அத்தியாயம் 32
தேவித் இரவு நேரம் டெல்லி வந்து சேர்ந்திட, அடுத்தநாள் விடியலில் கதிரேசன் அவனைக் காண வந்திருந்தார்.
“என்ன யோசிச்சிருக்கீங்க தேவித்?”
அவரின் வருகை தேவித் அறிந்தது தான். ஆனால் இத்தனை சீக்கிரம் இருக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.
இரவு வெகு தாமதமாக வந்ததால் வீரட்டும் தேவித்துடன் தங்கிவிட்டிருந்தான்.
“நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன் தேவா. டிஃபன் கொண்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே அறையிலிருந்து வெளியில் வந்த வீரட், கதிரேசனை இத்தனை காலையில் எதிர்ப்பாராது நண்பனை ஏறிட்டான்.
“வீர்…” என்ற தேவித்தின் அழுத்தமான மெல்லிய அழைப்பில் அதிர்வு நீங்கியவன், “குட்மார்னிங் சீஃப்” என்றான்.
கதிரேசனிடம் சிறு தலையசைப்பு.
“ரோஷினி கால் பண்ணாடா. போயிட்டு வா” என்ற தேவித், வீரட்டின் தோளில் கை வைத்து வெளியில் தள்ளிக் கொண்டு வந்தான்.
“தர்ட்டி மினிட்ஸ் முன்ன தான்டா… நீ வந்துட்டியா கேட்டு மெசேஜ் பண்ணிருந்தார். அதுக்குள்ள வந்திருக்கார். அதுவும் டெல்லி பொலிஷன் ட்ராஃபிக்கில். கவனம் மச்சான்” என்று வெளிவாயிலில் நின்று சொல்லிய வீரட், “நான் அவர் போனதும் போறேன்” என்று நிலைப்படித் தாண்டி ஒரு காலை வீட்டிற்குள் வைத்திட,
“ம்ப்ச்… போயிட்டு வாடா” என்று நண்பனை வெளிநோக்கி தள்ளிவிட்டு கதவினை சாற்றி உள்ளே வந்தான் தேவித்.
மீண்டும் தான் வந்த விடயத்திற்கு நேரடியாக வந்தார் கதிரேசன்.
“என்ன முடிவு செய்திருக்கீங்க?”
“இதுக்கு பதில் அன்னைக்கே சொல்லிட்டேன் சீஃப்” என்ற தேவித், “உங்க மேல ரொம்பவே மரியாதை இருக்கு” என்றான்.
“நம்ம நாட்டில் பிராக்டிக்கலா இதை செய்ய நிறைய லீகல் ப்ராப்ளம் இருக்கு தேவித். பட், அங்க அப்படி இல்லை. சோ, உன்னுடையதை கொடுப்பதில் உனக்கென்ன ப்ராப்ளம்?” எனக் கேட்டார்.
“இது என்னோடதுங்கிற ஒரு ரீசன் போதுமே!” என்ற தேவித், “என்ன ப்ராப்ளம் கேட்டீங்கல?” என்று வலது கையால் இடது கன்னத்தை தேய்த்தான்.
“தமிழனோட முயற்சி தமிழனோட பெயரில் தான் வெளியில் வரணும்” என்று பார்வையில் அழுத்தத்தைக் காட்டிக் கூறினான்.
“இப்போ அவங்க பழங்கால குறிப்பாக…” என்று நிறுத்தி, “அவங்க நாட்டைச் சேர்ந்த தாவினோவின் ரிசர்ச் புக்’ன்னு சொல்லிட்டு இருக்காங்களே அதுக்கு மூலமே நம் தமிழ் மன்னன் தான்னு உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டு, அவரை பார்த்து ஏளனமான புன்னகை ஒன்றை சிந்தியவன், “நல்லா தெரியுமே உங்களுக்கு. அதனால் தானே சென்னை ஆர்க்கியாலஜிஸ்ட் மியூசியம் ஆபீஸர் கிட்ட பேரம் பேசியிருக்கீங்க” என்றான்.
“கண்டுபிடிச்சிட்டியா?” அவரிடம் அதிர்வோ, துரோக உணர்வோ கொஞ்சமும் இல்லை.
“அன்னைக்கு மட்டும் தாவினோ மகிழ் மேகோன் ஆராய்ச்சி தான் என்னுடைய ஆராய்ச்சிக்கு வழிகாட்டின்னு, அவரோட ரிசர்ச் நோட்டில் சின்னதா மேற்கோள் காட்டியிருந்தாலும், நம் நாட்டோட பெருமை உலகம் அறிந்திருக்கும். இப்பவும் அந்த பெருமை நம்ம நாட்டுக்கு கிடைக்கூடாதுன்னு அவங்க செய்யும் சதிக்கு நீங்க உடன் நிற்பது எனக்கு ஆச்சரியமா இருக்கு… நீங்களா இப்படின்னு” என்று ஆதங்கமாகக் கூறினான்.
“பெயர், புகழ் வைத்து என்ன கிடைச்சிடும் உனக்கு. ஒரு நாலு நாள் உலகம் உன் பேரை சொல்லும். அவ்வளவு தானே?” என்றார் நக்கலாக.
தேவித் பதில் வழங்காது அமைதியாக அவரை பார்த்திருந்தான்.
“நோபல் பிரைஸ்காகத்தானே இதை கொடுக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்க?” என்றவர், “இதுல வாங்கினா தான் ஆச்சா? வேற நல்ல ரிசர்ச்சின் கீழ் நான் வாங்கிக் கொடுக்கிறேன். என்னோட ஒரு கையெழுத்து போதும். உனக்கு நோபல் பிரைஸ் ஈசியா கிடைச்சிடும்” என்றார்.
(நோபல் – பல்வேறு துறைகளில் கொடுக்கப்படும் உயரிய விருது. ஸ்வீடன் நாட்டின் ராயல் சயின்ஸ் அகாடமியால் வழங்கப்படுகிறது.)
அவரின் கூற்றுக்கு மென் புன்னகை தேவித்திடம்.
“நோபலுக்காக இதை நான் செய்றேன்னு நீங்க நினைச்சா, உங்களுக்கு என்னை முழுசா தெரியலன்னு அர்த்தம்” என்றான்.
“வேறெதுக்காம்?” அப்பட்டமான கிண்டல் குரல்.
“நாலு நாளாக இருந்தாலும், தமிழன் தேவித் மகிழோன் அப்படின்னு உலகமே சொல்லுற என் பெயருக்காக” என்றான். மிக சாதாரண குரலில்.
“நாலு நாளுக்கு அப்புறம்?” என்ற கதிரேசன், “வெறும் பெயரை மட்டும் வைத்து ஒன்னும் பண்ண முடியாது. நல்ல விலை இருக்கு. உன்னோட மொத்த வாழ்வுக்கும் மேலான விலை” என்றார்.
“எப்போ நீங்க நம் நாட்டு பொக்கிஷமான தேவித்தின் பட்டயத்தை மியூசியத்திலிருந்து எடுத்து இன்னொரு நாட்டுக்கு கொடுக்கணும் நினைச்சீங்களோ அப்போவே உங்களுக்கு தமிழன் சொல்லிக்கிற தகுதி இல்லாமப் போச்சு… சோ, உங்களுக்கு என்னுடைய வார்த்தைகள், நோக்கங்கள் எதுவும் புரியாது” என்றான்.
“என்ன பெரிய தமிழன்” என்ற கதிரேசன், “இந்த உலகம் உன் தமிழன் பெருமை பேசணும் நினைக்கிற உனக்கு இந்த உலகமே அறிந்த ஒரே விஷயம் பணம் தான்னு ஏன் புரியமாட்டேங்குது?” எனக் கேட்டார்.
“லைஃப் டைம் செட்டில்மென்ட்” என்றார்.
“உங்களோட ஆர்க்யூ பண்றது வேஸ்ட்” என்ற தேவித் வாயிலை நோக்கிட…
“உன்னை கொலை செய்வது அவங்களுக்கு அவ்வளவு பெரிய விஷயமில்லை. உன்னை எனக்கு பிடிக்கும். அதுக்காக, எனக்காக உன்னை விட்டு வச்சிருக்காங்க” என்ற கதிரேசன், “நம் நாட்டில் பிராக்டிக்கலா செய்ய உனக்கு பெர்மிஷன் கிடைக்கப் போவதில்லை. நானே கிடைக்க விடமாட்டேன். அப்புறம் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்” என்றார்.
“தமிழன் எங்க செத்தாலும் தமிழன் தான்… இதுக்கு அர்த்தம் புரியுது அப்படின்னா என்னோட எண்ணத்திற்கான அர்த்தமும் உங்களுக்கு புரியும்” என்ற தேவித், “மல்கோத்ரா போலீசில் மாட்டிக்கிட்டார். மாட்டாமல் இருந்திருந்தா, அந்த தாள்கள் உங்களுக்குக் கிடைச்சிருக்கும். நீங்க திரும்ப இப்படி என்கிட்ட வந்து நின்னிருக்க மாட்டிங்கல?” என்றான்.
“தாள்கள் தான் என் கைக்கு வரல. அதுல இருக்கும் தகவல் வந்தாச்சு. பட் நோ யூஸ். அதில் அவரோட மனைவி பற்றி மட்டும் தான் இருந்தது” என்றவர், “உனக்கு பணம் வேண்டாம் அப்படின்னா… இன்னொரு ஆஃபர் இருக்கு” என்றார்.
“நீங்க என்ன சொன்னாலும் என் பதில் நோ தான்” என்ற தேவித்தை அழுத்தமாகப் பார்த்த கதிரேசன்,
“உங்க மனைவி எங்ககிட்ட இருக்காங்க தெரிந்தாலும் முடியாதுன்னு சொல்வீங்களா?” எனக் கேட்டார்.
என்ன தான் தேவித், நைருதி தன்னுடன் தான் இருக்கின்றாள் என்றதை, அவளது துறை ஆட்கள் மற்றும் காவலர்கள் நம்பியிருந்தாலும், அவனை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கும் கதிரேசனுக்கு தெரிந்துதான் இருந்தது. நைருதி தற்போது எங்கென்று தேவித்திற்கு தெரியாது என்பது. அதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பொய் உரைத்தார்.
வழமையான தன்னுடைய மென் புன்னகையைத் தவிர்த்து, பளிச்சென பற்களைக் காட்டி முகம் முழுக்க சிரித்த தேவித்…
“முடிஞ்சா என் மனைவி நிழலைத் தொட்டு பாருங்களேன்” என்றான்.
“இவ்வளவு நேரம் நேருக்கு நேர் மோதிட்டு இருக்கீங்க அப்படின்னு உங்க மேல ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் இப்போ” என்று அவரது முகத்திற்கு நேரே குனிந்து தன்னுடைய முகம் வைத்தவன், “இல்லை” என்றான் சத்தமின்றிய குரலில்.
அவருக்குதான் நைருதி எங்கிருக்கிறாள் என்பது தெரியாது. ஆனால், தேவித்திற்கு தெரியுமே! நினைத்தாலும் சென்றிட முடியாத ஓரிடத்தில் இருக்கிறாள் என்பது. காலம் கடந்து பயணிக்க ஊடகம் ஒன்று கட்டாயம் வேண்டும். அது சாத்தியமற்ற ஒன்றென்ற எண்ணம் கொண்டவர், அவள் தன்னிடம் என்று கூறினால் நம்பிவிடுவானா என்ன?
‘என்னைத் தவிர வேறு யாராலும் உன்கிட்ட நெருங்க முடியாது நதி.’ மனதோடு சொல்லிக் கொண்டான்.
“முடிவா என்ன சொல்றீங்க?” எனக் கேட்டார்.
“என் முடிவு என்னன்னு உங்களுக்குத் தெரியும்” என்று நிமிர்ந்து நின்றான். மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு.
“கவனமா இரு” என்றவர், அவனது தோளில் தட்டிச் சென்றார்.
என்ன இருந்தாலும் அவருக்கு மிகவும் விருப்பமானவன் தேவித். அவனது உயிருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.
அவர் வாயிலுக்கு சென்றிட,
“வன் செக் சீஃப்” என்றிருந்தான்.
கதிரேசன் நின்று திரும்பிட…
“இன்னொரு ஆஃபர் என்னது?” எனக் கேட்டிருந்தான்.
கதிரேசன் உன்னை நானறிவேன் எனும் விதமாக எதற்கு எனும் பார்வையை வீசிட…
“அதை வைத்து திரும்ப நீங்க வரக்கூடாதே” என்றான்.
“உன்னை சைனா டீம்… அவங்க லெபாரட்டரிக்கு ரிசர்ச் ஸ்காலரா எடுத்துக்கிறேன் சொன்னாங்க” என்றவர், “எப்படியும் முடியாது தானே உன் பதில்” என்றார்.
தேவித்தின் சுட்டு விரல் மீசை நுனி உராய்ந்து கன்னம் ஊர்ந்தது.
“பீ சேஃப்” என்றவர் சென்றுவிட்டார்.
தேவித் தளர்ந்து இருக்கையில் அமர்ந்து, தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக் கொண்டான்.
“போயிட்டாரா?” கதவு திறந்தே இருக்க சத்தமின்றி உள்ளே வந்த வீரட் கேட்டான்.
“ம்ம்” என்று விழிகள் திறந்த தேவித், “புராஜக்ட் சப்மிஷன் டீம் லீட் நீதானே?” எனக் கேட்டான்.
“அதிலென்ன டவுட் உனக்கு?” என்ற வீரட், “நானே அது” என்று சட்டையின் கழுத்துப் பட்டையை உயர்த்தி காண்பித்தான்.
“என்னோட வீல் ஆஃப் டைம் புராஜக்ட் சப்மிஷன் காப்பி நம்ம ரிசர்ச் சென்ட்ரில் டாக்ஸ் செக்யூரிட்டி சோனில் இருக்கும்ல” என்றான்.
“அஃப்கோர்ஸ்…” என்ற வீரட் இருக்கையில் தேவித்தின் அருகில் அமர, அதே நொடி தேவித் எழுந்திருந்தான்.
“அதை தூக்கணும்…”
“வாட்!”
“நீதான் செய்யணும்.”
“அடேய்… மாட்டினா என்னை வாழ்க்கை முழுக்க ஜெயிலில் போட்டுடுவாங்கடா.”
“அது சைனா லேபுக்கு போச்சுன்னா என்னோட மொத்த உழைப்பும் அவனுக்கு சொந்தமாகிடும்.”
“சோ?”
“டெலிட் பண்ணிடு.”
“தேவா…”
“உன்னால முடியும் டா” என்ற தேவித் சமையலறைக்குள் சென்றான்.
“காஃபியா டீயா டா?” அங்கிருந்தே குரல் கொடுத்தான்.
வேகமாக அவனிடம் சென்ற வீரட்,
“இது ரொம்ப முக்கியம்” என்று முனகியவனாக, “இப்போ உனக்கு தோணினது நம்ம சீஃப்க்கு தோணிருக்காதா?” எனக் கேட்டான்.
“அவருக்கு அது இன்னும் ஸ்ட்ரைக் ஆகல நினைக்கிறேன்” என்ற தேவித், “அத்தோட டிராஃப்ட் கிளியரென்சில் என்னோடது போயிருக்கும் நினைத்திருக்கலாம்” என்றான்.
“அவர் அப்படியே நினைச்சுக்கிட்டும் டா. இப்போ எடுத்து நாமே ஏன் காட்டிக் கொடுக்கணும்?” என்றான் வீரட்.
“உன்னால முடியுமா முடியாதா?”
“செய்றேன் டா” என்ற வீரட் நகர,
“எங்கப்போற?” என்றான் தேவித்.
“அதை எடுக்க வேண்டாமா?” என்றான்.
“இதை குடிச்சிட்டுப் போடா” என்ற தேவித் நண்பன் கையில் கோப்பையை திணித்தான்.
“எனக்கொரு டவுட்…” தேநீரை ருசித்தபடி வீரட் கேட்டிட, என்ன என்பதைப்போல் பார்த்தான் தேவித்.
“உன் புராஜெக்ட் சாத்தியமில்லை, செய்தாலும் ஃபெய்லியர் அப்படின்னு தானே ரிஜெக்ட் பண்ணாங்க. இப்போ அதைக் கேட்டு ஏன் உன்னை கார்னர் பண்றாங்க?” எனக் கேட்டான்.
“சொன்னாலும் உனக்கு புரியாதுடா” என்று தேவித் சொல்ல…
“நானும் சயிண்டிஸ்ட் தான்டா… சொல்லு எனக்கு புரியும்” என்று வீரட் சொல்லிய பாவனையில் தேவித்திடம் இறுக்கம் தளர்ந்த இதம்.
“அப்பப்போ சொல்லுடா… மறந்து போவுது” என்று தேவித் சிரிக்க, வீரட்டிடமும் அதே சிரிப்பு.
அக்கணம் மாமன்னனிடமிருந்து அழைப்பு வர, வீரட் நண்பன் சொல்லியதை செய்திட வெளியேறியிட, தேவித் தன் தந்தையின் அழைப்பை ஏற்றிருந்தான்.
அவர் அவனுக்கு வைத்திருக்கும் குறிப்பு அறியாது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
+1