அத்தியாயம் 43
“தங்களின் நாமம் என்னவோ?”
தன்னுடைய வேலையில் கண்ணாக இருந்த பெண்ணவளிடம் அவளைப்பற்றி அறியும் நோக்கில் வினா தொடுத்தான் மேகோன்.
அவனை திரும்பி பார்த்த பேதை… தான் பரிசோதித்துக் கொண்டிருந்த கூர் வாளின் கரம் பிடித்து, விழிகளுக்கு கீழ் வைத்து அதனின் உறை நீக்கி, வாளின் கூர் முனை தரை தொட நிமிர்ந்து நின்றாள்.
வாள் பிடித்த மங்கையின் கம்பீரத் தோற்றம் ஆடவனின் இதயத்தை அசைத்திட, அவனுள் சிம்மாசனமிட்டு அமர்ந்திட்டாள் பேதையவள்.
அவனது கண்களில் ரசனை கூடிட,
“மூன்றாம் மனிதர்களிடம் சுயவிவரம் அளிப்பதில்லை” என்றாள். வெட்டும் பார்வையோடு.
“அப்போது பழகிப் பார்க்கலாம்” என்று விஷமத்துடன் கூறியவன், அவளின் கண்கள் காட்டிய தீச்சூட்டில், “தோழமையுடன்” என்றான் விரிந்த சிரிப்போடு.
“படையில் பயிற்சி பெறுவதற்குதானே வந்துள்ளீர்கள். வந்த பணியை மட்டும் செய்யும்” என்றாள்.
அவனை யாரென்று தெரியாதவளுக்கு, அவனும் படை வீரர்களில் ஒருவன் என்ற எண்ணம்.
“எம்மிடம் தோழமை கொண்டு பழக வேண்டுமென்றால்… முதலில் எம்மை வாள் வீச்சில் வெல்ல வேண்டும்” என்று சொல்லியவள், அங்கு கேடயத்தில் சொருகி வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றை எடுத்து கண்ணிமைக்கும் நொடியில் அவனை நோக்கி வீசியிருந்தாள்.
மார்பை பதம் பார்த்திட தன்னை குறி வைத்து பாய்ந்து வந்த வாளின் கரத்தை எளிதாக பிடித்து சுழற்றியிருந்தான் மேகோன்.
“எளிதான சுழல்முறை. வல்லவரென்று யான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றால், எம்மை வென்று காட்டுங்கள்” என்றவள் அவனுடன் மல்லுக்கு நின்றாள்.
குறுநகையோடு வாளை உயர்த்திக் காட்டினான்.
வாளை உயர்த்திக் காட்டுவதற்கு இடத்திற்கு ஏற்ற பொருள். இவ்விடத்தில் அவன் தன்னுடைய சம்மதம் வழங்கியதாக அர்த்தம்.
முதல் வீச்சில் இருவரின் வாளும் ஒன்றோடொன்று தழுவி முட்டி நின்றது. மேகோன் தனது வாளின் அழுத்தம் கூட்டி, அவளது வாளினை கீழிறக்க முயற்சித்திட, அவளோ வாளோடு உடலையும் சேர்த்து சுழற்றி அவன் முன் நின்று மிதப்பாக பார்த்தாள்.
பதட்டம் நிறைந்த வாள் சண்டை ஆகினும்,
அவளும், மன்னன் மேகோனும் வாள் சண்டை நடத்தும் அந்த தருணம், அவர்களது உள்ளார்ந்த உணர்வுகளையும், திறமையையும், உரிமைகளையும் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம். வாள் ஏந்தி நிற்கும் கணம் எதிரே நிற்பவர் எதிரி மட்டுமே.
வெய்யோனின் ஆதிக்கத்தால், மெல்ல சுழன்ற வாள்களின் ஒளியில், இரண்டு நிழல்கள் எதிரெதிராக நின்றன.
முன்னால் மன்னன் மேகோன். மார்பை உயர்த்தி, வாளின் கூரிய முனையை நிலத்திற்கே எதிராக நிறுத்தி நின்றார். அவரது கண்களில் பரிதாபம் இல்லை. ஆனால் மரியாதை இருந்தது. பெண்களின் துணிவு மீது மதிப்பு இருந்தது. ஆண் என்றும் பாராது சண்டைக்கு அழைத்த திடத்தில் பிடித்தம் கூடியது.
மேகோனுக்கு எதிரே மெல்லிய வயதில் பிறந்த இளஞ்ஞாயிறு போல, ஆனால் இப்போது அதே ஞாயிறின் உக்கிரமான அலைகளாக கூர்வாளை தனது இடது கையில் சூழற்றிக்கொண்டவாறே, “நீவீர் நன் எதிரி அல்ல, உம்மை எதிரியாக பார்க்க வேண்டிய நிலை,” என்றாள்.
அவனிடம் குறுஞ்சிரிப்பு. வாளின் முனையால் நெற்றியில் பூர்த்திருந்த வியர்வையை வழித்திட்டான்.
அவனது செயலில் அவளின் மனம் அவன்பால் கட்டியிழுத்திட, ஆவேசமாக வாள் ஏந்திய கரத்தில் மென்மை படர்ந்தது.
“யுத்த களத்தில் மென்மை ஆபத்தானது” என்ற மேகோன் வாளினை வீசிட, அவளும் சுதாரித்திருந்தாள்.
வாள்கள் இரண்டும் ஒன்றோடொன்று சற்றே கிளிறின. இடுகாட்டை இருளில் வெட்டும் காற்றைப்போல சத்தம்.
முதல் தாக்கம் மேகோனிடமிருந்து வந்தது. ஆனால் அவள் அதை அனாயசமாக ஒதுக்கினாள். அவளுடைய தடுக்கும் செயலில் பழக்கம் இருந்தது, சுழலும் எடையிலும், நேர்காணும் கண்களிலும்.
அவள் வாள் வீச்சிற்கு பயிற்சி பெற்றிருக்கிறாள் என்பதை தெரிந்துகொண்டான்.
அவர்களது வாள்கள் வானில் பிரகாசித்தன. ஒளியில் பிறந்த நிழல்கள் போல.
ஒருவருக்கொருவர் இடையேயானா தாக்குதல்கள் அதிகரித்தன. ஒவ்வொரு வெட்டுச் சுழலும் கால்களை நெருங்கிய நிலத்தில் தூசியை எழுப்பியது. வாளின் தாக்கங்கள் வானில் ஒலிக்க,
“ஏன் இவ்வளவு கோபம்?” என்றான் மேகோன், ஓர் இடைவெளியில்.
“வீரத்தில் மென்மை வீழ்ந்தால் என்ன செய்வது? கோபம் கொண்டுள்ளவா வீழ்த்திட வேண்டும்” என்றாள், தாக்கத்தைத் தொடர்ந்து.
“வீரம் என்பதன் ஆகச்சிறந்த பொருள் அச்சம். அச்சம் உண்டாகுமெனில் வீரம் துளிர்விடும். வென்றிட வேண்டுமென்ற பயம், வீரத்திலும் நிதானத்தை அளித்திடும். வாள் ஏந்தும் தருணம் கோபம் முகிழ்க்குமாயின் தோல்வி நிச்சயம்” என்றான்.
அவளுக்கு அவன் தன்னுடன் சண்டையிடுவது போன்று தெரியவில்லை. மாறாக அவளுக்கு கற்பிக்கின்றான்.
மீண்டும் வாள் வெட்டுகள். உரசும் நொடி தீப்பொறி பறந்தது. இருவரின் விழிகளிலும். இருவரின் கண்களிலும் சோர்வு இல்லை. வாடை விழுகிறது. ஆனால் அவர்களின் செயல்களில் வீழ்ச்சி இல்லை. இருவரும் சம அளவிலான வீரத்தில் எதிராளியை முறியடிக்க முந்தினர்.
அவளுக்காக அவன் வீச்சில் அடக்கத்தைக் காண்பிக்கின்றான்.
மூச்சுத் திணறல்கள் எப்போதோ ஆரம்பித்தன. ஆனால் வாள்கள் இன்னும் சுழன்றுகொண்டிருந்தன.
அந்த தருணத்தில், கவிநயனின் வருகை.
“மேகநதி” என்கிற அதட்டலான கண்டிப்புத் தொனியில் ஒலித்தது. நயனின் குரல்.
வீசிய வாள்கள் உயர்த்தி பிடித்த கரங்களில் வான் தொட்டு நின்றன.
நயனன் பக்கம் வந்திட,
வாள்கள் நிலத்தில் ஆழமாய் புதைந்தன.
பார்வைகள் சந்தித்தன.
வெற்றியோ தோல்வியோ இருந்தால், அதனை சொல்லும் தருணமில்லை. ஏனெனில் இருவரும் ஒருவருக்கொருவர் சமம் என்ற நிலையில் கவிநயனனின் வருகையால் வாள் வீச்சு முடிவடைந்திருந்தது.
“தனிப் பயிற்சியோ?” கவிநயனன் மேகோனைப் பார்த்து அர்த்தமாக வினவிட, அவனிடம் வழமையான புன்னகை.
“யாரென்று தெரிந்து தான் வாள் வீச்சு செய்தாயா மேகா?” எனக் கேட்டான்.
“பயிற்சி பெற வந்திருப்பவர் பயிற்சியை மட்டும் கருத்தில் வைத்து நடக்காது, தனித்திருக்கும் பெண்ணிடம் வம்பு செய்யும் நோக்கில் உரையாடலைத் துவங்கினால், யான் வேறு எவ்வாறு நடந்துகொள்வது தளபதியாரே?” என்றவள், இன்னமும் முகத்தில் சிரிப்பு மாறாது நின்றிருந்த மேகோனை பார்த்து உதடு சுளித்து நகர்ந்தாள்.
“யாரென்று அறிந்து செய்த செயலா இஃது?”
“யாராக இருப்பினும் அச்சம் எமக்கில்லை” என்று நின்று திரும்பி பதில் வழங்கியவள்,
“வாளினை சண்டையிடும் நோக்கில் கரம் பிடித்துவிட்டால் எதிரில் நிற்பவர் யாராக இருப்பினும் வெல்லும் நோக்கில் வாள் வீசுவதே வீரனுக்கு அழகு” என்று அர்த்தமாகக் கூறிச் சென்றாள்.
அவளின் பொருள் மேகோனுக்கு புரிந்துவிட்டது. அவனது ஒற்றை விரல் மீசை உராய்ந்து கன்னம் ஊர்ந்தது. கண்களில் காதலும் பெருக்கெடுத்தது.
அவளுக்காக அவன் வாள் வீச்சின் வேகத்தை குறைத்து சண்டையிட்டதை குறிப்பிட்டுச் செல்கிறாள்.
“எம் எண்ணமும் அவளுக்கு விளங்குகிறது.” வாய்விட்டுச் சொல்லியவனை ஆழ்ந்து பார்த்து…
“என்ன வம்பு செய்தாய் மேகா?” மேகநதி அங்கிருந்து சென்ற நொடி மேகோனிடம் கவிநயனன் வினவினான்.
“மேகம் இரண்டு ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் தருணமது மழைக்கு வித்தாகும் அல்லவா?” என்றான் மேகோன். மேகநதி சென்று மறைந்த திசையை பார்த்தவாறு.
“விளங்கியது” என்ற நயனன், “ஆசை யாருக்கும் யார் மீதும் வரலாம். உமது உயரம் நினைவில் வைத்து நடக்கும் இடத்தில் இருக்கின்றாய்” என்றவனை ஆழ்ந்து நோக்கினான் மேகோன்.
பார்த்த கணம் நண்பனின் பார்வையை வைத்தே அவனது மனதை அறிந்திருந்த நயனனுக்கு, அவனது நேசம் மேகநதிக்கான ஆபத்தாகவே தோன்றியது.
“எம்முடையது வெறும் ஆசையல்ல நயனா. பார்த்த கணம் நேசமாய் நெஞ்சில் பற்றிக்கொண்ட தீ. இரு மனமும் சங்கமிக்குமாயின்… எம் நெஞ்சத் தீ குளிர்விக்கப்படும்” என்றான் மேகோன்.
“தற்போது இருவரும் வாள் சண்டை புரிந்தது யாரேனும் கண்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளாது, மேகநதியின் நிலை கவலை கண்டிருக்கும்” என்றான்.
“யாம் இருக்குமிடத்தில் என்னவளுக்கு என்ன நேர்ந்துவிடும் நயனா?” அவனது அதிரடியான என்னவள் எனும் அழுத்தம் நிறைந்த உச்சரிப்பு நயனனுக்கு கிலி பிடிக்கச் செய்தது.
“தேசத்தின் படைத்தளபதியாக அன்றி இவ்விடயத்தில் எம் தோழனாக மட்டும் நடந்துகொள்” என்ற மேகோனை பார்த்து சிரித்த நயனன், “தோழன் என்பதால் மட்டுமே எச்சரிக்கை செய்கின்றேன்” என்றான்.
மேகோன் முடிவென்று ஒன்றை எடுத்துவிட்டால் அதற்கு மறுபரீசலனை என்பதே கிடையாது என்பதை அறிந்திருந்த நயனன்,
“யாரென்று உம்மை அறிந்துவிட்டால் காற்றின் திசைக்கு மேகம் நகர்ந்துவிடும்” என்ற நயனனின் சொற்களில் மேகோன் சிந்திக்கத் துவங்கினான்.
**************
முதற்கணத்தில் இருவருக்கும் உணர்வுகள் பிறந்துவிட்டன. ஆனால் அது இன்னும் வார்த்தைகளாகவும் உறவாகவும் உருபெறவில்லை.
இருவருக்குமான இரண்டாம் சந்திப்பு. தன்னவளை காண்பதற்காக மேகோனே உருவாக்கிய சந்திப்பு.
அரசவைக் கூட்டத்தின் நாள். புதிய ஆயுதங்கள் சோதிக்கப்பட வேண்டிய நாள். அனைத்து ஆயுத கலைஞர்களும், அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த நாட்களில், எளிய குடிமக்கள் அரசனது நேரடி பார்வைக்கு வருவது மிகவும் அபூர்வம். ஆனால் மேகநதியின் நுண்மையான உருவாக்கங்களை முன்வைக்கும் விதத்தில், அவளே நேரில் அழைக்கப்பட்டிருக்கிறாள்.
மேமகிழ் கோட்டையின் அகலமான மண்டபம். அரசவைக் கூடம். கதிரவன் நேராகக் கோபுரத்தின் முகவரியில் விழும் நேரம்.
மேகநதி இரவு முழுக்க தூங்காமல், தன் கருவியை மீண்டும் மீண்டும் சோதித்து பார்த்தவாறு இருந்தாள். மனதை அதில் திசை திருப்ப முயன்றாள். முடியாது போனது.
மஞ்சத்தில் விழுந்தாலும் அந்நியன் அவனின் பார்வையும், சிரிப்பும் பெண்ணவளின் இதயத்தை வாள் கொண்டு வீழ்த்தியது.
தன்னால் உட்பட்ட உணர்வுகள் சற்று குழப்பமானதாகவே இருந்தன.
‘அந்த ஆண்? அவர் யாராக இருக்கும். அவர் உடனிருந்த கணம் இப்போதான உணர்வுகள் இருக்கவில்லையே?’
நாளைய தினம் அரசனுக்கு முன்பாக நின்று, அவள் வடித்துக் கொண்ட கருவியின் பயன்பாட்டைப் பற்றி விளக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அதுபற்றி சிந்தனையே இன்றி, யாரென்று அறியாது தன்னிடம் வேண்டுமென்றே வார்த்தையில் மல்லுக்கு நின்று, வாள் வீச்சு செய்தவன் யாராக இருக்குமென்ற யோசனையில் தத்தளித்தாள் பெண்ணவள்.
பணி முடித்து இல்லம் வந்த இடும்பன்,
“நாளை அரசவைக் கூட்டத்தில் இழைத்த ஆயுதங்கள் சோதிக்கபட உள்ளன மகளே” என்றார்.
அவள் அமைதியாக அவரை பார்த்திருக்க…
“உம் கைகள் வடித்த வாளின் விளக்கம் நீயே அளித்திட வேண்டும்” என்று சென்றுவிட்டார்.
“நன் உருவாக்கம் கொண்ட வாள் சோதனைக்குரியது. ஆனால் எமது உள்ளம் தான் இப்போது சோதிக்கப்படுகிறது தந்தையே” என்று வாய்விட்டுக் கூறியவள், தலையணையில் இரு கைகள் ஒன்றாக வைத்து அதன் இணைவில் தன்னுடைய தாடை பதித்து சயனித்தவளின் பார்வை சாளரம் வழி இருளில் ஆழ்ந்தது.
அவளது உள்ளமும் யாரென்று அறிந்திடதா ஆடவனில் படிந்தது.
“அந்த பார்வை… ஏன் அப்பார்வை என் மனதை இவ்வளவு தாக்குகிறது?” பதிலின்றி நடுசாமம் கடந்த வேளையில் உறக்கம் தழுவியிருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
2
+1