அத்தியாயம் 37
தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் தன்னுடைய சிறிய தந்தையை தேரல்வேளை நேர்கொண்டு பார்த்தவாறு நிமிர்ந்து நின்றான் மகிழ் மேகோன்.
அவனது கரம் மெல்ல மேலுயர்ந்து, சுட்டு விரல் மீசையின் நுனி உராய்ந்து கன்னம் ஊர்ந்தது. ஒற்றை புருவம் மலை முகடென தொக்கி நிற்க, பார்வை கூர்மை பெற்றது.
“உயிர் மாண்டவனின் உருவத்திடம் உம் பதங்கள் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளதோ?” அவரிடம் ஏளனம். பார்வையிலும் பேச்சிலும்.
வழமையான மென் வதனப்புன்னகை மேகோனிடம்.
“சிரிப்பிற்கு என்ன அர்த்தமோ?”
“இளைய தந்தைக்கு மகனின் முகம் காண என்ன அவசியமோ?”
“நீர் காரியத்தில் கண்ணென்று யாம் அறிவோம்.”
“எடுத்த காரியத்தில் கண்ணாக இருப்பதால் தாம் யான் அரசனாக உள்ளோம்.”
“அரசன் என்பதில் அதீத கர்வம் உம்மிடம்.”
“இருத்தல் வேண்டியதுதாம். முடியும், கோலும் உடன் பிறந்ததாயிற்றே!”
(முடி – கிரீடம். கோல் – செங்கோல்.)
“எம்மிடமே வார்த்தைப்போரா?” தேரல்வேள் கடுமை காட்டினார்.
“குருவை விஞ்சும் சீடனாக விளங்குவதில் தானே, வித்தைகள் கற்றுக்கொடுத்த குருவிற்கு மதிப்புள்ளது.”
“குரு என்கிற எண்ணம் நினைவில் இருக்கிறதோ?”
“இல்லை என்பது உம் எண்ணமாக இருப்பின்… யான் செய்திட ஒன்றுமில்லை பாசத்திற்குரிய என் இளைய தந்தையே!”
“சொற்களில் காணும் அன்பு, உமது செயல்களில் இல்லையே மேகோன்.”
“உயிருக்கும் மேலான அன்பு கொண்ட போதும்… செய்திடும் பிழையை சுட்டிக்காட்டுவதும், விலகி நிற்பதுவுமே சரியானது. பிழையெனத் தெரிந்தும் ஆதரித்து நின்றால் தான் கொண்ட அன்பு உண்மையானதெனில் அத்தகைய அன்பு பொய்யானதாகவே இருந்துவிட்டு போகட்டும். உம்மளவில் யான் அன்பில்லாதவனே” என்ற மேகோனின் பேச்சில் தேரல்வேள் பொங்கும் சினத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்தார்.
காரியம் பெரியதாக இருக்கும்போது, அவரால் தன்னுடைய வீரியத்தை காட்ட முடியாது போனது.
“யாம் உம்மை காண வேண்டுமென அனுமதி கேட்டும் மறுத்ததன் காரணம் என்னவோ?”
தேரல்வேள் அவ்வாறு கேட்டதும் மேகோனிடம் இளநகை.
“அனுமதி மறுக்கப்பட்டப் பின்னரும் தாம் இங்கு வந்ததன் நோக்கம் என்னவோ?” இரண்டு அடிகள் நடந்து சென்று, தலையை மட்டும் அவர் புறம் திருப்பி வினவினான்.
“வானவாமதிக்கு திருமணம் முடிக்கும் சிந்தை உமக்கு இருக்கிறதா மேகா?”
“தற்போது என்ன அவசரம்?”
காரணம் ஏதுமின்று எந்தவொரு சிறு செயலையும் செய்திடாதா தேரல்வேள் தனது தங்கைக்கு திருமணம் செய்வதில் எதற்காக இத்தனை ஆவல் கொள்கிறாரென்று மூளை ஆராய்வின் பாதையில் பயணித்த போதும்… முகத்தில் அதனை காட்டிடாது,
“அளவந்தான் யாரோ?” எனக் கேட்டான்.
(அளவந்தான் – மாப்பிள்ளை.)
“நம் எல்லைக்கு அடுத்து இருக்கும் மலைமங்கை தேசத்தின் இளவரசன் பரகசன்” என்ற தேரல்வேள், “அவர்களாகக் மண பந்தத்திற்கு விருப்பம் மிகுந்து கேட்கின்றனர். அதுதான் முறையும். அடுத்த மன்னர் பரகசன் தான். நம் இளவரசியும் ராணியாக முடி சூடிடுவாள்” என்றார்.
“பதவி, பொறுப்புகளின் மீது எமக்கு எப்போதும் மோகமிருந்தது இல்லை. எம் வழியே யான் வளர்ப்பான நன் தங்கையும்” என்ற மேகோன், “எம் கண் பார்க்க, இளவரசி மகிழ்வோடு மணவாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்” என்றான்.
“அளவந்தான் யாரென்று தேர்வு செய்துவிட்டது போன்று தெரிகிறது.”
“உங்களின் புத்தி உரைக்கும் யூகம் உண்மை இளைய தந்தையே” என்றவன், “அவளின் மணதினத்திற்கு தற்போது அவசரமில்லை. அவசியமுமில்லை” என்றான். அழுத்தமாக.
“தளபதியார் மீண்டும் பிறப்பெடுத்து வருவாரென்ற உமது தீரா நம்பிக்கை பொய்த்துப்போகும் காலம் மிக அருகில்” என்ற தேரல்வேள், “உமது ஆசைக்காக நம் தேசத்தின் இளவரசியின் வாழ்வை சூன்யமாக்கிட வேண்டாம்” என்றார்.
“உமது அன்பில் நன் நெஞ்சம் கசிந்துருகிறது எம் இளைய தந்தையே” என்ற மேகோனிடம் அப்பட்டமான கேலி.
“சொல்லாடலுக்கான நேரம் இதுவல்லவே!”
“சரியாகச் சொன்னீர்… பதங்களின் விவாதத்திற்கான நேரமன்று. காலச்சக்கரத்தை சுழற்றிட தக்க தருணம் நெருங்கி வந்தாயிற்று” என்ற மேகோன், “உம் முகத்தில் தோன்றிடும் அதிர்வு எமக்கு போதவில்லை” என்றான். மீசை உராய்ந்து கன்னம் ஊர்ந்த விரலால் ஒற்றை புருவத்தை நீவி, பார்வையில் கூர்மையை படர்ந்து.
“நெற்றிச்சுருக்கம் தம் சிந்தனை எதுவென்று எமக்கு வலியுறுத்துகிறது. உமது கபாளத்தின் நுண் செய்திகள் யாவும் தவறு தந்தையே” என்ற மேகோன், “முன்னோக்கி அன்று… பின்னோக்கி” என்றான்.
“இயற்கையை வளைத்திட முயன்ற உம் செயலால் நம் தேசம் இழந்தது பெரும் மதிப்பிலான ஒன்று… இத்தேசத்தின் வாரிசு. மீண்டும் அவ்வாசை உம்மைவிட்டு அகலவில்லையா என்ன?” என்ற தேரல் லாவகமாக தன்னுடைய அதிர்வை முகம் காட்டாது மறைத்தார்.
“செய்திடும் நோக்கம் நன்மையெனில் இயற்கையும் உடன் நிற்கும் என்பதே நியதி. எம் விடயத்தில் சதி செய்தது இயற்கை அன்று இளைய தந்தையே! யாரென்று நீரும் அறிவீர். யானும் அறிவோம்” என்ற மேகோன், “இம்முறை மாண்டுபோன யாவும் உயிர்த்தெழ, வஞ்சகர்களின் வாழ்வு முற்றுபெறும்” என்றான்.
“வஞ்சகர்கள் என்று யாரை குறிப்பிடுகின்றாய்?”
“யார் வஞ்சகரோ அவருக்கு எம் சொல் உரித்தாகும்” என்ற மேகோன்,
“எம்வழி வம்ச விருத்தியை தடை செய்த பாவிகளின் வழியே யாம் மீண்டும் ஜனித்தோம். முன்ஜென்ம தவறுகளை சரிசெய்து… கயவர்களுக்குத் தண்டனை அளித்திடவே யான் வரவு உள்ளது” என்றான். பரந்த அம்மண்டபத்தின் தூண் ஒவ்வொன்றிலும் மேகோனின் குரலோசை தொட்டு அதிர்ந்து காற்றெங்கும் பரவி அதிர்வலைகளை உண்டாக்கியது. தேரல்வேளின் உள்ளத்திலும்.
எத்தனை மறைக்க முயன்றும் இம்முறை தேரல்வேளின் முகம் அவரது உணர்வுகளை வெளிக்காட்டிட…
“வீரன் ஒருவனின் ஜனனத்தை ஆயிரம் கயவர்கள் ஒன்றுகூடி தடுத்தாலும், அவனது பிறப்பென்பது இயற்கையின் கரத்தில் எனும்போது… தடைகள் பல கடந்து நிஜத்தில் நிகழ்கொள்வதே சரித்தரமாகும். எம் சரித்திரத்தை யானே கண்கள் பார்த்திட வழிவகை செய்திட்ட துரோகிகளுக்கு சிறப்பு செய்ய கடமைக்கொண்டுள்ளேன்.”
(ஒன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நன்றி எனும் சொல் வழமையில் இல்லை. நன்றி என்பதற்கு ஈடாக இடத்திற்கு தகுந்த சொற்களை பயன்படுத்தினர். உயர்வு, சிறப்பு, மகிழ்வு இன்னும் சில.)
மேகோன் பேசிட, தேரல்வேளின் முகம் இருண்டது.
அவன் யாரென்று குறிப்பிட்டு உரைக்கவில்லை என்றாலும், அவன் பலதும் அறிந்து வைத்திருக்கிறான் என்பதும், அவனது பேச்சில் நிறைந்துள்ள நபர் தானென்பதும், செய்த செயலின் பலனாய் தேரல்வேளிற்கு விளங்கத்தானே செய்யும்.
மனிதரின் நிலைக்குறித்து அக்கணம் வருத்தம் தோன்றியபோதும், அவரின் முன் செயல்களால் மேகோன் இறுகி நின்றான்.
“அவர்களுக்கு என்ன பதில் கூறட்டும்?” தேரல் தனக்குள் சூழ்ந்த கலக்கத்தை மறைத்துக்கொண்டு வினவினார்.
“அவள் ஏற்கனவே வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்டவள் என்று கூறுங்கள்.” அழுத்தமாக உரைத்தான் மேகோன்.
“மாண்டோர் மீண்டு வந்ததாக முன் வாழ்வியல் சான்று ஏதுமில்லை.” அவனைவிட அழுத்தம் அவரின் வார்த்தையில்.
“மீண்டு வர முடியாது என்பது எத்தனை சத்தியம் மிகுந்ததோ… அதே அளவிற்கு மறுபிறப்பென்பதும் உண்மை தானே? ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்” என்றான் மேகோன்.
“கலைகள் அனைத்திலும் உச்சம் தொட்டவர் நீவீர் என்பது நம் தேசம் அறியும்… ஆயினும் உம் சொல் நிஜம் கொள்ள வாய்ப்பில்லை” என்று முற்றிலும் நம்பிக்கையின்றி தேரல் கூறிட…
“வந்து கொண்டிருக்கிறான்… இம் மேகோனின் உயிர் நண்பன், மேமகிழ் தேசத்தின் தளபதி” என்ற மேகோனின் கண்களில் கனிவும், அன்பும் பொங்கிய அக்கணம், மீசையின் இரு நுனியும் அவனது விரல்களில் முறுகல் கொண்டன.
*************
நள்ளிரவில் ஒலித்த அழைப்பு மணியின் ஓசையில் கதவினை திறந்த தேவித்தை மறைத்துக்கொண்டு நின்றிருந்தான் கவின்.
“வரேன்னு சொல்லவேயில்லை” என்ற தேவித், “இந்த நேரத்தில் வர அளவுக்கு அப்படியென்னடா அவசரம்” என்று கவின் உள்ளே வர நகர்ந்து வழிவிட்டான்.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” கவின் கோபமாக வினவினான்.
“உண்மையை சொல்லனும்னா இதுவரை ஒன்னும் பண்ணல. எனக்கே ஒரு தெளிவு இல்லை” என்றுகூறி, உடல் தளர்த்தி இருக்கையில் அமர்ந்தான் தேவித்.
“உனக்கு எதோ ஆகுற மாதிரி கனவு. அங்க இருக்க முடியல. அதான் வந்துட்டேன்” என்ற கவின், “அதோட கனவுல நம்ப முடியாத சீன்ஸ்” என்றான்.
“நம்ப முடியாததுன்னா… எந்த மாதிரி?” எனக் கேட்ட தேவித், “காஃபி கொண்டுவரேன்” என எழுந்தான்.
“அதெல்லாம் வேணாம். இப்படி உட்கார்” என்று தேவித்தை தன்னருகில் அமர்த்திக்கொண்ட கவின், “எனக்கு உண்மையை சொல்லு… நீ யாரு? ருதி அங்க போகக் காரணம் என்ன? நான் யாரு?” என கேள்விகளை அடுக்கினான்.
“இப்போ எதுவும் சொல்ல முடியாது நயனா” என்று பட்டென்று சொல்லிய தேவித் நொடியில் சுதாரித்தவனாக, “எனக்கும் எதுவும் தெரியாது கவின்” என்றான்.
“ஓகே” என்ற கவின், “உனக்கு எதுவும் தெரியாமல் இருக்கலாம்… ஆனால் எனக்குத் தெரியுமே!” என நிறுத்தி, “நீதான் மகிழ் மேகோன் அப்படின்னு” என்றான்.
“கவின்…!?”
“எஸ்… உன்னோட நயனா… கவிநயனன்.”
தேவித்தின் இதழில் மென் புன்னகை.
“உண்மையை தெரிஞ்சிட்டு வந்திருக்க… அப்படித்தானே?” தேவித் நாடியை நீவினான்.
“நான் வரணும் நீ எதிர்பார்த்த தானே?” என்ற கவினுக்கு முன்பு தேவித்தின் மீது கொள்ளும் காட்டம் தற்போது கொஞ்சமும் இல்லை.
அவனுக்காக உயிரையும் துறந்தவன் அல்லவா அவன். அச்செய்லாலே இப்பிறவியில் தேவித், கவின் என்பவனின் அதீத கோபத்திற்கும், பேச்சிற்கு பணிந்து சென்றது.
கவினின் கூற்றில் தேவித் அட்டகாசமாக சிரித்திட…
“இதெல்லாம் நம்பவே முடியலடா” என்ற கவின், “நம்பாமல் இருக்கவும் முடியல” என்றான்.
“இனி நம்பித்தான் ஆகணும்” என்ற தேவித், தங்களுக்கு முன்பு டீபாய் மீது வீற்றிருந்த தோல் பையனை மெல்ல வருடினான்.
“இது…” கவின் புருவம் சுருக்கினான்.
“சீக்கிரம் தெரிஞ்சிப்ப” என்றான் தேவித்.
“ருதி உன்கிட்ட போயிருப்பாளா?” தங்களின் பல்லாயிர வருட முன்பிற்கான கதை தெரிந்த பின்னரும், இப்பிறவியில் தங்கையாகக் வாய்க்கபெற்றவளின் நலனில் அக்கறை கொண்டான் கவின்.
“தெரியல…” தேவித் தலையை இருபக்கமும் ஆட்டினான்.
“உனக்கே தெரியலையா?”
“அடேய்…” என்று சிரித்த தேவித், “உனக்கு சரியா புரியல நினைக்கிறேன். முன் பிறப்புகள் வைத்து தான் தற்போதைய பிறப்பு. அதாவது கடந்த காலம் வைத்து தான் நிகழ்காலம் அமையும். நிகழை வைத்து கடந்தகாலம் இல்லை” என்றான்.
“இப்பவும் எனக்கு புரியல” என்று உதடு சுளித்த கவின்,
“எப்போ போறோம் அங்க?” எனக் கேட்டான்.
“எல்லாம் ரெடி. எப்படி வொர்க் ஆகுது பார்க்கணும்” என்ற தேவித், “அங்க போனாலும் இங்க நம்மோட பிரசன்ஸ் இருக்க எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டு தான் அங்க போகணும்” என்றான்.
“வீரட் இங்கிருந்து மேனேஜ் பண்ணமாட்டாரா?” கவின் கேட்க, தேவித் பார்வையில் செய்தியை கடத்தினான்.
“வாய் திறந்து சொல்லுடா?” கவின் அதட்டிட…
“நான் யாருன்னு தெரிஞ்ச அப்புறமும் இப்படி அதட்டி பேசுறது சரியில்லடா” என்றான் தேவித். முகம் சுருக்கி.
“இப்போ நீ என் மச்சான். அவ்ளோதான். முன்னாடி என்னங்கிறது மேட்டரில்லை. இப்போ நீ யாரு? நான் உனக்கு யாரு? அவ்ளோதான்” என்ற கவின், “இங்கிருந்து அங்க நம்மோட வீரட் கனெக்டில் இருக்க முடியாதா?” என மீண்டும் வினவினான்.
“நீயும், நானும் அங்க போறது எவ்வளவு அவசியமோ… அதேயளவு வீரட் அங்க வரதும் அவசியம்” என்ற தேவித், “வீரட்… வீர் யாருன்னு தெரியலையா?” எனக் கேட்டான்.
“வீரட்… வீர்…” என்று உச்சரித்த கவின், “டேய் மச்சான்…” என்று கண்களின் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் காட்டினான்.
அத்தியாயம் 38
வான்மேகத்தின் நீர்த்துளிகள் தேகத்தை மட்டுமல்ல, அகநெஞ்சத்தையும் சில்லென குளிர்வித்தது.
பெரும் கற்சிலையாய் வீற்றிருந்த ஈசனின் முடி சூடிய பிறை நிலவினை தலை உயர்த்தி பார்த்தவளின் முகத்தில் முதல் துளி, அவளது செவ்வதனத்தில் பட்டுத் தெறிக்க… சிதறிய திவலைகள் நிலம் விழுந்தன.
அவளின் ஸ்பரிசம் தீண்டிய மழை நீர் மண்ணில் தன் தடம் பதிக்க… உச்சிப் பொழுதிலும் எம் பெருமான் அமர்ந்திருக்கும் அவ்விடம் முழுக்க பரந்திருந்த மலர்ச்செடிகளில் மொட்டவிழ்ந்து இதழ் விரித்தன பூக்கள்.
காணக்கிடைக்காத அதிசயமாக பொழியும் தூறலையும் பொருட்படுத்தாது மக்கள் நண்பகலில் மழையால் சூரிய வெளிச்சமுமின்றிய நிலையில் பூக்கள் மலர்ந்திருந்தப்பதை கண்டு ஆச்சரியம் கொண்டனர்.
(பொதுவாக மலர்கள் அதிகாலை மற்றும் அந்திமாலையில் மலரும். ஒருசில மலர்கள்(மிக குறைந்தவை) சூரிய ஒளியில் மலரும்.)
அவர்கள் வணங்கும் சிவனின் அதிசய நிகழ்வாக எண்ணி, பம்பை ஒலித்து தீபாராதனை காட்டி, அக்கணத்தை சிறப்புமிக்க காலமாக எண்ணி கொண்டாடினர்.
இதற்கான காரணம் முற்றும் முழுதாய் தன்னுடைய வருகையே என்பதை அறியாத நைருதி, “இங்க நாம யாரை பார்க்கணும் செம்பா?” எனக் கேட்டாள்.
“உம் வருகையை இத்தேசமே கொண்டாடத் துவங்கியுள்ளது தேவி” என்று செம்பன் சொல்லியபடி தலைக்கு மேல் இரு கரங்கள் குவித்து தெய்வத்தை வணங்கிட, அவளின் வருகையை திடீரென பெய்த மேக நீரினாலும், காலம் மாற்றி சுவாசம் முகிழ்த்த மலர்களின் நறுமணத்திலும் உணர்ந்த ராஜகுரு, நைருதியை கண்டுவிட்டு அவளை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து நடந்தார்.
தாங்கள் பார்க்க வேண்டிய நபர் யாராக இருக்குமென்று கண்களில் படுவோரையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள், தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவரின் தோரணையில் ராஜ மிடுக்குத் தென்பட,
“இவரா?” எனக் கேட்டாள்.
“ஆம் தேவி. தங்களது மாமன் ஆவார்” என்ற செம்பன் தங்களை நெருங்கிவிட்ட, ராஜகுருவின் முன் ஒற்றைக்கால் குத்திட்டு சிரம் தாழ்த்தி வணங்கினான்.
‘ராணியின் மாமா போல.’ மனதில் நினைத்த நைருதி, நின்ற இடத்திலிருந்து அசையாது அவரை பார்த்தாள்.
மூப்பு கூடியவர் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு திடகாத்திரமான உடல் தோற்றத்தில் இருந்தார். கண்களில் தவழும் சாந்தம் தானாக மரியாதை கொடுக்க கரம் சேர்த்து வணங்கினாள்.
அவளுக்கு குறுநகையையும், செம்பனை எழவும் சொல்லிய ராஜகுரு, “செய்த காரியம் மிகவும் உயர்ந்தது செம்பா. கானக காவலன் மட்டுமல்ல, இக்கணம் தேசத்தின் பாதுகாவலனும் ஆவாய்” என்றதோடு, “அரண்மனையில் எம்மை வந்து சந்தியும்” எனக் கூறினார்.
“உத்தரவு ராஜகுரு” என்ற செம்பன், “வருகின்றேன் தாயே” எனக்கூறி பணிய,
“எங்க… எனகபோறீங்க செம்பன்?” என்று படபடத்து வினவினாள் நைருதி.
ராஜகுருவிடம் தன்னை தனித்து விட்டுச் செல்வானென்று அவள் நினைக்கவில்லை. உலகமே அவளுக்கு புதிதாய் இருக்க, அங்கு அவள் நம்பும் ஒரே ஆள் செம்பியன். இக்கணம் அவனும் அவளைவிட்டு புறப்பட, தன் முன் நிற்பவரை எந்தளவிற்கு நம்புவதென்று தெரியாது அச்சம் கொண்டாள்.
“எம்மைவிட உம்மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவர் இருக்கையில் மிரள் கொள்ள வேண்டிய அவசியமென்ன தேவி?” என்று அவளின் பார்வை வைத்தே பொருள் அறிந்தவனாக தக்க பதிலை வினாவாக தொடுத்த செம்பன், “இப்பிறவியில் உம்மை கண்டதே எம் பாக்கியம் தேவி” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
“செம்பா…” நான்கடி முன் சென்றிருந்தவனை தடுத்து நிறுத்திய நைருதி,
“ரொம்பவே தேங்க்ஸ் செம்பன். உங்கமேலிருக்கும் நம்பிக்கையால் தான் அவரோட போகிறேன்” என்றவள், தன்னுடைய கையில் அணிந்திருந்த தங்க வளையலை கழட்டி அவனிடம் நீட்டினாள்.
“பொன் சூடும் அளவிற்கு யான் பெரியோன் இல்லை தாயே.” செம்பன் மறுக்கவே செய்தான்.
“குணத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை செம்பன். நான் உனக்கு ராணியாக இருப்பினும், கொண்டப் பற்று, என்னைக் காத்து அரணாக நின்று இவ்விடம் அழைத்து வரும்வரை நீ காட்டிய விசுவாசம், மரியாதை இவை போதும். எந்தவொரு பொருளும் ஒருவரின் பிறப்பின் தன்மை வைத்து பிரிக்கப்படுவதில்லை” என்றவள், “என் பசியாற்றிய உனக்கு என்னுடைய மிகச்சிறிய பரிசு. உன் மனைவியிடம் நான் கொடுத்ததாக கொடு. அப்படியே சாமை உருண்டையின் சுவை அபாரமென்றும் சொல்” என்றாள்.
“தேவி!” செம்பன் அதிர்ந்து ராஜகுருவை பார்த்திட…
“மகிழ வம்சத்தின் ராணியாயிற்றே. எழு பிறப்பு கொள்ளுமாயினும் குணம் மாறுமா?” என்று தன்னுடைய மீசையை முறுக்கிவிட்டபடி, வாங்கிக்கொள் எனும் விதமாக செம்பனை பார்த்து தலையசைத்தார்.
“பரிசிலுக்கு தலை வணங்குகிறேன் தாயே” என்ற செம்பன், “மீண்டும் ஒருமுறை உமக்கு சேவகம் செய்திட வாய்ப்புக்கிட்டினால் யான் பாக்கியம் பெற்றவனாவேன் தேவி” என்றான்.
“வருகிறேன் இராணி” என்ற செம்பன் அங்கிருந்து சென்றிட, அவன் பின் உருவம் மறையும்வரை பார்த்து நின்றிருந்த நைருதி, ராஜகுருவை பார்த்து…
“அடுத்து?” என்றாள்.
ஓரளவிற்கு அனைத்தும் விளங்கப் பெற்றவள் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள முயன்றாள்.
“சிறிது ஓய்வெடுத்து பயணத்தை தொடரலாம் மேகா” என்றார்.
அவர் மேகா என்றழைத்ததற்கு அவளிடம் சிறு மாறுதலுமில்லை, அவளைப் பொறுத்தவரை தன்னைப்போலிருக்கும் ராணியின் பெயரென்று புரிந்துகொண்டாள்.
ஆனால் அவர் கூறிய மேகா… மேகநதி அவள் தானென்று அறியாது சரியெனும் விதமாக தலையசைத்தாள்.
“ஈசனை வணங்கிய பின்னர், மண்டபத்தில் அமர்ந்து சற்று இளைப்பாறல் கொள்வோம்” என்று ராஜகுரு முன் செல்ல, அவரைத் தொடர்ந்து அவளும் இறைவனின் முன்பு சென்று நின்றாள்.
இன்னமும் தேகம் நனைத்திடாது மென் சாரலாக மழை காற்றோடு கலந்து சிதறிக் கொண்டிருந்தது.
கடவுளின் முகத்தையே நிர்மலமான பார்வையோடு சில கணங்கள் பார்த்து நின்ற நைருதி, தன்மீது படியும் ஆச்சரியம் கலந்த வித்தியாச விழிகளை கண்டுகொள்ளாதவளாக இமைகள் மூடி, தன் கணவனை நெஞ்சில் நிறைத்து பிரார்த்தித்தாள்.
மக்களின் பார்வைக்கு காரணம் அவள் அணிந்திருக்கும் ஆடை, அவளின் தோற்ற மாற்றம்.
ராஜகுருவின் கண்ணசைவிற்கு அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.
அவரின் பார்வை கனிவோடு ஆதுரமாய் அவளின் மீது படிந்தது.
மகன் கொண்ட காதலால், மருமகளின் மீது அலாதிப்பிரியம் கொண்டவராயிற்றே… இந்த நொடி வெளிப்படையாக தன்னுடைய அன்பை காட்ட முடியவில்லை என்றாலும், கண்களில் வழியவிட்டார்.
எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உயிருடன் காண்கிறார். பனித்த கண்களை தொண்டையை செருமி சரிசெய்தார்.
அவரின் பார்வையை உணர்ந்த போதும்,
‘இதுவரை வேண்டுதல் அப்படின்னு என் மாமாவை தவிர வேற எதையும் உங்ககிட்ட கேட்டது இல்லை. இப்பவும் அதேதான் கேட்கிறேன். என் மாமா என்கிட்ட வர என்ன முடியுமோ அதை செய்ங்க. என் மாமாவுக்கு துணையா இருங்க’ என கணவனுக்காக வேண்டுதல் முடித்தும் விழிகள் திறந்தாளில்லை. மனதுக்கு அமைதி வேண்டுமாயிருக்க, அசைவற்று நின்றுவிட்டாள்.
மனைவியின் வேண்டுதல் உணர்ந்த மேகோனின் அதரங்கள் வெட்கப் புன்னகையில் கவ்வி ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன.
வதனத்தின் குறுஞ்சிரிப்பின் சாயல் அவனது கூர் விழிகளில் தேங்கி நின்றன.
“நெஞ்சம் முட்டும் நேசத்தில் மூச்சுக்காற்று தவிப்பபைக் கூட்டுகிறது நதி. அள்ளி அணைத்து சொந்தம் கொண்டாடி கரங்கள் ஆர்ப்பரிக்கின்றன.” மேகோனின் வார்த்தைகள் காற்றில் கரைந்து அவனது நதியின் செவி தீண்டியதுவோ, பட்டென்று இமைகள் திறந்தவள், “மகிழ்” என்று மென்மையாய் உச்சரித்திட…
“அரண்மனை வீற்றிருக்கும் இடம் செல்ல, பல மயில் தூரம் ஆகும் மேகா” என்றார் ராஜகுரு.
“ம்ம்” என்றவள், அங்கிருந்த மண்டபத்தில் சென்று அமர, அவரும் இடைவெளிவிட்டு அவளின் அருகில் அமர்ந்தார்.
“வினாக்கள் பல எழுப்பப்படுமென்று நினைத்தேன்.” பக்கவாட்டில் அவளின் முகம் கண்டார்.
“நான் பேசுற தமிழ் உங்களுக்கு புரியும் ரைட்?” எனக் கேட்டாள்.
அவரிடம் சன்னமான சிரிப்பு. அதுவே அவளுக்கான பதிலை கொடுத்திருந்தது.
“வெல்” என்றவள், “சத்தியமா என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டதை ஏத்துக்கவே முடியல என்னால. என்ன கேட்டாலும் பதில் தெரியப்போவதில்லை. அதான் எந்த கேள்வியும் கேட்காம இருக்கேன்” என்றாள்.
மண்டையில் ஓடும் அர்த்தமற்ற பல கேள்விகள் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தை, தாயின் கண்டிப்பிற்கு பயந்து, கேள்வி கேட்பதா வேண்டாமா எனத் திணறும் பாவனையில் தவித்து பார்த்தவளின் உச்சியில் தன்னுடைய உள்ளங்கையை அழுந்த பதித்தார்.
“தாம் இந்நாட்டு மன்னன் மகிழ் மேகோனின் மெய்யுணர்வு மனையாட்டி. தற்சமயத்திற்கு இதனை மட்டும் நெஞ்சில் நிறுத்திக்கொள்” என்றார்.
(மெய்யுணர்வு – காதல்.)
“நான் இன்னொருத்தர் மனைவி. நீங்க இப்படி சொல்றதை கேட்கவே அசிங்கமா இருக்கு.” முகத்தை சுளித்தவாறு பட்டென்று கூறியவளை பார்த்து முறுவலித்தார் ராஜகுரு.
“என்ன சிரிக்கிறீங்க?”
“உருவ ஒற்றுமை பார்த்தும் உம்மால் உண்மையை புரிந்துகொள்ள முடியவில்லையா மேகநதி? தேவித் மேகோனின் நதி?” என்றார்.
“யார்… யாரு… யாரோட உருவ ஒற்றுமை?” நாவால் தந்தியடுத்தாள். செம்பன் வாயிலாக, தேவித் போலவே மேகோன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டவளுக்கு, மனம் நினைப்பது மட்டும் உண்மையாக இருக்கக் கூடாதென்று மூத்தவரின் வார்த்தையைக் கேட்டு உதறல் ஏற்பட்டது.
“செம்பன் உம் தொலை தொடர்பு கருவியில் தேவித்தின் உருவத்தை பார்த்து எதுவும் சொல்லவில்லையா?” எனக் கேட்டார்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்?” அவளிடம் அதிர்ச்சி குறைவு தான். பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை அறிந்தே தன்னை இங்கு வரவழைத்திருக்கும் போது, சில கிலோ மீட்டர் தொலைவில் நடந்ததை கணித்திருக்க முடியாதா? எனும் எண்ணம் கொண்டு அதீத அதிர்வு கொள்ளாது அடக்கிக்கொண்டாள்.
“காலத்தை கணிக்கும் வல்லமை, நடக்கும் நிகழ்வுகளை தீட்சண்யத்தால் அறியும் ஆற்றல் உம் பதிக்கு மட்டுமே உரித்தானவை. நான் கண்டறிந்தது என்னுடைய யூகத்தால். ஒரு தினப்பொழுது முழுக்க செம்பன் உடனிருந்திருக்கிறான். ஒருமுறையேனும் உமது தொடர்பு கருவியை பார்த்திருப்பான் என்பது நன் யூகம். அது குறித்தே யாம் வினவினோம்” என்றார். அவள் அறிந்துகொள்ள நினைக்கும் கருவிழிகளின் ஆட்டத்தின் பொருளுணர்ந்து பதில் வழங்கினார்.
“உருவம் ஒன்றாக இருந்தால் மறுஜென்மாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?” உண்மை தெரிந்த போதும், ஏற்க முடியாது உள்ளுக்குள் போராடினாள்.
“உமது வினாக்கள் யாவற்றிற்கும் விடையளிக்க கடமை பட்டிருக்கிறேன். ஆனால் தற்போதல்ல. காலம் இது உகந்ததல்ல” என்றவர், “உணவு கொண்டு வருகிறேன்” என்று அருகிலிருந்த மற்றொரு மண்டபத்திற்கு சென்றார்.
பதினாறு கால்கள் கொண்ட மண்டபம் நன்கு நீண்டிருக்க, அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
“அன்ன சத்திரம்.” வட்டெழுத்துக்களால் எழுதப்பட்டிருக்க… பார்க்கும் போதே தெரிந்தது அவ்விடத்தில் கூட்டம் குறைவதில்லையென.
சில நிமிடங்களில் கையில் உணவுடன் வந்த ராஜகுரு,
“நீராடி வந்தால் உணவு உட்கொள்ளலாம்” என்றார்.
நைருதி தன்னை குனிந்து பார்க்க…
“அசௌகரியமாக இருக்குமென்று கூறினேன்” என்றார்.
“நானுமே நினைச்சேன். வேற ட்ரெஸ் இல்லை. அதான்…” என்று அவள் சங்கடமாக இழுக்க…
“முறைக்கு அம்மானாக இருப்பினும்… யானும் உமக்கு தந்தையே” என்றவர், சிறு துணி மூட்டையை அவளிடம் கொடுத்தார்.
நைருதி என்னவென்று பார்க்க…
“இக்காலத்திற்கு ஏற்ற வஸ்திரம்” என்றவர், “உடுக்கத் தெரியுமா? யாரேனும் உதவிக்கு அனுப்பவா?” எனக் கேட்டார்.
“இந்த காலத்து ட்ரெஸ் அப்படின்னா… யூ மீன்?” என்று வார்த்தையை ராகமிட்டு இழுத்து, மார்பு கச்சையோடு தன்னை நினைத்துப் பார்த்து கண்களை அகல விரித்தாள்.
அவளின் முகம் கண்டு மனம் அறிந்த ராஜகுரு சத்தமிட்டு சிரித்திருந்தார்.
“மக்கள் எவ்வழியோ அவ்வழியில் தான் யாமும் பயணிக்க வேண்டும்” என்றார்.
“புரியுது” என்றவள் அருகில் ஓடும் ஆற்றை நோக்கிச் செல்ல,
“நதி” எனும் தேவித்தின் குரல் அவளது இதயத்தை அதிரச் செய்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
28
+1
+1