Loading

அத்தியாயம் 52

மகிழ மாளிகையின் நீளமான தூண்சுழற்சி வழியாக மெதுவாக நடந்தான் மேகோன். இடையயறாத மின்சாரக் காற்றோட்டம் போல அவனது உள்ளம் ஊதிப்பாய்ந்தது. வீராவின் கண்களில் தெரிந்த குழப்பமும், எதையோ சொல்ல மறைந்ததுபோல இருந்த நோக்கமும், அவனை மேலும் சிந்தனையின் கூர்மையில் தள்ளியிருந்தது.

தற்போது தன்னுடைய சகோதரனைப் பற்றி சிந்திக்க நேரமில்லை என்றாலும், மேகோனுக்கு எப்போதும் தம்பியின் மீது அக்கறையும் அன்பும் அதீதம்.

புரவி மீதேறி பயணித்துக் கொண்டிருந்தவனின் எண்ணமெல்லாம், தனது ஆராய்ச்சியும், ஆராய்ச்சிக்கூடமும் தான்.

“ஒற்றன்… நன் ஆராய்ச்சிக்கூடத்திலா?”
என்கிற கேள்வி, அவன் மூளையில் நூறாயிரம் விலாசங்களில் ஒலிக்கத் தொடங்கியது.

அவன் இப்படியொரு ஆராய்ச்சிக்கூடம் வைத்திருக்கிறான் என்பதே யாரும் அறியாதது. மற்றவர்கள் அறிந்த ஆராய்ச்சிக்கூடம் தேசத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறை சார்ந்த பலதரப்பட்ட சுவடிகள் சேகரித்து வைத்திருக்கும் கூடமே ஆகும்! ஆனால் இயற்கையை மாற்றி அமைக்கும் ஆராய்ச்சிக்காக மறைத்து வைத்திருக்கும் பரிதியல் கூடத்தை அறிந்த ஒருவன் நயனன் மட்டுமே! தற்போது வீரவாழுதி அளித்த தகவலிலிருந்து அவனும் அதனை அறிந்திருக்கிறான் என்பது எப்படி எனும் கேள்வியை எழுப்பினாலும் புறம் ஒதுக்கினான்.

(சுவடிகள் – புத்தகங்கள் : அன்றைய காலக்கட்டத்தில் புத்தக பக்கங்கள் பனைத்தாள்களால் ஆனவை. எழுத்தாணி கொண்டு எழுதி எண்ணெய் தடவி புத்தக அமைப்பில் இணைத்து தயார் செய்யப்பட்டவை. ஓலைச்சுவடிகள் என்று அழைக்கப்பட்டன.)

“சில நேரங்களில், நம் அறிவுக்குள்ளேயே நம்மைத் தேடிப் புகும் நிழல்கள் இருக்கும். அவற்றை நாமே உருவாக்கியிருக்கிறோமோ?”

அவன் மனதிற்குள் ஒர் ஐயம் சிதறியது.

உள் சபைக்கு நுழைந்ததும், அவன் காலடிச் சத்தம் கூட சத்தமின்றி காற்றில் கரைந்துவிட்டது போல அமைதியானது அந்த மண்டபம். ஒவ்வொரு தூணும் அவனுடைய நினைவுகளுக்கு ஒரு புனித குருவானது போல இருந்தது. இடது பக்கத்தில், அவனுடைய பழைய ஆராய்ச்சி அட்டவணைகள், சுவரில் பதிக்கப்பட்ட குறியீடுகள், பின்னணியில் இருக்கும் இயந்திர ஒலிகள் அனைத்தும் இப்போது நிசப்தத்தின் மீது சாய்ந்திருப்பது போலிருந்தது.

அரைக்குப் பின்புறமாக ஒரு சிறிய கதவை நெருங்கினான் மேகோன்.
தானியங்கி கதவு மேகோன் கை வைத்திட சற்றே மெதுவாக திறந்தது.

அந்த அறை…
அவன் உயிரின் இரகசியங்கள் பொத்திக்கிடக்கும் தளம்.

அவனது பெரும் ஆசையின் அடைக்கலம். கனவு நினைவாக அவன் போராடும் களம்.

அரைக்குள் நுழைந்ததும், நயனன் பதற்றத்துடன் வரவேற்றான்.

“இங்கு தான் இருக்கின்றாயா நயனா?”

“மேகா உம்மை எச்சரிக்க விரும்புகிறேன். நம் இரண்டாம் நிலை பாதுகாப்புப் பாசறையில் அயல் தேசத்துக் குறியீடுகள் பதிவாகியிருக்கின்றன. அதுவும், சுமார் இரு நாழிகைக்கு முன்னால். ஆனால்… எவரும் உட்புகுந்த அடையாளமோ, பாதையோ இல்லை” என்றான்.

“ஒற்றன் சிக்கியது எங்கே? அவன் யார்? எதற்காக?” என்றதோடு,

“குறியீடுகள் எங்கிருந்து?” மெதுவாகக் கேட்டான் மேகோன்.

“அணுக்கரு இடைவெளியின் அந்த எல்லைக்கடந்த குறிக்கோளில்… நம்முடைய காந்தக் களத்தின் ஈர்ப்புவட்டத்தை ஊடறிந்து வந்திருக்கின்றன. எனவே, இது யாராவது தெரிந்தவனின் வேலை.”

மேகோனின் கண்கள் கூர்ந்தன. அவன் விரல் தன்னுடைய ஆராய்ச்சிக்காக உருவாக்கியிருந்த பரிதியலை தொட, எதிரே பதிக்கப்பட்ட பூமி வடிவக் குறியீட்டில் ஒரு பகுதி சிவப்பாய் ஒளிர்ந்தது.

(பரிதியல் – வானியல் (astoronomy ))

மேகோன் ஒரு பரிதியல் அறிஞனும் ஆவான். வானியலில் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் இயக்கங்களை நொடியில் கணிக்கும் ஆற்றல் கொண்டவன். பரிதியலில் கல்வி கற்கும் ஆசை அவனது முன்னோரான தேவ மகிழோனிடமிருந்து வந்தது. அவனே தேவாவின் மறுபிறப்பு தானென்று அவனறிந்து கொண்டதும் அதன் பின்னர் தான்.

ஒருமுறை சுந்தரனார் தேவ மகிழோனின் வீரத்தைப் பற்றி கதையாக சொல்லிக் கொண்டிருக்கும் போது,

“அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இருந்தது. ஒருவரின் முகம் பார்த்து அவனது வாழ்வு மொத்தத்தையும் கூறிவிடுவார்” என்றார்.

“இது வான் கணித பரிதியல் தானே?” என்று மேகோன் வினா எழுப்பிட…

(வான் கணித பரிதியல் – ஜோதிடம்.)

“இல்லை” என்ற சுந்தரனார், “நட்சத்திர ஒளியை வைத்து காலத்தை கணிக்கும் முறை. ஒருவரின் பிறந்த நட்சத்திரம் வைத்து அந்நேரத்தில் இயற்கை கால அமைப்பு எவ்வாறு இருந்தது, வரும் காலத்தில் எவ்வாறு இருக்குமென்று கணிப்பது” என்றார்.

(நட்சத்திரம் – சூரியன், விண்மீன்கள் மட்டுமல்ல. கிரகங்களும் இதில் அடங்கும்.)

“சுவாரஸ்யம் நிறைந்த களமல்லவா?” என்ற மேகோன், “நட்சத்திர ஒளியை வைத்து எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கணித்திட முடியுமென்றால், நட்சத்திரங்களின் அசைவுகளை கட்டுப்படுத்தி எதிர்காலம் நோக்கி பயணிக்கவும் இயலுமல்லவா?” என்றான்.

அவனது வினாவில் சுந்தரனார் வாயடைத்துப் போக, அங்கு தேவ மகிழோன் கற்சிலை இதழ் விரித்ததோ?

அவனின் சிந்தை உயிர்த்தெழ, அவனே மீண்டும் தனது பிறப்பை உணர்ந்த கணம்.

“அதீத கல்வி அறிவு உம்மை இப்படி சிந்திக்கக் கூறுகிறது” என்று சிரித்த சுந்தரனார்,

“நாளை தேவ மகிழோன் ஜனித்த தினம். அவர் அம்பலம் சென்று வணங்கி வர வேண்டுமென்று” என்றார்.

மென் புன்னகை உதிர்த்த மேகோனுக்கு இரவு முழுக்க அகத்தின் எண்ணங்கள் வானியல் பற்றி தான்.

அடுத்தநாள் கோவிலுக்குள் நுழைந்த மேகோனின் கண்களில், தேவ மகிழோன் சிலைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த, இன்றும் பொக்கிடமாக பாதுகாத்து வரும், அவர் அப்போது பயன்படுத்திய முக்கியப் பொருட்கள் மீது படிந்தது.

எப்போதும் பார்க்கும் ஒன்று தான். ஆனால் இன்று அவரே எழுதிய சுவடிகள் என்று சுந்தரனார் கூறி அறிந்துகொண்ட, அச்சுவடிகளை படித்துப் பார்க்கும் ஆர்வம் மேலோங்க, அதனை எடுக்க மனம் உந்தியது.

தீபாராதனை காட்டும் வரை பொறுமை காத்த மேகோன், பூஜை முடிந்த அடுத்த நொடி அச்சுவடிகளை கையில் எடுத்திருந்தான்.

“எதற்கப்பா?” சுந்தரனார் கேட்டிட,

“இதை படித்துப் பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டான் மேகோன்.

“தேவ மகிழோன் எழுதிய சுவடி. வழிவழியாக பூஜிக்கும் பொருள். அவ்வளவுதான் யாம் அறிந்தது” என்றார்.

“இதில் என்ன இருக்குமென்று அறிந்திட ஆவல் அதிகரிக்கிறது தந்தையே” என்ற மேகோன், அதில் உள்ளவற்றை தன்னுடைய மண்டபம் வந்ததும் படிக்கத் துவங்கினான்.

மகிழோன் வீரம் பற்றி அவன் அறிந்தது தான். அவனால் தான் இத்தேசமே என்ற வரலாற்றுச் சரித்திரம் பெற்றது அவனின் வீரம். அப்படியிருக்கையில் அவரின் வரலாற்றை அவரே எழுதிட வாய்ப்புகளில்லை என்றாலும் அதில் அப்படி என்ன உள்ளதென்று அறிந்திட படித்தவனுக்கு, மகிழோனின் வீரம் மட்டுமல்ல, அவனது அறிவு அத்தனை ஆச்சரியங்களை அளித்தன.

வானியல் பற்றி அத்தனை விளக்கங்கள் என அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் அமைப்புகள், அசைவுகள், அவற்றின் இயக்கங்கள் என யாவற்றையும் மிக மிக நுணுக்கமாக குறிப்பிட்டு, அவற்றின் அணு அமைப்புகளையும் ஓவியமாகத் தீட்டியிருந்தான்.

அதனை படிக்க படிக்க ஆச்சரியங்கள் கூடிய அதே கணம், மேகோனின் உள்ளம் மகிழோனின் சிந்தையை ஒத்திருந்தது. பழங்கால காட்சிகள் யாவும் பிம்பம் கொண்டு இதயத்தை அதிர்வுறச் செய்திட,

“நன் ஆசை தீர்க்க யாமே மீண்டும் ஜனித்து, எமது அறிவை உள்வாங்கிடும் தருணம் அழகோவியம்.” அசரீரி ஒலித்து அடங்கிட, தன்னுடைய பிறப்பின் ரகசியம் அறிந்து மேகோனின் சுட்டு விரல் மீசை நுனி உராய்ந்து கன்னம் ஊர்ந்தது.

சுவடியின் இறுதியில், “மீண்டும் ஒருமுறை பிறக்கும் வாய்ப்பு கிட்டுமாயின்… நன் கனவு ஈடேறிட வேண்டும். எதிர்காலம் பயணம் செய்யும் வல்லமை பெற்றுவிட்டால், பலப்போர்கள் தடுக்கப்பட்டு எம்மக்களின் உயிர் காக்கப்படும்” என்று எழுதியிருந்தான்.

தனக்கும் ஏன் போரின் மீது நாட்டமில்லை என்பது மேகோனுக்கு தெரிந்த நொடி உடலில் சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

“மனதின் கனவுகளுக்கு ஜென்ம தொடர்புண்டு. உயிர் இறங்கிய ஆசை ஈடேறும் வரை ஓயாது.” மெல்ல சிரித்த மேகோன், அக்கணமே தன்னுடைய கனவை எட்டிட அடி வைத்திட்டான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அவனது சிந்தை கொண்ட ஆற்றல் என்றாலும், யாவும் புதிதாகத்தான் இருந்தன.

ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக வடிவம் உருவாக்கிட அத்தனை மெனக்கெடல்கள் கொண்டான்.

இப்படியொரு ஆராய்ச்சியில் ஈடுபட்பபோவதாக சுந்தரனாரிடம் கூறியிருக்கிறான். ஆனால் இவ்விடத்தைப் பற்றி அவரும் அறிந்ததில்லை. கைகூடும் நேரம் காட்டிட விருப்பம் கொண்டிருந்தான்.

தான் தான் தேவ மகிழோனின் மறுபிறப்பு என்பதையும் தன்னுடைய வெற்றியின்போது சொல்லிக்கொள்ள எண்ணம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு பின் தான் வாய்க்கபெறும் என்பதை அறிந்திருக்கவில்லை.

மேகோன் தன்னுடைய பரிதியல் அமைப்பின் மீதே கவனம் வைத்திருக்க,

“என்னதிது… இந்த சிவப்பு நிறம் எதை குறிக்கின்றது?” என்று வினவினான் நயனன்.

“அவ்விடம் நமது மருத்துவக் கூடமாகும். துளசி நதியில் ஏதோ மாறுபாடு” என்றான் மேகோன்.

“இருக்குமிடத்திலிருந்து எவ்வாறு கண்டறிந்தாய் மேகா? இதெப்படி சாத்தியம்?” என்ற நயனனின் வியப்பைக் கண்டுகொள்ளாத மேகோன், “இயற்கையில் எல்லாம் சாத்தியம். இயற்கையை கட்டுப்படுத்த முடிந்தால் மனிதனால் முடியாதென்று யாதுமில்லை” என்றான்.

“அவ்விடத்தின் இயற்கையான ஒளி ஆற்றல்கள் வைத்து சில மாற்றங்களை அறியலாம்” என்றான்.

“ஒன்றும் விளங்கவில்லை.” நயனன் சலிப்பாக தலையசைத்தான்.

சிரித்த மேகோன், “பிடிக்கப்பட்ட ஒற்றன் எங்கே?” எனக் கேட்டான்.

“வீரர்களிடம் ஒப்படைத்து, சிறையில் அடைக்கக் கூறியுள்ளேன்” என்ற நயனன், “இவ்விடத்தினை வீரா அறிந்து வைத்திருக்கின்றான்” என்றான்.

“அறிவோம்” என்ற மேகோன், “எமக்கு தகவல் அளித்தது அவனே” என்றான்.

“ஒற்றனை பிடித்தும் வீராவே” என்ற நயனன், “வேத குருவிற்காக உம்மிடமிருந்து விலகி இருக்கின்றனென எண்ணுகிறேன்” என்றான்.

“இருக்குமோ?” என்று மூரல்கள் பளிச்சிட புன்னகை சிந்திய மேகோன், “ஷென்லாங் நமது தேசத்தின் ஒவ்வொரு இடுக்கையும் நுணுக்கமாக கவனிக்கின்றார். பாய்வதற்காக பதுங்கு வேலைகள் பார்க்கின்றார்” என்றான்.

நயனன் புருவம் சுருக்கிட,

“தற்பொழுது பிடிபட்ட ஒற்றன் தங் தேசத்தைச் சார்ந்தவனாகத்தான் இருக்கும். விசாரித்துப்பார்” என்றதோடு, “ஒவ்வொரு அடியாக நம்மை நோக்கி எடுத்து வைக்கின்றார்” என்றான் மேகோன்.

“அனைத்தும் அறிந்தும் எதற்கு இந்த அமைதியும், பொறுமையும் மேகா?” என்று ஆயசமாக கேட்ட நயனன், “நமது ஒரு சுற்று படைக்கு முன்பாகவே தங் தேசம் சிதைந்துவிடும். மீண்டும் எழும்பிட பல யுகங்கள் ஆகும்” என்றான்.

“அதற்காகத்தான் வேண்டாம் என்கிறேன்” மேகோன், “நம்மால் வளர்ந்தோர் என்பது சரித்திரம். வீழ்ந்தோர் என்பது நினைவுச்சின்னம். இரண்டிற்கும் வித்தியாசங்கள் அதீதம்” என்றான்.

“உம் கோணமே யாவற்றிலும் மாறுபட்டது தான்” என்ற நயனன், “உம்மை மீறி எதுவும் நிகழ்ந்துவிடாதென்பதில் தான் யானும் திடமாக இருக்கின்றோம்” என்றான்.

“நம்பிக்கைக்கு மிக்க மகிழ்ச்சி” என்ற மேகோன்,

“படைப்பயிற்சியில் பெண்களுக்கான பிரிவையும் வலுப்படுத்துங்கள். நிகழ இருக்கும் யுத்தம் அத்தனை எளிதாக முடிவுபெறாது” என்றான்.

“படையில் மேகநதியும் உண்டல்லவா?” நயனன் கேட்க,

“படையைப் பற்றி தளபதியார் அறியாததா?” என்றான் மேகோன்.

அக்கணம் மீண்டும் பரிதியல் அமைப்பில் மாற்றம் நிகழ்ந்தது. சிவப்பு நிறம் மறைந்து அடங்கியது.

“நதியின் இயற்கை மாற்றம். ஆபத்தான மாற்றம் யாதொன்றுமில்லை. தற்பொழுது சீர்பெற்றுவிட்டது” என்ற மேகோன்,

“ஷென்லாங் அண்டை தேசத்து மன்னர்களின் உதவியை நாடுவதற்கு வாய்ப்புள்ளது. அனைத்திலும் கவனம் கொள்ளல் வேண்டும்” என்றான்.

“ஏதேனும் புதிய ஆலோசனை செய்திட வேண்டுமா?” நயனன் கேட்டிட, “நாளை படை களத்தில் சந்திப்போம்” என்று அங்கிருந்து புறப்பட்டான்.

துளசி நதி வழி அரண்மனைக்கு பயணப்பட்டவன், நதியை பார்வையால் ஆராய்ந்து விட்டே அங்கிருந்து தொடர்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
23
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்