அத்தியாயம் 44
அரண்மனை வந்து சேர்ந்த பின்னரும் மேகோனுக்கு அவனது நதியின் நினைவுகள் தான். ஆம் அவனது நதி… அவனின் இதயத்தில் உறைவிடம் கொள்ளும் மேகம். மேகோனின் மேகநதி.
கண்டதும் நெஞ்சத்தில் ஈர்ப்பின் மிச்சம் நேச விதை தூவியிருந்தது. வயதுக்கேற்ற ஈர்ப்பில் விழிகளை பிரித்திடாது அவளில் லயித்துவிட்டவனின் மனம் அவள் பாதம் சரணடைய முரசு கொட்டியது.
அக்காதல் முரசின் ஒலி பல மணிகள் கடந்தும் அவனில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
“மேகம் மேகோனை நனைத்திடாது நதி மாற்றம் அடையமாட்டாது போலவே” என்றவனின் வதனம் குறுநகைக் காட்டியது.
“வாள் வீச்சாலல்ல… விழி வீச்சால் மொத்தமும் மிட்சமின்றி களவாடிக் கொண்டாள்… எம்மையே!” சிரித்தவன் அவளின் பெயரை அறிந்திருந்த போதும், அவள் சொல்லிக் கேட்டிட விருப்பம் கொண்டான்.
அவளை மீண்டும் பார்த்திட ஆசை முகிழ்த்திட… இரவு நேரமென்றும் பாராது தளபதியான கவிநயனை அழைத்து, “வடிவமைத்திருக்கும் போர்க்கருவிகள் யாவும்… எம் முன், மகிழ தேசத்தின் சபை நடுவில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்” என்றான்.
“ஆயுதக் கிடங்கிற்கு, இன்றைய தங்களின் வருகை அதற்காகத்தானே?” என்ற நயனன், அரசனாக அன்றி தன்னுடைய நண்பனான மேகோனை அவதானிக்க முயன்றான்.
“வந்த பணி முழுமை பெறவில்லை தளபதியாரே! யாமிட்ட கட்டளையை நிறைவேற்றுவதே உம் பணியாகும்” என்றான் மேகோன்.
நயனாவுக்கு நண்பனின் மனம் புரிந்திட, வெளிப்படையாகவே மீண்டும் ஒருமுறை எச்சரித்துவிட்டான்.
“ஒத்துவராது மேகா… இருவருக்குள்ளும் எந்தவொரு பொருத்தமுமில்லை. உம் நேசத்தால் மேகநதிக்கு பாதிப்பும், வலியும் மட்டுமே மிஞ்சும்” என்றான்.
“அரசனாக பேரரசின் சிறு உயிரையும் பாதுகாக்கும் எம்மால், கணவனாக எம் மனையாட்டியையும் காக்க முடியும்” என்ற மேகோன் முடிவென ஒன்றை எடுத்துவிட்டால் மாற்ற முடியாது என்பதால் அமைதியாக திரும்பிவிட்டான் தன் பணியை செய்திட.
அடுத்த கணம், ஆயுதக் களஞ்சியத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் செய்தியை பகிர்ந்திருந்தான்.
“கருவியை வடிவமைத்தவர்களே, அந்த ஆயத்தின் செயல்முறை, செயல்பாட்டு முறை என்று அனைத்தையும் நாளை அரசவையில் விளக்கிக்காட்ட வேண்டும்” என்றான்.
விடயம் அறிந்த கொல்லன் தன்னுடைய மகளிடம் வந்து கூறிட, அதுவரை தன்னுடன் வாள் சண்டை புரிந்தவன் யாரென்று தெரியாது, அவனை மனதில் வைத்து ஆராய்ந்தவாறு இருந்தவள், தான் வடிவமைத்த வாளில் மனதை நிறுத்தினாள்.
வாளோடு சேர்ந்து தன்னுடன் வாள் வீசியவனின் எண்ணத்தையும் ஒதுக்க முடியாது இரவினை அவனது நினைவோடு கழித்தாள்.
******************
கதிரவன் நேராக கோபுரத்தின் முகவரியில் விழும் அந்த நொடிகள்…
அரசவைக் கூடம் அமைந்திருந்த மேமகிழ் கோட்டையின் அகலமான மண்டபம், பழமையான கம்பங்களை தாங்கிய தூண்களில் தங்கச் செதுக்குகளுடன் ஒளிர்ந்தது சூரியக் கதிர்கள். சாயலைத் தொடாத ஒளிக்கதிர்கள் மேலிருந்து வீச, அந்த ஒளியில் அங்கு பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ஆயுதமும் வண்ணமயமான மின்னலோடு காட்சியளித்தன.
ஆயுதங்களை வடிவமைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள், தம் கருவிகளை நேர்த்தியாக பளபளப்பாக வடிவமைத்து வைத்திருந்தனர்.
மேகநதி, இரவில் தூக்கமின்றி, தன்னுடைய மனதை அசைத்து பார்த்தவனின் எண்ணத்தை புறம் தள்ள முடியாது அவனோடு சேர்த்து தன்னுடைய வாளினையும் சோதித்து, வியர்வையால் நனைந்த கரங்களால் இறுதியாக வடித்த வாளை கையிலே பிழிந்து பற்றிக்கொண்டவளாக, தன் இடத்தை அணுகினாள்.
அவளது ஆடையில் எதுவும் பிரமாண்டம் இல்லை. ஆனால் அவளின் பார்வையில் ஆழமும், அவளது நகர்வுகளில் திடமும் இருந்தது. இரு விழிகளும் நேர்வழி நோக்க, எதையும் தாங்கும் தன்மையோடு காற்றின் நுண்மை போல இயங்கின.
அவளை முந்தி வரிசையில் இருந்த பெரும்பாலான ஆண்கள் ஒரு கணம் அசைக்கப்பட்டனர்.
அந்த பார்வை, அந்த அமைதி, அந்த நிதான நடை அவள் யாரெனும் கேள்விகளை உண்டாக்கியது.
அரசனின் புலன்கள் எல்லாம் விழிப்புடன் இருந்தன. மக்களின் இடையே, மேகநதியின் காலடி சத்தமே அவர்களுக்குச் சிறப்பாகக் கேட்டது. அவளின் வருகைக்கு முன்னால் பேசிய அமைச்சரின் வார்த்தைகள் மங்கின. அது நயனனின் பார்வையிலும் தெரிந்தது.
“அவள் வருகை உமக்கு புரியவில்லையா?” என்றான் நயனன் மென்மையாய்.
“அவள் என்று குறிப்பிடாது நாமகரணமிட்டு அடையாளப் படுத்தலாம்” என்றான் மேகோன். அமர்த்தலாக.
“ஒரு பொழுதிற்குள்ளாகவா?” நயனன் அதிர்ந்து பார்த்தான். மேகோனின் பேச்சின் பொருள் அறிந்த பின்னர் அதிர்வு இயல்பு தானே!
“சிலரின் வருகையை சொல்லாமலேயே உணர முடிகிறது. அதுவே உண்மையான இதயத் தொடர்பு” என்றான் நயனன், அவனது சிந்தனையை வாசிக்க.
“இந்நேரப் பணி யாதோ? அவற்றை கவனிப்போம்” என்று நயனன் பேச்சுக்கு மறுபேச்சு அளிக்காது, அங்கு தங்களின் கருவிகளைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த கொல்லர்கள் மீது கவனம் வைத்தான் நயனன்.
வெகு நேரம் காத்திருந்தவாறு மேகநதி தன்னுடைய உருவாக்கத்தை அரசனின் முன்னிலையில் வைத்திட, சபையோர் மையத்தில் வந்து நிமிர்ந்து நின்றாள்.
அரியணையில் இரண்டு அரிமாக்களின் தங்க சிலைகளுக்கு நடுவில் உயிருள்ள அரிமாவாக அமர்ந்திருந்த மேகோனின் விழிகள் கள்ளுண்ணாமலே கள்ளுண்ட மயக்கம் காண்பித்தன.
அவனுக்கு மாறாக அவளின் பார்வை அவன் யாரென அறிந்து, ஏனென்று அவளுக்கு பொருள் விளங்கா வலியை பிரதிபலித்தது.
அவளின் வலியை உள்வாங்கியவனோ… தான் புருவத்தை உயர்த்தினான்.
நொடியில் அவனில் கரையத் துடித்த மனதை கட்டுப்படுத்தி மிடுக்காய் நின்று வாள் வீசத் துவங்கினாள்.
அவளது இதயத்தின் அசைவும் வாளின் பதற்றமும் ஒன்றாய் இருந்தது. அது ஒரு சாதாரணமான வாள் அல்ல.
அந்த வாளின் கம்பியூட்டல் நுண்ணிய உலோகக் கலவைகள், அதனுள் இருந்த ஒளிச்சுழற்சி வடிவமைப்புகள், எதிரி தாக்குதலின் திசையை உணர்ந்து தானாக திசைமாற்றம் செய்யும் தன்மை இவை அனைத்தும் அந்தக் காலத்தில் ஒருவரும் கருத முடியாத தொழில்நுட்பம்.
அவளது வீச்சின் காற்றோசை, அரசவையின் மையத்தில் எதிரொலித்தது.
“இது வெறும் வாள் அல்ல. இது எதிரியின் தாக்கத்தின் தன்மை அறிந்து, தானாக திசை மாறும் திறன் கொண்டது. காற்றின் இயக்கத்தையும், எதிரியின் நகர்வுகளையும் உணர்ந்து, எதிர்மறையான தாக்கங்களை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.”
அவள் விளக்கும்போது, மேகோன் சற்றும் அசைவின்றி கேட்டுக் கொண்டிருந்தான். அவளின் குரலில் கூர்மையும், பதற்றமும் இருந்தன. ஆனால் ஒரு வார்த்தையும் தவறாமல் தேர்ந்து எடுக்கப்படவையாக வெளிவந்தது.
அவளின் கம்பீரம், மிடுக்கான வாள் சுழற்சி, திடமானப் பேச்சென அனைவரும் வியந்து பார்த்திருக்க, மேகோனுக்கு மட்டும் அவளின் பதற்றத்திற்கான காரணம் தெரிந்தது.
கள்ளப்புன்னகையை மறைக்க, சுட்டு விரலை மீசையின் நுனி உராய்ந்து கன்னம் ஊர், பார்வையில் ரசனையை தத்தெடுத்தான்.
அவள் வாளின் வேலைப்பாடு விவரிக்கும்பொழுது, நேரம் ஓர் இடைவெளியில் நின்றுவிட்டது போல மக்களும் அமைச்சர்களும் வியப்புடன் பார்த்தனர். நுண்ணிய மின்னலைப் போல அவளது வீச்சும் அவளது திடமான குரலும் கோட்டையின் காற்றில் நிரம்பி நின்றது.
அரசன் மௌனமாக அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
“இதனை உருவாக்கியதில் யாரும் உதவியாளராக இருந்தார்களா?” என கேட்டவர் வேதகுரு தேரல்வேள்.
(வேதகுரு – கல்வி அமைச்சர்.)
“இல்லை. இது முழுமையாக நன் சிந்தனையும், நன் உழைப்பும்” என்றாள் அவள்.
“உமக்கு யார் பயிற்சி அளித்தனர்?” என நயனன் கேட்டான். தளபதியாக, போரில் முக்கிய பங்கு நிர்வகிப்பவனாக கேள்வி கேட்க வேண்டுமென்று கேட்டான்.
“எமக்குத் தேவையானதை யாமே கற்றோம். இடும்பனின் மகளாகப் பிறந்தோம். ஆனால் அந்த மரியாதையால் யாம் கட்டுப்படவில்லை.” என்றாள்.
இப்போது மேகோனின் கண்களில் அப்பட்டமான ரசனை. நயனன் தொண்டையை செருமிட…
“அரசவை முடிந்ததும், எம் தங்கை உம்மை காண பொதியம் அருவிக்கு வரச்சொல்லி செய்தி அனுப்பினாள்” என்றான்.
அவனை நம்ப முடியாது நயனன் நோக்க…
“உம் விருப்பம். போகவில்லை என்றால் உமக்குத்தான் மண்டை இடி” என்று மேகோன் சிறியாது சொல்லிட…
“செய்தியை உம்மிடமே எம்மிடம் கூறச்சொல்லி கூறினாளா?” நயனன் தாடையை நீவிட,
“ஆயுதங்களை நன்முறையில் பரிசோதியுங்கள்” என்று மேகோன் திரும்பிவிட்டான்.
பார்ப்போருக்கு அரசரும் தளபதியும் கருவிகள் பற்றி உரையாடுவதுப் போல் தோற்றம் கொண்டிருந்தது.
“அழைக்கப்பட்டவர்களில் ஒரு கருவி மட்டுமே இதுவரை வித்தியாசமாக இருக்கிறது. மற்றவை பழைய முறையில், வெறும் வடிவ மாற்றங்களே.” என்றார் மற்றொரு அமைச்சர். அவரை தொடர்ந்து மற்றவர்களின் கேள்விகளும் அணிவகுத்தன.
“இதுவே பயன் தரும் வாள். யாம் சோதனைக்கு வந்திருக்கின்றேன். இதன் உண்மையான திறன் போர்க்களத்தில்தான் தெரியும்” என்றாள் மேகநதி. அவளின் அசராத விளக்கங்களிலும், பதிலும் அமைச்சர்கள் தான் வாயடைத்துப் போயினர்.
“பாவித்து காண்பிக்க வேண்டியது அவசியம். தயாரா?” என கேட்டனர்.
அவள் மறுக்கவில்லை. ஆனால் எதிர்பாராதது நடந்தது.
“அவளின் வாளுக்கு எதிரியாக யார் நின்று சோதிக்கலாம்?” என்ற அரசரின் வார்த்தைகளுடன், மேகோன் தனது வாளின் உறையை மெதுவாக எடுத்து வைத்தான்.
மக்கள் மண்டபத்தில் நிலவிய நிசப்தம் உடைந்து ஒலி பரவியது.
அவள் கண்கள் அசைந்தன. இமைகள் படபடத்தன.
“உம் வாளின் உண்மை தன்மை அறிய, அது என் வாளின் எதிராக எசேற்று விடப்படட்டும்” என்றார் மேகோன்.
வாளின் ஒலி, மண்டபத்தை முழுவதும் நிரப்பியது.
கூடியிருந்தோர் அனைவரும் மேகோனின் இச்செயலைத்தான் அதிசயத்துப் பார்த்தனர்.
மேகநதி தனது உள்ளத்தில் உறுதியாக உணர்ந்தாள். அவனது பார்வை, அவளது உருவாக்கத்தை மட்டும் பார்த்ததில்லை. அவளது உள்ளத்தையும், எண்ணத்தையும் நேராகக் காண்பதாக இருந்தது.
அவளது இதயம் துள்ளியது. நேற்று தன்னோடு வாள் சண்டையில் ஈடுபட்டவன், இன்றும் தானே சண்டையிடும் பொருள் புரிந்து மகிழ்வு கொண்டாள்.
அவனுக்கு நிகராக வாள் வீச்சில் தாக்குப் பிடிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களின் வீரம் போற்றப்படும். அவனின் எண்ணத்தை அவளும் அறிந்து கொண்டாள்.
ஆனால் எதற்காக? கேள்வி மனதிற்குள் எழ, வாளின் மீது கவனம் வைத்தாள்.
மேகநதியின் அறிவும் துணிவும் அரசவையின் மையத்துக்கு வந்திருக்கின்றது. மேகோன் அறிய வைத்திருக்கின்றான்.
மேகோன், அவளின் ஆளுமையை புரிந்து கொள்வதோடு, அவளது சிறப்பை மக்களுக்கு முன்னால் வெளிப்படச் செய்கிறான்.
இருவருக்குள்ளே வினாவும் பதிலும் இல்லாத, ஆனால் புரிந்து கொள்ளும் அணுக்கம் பிறக்கத் தொடங்குகியது, அந்த தனித்த வாள் போரில் தான்.
அரசனின் வாளுக்கு இணையாக அவளது வாளும் காற்றில் தீட்டப்பட, சபையோரால் போர் நிற்கும் வீரனின் கருவியாக அங்கீகரிக்கப்பட்டது.
சிறு பெண்ணின் ஆற்றல் சபையேறி வெற்றி கொண்டதில் மண்டபத்தில் பரவிய பரபரப்புக்குப் பின், மெல்ல இரவு இறங்கிக் கொண்டிருந்தது.
அரசவைக்கூட்டம் முடிவடைந்து, குழுமியிருந்த மக்கள் பரிமாறிய கருத்துகளுடன் விலகினர். ஆயுதக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சாதனைகளை திரும்பச் சேர்த்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் அதிர்வுடன் நின்றனர் — மேகநதியின் வாளின் அதிசய சக்தியால் உருவான அதிர்வெண் அவர்களை விட்டுவிடவில்லை.
அந்த நிசப்தமான சிறு நேரம், மேகநதி தனக்கே உரியது போல உணர்ந்தாள்.
அவளின் வெற்றிக்கு காரணம் அவன் மட்டுமே! அவளின் பார்வை அவனது கண்கள் சந்தித்தது.
“அவர் பார்வை என்னை துணிச்சலாக்குகிறது… அதே நேரத்தில் என் உள்ளத்தைக் கிழிக்கிறது.”
இடும்பன் மகளின் வெற்றியை அவளின் தலை வருடி வெளிப்படுத்திட, அவளுடன் வந்திருந்த மற்ற கொல்லர்களும் அவளை பாராட்டி மகிழ்ந்தனர்.
அரசவை கலைந்தும், மேகோன் அரியணையில் அமர்ந்திருக்க…
அரசனவனை பார்த்துக்கொண்டே அங்கிருந்து தன்னுடைய தந்தையுடன் வெளியேறினாள் மேகநதி.
அவன் விழிகளில் பொங்கி கரை புரண்டதெல்லாம் அப்பட்டமான நேசம். அவள் கண்கள் காட்டியதெல்லாம் வெளிப்படையான வலி. அவளால் எட்டிட முடியாத அவனது உயரத்தின் மீது உண்டான அச்சத்தின் சாயல்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
1
+1