அத்தியாயம் 31
கிபி 817
மேமகிழ தேசம்
சிவஞ்சயம் – மகிழ தேசத்தில் சிவ வழிபாட்டால் புகழ்பெற்ற ஊர்.
முழுமதி பரந்த வானத்தில் வெள்ளிக்கடலைப் போலப் பரவி இருந்தது. கோயில் தூண்கள் மேல் விழும் அந்த வெள்ளிச்சாயல், சுருள்நிலை விளக்குகளின் மங்கலமான ஒளியோடு கலந்து ஒரு தீபவண்ணப் போர்வையைப் போல தெரிந்தது.
மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தின் மீது சாந்தமும், பஞ்சாமிர்தமும் பாய்ந்தபடி சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. ஆகம உபதேசத்தின் அடிப்படையில் நந்திபடையின் வாசலில் இருந்து யாவரும் எழுந்தருளச் செய்தனர்.
சம்பிரதாய பூசாரி, திருக்காச்சி சூடியதொரு அகிலாண்ட தீபத்தைத் தூக்கி, “ஓம் நமச்சிவாய” என ஓதியபடி தீபாராதனை செய்தார்.
“ஓம் நமச்சிவாய” என்ற பக்தி குரல்கள் அவ்விடம் நிறைத்தது.
முகமண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காகப் பரந்து நின்றனர்.
தெய்வகன்னியர் குழு, மங்கல இசையின் பின்னணியில் தேசிக விருத்தங்கள் பாடிக்கொண்டு இருந்தனர்.
“மதியமுறும் பரவையில்
மறைவனங்கே தோன்றினாய்
பவளச் சடையின் நடுவே
பட்டமிடும் முழிநிலவே!”
பாடலுக்கு ஏற்ப, கன்னியர் நடனமிட்டுக் கொண்டிருந்தனர்.
கோவில் முன் மண்டபம் எதிரே உள்ள நந்தவனத்தில் நூறடிக்கு மேலாக உயர்ந்து இருக்கும் சிவ உருவச் சிலையில் பக்தர்கள் ஏற்கனவே அறைந்திருந்த துளசி, அரளி, சம்பங்கி, மலர்க்கொத்து அப்புவியெங்கும் வாசனையை அள்ளித் தெளித்தது.
எம் பெருமான் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கயிலாயத்தின் மாமரத்தடியில் நடக்கும் சிவபார்வதி கல்யாணக் காட்சி நாடகமாக அரங்கேறிக் கொண்டிருக்க… பௌர்ணமி தினம் வழமைபோல் திருவிழாவாக அரங்கேறிக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் ஓரத்தில், தாத்தாவாகிய ஒரு வயதான பண்டாரம், தனது சிற்றிசை வாத்தியத்தில் “ஓம் சிவாய நம” என மெல்லிசையாக முழக்கம் விடுகிறார். ஒவ்வொரு முழக்கம் முடிந்ததும், சிலர் தங்கள் நெற்றி மீது தட்டி, சிவன் திருவருளை நாடுகின்றனர்.
இரவு அரைமணிக்கு, பௌர்ணமி உலா ஆரம்பமாகிறது. கோயிலின் இராஜகோபுர வாசலில் ரதவாகனம் வரிசையில் தயாராக இருக்கிறது. சிவபெருமான் இரதத்தில் எழுந்தருள, மக்கள் “ஹர ஹர மஹாதேவா” என ஒலிக்கிறார்கள்.
பக்தர்களின் சங்கமம், இசை, உவமை, வழிபாடு இவை அனைத்தும் மதியின் வெளிச்சத்தில் கலந்த அழகிய தமிழ்ச் சாயல்.
அங்கிருக்கும் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் ராஜகுரு, இத்தகைய அழகியலை ரசிக்கும் மனநிலையில் இல்லை.
ஒருவித படபடப்பு. முகத்தில் காட்டாது மனதோடு சிறு பதற்றத்துடன் அமர்ந்திருந்தார்.
இன்றைய தினம் சிவாலயத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்குமென்று தெரிந்திருப்பினும், வேண்டுவோர் வருகை இன்றாக இருந்திட, வர வேண்டிய கட்டாயம்.
அவர் தேசத்தின் ராஜகுரு. மன்னரின் வழிகாட்டியாய் விளங்கும் தந்தை. அவரை நேரில் கண்டால் மக்களின் நிலை என்னவாக இருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ?
“மன்னரின் நலன் வேண்டி சிவனருள் பெறவே யாம் இங்கு வந்தோம். யானும் உம்மைப்போல் பக்தனாவோம். எம்மை கண்டு தங்கள் வழிபாட்டை நிறுத்த வேண்டாம். மன அமைதிக்காக, எம் பெருமானின் திருவுருவச் சிலைக்கு எதிரிலிருக்கும் மண்டபத்தில் சில நாழிகைகள் அமர்ந்துச் செல்கிறேன்” எனக்கூறி மண்டபத்தில் வந்தமர்ந்தவர், எதிரே தெரிந்த காட்டுபாதையை பார்த்தபடியே இருந்தார்.
இன்று நைருதி வந்துவிடுவாளென மேகோன் சொல்லியிருக்க, அவள் நிச்சயம் வந்துவிடுவாள் என்ற போதும் எப்போதென்ற நேரம் தெரியாது… வழி மேல் விழிகள் பதித்து பெரும் எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தார் ராஜகுரு.
அவரின் எதிர்பார்பிற்கும் காரணம் உள்ளது.
அவளது கணவன் முன் ஜென்ம ஜனனத்தில் செய்திட்ட பிழையை அவள் வழி வந்து சரிசெய்திட இருக்கின்றான்.
மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு… முடி சூடும் மன்னனின் பிறப்பு எதிர்காலத்திலிருந்து கடந்த காலம் வரும் அவர்களின் கையில் அல்லவா உள்ளது.
சிந்தை முழுவதும் நைருதியை நேரில் கண்டுவிடும் நொடிக்காக ஆவல் பிரவாகம் கொண்டிருக்க,
நீண்ட சிறகை அடித்து, வித்தியாசமான ஒலியுடன் பறந்து வந்து அவர் முன் தன்னுடைய சிறு அலகு முனை தரை பதித்து, மரியாதை நிமித்தமாக சிரம் தாழ்த்தி நின்றது செம்பன் தூது அனுப்பிய வட்டுக்குருவி.
அதன் காலில் சுருட்டிய இலை கட்டப்பட்டிருக்க…
நைருதியுடன் செம்பன் நன்னீர் மடை வந்து சேர்ந்திட்டான் என்பது அறிந்து மெல்லிய ஆசுவாசம் கொண்டார்.
‘இந்த இருளில் அவர்கள் பயணத்தை தொடர சாத்தியமில்லை… இனி அவர்கள் இங்கு வந்து சேர்வதற்கு அந்நாளின் பின்பு சந்திரமான காலமுறை ஆகும்’ என்று நினைத்தவர், ஓங்கி உயர்ந்து அமர்ந்த நிலையில் தியானத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் சிவ சிலையை நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்.
சிந்தை முழுவதும் காலம் கடந்து, முன் ஜென்ம ஜனனத்தின் பிழைத் திருத்த இங்கு வரும் உயிர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதே மலர்ப்படுதலாக அரற்றினார்.
(மலர்ப்படுதல் – வேண்டுதல்.)
***********
தன்னிலை முழுவதும் அறிந்ததும், தானாக ஒருவித அச்சம் எழ… அதுவரை மனதிலிருந்த திடம் யாவும் அகன்று நடுக்கத்தைக் கொடுத்தது.
நடுசாமம் நெருங்கியும் இமைகள் மூடாது, கால்களைக் கட்டிக் கொண்டு முழுமதியை வெறித்தவாறு அமர்ந்திருக்கும் நைருதியை பார்த்தவாறு செம்பனும் உறக்கம் துறந்திருந்தான்.
அவளின் மனம் எண்ணிலடங்கா வினாக்களை சுமந்திருக்க, பதில் அறியும் மார்க்கம் அவளிடமில்லை.
அவளது கருவிழிகளின் அலைப்புறுதல் வைத்து, அவளின் நிலையற்ற தன்மையை அறிந்த செம்பன்,
“உள குழப்பம் வேண்டாம் தேவி. உம் சிந்தை எழும் வினாக்கள் யாவற்றிற்கும், ராஜகுரு அவர்களிடம் நிச்சயம் விடை கிட்டும். உறுதியோடு இருங்கள்” என்றான்.
செம்பனை வெற்றுப் பார்வை பார்த்தாளே அன்றி எதுவும் பேசவில்லை.
“உள்ளம் சுருங்கும் வலிக்கு நித்திரை ஒன்றே மருந்தாகும். அக சஞ்சலம் ஒதுக்கி துயில் கொள்ளுங்கள்… அந்நாளின் பின்பு மனம் அமைதி கொள்ளும். யாவும் நலம் பெறும் என்ற எண்ணம் எழும்” என்றான்.
(அந்நாளின் பின்பு – அடுத்தநாள்.)
“என்னவோ சொல்ற” என்ற நைருதியும், “இதுக்கு மேல என்னாலும் நடந்ததை எண்ணி குழப்பிட்டு இருக்க முடியாது. அடுத்து என்னன்னு பார்த்தா தான் என் மாமாகிட்ட போக முடியும். யோசிக்க எனக்கு இப்போ தூக்கம் அவசியம். குட் நைட்” என்று சொல்லிவிட்டு தழை படுக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவளுக்கு செம்பன் குறித்த பயம் சிறிதுமில்லை. ஒருநாள் முழுக்க அவளுடன் இருந்திருக்கின்றாள். ஒரு சாமானியன் கடவுளிடம் காட்டும் பக்தியை அவளிடம் காட்டுகிறான். வார்த்தையிலும் அத்தனை மரியாதைப் பண்பு அவனிடம். அவனால் தனக்கு எவ்வித தீங்கும் நிலவாது எனும் நம்பிக்கை ஆழ் மனதில் தானாக வந்துவிட்டிருக்க, நொடியில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்துப் போனாள்.
செம்பன், அவள் பேசியது புரியாது… அதிலும் அவள் ஆங்கிலத்தில் மொழிந்த இறுதி வார்த்தைகள் புரியாது திருதிருத்து அமர்ந்தவன் நிகழ் மீள சில நிமிடங்கள் ஆனது.
அவளின் வருகை ரகசியம் காக்கப்பட வேண்டிய ஒன்றென்பதால், சூழலை அவதானித்தவாறு அவளுக்கு முன்பு காவலனாக நிமிர்ந்து நின்றான்.
***************
இளங்காலைப் பொழுதிலே தங்கள் பயணத்தை துவங்கியிருந்தனர் செம்பன் மற்றும் நைருதி.
முதல் நாளிருந்த சலசலப்பானப் பேச்சு அவளிடமில்லை. அதீத அமைதி. செம்பன் தடம் சுட்டிக்காட்ட, அவ்வழியில் நடந்து கொண்டிருந்தாள்.
“சற்று தாமதித்து செல்லலாம் தேவி” என்ற செம்பன், நைருதியின் நடையை நிறுத்தி, அங்கு தென்பட்ட மூலிகைக் குச்சி ஒன்றை உடைத்து,
“பல் வெட்டுதலுக்கு உதவும்” என்று நீட்டினான்.
“என்னது பல்லை வெட்டுறதா?” என்ற நைருதி, “அதுவும் தம்மாத்தூண்டு குச்சி வச்சு. காமெடி பண்ணாத செம்பன்” என்ற நைருதிக்கு, அவன் தன்னுடைய பேச்சு புரியாது விழித்ததில், அதுவரை இருந்த அமைதி துறந்து சிரிப்பு வந்தது.
(பல் வெட்டுதல் – செயல்பாட்டு பெயர். சுத்தம் செய்வது.)
அவள் அந்த குச்சியை வாங்கி,
“இதை வச்சு பல்லை வெட்ட முடியாது. வேணும்னா உன் அம்புல ஒன்னை கொடு. அதை வச்சு பல்லை உடைச்சிக்கிறேன்” என்றவள், குச்சியை கீழே போட்டாள்.
“தங்களுக்கு நன் பதம் விளங்கவில்லை என்று எண்ணுகிறேன்” என்ற செம்பன், மற்றொரு குச்சி ஒடித்து, “இது மூலிகை பசுந்தண்டு. யான் செய்வதைப்போன்று தாங்களும் செய்யுங்கள்” என்று பல் துலக்கிக் காண்பிக்க,
‘அடப்பாவி பிரஷ் பண்ணுறதைத்தான் பல்லை வெட்டுன்னு சொன்னியா? நீ சொல்றன்னு நானும் வெட்டியிருந்தா என்ன ஆவுறது. உன் செந்தமிழில்… இல்லை இல்லை நாகரீகத் தமிழில் தீ வைக்க…’ என்று முனகியவள், “எனக்கும் பசுந்தண்டு கொடு. நானும் பல்லை வெட்டிக்கிறேன்” என்றாள். பொங்கி வரும் சிரிப்பை அடக்கி.
(பசுந்தண்டு – மரம் அல்லது செடியின் நுனியில் ஒடிக்கும் சிறு குச்சி.)
“நீவிர் சுத்தம் செய்துகொள்ளுங்கள் தேவி. யான் உண்பதற்கு கனிகள் கொய்து வருகிறேன்” என்று அவளது கண் பார்வையிலிருந்து விலகாது அருகிலிருந்த மரத்தின் மீது ஏறினான்.
(கொய்து – பறித்து)
செம்பன் என்ன செய்கிறான் என்பதை பார்த்தவாறு பற்களை துலக்கியவள் கழுவதற்காக அங்கு ஓடிக்கொண்டிருந்த நதியில் கால் வைத்திட, ஈரம் படர்ந்த கற்தடம் வழுக்கி நீரில் விழுந்தவளை, தண்ணீரின் வழி அடித்துச் செல்லாது காக்கும் பொருட்டு, அவளின் மென் தேக கரத்தினை, திண்ணிய கரமொன்று இறுகப்பற்றியது.
தண்ணீரில் விழுந்துவிட்டோம் என்று அச்சத்தில் கண்களை மூடியவள், உடல் உணராத ஈரத்தில், கரம் உணர்ந்த வெம்மையில் தேகம் சிலிர்த்திட மெல்ல இமைகள் திறந்தவள், தன் கருவிழிகள் உள்வாங்கி அகம் பதிந்த முகத்தில் காதல் கசிந்துருக தன்னுடைய பார்வைத் தீண்டலை கலந்தாள்.
“நதியோடு நதி சேர நன் நதிக்கு அதீத விருப்பமென்றால்… மகிழ் மேகோனுக்கு வாழ்வின் கரை சேர்வது பெரும் வலி அல்லவோ?” என்று அவன் சிரித்தபடி கூற,
“எம்மை காப்பது அரசர் மகிழின் கடமையாயிற்றே. நின் உள்ளத்தில் கடமை மட்டுமின்றி நேசமும் ததும்பி நிறைந்திருக்க… எம் வாழ்வின் பயணம் அத்தனை எளிதாக முடிந்துவிடுமா என்ன?” என்று காதலாய் கேட்டிருந்தாள் அவள்.
“அரசனாயினும்… அவனது நேசமும் வார்த்தைப்போரில் தடுமாற்றம் கொள்வது தான் நியதி போலும். மன்னன் எனும் அச்சம் சிறிதுமில்லை” என்றவன், பிடித்திருந்த அவளின் கரத்தை சுண்டி இழுத்திட, அவனின் வெற்றுத் தேகத்தில் முகம் பதிய அவனில் தஞ்சம் கொண்டிருந்தாள்.
“மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக இருப்பினும்… பதியானவன் மனையாட்டியின் முன்பு மண்டியிட்டு ஆக வேண்டும் என்பதுதானே தார்ப்பரியம். மாமன்னருக்குத் தெரியவில்லையோ?” என்று காற்றாய் மொழிந்தவள், அவனின் மீசை நுனி முறுக்கிட…
“அடவியின் மறை சூழலும், தடாகத்தின் குளுமையும், நன் நதியின் தேகச்சூடும், எம் சித்தம் இழந்து உம்மில் சாசனம் எழுதிட உந்துகிறதே… இந்நிலையில் மனையாட்டியின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்திட, அரசனாயினும், இறையாயினும் முடியாது” என்று சிரிப்போடு மொழிந்தவன், மனைவியை தனக்குள் அடக்கும் பொருட்டு தன் அணைப்பை மேலும் இருக்கியதோடு, கழுத்தில் முகம் புதைத்திட, பெண்ணவள் உடல் வலியோடு ஆடவனின் மூச்சுக் காற்றின் வெம்மை உணர்ந்து அவனுள் குலைந்து தவித்திட்டாள்.
பதியவனின் இறுகிய அணைப்பில் பேதையவளின் எலும்புகள் பிடி கன்றிட…
“மகிழ்” என்று ஸ்வரமாய் காற்றில் ராகம் இசைத்தவளின் மென் குரல் அவனின் தொண்டைக்குழிக்குள் அடங்கியது.
இதமாக உடல் பரவிய முத்தத்தின் சஞ்சாரங்கள் நொடியில் வலிமையாய் மாறிப்போக, கணவனின் கைகளில் துவண்டு சரிந்தவள்,
“தேவி” என்று கட்டையாக செவி நுழைந்த குரலில், பட்டென்று விழித்திருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
23
+1
+1