அத்தியாயம் 50
தெற்குக் கடலின் பனிச்சுரங்கங்கள் பனித்துளிகளாய் சிதறிய இரவில், ஆழ்கடலைத் தாண்டி வடமேற்கில் அமைந்திருந்த லுயென் மலை மலைச்சிகரத்தில், நாற்புறமும் நாகக்கல் பதித்திருந்த கோட்டையினுள் ஒரு ஆளும் நிழல், மெளனத்துடன் நெடுநேரமாக நிலவினை நோக்கிக் கொண்டிருந்தான்.
அவர் ஷென்லாங் யான். [யான் – அக்னி (தங் மொழியில்)]
தங் தேசத்தின் மன்னன். தங் தெய்வ நாகப் பேரரசு என அழைக்கப்படும் ஷென்லாங் வம்சத்தின் முதன்மை குடியாளர்.
மனதில் இருந்த குழப்பம் பனிக்காற்றாக நெஞ்சிலே பட்டது.
“மகிழ மண்ணின் அரசன் மேகோன்… இளம் வயதுடைய வீரராயினும், அவரது அறிவாற்றல்… நம்மை எச்சரிக்கை வைத்திருக்கிறது. அவரது புத்திக்கூர்மை எப்போது வேண்டுமானாலும் நமக்கு ஆபத்தாக அமையலாம். இதுகுறித்து கருத்துக்கள் ஏதுமிருந்தால் கூறலாம்” என்று தன்னுடைய சபையை பார்த்துக் கூறினார் ஷென்லாங்.
ஷென்லாங் முன்னிலையில் அசையாமல் நின்றிருந்த ஓங் ஜாவோ முதன்மை அமைச்சர்… தன் இருண்ட கண்களில் ஓர் இரகசியத்தை சுமந்தபடி மொழிந்தார்.
“அரசரே… மகிழ தேசத்து மன்னன் மேகோன்… பாண்டிய, சோழ புறவுகளில் பெரும் ஆதரவு பெற்றவர். ஆனால்… அவர் வலிமை நம் வர்த்தக பாதைகளுக்கு அச்சுறுத்தக்கூடிய அளவுக்கு வளர்ந்துவருகிறது.”
ஷென்லாங் யான் மெதுவாய் திரும்பி, துக்கமான குரலில்…
“மகிழ தேசத்துடனான வர்த்தக ஒப்பந்தம் மட்டும் நமக்கு போதாது. அங்கிருக்கும் வளங்கள் முழுவதும் தன்னகப்படுத்த வேண்டும். இதனால் நமது தேசத்தின் எல்லை விரிவடைவதுடன், நாட்டின் வளமும் பெருகும்” என்று பிரமிப்பை கண்களில் காட்டி, “நமது பறக்கும் பாம்பின் நெருப்பிற்கு அவனது வெண்குதிரையின் வேகத்தையும், ஞானத்தையும் இரையாக்கிட வேண்டும். ஒரு வீரன் மனதில் காதல் கலக்கும்போது, நிலை மாறிவிடும். காதலில் விழுந்திருக்கும் மேகோனை தற்சமயம் வீழ்த்துவது எளிது” எனக் கூறினார்.
ஓங் ஜாவோ உடனே அதனை அமோதித்தார்.
“உங்கள் புதல்வன் இளவரசர் ஜிக்கி தனது நிழல்களில் மேகோனின் புகழை நசுக்க விரும்புகிறார்” என்றார்.
“நாகம் வானத்தில் பறக்கவேண்டுமே தவிர, இப்படி தமது எதிரியை நிழல் போன்று தொடர்தல் கூடாது?” என்ற ஷென்லாங், “ஜிக்கியின் அசைவு என்ன?” என வினவினார்.
“இருளின் பாதை மயில்கண் வழியாக, நம் வீரர்கள் இருவரை அனுப்பி வைத்துள்ளார். முடிந்தால் மேகோனை தாக்க வேண்டும் அல்லது மயில்கண் சிற்றரசரின் உதவி பெற்று வரவேண்டும் என உத்தரவு அளித்திருக்கொன்றார். யாம் ஆலோசனை கூறவில்லை ஹாங்’தி என்றார் ஓங் ஜாவோ.
(ஹாங்’தி [Huángdi] – பேரரசர்.)
“ஜிக்கி பொறாமை கொள்கின்றானோ?” என்ற ஷென்லாங் யான் நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி நடந்தார். தனது நாகத்தின் சிற்பம் பதிக்கப்பட்ட அரண்கலத்தில் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்.
“மேகோன் காதல் செய்பவள் யார்?”
“மேகநதி… மகிழ தேசத்தில் போர்க்கருவிகள் செய்திடும் கொல்லனின் மகள். ஆயுதங்கள் செய்திடவும், செயல்படுத்தவும் பயிற்சி பெற்றிருக்கின்றாள். படையில் சேர்வதற்கு விருப்பம் கொண்டு, சபை நடுவே வாள்வீச்சும் செய்திருக்கின்றாள்” என்ற ஓங், “நம் ஒற்றனின் நம்பத்தகுந்த செய்தியாகும்” என்றார்.
ஷென்லாங் இங்குமங்குமாக நடந்தார்.
“என்ன யோசனை ஹாங்தி?”
“ஜிக்கியின் செயல் தங்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றவில்லையா?” என்ற ஷென்லாங், “அவசரத்தில் அறிவு மழுங்கிவிட்டது போலும்… மகிழ தேசம் நமது தேசத்தோடு இணைய வேண்டுமென்ற ஆசை எனக்கில்லையா? இந்த எதிர்பாராத தாக்குதலை எம்மால் செய்திட முடியாதா?” என்று ஆவேசமாக பேசியதோடு, “மேகோன் நாம் நினைப்பதற்கெல்லாம் அப்பார்ப்பட்டவன். எதிரியின் நிழலின் சாயல் வைத்தே அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதை அறியும் ஆற்றல் பெற்றவன். வயதால் மட்டுமே சிறியவன். அவனை வீழ்த்துவது அத்தனை எளிதல்ல. இப்பொழுதும் சென்ற இருவரும் அவனது கைகளில் தங்களின் உயிர் துறந்திருப்பர்” என்றார்.
அவரின் பேச்சினைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்த ஜிக்கி,
“எதிரியை புகழ்வது போன்றுள்ளது தங்களின் பேச்சு” என்றான்.
“இது புகழ்ச்சி அன்று. உண்மை… மேகோன் சிறந்த அரசன். உயர்ந்த ஆற்றல் கொண்டவன்… ஏற்க முடியவில்லை என்றாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்ற ஷென்லாங்கை தீயாய் முறைத்தான் ஜிக்கி.
“கோபமும், வேகமும் நமக்கே ஆபத்தை விளைவிக்கும் அபாயம் கொண்டவை… நிதானித்து செயல்பட வேண்டும். உமது அவசர திட்டத்தின் விலை நம் வீரர்கள் இருவரின் உயிர்” என்று மகனை கடிந்துகொண்ட ஷென்லாங், “தாக்குதலையும் நேர்கொண்டு நடைமுறைப்படுத்துபவனே அரசனாகும் தகுதி பெற்றவன்” என்றார்.
“அத்தகுதி தங்கள் பார்வையில் எமக்கு இல்லையென்பதாகவே இருக்கட்டும். ஆனால் இதற்கு மேலும் எம்மால், அவனுக்கு அடி பணிந்து வணிகம் செய்திட முடியாது. நாம் ஏன் அவர்களிடம் கையேந்திட வேண்டும்? போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்றி விட்டால், நமக்கு அவர்கள் அடிமைகளாவர். அதற்குபின் அங்கு நமது ஆட்சி தான். நமக்கு, நமது தேசத்திற்கு எஞ்சியவை தான் அவர்களுக்கு. அதற்காகத்தான் தங்களின் முன் கூட்ட ஆலோசனையில் பேசியதை நடைமுறைப்படுத்தினேன்” என்றான் ஜிக்கி.
“நம் வம்ச முத்திரை நாகம். ஆனால் நம்மால் ஒருபோதும் தீய நாகமாக மாற்றம் கொள்ள முடியாது.”
“அதாவது?”
“மேகோனிடம் நம் தூதுவன் ஒருவனை அனுப்பி வையுங்கள் ஓங்” என்ற ஷென்லாங், “நாம் மாறவில்லை என்பதை மேகோனுக்கு தெரியப்படுத்துங்கள்” என்றார்.
“இதற்கென்ன அவசியம்? இன்னும் எத்தனை காலம் அமைதியாக காத்திருப்பது. உணவு வளங்கள் மட்டுமல்லாது, தற்போது கல்வியிலும் அவர்களின் நிலை உயரத் துவங்கியுள்ளது. கல்வி வளர்ச்சி அத்தேசத்தை அசைத்திட முடியாத இடத்தில் அமர்த்திடும். வருங்காலத்தில் நமது தேசம் அவர்களுக்கு அடிமையாகும்” என்று கொதித்தெழுந்தான் ஜிக்கி.
“கலைகள் பலவற்றை அறிந்திருந்த போதிலும், அண்டை தேசங்களை அடிமைப்படுத்தும் எண்ணம் என்றுமே மேகோனுக்கு இல்லை. அரவணைத்து செல்ல விரும்புபவன் அவன். அவனிற்கு இருக்கும் ஆற்றலுக்கு, இந்த நொடி நம் மீது போர் தொடுத்தாலும் வெற்றி அவனுடையது” என்ற ஷென்லாங், “நமக்கான காலம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். முதலில் நீ செய்துவைத்த சிக்கலை சரிசெய்திட வேண்டும். இந்நேரத்திற்கு மேகோன் விடயத்தை அறிந்திருப்பான். நமது எண்ணத்தையும் யூகித்திருப்பான். இதற்கு பதிலடியாக தண்ணீர் வர்த்தகத்தை நிறுத்தினால், நம் தேசம் உணவின்றி பஞ்சத்தில் வீழ்வது உறுதி. பார்த்து நடந்துக்கொள்” என்று தனது மகனை எச்சரித்தார்.
____________________________
பகல் வெப்பம் குறைந்து சாயங்காலம் தோன்றிய வேளையில், மகிழ நகரின் அரசவையில், மேகோன் தனியாகவும், ஆழமான சிந்தனையோடும் நின்றுகொண்டிருந்தான். கைகளை மடக்கி, எழில்மிகு மேடையின் பக்கவாட்டில்.
நயனன் மெதுவாய் அவனை அணுகினான்.
“தங் தூதுவர் வந்திருக்கிறார்.”
“ஓங் ஜாவோவா?” மேகோன் வினவிட, நயனன் ஆமென்று தலையசைத்தான்.
“எதிர்பார்த்தேன்” என்ற மேகோன், “மயில்கண் சிற்றரசர் வந்தாயிற்றா?” என வினவினான்.
“அவரைப்பற்றிய தகவல் எதுவுமில்லை. ராஜகுரு விருந்தினர் மாளிகைக்கு வந்துவிட்டார்” என்று தகவல் அளித்த நயனன், “வீரவாழுதியும், வேதகுருவும் உடனிருக்கின்றனர்” என்றான்.
“சிறப்பு…” என்று மென் புன்னகையை உதிர்த்த மேகோன், “அரங்கேறும் நிகழ்வுகள் யாவும் சுவாரஸ்யமாக இருக்கும் போலவே” என்றான்.
“இந்நிலையிலும் ரசிக்கும் மனம் உமக்கு மட்டுமே உரித்தானதாகும். எம்மால் இயலாது. எம்மால் ஜீரணிக்க இயலவில்லை. தங் மன்னரிடம் இதனை யான் எதிர்பார்க்கவில்லை” என்ற நயனன், “நமது வர்த்தகத்தை நிறுத்தி நம்மீது அச்சத்தை ஏற்படுத்துவோம். அப்பொழுது தான் இனியொருமுறை தாக்குதல் புரிய யோசித்திடுவர்” என்றான்.
“கோபத்திலும் அழகாக இருக்கின்றாய். அதனால் தானோ இளவரசியார் உம்மைச் சுற்றியே வருகின்றார்” என்ற மேகோன் நண்பனின் தோள்மீது கைபோட்டான்.
“பேச்சினை மாற்ற வேண்டாம்.” குவிந்த முகத்தோடு கூறினான்.
“நமது செயல்களால் பாதிக்கப்படப்போவது குடிகளே! குடிகள் யாவரும் போரினை விரும்பமாட்டார்கள். ஒரு தேசத்தின் அரசனாக, அண்டை நிலப்பரப்பின் குடிகளின் நலனிலும் எமக்கு அக்கறை இருத்தல் வேண்டும்” என்ற மேகோனை முறைத்த நயனன், “இவ்வெண்ணம் அவர்களுக்கு உள்ளது போன்று தெரியவில்லையே! அன்பின் வழி அடக்கி ஆள்வது இயலாத காரியம்” என்று மன்னனவனுக்கே பாடம் கற்பித்தான்.
“அடக்கி ஆள்வது எமது நோக்கமல்ல… அன்பின் வழி, அமைதியான நட்பையும், சுமூகமான உறவையுமே யான் வேண்டுகிறேன்.”
மேகோன் அவ்வாறு கூறியதும், நயனன் கரம் குவித்து போதுமெனும் பாவனை காட்டினான்.
“படைத் தளபதி என்பதற்காக எப்போதும், அம்பு எய்தி போர் புரிய வேண்டுமென்ற கண்ணோட்டத்திலேயே யாவற்றையும் பார்த்திடக்கூடாது நயனா” என்ற மேகோன், “அங்கு காத்திருப்பர். செல்வோம்” என்றான்.
மேகோன் முன்னால் இரண்டடி வைத்திருக்க…
“யாவும் சரிதான்… ஆனால் தாங்கள் இளவரசியாருக்கு சகோதரன் போன்று நடந்துகொண்டால் சரியாக இருக்கும்” எனக்கூறினான் நயனன்.
நின்று திரும்பி புருவம் உயர்த்திய மேகோன்,
“சகோதரன் போன்று நடந்துகொள்ள வேண்டும்… அவ்வளவுதானே?” என்றான்.
“ஆமாம். உமது தங்கைக்கு புத்தி உரைத்தல் அவசியம்” என்றான்.
“வேறு ஏதேனும் முறையீடுகள்?”
“இல்லை.” நயனன் இரு பக்கமும் தலையசைத்ததும்,
“பிடித்தத்தின் அளவு கூடுகையில் தான், பிடித்தமற்ற எண்ணமும் எழுகின்றதா?” எனக்கேட்ட மேகோன், “உம்மை போன்ற ஆண்மகன் தேசம் முழுக்க சுற்றித் திரிந்தாலும் அமையபெறாது” என்றான்.
“மேகா!”
“நண்பன் என்றநிலை உறவினன் எனும் அளவிற்கு உயர்வதில் உமக்கு விருப்பமில்லை என்றால் யான் செய்திட ஒன்றுமில்லை. அவளாக மீண்டுவருவதே அவளின் வலிக்கு நிவாரணியாகும்.”
அதிர்ந்து நின்ற நயனனை பொருட்படுத்தாது சொல்லிச் சென்றுவிட்டான் மேகோன்.
விருந்தினர் மண்டபத்திற்குள் மேகோன் அடி வைத்திட, அரண்மனையின் வாயிலில் இருந்து ஓங் ஜாவோ அங்கு நுழைந்தார். அவருக்கு பின்னால், சில வீரர்கள்.
மேகோன் நின்ற இடத்திலிருந்து விரைவாக அன்பும், எச்சரிக்கையும் கலந்த பார்வையை வீசினான்.
“அரசர் மேகோன்! நாகத்தின் நிழல் உங்களை இங்கே தொட்டுவிட்டது என்று உணருகிறேன்.” ஓங் மறைமுகமாக சொல்லில் தாக்குதலை நிகழ்த்தினார்.
“நிழலிற்கெல்லாம் அஞ்சும் இயல்புடையோர் இங்கில்லை” என்ற மேகோன், “மேமகிழ் தேசத்திற்கு உம்மை வரவேற்கிறோம்” என்றான்.
ஓங் ஜாவோ சிறிது சிரித்தார்.
சுந்தரனார் மற்றும் தேரல், அயல்நாட்டு தூதுவருக்குரிய மரியாதை அளித்து, அங்கிருந்த இருக்கையில் அமரக் கூறினர்.
ஓங்கின் பேச்சு மூவரையும் பார்த்திருந்தது.
“மன்னர் ஷென்லூங் யான் தங்களை இன்னும் மதிக்கிறார்.”
மேகோன் மேற்கொண்டு சொல் என்பதைப்போல் பார்த்திருக்க…
“தங்களின் இக்கூற்றிற்கு தற்போது அவசியமென்ன?” எனக் கேட்டார் தேரல். அவருக்கு முந்தைய தாக்குதல் தெரிந்திருக்கவில்லை.
தன்னுடைய மகன் மேகோன் வாயிலாக, முன்தின இரவு இருவர் மேகோனை தாக்கிட முயற்சித்ததை சுந்தரனார் தேரலுக்கு விளக்கினார்.
தேரல், ஓங் ஜாவோவை பார்த்து,
“அரசரை தாக்க முற்பட்டுவிட்டு, எவ்வாறு இங்கு அமர்ந்திருக்கின்றீர்?” என கோபம் கொண்டு வினவினார்.
அவரின் கோபத்தை கண்டு, மேகோன் அர்த்தமாக தனக்குள் எழுந்த புன்னகையை மறைத்துக் கொண்டான்.
“இத்தாக்குதல் எம் மன்னருக்கே தெரியாது, இளவரசர் ஜிக்கியால் நிகழ்ந்தது. அதனை விளக்குவதற்கு மன்னர் தன்னை அனுப்பி வைத்தார்” என்ற ஓங்கிடம்,
“தங்களின் கூற்றை ஏற்றுக்கொண்டதாக அரசர் ஷென்லாங்கிடம் தெரிவித்திடுங்கள்” என்றான் மேகோன்.
ஓங் ஜாவோ சரியென தலையாட்டினார்.
“இவ்வாறு மன்னிப்பது நமக்கு ஆபத்தாகலாம்.” தேரல் அப்பட்டமான கடிதலுடன் எடுத்துக் கூறினார்.
“எப்பொழுதும் தாக்குதல் எனது நோக்கமல்ல சிறிய தந்தையே” என்ற மேகோன், “எமது அமைதியெல்லாம் குடிகளுக்காக மட்டுமே! இதனை செய்தியாகவோ அல்லது எமது எச்சரிக்கையாகவோ உம் மன்னரிடம் கூறிவிடுங்கள்” என்றான். ஓங்கிடம்.
கண்களில் அனலில்லை. வார்த்தையில் அழுத்தமில்லை. இருப்பினும், மேகோனின் குரலிலிருந்த ஒன்று ஓங் ஜாவோவை அச்சமடைய வைத்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
1
+1