Loading

அத்தியாயம் 39

என்ன முயற்சிகள் செய்தும் தேவித்தால் காலத்தின் சக்கரத்தை சுழற்றிட முடியவில்லை.

முடிந்தவரை போராடுவோம் என்ற எண்ணம் வலுவிழக்கச் செய்யுமென்று, முடியாவிட்டாலும் தன்னுடைய நதியை சென்றடைய வேண்டும் எண்ணத்தை மனதில் நிறுத்தி வலுபெற்றவன் மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.

தேவித் சிறிது ஓய்வெடுக்கிறேன் என்று சொல்ல, வீரட் வெளியேறியிருந்தான். ஆனால் தேவித்திற்கு உறக்கம் வரவில்லை.

மாறாக,

“சீக்கிரம் வா மாமா!” என்ற நதியின் குரல் நெஞ்சில் அதிர்வை உண்டாக்கிக் கொண்டே இருக்க, படுத்தவன் துயில் கொள்ளாது எழுந்துவிட்டான்.

கடந்த காலம் நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் மார்க்கத்தை கண்டறியும் முன்பு நைருதியிடம் தொடர்புகொள்ளும் வழியை கண்டறிய வேண்டுமென்று அதில் மூழ்கினான்.

“சிறிய மாற்றம் செய்தால் போதும் நந்தியை தொடர்பு கொண்டிடலாம்” என தேவித் சொல்லிய போதும், அந்த சிறிய மாற்றத்தை அத்தனை எளிதாக செயல்படுத்திட முடியவில்லை.

முழுதாய் இரவு மறைந்து பகல் கரைந்து நண்பகல் கழியத் துவங்கியிருக்க, தேவித்தின் வதனம் வழமையான மென் புன்னகையை சிந்தியது.

பரிசோதிக்க முயன்றவன்,

“நதி” எனும் தன்னுடைய அழைப்பை அவளுக்கு அனுப்பினான்.

இதயத்தோடு இணைந்திருந்த அறிவியல் செயல்பாட்டு நுணுக்கங்களின் முக்கிய பகுதிகளை தேவித் கணினியோடு பொருத்தியிருக்க, அவனது குரல் அவளுடைய இதயத்தை சென்று அடைந்தது என்பதை பச்சை வண்ணம் ஒளிர்ந்து பறைசாற்றியது.

அங்கு நீராடுவதற்காக ஆற்றினை நோக்கி சென்று கொண்டிருந்த நைருதி, தன்னுடைய தாலியில் கோர்க்கப்பட்டிருந்த இதயத்தின் வழி தேவித்தின் குரலை கேட்டு ஸ்தம்பித்து நின்றாள்.

“நதி” என மீண்டும் ஒலித்திட,

“மாமா” என விளித்தாள். கண்ணில் நீர் இறங்கியது.

தேவித் கையிலிருந்து சங்கிலியை கழட்டி, அதிலிருந்த இதயத்தை பிரித்தது முதல், நைருதியின் இதயம் ஊதா நிறத்தில் ஒளிரவில்லை. அதில் மிகவும் துவண்டிருந்த நைருதிக்கு கணவனின் குரல் கேட்டதும், வறண்ட நிலத்தில் குளிர் நீர் ஊற்றெடுத்தது போன்று அத்தனை குளுமையை அகத்தில் வாரி இறைத்தது.

“மாமா” என சொல்லிக்கொண்டே மண் தரையில் கால்கள் மடக்கி அமர்ந்தவள், இதயத்தில் கையை வைத்து அழுத்தியவளாக, கண்களை மூடி சத்தமின்றி அழுதாள்.

இங்கு தேவித்திற்கு அவளின் உணர்வுகள் கடத்தப்பட்டதுவோ, தேவித்தின் ஆழ் மனதில் மென் உணர்வுகள் படபடப்பை உண்டாக்கியது.

அவளது குரலை கேட்க முடியாவிட்டாலும், உயிரில் பிணைக்கப்பட்ட காதலின் உணர்வுகள் அவனால் உணர முடிந்திட, நைருதிக்கு தன்னுடைய குரல் கேட்கிறது என்பதை, ஆராய்ச்சியாளன் எனும் நிலையை தாண்டி காலங்கள் கடந்து நீளும் அதீத நேசத்தால் உணர்ந்தான்.

“நதி… நதி, நான் பேசுறது உனக்கு கேட்குதுன்னு எனக்குத் தெரியும்” என்ற தேவித்தின் பேச்சில் அழுகையை நிறுத்தி கண்களை அழுந்த தேய்த்து எழுந்த நைருதி, தன்னை சுற்றி யாரும் இருக்கின்றனரா என்பதை ஆராய்ந்து, ஆற்றின் கரையோரமிருந்த கல்லில் அமர்ந்தாள்.

“ஐ கேன் ஃபீல் யுவர் பிரசன்ஸ் நதி” என்ற தேவித், “நீ எங்க இருக்க எல்லாம் கண்டுபிடிச்சிட்டேன். எதுக்கும் பயப்படாத. தைரியமா இரு. நிச்சயம் அங்க உனக்கு எதுவும் ஆகாதுன்னு நம்புறேன். நீயும் அதே நம்பிக்கையோடு இரு. சீக்கிரமே உன்னைத்தேடி உன்கிட்ட வருவேன்” என்றான்.

அவளுக்கான அவனது மெனக்கெடல். சாத்தியமில்லா ஒன்றை சாத்தியமாக்கிட நினைக்கும் வேகம். அவளுக்காக மனதால் அவன் கொண்டிருக்கும் தீவிரம் என யாவும் நின்றிருந்த அவளது கண்ணீரை வழியவிட்டது.

கையை மூடி நெஞ்சத்தில் வைத்து,

“மகிழ்” என்று கத்தியவளின் ஓசை குரல்வளை தாண்டி வெளிவராத போதும், காற்றின் சலசலப்பும், ஆற்று நீரின் ஓட்டமும், புள்ளினங்களின் இரைச்சலும், புவியின் இயக்கமும் வேகமெடுத்தது.

“நதி…” என்றவனின் விளிப்போடு தேவித்தின் குரல் நின்றிட, அவளின் கண்ணீர் வற்றாது அவனுக்காக கசிந்துருகியது.

இங்கு தேவித் சட்டென்று நின்றுபோன அலை அதிர்வுகளை மீண்டும் இணைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

சத்தமின்றி அழுகையில் கரைந்து கொண்டிருந்த நதிக்கு பெரும் ஆறுதலாக அமைந்த விஷயமே, தன்னிலை குறித்து தேவித் அறிந்து கொண்டதோடு இங்கு வருவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான்.

இதுவே போதுமென்ற எண்ணத்தில் இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்தவள் குளிப்பதற்காக நீரில் இறங்கிட,

“ராஜகுரு ஐயா தங்களின் காவலுக்கு எம்மை பணித்தார் தேவி” என்று வந்து நின்றாள் பவளம்.

பவளம் சிவாலயத்தில் வேலை செய்யும் பணிப்பெண்.

“ம்ம்” என்ற நைருதி, “நீங்க போங்க. நான் வருகிறேன்” என்றாள்.

“உடனிருந்து அழைத்துவர கட்டளை அரசியாரே!” என்ற பவளம், “நீராடுவதற்கு உதவட்டுமா தேவி” என்று பணிந்து வினவினாள்.

மறுத்துக் கூறினாலும் ராஜகுருவின் பேச்சை மீறி இங்கிருந்து செல்லமாட்டாலென்று அறிந்த நைருதி,

“இப்பக்கம் யாரும் வராது பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஆற்றுக்குள் இறங்கிய நைருதி, நீருக்குள் இருந்த பெரும் பாறையின் மறைவுக்கு பின்னால் சென்று குளித்து முடித்து, ராஜகுரு அளித்த ஆடையை எடுத்துப் பார்க்க, தாவணி போன்று நீண்ட மூன்று துணிகள் மட்டுமே இருந்தன. அவற்றை எப்படி எங்கு சுற்றுவதென்று தெரியாது மலைத்துப் பார்த்தாள்.

ஒரு தாவணியை முண்டு போல் உடலைச்சுற்றி கட்டிக்கொண்டவள், பாறைக்கு பின்னாலிருந்து வெளிவந்து,

“ஆடை உடுத்துவதற்கு உதவுங்கள்” என்றாள். பவளத்திடம். அவளிருக்கும் சூழலில் அவளுக்கு அக்கால ஆடை அமைப்பை உடுத்த தெரியாதென்று சொல்ல முடியாது. மற்றவர்களின் பார்வையில் அவள் அத்தேசத்தின் இராணி. ஆதலால் உதவுமாறு கூறினாள்.

“உத்தரவு தேவி” என்று அருகில் வந்த பவளம், நதி கட்டியிருந்த துணியில் கை வைத்திட, இயல்பாக சட்டென்று பின்வாங்கியிருந்தாள் நைருதி.

“தேவி?” பவளம் கேள்வியாய் பார்க்க,

“சாரி” என்ற நைருதி, பட்டென்று பவளத்தின் முகம் காட்டிய குழப்ப பாவனையில் சுதாரித்து…

“கூச்சமாக உள்ளது” என்றாள்.

இருப்பினும் ஒன்றும் செய்திட முடியாத நிலை, அதனால் கண்களை மூடிக் கொண்டு பவளத்திடம் தன்னை முழுதாய் ஒப்புவித்தாள்.

அடர்ந்த தாவரங்களின் அரணுக்கு உள்ளே இருவரும் நின்றிருக்க, பட்சிகள் பார்வைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நீண்ட தாவணியை மார்பை மறைத்து சுற்றி பின் முதுகில் முடியிட்டு கச்சை அமைப்பில் கட்டிய பவளம், மற்றொரு துணியை பஞ்சகஜம் அமைப்பில் இடையில் கட்டிவிட்டாள்.

கண்களை திறந்த நைருதிக்கு தலை சுற்றியது.

மேலே மார்பு பகுதியும், கீழே இடைக்கு கீழிருந்து கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே உடல் மறைந்திருந்தது.

வெற்றுத் தோளும், ஆடை புதையா இடையும் பலர் பார்க்க அவளால் எப்படி சகஜமாக நடமாடிட முடியும்?

“அவ்வளவுதானா?” என்று அதிர்வாகக் கேட்ட நைருதி அப்போதுதான் பவளம் இன்னொரு துணியை மடிப்பு எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து ஆசுவாச மூச்சினை வெளியேற்றினாள்.

மடிப்புகள் எடுத்த துணியை ஒரு பக்க தோளிட்டு, எதிர்ப்பக்க இடை சுற்றி மறுபக்கம் இரு முனையையும் ஒன்றிணைத்து முடியிட்டு முடித்த பவளம்,

“முடிந்தது தேவி” என்றாள்.

துணி மறைக்காது ஒரு பக்க தோள் வெறுமையாகக் காட்சியளிக்க, ஆயசமாகத் தோன்றினாலும், ‘பழகிக்கோ ருதி’ என்றவளாக பவளத்துடன் இணைந்து நடந்தாள்.

**********************

நுண் இணைப்புகள் தன்னுடைய தொடர்புகளை முடித்துக் கொண்டதற்கு அடையாளமாக பச்சை நிறம் சிவப்பு நிறத்தில் ஒளிர, மீண்டும் இணைப்பை மீட்டிட தேவித் தொழில்நுட்பத்துடன் அதிக வேகத்தில் முயன்று கொண்டிருந்தான்.

திடீரென என்னவானதென்று தெரியவில்லை. இயற்பியலின் வித்தகனான அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.

சில மணி நேரங்கள் போராடியும் மீண்டும் இணைத்திடும் வழி கிட்டவில்லை.

“என்னடா டென்ஷனா இருக்க?” என்று அப்போது உள்வந்த வீரட், “ருதிக்கிட்ட பேசிட்டியா?” எனக் கேட்டான். அவனது கையில் தேவித்திற்கான சூடான தேநீர் கோப்பை இருந்தது.

“பேசிட்டேன். பட் டக்குன்னு சிக்னல் கட் ஆகிருச்சுடா” என்ற தேவித், இன்னும் தான் உபயோகித்த மெக்கானிசத்தின் கோட்பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“உனக்கு அவளைப்பற்றி, அவள் எங்கு சென்றாள்… அப்படின்னு தெரிஞ்சிடுச்சுன்னு நியூஸ் கன்வே பண்ணிட்டதானே?” என்ற வீரட், கோப்பையை அவனது கையில் திணித்து, “இப்போ அது போதும். இதுவே ருதிக்கு தைரியத்தை கொடுக்கும். அடுத்து என்னன்னு பாருடா” என்று தோள் தட்டிக் கூறினான்.

“ம்ம்… எனக்குத் தெரியும்கிறது மட்டுமே போதும் தான். இன்னமும் இதோடு முயற்சி பண்ணிட்டு இருந்தால், டைம் டிவைஸ் வொர்க் பண்ண முடியாது” எனக்கூறி தேநீரை அருந்தினான்.

“நேத்திலிருந்து தூங்காம இருக்க தேவா. என்ன பண்ணனும் சொல்லு… நான் பண்றேன். இப்போவாவது கொஞ்சநேரம் நீ தூங்கு” என்ற வீரட்டை நெகிழ்வாய் ஏறிட்ட தேவித், வழக்கமான புன்னகையையேக் பதிலாகக் கொடுத்தான்.

“இப்படி ஸ்மைல் பண்ணியே ஏமாத்திடு” என்ற வீரட், “எனக்கொரு டவுட்?” என்றான்.

“என்ன?”

“இப்போ ஒன்பதாம் நூற்றாண்டுக்கு போயிடுறோம் சரி… அங்க எங்கன்னுடா ருதியை தேடுறது. நமக்கெல்லாம் முழுசா தெரிஞ்ச மூவேந்தர்கள் கதையையே தேவைக்கு ஏத்த மாதிரி மாத்திடுறாங்க. இதுல ஒன்னுமே தெரியாத அந்த ராஜாவோட இடத்தை எங்க என்னன்னுடா தேடுறது?” எனக் கேட்டான்.

“உன்னால மட்டும் தான்டா இப்படி யோசிக்க முடியும்” என்ற தேவித், “அதான் நதி காணாமல் போன வீடியோவில் டேட் தெரிஞ்சுதே. அதை வச்சு எதுவும் செய்வோம். இடம் தான் என்னன்னு தெரியல. அவர் பெயர் மட்டும் வச்சு அக்கால இடத்தை எப்படி தெரிஞ்சிக்கிறது ஒன்னும் தெரியல. எதுவும் செய்வோம்” என்ற தேவித்தின் முகம் தீவிரமாக ஆராயும் பாவனையை காண்பித்தது.

“எதுவும் சிக்கும்டா. அதிகம் ஸ்ட்ரெயின் பண்ணிக்காத” என்ற வீரட், “நான் மார்னிங் வரேன் மச்சி” என்றான்.

“ஓகேடா” என்ற தேவித், “செட்டப் முடிச்சிட்டு சொல்றேன். நீயும் இதோட ஃபங்ஷன்ஸ் தெரிஞ்சிக்கோடா” என்க, வீரட் தலைக்குமேல் கைகள் குவித்து… “ஆளை விடுடா” என்று ஓடிவிட்டான்.

தேவித்திற்கு விரைந்து மனைவியிடம் செல்ல வேண்டும். அந்த எண்ணமே அகம் முழுக்க வியாபித்திருக்க, அவனால் இயல்பாய் இருக்கமுடியவில்லை.

தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தை ஒருமுறை முழுதாக பார்வையிட்டவன் கண்களில் முன்தினம் திறக்க முயன்று திறவாது, சாதாரண பையென்று ஒதுக்கிட முடியாது மேசையில் கிடைத்தபட்ட அப்பையின் மீது படிந்தது.

சில கணங்கள் அது என்னவாக இருக்குமென்று யோசித்த தேவித், தந்தை தேவையில்லாது இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார் என்று நினைத்தான்.

‘வழிவழியாக பாதுகாத்து வருமளவிற்கு அப்படியென்ன இதிலிருக்குமென்று’ யோசித்த தேவித் பெருமூச்சோடு எழுந்து, முப்பரிமாண கிரகங்கள் அமைப்பின் மீது சென்று நின்றான்.

தவறு இதுதானென்று தெரிந்த பின்பும், சரி செய்யும் கோட்பாடுகள், விளக்கங்கள் எழுத்து வடிவமாக கையில் இருந்தபோதும், அதனை எவ்வாறு உட்புகுத்துவதென்று தெரியாது நேரம் கடப்பதை உணராது வெறித்திருந்தான்.

சட்டென்று அவ்வறைக்குள் காற்று வீசியது. தன்னுடைய முன்னுச்சி கேசம் அசைந்தாடும் அளவிற்கு இதமான மென் காற்று. பூமிக்கு அடியிலிருக்கும் அறை. அறை முழுவதும் குளிரூட்டி பொருத்தப்பட்டிருக்க, திடீரென காற்று வீசுவது எப்படியென்று தெரியாது பார்வையை சுழற்றியவனுக்கு, பையின் மையத்தில் ஊதா நிறத்தில் ஒளிக்கற்றைகள் மின்னுவது பார்வையை கூர்மையாக்கியது.

பையின் அருகில் சென்ற தேவித் ஒரு நொடி தயங்கி, மெல்ல தன்னுடைய கையினை அதனை நோக்கி நீட்டிட, மின்னலென மயங்கி சரிந்திருந்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
27
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்