Loading

அத்தியாயம் 30

மகிழ் மேகோன் ஆட்சிக்காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று அறிந்து வைத்திருந்த தேவித்திற்கு, ஆண்டுகள் தெரிந்திருக்கவில்லை.

அவனது ஆராய்ச்சிக்காக தாவினோவின் செயற்பாடுகள் அடங்கிய புத்தகத்தை ஆராய்ந்த போது, அவரின் ஆராய்ச்சிக்கு மூலமென்று எந்தவொரு குறிப்பும் இல்லாததே தேவித்தினுள் சந்தேகம் எழ காரணமாக அமைந்தது.

ஏனெனில் தாவினோ அக்கால சீன ராஜ்ஜியத்தின் ஆராய்ச்சியாளர். ஆனால் அவரின் செயற்பாடுகள் யாவும் தமிழின் காலநிலை கோட்பாடுகள். அதனாலே அவருக்கு முன்பு, அவரின் ஆராய்ச்சிக்கு அடித்தளமாக ஒரு தமிழர் இருந்திருக்கிறான் என்று சரியாக கணித்து தாவினோவிற்கு முன்பு யாரென்று தேடத் துவங்கியிருந்தான்.

அவனுள் இப்படியொரு கோணம் தோன்றாது இருந்திருந்தால் தான் ஆச்சரியம். அவனைப்பற்றி அவனறிய அவனுக்கு வேறொருவரின் சிந்தை வேண்டுமா என்ன?

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தேடலின் முடிவில் தான் தேவித்தால், மகிழ் மேகோனின் பெயரில்லாது, அவனது ஆட்சியில் நடைபெற்ற பெரும் போரினைப் பற்றி அறிந்து கொண்டான். அப்போர் ஒன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்றிருக்க, அதில் குறிப்பாகக்கூட அரசனைப் பற்றிய பெயர் இடம்பெறவில்லை.

மேமகிழ் தேசம் என்றும், நடைபெற்ற போர் அத்தேசத்தின் மாமன்னாரால் எதிர்காலத்தில் முன்பே கணிக்கப்பட்டதால் பல உயிர்கள் காக்கப்பட்டன என்ற தகவலும், அப்போர் நடந்த விதமும் மட்டுமே இருந்தது.

(இங்கு எதிர்காலம் என்பது அன்றைய நாளிலிருந்து சில திங்கள் முன்.)

அதன் பின்னர் பலவகையில் முயற்சித்தும் தேவித்திற்கு மேகோன் பெயரைக் கூட தெரிந்துகொள்ள எவ்வித சான்றுகளும், பட்டயங்களும், சுவடிகளும் கிட்டவில்லை.

நைருதியாலே அவனது பெயரை அவனே அறிய நேர்ந்தது.

அகழ்வாராய்ச்சியில் தங்களுக்கு கிடைத்த கல்வெட்டுக்கள், ஓலைத்தாள்கள் வைத்து முழுமையாக இல்லையென்றாலும், அதில் மேகோன் பற்றி தெரிந்துகொண்டதை தேவித்திடம் நைருதி கூறிட, மேலும் சில தகவல்கள் அவனுக்கு கிட்டியது.

ஆனால் தனது தேடல் ஒவ்வொன்றும் தன்னை கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கி இப்படி கட்டியிழுக்கும், தன்னுடைய ஆராய்ச்சி வெற்றிபெற தனது மனைவி காரணமாக அமைவாள், கனவில் தொடங்கி தங்களுக்குள் நடந்த பேச்சுக்கள் வரை யாவும் இதன் தொடர்பாக அமையுமென்று அவனே எதிர்பாராதது.

அதிலும் ஒவ்வொன்றையும் தானாக தெரிந்துகொள்வதைக் காட்டிலும், யாரோ ஒருவரின் எண்ணப்படி தெரியப்படுத்தப் படுகிறது என்பது, காணொளியில் மின்னி மறைந்த காலத்தின் நாட்குறியீட்டை வைத்து கண்டறிந்தான்.

இங்கு யாரோ என்பது தேவித் அளவில் மகிழ் மேகோன். அவனது கணிப்பாக. அதுதான் உண்மையும் என்பதை அங்கு சென்று தான் அறிவான் அவன்.

தனக்குள் உழன்று கொண்டிருந்தவனை, வீரட் தற்போது நைருதி பயணித்திருக்கும் காலம் பற்றி கேட்டு சுறுசுறுப்பாக்கியிருந்தான்.

“ஏடி 817” என்று தேவித் சொல்லியதும்…

“அது ஏடி தான் அப்படின்னு எப்படிடா சொல்ற? BCE ஆகக் கூட இருக்கலாம் தானே?” எனக் கேட்டான்.

தேவித் மீண்டும் அக்காணொளியை வீரட்டிடம் ஓடவிட்டு காண்பித்தான்.

“சும்மா சும்மா இதையே காட்டாத தேவா… உன் அளவுக்கு கூர்ந்து பார்க்க எனக்குத் தெரியல. அப்படியே பார்த்தாலும் ருதியை தவிர்த்து வேற எதுவும் என் கண்ணுக்குத் தெரியல” என்றான் வீரட்.

“நதி அந்த தாள்களை திருப்புறா ரைட்?” என்றான். ஆறேழு தாள்கள் புத்தகம் போல் கோர்க்கப்பட்டிருக்க வலது பக்கம், தாளின் கீழ் முனையை இரு விரலால் பிடித்து திருப்பும் பகுதியை தேவித் சுட்டிக் காட்டினான்.

ஒவ்வொரு தாளின் கீழ் முனையிலும், எழுதப்பட்ட அன்றைய நாள் குறிக்கப்பட்டிருந்தது.

“எதோ எழுதியிருக்கு” என்ற வீரட் அதனை படிக்க முயன்றான். அவனுக்கு பண்டைய தமிழ் எழுத்துருக்களில் அரிச்சுவடிக் கூட தெரியாது. சுத்தமாக படிக்க முடியவில்லை.

“அது என்னன்னு நீயே சொல்லிடு மச்சான்” என்றான்.

“ஹேவிளம்பி.”

“என்னது ஹேமாக்கு வலியா?” என்ற வீரட்டை தேவித் கடுமையாக முறைத்தான்.

“சாரி மச்சான். ரொம்ப சீரியஸா இருக்கியே… கொஞ்சம் கூல் பண்ணலாம் நினைச்சு காமெடி பண்ணேன்” என்றான் வீரட்.

“சத்தியமா எனக்கு சிரிப்பு வரல” என்ற தேவித், “மொக்கையிலும் மொக்கை” என்றான்.

“சரிடா… விடு. இப்போ நீ மேட்டருக்கு வா” என்றான்.

“கிமு, கிபி’லாம் ஆறாம் நூற்றாண்டில், ரோமனைச் சார்ந்த டியோனிசியஸ் எக்சிகுவாஸ் என்பவரால் மதம் சார்ந்து நடைமுறைக்கு வந்திருந்தாலும், பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் நம் நாட்டிற்கு கல்வி வாயிலாக தெரிய வந்தது. அதுவும் பதினெட்டில் தான் முழுமையாக அம்முறைய பயன்படுத்தத் துவங்கினோம்” என்ற தேவித், “அதுவரை தமிழ் வருடங்கள் அடிப்படையில் தான் ஆண்டுகளின் கணிப்புகள் இருந்தது. அறுபது ஆண்டுகள் சுழற்சி முறையை பயன்படுத்தினர். இந்த அறுபது ஆண்டுகளும் ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. அறுபது ஆண்டுக்கும் ஒவ்வொரு பெயர். இது மொத்தமாக செளரமான தமிழ் சக்கர வருஷம்ன்னு சொல்லப்படுது. அதில் ஒன்று தான் ஹேவிளம்பி ஆண்டு” என்றான்.

“டேய்… போதும் நிறுத்துடா. தலை கிறுகிறுங்குது” என்ற வீரட், “நான் கேட்டது இதை எப்படி AD வருஷம் சொல்றன்னு தான். ஆனால் நீ சொல்றது…” என்று இழுத்து வல இடமாக தலையை அசைத்து பெருமூச்சு விட்டான்.

அவனது பாவனையில் தன் இறுக்கம் தளர்த்தி மென் புன்னகை சிந்திய தேவித்…

“நம்ம தமிழ் வருஷம் அறுபதும், நம் கல்வி முறைப்படி கிபி (ஏடி) எழுபத்தி எட்டிலிருந்து தான் சாளிவாகன சகாப்தம் அடிப்படையில் கணிக்கப்படுது. அப்படி பார்த்தால் செளரமான தமிழ் சக்கர வருஷம் அறுபதில் ஒன்றான ஹேவிளம்பி வருஷம் கிபி’க்கு பின்னர் தான். அதை வைத்து தான், அந்த ஒளி மறையும் நேரம் வெண்புகையாகத் தெரிந்த எண்கள் வைத்தும், தாளில் எழுதியிருக்கும் ஹேவிளம்பி வைத்தும், நதி சென்றிருப்பது ஒன்பதாம் நூற்றாண்டில் கிபி 817’ன்னு சொல்றேன்” என்றான்.

தேவித் முழுமையான விளக்கம் கொடுக்க, வீரட்டிற்கு புரிந்தும் புரியா நிலை தான்.

“இப்போ அங்கிருக்கும் ருதிக்கு, அவள் இருப்பது கிபி 817 அப்படின்னு தெரியுமா?” எனக் கேட்டான்.

“அது கொஞ்சம் கஷ்டம் தான். தமிழ் வருஷம், சகாப்தத்தின் பெயர் தெரிந்தால், கெஸ் பண்ண சான்ஸ் இருக்கு” என்றான் தேவித்.

“அங்க என்ன பண்ணிட்டு எப்படி இருக்காளோ?” என்ற வீரட், “கொஞ்சம் ரிலாக்ஸா இருடா. டெல்லி போய் பார்த்துக்கலாம். நிச்சயம் உன்னால் முடியும்” என்று உறங்க அழைத்துச் சென்றான்.

கட்டிலில் விழுந்த தேவித் இதயத்தின் விளிப்பில், அழுந்தப் பற்றினான். அவனின் மனம் விவரிக்க முடியா தவிப்பில் குலைந்தது.

அவனது தவிப்பை தப்பாமல் அவனவளிடம் சேர்பித்தது, அவனது இதய வருடல்.

இன்னும் அதிர்விலிருந்து மீண்டுவிடாத நைருதி, தன் மார்பு ஒளிர்ந்த ஊதா நிற வெளிச்சத்தில், சங்கிலியை மார்போடு இறுகப் பற்றினாள்.

“மாமா” என்று அவள் முணுமுணுக்க, கண்ணில் நீர் இறங்கியது.

செம்பன் அவர்கள் இருக்கும் காலத்தின் தமிழ் வருடப் பெயரையும், எண்ணையும் சொல்லிட, பனிரெண்டு நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கிறோம் என்பதில் மொத்தமாக தவித்துப் போனாள்.

அதனால் தான் தன்னுடைய அலைபேசி வேலை செய்யவில்லை என்பதையும் யூகித்தாள்.

எப்படியோ ஏதோ ஒரு வழியில் தான் இருக்கும் இடம் பற்றி, செம்பன் தன்னை அழைத்துச் செல்லும் பகுதியிலிருந்து யாருடைய உதவியையேனும் நாடி தேவித்திற்கு தெரிவித்துவிடலாம். அதன் பின்னர் அவன் வந்து தன்னை காத்து மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கையில் தான், செம்பனுடன் எந்தவொரு பயமும், குழப்பமுமின்றி வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் தற்போது? அவளின் நிலையை வரித்திட வார்த்தைகள் போதுமா?

துடைக்க துடைக்க கண்கள் கண்ணீரை சுரந்திட, இரு கைகளாலும் மாற்றி மாற்றி துடைத்தாள். நீர் கன்னம் வழிவது நிற்பதாக இல்லை.

செம்பன் செய்வதறியாது பார்த்து நின்றான்.

“தங்களுக்கு இச்சூழல் அசௌகரியமாக உள்ளதா தேவி?” என்று அவளின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தாள்.

“இந்த நாட்டின் நாமம் என்ன?”

“மேமகிழ்தேசம் அன்னையே!” என்றான்.

அதுவரை அவன் ஓரிரு முறை மகிழ் மன்னர் என்று சொல்லியபோது கருத்தில் படாத ஒன்று அக்கணம் மூளை ஏறியது.

“மன்னர் யார்?”

“தம் பதியின் நாமத்தை யான் உரைக்க வேண்டுமா தேவி?”

செம்பனின் கேள்வியில் அவளுக்கு நெஞ்சுக்கூடு வற்றியது.

“என்ன சொல்ற நீ?”

“தேவி?”

தலையில் தட்டிக் கொண்டவள்,

“என்ன கூறுகின்றாய் செம்பா?” என்ற நைருதி, “மகிழ் மேகோன் என்னுடைய கணவரா?” என்று அதிர்வோடு வினவினாள்.

“அதிலென்ன சந்தேகம் தேவி தங்களுக்கு. மாமன்னர் தேவித் மகிழ் மேகோன் உம் உடனுறைவர்” என்று செம்பனின் வார்த்தையை அவளால் நம்ப முடியவில்லை.

அதிலும் அவன் சொல்லிய முழுப் பெயர்…

தேவித் மகிழ் என்பதிலேயே அவள் மனதோடு தேங்கிவிட்டாள். அவளால் அடுத்து என்னவென்றே சிந்திக்க முடியவில்லை.

தலை விண்ணென்று தெறிக்க நெற்றிப் பொட்டை தொட்டு புருவத்தோடு சேர்த்து அழுந்த நீவினாள்.

“உங்க ராணி என்னைப்போலவே இருப்பாரா?”

“இதென்ன விந்தையான கேள்வி? அடுத்து தங்களின் திரு நாமத்தை எம்மிடம் கேட்பீர்களா?” என்று வினவினான்.

“ஆம்… என் நாமம் என்ன?” என்றாள்.

“இதென்ன விளையாட்டு அரசி?” என்ற செம்பன், “மத்திரைக்கு ஒருமுறை வித்தியாசமாக நடந்துகொள்கிறீர்கள்?” என்றான்.

“மத்திரையா?” என்று அதன் பொருள் விளங்காது யோசித்தவள், தலையில் தட்டிக்கொண்டு, “அது எதுவா வேணுமாவும் இருக்கட்டும். என் நாமம் என்ன என்று கூறு?” என்றாள்.

(மத்திரை – நொடி)

“அரசியார் நாமத்தை அடியேன் எவ்வாறு உரைப்பது தேவி?” என்ற செம்பனை தீயாக முறைத்த நைருதி, “உன் மரியாதையில் தீ வைக்க. அய்யோ கடவுளே என்னைக் காப்பாத்து. எனக்கு என் மாமாவை பார்க்கணும். அவங்க தானே டைம் டிராவல் பண்ணனும் ஆசைப்பட்டாங்க. என்னை ஏன் பண்ணண்டாயிரம் வருஷம் பின்னாடி தூக்கிப் போட்டிருக்க… யாரை எங்க கோர்த்துவிட்டிருக்க கடவுளே” என்று மேல்நோக்கி பார்த்து புலம்பினாள்.

“நெஞ்செழ துயரமுற்று இறை வேண்டுதல் செய்திட என்னவாயிற்று இராணி?” எனக் கேட்டான்.

(நெஞ்செழ – புலம்பல்)

“டேய் ஏன்டா நீ வேற படுத்துற. நான் எங்கிருந்து வந்திருக்கேன் தெரியுமா? இதுல உன் ராணி என்னை மாதிரி இருக்காங்கன்னு என்னையவே ராணியா நினைச்சு ரொம்ப பண்றடா நீ” என்றவளுக்கு தன்னிலை குறித்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

“நிஜத்திற்கும் தங்களின் பதம் எமக்கு புரியவில்லை.” அவளுக்கு முன்னிருந்த பாறையில் அமர்ந்துவிட்ட செம்பன், “எதுவும் துர் சொப்பனமா தேவி?” எனக் கேட்டான்.

“தூங்கினா தானே கனவு வர” என்றவள், “இனி இங்க எனக்கு தூக்கம் தான் வருமா?” என்றாள்.

செம்பன் புரியாது பார்க்க…

“அடபோப்பா… இப்படி பண்றீங்களேப்பா” என்றவள்,

“என்னை ராஜகுரு எதோ கோவிலுக்கு அழைத்துவர சொல்லியதாகக் கூறினாயே! அப்போ அவருக்கு நான் இங்கு வர இருப்பது முன்பே தெரியுமா?” எனக் கேட்டாள்.

“எம்மை தங்களை வனப்பதத்திலிருந்து அழைத்துவர பணித்ததே அவர் தாம்” என்று செம்பன் சொல்லியதும்…

“என்னடா நடக்குது இங்க? முதலில் நான் எப்படி இங்க வந்தேன்” என்று தலையை பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
22
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்