அத்தியாயம் 34
புது தில்லி
CSIR – NPL
இந்திய தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்.
தேவித் சொல்லியதற்காக அவனது செயல்திட்ட படிவத்தை, ஆராய்ச்சிகூட ஒப்புதல் பிரிவிலிருந்து அழிப்பதற்காக வீரட் ஆய்வகம் வந்திருந்தான்.
அன்றைய தினம் அங்கு பணி செய்யும் சீனியர், ஜூனியர் ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் புதிய வடிவமைப்பு ஒன்றிற்கான தர ஆய்வு சோதனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தேவித் தன்னுடைய திருமணத்திற்காக இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்திருக்க… நைருதி சென்னை சென்றதும் விடுமுறை வேண்டாமென்று ஆய்வகம் செல்ல நினைத்திருந்தவன் நடுவில் நிகழ்ந்த தேவையற்ற நிகழ்வால் இந்த இடைவெளி அவசியமென்று இருந்துவிட்டான்.
தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் பிரிவில் தேவித் முக்கியமானவன். அவனும் அன்று இருத்தல் அவசியம். அதற்காக கூட்டத்திற்கு மட்டும் வருமாறு அவனுக்கு அழைப்பு வந்திருக்க… வீரட் கிளம்பிய சில நிமிடங்களில் தேவித்தும் ஆய்வுகூடம் வந்திருந்தான்.
நுழைவு வாயிலில் தேவித்தின் வாகனம் நுழைய அதனின் எண் முதல் உள்ளே அமர்ந்திருக்கும் தேவித்தின் விழிகள் வரை யாவும் ஸ்கேனர் மூலம் ஆராய்ந்து பதிவு செய்யப்பட்டது.
அங்கு அப்படித்தான் சிறு துரும்பும் அத்தனை எளிதாக உள்ளே நுழையவும் முடியாது, வெளியேறவும் இயலாது. தினம் பணி செய்திட வந்து செல்லும் நபராக இருந்தாலும் சோதனைக்கு உட்பட்டே அனுமதிக்கப்படுவர்.
பரந்த பெரும் பரப்பு. நுழைவு வாயில் சோதனை முடிந்து ஆய்வுக்கூட கட்டிடம் வந்ததும் தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்து உள்ளே நுழைந்தவன், அடுத்தக்கட்ட சோதனையாக தனது கை ரேகையை பதிக்க, முக்கிய வாயில் கதவு திறந்தது.
தேவித் உள்ளே நுழைந்ததும் அவனது பார்வை நண்பனைத் தேடியது. அப்போது தான் வீரட் ‘டாக்ஸ் செக்யூரிட்டி’ பிரிவிற்குள் செல்வதற்காக தன்னுடைய கண்களை ஸ்கேன் செய்து கொண்டிருந்தான்.
புதிய செயல்திட்டம் ஒன்று அனுமதி கேட்டு ஆய்விற்கு வருகிறது என்றால், அதனை முதலில் பார்ப்பது வீரட்டாகத்தான் இருக்கும். அவன் அதனை சோதனை மேற்கொண்டு சரிவரும் என்றால் தான் அடுத்தக்கட்ட சோதனையாக தேவித்தின் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
வேகமாக வீரட்டின் அருகில் சென்ற தேவித், தன்னுடைய கையெழுத்து நிரப்பிய படிவம் ஒன்றை வீரட்டிடம் கொடுத்தான்.
அதனை வாங்கி பார்த்த வீரட்…
“டெலிட் பண்ணா மேட்டர் ஓவர்டா… இப்போ எதுக்கு லீகலா?” எனக் கேட்டான்.
“உனக்கு சிக்கல் வந்திடக் கூடாதே” என்ற தேவித், “சிக்ஸ் மன்த் முன்ன வாங்கிட்ட மாதிரி ரிஜிஸ்டர் பண்ணிடு” என்றுவிட்டு, அருகிலிருந்த மின்தூக்கியில் நுழைந்திட்டான்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் நகல்களை திரும்ப பெற வேண்டுமென்றால் முறையாக விண்ணப்பித்து, வீரட் ஒப்புதல் அளித்து கையெழுத்து இட்ட பின்னரே ஆவணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.
மென்பொருள் ஆவணம் என்றால், CSIR சம்பந்தப்பட்ட கணினி கோப்பிலிருந்து முற்றிலும் அழித்துவிட்டு, உரியவருக்கு அது குறித்து மின்னஞ்சல் அனுப்பப்படும். வன்பொருள் ஆவணமும் இருப்பின் முறையான விதிகளுக்கு உட்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.
அசல் ஆவணம் தேவித்திடம் இருக்க… இங்கு அவனது செயல்முறை திட்டத்தின் நகல் மென் மற்றும் வன்பொருள் ஆவணங்களாக சமர்ப்பித்திருந்தான்.
அவனது செயல்முறை தோல்வியடைக்கூடிய ஒன்றென்று நிராகரிக்கப்பட்டிருக்க, அப்போதே வன்பொருள் படிவம் அவனிடம் ஆராய்ச்சிக் குழு ஒப்படைத்திருந்தது.
தன்னுடைய செயல்முறையில் சில மாற்றங்கள் செய்து மீண்டும், சோதனைக்குழுவிடம் ஆராய்தலுக்கு அனுப்ப வேண்டுமென்ற முடிவில் தேவித் இருந்ததால், மென்பொருள் படிவத்தை திரும்ப பெறாது விட்டு வைத்திருந்தான்.
இன்று அது கதிரேசன் கைகளில் சேர்ந்தால்? தேவித்தின் ஒட்டு மொத்த உழைப்பு, அவனது அதீத அறிவாற்றல் அனைத்தும் வேறொரு நாட்டிற்கு உரிமையாக்கப்படும்.
முறையான வழியில் அதனை திரும்பப் பெற விண்ணப்பித்தால்… நிச்சயம் கதிரேசனிடம் செய்தி செல்லும். தேவித்திடம் ஒப்படைக்கப்படாலும், அவரும் ஒரு நகல் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதற்காகவே தேவித் நண்பனை வைத்து முயற்சிக்கின்றான்.
யாருக்கும் தெரியாது செய்ய நினைத்தாலும், தன்னால் வீரட்டிற்கு எவ்வித கரும்புள்ளியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், முறையாக நடைமுறைப் படுத்தினான்.
தேவித் தன்னுடைய மென்பொருள் ஆவணத்தை உரிமைக்கோரி விண்ணப்பித்த படிவத்தை ஆறு மாதத்திற்கு முந்தைய தேதி ஒன்றை குறிப்பிட்டு, அதற்குரிய கோப்பில் வைத்து திரும்பிய வீரட்…
தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்த கதிரேசனை கண்டு அதிர்ந்தான். இருப்பினும் அதிர்வை முகத்தில் காட்டாது…
“ஹாய் சீஃப்” என்றிருந்தான்.
“டோர் ஓபன் செய்தால் திரும்ப ஐய் ஃபிரீஸ் வச்சு லாக் பண்றது இல்லையா வீரட்” என்றார்.
தன் கையிலிருந்த காகிதத்தை யாரும் பார்த்துவிடாது சரியான இடத்தில் வைக்க வேண்டுமென்ற பதற்றத்தில், சென்சார் மூலமாக கதவு மூடினாலும், பிறர் வந்தாலும் திறக்க முடியாதவாறு தன்னுடைய விழிகளை வைத்து லாக் செய்யாமல் விட்ட மடமையை நினைத்து நொந்து கொண்டவன், தன்னுடைய கணினியை ஆராய்ந்து கொண்டிருக்கும் கதிரேசனை ஒன்றும் சொல்ல முடியாது நின்றான்.
அப்பகுதி முழுவதும் வீரட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கதிரேசனுக்கு வேலை இல்லை. ஆனால் துறையின் தலைமை சிறப்பு அதிகாரி என்று சட்டமாக அவன் இருக்கையில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய கணினியில் எதை தேடுகிறார் என்பது தெரிந்து கலக்கம் கொண்டான்.
அவர் ஒவ்வொரு கோப்பாக திறந்து பார்க்க… வீரட்டிற்கு நெற்றியில் வியர்த்து வழிந்தது.
இதில் நண்பனின் உயிரும் அடங்கியுள்ளதே… அந்த கலக்கம் அவனுக்கு.
“ஊஃப்…” மூச்சினை இழுத்து வெளியேற்றியவன்,
“நீங்க தேடுறது அதில் இருக்காது சார்” என்றான்.
கதிரேசன் புருவம் உயர்த்தினார்.
“நான் எதை தேடுறேன் தெரியுமா உங்களுக்கு?” என்றவர், “தேவித் நிழல் நீங்க என்பதையே மறந்துட்டேன் பாருங்க நான்” என்றார்.
வீரட் அவரை அழுத்தமாக பார்த்திருக்க…
“பய எல்லாம் சொல்லிட்டானா?” எனக் கேட்டார்.
“சீஃப்?”
“சொல்லியிருக்கான்… ரைட்?” என்றார்.
….
“அப்போ நான் தேடி வந்தது எனக்கு கிடைக்காது” என்று இருக்கையிலிருந்து எழுந்துகொண்ட கதிரேசன்,
“எப்படி?” எனக் கேட்டார்.
“சிக்ஸ் மன்த் முன்ன அப்ளை பண்ணான். சோ, இட்ஸ் டெலிட்டட்” என்ற வீரட்… “புரோசிஜர் அதானே?” என்றான்.
“வெல்” என்று நகர்ந்த கதிரேசன், நின்று திரும்பி…
“நீ சொன்னாலும் கேட்கமாட்டானா?” என்றார்.
“அவனுக்கு பிடிக்காததை நான் செய்ய சொல்றது இல்லை சீஃப்” என்ற வீரட், “மீட்டிங் டைம் ஆச்சே!” என்றான்.
“யா… ஐ கினோவ்” என்றவர் வேகமாக அங்கிருந்து வெளியேற, அவர் தேடியதை, தேவித்தின் செய்முறை திட்டக் குறிப்புகளை துரித கதியில் மொத்தமாக அழித்திருந்தான். மீண்டும் எடுக்க முடியாத அளவிற்கு.
தேவித்திற்கு தம்ப்ஸ் எமோஜியை அனுப்பி வைத்தவன், ஆசுவாசமாகினான்.
தன்னுடைய கூட்டம் முடிந்து வெளியில் வந்த தேவித், நண்பனின் தகவலை பார்த்துவிட்டு அவனுக்கு அழைத்தான்.
வீரட் வீட்டிற்கு சென்றிருக்க, நேரில் வந்து பேசுவதாகக் கூறி வைத்திட்டான்.
தேவித் வீட்டிற்கு வந்த பத்து நிமிடத்தில் வீரட்டும் அங்கு வந்தான். ஆய்வுக்கூடத்தில் நடந்ததை கூறியவன்,
“கவனமா இருடா. ஒரு நிமிஷம் அவரை அங்க பார்த்ததும் பக்குன்னு ஆகிருச்சு. வெளிப்படையா செய்றார் அப்படின்னா, பின்னாடி இருக்கவங்க ரொம்ப பவர்ஃபுல் ஆனவங்க நினைக்கிறேன்” என்றான்.
“அதைவிடு” என்ற தேவித், “மார்னிங் அப்பா ஒரு விஷயம் சொன்னாங்க” என்றான்.
“என்னது?” என்ற வீரட், தேவித்தின் பின்னால் சென்றான்.
இன்று தான் தேவித்தின் ஆய்வுக் கூடத்திற்குள் முதல் முறையாக வீரட் வருகிறான்.
அவ்விடத்தை, அமைந்திருக்கும் விதத்தை பார்ப்பவனுக்கு அத்தனை மலைப்பாக இருந்தது.
“தேவா… குட்டி உலகம் டா இது” என்ற வீரட் ஒவ்வொரு இடத்தையும் ஆச்சரியமாக பார்வையிட்டான்.
“சைனாக்காரன் பார்த்தான் மயங்கி விழுந்திடுவான். அவன் ஏன் உன்னை கொத்தா தூக்குறதுக்கு காத்திருக்கான்னு இப்போ புரியுது” என்றான்.
தேவித் வழமையான மென் புன்னகையை உதிர்த்து… அவ்விடத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
“என்னை எப்படி நம்புற தேவா? இப்போக்கூட நான் டிராஃப்ட் கிளியர் பண்ணாம, சீஃப் கிட்ட கொடுத்திருந்தால்? இல்லை, அந்த சைனா லேப் டீமிடம் நேரடியா டீல் பேசியிருந்தால்?” என்றான் வீரட். நடுக்கூடத்தில் இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி பார்வையை சுழற்றியபடி.
“துரோகம் பண்ற மூஞ்சியைப் பாரு” என்ற தேவித்,
“மேரேஜ் முடிச்சு வரும்போது அப்பா ஒரு பேக் கொடுத்தாருடா, இங்க தான் எங்கையோ வச்சேன். கிடைக்குதான்னு தேடு” என்றான்.
“ம்ம்” என்ற வீரட், “அதிலென்ன இருக்கு?” எனக் கேட்டான். அங்கு புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த அலமாரியை துழாவியவனாக.
“தெரியலடா… அதுல என்ன இருக்குன்னு அப்பாவுக்கும் தெரியல. என்கிட்ட கொடுக்க சொன்னதா அப்பாவுக்கு தாத்தா அப்பாகிட்ட கொடுத்திருக்கார். அந்த தாத்தாக்கு அவர் தாத்தா கொடுத்ததாம். அப்பாவுடைய தாத்தா தான் எனக்கு இந்த பெயர் வைக்கணும் சொல்லியிருக்கார்” என்ற தேவித், தேடியும் அந்த பை கிடைக்கவில்லை என்றதும், கண்கள் மூடி எங்கு வைத்தோமென்று சிந்தித்தான்.
“அப்போ உன் பேருக்கும், அந்த பைக்கும் ஏதோ சம்மந்தமிருக்குன்னு சொல்லு…”
தெரியவில்லை எனும் விதமாக உதடு சுளித்து… பார்வையை ஏற்றி இறக்கினான் தேவித்.
“எங்க குடும்பத்தில் பல தலைமுறையா அடுத்தடுத்த வாரிசுகளுக்கு அந்த பை கை மாறியிருக்கு. ஆனாலும் யாருக்கும் அதிலென்ன இருக்குன்னு தெரியல. என் மூலமா முடிவுக்கு வரும்னு மட்டும் தெரிஞ்சி வச்சிருக்காங்க” என்ற தேவித், “என் கல்யாணத்துக்கு அப்புறம் பெரிய இக்கட்டான சூழல் ஒன்னு எனக்கு வருமாம். அப்போ இதை என்னை திறந்து பார்க்க சொல்லி சொன்னாங்களாம். அதுக்காகத்தான் அப்பா மார்னிங் நீ இங்கிருந்து போகும்போது எனக்கு கால் பண்ணார்” என்றான்.
“என்னடா ஏதோ காமிக்ஸ் புக்ல வர கதையெல்லாம் சொல்ற” என்ற வீரட், “இது தான் டேஞ்சர் சிட்டுவேஷனா உனக்கு?” எனக் கேட்டான்.
“என்னோட மொத்தம் என் நதி தான். அவளே என் பக்கத்தில் இல்லை. அப்போ இது எனக்கு டேஞ்சர் தானே வீர்” என்ற தேவித், “நான் அதுக்காக எல்லாம் இப்போ அந்த பேக்’கை தேடலா. அப்பா சொன்னாங்க. அதை என்னன்னு பார்க்க சொன்னாங்க. அப்பா சொன்ன வார்த்தைக்காக செய்யணும்” என்றான்.
“உன் அப்பா பாசம் முடியலடா என்னால. அதை தேடி அதுல என்ன இருக்குன்னு பார்த்திட்டு, வேகமாக டைம் டிராவல் பண்ற வேலையை பார்ப்போம் டா. உன் மச்சான் வேற மணிக்கு ஒருவாட்டி எனக்கு கால் பண்ணி தொல்லை பண்றான். நீ அந்த காலத்துக்கு போகும் போது, அவனையும் கூட்டிட்டுபோயிடு. என்னை பண்ற டார்ச்சருக்கு அங்க எவனோடவாது ஈட்டி, வேல் கம்புன்னு சண்டை போடட்டும்” என்றான்.
“நல்ல பழிவாங்கல்டா” என்ற தேவித், “யார்கூடவோ ஏன் போடணும்? உன்னையும் கூட்டிட்டுப் போறேன். நீயே வந்து அவனோட சண்டை போடு” என்றான்.
“உனக்கு என்மேல அப்படி என்ன காண்டு?” என்று வீரட் கேட்ட பாவனையில் அவனை திரும்பிப் பார்த்து சிரித்திட்ட தேவித், அவனை நோக்கி கையை நீட்ட,
“என்னடா மச்சானை சொன்னதும் அடிக்க வர” என்று தலையை ஒரு பக்கமாக சாய்த்திட, அவனுக்கு பின்னால் கை நீட்டி இத்தனை நேரம் தேடிய பையை எடுத்திருந்தான் தேவித்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
25
+1
+1