கேட்டான்.

“அடுத்தநாள் சாயங்காலம் வருவதாக தெரிவியுங்கள்” என்ற மயில்வர்ணன், தங்களின் குறுநில காவல் படையின் தலைமை காவலரை அழைத்து, “நம் பகுதியில் நன் கவனத்திற்கு வராது ஏதும் நிகழ்ந்துள்ளதா?” என்று வினவினார்.

“புதிய சம்பவங்கள் எதுவுமில்லை அரசே” என்ற காவலர், “மகிழ மன்னர் மீது தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்” என்றார்.

“முன்னரே எம்மிடம் ஏன் தெரிவிக்கவில்லை” என்ற மயில்வர்ணன், “தாக்குதல் நடத்தியது யாரென்று தெரியுமா?” எனக் கேட்டார்.

“அத்தகவலை ரகசியமாக வைத்துள்ளனர்” என்றவர், மயில்வர்ணனின் பார்வையில் பணிந்து வெளியேறினார்.

‘தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பிருக்குமென்று கருதுகிறாரா மாமன்னர்?’ என யோசித்த மயில்வர்ணன், தனது தோள்மீது வந்தமர்ந்த குருவியின் காலில் கட்டியிருந்த சீட்டினை எடுத்து பிரித்தார்.

மலைமங்கை நிலப்பரப்பின் அரசர் மலையன் செய்தி அனுப்பியிருந்தார்.

அதிலுள்ள செய்தியை வாசித்ததும் மயில்வர்ணனின் நெற்றியில் முடிச்சுக்கள்.

“ரகசியம் ரகசியம் காக்கப்பட வேண்டும்” என்ற இறுதிவரியில் மூச்சினை ஆழ்ந்து சுவாசித்தார்.

________________

தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து புறப்பட்ட மேகோன், துளசி நதியின் பக்கம் சென்று, சற்று முன்னர் அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றத்துக்கான காரணத்தை அவதானிக்க முயன்றான்.

இயற்கை மாற்றமாக இருந்தபோதும், தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களால் அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.

தங் தேசம் மட்டுமல்ல, இன்னும் பிற அண்டை தேசங்களும் மேகோன் ஆட்சியை வீழ்த்திட கட்டம் கட்டுகிறது. அதனை நன்கு அறிந்த போதும், மேகோனிடம் தென்படும் அமைதிக்கான காரணம் அவனது வீரத்தின் மீதும் படையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கை. அதைவிட தனது ஆராய்ச்சியில் வெற்றிபெற்று போரினை முற்றும் முழுதாக தடை செய்திட முடியுமென்கிற தன்னம்பிக்கை.

நதியில் உண்டான மாற்றம் இயற்கையானதாக இருந்தாலும், புதியவர்களின் வருகையாலே அம்மாற்றம் என்பதை கண்டுகொண்டான். அவர்கள் யாராக இருக்கூடுமென்று ஓர் கணிப்பும் உள்ளது.

அன்று மாலைநேர விருந்திற்கு மயில்கண் அரசர் வருவதாக இருக்க… தற்போதைய சிந்தனையை அகத்தில் நிரப்பியவனாக அரண்மனை நோக்கி விரைந்தான்.

துளசி நதியின் எதிர் கரையில், மேகப் பொதியத்திற்கு கீழாக இருக்கும் ஆதி சுந்தரபுரம் வருகையில், தன்னைப்போல் அங்கு மக்களின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் தேவ மகிழோன் ஆலயம் சென்றான்.

அவனது திறமைக்கு முதல் வித்து அங்கு தானே விதைக்கப்பட்டது. மண்டைக்குள் பலதும் ஓடிக்கொண்டிருக்க, அமைதி வேண்டி அவனது மனதின் உந்துதலால் தனுமந்தின் கால்கள் அங்கு வந்து சேர்ந்தனவோ?

“என்னடா தனுமந்த் எம் சஞ்சலம் உமக்கு புரிகிறதா?” எனக்கேட்டுக் கொண்டே புரவியிலிருந்து கீழிறங்கிய மேகோன் அதனின் கழுத்தை வருடி நெற்றியில் முத்தம் பதித்து கோவில் வாயில் நோக்கி திரும்பிட, அவனது மேகம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

“இதற்குத்தான் இங்கு கட்டியிழுத்து வந்தாயா?” என்ற மேகோன், “வேண்டாம் என்பவர்கள் முன் சென்று நிற்பது அநாகரிகம்” என்றான்.

நிலம் பார்த்து படியிறங்கிக் கொண்டிருந்த மேகநதி, தனக்கு முன்னால் குதிரையின் கால்களும், ஆடவனின் பாதங்களும் தென்பட்ட பின்னரே எதிரே ஆள் நிற்பதை கண்டு விலகி நடந்தாள்.

இரு அடி முன் வைத்தவள், பாதத்தினை அடையாளம் கண்டுகொண்டவளாக, அடுத்த அடி வைத்திடாது தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

வசீகரிக்கும் புன்னகையை முகத்தில் தேக்கி தனுமந்திடம் பேசிக் கொண்டிருந்தான் மேகோன்.

“எம்மை கவனிக்கவில்லையோ?” எண்ணியவள், அவனையே பார்த்து நிற்க, அவனது கருவிழி அசைவும் அவள் பக்கம் சரியவில்லை.

மௌனத்தின் வேலி அவளது நெஞ்சத்தை பந்தாடத் துவங்கியது.

அவளது முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு. தனது முகம் கண்டிடமாட்டானா எனும் தவிப்புகள் கூடியது.

மறுத்து விலகி நின்றவள், அவனது தூரத்தில் மருகி துடித்திட்டாள்.

மேகநதியின் பார்வைக்குள் சிறு புயல் சுற்றிக்கொண்டிருந்தது. அவளது பார்வையின் ஏக்கம் உணர முடியாத அளவிற்கு மேகோன் விலகி நின்றான்.

வேண்டுமென்றால் கட்டி இழுக்கலாம். வேண்டாமென்றான பின்பு பார்வை மொழி பேசி, மனதின் ஏக்கத்தை கடத்துவதெல்லாம் நேசம் கொண்ட இதயத்தின் வலியை இருமடங்காக்குவதாகும்.

தன்னுடைய கண்ணசைவுக்கு காத்து நிற்பவளின் தவிப்புகள் உணர்வுகளால் உள்வாங்கியபோதும் தன்னைலியில் உறுதியாக நின்றான் மேகோன்.

தனுமந்த் மேகநதியின் வதங்கிய வதனம் கண்டு, மேகோனின் கன்னம் முட்டி முகம் திருப்பிட முயற்சித்தது.

“நேசத்தை மனதார ஒப்புக்கொள்ளச் சொல். இக்கணமே அவளின் பாதத்தில் சரணடைந்துவிடுகிறேன்.” தனுமந்தின் காதில் மெல்லொலியில் கூறினான்.

அவனது கூற்று சரிதானே!

மறுத்து நிற்பவள் நெருங்கி வருவதுதானே சரியாகும்.

“நிச்சயம் என்னைப் பார்ப்பார்.
கடந்து செல்வதைப் போன்று பார்த்துச் சென்றாலும் போதும்…”
மேகநதியிடத்தில் மனதிலே ஒரு மெல்லிய தேடல் இருந்தது.

உணர்ந்தபோதும் விழிகளை அவள் புறம் திருப்பிவில்லை மேகோன்.

அவன் முகம் வெறும் குருதிப்பதையும் சாந்தத்தை ஒளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

இது அவளுக்குள் ஏதோ ஓர் இடத்தில் வேதனையை உருவாக்கியது.

அவளே தான் கூறினாள்… “வேண்டாம்” என்று.

அவன் அதை மதித்து விலகி நிற்கையில் அவளின் இதயத்தில் பாரம் கூடியது.

அவனது தள்ளி நிற்கும் செயலில் தான் தன்னுடைய மனம் அவன்மீது எந்தளவிற்கு நாட்டம் கொள்கிறது என்பதை உணர்கிறாள்.

“நான் மறுத்தேன் என்பதற்காக இவ்வளவு மௌனமா?”

அவனுடைய அமைதி, இப்போது அவளுக்கு ஒரு சத்தமான புறக்கணிப்பாகவே பட்டது.

அங்கிருந்த மரத்தண்டில், அவள் முதுகோடு சாய்ந்து நின்றாள். கண்கள் மூடிக்கொண்டன.
வெளியே சில சிறுவர்கள் விளையாடும் சத்தங்கள்…
நதி ஓசை… அவளின் மனதினுள் மட்டும், மேகோனின் அந்த மவுன முகம் சுழன்றுக்கொண்டே இருந்தது.

அவளை பார்த்ததும் அவளின் மடி சேர்ந்திட மேகோனின் ஜீவன் தவியாய் தவித்த நிலையிலும், அவன் பின்வாங்க விரும்பவில்லை.

அவளது தளராத முடிவு அவனுக்குள் ஒரு பெரும் மதிப்பைக் கொண்டு வந்தது.

“அவளது ‘வேண்டாம்’ என்பதில் ஒரு உறுதி இருந்தது.
அதனை யான் தகர்த்துவைக்கக் கூடாது. அவளை நேசிக்கின்றேன் என்பதற்கான உச்சம்,
அவளது முடிவுகளை மதிப்பது.”

அவளின் கசங்கிய முகம் பார்த்தவாறு அங்கிருந்து நழுவிப் போனான். அவளின் அருகே நின்றாலும், எண்ணங்களில் விலகிவிட்டான்.

கண்கள் மூடியிருக்க அவனின் பார்வையை உணர்ந்தவள், பட்டென்று இமைகள் திறக்க, அவனை அவளுக்கு முதுகுக்காட்டி கோவிலினுள் சென்று கொண்டிருந்தான்.

அவள் கண்களில் நீர் துளிகள்.

‘நாளை படைப்பயிற்சிக் கூட்டத்திற்கு பின்பு, இருவரின் சந்திப்பும் இயல்பான ஒன்றாகிவிடும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு மருகி நிற்பாயா மேகநதி. இதற்கும் பழகிக்கொள்.’ தனக்குத்தானே அறிவுரை வழங்கிக் கொண்டவளாக அங்கிருந்து சென்றாள்.

அவள் தலை திரும்பிட, மேகோன் அவளை திரும்பிப் பார்த்தான்.

“நீயாக வர வேண்டும். அதீத காலம் எடுத்துகொள்ளாது வகுவிரைவாக வந்துவிடு நதி… மேகத்தின் நதி” என்று சொல்லியவனின் மனதின் ஓசை காற்றாய் அவளைத் தீண்டியதுவோ, மேகநதி சட்டென்று திரும்பிட மேகோன் அவளினும் வேகமாக தன்னுடைய முகம் திருப்பியிருந்தான்.
_________________________

மகிழ தேசத்து அரண்மனை அரச மண்டபம்.

பெரும் வாசலில் இருந்து நீண்ட நடுக்கால் மரங்கம்பங்கள், வெண்கல் வேலைப்பாடுகள் என அழகோவிய மண்டபம் அது.

விருந்தில் பங்குகொள்ளும் அனைவரும் ஒற்றைப் பார்வையில் மேகோனை நோக்கினர்.

மண்டபத்தின் மையத்தில் வட்ட வடிவத்தில் அமைந்திருந்த தங்கமேடையில், மேகோன் நின்றிருந்தான். அவனருகில் நயனன்.

“நன் அழைப்புக்கு இணங்கி இங்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி” என்று மயில்வர்ணனை நோக்கிய மேகோன்,

“மயில்வர்ணரே தங்களை நமது மேமகிழப் பரப்பில் வரவேற்கின்றோம்,” என்றான். அவனது கையில் தங்கச் சிகை ஓலை கொடுத்து.

வரவேற்பு பரிசிலை பெற்றுக்கொண்ட மயில்வர்ணன், “நம் குறுநிலப் பரப்பில் விளைந்த விவசாய பண்டங்களை நன் பரிசீலாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கைக்காட்டிட, மயில்வர்ணன் உடன் வந்திருந்த காவல் ஆட்கள் கூடை கூடையாக கனிகள், காய்கள், தானியங்கள் என்று அங்கு பரப்பினர்.

“உம் அன்பிற்கு பெரும் மகிழ்வு கொள்கின்றோம்” என்றான் மேகோன். தன்மையாக.

அடுத்து மேகோன் கண் காட்டிட, இருபக்க காவலர்களும் அம்மண்டபம் விட்டு வெளியில் சென்றனர்.

“தாங்கள் எம்மை அழைத்ததன் நோக்கம்?” மயில்வர்ணன் கேட்க, மேடையிலிருந்து இறங்கிய மேகோன், “விருந்து முடித்து பதங்கள் கோர்ப்போம்” என்று மண்டபத்தின் வலது பக்கமிருந்து அறைக்குள் அழைத்துச் சென்றான்.

“மேகோனின் திட்டம் யாது? இப்பொழுது இங்கே இந்த சிற்றரசரின் வருகை எதற்கு?” தேரல் தனது அண்ணன் சுந்தரனாரிடம் முணுமுணுப்பாக வினவினார்.

“அரசரின் மனம் புகுந்து அறியும் வித்தை இன்னும் யான் பயிலவில்லை” என்ற சுந்தரனார், “விருந்தினர் உடனிருக்கையில் இப்படி வினவுவது மிகவும் தவறான செயல் தேரல்” என்றார் சுந்தரனார்.

“உபதேசம் வேண்டாம். உம்மிடம் பதில் கிட்டாதென்று அறிந்தும் கேட்டு வைத்த எம் மடமையை நொந்துகொள்கின்றேன்” என்று முன் சென்றார்.

சுந்தரனார் சலிப்பாக தன்னுடைய தலையை இடவலமாக அசைத்தார்.

“சிறுவயதில் சற்று அதட்டி வளர்த்திருக்கலாம்.”

தனக்கு பின்னால் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்த சுந்தரனார், வீரவாழுதியை கண்டு புன்னகைத்தார்.

“அதட்டல் மட்டுமல்ல… அடித்தும் வளர்த்திருக்கலாம்” என்ற சுந்தரனார், “காலம் கடந்து தானே ஞானம் பிறக்கின்றது” என்றார்.

“எல்லாம் தங்களால். அவரிடம் மாட்டிக்கொண்டு வதை கொள்கின்றேன்” என்ற வீரவாழுதி, “அண்ணனுக்காக” என்றார்.

“முறைத்தாலும் மதுரமான முகம் உமக்கு” என்று வீராவின் தாடை வருடினார்.

“தங்களது சகோதரர் பார்த்துவிடப் போகின்றார்” என்று வீர்வாழுது சட்டென்று சுந்தரனாரிடமிருந்து விலகி உணவு கூடத்திற்குள் நுழைந்தான்.

“தங்களின் ஆட்டத்தில் வீரா தான் பகடைக்காயா?” நயனன் இருவரையும் கவனித்தவராக வினவினான்.

“இதனை மேகோனிடமும் தெரிவித்துவிடு. இன்னும் சிறப்பு” என்று சுந்தரனார் கடுகடுத்தார்.

“தங்களுக்குள் திட்டம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கையில், இப்படி சபை நடுவே வெளிப்படையாக உரையாடல் கொண்டது உமது தவறு ராஜகுருவே! அதைவிடுத்து எம்மிடம் பாய்வதில் பயனில்லை” என்ற நயனன், “தங்களின் எண்ணமதை மேகா அறிந்திராமல் இருக்கின்றான் என்ற நம்பிக்கை உள்ளதா தங்களுக்கு?” எனக் கேட்டான்.

“அறிந்தாலும், அறியாதது போன்று எட்டி நிற்கின்றான் அல்லவா? நீயும் அதனை பழகு” என்று அவளம் காண்பித்தார்.

அவரை நயனன் ஏறயிறங்க பார்த்திட…

“உணவு அங்கிருக்கின்றது. பார்வையால் என்னை உண்ணாமல் உணவை உட்கொள்வோம் வா” என்று அவனை இழுத்துச் சென்றார்.

“எனக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாகின்றது.”

“என்னவோ?”

“ஒன்றாக இருப்பினும் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தோடு உலவுகின்றீர்.”

நடையை நிறுத்தி உடன் வந்துகொண்டிருந்த நயனனை பக்கவாட்டில் பார்த்த சுந்தரனார்,

“இன்று உம்மிடம் யான் மாட்டிக்கொள்ள வேண்டுமென்ற விதி போலும்” என்றார்.

நயனன் சத்தமாக சிரித்திட,

“காட்டிக் கொடுத்துவிடாதே” என்று அவனின் வாயினை கரம் வைத்து பொத்தியிருந்தார் சுந்தரனார்.

இக்காட்சி தவறாது மேகோன் மற்றும் தேரல் கண்ணில் விழுந்தது.

தேரலின் பார்வை அறிந்த வீரவாழுதி மனதில் நொந்து போனான்.

‘இதற்கும் சேர்த்து தன்னிடம் அடவு கட்டப் போகிறார்.’

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்