அத்தியாயம் 46
ஒரு சதி நகரும் நேரம்…
அரண்மனையின் பின்புற அரண்களில் ஒன்றான வெண்மணிக் கூடத்தில், சில குழுக்கள் இரவின் ஆழ் நிலையில் ஒன்று கூடின.
வேதகுரு தேரல்வேள், வீரத் தலைவர் சல்யன், சபையின் மூத்த உறுப்பினர், மற்றும் அவர்களுக்கு கீழான இருவர், மேகநதி குறித்து திட்டமிடத் தொடங்கினர்.
“மன்னரின் பார்வையும், வாள் சண்டையின் போது அவரின் முகம் காட்டிய கனிவும்… அவளதுபால் மன்னர் ஈர்க்கப்பட்டுவிட்டார் என்று பட்டவர்த்தனமாக நமக்கு உணர்த்துகிறதே! இதைவிட சான்று வேண்டுமா? கண்களின் ஈர்ப்பு மனதின் வழி திரும்பும் போலிருக்கிறது. அவ்வாறு நேர்ந்துவிட்டால்? சிறு பெண்ணின் ஆதிக்கம் நம் படையில்… ஒப்பாத விடயம். எவ்வாறு ஏற்றுக் கொள்வது… படையில் பயிற்சி காவலாளி ஆகிவிட்டால் இன்னும் சில மாதங்களில் அவளது செல்வாக்கு நம்மை ஒழிக்கும்.” எனச் சல்யன் முணுமுணுத்தார்.
அவரின் பேச்சினை அமோதிப்பது போன்று அமைதியாக இருந்த தேரல்வேள், எதையும் அனுமானத்தினால் கணிக்க முடியாது சிந்தைக்குள் உழன்று கொண்டிருந்தார்.
சேனர் என்ற வீர மரபைச் சேர்ந்த அமைச்சர் கொஞ்சம் காய்ச்சலுடன் கூறினார். (காய்ச்சல் – வெப்பம், முகம் கடுகடுக்க.)
“அவளது குலம், அவளது சிந்தனைகள், வாள் கருவியை வடிவமைத்த நுண்ணுணர்வு முறை, இவை எல்லாம் நம் அரசவைக்கு ஒத்துப் போகாது. நிச்சயம் அவள் படையில் இணைவது உறுதி. அதன் பின்னர், அவளைத் தொடர்ந்து பல பெண்கள் வரத் துவங்கினால்? ஆண் எனும் நிலையான ஆதிக்கம் ஆட்டம் காணும். அதனை ஒரு நாளும் அனுமதித்திட முடியாது. அவளது மீது ஒரு குற்றம் சுமத்தி, படையிலிருந்து விலக்கிவிட முடியுமா?” என்றார் சேனர்.
“அரசர் அவளிடம் பலமாக ஈர்க்கப்பட்டுவிட்டார். இதனை மக்கள் உணரும்போது அரசரின் மதிப்பு உயரும். குலம் மறந்து மக்களை சீராக பார்க்கும் மன்னாரென்று நாமத்தின் மதிப்பும் உயரும். ஆனால் அரசவை. உலோகத்தை உருக்கி வயிற்று பிழைப்பு செய்யும் தாழ் குலத்தைச் சேர்ந்த பெண் மகாராணியாக அமரும் அரியணையா மகிழ தேசத்தின் அரியணை. அதற்கென்ற தகுதி இல்லையா? அவளே நமக்கு ஆபத்தாக மாறுவாள். அதற்கு முன்பு நாம் அவளுக்கு ஆபத்தாக நின்றிட வேண்டும்.” சல்யன் கூறிட, தன்னுடைய நாடியை நீவியவாறு தேரல் அம்மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.
சபையின் நடுவே விரிந்த திரை, வெளிச்சம் குறைவான அகல் விளக்குகளின் நடுவே, அவரின் குருட்டுக் கோபம் சிதறியது.
“சாதாரண பெண் மகிழ சாம்ராஜ்ஜியத்தின் சபை ஏறுவதா?” எனக் கேட்டு, தன்னுடைய மீசையை முருக்கியவர், “தளிராக இருந்திடும் பொழுதே வெட்டி வீழ்த்துவது இலகுவானது. கொன்று விடுங்கள். துளிர்த்த நேசம் சுவடாகவும் மிச்சம் இருத்தல் கூடாது” என்றார்.
“இது மாபாதகம் தந்தையே.” கூறிய தன்னுடைய மகன் வீரவாழுதியை தீயாய் முறைத்தார் தேரல்.
“சகோதரனுக்கு துணை நிற்கின்றாயா? அரியணை ஏறும் ஆசை இல்லையோ?”
“உமது ஆசை நடக்க வேண்டுமென்பதற்காக எம்மிடம் திணித்தல் வேண்டாம் தந்தையே” என்று அவருக்கு மட்டும் கேட்கும் வகையில் பேசிய வீரா, “நம் சபை அமைச்சர்கள் முன்பு தங்கள் தரமிறக்கும் மரியாதையின்றிய பதங்கள் சேர்க்க வேண்டாமென்று நினைக்கின்றேன்” என்றான்.
தேரல் சல்யனுக்கு கண்கள் காட்டிட, அவரோ ஆகட்டும் எனும் விதமாக தலையசைத்து மற்றவர்களை நகர்த்திச் சென்றார். அங்கிருந்து அனைவரும் சென்றிருக்க, சத்தமாகவே பேசினான் வீரவாழுதி.
“எப்போதும் உமது விசுவாசம் மேகோனிடம் தானல்லவா?” என்ற தேரல், “அவனுக்காக எங்களிடம் ஒற்று பணி புரிந்து கொண்டிருக்கிறாயா?” எனக் கேட்டார்.
“யாவும் உங்கள் எண்ணம். தாங்கள் எண்ணம் கொள்கிறீர்கள் என்பதற்காக எமது சிந்தை அதுவாகிவிடாது தந்தையே! உயிர் பறிக்கும் செயல் அவசியமா என்பதே எமது வினா?” என்ற வீரவாழுதி, “மிரட்டல் விடுத்து விலகி நிற்கச் செய்யலாம்” என்றான்.
‘என்னதான் மகன் தன்னுடைய பக்கம் நின்றாலும், அவன் மகிழ பேரரசின் ரத்தமாயிற்றே, சுந்தரனார் வளர்ப்பாயிற்றே, பாசம், பற்று இயலபிலே இருந்திடத்தானே செய்யும்’ என நினைத்த தேரல், அச்சமயத்திற்கு மகனை கட்டுப்படுத்துவதற்காக, “மிரட்டல் மட்டுமே… உமக்காக” என்றார்.
‘தனது தந்தை இப்படி சட்டென்று இறங்கி வருபவர் இல்லையே’ என்று அவர் செல்வதையே பார்த்து நின்ற வீரவாழுதி, அடுத்த கணம் கவிநயனனை சந்தித்து விடயத்தை பகிர்ந்துகொண்டு, தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை எனும் விதமாக ஒதுங்கிக்கொண்டான்.
வீரவாழுதி மூலமாக விடயம் அறிந்த கவிநயனுக்கு, “அதற்குள் சதியா?” என்று அதிர்வாக இருந்தாலும், நடக்கவிருப்பதை மேகோனிடம் கூறிவிட்டான்.
ஆனால் விடயம் தெரிந்த கணம் மேகோன் அவளை நோக்கிச் செல்வானென்று நயனன் எதிர்பார்க்கவில்லை.
“யாவிலும் புரவியின் வேகம்.” ஆயாசமாக தலையை உலுக்கிக்கொண்டான்.
“எவ்வித அசம்பாவிதமும் நேர்ந்திடாது காத்தருள வேண்டும் தந்தையே” என்று தேவ மகிழோன் ஆலயமிருக்கும் திசை நோக்கி கரம் குவித்து வணங்கினான்.
நல்லெண்ணம் யாவும் காலதாமதமின்றி நடக்குமேயாயின் வஞ்சகர்களுக்கும், சதி செயல்களுக்கும் இடமிருந்திடுமா என்ன?
நடக்க வேண்டியவை நடந்தாக வேண்டுமென்பது மட்டுமே காலத்தின் நியதி.
_______________________
காட்டின் ஓரம். நிலா மெல்ல மண்ணை நனைத்திட… பனிக்காற்று நிழல்களில் விளையாட, மேகோன் தன்னுடைய வெண்புரவியில் அதீத வேகத்தில் சென்று கொண்டிருந்தான்.
சில நாழிகைகளில் ஆயுதக் கிடங்கின் குடியிருப்போர் பகுதிக்கு வந்துவிட்டவனுக்கு, இடும்பனின் இல்லம் எதுவென்று தெரிந்த போதும், வீட்டிற்கு அருகில் செல்லாது, சில அடிகள் முன்னிருந்த மரத்தின் கீழ் நின்றுவிட்டான்.
“அன்பின் வீரியம் உயர்ந்திடும் கணம் சிந்தையை கழட்டி வைத்திடுவாயா மேகா?” தன்னையே கடிந்து கொண்டான்.
ஒரு வேகத்தில் காதலை சொல்ல வேண்டுமென்று வந்துவிட்டான். அவளிருக்கும் பகுதிக்குள் வந்த பின்னர் தான், பெண்ணவளை பார்த்துவிடுவது அத்தனை எளிதல்ல என்பது புரிந்தது.
அங்கு பெண்களுக்கான வரையறைகள் பாதுகாப்பு நிமித்தங்கள் கொண்டவை அல்லவா?
“அவசரப்பட்டுவிட்டோமோ?” என்று நினைத்தவன், “இன்று யான் தனது மனக்கதவு திறந்து அவளிடம் நன் நேசம் உரைப்பது திண்ணம்” என்றவன் இடும்பனின் வீட்டின் பின் சென்றான்.
அவளது அறை எந்தப்பக்கமென்றும் தெரியவில்லை. வீட்டை முழுதாக ஒரு சுற்று வலம் வந்தவன், யாரேனும் வரும் அபாயம் இருந்ததால் மீண்டும் அம்மரத்திற்கு கீழ் வந்து நின்று கொண்டான்.
சட்டென்று மேகம் திரண்டு கன மழையாக இல்லாது மென் தூறலாய் மண் இறங்கிட, மேகோன் நின்றிருந்த இடத்திற்கு பின்னால் குளம் இருக்க, குளத்தின் நடுவில் நான்கு கால் மண்டமும், அம்மண்டபம் செல்ல கரையிலிருந்து தடமும் இருந்திட மழைக்கு அங்கு ஒதுங்குவோமென தனது புரவியையும் அழைத்துக் கொண்டுச் சென்றான்.
“மேகத்தை பார்க்க வந்தால் மேகத்தூறல் வரவேற்கின்றது” என்று தனது புரவியிடம் பேசியவனாக மண்டபத்தின் கீழ் வந்து நின்றான்.
குளம் முழுவதும் குவளை மலர்கள் நிறைந்திருப்பது, பட்டென்று ஒளிர்ந்து அடங்கிய மின்னல் வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது.
“குளத்திற்கு மதுரம்… தடாகம் நிரம்பியிருக்கும் மலர்கள். எம் அகத்தின் மதுரம் நன் மேகநதியாவாள்.” இடும்பனின் இல்லத்தை பார்த்தவாறு தன்னவளை கண்டுவிடத் துடித்தான்.
இடித்த இடியின் ஓசையில் புரவி கணைத்திட,
“யார் அங்கே?” என்று ஒலித்த குரலினை அடையாளம் கண்டுகொண்ட மேகோன், சத்தம் வந்த பக்கமிருந்த படிகளில் இறங்கிட, குளத்து நீரில் கால் நனைய அமர்ந்திருந்தாள் மேகநதி.
மேகோனின் நினைவில் உறக்கம் தழுவாது தவித்தவள், மனதில் அலைப்புகளை போக்கிட அங்கு வந்திருந்தாள்.
கனத்த மழையன்றி சாரலாய் வீசிக் கொண்டிருந்த மழைக் காற்றிற்கு நடுவில், பாதம் தடாகத்தின் நீரில் மூழ்கியிருக்க, அருகில் கேட்ட காலடி ஓசையில் படியில் அமர்ந்தபடி தலையை மட்டும் திருப்பி பார்த்திருந்த மேகநதியின் தோற்றம், குவளை மலர்களுக்கு நடுவே ஒய்யாரமாக நீந்தும் அன்னப் பறவையின் தோற்றத்தை உருவகப்படுத்த, இமைகள் விரிய லயித்து நின்றான். இறங்கும் தோற்றத்தில் அசைவற்று.
மேகோனின் பின்னணியில் சந்திரன் ஒளிர, அவன் உருவம் இருள் படர்ந்திருந்தது.
முகம் யாரென்று தெரியாததால், தன்னிலையில் மாற்றமின்றி,
“யார் நீங்கள்?” எனக் கேட்டாள்.
“நிழற்பிம்பம் கண்டு உருவகம் கொள்ள இயலவில்லையோ?”
“அரசே!”
வேகமாக எழ முயன்றவள், படியின் ஈரம் வழுக்கி பின்னால் நீரில் சரிய இருந்த தருணம், அவளின் கரம் பற்றி தடுத்திருந்தான் மேகோன்.
மின்னல் இரண்டின் பற்றுதலில் பூஞ்சாரல் நாணம் கொண்டு மேகத்துக்குள் ஒளிந்திட, விண்ணீர் வருகை நின்றது.
மன்னவனின் தொடுதலில், மழை நனைத்த தேகத்தில் வெம்மை படர்ந்திட, அவளுக்கோ உடல் வெளிப்படையாக நடுக்கம் கண்டது.
தனது கைகளில் பரவிய அதிர்வை வைத்து அவளின் நடுக்கம் உணர்ந்த போதும், அவளை நிலையாக பாதம் ஊன்ற வைத்த பின்னர் மெல்ல தனது கரத்தினை விலக்கினான்.
விலக்கிய கரத்தை முகத்திற்கு நேரே உயர்த்தி பார்த்தவன்,
“பாக்கியம் பெற்றது” எனக் கூறினான்.
“மன்னா?” அவனது பொருள் புரிந்ததுவோ? பாவையவள் அதிர்ந்தாள்.
“மன்னன் எனும் சொல் வீரம் நிறைந்தது அல்லவா?”
மழையின் தூறலில் நடுங்கும் குளக்கரைத் தடத்தில், மேகோன் மெதுவாக மேகநதியின் பக்கம் நெருங்கினான். ஒற்றை படியை எல்லைக் கோடாக நிர்ணயித்து.
அவளது உடலில் அச்சத்தின் பிரதிபலிப்பாக நடுக்கமிருந்தாலும் அவளது விழிகள் மட்டும் அவனிடம் எதிராக நிமிர்ந்திருந்தன.
அவளின் அச்சம் அவன் குறித்தது அன்று. குடிகள் யார் கண்ணிலும் இக்காட்சி பட்டுவிடுமோ எனும் தவிப்பு.
தன்னால் மன்னவன் பெயர் சீர்குலைந்திடுமோ எனும் அச்சம்.
“இங்கே நன் வருகை எதற்கென்று கேட்கலாமே?” என்றான் மேகோன். சற்றே புன்னகையுடன்.
அவள் நினைத்த வார்த்தைகள் அவன் வாய் வழி வெளி வந்திருக்க, விழிகள் விரித்து பார்த்தாள்.
பார்த்த கணம் முதல், இருவரின் வாய் மொழிந்திடாத சொற்களை விழிகள் உணர்வுகளால் பந்தாடிக் கொள்கின்றன.
அவர்களுக்குள் வாள்கள் மட்டும் வீசிக்கொள்ளவில்லை. இரு மனங்களும் வீச்சில் எழுச்சி கொண்டன.
தனது அகத்தின் சாயலை கண்கள் காட்டிக் கொடுத்திடாது இருக்க, எதிர்பக்கம் திரும்பி நின்றாள். மேகோனுக்கு புறம் காட்டி.
“நெஞ்சத்தின் ஓசை அறிய முகம் காணுதல் அவசியமா?” மேகோனின் முகம் காணாத போதும், அவனது இதழ் சிந்திய துளி புன்னகையை அவளால் உணர முடிந்தது.
பகிரப்படாத நேசம் உணர்வுகள் வழி அகம் சேர்ந்திருக்க, இருவரின் நிலை மட்டுமே தடையாய்.
மேகோன் சொல்லாத போதும், இந்நேரத்தில் அவனது வருகைக்கான காரணம் புரிந்த போதும், அகம் மகிழ முடியாது மனம் உடைந்து சிதற, சுவாசத்தை இறுக்கிப் பிடித்தாள்.
கருமை சூழ்ந்த வேளையிலும், தன்னெதிரே தனது முகம் காண மறுத்து, தான் சொல்ல வந்த வார்த்தையை முன்பே அறிந்து, தான் சொல்லக் கேட்டுவிடக் கூடாது என்று அடமாக நின்றிருப்பவளை அத்தனை ரசித்தான்.
அவளிடம் தனது உணர்வை பகிர முயற்சிக்கலாம் என்ற மேகோனின் எண்ணமும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களை நினைத்து பின்னடையும் அவனது மனமும் இருவேறாக நின்று ஒன்றையொன்று மோதிக்கொண்டன.
சொல்லிவிடும் வேகம் அவனிடம். அவளது அச்சமும், தயக்கமும் அவனை நிதானிக்கச் செய்தது.
“அவமதிக்கும் செயலல்லவா இஃது?”
சில மணித்துளிகள் நீடித்த அமைதியை கிழித்துக் கொண்டு வெளிவந்த மேகோனின் வார்த்தைகளில் வேகமாக அவன் புறம் திரும்பி நின்றவளின் தலை இடவலமாக இல்லையென அசைந்தது.
அவளது கருவிழிகள் தவிப்பாய் சதிராடின.
“முகம் காண பிடித்தமில்லையா?”
அவளை நோக்கி முன் வந்திருந்தவனின் முகம் இருள் விலகி நிலவு வெளிச்சத்தில் பாவையவளை அசரடித்திட, மனம் போட்டு வைத்த வரையறைகளை எல்லாம் முட்டி மோதி தகர்த்து ரசனையை வழிவிட்டது அவளின் வேல் விழிகள்.
“வாளால் கொண்ட தாக்கத்தை விட விழிகளின் தாக்குதல் நிலைகுலையச் செய்கிறது. பார்வை கணைகளை நன் இதயம் அழுத்தமாக ஏற்றுக் கொண்ட போதிலும், விரைந்து ஓடிக் கொண்டே இருக்கிறது…” என்று இடையிட்டு நிறுத்தியவன், “யார் பக்கமென்று சொல்லவும் வேண்டுமோ?” என்றான். இரு புருவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக முகடென உயர்ந்து இறங்கிட, மீசை நுனி திருகி.
அவனது பொருளில் படபடத்த இதயத்தின் துடிப்புகள் நின்றிட, அவளின் நெஞ்சுக்கூடு ஏறியிறங்கியது.
‘எங்கே சொல்லி விடுவானோ?’ எனும் தவிப்புகள் கூடிப்போக,
‘சொல்லிவிடாதே!’ எனும் மறுகல் அவளது கருவிழி அசைவில்.
தன்னவளின் மன்றாடலில் சொல்லத் துடித்த ஏக்கத்தின் வேகம் சீர்பெற,
‘இப்போது சொல்லவில்லை என்றால் வேறெப்போதும் யான் கூறப்போவதில்லை’ எனும் திடம் நிறைந்த அழுத்தம் அவனது ஆழ்ந்த பார்வையில்.
இருவரின் நிலைப்பாட்டிற்கும் நடுவில் அவர்களை அசைவற்று வெறித்திருந்த புரவியின் உணர்வுகள் அவ்விடம் நெருங்கிய ஆபத்தை அறிந்த கணம் மேகநதியை நோக்கி அம்பொன்று சீறி வந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
2
+1
Achacho 😓
🫶🏻🫶🏻🫶🏻🫂🫂