Loading

அத்தியாயம் 49

நெஞ்சத்தின் பிளவுகளாய் மேகநதியின் உணர்வுகள் பந்தாடத் துவங்கின.

நேருக்கு நேர் நின்று மேகோனின் நயனங்கள் காயம் கொள்வதை வலியோடு சுகித்து, வெளிப்படையான மறுப்பை சொல்லிவிட்ட கணம் ஆவி துடித்து அடங்கினாலும், அவளின் மறுப்பையும் காதலாய் ஏற்று விலகி நின்றுகொள்கிறேன் என்று சொன்னவனின் நிஜம் மறைந்த பின்னர் சிறுக சிறுக உயிர் கருகும் வேதனையை சுமக்கின்றாள். மொத்தமாக தீக்கு இரையாகினாலும் இந்த வதை இருக்காது போலும். காதலின் வெம்மை தாங்காது ரணப்படும் மனதை அமைதிப்படுத்தும் மார்க்கம் அறியாது தண்ணீரில் விழுந்திருந்தாள்.

குளத்தில் பாய்ந்திருந்த மேகமவளின் உடல் முழுதாய் நனைந்திருந்தது. மூச்சடக்கி நீருக்குள் அமிழ்ந்திருந்தவளின் எண்ணம் முழுக்க உயிர் இப்படியே நீரில் கரைந்துவிடாதா என்பதாய்!

மேகோனின் ஒவ்வொரு வார்த்தையும் வெப்பமாய் நெஞ்சை தழுவ, தன்னைத்தானே விலக்கிக்கொண்டு, உணர்வின் நெருக்கத்திலிருந்து ஒதுங்கி நிற்க முயன்றிருந்தவள், குளத்தின் நீரில் தன்னை மூழ்கடித்திருந்தாள்.

தன்னுடைய அழுத தடம் முழுவதையும் குளத்து நீரில் சமர்பித்து நீருக்கு வெளியில் வந்தவள், சட்டென்று நுரையீரல் தாக்கிய சுவாசத்தில் நிலைகுலைந்த போதிலும், திடமாக கரையேறினாள்.

இனி அழுவதற்கு கண்ணீரின் ஒரு துளி மிச்சமில்லை எனும் நிலையில் மெதுவாய் கிளம்பினாள்.

ஜீவனின் இடுக்குகளில் ஒளிந்திருந்த உணர்வுகள் அனைத்தும் விழிகளின் வழியாகத் தெளிந்துவிட்டதால், கண்கள் காலியாகிருந்தன. ஆனால் உள்ளம் மட்டும் சுழன்று கொண்டிருந்தது.

மேகோன் உள்ளத்தால் காட்டிச்சென்ற மேன்மை நேசத்தில், இனி ஒவ்வொரு நொடியும் வலியுடன் தான் கழியும் என்பதை உணர்ந்து ஏற்று பழகிட முடிவெடுத்துவிட்டாள்.

குளத்திலிருந்து தனது மிக அருகிலிருந்த தன்னுடைய வீட்டின் பின் பகுதியை நோக்கிச் சென்றவள், அங்கு தன்னை எதிர்நோக்கி நின்றிருந்த தந்தையை கண்டு நடையை பின்னினாலும், அதிர்ந்து நிற்கவில்லை.

மேகத்திற்குள் மின்னல் பாய்ந்து இடி இசைப்பதுபோல, அவள் எதிர்பாராத தருணத்தில் இடும்பனின் குரல் ஒலித்தது.

“மேகநதி…”

ஒலித்த குரலில் தந்தை தன்னை கண்டுகொண்டாரோ என்று அதிர்வெழுந்த போதும், ஒரு நொடியில் தாமதியாது அவரின் அருகில் சென்றுவிட்டாள்.

தலை கீழ் பார்த்தபடி மெதுவாய் விழிகளை மட்டும் உயர்த்தி ஏறிட்டாள்.

இடும்பன் முகத்தில் அழுத்தம் காட்டி நின்றிருந்தார்.

முதுமை முகம், ஆனால் வீர வாழ்வின் தடங்கள் அதனிலிருந்தும் தெளிவாய் தெரிந்தன. அவளது முகத்தை பார்க்க வருந்தி நிலாவை நோக்கி தலையை உயர்த்தியிருந்தார்.

மகளின் உள்ளத்தின் முழுமையை உணர்ந்தவராய்.

“எமக்குத் தெரியும், உம் இதயத்தில் யாரும் உள்ளார்,” என்றார்.

அவள் வாய் திறக்கவில்லை.

“மகிழப் பேரரசின் அரசன்… மகிழ் மேகோன்…” என்றபோது, அவளது கண்கள் விரிந்தன.

‘தந்தை அறிந்துவிட்டாரா?’

“உனது மறுப்பு ஆகச் சிறந்ததாகும் மகளே” என்ற இடும்பன், அவளது கண்ணோட்டத்தை எதிர்த்து, மென்மையை இழக்காமல் கூறினார்.

“அவரை நேசிக்கின்றாய். ஆனால் என் மகளே… அவர் ஒரு மன்னன். நமது தேசத்தின் வீரத் தலைவர். அவருக்கு மக்களின் நிலையில் இருக்கும் ஏற்றத்தாழ்வின் மீது உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு, வாழ்வியல் நிலை எதுவென்று அறிவோம். இந்நேசத்தால் உனது படிநிலைகள் உயரலாம். ஆனால் மன்னரின் உயரம்…” என்று அடுத்துக் கூறிடாது நிறுத்தியவர், “வேண்டாம் மகளே… உம்மால் அரசர் எதையும் இழந்தார் எனும் இழிச்சொல் உம்மீது படிய வேண்டாம்” என்று வார்த்தைகளை மெதுவாய் உதிர்த்தார்.

“தந்தையே!” மலுக்கென கண்கள் நிரம்பிவிட்ட நீர் கன்னம் உருண்டோடியது.

“நேசம் வருகின்ற தடம் யாரும் அறிந்திட இயலாது… ஆனால், நேசம் என்ற ஒன்று, உணர்வில் மட்டுமே இருப்பதில்லை. அது கடமைக்கும் சோதனைக்கும் உட்பட்ட ஒன்று. நேசத்தால் நமது வழிமுறைகள் எதையும் இழந்தோமென்று இருக்கக்கூடாது. இதுவும் சோதனைதான். மீண்டு வந்துவிடு என் மகளே!” என்று பரிதவித்து மொழிந்த இடும்பன்,

“அரசர் நல்ல மனிதர். அதற்காக அவரது உயரம் மறந்து நாம் நடந்துகொள்ளல் ஆகாது. அரசனாக இருக்கின்ற வரை, அவருக்கு தேசமே முதன்மை. அவரது சிறு செயல்கலும் அதீதமாய் கவனிக்கப்படும். கவனித்தல் அவரது அரியணைக்கு ஆபத்தாகும். சிற்றரசர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆட்சி ஆட்டம் பெறும். அவர் மீது உண்மையான அன்பு இருக்கிறதென்றால்… அவரின் நிம்மதிக்காக உம் நேசத்தை விட்டுக்கொடுத்துவிடு. மொத்தமாக விலகவேண்டும்” என்றார்.

“யான் ஏற்கனவே மறுப்பாக எம் முடிவை உரைத்துவிட்டோம் தந்தையே! இனி இதுகுறித்து தங்களுக்கு கவலை வேண்டாம்.” அழுத்தும் ரணம் மறைத்து மொழிந்தாள்.

“ஆனால் உனது இதயத்தை விலக்கவில்லையே. அவர் உம் கண்களில் இன்னும் வாழ்கின்றார். இந்நிலை உமக்கு மட்டுமல்ல அரசருக்கும் உகந்ததல்ல” என்ற இடும்பன், “மன்னரும் உன்னை நேசிக்கிறார். ஆனால் உன்னுடைய பாதை எப்போதும் சுயம்வழி இருத்தல் வேண்டும். ஒருவேளை இவ்விடயம் தேசம் பரவுமாயின் நாளை அரசவையில் உன்னைப் பற்றி விமர்சனம் எழும்பும். விமர்சனம் நேர்மறையை காட்டிலும் எதிர்மறையே அதிகமாக இருக்கும். அது உம்மை முற்றிலும் சாய்த்துவிடும். படையில் சேர்ந்து நாட்டிற்காக போர் புரிய வேண்டுமென்ற உமது ஆசையை அழித்துவிடும். உம் விருப்பம் அறிந்ததால் தான் இதுநாள் வரை மணத்திற்கு மகன் பார்க்காது இருக்கின்றேன்” என்றார்.

மேகநதி அமைதியாய் நின்றாள். கண்கள் நிறைந்திருந்தன. ஆனால் வலிமை கொண்டிருந்தன.

“யானும் அவரை நேசிக்கின்றேன்… ஆனால் நன் நெஞ்சம் மட்டும் அல்ல, நன் வீரமும், நன் கடமையும், நன் தேசமும் அந்நேசத்திற்கு மேலாக பெரிது. ஒருபொழுதும் அதனை மறந்து நடந்துகொள்ளமாட்டேன்.” உடல் இறுகக் கூறியிருந்தாள்.

________________________

மண்ணின் அடியில் பரவிய காற்றின் வாசனை, யுகங்கள் கடந்த இரகசியங்களை நெஞ்சில் சுமந்ததுபோல் இருந்தது.

மனதின் பிளவுகளை மறைத்தும் முடியவில்லை மேகோனுக்கு.
தன் உள்ளத்தில் மேகநதியின் மறுப்பு முழுதாய் நிறைந்திருக்க தன்னையே தொலைத்திருந்தான்.

ஆனால் இப்போது, அரசனாக செயல்பட வேண்டிய பொறுப்பு மீண்டும் அவனை முற்றிலும் விழுங்க முயன்றது.

தன் முகத்தை மறைத்தபடியே, பதித்த விழிகளில் தீ கொண்டு, சிறை அறைக்குள் நுழைந்தான்.
பாதாள அரண்மனையின் அந்த இறுகிய அறையில் இரும்புச்சங்கிலியில் கட்டப்பட்டிருந்த இரண்டு வீரர்களும், அவனது வருகையில் திசை தெரியாமலே அச்சமடைந்தனர்.

நயனன் சிறிய இரும்பு நாற்காலியில் அமர்ந்தவாறு கேட்டான்.

“தங்கள் பயணம் எங்கிருந்து?”

ஒருவன் வார்த்தைகளை முரணாக உச்சரித்தான்.

“உ வுத் பு யேன்!”

அவன் முகத்தில் பயமும், விழிகளில் ஒரு எதிர்பார்ப்பு தொனியும் இருந்தது.

நயனன் புரியாமல் அவனைக் கண்ணால் அளந்தபோது, மேகோன் வீரனை நெருங்கிச் சென்று மெதுவாக வினவினான்.

“ரு வேய் தங் ரென் ஹூ?” (Ru wéi Táng rén hū?)
(நீ தங்க் பேரரசைச் சேர்ந்தவனா?)

அந்த வார்த்தை ஒரே கணத்தில் அந்த சிறையிலிருந்த சீன வீரனை நடுங்க வைத்தது.
அவன் விழிகள் பெரிதாகின.

மறைந்திருந்த அச்சம் ஒரு புறம். மறைக்கப்பட்ட உண்மையை இன்னொரு புறம் அவனது உடல் மொழி வெளிப்படுத்தியது.

“தங்கள் இருவரின் பதங்களும் எமக்கு விளங்கவில்லை.” நயனன் கூறிட,

“தங் பேரரசினைச் சேர்ந்தவர்கள் இவ்விருவரும்?” என்றான் மேகோன்.

தங் பேரரசு பண்டைய சீன ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி பெயராகும். ஒன்பதாம் நூற்றாண்டில் சீனப்பகுதிகள் பல பிரிவுகளாக இருந்தன. மக்களின் குலம் வைத்து பிரிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று தான் தங்.

நயனன் இதெப்படி சாத்தியம் எனும் வகையில் பார்த்தான்.

“அவர்கள் இங்கு வர காரணம் என்ன? அதிலும் உம்மை குறிவைத்து?” நயனன் இவ்வாறு கேட்டதிலும் அர்த்தம் உள்ளது. தங் பேரரசு மகிழ தேசத்துடன் சுமூகமான முறையில் வணிகம் வைத்திருக்கும் போது இப்படியொரு செயலை ஏன் செய்திட வேண்டுமென்ற எண்ணம்.

“இவர்கள் எய்திய அம்பினை வைத்தே, அதிலிருந்த பறக்கும் பாம்பின் பிம்பம் பார்த்தே யாம் கண்டுகொண்டோம். இருப்பினும் இருக்காதென்று சிறு நம்பிக்கை. இக்கணம் பொய்த்துப்போனது” என நயனனிடம் கூறிய மேகோன் இருவரையும் கூர்ந்து நோக்கினான்.

(இனி வரும் உரையாடல்கள் யாவும் தமிழில்.)

“உங்களது நடவடிக்கைகள் யாருடைய கட்டளையின் கீழ்?”

அந்த இருவரில் ஒருவன் விழிகளை மூடிக்கொண்டான். மற்றவன், மெதுவாய், கையிலிருந்து ஒரு சின்ன மூட்டையை எடுத்துக்காட்ட முயன்றான். ஆனால் மற்றவனின் கட்டுப்பாட்டில் இருந்ததால் முடியவில்லை.

“அவனிடத்தில் ஏதேனும் இரகசியப் பொருள் இருக்கலாம்!” என நயனன் சுட்டினான்.

காவல் வீரர்கள் முன்னே சென்று அவனது உடலைத் தேடினர்.

ஒரு சிறிய பட்டையினை, பாம்பு வடிவத்தில் செதுக்கிய கம்பளி தோலை அவன் உடைதளத்தில் இருந்து எடுத்தனர். அதன் உள் அடுக்குகளில், ஒரு நுட்பமான காகிதம் கிடைத்தது.

மேகோன் அதை திறந்து படித்தான்.
நயனன் பக்கத்தில் நின்றபடியே என்னவென்று ஆராய்ந்தான்.

“தங் மொழி போன்று இல்லையே!?” என்று யோசித்த மேகோன், “ஹான்யு?” என கேள்வியாக நோக்கினான் தங் வீரனை.

பழைய சீன மொழிகளில் ஒன்றான ஹான்யுவால் எழுதப்பட்டு இருந்தது.

(ஒன்பதாம் நூற்றாண்டில் சீன ராஜ்ஜியங்களில் சாதாரண மக்கள் பேசும் மொழியும், அரசு பயன்களுக்கு எழுதப்பட்ட மொழியும் ஒரே மாதிரியானவை அல்ல.)

முதலில் மேகோனும் தடுமாறிப் பார்த்தாலும் சட்டென்று கண்டுகொண்டான்.

வாணிப தொடர்பில் உறுதி பட்டய விதிமுறைகளுக்காக அண்டை தேசத்து மொழிகளை எழுதவும் வாசிக்கவும் கற்றிருந்தான். தற்போது அதனை கொண்டே எதிரிகளை அடையாளம் கண்டிருந்தான்.

“வாணிபத் தொடர்பு நலமுடன் இருக்கையில் எதற்காக இத்தகைய தாக்குதல்?” என்றான் நயனன்.

அவனுக்கு அத்தோல் பட்டயத்தில் எழுதியிருந்தது வாசிக்க முடியாததால், என்னவென்று பொருள் தெரியாது மேகோனிடமே கேட்டிருந்தான்.

“எமது ஆராய்ச்சிக்கூடமிருக்கும் பகுதியை அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, நம் மீது போர் தொடுக்க உள்ளார்களாம். அதற்காக சிற்றரசர்களின் உதவி கேட்டு தூது வந்திருக்கின்றனர். குறுநில மன்னர்களை சந்திப்பதற்கு முன்பு முடிந்தால் எம்மை கொன்றுவிடுவதெனத் திட்டம்” என்று தூது தோள் தாளினை பார்த்தவாறே மேகோன் சொல்லி முடித்திட, இரு தங் வீரர்களும் நொடியில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குறு வாளால் குத்திக்கொண்டு உயிர் துறந்திருந்தனர்.

நயனன் சுதாரிக்கும் முன்பு அவர்களது உயிர் போயிருக்க, அவர்களைத் தடுக்கும் வேகமிருந்த போதும் மேகோன் அசைவற்று நின்றிருந்தான். தடுக்கும் எண்ணம் சிறிதுமின்றி.

“இவ்விரு உடல்களை தங் தேசத்தின் எல்லை கடல்பரப்பில் வீசி விடட்டுமா?” என நயனன் கேட்டிட, வேண்டாமென தலையசைத்த மேகோன்,

“அதுவே போருக்கு வழிவகுத்திடும். நம் தேசத்துக்குள் நுழைந்தவர்கள் உயிருடன் இருப்பதாகவே அவர்கள் எண்ணட்டும்” என்றான்.

“நாட்கள் நகர்ந்தால் தூதர்களிடமிருந்து எவ்வித பதில் தூதும் வரவில்லையென்று, உண்மையை யூகிக்க வாய்ப்புள்ளதே மேகா” என்ற நயனனுக்கு மேகோன் மனதில் என்ன திட்டமென்று கணித்திட முடியவில்லை.

“அவர்கள் அறியும் முன்பு, நமது எல்லைப்பகுதியில் பாதுகாப்புகளை விரிவுபடுத்துவோம்” என்ற மேகோன், “மயில்கண் குறுநில பரப்பின் சிற்றசரை நாளை விருந்துக்கு வரச்சொல்லி தூது அனுப்பு” என்றவனாக அங்கிருந்து புறப்பட்டான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்