Loading

அத்தியாயம் 41

(யாவும் கற்பனை. கற்பனை என்று ஆன பின்பு கஞ்சத்தனம் எதற்கு?)

நிகழில் இருக்கும் தேவித் மகிழோன் மற்றும் முற்காலம் சென்ற நைருதியோடு, அவர்களின் முன்ஜென்ம தேடலான மகிழ் மேகோன் மற்றும் இளவேனில் மேகநதியின் வாழ்வை அறிந்திட மேமகிழ் தேசம் நோக்கி நாமும் பயணித்திடுவோம்.

கிபி 815.
மேமகிழ தேசம்.
வேந்தன் மகிழ் மேகோனின் ஆட்சிக்காலம்.

மகிழ் மேகோன். பத்தொன்பது வயதிலேயே அரியணை ஏறிய அரிமா.

மேமகிழ தேசம் தீபகற்பம் போல் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்ட கடலோரப் பேரரசு. வடக்கில் மிகப்பெரும் மலை பரப்பின் உச்சியில் வீற்றிருக்கிறது மகிழ தேசத்தின் அரசாட்சி அரண்மனை. பிரதேசத்தின் பொதுவான அரச குடும்பம் வாழும் மண்டலம். மண்டலத்தின் குடியியல் பெயர் மகிழர்கள்.

(குடியியல் பெயர் – தற்போது சாதி அடிப்படையில் மக்களை பிரிப்பதைப் போன்று, மக்கள் வாழும் விதத்தை வைத்து வம்சத்தின் மரபு பெயர்களால் குறிப்பிடுவது. [எ-கா ; சேர, சோழ, பாண்டியர்கள்.])

(மண்டலம் – பெரும் மாநிலத்தொடர். பல வட்டங்களை கொண்டது.)

இம்மண்டலத்தின் பெயர் மேகப் பொதியம். இங்கிருக்கும் அரண்மனை விண்ணில் ஊர்ந்து செல்லும் மேகத்தை தொட்டுக்கொண்டு எழில் மிகுந்து காட்சியளிக்கும்.

பொதியத்தின் மையத்தில் உருவாகும் பொதி அருவி, நதியாக உருவெடுத்து பல கிளை நதிகளாக பிரிந்து மேமகிழப் பேரரசு முழுவதும், நாட்டிற்கு வளம் சேர்க்க பாய்ந்து ஓடுகிறது.

பொதியத்தின் இரு பக்க கரையோரம் உள்ள குறுநில ஆட்சிப்பகுதிகள்…

கானல் வனம். மிக அடர்ந்த வனப்பகுதி. இங்கு பொதியத்தின் முதல் கிளை ஆறான துளசி ஆறு ஓடுகிறது. அதன் நீர் மருத்துவ நன்மைகள் கொண்டதாகக் கருதப்படுகிறது. மகிழ தேசத்தின் மக்கள் அனைவரும் தீர்க்க முடியாத நோய்களை இங்கு வந்து தீர்த்துக்கொள்வர். அரச குடும்பத்திற்கே வைத்தியம் செய்ய இங்கிருந்து தான் மூலிகை மருந்துகள் கொண்டு செல்லப்படும்.

இதுவரை தேசத்திற்காக பல போர்களை சமாளித்த வீரர்கள் அனைவரும் இங்கு தான் காயங்களை தீர்க்க வருகை புரிவர். அவர்களுக்கென பிரத்யேக வைத்திய மண்டபம் இங்குள்ளது.

கானல் வனத்திற்கு எதிரே, துளசி ஆற்றின் எதிர் கரையில் அமைந்திருக்கும் குன்றின் மீதுள்ள சிற்றூர் ஆதி சுந்தரபுரம். மக்கள் வாழும் முக்கிய குடியிருப்பு. ஆதி சுந்தரபுரம் தான் மகிழ வம்சத்தின் முதல் குடி பரப்பாகும். இங்கிருந்து தான் அவர்களின் பேரரசு பரவத் தொடங்கியது.

கற்சிலை வடிவத்தில் மலைக்குகைக்குள் மகிழ் மேகோனின் குல தெய்வமான தேவமகிழோன் வீற்றிருக்கும் புண்ணிய ஸ்தலம். தேவமகிழோன் மேகோன் வம்சத்தின் ஆதி குடியாகும்.

கிபி 817லிருந்து இருநூற்றி இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய பனிரெண்டு வருடங்கள்
தேவமகிழோன் ஆட்சிக்காலம். அதுதான் மகிழ வம்சத்தின் முதல் ஆட்சிகாலமுமாகும்.

தேவமகிழோன் பிறப்பு : கிபி 569.

ஆட்சிகாலம் : கிபி 584 முதல் கிபி 596 வரை.

இறப்பு : கிபி 596.

அவர் இறக்கும் போது அவருக்கு வயது இருபத்தியேழு.

வெல்லவே முடியாத பெரும் போரில் ஒற்றை ஆளாக தனித்து நின்று தன்னுடைய குறுநில ஆட்சிப்பகுதியை பல பேரரசர்களிடமிருந்து வென்று அவர்களின் பகுதிகளை கைப்பற்றி… தனது குறுநில ஆட்சிப்பகுதியை பெரும் பேரரசாக உருவாக்கியிருந்தார். அதன் பலனாக வழிவழியாக அரச வம்சத்தின் குல கடவுளாக வணங்கப்பெற்றவராகினார்.

அவரின் மறுபிறப்பு மகிழ் மேகோன். முதல் மறு ஜனனம் இரு நூறு வருடங்களுக்கு பின் நிகழ்ந்தது எனில், அடுத்த ஜனனம் பனிரெண்டாயிரம் வருடங்களுக்கு பின் உண்டானது. அவனே தேவித் மகிழோன்.

தேவ மகிழோன் தன்னுடைய சிறு ஆட்சி பரப்பை மிகக்குறுகிய ஆண்டுகளில் பல போர்களை வென்று பெரும் பேரரசாக மாற்றியிருந்தாலும், போரினால் ஏற்படும் அதிக உயிரிழப்பை ஏற்க முடியாது வதை கொண்டார்.

போரில் உயிர் நீக்கும் நபரின் வாழ்வியல் அவனோடு மட்டுமே முடிவதில்லையே. அவனைத் தொட்டு அவனது குடும்பம், குடும்பத்தின் தொடராக சிறு நிலப்பரப்பு, அதிலிருந்து நாடென பாதிப்புகள் பரவி… அதிக வேதனையை கொடுக்க, ‘போர்களை தடுப்பதற்காகவாவது, மக்களின் நலன் பேணுவதற்காக எதிர்காலத்தை கணிக்கும் வித்தை தெரிந்தால் நன்று’ என எண்ணினார்.

நடக்கவிருக்கும் நிகழ்வு நடக்கும் முன்பே தெரிந்துகொண்டால், நடப்பதற்கு முன்பே தடுத்திடலாம் என்ற எண்ணம்.

அதற்காக பல குறிப்புகளை, அப்போது இறையுடன் இணைந்து இயங்கிய அறிவியல் கோட்பாடுகளை கற்கத் துவங்கினார். முழுதாய் கற்று வெளிவரும் முன் எதிரிநாட்டு சூழ்ச்சியால் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் நீத்திருந்தார். உயிர் துறக்கும் வேலையிலும் பல எதிரிகளை கொன்று குவித்து, தேசத்தை காத்த பின்னரே தன் ஆவி பிரிந்திருந்தார்.

வென்ற கணம் புற முதுகிட்டு ஓடிய எதிரி நாட்டு மன்னன், தேவமகிழோன் யுத்த களத்தில் அடிபட்டு கிடந்த வீரர்களை ஆராய்ந்து கொண்டிருக்கையில், சென்ற தூரத்திலிருந்து திரும்பி முதுகுக்காட்டி நின்றிருந்த தேவமகிழோனை நோக்கி கூர்முனை தாங்கிய ஈட்டியை எய்திட, இறுதி நொடியில் ஈட்டியின் வருகை அறிந்து, ஈட்டி தனது முதுகில் பாயுமுன் திரும்பி நின்று நெஞ்சத்தில் தாங்கியிருந்தார்.

அப்போரில் நாடு மகிழ வம்சத்தின் கை சேர்ந்திருந்தாலும், மாமன்னன் தேவமகிழோன் இறந்திருந்தார்.

எதிர்காலத்தை கணிக்க வேண்டுமென்ற அவரின் எண்ணம் ஈடேறாது, அதன் மீது கொண்ட அதீத ஆசையில் இருநூறு ஆண்டுகளுக்கு பின்னர் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர் குடியிலேயே மகிழ் மேகோனாக மீண்டும் பிறப்பெடுத்திருந்தார்.

அப்பிறப்பே மகிழ் மேகோன்.

பிறப்பு : கிபி 794. (தேவ மகிழோன் இறப்பிலிருந்து 223 ஆண்டுகளுக்குப் பின்.)

தேசம் மற்றும் மக்கள் நலன் வேண்டி கொண்ட தீரா ஆசையால் மீண்டும் மேகோனாக ஜனித்த தேவமகிழோன், தனது பதினேழு வயதில் தன்னுடைய மூதாதையர்கள் பாதுகாத்து வைத்த, தேவமகிழோனின் காலம் கணிக்கும் குறிப்புகள் அடங்கிய பட்டயத்தின் வாயிலாக தன்னுடைய பிறப்பின் ரகசியம் அறிந்து, அதனை நோக்கி தனது கற்றலை விரிவுபடுத்தினான்.

முதன் முதலில் எதிர்காலம் கணிக்கும் விதை தேவமகிழோனால் விதைக்கப்பட்டிருந்தது.

இரண்டு வருடங்களில் கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். இறை வழிபாட்டுடன் கூடிய இயற்கை அறிவியல் மற்ற கலைகள் போன்று எளிதானதாக இல்லை. அவ்வாற்றலை முழுதாய் கற்று முடிக்கும் முன், தனது பத்தொன்பதாவது வயதில் ஏற்பட்ட பேரிழப்பு ஒன்றை தன்னுடைய வைத்திய ஆற்றலால் சீர் செய்ததன் பலனாக மேமகிழ பேரரசின் மாமன்னன் ஆகினான் மகிழ் மேகோன்.

அனைத்து வளங்களிலும் செழித்து திகழும் மகிழ தேசத்தை போரால் வெல்ல முடியாது என்பதால் எதிரிகள் புதுவித நோயினை பரவச் செய்து அழிக்க முற்பட்டனர். இதுதான் நோயின் காரணமென்று அறியும் முன்னர் மக்கள் கொத்து கொத்தாக இறந்திட, தேசம் முழுவதும் கதறல் எதிரொலித்தது.

நோயினை பரவச் செய்த எதிரிகளிடமே நோய்க்கான மாற்று மருந்து இல்லை.

எல்லா வளங்களும் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில், இறப்புகளை தவிர்க்க முடியாது வேடிக்கை பார்க்குமிடத்தில் வலி சுமந்து நின்றிருந்தார் மகிழ் மேகோனின் தந்தை மகிழ சுந்தரனார்.

மக்களின் அவலை நிலை மற்றும் அதன் காரணமாக வருந்தி நிற்கும் தந்தையின் முகத்தை சகியாத மேகோன், நோய் முறிக்கும் மருந்தை விரைந்து கண்டுபிடித்து நாட்டையும், மக்களையும் காப்பாற்றினான்.

எதிரி நாட்டு சூழ்ச்சி என்று அறிந்த போதும், அந்நாட்டில் வாழ்வதும் நம் உறவுகள் தானே என்று பழிவாங்கும் போரினை மறுத்து, “இனி தம்மை காக்கும் முயற்சியை மட்டும் மேற்கொள்வோம் தந்தையே” என அப்பனுக்கே பாடம் கூறினான் மகிழ் மேகோன்.

அதில் மகன் மீது, ‘அவன் தன்னைவிட சிறப்பாக ஆட்சி புரிவான்’ என அதீத நம்பிக்கை பிறக்க… அச்சிறு வயதிலேயே மகனை மன்னராக்கியிருந்தார் சுந்தரனார்.

“இன்னும் யான் கற்க வேண்டிய கலைகள் அதீதம் உள்ளன தந்தையே! ஆண்டுகள் பல சென்ற பின்னர்… உரிய வயதை எட்டியதும் முடிசூடிக் கொள்கிறேன்” என்று முதலில் மறுத்த மேகோன்,

“புதிய மாற்றங்கள் புதிய மன்னனிடமிருந்து தான் உருவெடுக்கும். இனி யாம் வழிகாட்டும் இடத்தில் இருப்பதே நம் தேசத்திற்கு சிறப்பாகும். திறமைக்கு வழிவிட்டு பின் நிற்பதே அரசனுக்கு மதுரமாகும்” என்றார் சுந்தரனார்.

தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்காக செங்கோல் ஏந்தினாலும், யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கியது மகிழ் மேகோனின் ஆட்சி.

அண்டை நாட்டு எதிரி படைகள், மேகோன் எனும் பெயருக்கே அஞ்சி நடுங்கினர். தூர தேசத்து சீன மன்னர்கள் கூட மேமகிழ தேசத்தின் அண்டை நாடுகளை வீழ்த்தி தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போதும், மகிழ பேரரசின் எல்லையை கூட அவர்களால் தொட்டுவிட முடியவில்லை.

அவர்களுக்கு மட்டுமல்ல உலகின் பல பெரும் ராஜ்ஜியங்களுக்கும் மகிழ தேசத்தின் மீது, பேரரசின் உள்ளிருக்கும் குறுநில மன்னர்களின் ஒற்றுமையின் மீது, தேசத்தின் இயற்கை வளங்களின் மீது, கலைகளின் மீது, மன்னனின் அறிவாற்றல் மீது, மக்களின் உழைப்பின் மீது… இப்படி பல மீதுக்களின் மீது கண் இருந்தன.

அவற்றில் முக்கியம் வாய்ந்தது மருத்துவ ஆற்றல். மகிழ தேசத்தின் வைத்திய வளர்ச்சி. அதனினும் சிறப்பு பெற்றது கல்வி வளர்ச்சி. கல்வி தான் ஒரு தேசத்தின் வளர்ச்சியை மேலும் உயர்த்தும் எனும் அறிவை தான் பெற்ற பல கலைகளிலிருந்து அறிந்துகொண்ட மேகோன், தான் பெற்ற கலைகள் அனைத்தையும் தன்னுடைய குடிகளும் கற்க வழிவகை செய்தான்.

அத்தகைய கல்வி வளர்ச்சி தங்கள் ராஜ்ஜியங்களுக்கு ஆபத்தாகிவிடுமோ என்று அஞ்சிய பல அரசர்கள் மேகோனை அழிக்க பல வழிகளில் முயன்று தோற்றுப் போயினர்.

அடைந்த தோல்விகள் யாவும் மேகோன் மீதும், மேமகிழ தேசத்தின் மீதும் இன்னும் இன்னும் வஞ்சத்தை அதிகரிக்கச் செய்திட, அழிக்கும் மார்க்கமின்றி, தக்க சமயத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினர்.

அந்த காத்திருப்பின் பலனாய், வல்லவனை வென்றிட, நல்லவனின் கூட்டத்திலேயான நரி ஒன்று கயவர்களின் கரம் சேர்ந்திருந்தது.

கயவர்கள் ஒன்றுகூடி நல்லவனை வென்றுவிட முடியுமென்றால் சமதர்ம நியதி பொய்த்துப் போகாதா?

ஆயிரம் ஓநாய்க்கள் ஒன்று கூடினாலும் ஒற்றை அரிமாவின் முன் நிமிர்ந்து நின்றிட முடியுமா என்ன?

மகிழ பேரரசில் ஆதி சுந்தரபுரத்திற்கு கீழாக அமைந்துள்ள மயில்கண் மற்றும் பல குறுநிலங்களை தாண்டி உள்ள சிவஞ்சயம், அங்கு ஓடும் பொதியத்தின் மற்றொரு கிளை நதியான அவனி நதியின் சிறு ஓடையான நன்னீர் மடை முடிவடையும் தேசத்தின் இறுதி எல்லைப்பகுதியான வனபதம் வரை வேங்கையவன் பார்வை ஆழப் பதிந்திருந்தது.

மயில்கண் பாதை. பேரரசின் மேற்கிலிருந்து கிழக்கு வரை செல்லும் வாணிப பாதையாகும். மற்ற தேசத்து மக்கள் வியாபாரத்திற்கு வர வேண்டுமென்றால் இதன் வழி வரவேண்டும்.

வியாபாரம் நோக்கில் இவ்வழியாக எதிரிகளை அனுப்பிட முயன்றும் முடியாது போனது.

அவனி நதி தேசத்தின் எல்லையை தெற்கில் வகுக்கும் புனித நதி. இந்த நதி இரண்டு கிளையாக பிரிந்து ஒன்று கடலிலும் மற்றொன்று அண்டை நிலப்பரப்பான மறைமலை தேசத்தின் வழியாக பல பெரும் ராஜ்ஜியங்களுக்கு நன்னீர் தேவைக்காக பாய்கிறது.

பல தேசங்களுக்கு தண்ணீரின் ஆதாரமே மேமகிழ தேசத்தின் பொதியம் நதி தான்.

மேகோனை தோற்கடிக்க முயன்று முயன்று பார்த்தவர்கள், நதி மூலமாக படையெடுக்க முயல… கயவர்களின் திட்டம் வடிவம் கொள்ளும் முன்பே மேகோன் நன்னீர் மடையை அணை கட்டி தடுத்து முறியடித்திருந்தான்.

எந்த வகையிலும் மனித
சக்தியாலும், இயற்கை சக்தியாலும் அழிக்க முடியாத அளவிற்கு தன்னுடைய தேசத்திற்கு அரணாய் நின்றிருந்தான் மகிழ் மேகோன்.

பிறரால் நெருங்கக்கூட முடியாத மேகோனின் வீழ்ச்சி அவனாலே சாத்தியமானது. அவனே அவனுக்கு அழிவாகியிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்