Loading

அத்தியாயம் 48

நிழல்களின் நடுக்கத்தில் பிறக்கும் உணர்வுகளாய் குவிந்து நின்றவள், மனம் மறைக்க முயன்ற காதலை விழிவழி தன்னவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தாள்.

மண்டபத்தின் விளிம்பில் நின்று நிலவொளியில் மேகநதியின் முகத்தை மீட்போடு நோக்கியவனாக இருந்தான் மேகோன்.

விழிகளின் பார்வையில் மறுப்பு இல்லாத தவிப்பை வாசித்தபோதும், வார்த்தையில் ஒப்புதல் இல்லாத மௌனத்தால் பின்வாங்கியவனின் காலடி, அந்த மண்டபக் கல் தரையில் எடைக்கொண்டு தட்டியது.

புரவியின் கழுத்தை வருடியவாறே அவனது உள்ளம் இன்னும் அவளிடம்…

அவளது விழிகள் பேசாத வார்த்தைகளை முழக்கமாய் சுமந்து, காலம் நின்றிருந்தது போல அமைதி சூழ்ந்தது.

அந்த அமைதியின் நடுவே திடீரென மெதுவாய் நடந்தாள் மேகநதி.
அவள் மேகோனை நோக்கி வந்ததோ, நிலவுக்கு நடுவில் நடை பயிலும் காற்று வாடையை போல இருந்தது அவளது அடி.

விழிகளில் தடுமாறும் தீர்மானம், உள்ளத்தில் விழிக்கும் தவிப்பு, ஆனால் அவளது பாவனையில் ஒரு துணிவு.

அவனின் எதிரில் வந்து நின்றாள். வார்த்தை இல்லை.
வார்த்தைக்கு மேல் செல்லும் நேர்மையான உணர்வுகளால் இருவருக்கும் எங்கும் விழிகள் வழியாகவே உரையாடல்.

“யான்… உங்கள் மனதை வாசிக்கின்றேன். உணர்ந்துகொள்ள முடிகிறது” என்றாள் மெதுவாய். இருப்பினும் அவள் சொல்லப்போகும் மறுப்பு அவனது நெஞ்சை கிழித்தது.

“ஆனால் அரசே…” அவளது குரலில் ஒரு நடுக்கம்.

“யான் உங்களை நேசிக்கின்றேன் என்பதே நன் வருத்தம்…”

அந்தச் சொல்லுக்குள் மறைந்திருந்தது… இந்த நேசம் இருவரையும் அத்தனை எளிதில் இணைத்துவிடாது எனும் பொருள்.

மேகோனும் அறிந்தது தானே!

அவளது தன்னிலை, தன்னை நேசித்தபடியே பின்னலைக்கின்ற தன்மையை உணர்ந்தவன் எதுவும் கூறாது அவள் சொல்லப்போகும் மறுப்பை கேட்க மனதை திடப்படுத்தி நின்றான்.

“எம் உள்ளம் புரிகிறதா அரசே?”

விரக்தியாய் புன்னகைத்தான்.

“நேசம் கொண்ட மனதிற்கு, அதற்குரிய நெஞ்சம் சேர்ந்திட திட்டமில்லை அரசே! இதனால் நாளை மகிழப் பேரரசின் அரசவையே இரண்டாகளாம். தேசத்தின் அமைதி குலையும். இதற்கு மேலும்… எதிர்பாராத நிகழ்வுகள் பலதும் நிகழலாம். ஆதி முதல் அந்தம் வரை முரண் வாய்க்கப்பட்ட இந்நேசம் வேண்டுமா அரசே?”

அப்பட்டமான மறுப்பு. அவள் சொல்லி கேட்டுவிடக் கூடாதென கடவுள்கள் அனைவரையும் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் யாவும் பலனற்று போனது.

அவளின் முடிவாக இதுதான் இருக்குமென்று அறிந்த ஒன்றுதான். ஆனால் அவளது வார்த்தைகளாக வடிவம் கொண்டிட மரித்து மீண்டான். வலியை முகத்தில் பிரதிபலித்திடாது… உள்ளம் தீக்குளிக்க உதட்டில் புன்னகை நிரப்பினான்.

அவன் முகம் சற்று சாய்ந்தது. நிதானமாக பேசத் துவங்கினான்.

“நதி மேகத்தை நேசிக்கின்றது என்பது போதும். ஒப்புக்கொள்ள முடியாத நிலைதான் வேதனை. யாரையும் நம்மால் கட்டாயப்படுத்த இயலாது, அல்லவா? அதிலும் குறிப்பாக நேசத்தில்… கட்டாயம் கூடாது. மனதில் வைத்திருப்பது நமது பொதியம் மலையினையே நெஞ்சுக்குள் வைத்திருப்பது போன்று அத்தனை கனம். உரியவரிடம் இறக்கி வைத்திட்டால் பாரம் நீங்குமே! சொற்களால் பகிரப்படாத நேசம் உள்ளத்தால் உணர்ந்த நொடிகள் போதுமானது.”

புன்னகையோடு கூறினாலும், அவனது வார்த்தைகளில் நிரம்பி வழிந்த வலி அவளை மீளா சுழலுக்குள் தள்ளி வதைத்தது.

அவளது கண்களில் நீர் சுழன்றது. ஆயினும் வலிமையாக நின்றாள்.

“தங்கள் அருகில் நின்ற ஒவ்வொரு கணமும் என் உயிர் நெருக்கத்தில் சுழல்கிறது. ஆனால் அந்த நெருக்கம் உங்களை ஆபத்துக்குள்ளாக்கும்… தங்கள் நிலையை தாழ்த்தும்… அரச குடும்பத்திற்குள் வீணான சச்சரவுகள் எழும்… தங்களின் அமைதி குலையும், நிம்மதி பறிபோகும். நம் செயல் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றாலும், கெடுதலை விளைவித்தல் கூடாது. வீணான பலவற்றை தவிர்ப்பதற்கு விலகி துறந்துவிடுவது சிறப்பு” என்று சொல்லியவளின் கண்கள் இதயத்திற்கு இணையாகத் துடித்தன.

மறுத்தலிலும் ஆழமான காதலை அவனுள் கடத்திவிட்டாள் பெண்ணவள்.

அவளது சொற்கள் முடிவுக்கு வருவதற்குள், இறந்து பிறந்தான்.

“எவ்வொன்றும் எளிதாகக் கிட்டுமாயின் வாழ்வின் சுவை குன்றிவிடும். உமது எண்ணத்திலும், மனதிலும், மறுப்பிலும்… தாம் சொல்லாது விடுத்த ஒன்று மட்டுமே எனக்குள் ஆழம் பெறுகிறது. இது போதும் எமக்கு.

மறுப்பாகினும், நன் மீது வைத்திருக்கும் உமது பார்வை பரிசுத்தமானது. அவை எனக்கு ஒரு பதக்கம் போலவே. ஆமென்று
உம் விழிகளால் ஏற்கும் வரை யான் காத்திருப்போம்… ஒரு அரசனாக அல்ல… உமது நிழலாக… விலகி நின்று.”

மேகோனின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு அழுத்தமிருந்தது.

அவனது குரலில் அரசனின் கட்டளையில்லை. ஒரு காதலனின் தேடல் மட்டும்.

மறுப்பிலும் கண்ணியம் காக்கும் அவனது காதலில் இதயம் சேர்ந்திட விதி வகுத்திடாத காலத்தை நிந்தித்தவளின் மனம் முழுக்க இன்னும் இன்னும் ஆழம் பெற்றான் மேகோன்.

அரசனவன். அவன் ராஜ்ஜியத்தில் கட்டளையாக சிறு பார்வை போதும். அவனது காலடியில் சேர்ந்துவிடும் எவ்வொன்றும். ஆனால் அவனோ சிறு பெண்ணின் நேசத்திற்காக, அடிமை சாசனம் எழுதிட துடித்துக் கொண்டிருக்கிறான்.

அப்பேற்பட்டவனின் மனதில் வாசம் செய்கிறோம் என்பதே மேகநதிக்கு போதுமானதாக இருந்தது. இதற்கு மேல் வேறெதுவும் வேண்டாமென்ற எண்ணம். அவனுடன் வாழ்ந்தால் மட்டும் தானா? அகம் நிரப்பிய காதலோடு இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் அவளால் ஜீவித்திட முடியும்.

அவளின் உணர்வுகளையும் விளங்கிக் கொள்பவனுக்கு அவளது எண்ணமும் விளங்கியது.

“போதுமெனும் வரையறு உமக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் எமக்கு, எமது அகத்திற்கு?” என்று இடை நிறுத்தியவன், “பார் அறிந்திராத பெரும் நேசத்தோடு, தெவிட்டாத பேரன்பு வாழ்வு வாழ வேண்டும். ஆசைகள் யாவும் வாழ்வில் அரங்கேற்றம் பெறுவதில்லை. வதைக்கும் முடிவுகளும் சுகமளிக்கும் அல்லவா… தீரா நேசத்தில். வலியோடு ஜீவித்திட கற்றுக்கொள்கிறேன்” என்று புன்னகை சிந்தினான்.

அக்கணம் மேகோனின் முகம் காட்டியதெல்லாம் வலி நிறைந்த இனிமை.

காதலை முழுதாய் பகிரும் முன்னரே வேண்டுமென்ற முடிவை உறுதி செய்துகொண்ட நிலையில் மௌனித்து… களங்கமில்லா அந்த நிலா வெளிச்சத்தில் சில நிமிடங்கள் அமைதியாய் நின்றனர்.

வெளிச்சம் மெதுவாக மங்கும் நேரத்தில்,

“அன்பில் காத்திருக்கும் சுகம் அலாதியானதாம். ஆனால் வாழ் முழுமைக்குமான காத்திருப்பு கொடுமையானது. மறுப்பு அறிந்த பின்னர் சொல்லிவிடக் கூடாதென்ற எமது எண்ணம் தோற்றுப்போக… ஒருமுறை சொல்லிவிடேன் என நெஞ்சம் கதறுகிறது… எமக்காக, எமது உள்ளத்திற்காக, இனியொரு சந்தர்ப்பம் அமையாது என்ற தவிப்பிற்காக ஒருமுறை சொல்லிக்கொள்கின்றேன்… எம் வாழ்வின் மொத்த பகுதியும் எமது நதியாவாள்… மேகத்தின் நதி… மேகோனின் மேகநதி” என்று தனது மனதை ஆழமாக புடமிட்டு காண்பித்தவன், புரவி ஏறி சென்றுவிட்டான்.

உருவம் மறையும் வரை பார்த்து நின்றவள், அடுத்த நொடி நீருக்குள் பாய்ந்திருந்தாள். மூச்சடக்கி கதறலோடு கண்ணீர் சிந்தியவளின் ஆழ அன்பில் குளத்தின் நீர் இருமடங்காகியது.

______________________________

மெல்ல விடியல் முளைக்கத் துவங்கியது.

மேகநதியிடம் தனது காதலை முடித்துக்கொண்டு மேகோன் நேராக வந்த இடம் மகிழப் பேரரசின் சிறை இருக்கும் பகுதி.

காதலின் வலியை புறக்கணிக்க, சதி வீழ்த்தும் சாயலை களைய முயன்றுவிட்டான்.

சிறை வாயிலில் காவல் வீரர்கள் வணங்கிட…

“தளபதியாரை அழைத்து வாரும்” என்று ஒரு காவலனுக்கு கட்டளையிட்டவன், உட்பகுதிக்குள் பிரவேசித்தான்.

சில நிமிடங்களில் நயனன் வந்து சேர்ந்தான்.

தான் வந்தது அறியாது, இறுகிய நிலையில் ஓங்கி வளர்ந்திருந்த விருட்சத்தை வெறித்தவாறு நின்றிருந்த மேகோனின் தோளில் கரம் பதித்தான் நயனன்.

“என்னவாயிற்று? உமது சிந்தை இங்கில்லையே!” என்றான்.

மெல்ல நயனன் புறம் திரும்பிய மேகோன்…

“அழுத்தமாக வலி ஊடுருவுகிறது நயனா… இவ்விடத்தில் ரணம் கூடுகிறது” என்று தன்னுடைய இதயப்பகுதியை கை விரல்கள் மடக்கி குத்தி காண்பித்தான்.

“மேகா!” நயனன் அதிர்ந்துபோனான்.

மேகோனின் இப்படியொரு கசிங்கிய முகத்தை என்றுமே அவன் கண்டதில்லை.

“முடியவில்லை நயனா!” என்றவனை இழுத்து தன் மார்புக்கூட்டில் அடைத்து ஆறுதல் அளிக்க முயன்றான் நயனன்.

“எம்மையும் நெஞ்சம் சுமக்கும் நேசம் படுத்துகின்றது.”

மேகோனின் அவ்வார்த்தைகளில் நயனன் உடைந்துபோக,

மரத்தின் வேரைப் போலவே வலியை நெஞ்சுக்குள் பரப்பியவனாய் மேகோன் நயனனின் தோளில் சாய்ந்தான்.

அவனது மார்பு எலும்புகள் இறுக்கம் பெற்றதில், எத்தனை பெரும் வலியை அனுபவிக்கின்றான் என்பதை நயனன் உணர்ந்தான்.

“துணிந்தவள்தான்… நன் முகம் பார்த்து தீர்க்கமாக மறுத்தவள்… நன் மேகநதி…” என்று குரலில் கசப்பு கலந்து தன்னவளின் திடத்தில் கர்வம் மேலோங்கக் கூறிய மேகோன்.

“நன் உயிரென்று ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வெளிவரும் ஓசையை மட்டுப்படுத்த இயலவில்லை நயனா” என்றான்.

“அவள் நேசம் நிஜம் தான் மேகா… அதற்கு இணையானது அவளது கூற்றும், மறுத்தலுக்கான காரணமும்” என்ற நயனனிடமிருந்து விலகி நின்றான் மேகோன்.

“விளங்காமலில்லை. பதிய வைத்திட கணங்கள் வேண்டுமல்லவா?” என்று கேட்டபோது, மேகோனின் குரல் எடைக்கொண்டது. சுருண்டு விழுந்த வலியின் சாயல்.

நயனன் மேகோனின் கரம் பற்றி அழுத்தம் கொடுக்க,

நுனியளவு இதழ் பிரித்த மேகோன் கண்களுக்கு எட்டா புன்னகையை உதிர்த்தான்.

“சிந்தையை மாற்று மேகா. உமக்கானதெனில் நிச்சயம் உமது கரம் சேரும்” என்றான்.

கண்களால் ஆமோதித்த மேகோன்,

“ராஜகுருவிற்கு தகவல் அளித்துவிட்டாயா?” எனக் கேட்டான்.

“குரு சுந்தரனார், தேவ மகிழோன் ஆலயம் சென்றுள்ளார். சூரிய அஸ்தமனத்தின் போது தம்மை சந்திப்பதாகக் கூறிச் சென்றார்” என்ற நயனன், “விசாரணையை ஆரம்பிக்கவா?” என்றான்.

“எமக்கும் எமது நிலையிலிருந்து மாற்றம் கொள்ள வேண்டும்” என்ற மேகோன் நயனன் உடன், இரவில் பிடிபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறை நோக்கிச் சென்றான்.

என்ன தான் கவனத்தை தனது நிலையிலிருந்து மாற்ற நினைத்து முயன்றாலும், உயிருடன் தழுவி நிற்பவளின் கண்ணீர் நிறைந்த மறுப்பு முகம் அவனின் சிந்தை விட்டு நீங்காது உயிர் வதை அளித்திட அவனது இயல்பான இயக்கம் யாவும் மாற்றம் கொண்டன.

வழமையான அவனது வேக எட்டுக்கள் மென் அடியாக மாறியிருந்தன. மனதின் துவண்டல் உடலில் தெரிந்தது.

நயனன் நண்பனை கவனித்த போதும், இந்நிலையிலிருந்து அவன் தானகத்தான் மீண்டுவர முடியுமென அமைதியாக உடன் நடந்தான். தனது வேகம் குறைத்து.

சிறை மரபணுக்குள் சில நிலைகள் கீழே சென்றனர்.

ஒரு மண் வாசனை நிரம்பிய காற்றில் மூச்சை இழுத்தவன், திடீரென தன் உள்ளத்தை கட்டுக்குள் கட்டிவிட முயன்றான். தன்னுடைய நதியை தாண்டி நிலைபெற முடியாது தவித்தான்.

“இவ்வலி நீங்காது போலிருக்கு நயனா. உள்ளுக்குள் காய்ச்சிக்கொண்டே போராடமுடியாது. அரசனாக எமது மனதின் தள்ளாட்டம் ஆபத்தானது”

“அரசன் மட்டும் இல்லை மேகா. இயல்பான மனிதனும் ஆவாய். இன்பம், மகிழ்வு, துள்ளல், கொண்டாட்டம், உற்சாகம் ஆகியவற்றோடு அதற்கு எதிர்காரணிகளான துக்கம், துயரம், வேதனை, வதை, சிக்கல், வருத்தம், சோகம் என்பனவற்றையும் உணர்ந்தாக வேண்டும்” என்ற நயனன், “நேசத்தில் இதுவும் ஒரு படிநிலையென வைத்துக்கொள். கடந்து வர வேண்டும். தற்போது நேரவிருக்கும் ஆபத்தை அறிந்து களைய ஆயத்தமாவோம்” என்றான்.

‘இல்லையென்றான பின்பு அதிலே துவள்வது மன்னனுக்கு அழகில்லையே! எமது வேதனை எம்மோடு முடிவடிவதில்லையே! யான் உரிமைபெற்ற அரியணை வரை நீளும் அபாயம் கொண்டதல்லவா! முயன்று மனதை கட்டுக்குள் வைத்திடு மேகா.’

நயனன் பேச்சில் தனக்குத்தானே மனதில் முடிவெடுத்தவனாக நிமிர்ந்து நின்றான் மேகோன்.

அறையை நெருங்கியதும் மேகோன் தன்னுடைய முகத்தை கண்கள் மட்டும் தெரிய துணிக்கொண்டு மறைத்துக்கொண்டான்.

பாதாள மண்டபத்தின் வெளிச்சம் காற்றால் ஆடிக் கொண்டிருந்த தீப்பந்தங்களிலிருந்து சீராய் ஒளி சிதறி பரவியது. அந்த ஒளியில் நயனன், மேகோன் இருவரும் அமைதியாக நின்று, இரும்புக் கட்டுகளில் இடுப்புப் பட்டயத்துடன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரு வீரர்களை நோக்கினார்கள்.

ஒருவன் விழிகளை மூடிக்கொண்டிருந்தான். மற்றவன் விழிக்க நினைத்த போதெல்லாம் அதில் அச்சம் நிலைத்திருந்தது. மேகோனின் வீரத்தினை அறிந்திருந்தால் உண்டான அச்சம் அது.

“தங்கள் பயணம் எங்கிருந்து?” என்றான் நயனன். குரலில் கோபம் இல்லை. ஆனால் திடத்தன்மை முழுமையாய் தொனித்தது.

மனிதர்கள் சொல்வதை விட அவர்கள் மௌனத்தில் உண்மை இருக்கிறது என்பதை நயனன் அறிந்தவன். அதனாலேயே தனது குரலில் மென்மைக்காட்டினான் கண்களில் தீயோடு.

“உ வுத் பு யேன்!” என்றான் ஒருவன்.

அவனது பேச்சின் பொருள் புரியாது நயனன் விழிகளை சுருக்கிட,

“ரு வேய் தங் (Tàng) ரென் ஹூ?” எனக் கேட்டு, சிறைப்பட்ட வீரனை மட்டுமல்ல நயனனையும் அதிர்வுறச் செய்திருந்தான் மேகோன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்