Loading

அத்தியாயம் 51

தூதுவரின் வருகை முடிந்து, மண்டபத்தின் காற்றும் சற்று மாறியது. மேகோனின் சிந்தையும்… சிந்தையின் முடிவுகளும்.

ஓங் ஜாவோ வெளியேறியதும், சுந்தரனார், தேரல் இருவரும் தனியொரு அறையில் மேகோனை நோக்கிச் சென்றனர்.

தேரலின் பார்வை படபடக்க…
“மேகோன், இதுவே போர் தொங்கியிருக்கும் முதலெச்சம்!” என்றார்.

“யாரோ ஒருவன் தாக்கினால் யுத்தம் வேண்டுமென்று அர்த்தமா?” மெதுவாய் பதிலளித்த மேகோன்,
“நம் மனம் வலிமையானது என்றால், நாம் போருக்கு முன் அமைதி பேசத்தான் வேண்டும். போர் முனைப்பு கொள்ளும் தேசத்திற்கு அவர்களின் வீரம் மட்டுமே பிரதானமாக இருக்கலாம். ஆனால் எமக்கு… குடிகளும், அவர்களின் நிம்மதி நிறைந்த தேசத்தின் சூழலுமே பிரதானம்” என்றான்.

சுந்தரனார், தான் பெற்ற புனிதமாக தனது புதல்வனை அன்புடன் பார்த்தார். பெருமை மீதுற.

மேகோனின் விழிகளில் அவரின் வழிவந்த ஞானமும், எரியாத இளஞ்சுடரும் தெரிந்தது.

“சமாதான பறவையை பறக்கவிட நினைக்கும் உமது எண்ணத்தில், எதிரியின் யோசனையும் திட்டமும் நம்மை விழுங்கிவிடும்.” தேரல் முகம் கடுகடுக்கக் கூறினார்.

“அதற்காக?” மேகோன் நின்ற இடத்திலிருந்து திரும்பிட, அவனது நீண்ட வஸ்திரம் சுழன்ற வேகத்தில் தேரல் தன்னைப்போல் இரண்டு அடிகள் பின் வைத்திருந்தார்.

“அவர்களுக்கு முன்பாக நாம் போர் அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றார் தேரல்.

“போரின் மீது எமக்கு உடன்பாடில்லை. தேசத்தின் வளத்திற்காக அமைதியான ஒப்பந்தங்களையே யாம் எதிர்பார்க்கிறோம். இருபக்க இழப்புகள் வேண்டுமா? இருபக்க ஒற்றுமையும் வளர்ச்சியும் வேண்டுமா?” மேகோன் கேட்டதில் தேரல் பதிலின்றி நின்றார்.

“வேறேதெனும் கூற வேண்டுமா?” அக்கேள்வியில் ‘உம்மையும் யான் அறிவோம்’ என்ற மேகோனின் மறை பொருள் இருந்ததை சுந்தரனாரும் கண்டுகொண்டார்.

“ஷென்லாங்கும் போரினை எதிர்நோக்கித்தான் தக்க தருணத்திற்காகக் காத்திருக்கின்றார்.”

கூறிய தன்னுடைய சிறிய தந்தையை அமைதியாக ஏறிட்ட மேகோன், “தற்போது அவருக்கும் போரில் நாட்டமில்லை” என்றான்.

“அவரது மகன் ஜிக்கி இதற்கு மேலும் அமைதியாக இருப்பானென்று எமக்குத் தோன்றவில்லை.”

“வாக்குவாதம் வேண்டாம் தேரல்.” சுந்தரனார் முன்வந்து கூறினார்.

“அரைவேக்காட்டுத் தனமான செயல்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்க முடியாது சிறிய தந்தையே” என்ற மேகோன், “நம் இருவரின் வாதத்திலும், நம்மிடையே போர் மூண்டு விடுமென்று உமது சகோதரர் கவலை கொள்கிறார்” என்று சிரித்தான்.

“வீணான கவலை” என்ற தேரல், “மிக அழகாக பதங்களை மாற்றுகின்றாய் மேகா” என்றதோடு, “அரசாட்சியில் பொறுமை கூடாது” என்றார்.

“அரசனிடம் பொறுமை மிக அவசியம்” என்ற மேகோனின் கண்களும் கனிந்து மிளிர்ந்தது. என் தேசம், என் பேரரசு, என் குடிகள், என் ஆட்சியில் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர் எனும் சந்தோஷ ஊற்றின் பிரதிபலிப்பு.

“உமது முகம் காட்டும் உணர்வுக்கு காரணம் யாமறிவோம்! இன்று உம் மகிழ்வுக்கு காரணமான குடிகளின் மகிழ்வோடு உம்முடைய பொறுமை விளையாடிக் கொண்டிருக்கிறது. எதிரியின் எண்ணம் அறிந்த பின்னரும், முன்னோக்கி அடி வைத்திடமாட்டேன் எனும் பிடிவாதம் மாபெரும் இழைப்பை விளைவித்திடும்” என்றவர், “இளையவரிடம் தேசமிருந்தால் இப்படித்தான்” என்று தன்னுடைய மூத்தவரை பார்த்து கண்டனமாக மொழிந்து அவ்விடமிருந்து அகன்றார்.

“அதீத கோபம் போலிருக்கே!” சென்றவரை குறித்து மேகோன் உரைத்திட, “அவனது இயல்பு அது” என்றார் சுந்தரனார்.

“இளையவரை விட்டுக்கொடுத்திட மாட்டீரே!” என்றவன், “மகிழோன் அம்பலம் சென்றதன் நோக்கம்?” என முன்தினம் அவர் தேவ மகிழோன் ஆலயம் சென்று வந்ததை குறிப்பிட்டு வினவினான்.

“தேசத்தின் மன்னருக்கு மணமுடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதற்கான உத்தரவு கேட்கச் சென்றிருந்தோம்” என்றார் சுந்தரனார். தனக்குத் தெரிந்துவிட்டது எனும் அதிர்வு சிறிதுமில்லாது வழமையான முறுவலோடு தன்னை பார்த்திருந்த மகனின் மனதை அவதானிக்க முயன்றவாராக.

“உத்தரவு கொடுத்தாரா?”

“உம் விருப்பத்திற்கு தடை விதித்திடுவாரா?”

“விரைவில் மணமுடி போட்டுவிடலாம் சொல்கிறீர்களா?”

“உம் அகத்தின் செம்மையை உமது கன்னக்கதுப்புகள் காட்டிக் கொடுக்கின்றன மேகா” என்றவர், “சபை நடுவே புரிந்த வாள்வீச்சு, உமது விழி வீச்சின் காரணத்தை எமக்கு பறைசாற்றியது” என்றார்.

மேகோன் புன்னகைத்திட,

“வெளிப்படுத்த வேண்டுமென்ற உமது நோக்கத்தின் நிகழ்வென்று யாம் அறிவோம்” என்றார்.

“தங்களுக்கு விருப்பமின்மை என்று எதுவுமில்லையே?”

“உம்முடைய மகிழ்ச்சியை விடவா, குலத்தின் நிலை உயர்ந்தது?” சுந்தரனாரின் பேச்சே அவரின் சம்மதத்தை காட்டியிருக்க, மேகோனிடம் கசந்த முறுவல்.

மகனின் நிழல் அசைவிற்கே அர்த்தம் விளங்கிக்கொள்பவர், மன அசைவை விட்டுவிடுவாரா?

“மேகநதியின் இடத்திலிருந்து சிந்திக்க வேண்டியது அவசியமானது மேகா. நேசத்தில் காத்திருத்தலும் மதுரமாகும். விரும்பி ஏற்றிடு. உமது செயல் ஒவ்வொன்றும் பலமாக மட்டுமே இருத்தல் வேண்டும்.”

காதல் மறுப்பினால் துவண்டுவிடாதே எனும் பொருள் பொதிந்து நல்லுரைக் கூறினார்.

(நல்லுரை – அறிவுரை.)

“விளங்குகிறது தந்தையே” என்ற மேகோன், “யான் கொண்ட நேசம் ஒருபொழுதும் எம்முடைய பலவீனமாகாது” என்றான்.

“தந்தையாக நல்நெறி கூறுதல் நன் கடமையாகும்” என்று மேகோனின் தோள் தட்டியவர், “தேரலும் அறிவான்” என்றார்.

மேகோனிடம் சிரிப்பு மட்டுமே!

அப்பொழுது அங்கே ஒருவன் திடீரென அவர்கள் முன் குதித்தான்.

அவன் மகிழ தேசத்து ஒற்றன் கடந்தன். தங் தேசத்தில் ஒற்று பார்க்கின்றான்.

கடந்தன் சிரம் தாழ்த்தி இருவருக்கும் பணிந்திட,

“வா கடந்தா. என்ன செய்தி கொண்டு வந்திருக்கின்றாய்?” எனக் கேட்டார் சுந்தரனார்.

“நம் மன்னர் சிறு குல பெண்ணை நேசிப்பதாகவும்… நேசத்தால் அவரின் மனம் பிழன்ற இந்நேரத்தில் போர் தொடுத்தால் சூழல் நமக்கு சாதகமாகும் என்றும் தங் தேச அரசவையில் வாதம் நிகழ்ந்தது” என்றான்.

சுந்தரனார் அதிர்வோடு மேகோனை காண…

“செய்திக்கு சிறப்பு” என்ற மேகோன், “ஏழுநாள் காலம் தமது குடும்பத்துடன் கழித்திடுங்கள். பின்னர் வேண்டுமானால் யான் கூறியதும் ஒற்று காணும் பணிக்கு செல்லலாம்” என்றான்.

“உத்தரவு அரசே!” என்ற கடந்தன் சென்றிட,

“உமது திட்டம் என்ன மேகா?” என்றார் சுந்தரனார்.

“குடிகளின் அமைதியும், மகிழ்ச்சியும்” என்றான் மேகோன். அரசனுக்குரியத் தோற்றத்தில் நிமிர்ந்து உயர்ந்து, கம்பீரமான புன்னகைத் தழுவி.

________________________________

வாளின் ஓசை கேட்ட நெஞ்சின் நிசப்தமாய்…

களிமண் சிதறிய தளத்தில், மெதுவாய் நின்றாள் மேகநதி.
அவளது விழிகளின் ஆழம், வாளின் முனையில் கூட பதறியது போலிருந்தது. ஒவ்வொரு அசைவிலும் பழைய உற்சாகத்தின் பிளவு தெரிந்தது.

போர்க்களத் தாக்கங்களை போல, உள்ளக் கோலங்களும் தன்னையே தாக்குவதை உணர்ந்தாள்.

தொடர்ந்து ஏற்கனவே பழகிய அசைவுகளைச் செய்யத் தோன்றினாலும், வாளின் முனை வழி தவறியதோடு, அந்த வழிக்கே அவளது விழிகளும் விழுந்தன.

“முதன்முறையாக, மேகநதி தவறுகிறாள்,” என்ற கேலிச் சத்தம் வந்தது.

ஆனால் அது இளங்கலை வீரர்களின் பகடியல்ல நயனனின் மென்மையான கவனச்செய்தி.

அவள் நிர்மலமான முகத்தோடு திரும்பினாள்.

நயனன்… கையில் வாள் இல்லாமல், கண்களில் மட்டும் தாக்கமுடன் வந்திருந்தான்.

“உம் சிந்தை இங்கில்லை. இன்னொரு போர்க்களத்தில் இருக்கின்றன, மேகநதி” என்றான்.

அவள் அமைதியாக விழிகளைச் சுருக்கினாள். “யான்” என்று ஆரம்பித்தவள், சொல்ல முடியாமல் நின்றாள்.

நயனன் மெதுவாக அருகே வந்தான். “மேகோனிடம் சொன்ன மறுப்பு, உம்மிடமே தடுமாற்றமாய் விளைந்திருப்பது தெரியுமா?”

“மறுப்பு… எனது கடமை, நயனனே…”

“உமது விலகல் உணர்வுகளுக்கு எதிரான நீதி, மேகநதி.”
அவன் குரலில் கோபம் இல்லை. ஆனால் பரிதாபமோடு கூடிய உண்மை யுத்தம் இருந்தது.

“மேகோன்… உன் மறுப்புக்குப் பிறகு ஒளியற்ற மன்னனாய் நடந்ததை யானே கண்டு நெஞ்சம் விம்மினோம். உம் சொல்லை அவர் ஏற்றுக்கொண்டாலும், உமது வார்த்தைகள் மேகோனின் சுவாசங்களில் நிழலாய் பயணிக்கின்றன.”

மேகநதி கண்கள் பனிமயமாகின. ஆனால் அந்த பனி உருக விரும்பவில்லை.

“எம்முடைய நேசமும் அவருக்கு சற்றும் குறைவில்லாதது,” என்றாள்.

நயனன் அவள் புறம் மெல்லக் குனிந்து கேட்டான், “அப்படி என்றால் ஏன்?”

“ஏனெனில்…” அவள் மூச்சு சிதறியது.

“நேசிப்பதற்கே காயங்கள் அதிகம். இன்னும் நெருக்கமாய் வந்தால்?நடக்கும் அனர்த்தங்கள் என்னவென்று யான் சொல்லி நீர் அறிய வேண்டுமா நயனனே? உமக்கே நன்குத் தெரியும். அரசவையில் என்னவெல்லாம் நடக்கும்.”

“மேகமின்றி நதி பாய்ந்தோட முடியாது… அரசனவன் மீது நம்பிக்கையில்லையா?”

“மன்னரின் நேசம், நம்பிக்கை யாவும் தேசத்தின் மீது இருத்தல் வேண்டும்.” பட்டென்று கூறியிருந்தாள்.

“இல்லையென்று கூறிவிட முடியுமா?”

அவளிடம் மௌனம்.

நயனன் அருகே வந்து, “அவனது நெஞ்சம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய்” என்றான்.

மேகநதியின் கண்கள் குளமாகின.

“அந்த நெஞ்சில் நான் இருக்கக் கூடாது என்பதே என் பயம், நயனனே.” தழுதழுப்போடு மொழிந்தவளின் கண்ணீர் வழியும் முன்பு புறங்கை கொண்டு துடைத்திருந்தாள். வேகமாக.

நண்பனிடம் வேண்டாமென்று கூறியவன் தான், அவனின் மனதின் வலியை பக்கமிருந்து பார்த்ததாலோ என்னவோ, நதியிடம் நண்பனுக்காக மன்றாடினான்.

அவளின் நேசத்தின் ஆழம் மறுப்பில் புதைந்துள்ளது என்பதை அவளது கண்ணீர் தெரிவித்திட, தன்னுடைய பேச்சு வற்புறுத்தல் ஆகிவிடக் கூடாது என்பதால் மெதுவாய் வாயிலை நோக்கி நடந்தான்.

மீண்டும் திரும்பி,

“மேகநதி” என்றவன் வார்த்தைகளுக்கு இடையில் ஓர் அமைதி

“சொல்லிய ஒவ்வொரு மறுப்பும் அவனுள்ளம் நுழைந்து, வாளாய் அறைந்திருக்கிறது. ஆயினும், நின்னையே ஜீவனாகக் கொண்டு ஜீவித்திருக்கிறான். திடம் காட்டி நடந்தாலும், உள்ளத்தால் மரித்திருக்கின்றான். உயிர்த்தெழச் செய்திடு” என்றான்.

அவள் திகைத்துப் பார்த்தாள்.

“மன்னனுக்குள் காதல் இருக்கக் கூடாது என்பதற்கு யார் விதிமுறை எழுதினார்கள்?” நயனனின் அக்கேள்வியில்,

அவள் கண்களில் உறைந்த பனி ஒரு மழையாக இறங்கியது. வாள் கீழே விழுந்தது. அவள் மொத்தமாக தனது உணர்வுகளை மட்டுமன்றி தன்னைத்தானே தனக்குள் புதைத்தாள். நயனனின் முன்னிலையில்.

“உணர்வுகளை மறுத்த நெஞ்சம் நிம்மதியோடு வாழ முடியாது” என்ற நயனனின் வார்த்தைகளில், வலி நெஞ்சம் ஊடுருவிய போதும் தன்னுடைய மறுப்பில் திடமாக நின்றாள்.

______________________________

அரண்மனை தனி மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த மேகோனிடம், வீரவாழுதி விரைந்து வந்தான்.

“தங்களின் ஆராய்ச்சிக்கூடம் இருக்கும் பரப்பில் ஒற்றன் ஒருவன் சிக்கியிருக்கின்றான்.” வீரவாழுதி படபடத்துக் கூறினான்.

மேகோன் அமைதியாக வெகு நேரம் காற்று செல்லும் திசையை பார்த்திருந்தான்.

“அண்ணன்…”

மேகோன் கவனத்தை தன்னுடைய பக்கம் திருப்ப முயன்றான் வீரா.

“என்னவென்று விளித்தாய்?” மேகோன், வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்தான்.

வீரா தயங்கிட…

“எப்பொழுதும் உணர்வின்றி எட்டி நிறுத்தும் சொல்லான சகோதரரே என்றழைப்பது தானே உம் பழக்கம்?” இரு புருவங்களையும் ஒரு சேர உயர்த்தி இறக்கினான் மேகோன்.

வீரவாழுதி பதிலின்றி உணர்வு கொந்தளிப்பின் சாயலை கண்களில் காட்டினான்.

அடுத்து வீரவாழுதியிடம் யாதொரு சொல்லும் உதிர்க்காது, மேகோன் நேராக மகிழ மாளிகையின் உள் சபை கடந்து, வெளியில் வந்தான்.

மலர்த் தோட்டத்திற்கு நடுவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னுடைய புரவி தோழன் தனுமந்த்தை அழைத்தவன், அதில் அமர்ந்து, சிறு ஒலியெழுப்பினான்.

தன்னுடைய நீண்ட சிறகை விரித்து வட்டுக்குருவி ஒன்று வந்து அவனது தோளில் அமர்ந்தது.

இடை சொருகியிருந்த ஓலையை எடுத்து சுருட்டி அதன் காலில் கட்டியவன், குருவியின் செவியில் ஓசையின்று முணுமுணுக்க, பரந்த வானின் உயர பறக்கத் துவங்கியது பறவை.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்