அத்தியாயம் 40
பவளத்துடன் வந்து சேர்ந்த நைருதியிடம் எதுவும் பேசாது, அவளை உண்ண வைத்த ராஜகுரு…
“அசௌகரியமாக இருக்கின்றதா?” எனக் கேட்டார்.
அவர் எதனை கேட்கிறார் என்று புரியாத நைருதி, “எதற்கு?” எனக் கேட்டாள்.
“உடுத்தியிருக்கும் இவ்வடிவ வஸ்திரம் உமக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது மகளே” என்றார்.
“குரங்குக்கு வாக்கப்பட்டால் மரத்துக்கு மரம் தாவிதான் ஆகணும். எனக்கும் இப்போ அதே வழிதான். வேறென்ன பண்ண முடியும்?” என்றவள், “இன்னொரு துணியிருந்தா கொடுங்க, போர்த்திக் கொள்கிறேன்” என்றாள்.
“அதே வேகம் நிறைந்த பேச்சு” என்று சிரித்த ராஜகுரு, “அவசரத்திற்கு இங்கு இவ்வாடை தான் கிடைத்தது. அரண்மனை சென்றுவிட்டால் துகில் வடிவமைப்பாளர் உம் விருப்பப்படி நெய்து தருவார்” என்றார்.
“மிக்க மகிழ்ச்சி” என்று அனைத்து பற்களையும் காட்டிக்கூறிய நைருதி, “இன்னும் ஏன் இங்கிருக்கின்றோம்?” எனக் கேட்டாள்.
“சிறிது நேரத்தில் புறப்படுவோம்” என்ற ராஜகுரு, “உம் கதை உமக்கு அறிய வேண்டாமா?” என்றார்.
“உங்க இராணி மாதிரியே நான் இருப்பதால் என்னை நாடு கடத்தியிருக்கீங்க… நோ… நோ… காலம் கடத்தியிருக்கீங்க. உருவம் ஒரே மாதிரி இருக்குங்கிறதுக்காக நான் உங்க ராஜாவின் மனைவியாகிட முடியாது” என்றாள்.
ராஜகுரு மென்மையாக சிரித்தார்.
“உமக்கு நீள் நோக்கெழுச்சி வழி யாவற்றையும் உணர்த்த முயன்றோம். பலனில்லை. ஆதலால் எம் வழி உம் கதையை நீ அறிய வேண்டும் என்பது காலத்தின் நியதியாகும்” என்றார்.
(நீள் நோக்கெழுச்சி – கனவு.)
“நீள் நோக்கெழுச்சி அப்படின்னா?” புரியாது வினவினாள். ஒரு சொற்றொடரில் முக்கிய வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை என்றால் அவ்வாக்கியத்தின் பொருள் எப்படி விளங்கும்?
“ட்ரீம்” என்று அவர் சொல்ல, அவளிடம் ஆச்சரியம்.
“உங்களுக்கு இங்கிலிஷ் தெரியுமா? ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்ததா?” என்று விழிகள் விரித்து வினவினாள்.
“இல்லை” என்ற ராஜகுரு, “எதிர்காலத்தில் ஜெர்மன் என்று அழைக்கப்படும் நாடு இக்காலக்கட்டத்தில் அதன் பழங்குடிகளின் பெயர்களால் அழைக்கப்பட்டனர். அவர்கள் பேசியது ஆங்கிலம் இல்லை. அவர்களில் ஆங்கிள்ஸ், சாக்சன்ஸ் மற்றும் ஜூட்ஸ் என்ற ஜெர்மானிய பழங்குடிகள் எதிர்காலத்தில் இங்கிலாந்து என அழைக்கப்படும் நிலப்பரப்பிற்கு குடி பெயர்ந்தனர். அவர்கள் சென்ற பின்னர் அப்பரப்பு ஆங்கிள்களின் நிலம் என்றழைப்பட்டது. அவர்களின் மொழி பிரெஞ்சு, லத்தீன், டச்சு ஆகிய மொழிகளிலிருந்து சொற்களை கடன் பெற்று பல மாறுதல்களில் பல்லாயிரம் வருடங்களில் மாற்றம் பெற்று முழுமையாக தனித்தன்மையை இழந்து ஆங்கிலம் உருவானது. எதிர்காலத்தில் தமிழிலிருந்து பல கிளை மொழிகளாக கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பிறப்பெடுத்தது போன்று, எதிர்கால ஜெர்மன் பேரரசின் பண்டைய கால பழங்குடி மொழியிலிருந்து கிளை மொழியாகத் தோன்றியது தான் நீங்கள் பயன்படுத்தும் ஆங்கிலம். பண்டைய ஆங்கிலம் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியிருந்தாலும், அப்போது அம்மொழி ஆங்கிலமென்று குறிப்பிடப்படவில்லை. ஆங்கிலம் தங்களின் தாய் மொழியென சொல்லிக்கொள்ளும் பெரும் தேசங்களில் பேசப்படும் ஆங்கிலேயர்களால் கூட பண்டைய ஆங்கிலத்தை வாசிக்கவே முடியாது. பண்டைய மொழி ஆங்கிலமுமில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அதிலிருந்து பிறந்த வேறு மொழி. அவர்கள் பயன்படுத்துவதெல்லாம் எதிர்காலத்திலிருந்து கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள் முன் பிறந்தவையே” என்றார்.
“ஹோ…” என்று இதழ் குவித்து விழிகளை உருட்டிய நைருதி, “இப்போ நீங்க கொடுத்த விளக்கமெல்லாம் எதிர்காலத்தில் வந்து சொல்லிடாதீங்க… அவ்ளோதான் உலகப்போர் வந்தாலும் வந்திடும். இப்போ தான் கொஞ்ச நாளுக்கு முன்ன தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்னு சொல்லி ஒரு பெரிய நடிகர் சர்ச்சையில் மாட்டிக்கிட்டார். வெறும் ஒரு மாநில மொழிக்கே இம்புட்டு அக்கப்போர் அப்படின்னா, ஆங்கிலம் தான் இப்போ பல நாடுகளை ஆட்சி செய்றதே… அதோட பிறப்பின் ரகசியம் தெரிஞ்சா உலகப்போர் கன்பார்ம்” என்று சிரித்தாள்.
அவள் சிரிப்பதையே வாஞ்சையாகப் பார்த்திருந்த ராஜகுருவின் முகம் கனிவை சுமந்தது.
“தமிழ் வெறும் மாநில மொழியல்ல… மாபெரும் கண்டத்தின் ஆதி மொழி. மனிதன் வாய் மொழியாக பேசிய முதல் மூத்த மொழி. தமிழ் பிறந்த காலத்திலிருந்து ஒருவன் வந்து சொன்னாலும் எதிர்காலம் நம்பாது, ஏற்காது” என்றார்.
“நீங்க சொல்றதும் சரிதான்” என்றவள், “எனக்கொரு டவுட்?” என்றாள்.
“டவுட் என்றால் சந்தேகம் தானே?” என்ற ராஜகுரு, “சரியாகக் கூறினேனா?” எனக்கேட்டு, “என்ன சந்தேகம்?” என்றார்.
“இப்போ நீங்க சொன்ன விளக்கமெல்லாம் எதிர்காலத்தில் வாழும் எங்களுக்கே தெரியாதது. உங்களுக்கு எப்படி? அதிலும், எதிர்காலத்தில் சிறு குறிப்பாகக்கூட இல்லாதவை இவை. உங்களுக்கு உங்களின் தேசம், இதைச்சுறியுள்ள தேசங்கள் மட்டும் தானே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்புறம் எப்படி? இக்காலத்தில் எதிர்கால நாடுகள், மொழிகளென எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்?” எனக் கேட்டாள்.
“யாவும் உம் பதி மேகோனால்” என்றார்.
சட்டென்று மூண்ட கோபத்தை அடக்கும் வழி தெரியாது,
“என் புருஷன் பேரு தேவித் மகிழோன்” என்றாள். கண்களில் கனல் காட்டி.
“அந்நாமத்தின் காரணமும் யாம் அறிவோம்” என்றவர் அதரம் நீண்டு விரிந்திருந்தது.
“மேகோன்… இப்பெரும் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் மட்டுமல்ல… தசாவதானி. கலைகள் முற்றிலும் வல்லமை பெற்றவர். எதிர்காலத்தை முன்பே அறியும் வித்தகர். எதிர்காலத்தில் இவை இப்படித்தான் இருக்குமென்று சிந்தை வழி அறிவாற்றலால் நிகழலில் கணிப்பவர். பிற்காலம் நோக்கி பயணம் செல்லக்கூடியவர். அப்படி எதிர்காலப்பயணம் மேற்கொண்டால், என்னவெல்லாம் அறிந்திருக்க வேண்டுமென்று பிற்கால சூழல்கள் யாவற்றையும் அறிந்து கற்று தேர்ந்தவர். அண்டை தேசங்கள் மட்டுமே உறவுகளால், போர்களால், பக்தி வழிபாட்டால், நிலப்பரப்பின் விஸ்திரத்தால் யாம் அறிந்திருந்தாலும், எதிர்காலம் கொண்டு நம் தேசத்திற்கு அப்பால் பல தூர தேசங்கள் உள்ளன, அவை எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்குமென்று, உங்கள் வருகையை இங்கு கணித்த அன்று தெரிந்து கொண்டவை. உமக்காக. அரசருக்காக” என்றார்.
“போதும் டாபிக் மாறுது. எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க சொல்லுங்க” என்றாள்.
“உம் மூலம் நம் மொழியின் பிறப்பை எதிர்காலத்தில் வலுப்பெறச் செய்யலாமென்று நினைத்துக் கூறினேன். இஃது உமக்கு பேச்சு மாற்றமாகத் தெரிகிறது. இதுதான் நம் மொழிக்கு வந்த சாபம். இங்கு தமிழ், தமிழென மார்தட்டிக்கொள்ளும் எவனும் தமிழின் உண்மைத் தன்மையை அறிய நினைத்ததுமில்லை, மொழிக்கென உயிராய் போராடியதுமில்லை. எதிர்காலத்தில் யாவும் அரசியல் தானே! அரசியலுக்காக மட்டுமே தமிழின் பெருமை இன்னும் உயிர் வாழ்கிறது” என்றார். சினந்துவிட்ட முகத்தோடு.
“ஐயா ராஜகுருவே மன்னித்துவிடுங்கள். தற்போது நான் இங்கு வந்த காரணம் மொழிக்காக அல்ல… அதற்காக மட்டுமே பேச்சு மாற்றம் வேண்டாமென்று கூறினேன். வந்த காரணம் அறிந்து, அதனை செய்து முடித்துவிட்டால் நான் என் காலம் சென்றுவிடலாம் எனும் எண்ணத்தில் சொல்லிவிட்டேன். அதற்கு இத்தனை சினம் அவசியமா?” என்று ஒரே மூச்சாக பேசுவதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது.
நைருதி இடையில் கைகள் குற்றி உதடு குவித்து காற்றினை வெளியேற்றயதில் அவருக்கும் அவளின் நிலை புரிந்தது. மெதுவாக புன்னகைத்தார்.
“ஹப்பா சிரிச்சிட்டிங்களா” என்றவள், “உங்களுக்குத்தான் நாங்க பேசுற தமிழ் தெரியுமே! நாம சாதாரணமா பேசுவோமே! எனக்கு ஒவ்வொரு வார்த்தையும் முழுதாக நாக்கை சுழற்றி உச்சரிப்பதற்குள் கன்னம் சுளுக்கிக்கொள்கிறது” என்றாள்.
“எமக்கு நன் பதங்கள் தான் எளிமையானவை. பதங்களை விளங்கிக்கொள்ளும் நிலையில் அவரவர் வழி உரையாடுவோம்” என்றார்.
“ம்ம்” என்றவள், “தமிழ் மட்டும்தான் பிறப்பிலிருந்து இன்னமும் மாறாமல் இருக்கிறது அல்லவா?” எனக் கேட்டாள்.
அவர் தற்போது இக்கேள்வி எதற்கு எனும் விதமாக புருவம் உயர்த்திட,
“ஆரம்பத்தில் புரிந்துகொள்ள கடினமாக இருந்தாலும், இப்போ ரொம்பவே சுலபமா இருக்கே” என்றாள்.
“அதுதான் நம் மொழியின் சிறப்பு. மனிதன் தோன்றிய காலம் பேச்சின்றி பயன்படுத்திய செய்கைக்கும் எழுத்து வடிவம் கொண்ட ஒரே மொழி” என்றார்.
“அப்போ தமிழுக்கு முன்ன முதல் மொழி சமிக்கை மொழின்னு சொல்லுங்க” என்றாள்.
“வேண்டாமென்று சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் அரசியல் பேசுகிறாய்” என்றார் ராஜகுரு. அதில் அசடு வழிந்தவள், திருதிருத்தாள்.
முதலிலிருந்த ஒட்டாநிலை நைருதியிடம் தற்போதில்லை. சிறு உரையாடல், இருவருக்கும் இருக்கும் கால வேறுபாடின்றி ஒன்றாக இணைக்கும் பொதுவான விடயம் ஒன்றின் பேச்சு, இருவருக்குமிடையேயான இடைவெளியை குறைத்திருந்தது.
நைருதி அவளைப்பற்றி அறியும் முன்னர், தான் கூறும் உண்மை நிகழ்வுகளை எவ்வித தடையுமின்றி அவள் நம்ப வேண்டும், அதற்கு அவளுக்கு அவரிடம் இணக்கமான நிலை உருவாக வேண்டும். அதற்காகவே முன் கதை கூறுவதற்கு முன், அவளிடம் தமிழை வைத்து சகஜ நிலையை உண்டாக்கினார்.
“இங்கிருந்து சில ஓரைகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். பயணத்தை தொடர்ந்தவாறு, நின் வருகைக்கான, இனி வர இருப்பவர்களின் வருகைக்கான காரணத்தைக் கூறுகிறோம்” என்றார்.
ராஜகுருவின் பேச்சு சில வருடங்களுக்கு முன்னோக்கிச் செல்ல… தேவித்தும் தன்னுடைய பிறப்பின் ரகசியத்தை தெரிந்துகொள்ளத் துவங்கினான்.
ஊதா நிற ஒளிக்கதிர்கள் சீராக ஒளிர, பையின் அருகில் சென்ற தேவித் அதனை என்னவென்று தொட்டு உணரும் முன்பே தரையில் மயங்கி விழுந்திருந்தான்.
அடுத்த கணம் ஒளிக்கதிர்கள் காற்று சுழல் போல் சுழன்று வீசி, தன்னுடைய ஆக்ரோஷத்தை மெல்ல குறைத்து ஒரு நேர்க்கோடாக தேய்ந்து தேவித்தின் நெற்றியில் பதிய, கண்கள் திறந்தான் தேவித் மகிழ் மேகோன்.
என்னவானது என்று நெற்றியை அழுத்தி பிடித்து அறியும் முன்,
“உன் வரலாறு நீ அறிய நீயே எழுதி வைத்த சுயசரிதை… வரலாறு படைக்கும் உன் சரித்திரம்.” அசரீரியாய் ஒலித்த குரலில் குழம்பிய தேவித், அத்தோல் பையினை கையில் எடுத்தான்.
சட்டென்று உடலின் மின்னல் பாய்ந்த உணர்வு. நரம்புகள் முறுக்கெழுந்து சீரான மாயம்.
“இது புத்தகமா?” கேட்ட அசரீரியின் ஒலி வைத்து தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.
அதனை எப்படி திறப்பதென்ற குழப்பம் இப்போதும். ஆனால் முன்பு போன்று அதனை சாதரணமாக தூக்கிப்போட்டு அடுத்த வேலையை பார்க்க அவன் மனமே தடை விதித்தது.
கேட்ட அசரிரீயில் நம்பிக்கை இல்லை என்றாலும், அவன் காதுகளில் விழுந்த ஓசையை நம்பினான்.
“உன் சுயசரிதை” எனும் வார்த்தைகள் அவனை அப்பையினை மேலும் ஆராய உந்தியது.
வெறும் தோலாக மட்டும் தெரிந்த பையின் மேற்புறம் வலது உள்ளங்கையின் படமும் அதன் மையத்தில் சிறு இதயமும் தெரிந்தது.
அவனவள் அவன் சரிதம் அறியும்போது அவனும் அவன் கதை அறிய வேண்டுமென்பதே காலத்தின் கட்டளை. இங்கு அதுவே நிகழ்ந்தது.
நைருதி ராஜகுருவின் வாய் வழியாக தங்களின் முன்கதையை கேட்டுக் கொண்டிருக்க, இங்கு அதன் பலனால் தேவித்துக்கும் தன்கதை தெரிய மார்க்கம் உண்டானது.
நேசம் இரு உள்ளங்களின் உணர்வுகளால் பிணைந்தது என்பதால், இருவரின் ஒரு செயலால் அவர்களின் வாழ்க்கை அறிய பாதை பிறந்தது.
இதயத்தை கண்டதும் தேவித்திற்கு மனைவியின் மதி முகம் அகத்தில் தோன்றிட, இதயத்தை விரல் கொண்டு தீண்டினான்.
காதலாய் அவன் ஸ்பரிசம் பட்டதும் இதயம் ஊதா நிறத்தில் ஒளிர்ந்ததோடு… அதற்கு மேல் ஒவ்வொரு எழுத்துக்களும் தண்ணீர் எழுத்துக்களாய் ஈரம் படர்ந்தது.
முதல் பாகம் முடிந்தது.
மேமகிழ் தேசத்தின் மகிழப் பேரரசு நோக்கிய பயணம் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாய்… திங்கள் முதல்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
34
+1
3
+1
2