அத்தியாயம் 35
புரவியில் ஆறேழு வீரர்கள் அக்காட்டையே பார்வையால் அலசியபடி ஆக்ரோஷமாக வந்து கொண்டிருக்க… அவர்களின் வேகம் புரவியின் குளம்பொலியில் தெரிந்தது.
“யார் இவர்கள் செம்பா? இவர்களுக்காக பயந்து நாம் ஏன் ஒளிந்திருக்க வேண்டும்?”
கேட்ட நைருதியை மெல்ல பேசுமாறு கூறிய செம்பன்,
“தேசமும், தேசத்தின் அரசனும் பார் போற்றுபவனாக இருப்பின், வீழ்த்துவதற்கு வஞ்சம் கொண்டவர்கள் அத்தேசத்திலே உலவுவது நியதி தானே தேவி. இவர்களும் அக்கயவர்களே” என்ற செம்பன், “தங்களிடம் அதீத மாறுதல் தாயே! உடல்நலன் குன்றிய போது தங்களின் சித்த நினைவுகள் யாவும் மறந்து போனதா அன்னையே?” என்று கனிவுடன் வினவினான்.
முழுதாக அவள் இக்கால மேகநதி என்று நம்புபவனுக்கும், அவள் குறித்து நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால் அரசனுக்கு விசுவாசமானவன் என்பதால் சொன்னதை நடைமுறை படுத்திக் கொண்டிருக்கிறான்.
அவனுக்குள்ளிருக்கும் முதல் வினா…
நைருதியின் தோற்ற மாற்றம். அதனைத் தொடர்ந்து, அரண்மனையில் இருக்க வேண்டியவள், தேசத்தின் ஒரு முனை எல்லையான இவ்வனத்தில் எப்படி? அவள் பேசும் விதம். நாடு குறித்து அனைத்து தகவல்களையும் மன்னனுக்கு அடுத்த நிலையில் ஏற்றிருப்பவள், இங்கு நிலவும் சிறு சிறு விஷயத்தையும் புதிது போல் கேட்பது… இப்படி அவனுள்ளும் எண்ணிலடங்கா வினாக்கள் உள்ளன. ஆனால் அதனை கேட்கவும், அறிந்துகொள்ளவும் அனுமதியில்லை.
“நான் நன்றாகத்தான் உள்ளோம்” என்ற நைருதி, ‘நீ நினைக்கிற மாதிரி நான் உன் ராணி இல்லைடா. நான் எப்படி இங்க வந்தேன்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். அதுக்கு அந்த ராஜகுருவா மினிஸ்டரா அவர்கிட்ட போகணும். அதான் உன் பின்னால வந்துக்கிட்டு இருக்கேன்’ மனதில் நொந்துகொண்டாள். தன்னிலை குறித்து வருந்தி.
அந்நேரம் குதிரை பாய்ந்து வரும் சத்தம் மிக அருகில் கேட்க, நைருதியை எதுவும் பேச வேண்டாம் என்பதைப்போல செம்பன் தலையசைத்து விழி அமர்த்திட…
அவனுக்கு பின்னால் பார்வையை கொண்டு சென்ற நைருதி எக்கணம் எப்படி அவனது முதுகில் மாட்டியிருந்த அம்பையும், வில்லை ஒரேப்பொழுதில் எடுத்தாள் என்று செம்பனே உணரும் முன்பு, ஒரு கால் முன் வைத்து, பின் வைத்து பாதத்தை விரல்களால் அழுத்தி குதி உயர்த்தி… மார்பிற்கு நேர்கொண்ட இடது கரம் முன் நீட்டி, உள்ளங்கையால் வில்லின் இடை பிடித்து, வலது கரத்தின் மூவிரலால் அம்பின் அடி முனை அழுத்தி பிடித்து நாணேற்றி, கையின் விசையை பின்னிழுத்து முன்விட, வில்லின் உடலோடு பொருந்தியிருந்த அம்பு சற்றும் தப்பாது தன் இலக்கான வீரனின் நெற்றிப் பொட்டில் ஆழப் பதிந்தது.
வீரன் உடல் கீழ் சரிந்திட, மருந்து திமிரிய குதிரை முன் கால்கள் உயர்த்தி துள்ளி குதித்திட…
கண்ட காட்சியில் விழிகள் விரித்து செம்பன் ஆச்சரியம் கொண்டானென்றால் தன்னுடைய செயல் உணர்ந்து அதீத அதிர்ச்சியை உள்வாங்கினாள் நைருதி.
“கற்ற வித்தை உயிர் மறைந்தாலும், சிந்தை விட்டு அகலுமோ?” என்று மனைவியின் செயலில் சற்றும் ஆச்சரியம் கொள்ளாது, கர்வம் மேலோங்க, மீசை நுனி உராய்ந்து கன்னம் ஊர்ந்த ஒற்றை விரலில் மேகோனின் அமர்த்தலான புன்னகை தங்கியது.
“நதி” எனும் மென்னழைப்பு அவனது சுவாசமாய் விண்ணெங்கும் பரவியது.
அடுத்து வந்த வீரர்களை செம்பன் பந்தாடியிருக்க… இன்னும் தன்னுடைய செயலை நம்ப முடியாது அதிர்ச்சி நீங்காது நின்றிருந்தாள் பெண்ணவள்.
“இனியும் இங்கு நின்றிருப்பது உசிதமில்லை தேவி. புறப்படுவோம்.” கீழே விழுந்து கிடந்த வீரர்களை பார்த்துக்கொண்டே கூறினான் செம்பன்.
செம்பனின் கையிலிருந்த வில்லை தொட்டுப் பார்த்த நைருதி…
“என்னால் நம்ப முடியவில்லை செம்பன்” என்றாள்.
“போர் கலைகள் யாவும் தாம் அறிந்தது தானே தேவி” என்ற செம்பன், “உச்சி பொழுது உச்சம் தொடும் முன் செல்வோம்” என்றான்.
அதன் பின்னர் செம்பனின் ஒவ்வொரு அடியும் அதி கவனமாக இருந்திட, நைருதியிடம் பெரும் அமைதி.
நடக்கும் சூழல் ஒன்றும் அவளுக்கு விளங்கவில்லை. தன்னையே நம்ப முடியாத நிலையில் அவளின் மனமே அவளை ஆட்டுவித்தது.
“அம்பலம் சென்றுவிட்டால் பசி ஆறுவதற்கு உணவு கிட்டும் தாயே!” என்றான்.
“பசி இல்லை செம்பா” என்ற நைருதி, அதற்கு மேல் தனக்குள்ளே போராட முடியாது, வழியில் படர்ந்திருந்த மரத்தின் வேர் மீதே தலையை தாங்கியவாறு அமர்ந்திட்டாள்.
“உடல் நோவு கொள்கிறதா?” என்ற செம்பன், நீர் நிறைந்த குடுவையை அவள் முன் நீட்டினான்.
“நான் யாரு செம்பன்?”
நின்றிருந்தவனை முகம் உயர்த்தி பார்த்தவளின் விழிகளில் பெரும் தவிப்பு. தேடல் அடங்கிய அலைப்புறல்.
“தேவி?” அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் செம்பன். கலக்கம் சூழ, அவளின் வருத்தம் தாக்கிட.
அவளுக்கும் என்ன சொல்லி தன்னுடைய நிலையை செம்பனுக்கு விளக்குவதென்று தெரியவில்லை.
கண்கள் மூடி மனதை அமைதிப் படுத்தியவள், தன்னுடைய பேண்ட்டிலிருந்து அலைபேசியை எடுத்து ஆன் செய்தாள்.
தான் வந்திருக்கும் காலம் அறிந்ததுமே அலைபேசியை அணைத்து வைத்திருந்தாள்.
சுருள் சுருளாக பல வர்ணங்களில் ஒளிக்கற்றை சுழன்று உயிர் பெற்ற அலைபேசியின் திரை நிறைத்தது தேவித்தின் முகம்.
“மகிழ்” என்று உச்சரித்தவளின் துளி கண்ணீர் அவனின் முகம் விழுந்து தெறித்தது.
“மன்னரின் நினைவில் உம் உள்ளம் வாடுவது விளங்குகிறது தேவி. இன்னும் சில ஓரைகளில் சிவஞ்சயம் சென்றிடலாம்” என்ற செம்பன், புகைபடத்தை ஆச்சரியமாக உற்று நோக்கினான்.
“இது பனைத்தாள்கள் போல் அல்லவே! பிறகு இதிலெப்படி தேவி மன்னரின் முகம் தெரிகிறது. அதிலும் தோற்றம் மாறுபடுகிறது. யார் தீட்டிய ஓவியம் இது?” என்ற செம்பனின் கேள்வியில், ஆயிரம் இடிகள் மின்னல் ஊடுருவ தலைக்கு மேல் விழுந்த உணர்வில் விழிகள் விரித்து செம்பனை பார்த்தவள், அவனது பேச்சில் மூளை கிரகித்த பொருளில் உறைந்து போனாள்.
செம்பனின் பார்வை முழுக்க நைருதியின் உள்ளங்கையில் வீற்றிருந்த அலைபேசியிலேயே நிலைத்திருக்க, அவளின் அதிர்வையோ ஸ்தம்பித்த நிலையையோ செம்பன் அறியவில்லை.
“மாமன்னருக்கு முகிழ் சேர்ப்பது அவரது வதனத்தில் கூர் முனையாய் வீற்றிருக்கும் மூக்கணடி தான் தேவி… எத்தனை அம்சமாக பொருந்தியுள்ளது. இருப்பினும் தோற்றத்தில் அலாதி மாற்றம் தாயே!” என்றான்.
(முகிழ் – மென்மையும் இளமையும் சேர்ந்த அழகு.
மூக்கணடி – மீசை.)
செம்பனின் வார்த்தைகளைக் கொண்டு மகிழ் மேகோன் உருவம் தன்னுடைய கணவன் தேவித்தின் உருவத்திற்கு சற்றும் மாற்றில்லாதது… இருவரும் தோற்றத்தால் ஒற்றுமை உடையவர்கள் என்பதை மெல்ல உள்வாங்கி ஏற்றுக் கொண்டவள்,
அனைத்திற்கு விடை ராஜகுருவால் மட்டுமே அறிய முடியும் என்பதை திண்ணமாக நம்பினாள்.
அக்கணம் அவள் புரிந்துகொண்ட ஒன்று…
“இவர்களாலே நான் இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் ஏன்? எதற்கு?” மண்டை குடைந்த கேள்விகளில், தலையை இரு பக்கமும் அசைத்து நிலை பெற்றவள்…
“போகலாம் செம்பா” என்று எழுந்து நடந்தாள்.
அதன் பின்னர் இரண்டு மனை நேரங்களுக்கு மேலாக நடந்து பயணம் தொடர்ந்த போதும், நைருதி ஒரு வார்த்தை பேசவில்லை.
பழக்கமில்லா நெடுந்தூர நடைப்பயணம் மட்டும் கால் வலியையும் உடல் சோர்வையும் அளிக்க… மனம் நிரம்பிய கேள்விகளுக்கெல்லாம் விரைந்து விடை காண வேண்டுமென்பதை உருப்போட்டபடி வலிகளை ஒதுக்கி வைத்து முன்னேறினாள்.
“சிறிது ஓய்வெடுத்து செல்லலாம் தேவி!” செம்பன் கூறியதை காதில் வாங்காது நடந்தாள். அவளின் முகத்தில் தென்பட்ட களைப்பில் அவன் தான் கலக்கம் கொண்டான்.
“அரசியாருக்கு எந்தவொரு இன்னலும் நேரக்கூடாது. நாழிகைகள் சென்றாலும், அவரின் தேக ஆரோக்கியம் முக்கியம்” என்று எச்சரித்த ராஜகுருவின் வார்த்தைகள் வேறு செவி தீண்டி அவனை கலக்கமுற செய்தது.
“இன்னும் எத்தனை காலம் உள்ளது செம்பா?”
அவளின் வீம்பில் மௌனித்து நடந்து கொண்டிருந்த செம்பன் சட்டென்று கேட்ட அவளின் கேள்வியை உணராது மலங்க நிமிர்ந்து பார்த்தான்.
அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவளின் பின்னால் வானை ஒட்டித் தெரிந்த கொண்டை சூடிய பிறை நிலவில்…
“இரு நாழிகைகளில் சிவஞ்சயம் சென்றிடுவோம் தேவி. ஈசனின் பிறை தெரிகிறது பாருங்கள்” என்றான்.
திரும்பி பார்த்தவளுக்கு, வெகு தூரத்தில் வெள்ளிக் கம்பியாய் வானிலிருந்து கொட்டுவதைப்போல் தெரிந்த அருவியின் உயரத்திற்கு ஈடாக சிவனின் உச்சிக் கொண்டையும் அதில் எம் பெருமான் சூடியிருக்கும் பிறை நிலவும் தெரிந்தது.
“இங்கிருந்து தெரிகிறதே… சிலை அத்தனை உயரமா?” எனக் கேட்டவள் முன்னோக்கி அடி வைத்தாள்.
“சிலையை வடிவமைத்ததே தாங்கல் தானே! உமக்குத் தெரியாதா தேவி ஈசனின் அருஞ்சிகரம்?” என்ற செம்பனின் கேள்வியில் முன்பு போலான ஆச்சரியங்கள் அவளிடமில்லை.
(அருஞ்சிகரம் – அரிதான உயரம்.)
இயல்பாக கேட்டுக்கொண்டாள்.
“இந்த சிலை குறித்து தாம் அறியாத ஒரு விடயம் யான் கூறுகிறோம் தேவி” என்ற செம்பன், “மன்னரின் ஜனன விழாவின் போது, அவருக்கு பரிசில் அளிப்பதற்காக, அரசின் சிவ பக்திக்காக, அவர் மிகவும் விரும்பும் சிவஞ்சய சிவ அம்பலத்தில் அவருக்காகவே இப்பெரும் அமிழ்த நிலை உடைய ஈசனின் முழு திருவுருவச் சிலையை தாம் உருவாக்கியதாக மக்களிடையே பேச்சு உள்ளது” என்றான்.
(அமிழ்தநிலை – புனிதமான உயர்வு.)
‘காசிப் அப்போவே இருந்திருக்கு போல.’ செம்பன் கூறியதில் அவள் நினைத்தது இது மட்டுமே. அவளால் வேறென்ன நினைத்திட முடியும்?
அவளின் குழப்பமெல்லாம்… ‘உருவம் மட்டும் தான் ஒன்றா, இல்லை அவ்வரசியின் மறு பிறப்பா தன்னுடையது?’ என்பதில் சரியாக வந்து நின்றது.
அதிலும் மனம் சரியான பாதையில் சிந்தையை கொண்டுச்செல்ல, முன்பு கண்ட கனவில் வந்தது ‘தேவித்தா? மேகோனா?’ எனும் குழப்பமும் அவளுள் உண்டாகியது. திடுக்கிடலோடு.
“கடவுளே!” நெற்றியில் தட்டிக் கொண்டவள், “இப்படியெல்லாம் யோசிக்காத ருதி. உன் கனவில் உன்னோட வந்தது உன் மாமா மட்டும் தான்” என தனக்கே அழுத்திச் சொல்லிக் கொண்டாள்.
அந்நேரம் அவளின் மார்பில் பொருந்தியிருக்கும் இதயம் ஊதா நிறத்தில் மின்னி ஒளிர… உள்ளங்கையால் இறுக்கிப் பிடித்தாள்.
“மகிழ்.”
அவளின் அழைப்பு காற்றில் கலந்து வந்து செவிகள் உரசியதுவோ?
“யாம் உமக்காக பெரும் ஆவலோடு, தீரா ஏக்கத்தோடு காத்திருக்கோம் நதி” என்று அரியணையில் அரிமாவாய் அமர்ந்திருந்த மேகோனின் அதரம் உச்சரித்தது.
சட்டென்று உள்ளங்கை சில்லிட்டுப்போக…
‘நான் எங்க போயிருப்பேன் கண்டு பிடிச்சிட்டியா மாமா?’ என மானசீகமாகக் கேட்டுக்கொண்டாள். தன்னவனிடம்.
“உமக்காக யாமும் உம்மைத்தேடி வரவிருக்கிறோம் நதி. அச்சமின்றி கலக்கமின்றி எம்மிடம் வந்து சேர்வாயாக” என்ற மேகோன் புன்னகை அளவற்று நீண்டு விரிந்தது.
“சேர வேண்டிய தலம் இதுவே தேவி” என்ற செம்பன், தலையை உயர்த்தி பார்த்து, இரு கரம் கூப்பி வணங்கினான்.
அவனைத் தொடர்ந்து பார்வையை உயர்த்தியவள் கண்களை கூசிய சூரிய ஒளியில் இமைகள் மூடித் திறந்திட, சிவனின் பார்வை அழுத்தமாக தன்னில் படிவதாக உணர்ந்தாள்.
அமர்ந்த நிலையில் பெரும் உருவச்சிலை. முக்கண்ணனின் அக விழிகள் அவளின் வரவை உணர்ந்து அகம் மகிழ்ந்ததுவோ, சிவஞ்சயத்தின் எல்லைப் பகுதியில் அவளின் பாதம் பதிந்திட, சட்டென்று வெண் மேகங்கள் கருமை பூசி பூஞ்சாரலாய் மழைத் தூறியது.
கொட்டும் விண்ணீரின் குளுமையில் கண்கள் திறந்த ராஜகுருவின் பார்வை தனக்கு நேர்கொண்ட, சிவனின் உருவம் கண்டு நின்றிருந்த நைருதியின் மீது ஆதுரமாக படிந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
30
+1
+1