Loading

அத்தியாயம் 33

தானிருக்கும் இடமும் காலமும் தெரிந்ததும் தான்… அதுவரை இல்லாத பல கேள்விகள் நைருதியிடம் அணிவகுத்து நின்றன.

முதலில் தானெப்படி இங்கு வந்தோம் என்கிற கேள்விக்கு பதில் தேடியவளுக்கு… தன்னுடைய அலுவலக அருங்காட்சியகத்தில் மகிழ் மேகோனின் சான்றாக கிடைக்கப்பெற்ற ஓலைத் தாள்களை புரட்டிய கணம் அதிலிருந்த பெண் சிற்பத்தின் தாலியிலிருந்து ஒளி வந்தது மட்டுமே நினைவுக்கு வந்தது.

அக்கணம் அவளின் தாலியில் கோர்க்கப்பட்ட இதயம் ஊதா நிறத்தில் மின்னி ஒளிர,

தான் இங்கு வருவதற்கு திறவாக இருந்தது எது என்று அவளுக்கு விளங்கியது.

‘எல்லாம் இந்த தாலியால் வந்த வினையா? அப்போவே அம்மா சொன்னாங்க… இதுக்குத்தான் அம்மா பேச்சை கேட்கணும் சொல்றது.’ மனதில் அரற்றியவளாக உறங்கியிருக்க… அவளின் அகத்தின் நாயகன் கருவிழியில் காட்சிப் பிம்பமாய் தோன்றிட, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் வதனம் புன்னகையில் விரிந்து, முகம் குழைந்து விகசித்தது.

நிழல் காட்சியாக இருப்பினும், கண்கள் உள்வாங்கும் முகம் தன்னுடையவனதாக இருந்திட, அவளிடம் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. மாறாக சேர வேண்டிய கரம் பிடித்திட்ட நிம்மதி.

அவளைப் பொறுத்த வரை காணும் உருவம் நைருதி, தேவித்தாக இருக்க… மனதில் பூக்கள் மலர ரசித்திருந்தாள்.

“மகிழ்…” அவளின் வதனம் உச்சரிக்க… ஆழ் நெஞ்சத்தில் மென் குளுமை.

இனி பார்த்திட வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில் அவளிருக்க, இப்படி அவளின் நாயகன் உடனிருந்தால்? அதிலும் காதல் மொழி பேசினால்? பாவையவள் உருகி குலைந்தாள்.

நொடிகள் இப்படியே நீண்டு விடாதா எனும் ஏக்கம். மன்னன் கைகளில் கரையத் துவங்கிய கணம்.

யாவும் கனவின் நிழல் பிம்பம் என்பதை…

“தேவி” என்று செவிகளில் கட்டையாக ஒலித்த செம்பனின் குரல் நிகழ் மீட்டிட…

“மகிழ்” என்று ஏமாற்றமாக உச்சரித்தாள்.

“தேவி” என்று அவளின் கசங்கிய முகம் கண்டு கவலையாக செம்பன் அழைத்திட…

“யோவ் போயா அங்குட்டு… தேவி நேவின்னு உசுர வாங்கிட்டு” என்று நெற்றியை அழுந்த பிடித்தவளாக, சற்று முன்னர் கனவில் கண்ட காட்சியை மனதில் ஓட்டிப் பார்த்தாள்.

“சிரம் நோவு கொள்கிறதா தேவி?”

“இப்போ நாம பிரஷ் பண்ணினோம் தானே?”

அவன் ஒன்று கேட்க அவள் வேறொன்றைக் கேட்டாள்.

“விளங்கவில்லையே!”

“ஒன்றுமில்லை” என்ற நைருதிக்கு அவளுடன் கனவில் கண்ட முகம் அவளது கணவனுடையது. அது மகிழ் மேகோனாக இருந்தாலும் அவளுக்கு தேவித் மகிழோன் தான்.

ஆதலால் இயற்கையே அவளின் கடந்த காலத்தை நினைவூட்டிட முயன்ற போதும், அவளுக்கு கணவனின் நினைவிலே இருப்பதால், இருக்கும் காலத்திற்கு ஏற்ப கனவு வந்துள்ளது என்று தவறான தெளிவு கொண்டாள்.

தன்னவளின் வருகை அறிந்து, அவளின் சிந்தை நிகழ்வுகளை அகத்தின் வழி உணர்ந்த மேகோனுக்கு புன்னகையில் மீசை நுனியும் சிவந்தது.

“யான் நேர்க்கொண்டு நிற்பினும்… மேகோனாக அன்றி தேவித்தாகவே உம் மனம் விரும்பும்” என சொல்லிக் கொண்டவனுக்கு, “எக்காலத்திலும் நின் நேசம் எமக்கு மட்டுமே உரித்தானது என்பதில் கர்வம் துளிர்க்குதடி” என்றான். காதலாக. நெஞ்சம் நிறைந்த அதீத நேசமாக.

‘வான் முழுவதும் இருள் வந்தாலும்,
நீயே என் தீபம். ஒளி தரும் ஒற்றைக்கதிர்.

நின்னைத் தேடி நன் காத்திருப்பின் நீளம் அதீதம்.
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்,
நாட்களை கனவுகளாய் களைந்தேன்.

இந்நிலத்தில் மரங்களின் நடுவே, யான் நடந்த பாதையில்,
உமது அடிச்சுவடுகள்.
எம் கண்கள் வழிகாட்ட,
உம் பாதை தொடரும்.

மரத்தின் தழலில் நன் மூச்சும் இருக்கிறது.
வாய்க்காலில் கலங்கும் நீரில் நன் நிழலும் உன்னுடன் வழி செல்கிறது.

யான் ஒரு மனிதனாக இருக்க முடியாது…
உம் உயிர் ஊதிய வரைக்கும்,
காற்றாய் இருக்க விரும்புகிறேன்.

யாம் இங்கிருக்கிறோம்.
உமக்காக… எம் நதிக்காக!’

மனதில் தோன்றிய வரிகளை எழுத்துக்களாக நெஞ்சத்தில் தீட்டிய மேகோனின் விழிகளில் தன்னவளை பல யுகங்கள் கடந்து மீண்டும் நேரில் பார்த்திட வேண்டுமெனும் எதிர்பார்ப்பு.

கண்கள் மூடி மனதின் நேசத்தை உணர்வுகளால் தன்னவளிடம் சேர்பித்திட அவனது ஆவியும் துடித்தது.

அக்கணம் தேகம் தீண்டிய இளங்காற்றில் உள்ளம் சிலிர்த்தடங்கிட…

“மகிழ்” என்று தானாக உச்சரித்தாள் நைருதி.

“அரசரின் நினைவு தேவியை வதை கொள்கிறதென்று எண்ணுகிறேன்.” செம்பன் சிறு புன்னகையோடு கூறிட, அவனை ஙே என பார்த்த நைருதி…

‘உன் மன்னன் நினைவு எனக்கெதுக்குடா வரணும். எனக்கு என் மாமாவை பார்க்கணும் போலிருக்கே! அச்சோ மாமா சீக்கிரம் டைம் டிராவல் பண்ணி வந்திடேன். இங்க எனக்கு தலையெல்லாம் சுத்துது. தமிழே டப்பிங் படம் பார்க்குற மாதிரி இருக்கு.’ உள்ளுக்குள் புலம்பினாள். உதட்டில் சிரிப்பை காட்டி.

இருவரிடமும் இருக்கும் பெயர் ஒற்றுமையே செம்பனின் இத்தகைய பேச்சிற்கு காரணம் என நினைத்திருப்பவளுக்கு இருவரும் ஒருவரே என்பது எத்தகைய அதிர்வை கொடுக்கவிருக்கிறதோ?

“சிவஞ்சயம் சென்றுவிட்டால் ராஜகுரு அவர்கள் தங்களை அரண்மனை அழைத்துச் சென்றிடுவார்” என்றான் செம்பன்.

“அரண்மனைக்கு நான் ஏன் செல்ல வேண்டும்?”

“தங்களின் வாசம் அங்கு இருப்பது தானே முறையாகும் இராணி” என்ற செம்பன், “உண்பதற்கு பழங்கள் கொய்து வருகிறேன்” என்றான்.

“அதுக்கு முன்ன பல் வெட்டுதலுக்கு பசுந்தண்டு தாருங்கள்” என்றாள்.

கனவில் அறிந்த வார்த்தைகளை அவனிடம் பயன்படுத்திக் கொண்டாள்.

மேகோனின் காதலில் திளைத்த நிகழ்வு கனவாக வந்திருக்க, அவள் மனதில் நிறுத்தியதோ அவளின் தேவித்தை.

இயற்கை உணர்த்த நினைத்த முன்ஜென்ம நினைவூட்டல் அரத்தமற்றுப் போனது. இங்கு காதல் இயற்கைக்கும் எதிராக அமைந்தது.

பல் துலக்குவதற்கு குச்சியை ஒடித்துக் கொடுத்த செம்பன், “நதியில் சுத்தம் செய்துகொள்ளுங்கள்” என்று புதர் மறைவில் ஓடிய தண்ணீரை புதரை விலக்கி காண்பித்தான்.

செடிகள் சூழ, பாறைகளால் கரை அமைத்து, தண்ணீர் ஓடும் காட்சி அவள் கனவில் கண்ட அதே நிழற்பிம்பம்.

“என்னடா இது கனவில் பார்த்த மாதிரியே இருக்கே” என்று அவள் நதியின் அருகில் செல்ல… செம்பன் மரம் ஒன்றில் ஏறினான்.

கனவில் அவள் சறுக்கிய இடமும் தென்பட, வாயில் குச்சியை வைத்து தேய்த்தவாறு யோசனையாக அவ்விடம் நகர்ந்தாள்.

“கனவில் வந்தது நடக்குது. அப்போ இப்போ நான் வழுக்கி விழுந்தா மாமா வந்து பிடிப்பாரா?” என்றவளுக்கு, நடக்கப்போகும் நிகழ்வு கனவாக வரவில்லை, ஏற்கனவே பல காலங்கள் முன்பு நடந்த நிகழ்வென்று தெரியாது போனது.

கனவில் விழுந்த அச்சமோ என்னவோ மிகுந்த கவனத்துடனும் அதீத எதிர்பார்ப்புடனும் கால்கள் சறுக்கிவிடாது நீரில் இறங்கி சுத்தம் செய்து மேலேறியவளுக்கு மிகுந்த ஏமாற்றம்.

‘ருதி எதுக்கு ஃபீல் பண்ற? கனவில் நடந்தது நிஜத்தில் நடக்குமா என்ன?’

தான் கரை ஏறும்போது உண்மையில் தேவித் வந்து நின்றிடமாட்டானா எனும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்திட… முகம் சுருங்கினாள்.

“எவ்வளவு நாள் ஆனாலும் வந்திடு மாமா” என்று சொல்லியவள், “உன்னை பற்றி தெரிந்துகொள்ள நினைத்த பாவத்துக்கு இப்படி நீ வாழ்ந்த காலத்துக்கே கூட்டிட்டு வந்துட்டியே” என்று மகிழ் மேகோனை நன்கு திட்டித் தீர்த்தாள்.

“யார் மீது கோபம் தாயே?” என்று அவளின் பேச்சு புரியாத போதும், முகத்தின் சுருக்கமும், முணுமுணுப்பையும் வைத்து வினவியவாறு கைகளில் பழங்களுடன் அவளருகில் வந்தான் செம்பன்.

“நத்திங்” என்றவள், அவனின் புரியாத பாவனையில் சலிப்புற்றவளாக, “சும்மா என்ன பேசினாலும் புரியாத மாதிரி இருக்காத. நான் இப்படித்தான் பேசுவேன். என்ன புரியுதோ அதை வச்சு பதில் சொல்லு போதும்” என்று யார் மீது காட்டுவதென்று தெரியாத தன்னுடைய கடுகடுப்பை அவனிடம் காண்பித்தாள்.

“பசியில் நிலை தவறுகின்றீர் தாயே” என்ற செம்பன், “விளா மற்றும் நாவல் கனிகள் கிடைக்கப்பெற்றன. பசி ஆறுங்கள். யான் குடுவையில் நீர் கொண்டு வருகிறேன். புறப்படுவோம். பௌர்ணமி இன்று உச்சி சாமத்தில் முடிவுக்கு வருகிறது. அதற்குள் யாம் உம்மை ராஜகுருவிடம் சேர்ப்பிக்க வேண்டி கட்டளை” என்று நகர்ந்தான்.

செம்பன் கொடுத்துவிட்டுச் சென்ற பழங்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த நைருதி, தான் இங்கு வந்தது முதலான நிகழ்வை மனதில் ஓட்டிப் பார்த்தாள்.

‘நான் இங்க வரதுக்கு முன்னவே அந்த மினிஸ்டருக்கு தெரிஞ்சிருக்கு. செம்பன் நான் இந்த நாட்டு குயின் மாதிரி இருப்பதால், என்னை ராணின்னே நம்பிட்டான். நான் இங்க வந்ததுக்கான காரணம் இந்த தாலி தான். ஆனால் எப்படி அங்கேயும் இங்கேயும் கனெக்ட் ஆச்சு?’ என ஆராய்ந்தவள், ‘இப்போதைக்கு இவன் கூடவே போறது தான் நமக்கு சேஃப்… இல்லை இங்கேயே நாடோடியா அலைய வேண்டியது தான். இந்த நாட்டு ராணியையும் என்னையும் ஒண்ணா பார்க்கும்போது யாருக்கும் மயக்கம் வராமா பார்த்துக் கடவுளே’ என்று நாவல் பழம் ஒன்றை எடுத்து சுவைத்தவளின் கண்கள் அதனின் கலப்படமற்ற இயற்கை ருசியில் அகல விரிந்தன.

“இது தான் நாவல் பழத்தோட ஒரிஜினல் டேஸ்டா? செமயா இருக்கே” என்றவள், செம்பன் வரவும் அவனுக்கும் பகிர்ந்து கொடுத்து உண்டபடி நடக்கத் தொடங்கினர்.

“உங்க வீடு இங்க தான் இருக்கா?” அமைதியாக செல்வதற்கு ஏதேனும் பேசிக்கொண்டே செல்லலாம் என நினைத்து ஆரம்பித்தாள்.

“எம்முடையது வீடல்ல தேவி… மண்ணால் கட்டப்பட்ட குடில். இங்கு தான் உள்ளது. ஆனால் நாம் இப்பொழுது அங்கு செல்லவில்லை” என்றான் செம்பன்.

‘வீட்டுக்கும் குடிலுக்கும் வித்தியாசம் இருக்கு போல.’ தானாக யூகித்துக் கொண்டாள்.

அடுத்து என்ன பேசுவதென்று தெரியாத மௌனமாக நடக்க, பல காலடி சப்தங்கள் எதிரொலித்தன.

சட்டென்று நடையை நிறுத்திட்ட செம்பன், ஒலி வரும் திசையை அவதானிக்க செவிகளை கூர்மையாக்கி உற்று கவனித்தான்.

அவர்களுக்கு வலது பக்கமிருந்து சத்தம் வருவதை அறிந்த செம்பன்,

“யாராக இருக்குமென்று தெரியவில்லை. அவர்கள் நம்மை கடக்கும் வரை மறைந்து நிற்பது நன்று” என்றான்.

“எதுக்கு?”

“இங்கு உம் உயிருக்கு ஆபத்து நிறைந்துள்ளது தேவி.”

அவனது கூற்றில் அவளுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கத் துவங்கியது.

“ஆபத்தா?” என்றவளின் பார்வை, செம்பனுக்கு பின்னால் அவனது முதுகில் நீட்டிக் கொண்டிருந்த அம்பில் படிந்தது.

“இது மனுஷங்க நடந்துவர மாதிரி தெரியலையே?” என்றாள்.

“புரவியின் குளம்பு சத்தம் இராணி அறியாததா?” என்றவன், “நேர விரையம் வேண்டாம். வாருங்கள்” என்று அங்கிருந்து அடர்ந்த செடிகளுக்கு அருகில் இருந்த பாறைக்கு பின்னால் கூட்டிச் சென்றான்.

“இங்க அம்பு வைத்து தான் கொலை செய்வார்களா?”

“ஈட்டி, வாள், சங்கு, எறிகள்” என்றவன், “யுத்த கலத்தில் குத்துவாள் ஏந்தி மன்னருக்கு இணையாக போர் புரிந்த எம் அரசிக்கு தெரியாத ஆயுதங்கள் உண்டா?” என்றான்.

“எதே” என்றவளை வாயில் விரல் வைத்து பேச வேண்டாமென்பதைபோல் கண் காட்டினான்.

அவளுக்கு தேவித்தின் புத்தக அறையில், மகிழ் மேகோன் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போர் ஒன்றை பற்றிய சிறு புத்தகம் படித்தது நினைவில் எழ கண்களை மூடி, சுருக்கி, விரித்து, தலையை அசைத்து என்று மூளை உணர்த்தும் நிகழ்வை கிரகிக்க முயன்றவள்…

இமைக்குப் பொழுதில் செம்பனின் முதுகு தாங்கியிருந்த நாண் மற்றும் அம்பினை உருவி, தங்களை நோக்கி குறி வைத்து முன் வந்த ஒருவனின் நெற்றிப் பொட்டில் அம்பினை பாய்ச்சியிருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
23
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்