அத்தியாயம் 45
நிமிடங்களின் நிம்மதியினுள் குழப்பம். மேகநதியின் உள்ளம் அலைபுறுதலுக்கு நடுவே சிக்கிச் சுழன்றது.
அரசவையில் நடைபெற்ற வாள் சண்டையின் பின்னர், தனது நெஞ்சில் சுருண்டிருக்கும் வலியையும், குழப்பத்தையும் தாங்க முடியாமல், வாளின் எடையை உணராமல் தூக்கிக்கொண்டு வந்த மேகநதி, வாசலில் காலடி வைத்தவுடனே அதைத் தரையில் கீழிறக்கினாள். அவளது விரல்கள் மெதுவாக அதில் சென்ற பசுமணலை உரைத்தபடி, “இதற்கு பின்னர் என்ன?” என நினைத்துக் கொண்டிருந்தன.
வீட்டின் உள்புறம் நிசப்தமாக இருந்தாலும், உள்ளத்தின் ஓசை கொஞ்சம் கூட அமைதியாகவில்லை. பேரலை வீசிக்கொண்டிருந்தது.
மேகநதி மேகோனை அரசனென்று உணர்ந்த பின், அவனிடமுள்ள தனிப்பட்ட இடைவெளி, இயலாத காதல், எட்ட முடியாத உயரம் ஆகியவற்றால் சிந்தனைகளில் பெரும் போராட்டத்திற்குள் ஆட்பட்டாள்.
நதி எதிர்க்கடந்து ஓடாது. அதேபோல் தான் மேகநதியவளின் நெஞ்சமும் அரசனின் உயரம் தெரிந்தும், புரிந்தும் அவனை கடந்து எதிர் திசையில் மனதை மாற்றி பயணிக்க முடியாது தவித்தாள்.
ஆயுதக் கிடங்கில் இருவருக்கும் இடையில், அந்த மண்டபத்தின் ஒளியிலும் ஒலியிலும் குளித்த கணங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் நுழைந்தன.
மேகோனின் அழுத்தமான பாதங்கள் அவள் மனதின் நுனியில் தடமாக்கியிருந்தன. வாள் வீச்சில் எதிர்த்தவன் ஒரு வீரன் என்று அறிந்த போதே அவளே உணராத ஈர்ப்பு ஒன்று மெல்ல அவளுள் நுழைந்திருந்தது.
ஆனால் இப்போது அவனே மகிழ தேசத்தின் அரசன் என்று உணர்ந்ததும்… அந்த ஈர்ப்பு நெஞ்சைப் பிளக்கும் வலியாக மாறியது.
“அவனது பார்வை என் இதயத்தை திருப்பிச் சென்று, என் வருங்காலத்தை வினாவாக்குகிறது…” வலியோடு நீர் இறங்கியது மேகநதியின் கண்களில்.
“அவனை எண்ணியே வடித்த வாள்.” சரியான பொருள் தான். அரசனுக்காக வேண்டித்தானே, அவனுக்காக என்று அவள் வாளினை வடிவமைத்திருந்தாள்.
‘அவனை எண்ணியே வடித்த வாள். என் உயிரோடு ஒரு பாகம். ஆனால்… அவனோ… என்னிடமிருந்தே எனது இதயத்தின் மொத்த பாகமும் எடுத்துக் கொண்டவன்!’ அவளது மனத்தின் கூச்சல்.
மொத்த வாழ்வும் கைவிட்டுப்போனது போலவும், ஏமாற்றத்துடன் யாரிடமும் பகிர முடியாத வலியை சுமப்பது போலவும், பெரும் ரணம் சுமந்தாள்.
ஓரிடத்தில் அமர முடியாது அறைக்குள் இங்குமங்கும் நடந்தாள்.
அவள் பாதங்கள் நெஞ்சை நெரிக்கும் எடைபோல் அவளுக்கே தோன்றியது. இப்போது மேகோன் வெறும் வாள்சண்டையில் கலந்த வீரன் அல்ல. அவள் உயிரைக் குலைக்கக் கூடிய, எட்ட முடியாத புகழின் உச்சியில் நிற்பவன்.
மேகோன் மரம் போன்றவன். நமக்கு வேண்டியவற்றை அம்மரத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் மரத்தையே உரிமம் கொள்ள முடியாத இடத்தில் அவள்.
“ஒரு பொழுதில் உயிரில் பொத்தி வைத்து நேசித்துவிட்டேன் போலும்… உயிர்வதை கொள்கிறதே நெஞ்சம். சாதாரண குடியவளால் அரசனை நேசிக்க இயலுமா?” சிந்தையின் கேள்வி அவளது இதயத்தை பிளவுறச் செய்தது.
பெரிய பனை இலைக் கம்பளத்தில் உட்கார்ந்தாள். அருகே கிடந்த அவனுடன் சண்டையிட்ட வாளின் ஓரத்தை விரலால் வருடியபடி, அரசவையில் நடந்தது நினைவுக்குள் மூழ்கினாள்.
மன்னனின் வாளோடு, அவளது வாள் திரண்ட நேரம்…
அவன் பார்வையின் தீவிரம்…
“என்னை நேசிக்கின்றாரா?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
அவளின் வீரத்தை சபையறிய செய்தவன், இறுதியில் அவளிடம் காட்டிய பாவனை அவளது மனதை வாளிட்டு அறுத்தது.
மேகோனின் அந்தப்பார்வை…
‘அது வெறும் வீரனைப் பாராட்டுவதாக இல்லை. அந்த பரிமாணத்தில் பாசமும் இருந்தது. நேசமும் நிறைந்திருந்தது.’ நினைக்க நினைக்க நெஞ்சில் வலி கூடியது பெண்ணவளுக்கு.
மன்னனின் அருகில் நிற்பதற்கே அந்த அரசவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் அச்சம் கொள்ளும்போது, இருமுறை தானாகவே அவளிடம் நெருக்கம் காண்பித்தான். மேகநதிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. பார்வையால் காதலை கடத்துபவன் தன்னிலை இறங்கி வந்து தன்னிடம் மனதை உரைப்பானா எனும் எண்ணம் தோன்றிய கணம், நிச்சயம் இல்லை என்றே அவளிடம் பதில் எழுந்தது.
இதுவரை ஒருவனிடமும் பார்வையை கூட பதித்திராதவள், மேகோன் மீது தனது உயிரையே பதித்திருந்தாள். முதல் சந்திப்பிலேயே! ஆனால் அதற்கு ஆயுள் இத்தனை குறைவென்று அவள் உணர்ந்த நொடி முதல், சிந்தையை வேறெதிலும் பதித்திட முடியாது… நெஞ்சுக்கூடு காலியாவதைப் போன்று மரித்து மீள்கிறாள்.
“அரசனவன் பார்வைக்கே என் உள்ளத்தைப் பற்றிக் கொள்கிறது, நேசத்தீ. விலகி நிற்க திடம் கொடுத்திடு இறைவா.” அந்நேரத்தில் ஆண்டவனிடம் தனது நிலையை முறையிட்டு கண்ணீர் உகுத்தாள்.
சற்றுநேரம் கண்களை அழுந்த மூடி மெளனமாய் நின்றாள். அவளது முகத்தில் ஒரு அசாதாரண மென்மை வந்து நிறைந்தது.
வெளியில் அடிபடாத மழை அடுக்காக விழ, மேகநதியின் உள்ளமும் அதே போல் கசிந்தது.
*********************
அரண்மனை முற்றத்தில் இருந்த குளத்தில் சிற்றொளி பரவ, மன்னன் மகிழ் மேகோன் தனியாக நின்றுகொண்டு தன் சாயலை நீரின் பரப்பில் பார்த்து நின்றான்.
மேகோனின் அகமெல்லாம் அவனது நதியின் வாசமே!
சிறு பெண்ணின் வாளின் சுழற்சியில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருந்தது அவனது மனம்.
அவளது வாளின் இசை… வனத்தில் ஒரு கோழியினம் பறக்கும் சத்தத்தைப் போல மேகோனின் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
தான் யாரென்று அறிந்த பின்னரும், நேற்றுக்கு சற்றும் குறையாத அவளின் வாள் வீச்சில் அவனது நெஞ்சம் முழுதாய் அவளை நோக்கி சுருண்டிருந்தது.
மென்மையும் வீரமும் ஒன்றாக கலந்து இருந்த அவளின் கையோடு தனது கை சேர்க்க பேராவல் கொண்ட மனதை கையால் அழுத்தம் கொடுத்து அடக்கினான்.
அவள் மீது நேசம் துளிர் விட்டது முதல், தனக்கு நிகர் அவள் என்பதை காட்டிட அடியெடுத்து வைத்துவிட்டவன், ‘தான் அரசனென்று அறிந்த பின்னர் தன்னுடைய நேசத்திற்கு தன்னவளின் பிரதிபலிப்பு என்னவாக இருக்குமோ?’ என்று அஞ்சத் துவங்கினான்.
மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக இருப்பினும், அவனையும் இந்தக் காதல் பாடாய் படுத்த நினைத்தது போலும்.
அவனது நேசத்திற்கு அவனறிந்தே பல தடைகள் உள்ளன. இதில் நேசத்திற்கு உரியவளும் தடையாக இருந்துவிட்டால்? அவனது போராட்டமும் வீணென்று ஆகிவிடுமே!
அவளது அழகு, அரசனவனை ஈர்க்கவில்லை. அவளது மனதின் உறுதி, கண்களின் நம்பிக்கை, புன்னகையின் பின்னே ஒளிந்த திடம் யாவும் அவள் மீதான பற்றுக்கொள்ளலை அதிகரித்திருந்தன..
“அவளிடம் யான் உணர்வைச் சொன்னால், அரசவையின் சட்டங்கள் என்ன கூறும்? இவள் நன் மனையாட்டி என்றால்? மகிழ தேசத்தின் பட்டத்து இராணி என்றால்? முதலில் அவளிடம் யான் நன் மனம் திறந்து எமது நேசத்தை முன் வைத்திட முடியுமா?”
மேகோனின் மனம் தன்னுடைய காதலுக்கு உண்டான சாத்கபாதகங்களை அலசிக் கொண்டிருக்க, எவ்வித முன் அனுமதியின்றி அங்கு வருகை தந்திருந்தான் கவிநயனன்.
“தளபதியாருக்கு இந்நேரத்தில் என்ன காரியமோ?” எடுத்ததும் மேகோன் அவ்வாறு கேட்டதும், கவிநயனன் சொல்ல வந்ததையே மறந்து பார்த்தான்.
“நன் நேசம் பற்றிய அறிவுரை என்றால்…” என்று நிறுத்திய மேகோன், “தேவைப்படாது” என்றான்.
“பெண்ணின் மீது நேசம் வந்துவிட்டால், மற்றவர்கள் யாவரும் எதிரிகளாகிப் போவார்கள் என்பது உண்மை தான் போலும்” என்ற நயனன், “உம் நதியின் உயிர் விடயமென்றாலும் தேவை இருக்காதோ?” என்றான்.
“தெளிவாகச் சொல்.” அதுவரை அசரித்தையாக நின்றிருந்த மேகோன் உடல் மொழியில் ஒருவித வேகத்தை காண்பித்திருந்தான்.
“உம் நேசம் மட்டுமல்ல, உம் சாதாரண பார்வையும் மேகநதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது” என்றான் நயனன்.
மேகோன் புரியாது புருவம் உயர்த்திட,
“உம் நேசத்தை பிறர் அறிய நேர்ந்திடும் பொழுது… உமக்கு சமமாக மேகநதியை எண்ண வேண்டுமென்று தானே… இன்று சபையோர் முன்னிலையில் அவளின் வீரத்தை பறைசாற்றும் விதமாக தாமே எதிராக வாள் வீசியது?” என நண்பனை நன்கு அறிந்தவனாக வினா தொடுத்தான் நயனன்.
“எம்மை புரிகிறதே! பின்னர் இவ்வினாவிற்கான அவசியம் என்னவோ?”
“உமது செயல் தான் மேகநதிக்கு எதிராக சதி செய்திட தூண்டியுள்ளது” என்றான்.
“சதியா?” என்ற மேகோன், “திட்டம் தீட்டியது யாரோ?” எனக் கேட்டதோடு, “காரணம் யாதோ?” என்றான்.
“காரணம்…” என்ற நயனன், “அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருந்திட, அவர்களுக்கு அளிக்காத பாராட்டும், அரசனுடன் வாள் வீசும் உரிமையும் படை பயிற்சியில் கூட சேர்ந்திடாத சிறு பெண்ணிற்கு மன்னரே முன்வந்து அளித்ததால் உண்டான பொறாமை கொண்ட வஞ்சம்” எனக் கூறினான்.
“திட்டத்தின் தலைமை எவரோ?”
“யாராக இருக்கூடுமென்று மன்னருக்கு அனுமானம் இல்லையோ?”
“யாரென்று கண்டுகொண்டோம்” என்ற மேகோன், “திட்டத்தின் செயல்முறை அறிவாயோ?” எனக் கேட்டான்.
“மேகநதி படையில் சேர்ந்தால், அவளின் வீரம் பல ஆண்களுக்கு நிகராகப் பேசப்படுமாம். ஆதலால் படையில் சேரவிடாது செய்வது அவர்கள் நோக்கம். வார்த்தையாக சொல்லி பார்த்து, மறுத்து முடியாதென பிடிவாதம் செய்தால், உயிரை கொன்று பறித்திட முடிவு செய்துள்ளனர்” என்ற நயனனின் பார்வையை உணர்த்தியதெல்லாம் ஒரே பொருள் தான்.
‘உன்னால், உன் பார்வையால் தான் மேகநதிக்கு இந்நிலை எனும் பொருள்.’
“கொல்லும் திட்டமென்றால், நதியின் வீரமட்டும் அவர்களது பிரச்சினை போன்று தெரியவில்லையே?” என்ற மேகோன்,
“கண்கொண்டோம்… நன் மேகத்தின் மீதான எம் பார்வையின் பொருள் புரிந்து எம்மை கண்டுகொண்டதால் உண்டான திட்டம். திட்டம் வடிவம் கொள்கிறதா பார்ப்போம்” என விஷமப் புன்னகையை அம்மண்டபம் எதிரொலிக்க சிதறவிட்டான்.
மேகோனின் இயல்பான சிரிப்பில் கவிநயனுக்குத் தான் அச்சம் சூழ்ந்தது.
“யாம் இப்பொழுதே நதியவளை சந்திக்க வேண்டும்.”
நண்பனின் பயம் உணர்ந்தும் மேலும் அவனை தன்னுடைய வார்த்தைகளால் அதிர்வாக்கினான் மேகோன்.
“உம்மை உமது சிறிய தந்தை கண்டுகொண்டாரென்று அறிந்தும், இதென்ன வீணான எண்ணம்?” நயனன் வெளிப்படையாக கடிந்து கொண்டான்.
“என்னவளை யான் காக்க எமக்கு உறவென்ற உரிமை வேண்டாமா?”
“அதற்கு?”
“நன் நதியின் மீது தாக்குதல் நடைபெறுவதற்கு முன், யான் எமது நேசத்தை மொழிந்து அவளது மனம் அறிய வேண்டும்” என்றான் மேகோன்.
“இருக்கும் சூழலில் உம் எண்ணம் பெரும் பிழை மேகா… உமது சிறு பார்வை மேகநதியின் மீது படிந்ததற்கே, அவளின் உயிர் குறி வைக்கப்பட்டுவிட்டது. இவ்வேளையில் சந்திப்பும், நேச பகிர்தலும் அவசியமானதா?” என்றதோடு, “குடிகளை காத்திட அரசன் எனும் உரிமை போதும்” என்றான்.
“யான் அவளுக்கு அரசனாக இருக்க விரும்பவில்லை… வாழ் முழுமைக்கும் அடிமையாக இருக்க விருப்பம் கொள்கிறோம்” என்ற மேகோனின் வார்த்தைகளில் நயனன் அயர்ந்து பார்த்தான் நண்பனை.
“அரசன் என்பவனுக்கும் மனமென்ற ஒன்று உணர்வுகளால் பிணைந்ததுவே!”
அதற்கு மேல் நயனனால் மேகோனை தடுக்க முடியவில்லை.
அந்த இரவு வேளையில் மேகநதியை சந்திக்கத் தீர்மானித்து வெண்புரவியில் பாய்ந்து சென்ற மேகோன் இரு நாழிகையில் இடும்பனின் இல்லத்தின் முன்பு நின்றிருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
25
+1
1
+1
1