அத்தியாயம் 47
இதயம் கனத்திருக்கும் காதலை சொல்ல வந்த மேகோனால், அவளின் விழிகள் காட்டும் மறுப்பின் கரை தாண்டி சொல்லிவிட முடியவில்லை.
பார் போற்றும் மன்னனாக இருப்பினும், நேசம் சுமக்கும் சாதாரண மனிதனவன். அவனுக்கும் மறுப்பு வலி கொடுக்கும். தோல்வி ரணம் அளித்திடுமே. தன்னவளின் இறைஞ்சல் கடந்து, தொண்டை ஊறும் வார்த்தைகளை உதிர்க்க இயலாது பார்வையில் நேசத்தை வழியவிட்டான்.
தன்னவளுக்கும் தன்மீது நேசம் நிறைந்திருப்பினும், அவளுடைய பதில் மறுப்பு என்பதை அவளின் சஞ்சலம் படிந்த முகம் வலியுறுத்திட, பாவை பேசும் பார்வை மொழி கடந்து வார்த்தை மொழியால் உதிர்க்கப்படும் மறுப்பை ஏற்கும் திடம் அவனிடத்தில் இல்லை.
மெல்ல புன்னகைத்தான். கண்கள் காட்டும் அவனது வலி, சரியாக அவளின் இதயத்தை கிழித்து உயிர் துளைத்தது.
‘நன் மனம் புரிகிறது.’ விம்மி வெடித்து வெளிவரத் தயாராக இருக்கும் கேவலை தொண்டைக் குழியில் புதைத்ததன் பிரதிபலிப்பு, சட்டென்று சிவந்துவிட்ட அவளின் வெண் விழித்திரை அவனுக்கு காட்டிக் கொடுத்திட…
இதயத்தில் சுள்ளென்று வலி பரவியது.
‘நேசத்தை உரைக்கும் முன்னரே வதைக்கொள்ள வேண்டுமா?’
இதயத்தின் கசிந்துருகல், அவனது கூர் நயனத்தில் குருதித் தடமாய்.
அவனது இளமுறுவலுடன் கூடிய சிரிப்பில், உயிர் உடையும் ஓசை அவளை ஸ்தம்பிக்கச் செய்தது, ஊன் உறைந்திட.
“இன்பத்தில் பொங்கும் விழிகளை காணவே ஆசையும், ஏக்கமும். விழிதனில் கொட்டும் நதியின் துளிகள் எம்மை மரிக்கச் செய்திடும்.” நேசத்தை வெளிப்படையாய் அன்றி, அகத்தின் பொருளாய் உணர்த்திட்டான்.
உள்ளம் உதறல் கண்டு, அவனை தவிப்போடு பார்த்தவளின் உதடுகள் துடித்தன.
அவளால் சொல்லவும் முடியாத ஏற்கவும் முடியாத தள்ளாட்டம். உள்ளம் பந்தாடா, விழிகள் சங்கமிக்க, வார்த்தையின்றி வாய் மட்டும் மௌனம் சாதித்தது.
இதற்கு மேல் அவன் சொல்லவும் வேண்டுமோ? அவள் கேட்கவும் வேண்டுமோ?
வார்த்தையின்றி அவனது காதல் அவளுக்கும்… அவளின் மறுப்பு அவனுக்கும் விளங்கிட…
இரு மனங்களின் தவிப்புகள் கூடிப்போனது.
இடி நீங்கிய பின் மீண்டும் அமைதி தழுவிய வானத்தின் கீழ், குளத்தின் நீர்முகத்தில் மெல்ல தடுமாறிக் கொண்டிருந்த பனித்தூறல் போல இருவரின் நேசமும் அவர்களுக்கிடையே தடுமாறியது.
மின்னல் ஒளியால் வான் விலகிய இருள், மெதுவாய் ஒளிவட்டமாக மாற, நிலவின் ஒளியில் மங்கிய வண்ணத் தோற்றங்களாய் ஒருவரையொருவர் உள்வாங்கிக்கொண்டிருந்தனர்.
அதற்கு மேல் அவளின் கலங்கும் விழிகளை காணும் திடமில்லாது திரும்பிச் செல்ல அடி வைத்தவனை தடுத்து நிறுத்தியது மேகநதியின் வார்த்தைகள்.
“வந்ததன் நோக்கம் அறியப்படவில்லையே அரசே?”
“யாதென அறிந்த பின்னரும், எம் வாய்மொழி கேட்டு வேண்டாமென்று பதில் உரைத்திட அவ்வளவு ஆவலா?” எனக் கேட்டவனின் முகம் காணாது தலை தாழ்த்தினாள்.
“சொல்லால் புரிய வைத்திட வேண்டுமென்ற அவசியமில்லை” என்ற மேகோன், “இல்லையல்லவா?” என்றான்.
நதியின் தலை மேலும் கீழும் ஆமென்று ஆடியது.
அவள் கருவிழிகளில் விளைந்த குழப்பத்தை மீறிப் பார்த்த மேகோன், மனதின் கூரை மேல் பூத்திருந்த அன்பின் கரு சுமந்த நேச மலர்களை விரித்துக்கொண்டு அவளிடம் சொல்ல முனைந்த நொடியில்…
“தலை நிமிர்த்தி பார்த்தாலும் தங்கள் உயரம் நன் கண்களுக்கு புலப்படாது அரசே!” கலங்கிய நீர் நதியின் கன்னம் உருண்டது. மன்னனின் இதயமும் சரிந்தது.
“விருப்பம் இருக்குமாயின்… நின் நேசத்தை ஒப்புக்கொள்ளுமாயின் நன் மனம் நிறைந்திருப்பவளிடம் மண்டியிட்டு முகம் காட்டிட எமக்கு தயக்கமில்லை.” பட்டென்று மேகோன் சொல்லியதில் அவளுக்குள் மீளா அதிர்வை உண்டாக்கியது. உடன் மேகோனின் காதல் தீவிரம்.
‘இவ்வளவு அன்பிற்கு யான் உரித்தானவளா?’
பேரரசின் உச்சத்தின் தலைமை அவன். மகிழ ராஜ்ஜியம் மட்டுமல்ல, அண்டை தேசங்களும் அவனின் வீரம் மற்றும் அறிவாற்றல் முன்பு மண்டியிட்டு கிடக்க, அவனோ சாதாரண பெண் தன்னிடம் தலை வணங்குவேன் என்கிறானே!’
நினைக்க நினைக்க அவளின் காதல் கூடியது.
ஓரிரு நாளில் இதெப்படி சாத்தியமென்றால் இருவரிடமும் பதிலில்லை.
பெரும் காட்டை அழித்திட ஒற்றை தீப்பொறி போதுமானது. காதலுக்கும் அதுவே! நெஞ்சுக்குள் பற்றும் நேசத்திற்கு ஒரு ஷணம் போதும். இதயத்தை துளைத்து ஆழ வேர்ப்பிடித்து விருட்சமாய் நிறைந்திட.
“உமது வாள் வீச்சில் சுருண்டது எம் வாள் மட்டுமல்ல…” என்று வாக்கியத்தை முடிக்காது நிறுத்தியபோதும், மேகோன் சொல்ல வந்தது அவனின் மேகத்திற்கு புரிந்தது.
அவளின் வடியா தவிப்புகள் கூடிக்கொண்டேப் போக,
“உம்மை எச்சரிக்கவே யாம் இங்கு வந்தோம். இன்றைய பயிற்சியில் மகிழ தேசத்து மன்னனை எதிர்த்து சிறப்பாக வாள் வீச்சு செய்ததால், உம்மை எதிர்க்க முடிவு செய்துவிட்டனர். அதீத கவனத்தோடு இருங்கள்” என்று முற்றிலும் பேச்சினை மாற்றிய மேகோன், “வந்த நோக்கம் முடிந்தது தனுமந்த். புறப்படுவோம்” என்று தனது புரவியின் நெற்றி வருடி, அடிகள் முன் வைத்திட்டான்.
“தாங்கள் வந்ததன் நோக்கம் இது மட்டும்தானா?”
“ஆம்” என்ற மேகோன் அவளின் முகத்தில் படரும் ஏமாற்றத்தை உள்வாங்கிய போதும், தன்னை மறுப்பதில் ஸ்திரமாக இருப்பவளிடம் எங்கனம் நேசத்தை உரைப்பதென்று பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.
திரும்பிய திசையில் கவனம் பதிய, கருத்தில் சிறு மாற்றம்.
மேகோன் என்னவென்று பார்வையால் ஆராயும் முன்பு,
புரவியின் அசைவில் குளம்பின் அதிர்வில் மண் உதிர்ந்தது.
வெறித்திருந்த அவன் கண்கள் பசும்பொன் போன்ற வெளிச்சத்துடன் ஒளி பெற, அடுத்த நொடியே…
விண்ணை விலக்கி வந்து விழும் வண்ணம், ஒரு கொடூரமான அம்பு காற்றின் மார்பை விரித்துச் சீறி வந்தது.
“மேகநதி!”
அவளது கரத்தை அழுத்தி பிடித்தவாறு, கீழே சாய்த்தபடி தன்னை அவளுக்கு முன் உட்புகுத்தி அரணாய் நின்றவன், இடை சொருகிய குறுவாளை எடுத்து சுழற்றி வீசினான்.
சுற்றி சுழன்று குறி நோக்கி சென்று கொண்டிருந்த குறுவாளின் வேகத்தில் அச்சத்தோடு நிலைத்திருந்த மேகநதியின் விழிகள், அதன் இலக்கடைந்த இடத்தில் ஒலித்த அலறலில் கூர்ந்து நோக்க, வீரன் ஒருவன் சுருண்டு தரை விழுந்திருந்தான்.
“யாராக இருக்கக்கூடும்?” என்ற மேகநதி, “தாம் எச்சரித்த விடயம் இதுதானோ?” என்று வினவினாள். அவன் புறம் பார்வையை திருப்பாது.
மேகோன் பதில் உரைக்கும் முன்பு,
மீண்டுமொரு அம்பு அவனது தோளில் இன்றி பக்கவாட்டில் மண்டபத்தின் தூணில் முட்டி விழுந்தது. அதிர்ச்சி அந்த இடத்திற்கே தனித்தெழுந்தது.
குனிந்து அம்பினை எடுத்துப் பார்த்த மேகோன், அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டான்.
மேகோனின் உணர்வுகள் தெளிவாக இருந்தன. அது ஒரு எச்சரிக்கை அல்ல. அது ஒரு நோக்கம் கொண்ட தாக்குதல்.
“தாக்குதல் உமக்கானது அல்ல!”
மேகோன் மூரல்கள் பளிச்சிட, அம்பினைக்காட்டி கூறிட,
“தங்களுக்கானதா?” என்று அதிர்ந்து, அதிர்வில் அவன் கரத்தை இறுகப் பற்றியிருந்தாள்.
மேகோனின் கருமணிகள் தனது கரம் பிடித்த மென் கரத்தில் நிலைக்க, அவனிடம் இதழ்கள் விரிந்த நீண்ட புன்னகை.
அவனது பார்வை மற்றும் புன்னகையின் பொருள் உணர்ந்தவள், பட்டென்று கரத்தை விலக்கிக்கொண்டாள்.
“பிழையில்லை. உரிமைப்பட்டது. உடமைப்பட்டதும்” என்றான். இதழோரம் சுருண்ட சின்ன புன்னகையோடு.
‘என்ன காரியம் செய்துவிட்டேன்?’ படபடத்துப் போனாள்.
அவளின் இமைகள் சிறகடிக்க… அவளது பதட்டம் அறிந்து சத்தமாக சிரித்திட்டான்.
“எதிரி இன்னமும் அங்கு தான் இருக்கின்றார்கள்.” வராத முறைப்பைக் காட்டிக் கூறினாள்.
“இங்கேயே இரு!” என்று முன் நழுவிச் சென்று, சில நொடிகளுக்குள் மண்டபம் வெளியில் குதித்து குளம் நீந்தி கரை தொட்டிருந்தான்.
அவனது புரவியும் பின்தொடர்ந்தது. ஒரே இடத்திலிருந்து அம்பு பாய்ந்திருக்கவேண்டும் என்று கணிக்க, மரங்களின் நடுவில் உள்ள பாறைத் துண்டுகளுக்கு அருகே சென்றான்.
“விழிக்கிறேன்!” என்று தன் உள்ளத்தில் உறுதியுடன் கூறியவன், தடமாயிருக்கும் பாதையில் நுழைந்தான்.
காற்றில் ஒரு வாசனை. ஈரத்தால் உண்டான வெறும் மண் வாசனையல்ல, அதில் தீவிரமான ஒரு ஊக்கம், புகையால் மூடப்பட்ட கொல்லையின் பறவைகள் போல மரங்கள் நடுவே ஒரு நிழல்.
அந்த நிழலை விரைந்தபடி பின்தொடர்ந்தான். ஆனால், அந்த நிழல் மேகோனை பாறைகளுக்கு நடுவே இழுத்துக்கொண்டே போனது.
மற்றொரு அம்பு இருளை கிழித்து வந்தது. சடுதியில் உடலை சாய்த்து தடுத்திருக்க…
வெறும் பாறையின் மேல் விழுந்தது. அந்த சத்தம் வழியே மேகோன் விரைந்தான். நிழல் மறைந்தது.
கண்கள் மூடி நிதானித்து காற்றின் ஓசையில் புதிய ஒலியை கிரகிக்க முயன்றான்.
இடையில் வைத்திருந்த அரை வட்ட நிலவு வடிவில் தகடு போன்றிருந்த கருவியை கையிலெடுத்து தனக்கு பக்கவாட்டில் வலதுபுறம் அதீத விசையுடன் வீசிட, அப்பக்கிருந்த மரத்திற்கு பின்னால் ஒளிந்திருந்தவனை தாக்கிவிட்டு, அதே வேகத்தில் மீண்டும் மேகோனை கடந்து அவனுக்கு இடப்புறம் சென்று மற்றொருவனையும் தாக்கி வந்து மேகோன் கை சேர்ந்தது.
“உம்மை நானறிவேன்!” மேகோன் அவ்வாறு கூறியதும், அவனுக்கு பின்னால் பாறை மறைவிலிருந்து வெளிவந்தான் நயனன்.
“தங்களின் பாதுகாப்பு நிமித்தமாகவே யாம் வந்தோம். இத்தாக்குதலை யானும் எதிர்பார்க்கவில்லை. யான் சுதாரிக்கும் முன்பு தங்களின் வேகம் தன்னை பின்னடையச் செய்திட்டது” என்ற நயனன், “இருவரின் பேச்சுக்கள் எதையும் எம் செவிகள் கேட்கவில்லை” என்றான்.
“விளக்கம் அளிக்க வேண்டிய இடத்தில் நம் நட்பு உள்ளதா?” மேகோனது கேள்வியில், “மேகா” என்று நெகிழ்வாய் விளித்த நயனன், “இக்கயவர்களை என்ன செய்யட்டும்?” எனக் கேட்டான்.
“சிறையில் அடைத்து வை. சூரிய உதயத்திற்கு பின் விசாரணையை வைத்துக்கொள்ளலாம். யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று மேகோன் நகர்ந்திட, “நேசத்தை சொல்லவே இத்தனை பாடா?” என வினவினான்.
“இப்பொழுது தான் தங்களின் பேச்சுக்கள் எதுவும் செவிமடுக்கவில்லை என்றாய்?” என்ற மேகோனின் குறும்பு நிறைந்த கேள்வியில், கீழே வலியில் துடித்துக் கொண்டிருந்த இருவரையும் தனது புரவியில் கட்டி இழுத்துச் சென்றுவிட்டான் நயனன்.
நிலா மேலும் பிரகாசம் கொண்டு பசுமையாக மிளிர, முழு குளமும் அமைதியாக இருந்தது.
“யுத்தத்திற்கு ஆவண செய்ய வேண்டும்!” அவனது பேச்சுக்கு, தனுமந்த் தலையை சிலுப்பி கணைத்தது.
“அத்தனை எளிதாக சம்மதம் சொல்லிவிடமாட்டாள். காதலிலும் யுத்தம் செய்ய வேண்டியுள்ளது” என்று ஆயசமாக மொழிந்த மேகோனின் கன்னம் முட்டிய தனுமந்த், தனது வாலால் அவனை அரவணைத்தது.
மேகோன் மண்டபத்துக்கு மீண்டும் சென்றபோது, மேகநதி அங்கேயே இருந்தாள். அவளது கண்கள் அச்சத்தாலும் கலக்கத்தாலும் கலங்கி இருந்தன. ஆனால் ஒரு உறுதியும் அவளின் முகத்தில் தெரிந்தது.
“தமக்கு ஒன்றுமில்லையே அரசே? நலமாக இருக்கிறீர்களா?” அவளது குரலில் துடிப்பு.
அவனுக்கு அந்த துடிப்பு மட்டும் போதாதே!
“தம்மை நோக்கி… அந்த அம்பு…” அவள் மிரட்சியோடு திணற,
“யான் நலம். உமது நலனும் அவசியமானது. உமக்கும் எதிராக சதி நடக்கிறது” என்றான்.
அவள் கண்கள் நனைய, நெற்றி வழியும் கூந்தலால் அதை மறைக்க முயன்றாள். மேகோன் கவனித்துவிட்டான்.
பக்கம் சென்று தேற்றிட அவனது மனம் உந்திய போதும், உரிமையை அவளளிக்காது, மனதின் கட்டளையை நிறைவேற்ற இயலாது இயலாமையுடன் நின்றிருந்தான். தனக்காக கலங்கித் துடிக்கும் அவளையே விழிகளால் பருகியபடி.
அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக,
“அரசே, நான் உங்கள் உயிருக்கு ஆபத்தா?”
அந்த வார்த்தை மேகோனை துளைத்தது. நெஞ்சுக்குள் வீசும் தீக்காற்று போல.
“இல்லை.” வேகமாகக் கூறியவன், “நீயே எம் உயிர் நிறையும் ஆத்மம்” என்றான்.
அவளது விழிகளில் பதட்டம், அவனது வார்த்தைகளால் மேலும் அதிகரித்தது.
இதற்கு மேலுமா, அவன் நான் உன்னை நேசிக்கின்றேன் என்று சொல்ல வேண்டும்.
கன்னம் உருண்ட விழிநீரை புறங்கை கொண்டு துடைத்தவளாக,
“தாங்கள் சொல்லாத வார்த்தைகளையும் நன் உள்ளம் வாசிக்கிறது. ஆனால் அரசே” என்றவள் முன்பு கரம் நீட்டி எதுவும் சொல்ல வேண்டாம் என்பதைப்போல அவளின் பேச்சினை தடை செய்தான்.
அவளுக்கு முதுகிட்டு திரும்பியவன்,
“மறுப்பினை ஏற்கும் துணிவு எமக்கில்லை.” வாய்விட்டே கூறிவிட்டான் அவளிடம்.
திகைத்து நின்றாள்.
பெரும் படைகளுக்கு சவால் விடுத்து திடமாக வாளேந்தி முன் நிற்பவன், இதற்கு துணிவில்லை என்றால்? அவன் மனதின் பாட்டை உள்வாங்கியவளுக்கு மூச்சு வாங்கியது.
‘நன் மீதான நேசத்தின் இத்தனை ஆழம் அவனது அரியணைக்கு ஆபத்தல்லவா?’ தற்போது அவன் குறித்து மட்டுமே அவள் சிந்தித்தாள்.
மேகநதி அவன் மீதான பார்வையை விலக்கினாள்.
“இது வெறும் ஈர்ப்பல்லவா?” என்றாள் மெதுவாக.
“இல்லை, இது ஈர்ப்பு அல்ல. இது என் உயிரின் உள்ளழிவான உணர்வு. இதுவே நன் வாழ்வின் முடிவும் தொடக்கமும்” என்றவனை என்ன சொல்லி விலக்குவது எனத் தெரியாது தவித்தாள்.
சற்றே கண்கள் கலங்கின. அதே நேரத்தில் உறுதியும் இருந்தது அவளிடம்.
மேகநதி பேசிட வாய் திறக்க…
மேகோன் அவளிடம் நெருங்கினான். சற்று விலகி, தலையை வணங்கி,
“உம்மை கண்ட பின்பு ஒவ்வொரு நொடியும், பல யுகமாய் நேசிக்கும் உணர்வை எனக்குள் ஒளியாய் பரவுகிறது.
அரசனாய் அல்ல…
ஒரு மனிதனாக, ஒரு ஆண் மகனாக, உம்மிடம் நன் உள்ளத்தைத் தாழ்வாகத் தூக்கிக் காட்டிட முயல்கிறேன். வார்த்தைகள் நிறைவுகொள்ளா நிலையிலும் நன் மனதை உமக்கு புரிகிறதல்லவா?” என்றான்.
யாசிக்கின்றான். தனது உயரம் துறந்து தன்னவளிடம் யாசிப்பையும் நிமிர்ந்து நின்று காட்டுகின்றான்.
“பின்னாட்களில் உமது வரலாறு எழுதும் போது, விழிகளின் வீரத்தையும், வாள் வீச்சின் வேகத்தையும் இணைத்து எழுதுவார்களாயின், மகிழ தேசத்து பட்டத்து இராணியார் என்று குறிப்பிடுவதில் எமது மகிழ்வு நிறைந்துள்ளது” என்றான்.
அவள் பதிலளிக்கவில்லை. பொங்கும் காதலை அவனிடம் சேர்பிக்க முடியாத தன்னிலை வெறுத்து, தன்னையே வெறுத்து நின்றிருந்தாள்.
இருவருக்கும் இடையே நின்ற அந்த மண்டபம், குளம், நிலா, புரவி, அன்பிற்குரிய அமைதி, யாவும் மேகோனின் மேன்மை நிறைந்த நேசத்தில் உருகி கரைந்தன. பெண்ணவளுக்கு இணையாக.
சரியென ஏற்றுக்கொள்ள மனம் எழுச்சிக்கொண்டு உந்திய நிலையிலும், முடியாது மௌனம் காத்தாள்.
ஒளியின்றி இருளுக்குள்ளேயே, உணர்வுகளின் விளிம்பில் இருவரும்.
“எம் உள்ளம் புரிகிறதா அரசே?”
அவன் கேட்க விரும்பாத மறுப்பை அவனையே உணரும் நிலையில் நிறுத்தி வைத்துக் கேட்டாள்.
மேகோன் மெதுவாக ஆழ்ந்து சுவாசித்தான். அவளிடமிருந்து இரண்டு அடிகள் எட்டி நின்றான்.
மீண்டும் ஒரு அடியெடுத்து பின்னோக்கி நடந்தான். புரவியின் பக்கம் சென்று நின்று, மீண்டும் அவள் முகத்தை பார்த்தான்.
அவளது விழிகளில் இருந்தது…
மறுப்பு அல்ல, தவிப்பு.
விலகல் அல்ல, தற்போதைய நிலை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
26
+1
1
+1
1
Wow 🤩🤩🤩
Thank you sis 🩷