Loading

 

அத்தியாயம் 42

கிபி 815.
மேமகிழ தேசம்.
இன்னும் இரு தினங்களில் வரவிருக்கும் பூரண நிலவு நாள் அன்று தேவ மகிழோன் ஆலயத்தில் மகிழப் பேரரசின் மாமன்னன் மகிழ் மேகோன் மற்றும் இளவேனில் மேகநதிக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது.

பேரரசு முழுவதும்… பொதியம் தொடங்கி, வனப்பதம் வரையிலும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமின்றி எங்கும் மகிழ்ச்சியின் ஆரவாரம்.

பேரரசின் சிறு குடிகள், குறுநில ஆட்சிப் பரப்புகள், சிற்றூர்கள் என எங்கும் சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பு.

மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு நிகழ்வாக எண்ணி மகிழ ஒரே காரணம் மகிழ் மேகோன்.

பத்தொன்பது வயதில் அரியணை ஏறியவனின் ஆட்சி மிகக் குறுகிய ஆண்டுகளில் கற்பனைக்கும் எட்டாத அளவில் அத்தனை சிறப்பாக விளங்கியது.

மகன் மன்னனாக செய்யும் ஒவ்வொரு செயலிலும், சுந்தரனாரின் மீசை தானாக முறுகல் கொள்ளும். மன்னர் பதவி திறந்து, மகனின் திறமைக்கு வழிவிட்டு, அரசியலில் அவருக்கு குருவாக மாறிய போதும், மேகோனின் எந்தவொரு செயலுக்கும் தடையாக நிற்கவில்லை. அவனது எண்ணங்கள் பகிரப்படும் நேரம் வழிகாட்டியாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை முன் வைப்பவராக, முற்றிலும் மகனின் ஆட்சியிலிருந்து தள்ளி நின்றுகொண்டார்.

மகனின் அதிகார திறமையை, ஆளுமையான தோரணையை, மக்கள் போற்றும் அவனது ஆட்சியை தந்தையாக ரசிக்கும் இடத்தில் மட்டுமே இப்போது அவர்.

மகனைப்பற்றி தன்னுடைய கணிப்பு எப்போதும் பொய்த்துப் போனதில்லை எனும் கர்வம். அத்தோடு சிறிய வயதில் பல பெரும் சாம்ராஜ்ஜிய மன்னர்களுக்கே கடும் சவாலாக திகழ்கிறான் என்பதில் பெருமை.

பல கடும் எதிர்ப்புகளுக்கு பின்னர் மகனின் நேசம் கைகூடியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி சுந்தரனாருக்கு.

“யோசனை பலமாக இருக்கின்றதே.”

உப்பரிகையில் நின்றுகொண்டு மகனின் வசந்த மண்டபத்தையே பார்த்திருந்த கணவரிடம் வினவினார் இராணி சுந்தரதேவியார்.

“தேரல்வேள் மணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையே!” என்றார். தன்னுடைய சகோதரனின் மறுப்பு எதனால் எனும் கவலை அவருக்கு.

மக்களை என்றும் தன்னுடைய குடிகளாக மட்டுமே பார்க்கும் சுந்தரனார் மற்றும் மேகோனுக்கு, ராஜா குடும்பத்தை தவிர்த்து மற்ற குடிகள் யாவும் தங்களின் அடிமைகள் எனும் எண்ணம் கொண்ட தேரல்வேளின் தாழ்ந்த மனம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

“வாழப்போவது நம் பிள்ளை. அவனின் மன சந்தோஷம் முன்பு, உறவுகளின் மறுப்பு பெரியதல்ல.” சுந்தரதேவி சொல்வது சுந்தரனாருக்கும் புரிந்தது.

ஆனால் மனைவியை போல் மகனின் மகிழ்வு என்று மட்டும் அவரால் எண்ண முடியவில்லை.

தன்னுடைய சகோதரனின் குணம் என்ன என்று ஒரு கணிப்பில் நிலைகொள்ள முடியாது அம்மண்டபத்தில் அலைந்து கொண்டிருந்தார் சுந்தரனார்.

சுந்தரதேவிக்கு கணவரின் மனம் புரிந்து வருத்தம் சூழ்ந்த போதும், எவ்வகையில் ஆறுதல் அளிப்பதென்று தெரியவில்லை.

மேகோன் அரச குலத்தில் அல்லாத ஒரு பெண்ணை விரும்புவதாக தெரிந்தது முதல் தேரல் நடந்துகொண்ட முறை, பேசிய பேச்சுக்கள் யாவும் அதீத வேதனையை கொடுத்தது.

இப்போதும் தேரல் அமைதியாக இருப்பதற்கு காரணம் மேகோன் மட்டுமே! அவன் அவரிடம் என்ன பேசினான் என்பது சுந்தரனாரே அறியாது.

பெற்றவர் இருவரின் மனநிலைக்கு மாறாக, தன்னுடைய வசந்த மண்டபத்தின் விமான தரையில் தலைக்கு கைகள் வைத்து மல்லாக்க படுத்து, இரவு வானில் பவனி வரும் வட்ட நிலவை ரசிக்காது, தன்னுடைய கருவிழி பார்வைகள் இரண்டையும் அதிகாரத்திலும் வெண்மையாய் நதி போன்று ஊர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களில் காதலாய் படிந்திருந்தது.

அவனது இதழ்கள் பிரிந்து மெல்ல உச்சரித்தது.

“நதி… மேகம்… நன் மேகநதி.” நாணத்தில் அதரம் குவிந்தது.

அகவிழிகள் தன்னவளை முதன் முதலில் சந்தித்த நிகழ்விற்கு பயணம் செய்தது.

மேமகிழ் தேசத்தின் மேற்குப் பகுதியில் மயில்கண் பாதையில், பிரியும் பொதியம் நதியின் கிளையாகிய நாகதண்டி நதியின் கரையில் உள்ள அரசுக் களஞ்சியம்.

சூரியன் மேல் சாய்ந்த மாலைப் பொழுது.

அரசனாகிய மகிழ் மேகோன் ஆயுதங்களை சோதிப்பதற்காக அரசகக்களஞ்சியம் வருகிறான்.

அரசுக்கு சாத்தியமான எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்பு கொண்ட மேகோன் போருக்கு உரிய ஒவ்வொரு துறையும் அவ்வப்போது மேற்பார்வை செய்வது வழமை.

அன்றும் அப்படித்தான் அரசக் களஞ்சியத்தில் ஆயுதக் கிடங்கை பரிசோதிக்க வருகை புரிந்தான்.

பெரும் அரண் அமைத்து, ஆயுதக் கிடங்கு ரகசியமாக மயில்கண் பாதையின் பதுங்கு காட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்தது.

மகிழப் பேரரசின் குறுநில மன்னர்களுக்கே அரச களஞ்சியத்தின் ஆயுதக் கிடங்கு இருக்குமிடம் தெரியாது.

வீரர்களின் திடமும், தைரியமும் மன உறுதியை கடந்து ஆழம் கொள்வது ஆயுதத்தின் தரத்தில் மீதான நம்பிக்கையில் தான் உள்ளது. தன்னுடைய நாட்டின் ஆயுத தரம் எதிரிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதில் மேகோன் கவனம் கொண்டிருந்தான்.

ஆயுத கிடங்கில் வேலை செய்யும் குடிகளுக்கு அங்கேயே சொந்தமான இருப்பிடம் அமைத்துக் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் யாவும் அங்குள்ளது.

தன்னுடைய வருகை யாவருக்கும் தெரியக் கூடாது என்பதால், மாறுவேடம் தரித்து சாதாரண உடையில் முகம் மறைத்து ஒரு வீரனை போன்று குதிரையில் வந்து மயில்கண் பாதையை அடைந்த மேகோன், அதிலிருந்து பிரிந்த நாகதண்டி நதியின் கரை பாதையில் பயணிக்கத் துவங்கினான்.

மாலை நேரம் என்பதால் அவனுக்கு பின்னணியில் சூரியன் சாய்ந்திருந்தான். அந்தச் சாயலில் நதி நீலமல்ல, தாமரையின் இதழ் போல ஒரு மஞ்சள் உருண்டையின் பின்னொளி.

அரண்மனைக்கு பாதுகாப்பிற்காக கோட்டையைச் சுற்றி அரணாக அகழி அமைப்பதைபோல், தேசத்தின் முக்கிய ஸ்தலங்கள் யாவற்றிற்கும் அகழி அமைத்திருந்தான் மேகோன்.

(அகழி – மதில் சுவருக்கு இணையாக சில அடிகளில் ஆழம் அமைத்து, அதில் நீர் வரத்து செய்து முதலைகளை விட்டு வளர்ப்பர். எதிரிகள் யாவரும் இந்த அழகியை கடந்தே கோட்டைக்குள் வருவதைப் போன்று இருக்கும். இவ்வழியில் உள்ளே நுழைவது அத்தனை எளிதல்ல. முதலைகளுக்கு இரையாவது நிச்சயம்.)

நாகதண்டி நதியின் ஓரத்தில் அமைந்திருந்த அரசக் களஞ்சியத்திவனை நெருங்க நெருங்க… சலசலவெனத் தோன்றும் ஒலி, உலோகங்களின் உருக்கல் வாசனை, தீயின் குறுகுறுப்பு இவையெல்லாம் பாசறைப் போர்க்களத்தையே நினைவுப்படுத்தியது.

போரில்லா அமைதியான வாழ்வை வேண்டியே மேகோனின் ஒவ்வொரு அடியும். அறிவாற்றலும். அவனது பெரும் அறிவாற்றல் தான் அழிவுக்கு வித்தாகியது.

மேகோன் மதில்ச்சுவரை அடைந்ததும், சுவருக்கு முன்னால் பாலமாக, வாயில் கதவின் முனையிலிருந்து தடித்த மரபலகையை சாயவிட்டனர் காவலர்கள்.

மேகோன் பாலத்தில் உள் நுழைய மீண்டும் பாலம் உயர்ந்து, பெரும் வாயிற்கதவுகள் மூடிக் கொண்டன.

மகிழ தேசத்தின் அரண்மனைக்கு சற்றும் குறைவில்லாத பரப்பளவை கொண்டிருந்தது களஞ்சியம். ஆயுதக் கிடங்கின் ஊழியர்களுக்காக அரசனால் அமைக்கப்பட்ட சிற்றூர்.

(சிற்றூர் – கிராமம்.)

சந்தைப்பகுதியை பார்வையிட்டவாறு, மக்களின் நலனையும் ஆராய்ந்தவாறு ஆயுதக் கிடங்கு பகுதிக்கு வந்து சேர்ந்தான்.

அரசர் வருவதை அறிந்த மகிழப் பேரரசின் படைத்தளபதி கவிநயனன், கண்களால் குறிப்புக்காட்டி, மன்னரை பார்வையால் வணங்கி அவனின் வருகையை யாரும் அறியா வண்ணம் தன்னுடைய பணியில் ஆழ்ந்தான்.

கவிநயனன் தளபதி மட்டுமன்று, மன்னனின் உற்றத் தோழனும் ஆவான்.

பயிற்சி களம் கடந்து சென்ற மேகோன் தனது புரவியிலிருந்து இறங்கி ஆயுதம் செய்யும் பகுதிக்கு நடந்து சென்றான்.

அவன் அங்கு செல்வதற்கு முன்பு கவிநயனின் மூலமாக தலைமை கொல்லருக்கு விடயம் சென்றிருந்தது.

(கொல்லன் – உலோகங்களை உருக்கி பொருட்களை செய்பவர்.)

கொல்லன் இடும்பன் மேகோன் நோக்கி வர, அவனது பார்வை அங்கு ஆயுதங்கள் பரிசோதனை செய்யும் கூடத்தில் நின்றிருந்த பெண்ணின் மீது படிந்தது.

மேகோன் அருகில் வந்துவிட்ட இடும்பன், பிற பணியாளர்கள் கவனம் பெறாத வகையில் சிரம் தாழ்த்தி வணங்கினார்.

“ஆயுதங்களின் அளவுகள் எவ்வளவு பிடித்தம் உள்ளன?” அவரின் வணக்கத்தை ஏற்று கேள்வி கேட்ட மேகோனின் பார்வை மட்டும் மாறவில்லை.

“தளபதியார் நாளை கணக்கெடுப்பதாகக் கூறியுள்ளார் அரசே” என்ற இடும்பன், “அவள் நன் மகள் மன்னா. ஆயுத உருவாக்கல் மற்றும் சோதனைக்கு பயிற்சி பெற்றிருக்கிறாள். தங்களுக்காக வடிவமைத்த கூர் வாளினை பரிசோதித்துக் கொண்டிருக்கிறாள்” என்று அவன் கேட்காததற்கும் பதில் வழங்கினார்.

“ஆயுதக் கிடங்கில் நம்பிக்கையானவர்கள் மத்தியில் புதிய உருவம் யாரென்று ஆராய்ந்தோம். நீர் உம் பணி காணும்” என்று இடும்பனை அனுப்பி வைத்த மேகோன் கால்கள் தானாக அவளை நோக்கிச் சென்றது.

அவள் மஞ்சள் வெண்மையான ஆடையில், நெற்றியில் கோபுர வடிவ பொட்டு அமர்ந்திருந்த முகத்தில் உலோகத் தூசி படிந்து, கூந்தல் பின்னியதோ இல்லையோ எனும் அளவிற்கு கலைந்திருக்க, அவளது பார்வை தன் முன் வைத்திருந்த இரும்புச் சிலையின் மீது நிலைக்க விட்டிருந்தாள்.

ஒரு நுண் கணத்தில் தனது கையிலிருந்த கூர் வாளை அனாயசமாக சுழற்றி வீசி செம்படிக சிலையின் தலையை தரை விழச் செய்திருந்தாள்.

அதனை கண்ட மேகோனின் புருவம் மெச்சுத்தலாய் உச்சி மேடு உயர்ந்தது.

என்னவென்று அவனே உணராது அவள்பால் பார்த்த கணம் அவனது நெஞ்சம் ஈர்க்கப்பட்டிருக்க, தற்போது அவள் வாள் சுழற்றிய முறையில் மொத்தமாக அவளில் லயித்துப் போனான்.

“சிறப்பு…”

தானாக அவன் கூறியிருக்க, திரும்பி பார்த்தவளின் பார்வையில் இருந்ததெல்லாம் ஆராயும் பாவனை.

மன்னனின் அடையாளம் தெரியாதவளுக்கு, அவன் ஒரு ஏழையை போல் தோன்றியிருக்கலாம் அல்லது படை வீரர்களில் பயிற்சி பெறும் ஒருவனாக எண்ணியிருக்கலாம்.

தலைக்கவசமோ சாம்ராஜ்ய வேடமோ இன்றி, ஒரு ஆய்வாளராக வந்திருந்தவனின் முகம் அவளுக்கு பிடிபடவில்லை. இதுவே முதல் முறை அவள் மன்னனை காண்பது.

மேகோன் அவளது ஆராயும் பார்வையிலும் மெல்ல கட்டியிழுக்கப்பட்டான். எதுவோ அவளிடம் தன்னை மொத்தமாக ஈர்க்கிறது என்பதை மட்டும் உணர்ந்தவன் மெதுவாக அவளிடம் சென்றான்.

அருகில் சென்றுவிட்டவனுக்கு என்ன பேசுவதென்று தெரியாத நிலையில்,

“அந்தக் கருவி நுட்பமானது போன்று தெரிகிறது. அம்பின் முனையில் நடுநிலையாக வைக்கப்படுமா?” எனக் கேட்டான். அவளின் கையிலிருந்த வாளினைச்சுட்டி.

(அம்பின் நுனியில் வாள் நிறுத்துவது, வாளின் தரத்தை சோதிக்கும் முறையாகும்.)

“இல்லை, இது வில்லின் முனையில் வைக்கப்பட மாட்டாது. இது காற்றின் வேகத்தை இரும்பின் எதிர்ப்பாக மாற்றும் உலோக வாள். எதிரியின் கணை நம்மைத் தாக்கும் முன், அதை திருப்பும் பணி இதற்கே. வீழ்வது வெறும் கணை இல்லை, அதன் பின்னால் இருக்கும் உடையோன்” என்றாள்.

(உடையோன் – உரிமையாளன்.)

அவனுக்கு தெரியாததா இது. விரியத் துடித்த இதழை பற்களால் கடித்து அடக்கினான்.

“உடையோனை உடைக்கும் கருவி செய்வதற்கு இவ்வளவு கவனம் தேவைப்படுமா?”

அவள் அவனைக் கவனிக்கத் தொடங்குகிறாள். பார்வை சற்று நொய்வாக மாறுகிறது.

“போரில் வெல்லும் கருவி ஒன்றுக்கு, அக்கருவி ஏந்தும் வீரனின் உயிரின் அமைதி ஒவ்வொரு பகுதியாகச் சேரும். அது வெறும் உலோகமில்லை. இது ஒரு உணர்வு.” அழுத்தமாகக் கூறினாள்.

மகிழ் மேகோன் மௌனமடைந்தான்.

அவளது குரலில் உணர்ச்சி இருந்தது. உணர்வு இருந்தது. ஓர் அழகு இருந்தது. அழகு அவள் முகத்தில் மட்டுமல்ல, அவள் மனதில்.

மேகோன் பல போர்க்களங்களில் போரிட்டிருக்கிறான். ஆனால் இதுபோல் கவனம் கொண்ட பார்வையை, கருவிக்குள் உயிர் ஏற்றும் உருவாக்கத்தைக் கண்டதில்லை.

அவனுக்குள் ஒரு வினா தோன்றியது.

‘இவளது உயிரில் ஏதோ ஒன்று மின்னுகிறது. அது என்ன? அது என்னை இழுக்கிறது.’

அவள் மீண்டும் தன் வேலையில் திரும்பினாள்.

மகிழ் மேகோன், அவளிடம் எதையுமே சொல்லாமல் சற்று நின்று நோட்டமிட்டான். கண்கள் சற்று சுழன்றது.

மாலைநேர சூரிய ஒளி அவளின் முகம் பட்டு விளையாடியது.

அந்த விளையாட்டு, அவனது உள்ளத்தில் புதிதாகக் கசிந்த உணர்வின் தடத்தை அவனுக்கு உணர்த்தியது.

இதயத்தை மெல்ல அழுத்திக் கொண்டான்.

‘ஒரு மன்னனாக யுத்த களத்தில் பல ஆக்ரோஷப் பார்வையை பார்த்திருக்கிறேன். ஆனால் அவளது நிமிர்ந்த பார்வையில் இருந்தது ஒரு சபைபோன்ற அமைதி. அங்கே, நான் ஒரு மன்னன் அல்ல. ஒரு மனம் கொண்ட மனிதன். அந்த அமைதியை நான் மீண்டும் காணவேண்டும். அதற்காக இந்த நேசம் ஆரம்பிக்கிறது.’

அகத்தின் குரல் அவனது நேசம் கொண்ட நெஞ்சத்தை சில்லென்று பனியிலிட்டது போன்று நனைத்தது.

கண்கள் வழி மென்னகை காட்டியவன்,

“தங்களின் நாமம் என்னவோ?” எனக் கேட்டிருந்தான்.

“மூன்றாம் மனிதர்களிடம் சுயவிவரம் கூறுவதில்லை” என்றவள், சட்டென்று அவனை நோக்கி தன் கையிலிருந்த கூர்வாளை எறிந்திருந்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
26
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்