அத்தியாயம் 26
இருளை கிழித்துக் கொண்டு வெளிவந்த தேவித்தின் ஓலத்தில் அவனது ஆவி கதறித் துடிப்பது தெரிந்தது.
அடி வயிற்றில் பிரவாகம் கொண்ட கதறல் தொண்டை அடைத்து வெளிவர, கழுத்து நரம்புகள் வெடித்துக் கிளம்பியது.
இறுகிய கை முஷ்டி திமிறி எலும்புகளின் முட்டியில் காற்றுக் குமிழ் உடையும் சத்தம்.
“தேவ்… தேவா” என்னடா என்று வீரட் நண்பனை அணைத்து தனக்குள் அடக்கி அமைதிப்படுத்த முயல, வண்டியிலிருந்து பதறி வெளிவந்த மூவரும், அவனின் நிலைக்கண்டு தவித்தனர்.
“அப்பு…” மாமன்னன் முதல்முறை மகனின் கண்களில் கண்ணீரை பார்க்கின்றார். நெஞ்சம் துடிக்க மகனின் முதுகில் கை வைத்திட…
“அப்பா” என்ற கூவலுடன், வீரட்டின் அணைப்பிலிருந்தவாறே அவரின் கையை அழுத்தமாக பிடித்தான்.
ஆவுடைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் மகளின் நிலை என்னவென்றே தெரியாதிருக்க, அவளைப்பற்றி தெரியுமென்ற தேவித் நிலைகுலைந்து நிற்கும் காரணம் புரியாது அமைதியாக நின்றார்.
தேவித் தீர்க்கமானவன். எத்தகைய பெரும் சிக்கலின் போதும் அமைதியில் தீர்வு காணும் குணம் உடையவன். அப்படிப்பட்டவன் உடைந்து அழுகிறான். கவினுக்குள் மச்சான் எனும் உறவை கடந்து நண்பன் என்ற பந்தம் மேலெழும்பிட…
“தேவா” என்று இழுத்து தன் தோள் சாய்த்திருந்தான்.
“அல்ரெடி… அம் டோட்டலி புரோக்கன் மச்சான். எதுவும் சொல்லிடாத” என்றான் தேவித். கவின் கடிதலில் எப்போதும் அக்கறை இருக்கும். அதனாலேயே அவனது அதட்டல் பேச்சின் போது தேவித் அமைதியாக சென்றிடுவான். இக்கணம் அத்தகையப் பேச்சில் நிச்சயம் தன் மனம் காயம் கொள்ளுமென்றே வேண்டாம் என்றான் தேவித்.
“பைத்தியக்காரா…” என்று அவனை இழுத்து அணைத்த கவின், “இப்போ என்ன ருதி பத்திரமா ஊருக்கு போயிட்டு இருக்கான்னு நீ சொன்னது பொய். அதானே? பார்த்துக்கலாம் விடு. அவள் சின்னப்பிள்ளை இல்லையே! எங்கிருந்தாலும் சமாளிச்சு வெளிவர பக்குவம், தைரியம் அவகிட்ட இருக்கு… நீ இப்படி இருக்காத” என்று முதுகில் தட்டிக் கொடுத்தான்.
“கலங்காதீங்க தங்கம்… பாப்பாவை கண்டுபிடிச்சிடலாம்” என்று மாமன்னன் தேறுதல் அளிக்க…
“போலீஸ்கிட்ட உண்மையை சொல்லியிருந்தா அவங்களே கண்டுப்பிடிச்சு கொடுத்திருப்பாங்களே தேவா” என்றார் ஆவுடை.
வீரட்டுக்கும், கவினுக்கும் மட்டும் போலீசிடம் சொல்லும் அளவிற்கு விஷயம் எளிதல்ல என்று புரிந்தது.
“இப்போ எங்க எப்படி அவளை கண்டுபிடிக்கிறது?” ஆவுடை வருத்தம் கொண்டார்.
“நதி இருக்க இடம் எனக்குத் தெரியும் மாமா. ஆனா எங்கன்னு சொல்ல முடியாத நிலையில் நானிருக்கேன்” என்ற தேவித், கவினின் முகம் பார்த்தான்.
“நீ ருதிக்காக ஃபீல் பண்ணாலும், அவளை கண்டுபிடிப்பதில் வேகமில்லாம இருக்க. இதிலே எனக்கு புரியுது… அவள் பாதுகாப்பா இருக்கா… அதான் நீயும் பொறுமையா இருக்க. உன்னை புரியும்டா… பார்த்துக்கலாம் விடு” என்று தேவித் தோள் தட்டினான் கவின்.
ஆனால் தேவித்தின் மனமோ…
‘அவள் அங்க எங்க எப்படி இருக்கான்னு தெரியாம, முன்னாடி போக முடியாம அமைதியா இருக்கேன்’ என உள்ளுக்குள் வேதனை சுமந்தான்.
தேவித்தின் முகச்சுருக்கம் காண சகியாதவர்கள்…
“எதுவா வேணாலும் இருக்கட்டும் தங்கம்… நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்” என்ற மாமன்னன் வார்த்தைகளையே ஆவுடையும் கூற, முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்த தேவித்… இதழ்களை குவித்து காற்றை ஊதி, தன் அழுத்தம் குறைத்தான்.
பெரியவர்கள் இருவருக்கும், தேவித்தால் சொல்ல முடியாத ஒன்று அவனை அழுத்துகிறது என்பது புரிந்தது. இருவருக்குமே பிள்ளைகள் மீது பாகுபாடில்லை. அதனால் ஒரு பிள்ளையின் தெரியா நிலைக்காக, இன்னொரு பிள்ளையை வருந்தச்செய்திட அவர்கள் தயாராக இல்லை.
எங்கிருந்தாலும் தங்கள் மகள் நன்றாக இருப்பாள் எனும் நம்பிக்கையில், கண் முன் கவலை கொள்பவனைத் தேற்றினர்.
*************
திருச்சி வந்து சேர்ந்த சில நிமிடங்களில் தேவித் டெல்லி செல்ல வேண்டுமென்று கிளம்பி நிற்க…
“ருதி காணாம போனது இங்கப்பா… காணாமப்போன இடத்தில் தேடாம, வேறெங்கையோ தேடுறேன் கிளம்புறியே!” என்றார் அருணா.
“ம்மா…” என்று ஏறிட்டுப் பார்த்தவனின் முகம் காட்டிய பரிதவிப்பில்,
“எதுவாயிருந்தாலும் உண்மையை சொல்லு தேவா?” என்று மகனின் கைப்பற்றினார் அருணா.
அன்னைக்கே பதில் சொல்ல முடியாது நிற்பவன், ரமா எதுவும் கேட்டுவிடக் கூடாதென்றும் மனதிற்குள் நடுக்கம் கொண்டான்.
தேவித்திற்கு அவர்களிடம் சொல்வதற்கு எவ்வித தடையுமில்லை. ஆனால் அவன் சொல்வதை அவர்களால் நம்பமுடியாது. அந்த நம்பிக்கையின்மை அவர்களின் பயத்தைக் கூட்டும். மகளின் நிலையறிய முடியா தவிப்பை அதிகரிக்கும். அவற்றை எங்கனம் அவன் ஆற்றுப்படுத்துவான்.
அவனது கணிப்பு இது. கண்கள் பார்த்தவற்றை அவனாலே இதுதான் உண்மையென்று முழுமையாக ஏற்க முடியாத நிலையில்… இதுதான் சூழல், உண்மை நிலவரமென்று எப்படி கூறுவான்.
தேவித்தின் முக மாற்றங்களையே அவதானித்துக் கொண்டிருந்த ரமா, தன்னுடைய கணவரையும், அண்ணனையும் பார்த்தார். எப்போதும் தேவித்தை அதட்டி அவனது தவறை சுட்டிக்காட்டும் கவின் உட்பட வீட்டு ஆண்கள் மூவரும், தேவித்தின் அமைதியை ஏற்பது போன்று மௌனித்து நின்றிருக்க…
“உன்னை நம்பாம யாரை நம்புறது தேவா?” என்றார் ரமா.
“அத்தை…” தேவித் சொல்ல முடியா ஆசுவாசத்தை முகத்தில் காட்டினான்.
“ருதி உனக்கு எவ்வளவு முக்கியம் தெரியும். அவள் எங்கிருந்தாலும் நீ கூட்டிட்டு வந்திடுவங்கிற நம்பிக்கை இருக்கு” என்றார்.
ஏதோ ஒரு புள்ளியில் நைருதி காணாமல் போயிருப்பது தேவித்தினால் என்பது அங்கிருக்கும் அனைவராலும் உணர முடிந்தது. அதற்காக அவனை வதைக்கும் எண்ணம் யாருக்குமில்லை.
அவர்களின் அதீத நம்பிக்கையே தேவித்தின் சுயத்தை தளரச் செய்தது. அதுவும் ரமாவின் புரிதல், அவனுள் பெரும் ஆச்சரியம்.
மண்டியிட்டு தரையில் தொப்பென்று அமர்ந்தவன், கண்களை இறுக மூடி, வானோக்கி முகம் உயர்த்தி மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்தான்.
முதலில், தான் கண்டுகொண்டதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும். அதன் பின்னர் தான் எதுவாகினும் அவனால் அடுத்த அடியை மனைவியை நோக்கி வைத்திட முடியும்.
தேவித்தின் தற்போதைய தோற்றமே, நிலைமை ரொம்பவே கடினமானது என்பதை பறைசாற்றிட, இந்நேரம் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவனுக்கு பலமாக அவன் பக்கம் நின்றனர்.
அந்நேரம் தேவித்தின் கையில் தொங்கும் இதயம், “மகிழ்” என்று ஒலித்து மின்னிட, இதயத்தை விரலால் அழுந்தப் பற்றி, “நதி” என்று அவ்விடம் அதிர கத்தினான்.
மனைவியின் மீதான அவனின் ஆழ் நேசத்திற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?
பெண்கள் இருவரும், புடவை தலைப்பை வாயில் வைத்து அழுகையை அடக்கிட, ஆண்கள் மூவரும் என்ன செய்வதென்று தெரியாது நின்றிருந்தனர். மகனின் வாடியத் தோற்றம் காண முடியாது மாமன்னன் முற்றம் தூணில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்.
ஆற்ற முடியாத துயரம். யாருக்கு யார் ஆறுதல் அளிப்பதென்று தெரியாது அதீத அமைதியில் சூழல்.
கண்கள் மூடியிருந்த தேவித் தன் தோளில் படிந்த கரத்தில் கண் திறந்தான்.
தன் மேடிட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு அவன் முன் நின்றிருந்த வான்மதி, அவனது தோளில் கையை ஊன்றியவளாக தரையில் அமர்ந்தாள்.
“என்னாகிப்போச்சுன்னு இப்படி ஒரு சோகம்?” எனக் கேட்டு சகோதரனின் கண்ணீர் துடைத்தவள், “ருதி காணாமப் போயிட்டாள். ஆனால் அவள் எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியும் தானே? அங்க எப்படி போகணும், அவளை எப்படி கூட்டிட்டு வரணும்… அடுத்து என்னன்னு பாருங்க. அதைவிட்டு இப்படி இடுஞ்சிப்போயி இருக்கிறதெல்லாம் தேவித்தின் பழக்கமில்லையே!” என்றாள்.
“மதி…”
“இப்போ எல்லாரும் நீங்க எதையோ மறைக்கிறீங்க தெரிஞ்சும் அமைதியா இருக்கக் காரணம்… அவங்க உங்க மேல வச்சிருக்கும் நம்பிக்கைன்னு நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அந்த நம்பிக்கைக்கு என்ன செய்யனும் உங்களுக்கேத் தெரியும். இப்போ அடுத்து என்ன செய்யனும் யோசிக்கணும் நீங்க. இப்படி ஃபீல் பண்ணிட்டு தேங்கி நிக்கிறது தேவா ஸ்டைல் இல்லையே” என்ற தங்கையின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்த தேவித்தின் இதழ்கள் வழமையான புன்னகையைக் காட்டியது.
“தட்ஸ் குட். இதுதான் எங்க தேவா” என்ற மதி, கவினுக்கு கண் காட்டிட பக்கம் வந்தான்.
“டெல்லி போகணும் அவ்வளவு தானே? கிளம்பு” என்றான்.
அக்கணம் வீட்டிற்குள் வந்த வீரட்,
“டெல்லி போக இன்னைக்கு டிக்கெட் அவைலபுள் இல்லடா” என்றான்.
“கிளம்பி ஆகணும் வீர்” என்ற தேவித், “எமர்ஜென்சி சீட்ஸ் இல்லையா?” எனக் கேட்டான்.
வீரட் இல்லையென்று தலையசைக்க…
“அங்க போனா தான் எதுவும் பண்ண முடியும்” என்றான் தேவித்.
“அப்போ ருதியை உன் வேலை சம்மந்தப்பட்ட ஆட்கள் அங்க கடத்திட்டுப் போயிட்டாங்களா தேவா?” என்று தன் யூகத்தை வினவினார் அருணா.
தன் வீட்டினர் கொஞ்சம் அழுத்திக் கேட்டாலும், உண்மையை சொல்லிவிடுவான். ஆனாலும் சொல்ல முடியாத நிலையில் அவன்.
தற்போது அவர்களே ஒன்றை யூகித்து, நிகழ்வின் நிலை வைத்துக் கேட்க, இதை வைத்தே சமாளித்து விடலாமென்று ஒரு கணம் ஒரே கணம் நினைத்தவனால், உண்மையை மறைக்க முடிந்தளவிற்கு பொய் சொல்ல முடியவில்லை. தடுமாறினான்.
தேவித் இல்லையென்று தலையசைக்க தயாரான நொடி,
“ஆமா ஆண்ட்டி” என்றிருந்தான் வீரட்.
தேவித் வீரட்டை நோக்க, அவனோ தான் பார்த்துக் கொள்வதாக கண்கள் மூடி திறந்தான்.
“இவனோட புராஜக்ட் கேட்டு மிரட்டி ருதியை கடத்திட்டாங்க. ருதிக்காக இவன் புராஜக்ட் கொடுத்துட்டா, இவனை கொன்னுடுவாங்க. புராஜக்ட் தேவா கையில் இருக்கும் வரை தான், ருதியும் சேஃப்” என்றான்.
அனைவரும் பயத்தை வெளிப்படையாகக் காட்ட, வீரட் சொல்லும் பொய்யினை ஏற்க முடியாது தேவித் வேகமாக பின் வாசல் வழி தோட்டத்திற்குச் சென்றுவிட்டான்.
மாமன்னனுக்கும், கவினுக்கும் வீரட் சொல்வது பொய்யென்று தேவித்தின் முகமே உணர்த்தியிருக்க, மற்றவர்களின் அமைதிக்காக அவன் சொல்வதை நம்புவதைப்போல் காட்டிக்கொண்டனர்.
அதிகாலை நேரம்.
சென்னையிலிருந்து, பின் நள்ளிரவில் திருச்சி வந்து சேர்ந்திட்ட போதும் இன்னும் யாரும் உறக்கம் கொள்ளவில்லை.
வீரட் சொல்வதில் நைருதியின் நிலை ஒரளவிற்கு தெரிந்ததே போதுமென்று அனைவரும் தத்தம் அறைக்குச் சென்றிட, வீரட் நண்பனைத் தேடி வந்தான்.
“மிட்நைட் டிக்கெட் கிடைச்சிருக்கு” என்று வீரட் சொல்லியது கேட்டும், தேவித் திரும்பவில்லை.
“எத்தனை நாளுக்கு பொய் வைத்து சமாளிக்க முடியும் வீர்?” எனக் கேட்டான் தேவித்.
“முடியுங்கிற நிலை வரை” என்ற வீரட், “உன் கேள்வியில் எனக்கு புரிஞ்சது… எத்தனை நாளுக்கு மீன்ஸ்?” என்று நிறுத்தி, “இதுக்கு என்ன அர்த்தம் தேவா? ருதியை மீட்கவே முடியாது நினைக்கிறியா?” என்றான்.
“அப்படி சொல்லல…” என்று திரும்பிய தேவித், “அத்தனை ஈஸி இல்லைன்னு சொல்றேன்” என்றான்.
“புரியல?”, வீரட்.
“என்னோட ட்ரீம் உண்மை ஆகியிருக்கு. நீங்க எல்லாம் ஏத்துக்கவே முடியாதுன்னு சொன்ன விஷயம் நிஜத்தில் நடந்திருக்கு” என்றான். எந்தவொரு அதீத உணர்வுமின்றி, சாதாரணமாகக் கூறினான்.
“வாட்?” வீரட்டிடம் மட்டுமல்ல வீரட் தொடர்ந்து அவன் பின்னால் வந்திருந்த கவினிடமும் பேரதிர்ச்சி.
அத்தியாயம் 27
தேவித் கூறியதில்…
அவன் தன்னுடைய கனவு என்று சொல்லியதிலேயே, அது என்னவென்று கண்டுகொண்ட வீரட் மற்றும் கவினிடம் அப்படியொரு அதிர்ச்சி.
உண்மையா? நிஜத்தில் இது சாத்தியமா? சாத்தியமற்ற கூறுகளே அதிகம் வாய்ந்த கற்பனையின் அதீதத்தில் இதனை எப்படி ஏற்பது எனும் அதிர்வு அது.
அவர்களின் அதிர்வின் அதே தாக்கம் எங்கோ முன்னோக்கி, இவர்களுக்கு கடந்த காலம் என்ற வரையறையில், தன்னுடைய தற்போதைய நிகழ் காலத்திலிருந்த நைருதியும் அதிர்ச்சியின் உச்சத்தில் மயங்கியிருந்தாள்.
வேடன் தன்னை நோக்கி சட்டென்று எய்திய அம்பில்… தன்னுடைய கண்ணின் கருவிழி நோக்கி சீறி வந்த அம்பின் கூர் முனை ஏற்படுத்திய பயத்தில் நைருதி மயங்கி சரிய, அவளுக்கு பின்னால் பாய்ந்து வந்த சிங்கத்தின் நெற்றிப் பொட்டில் தன் இலக்கை பொருத்தியிருந்தது அம்பு.
பெரும் கர்ஜனையோடு தரையில் விழுந்த சிங்கம், நொடியில் கண்களை மூடியிருந்தது.
அடுத்த கணம் தரையில் கிடந்த நைருதியின் அருகில் ஓடிச்சென்ற வேடன், அவளருகே குனிந்து முகத்தை உற்று நோக்கினான்.
அதிர்ச்சியால் உண்டான மயக்கமென்று, அருவி தரையோடும் நதியின் கரையிலிருந்து நீரினை கொண்டு வந்து அவளின் முகம் தெளித்தான்.
மெல்ல கண்கள் திறந்த நைருதி, தன்னை நோக்கி குனிந்திருந்த வேடனின் முகத்தை அருகில் கண்டு மிரண்டவளாக, தரையோடு நகர்ந்து மரத்தின் தண்டில் சாய்ந்து ஒண்டியிருந்தாள்.
“அடப்பாவி… நான் உனக்கு என்ன செஞ்சிட்டேன்? நல்லவன் மாதிரி ராணி, அரசின்னு பேசிட்டு, பொசுக்குன்னு என்னையே கொல்ல பார்த்துட்டியே!” என்று நெஞ்சில் கை வைத்து அவனிடம் படபடவென்று கேட்டாள்.
அவனுக்கோ அவள் பேசும் தமிழே புரிந்தும் புரியாத நிலை. தற்போதே அவளின் வேகத்தில் ஒரு வார்த்தை கூட அவனுக்கு புரியவில்லை.
“அடப்பாவி என்றால் அர்த்தம் என்ன?” என அவன் கேட்க, அவனை வெட்டும் பார்வையில் முறைத்துப் பார்த்தாள் நருதி.
“எதுக்குய்யா எம்மேல அம்பு விட்ட? நான் மயங்கி விழாம இருந்திருந்தா, என் கண்ணுலே குத்தியிருக்கும்” என்றாள்.
“அம்பு புரிகிறது. மற்ற பதங்கள் விளங்கவில்லை” என்று வேடன் நெற்றியைத் தேய்த்துக்கொள்ள…
“நாசமாப்போச்சு” என்று முனகியவாறு பக்கவாட்டில் திரும்பிய நைருதி பதறி எழுந்து தான் சாய்ந்திருந்த மரத்தின் பின் ஒளிந்து நின்றாள்.
அவளின் பார்வை முன்பு வேடனிடம் அவள் பேசிக் கொண்டு நின்றிருந்த இடத்தில் விழுந்து கிடந்த சிங்கத்தையே மிரட்சியாகப் பார்த்திருக்க…
“மிரள் கொள்ள வேண்டாம் தாயே! அரிமா தங்களை தாக்கிட முயலவே, யான் அதனை நோக்கி நாண் ஏற்றினேன்” என்றான்.
(மிரள் – அச்சம்.)
தனக்கு பின்னால் சிங்கம் வந்திருக்கவே வேடன் அதன்மீது அம்பை செலுத்தியிருக்கின்றான் என முன் கண சூழலை யூகித்தவளுக்கு, அந்நிலைக்கு ஏற்ப வேடன் கூறியதற்கான பொருள் இதுவென்று புரிந்துகொண்டாள்.
“அச்சோ கொன்னுட்டிங்களா?” என்று சிங்கத்தின் அருகில் சென்றவளை,
“அண்மை வேண்டாம் அரசியாரே” என்று வேடன் தடுத்த நொடி, சிங்கத்தின் மென் உறுமல் அவளை தடுத்தது.
“மகிழ் மன்னர் தேசத்தில் சிறு உயிருக்கும் வதை என்பது இல்லை. இங்கு விழிகளுக்குப் புலப்படாத உயிரிக்கும் இடமுண்டு. மன்னன் வழியே மக்களும். யான் மட்டும் பாதை விலகிவிடுவேனா? சித்தம் இழக்க மட்டுமே செய்திருக்கிறேன். சிறிது நேரத்தில் கண்கள் திறந்திடும்” என்றவன், தான் பேசுவது நைருதிக்கு புரியவில்லை என்பதால் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் இடைவெளி விட்டு பேசிட, அவளால் அர்த்தம் கொள்ள முடிந்தது.
“மகிழ் மன்னர் தேசமா?” அதிலேயே அவளின் தலை சுற்றியது. அக்கணம் அவளுக்கு தன்னுடைய சிந்தை நிலையானதாக இல்லாமலிருக்க, எதையும் யோசித்துப் பார்க்கும் எண்ணமின்றி தனக்குள்ளே குழம்பினாள்.
“இது மன்னர் காலமா?” அவள் வாய்விட்டு தனக்கேக் கேட்டுக்கொள்ள…
“அன்னையார் மாறுவேடம் தரித்திருக்கிறீர். அதற்காக அரசியார் அரசரையே நினைவில் கொள்ளாது வினா தொடுப்பது சரியில்லை தேவி” என்றான் வேடன்.
‘இவன் வேற… அடேய் சத்தியமா என்ன நடக்குது புரியலடா எனக்கு.’ அவளுக்கு வெளிப்படையாக புலம்பும் சுதந்திரமும் பரிப்போன உணர்வு.
“நாம் எங்கே இருக்கின்றோம்?” அவன் பேசுவதை வைத்து ஓரளவிற்கு அவனுக்கு ஏற்றது போல் பேசிட முயன்றாள்.
“வனபதம் தேவி” என்றான்.
வேடன் உடனடியாக பதில் சொல்லிட,
‘பாகுபலி, பொன்னியின் செல்வன் படம் பார்த்தது உதவுது’ என்று நினைத்துக் கொண்டாள்.
“அப்படின்னா?” என்றவள், அவனது யோசிக்கும் பாவனையில், “அப்படியென்றால் எவ்விடம்?” எனக் கேட்டாள்.
மனதில், ‘ எனக்குத் தெரிஞ்சளவு பேசுறேன். அவங்களுக்கு புரிய வச்சிடு என் தெய்வமே’ என்று வேண்டியவளாக இரு கரம் கூப்பி வானைத்தைப் பார்த்தாள்.
“இறை அருள் வேண்டுமென்றால் அம்பலம் செல்ல வேண்டும் தேவி” என்றான். அவளின் செய்கை வைத்து.
“அம்பலம்?” அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. தான் எந்த இடமென்று கேட்டதையும் அக்கணம் மறந்துபோனாள்.
‘அய்யோ முடியலடா எனக்கு. இப்படியொரு சூழ்நிலை வரும் தெரிஞ்சிருந்தா தமிழ் ஒழுங்கா படிச்சிருப்பேனே. தமிழுக்கே தமிழ் டிக்ஷ்னரி வேணும் போலயே’ என ஆயாசமாக தலையை உலுக்கிக் கொண்டாள்.
“அண்மையில் சிவஸ்தலம் ஒன்றுள்ளது. செல்வோமா தேவி?” என்றான்.
அப்போது தான் அவளுக்கு அம்பலம் என்பது கோவில் என்றே புரிந்தது. அது மட்டுமல்லாது, வேடன் தன்னிடம் விளையாடவில்லை. அவரின் பேச்சு உண்மையில் இவ்விதம் தானென்று விளங்கியதோடு… அப்பகுதி காடு என்பதால், இந்த நாகரிக காலத்திலும் தமிழின் தொன்மை மாறாது, வளர்ச்சியின் சாயல் பூசிக்கொள்ளாத பழங்குடி மக்கள் சில தீவுகளில் இப்போதும் உள்ளனர் என்று செய்தி வாயிலாக என்றோ அறிந்ததை வைத்து, தான் எங்கோ நாகரிக வளர்ச்சி மாற்றம் பெறாத தீவிற்குள் வந்து மாட்டிக் கொண்டோம் என்று தன்னளவிற்கு யூகித்தாள்.
“ஆனால் இங்க எப்படி வந்தோம்?” கத்தி கேட்டாலும் பதில் கிடைக்கப் போவதில்லை என நினைத்தவள், தன் தாலியை இறுக்கிப் பிடித்து,
“என்னை தேடிட்டு இருக்கீங்களா மாமா?” என்றாள்.
“மாமா” என்று உச்சரித்த வேடன், “தாங்கள் பேசும் பதங்கள் பல மாற்றமாக உள்ளது” என்றான்.
“அடப்போடா… இருக்கிற கடுப்பில் நீ வேற” என்றவள், அவனது முகத்தை வைத்து, “என்ன புரியலையா? சந்தோஷம்” என்றாள்.
சிங்கத்திடம் அசைவு தெரிய…
“அரிமா விழிக்கும் நாழிகை வந்துவிட்டது தேவி. தற்சமயம் துரிதமாக இவ்விட விட்டு நாம் அகல வேண்டும்” என்றான்.
“எங்கபோறது” என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
“என்னவாயிற்று தேவி?”
நைருதி பதில் சொல்லாது இமைகள் மூடிட, கண்ணீர் துளிகள் அவளின் கன்னம் உருண்டது.
“இராணியாரே!” என்று வேடன் அவள் முன் முட்டியிட்டு அமர்ந்திட,
சட்டென்று தன்னை மீட்டெடுத்தவளாக, “அருகிலிருக்கும் மக்கள் நடமாடும் இடத்திற்கு செல்லலாமா?” எனக் கேட்டாள்.
அவள் பேசுவதை கூர்ந்து செவி மடுத்த வேடன்,
“ஆம் தேவி” என்று எழுந்தான்.
எழுந்தவள் முன்பு மார்பில் கை வைத்து இடை வரை குனிந்து, தனக்கு முன் செல்லுமாறு பாதை காட்டினான்.
முன்னே நடந்தவள் தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
வண்ணமயமாக திரை ஒளிர்ந்த பொருள் என்னவென்று அறியாத வேடன்,
“என்ன பொருள் இது?” எனக் கேட்டான்.
“மொபைல்” என்றவள், தலையில் தட்டிக் கொண்டவளாக, “தொலை தொடர்பு கருவி” என்றாள்.
“மன்னர் வடிவமைத்ததா தேவி? அவர் தான் இதுபோன்று புதுமையாக பல யுக்திகள் மேற்கொள்வாரே” என்றான் வேடன்.
தான் பழக்கமில்லா ஓரிடம் வந்து மாட்டிக்கொண்டோம் என்ற நிலையில் அவளுக்கு எதுவும் கருத்தில் பதியாமல் போனது. கொஞ்சம் ஊன்றி கவனித்து ஆராய்ந்திருந்தாலும் தானிருக்கும் இடம், வேடன் சொல்லிய மன்னன் எல்லாம் சேர்ந்து அவளுக்கு உண்மையை விளங்கச் செய்திருக்கும்.
“அந்த மன்னரே யாருன்னு எனக்குத் தெரியாதே” என்றவள், “என்ன தேவி?” என்று வேடன் கேட்டதில்,
“உங்க பேர் என்ன?” எனக் கேட்டாள்.
‘பேர் என்பதன் அர்த்தம் எண்ணிக்கை’ என்று உள்ளுக்குள் அவள் பேசியதை தன்னுடைய வழக்குக்கு மொழி பெயர்த்து, “எதனின் எண்ணிக்கை தாங்கள் அறிய வினவுகிறீர்கள் அன்னையே?” எனக் கேட்டான்.
“அய்யோ” என்று பற்களை கடித்தவள், “பெயர்… பெயர்” என்று அழுத்தி வினவினாள்.
வேடன் அப்போதும் யோசிக்கும் பாவம் காட்டிட,
“தங்களின் அறிமுகம்” என்றாள்.
“நன் நாமம் செம்பன். யான் ஒரு வில் கானவ காவலன்” என்றான்.
“அப்படியென்றால்?”
“விலங்குகளை வேட்டையாடச் செய்யாது தடுப்பவன்” என்றான்.
சில திங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசிக்கு யுத்ததில் ஏற்பட்ட விபத்தால் உடல் நலம் குன்றிவிட்டதென்று தகவல் நாடு முழுவதும் பரவியிருந்தது. அதன் பொருட்டே, அவளுக்கு உண்டான உடல்நல பாதிப்பால் வித்தியாசமாக நடந்து கொள்கிறாள், பேசுகிறாள் என்று தானாக ஒன்றை அனுமானித்து அவளுக்கு ஏற்றவாறு உரையாடிக் கொண்டிருக்கிறான்.
அத்தோடு அவனுக்கு இட்ட கட்டளையும் அதுவே!
“இராணியாரை பார்த்ததும் தன்னிடம் அழைத்துவர வேண்டும். அவர் மாற்றம் கொண்டு நடந்து கொண்டாலும், நின் மரியாதை குறை கொண்டிடக் கூடாது.” ராஜகுருவின் வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, அமைதியாக அவள் கேட்பதற்கெல்லாம் பொறுமையாக பதில் கொடுத்துக் கொண்டு அவளின் பின் முன்னேறினான்.
“அப்புறம் எதுக்கு நீங்க அந்த மானை நோக்கி குறி வச்சிருந்தீங்க?” என்று கேட்டவளுக்கு அங்கு கால நேரம் தெரியவில்லை என்றாலும் பசி வயிற்றைக் கிள்ளியது. அதனை அடக்கும் பொருட்டே, உடலின் அசதியை காட்ட விரும்பாது அவனிடம் பேசிக்கொண்டே அவனுடன் நடந்துக் கொண்டிருக்கிறாள்.
மனதின் ஓரத்தில், ‘எந்த நம்பிக்கையில் இவங்களோட போற நீ?’ எனும் கேள்வி எழுந்தாலும், நடப்பது என்னவென்றே தெரியாத ஓரிடத்தில் சமாளித்து தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடன் பயணித்தாள்.
நீங்க, குறி என்ற வார்த்தைகளைக் கொண்டு அவள் கேட்பதன் பொருளை புரிந்து கொண்டவனுக்கு, தற்போது ஓரளவிற்கு அவளின் பேச்சு பிடிபட்டது.
“யான் வருடையை (வருடை – மான்) நோக்கி குறி ஏற்றவில்லை தேவி. ஓடையின் அக்கரையில் வேட்டுவன் (வேட்டையாடுபவர்) ஒருவன் அவற்றைப் பார்த்து அம்பினை ஏந்தினான். அதிலிருந்து காக்கும் பொருட்டே, வருடையை திசை மாற்றம் செய்து ஓட வைப்பதற்காக நீரில் அம்பினை பாய்ச்சினன்” என்றான்.
“இங்கு விலங்குகளுக்கும் காவலர்கள் இருக்கின்றனரா?”
“ஆம். மன்னரின் ஆணை தான் இதுவும்” என்றான்.
அதன் பின்னர் இருவரும் பேசிக் கொண்டதில் செம்பனின் பேச்சில் அதிகம் நிறைந்திருந்தது மன்னர் என்ற சொல்லும், அம்மன்னனின் செயல்களும் தான்.
மெல்ல இருளத் துவங்கியது.
அதற்கு மேல் முடியாதென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிறு பாறையின் மீது அமர்ந்துவிட்டாள்.
“என்னவாயிற்று இராணி?”
பசியின் கொடுமையில் இருந்தவளுக்கு, அவனது இராணி, அன்னை, தேவி, அரசி போன்ற சொற்கள் கடுப்பாக இருந்திட…
“நைருதி… என்னோட பேரு… ம்ப்ச்” என்று சளித்தவள், “நன் நாமம் நைருதி. அதை சொல்லி அழையுங்கள்” என்றாள்.
அவள் படபடவென்று சொல்லியதில், அவளின் பெயர் சரியாக கேட்காவிட்டாலும், அவள் பெயர் சொல்லி அழைக்கச் சொல்கிறாள் என்பது புரிந்திட பதறினான்.
அவனின் அமைதியே அவனது மறுப்பை தெரிவித்தது. ஆயசமாக தலையை ஆட்டிக் கொண்டாள்.
“நீங்க சொன்ன சிவஸ்தலம் செல்ல எவ்வளவு நேரமாகும்?”
“இரு ஓரைகள் ஆகும்” என்றான்.
அவன் நாழிகை என்பான் என்று அவள் எண்ணியிருக்க அவனோ, அவள் தன் வேலை விஷயமாக அறிந்து வைத்திருந்த சில பண்டைய தமிழ் சொற்கள் அற்ற சொல்லை உபயோகப்படுத்திட, நெற்றியில் தட்டிக் கொண்டாள்.
“எத்தனை நாழிகை ஆகும்?” எனக் கேட்டாள்.
“ஐந்து நாழிகைகள்.”
மலைத்துப் பார்த்தாள் அவனை.
(ஒரு ஓரை – 2.5 நாழிகைகள். ஒரு நாழிகை – 24 நிமிடங்கள்.)
கிட்டத்தட்ட இன்னும் நான்கு மணிநேரத்திற்கு மேல் நடக்க வேண்டுமென்று நினைப்பதற்கே அவளுக்கு தலை சுற்றியது.
அந்நேரம் வானத்தில் அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி இரவு பட்சி ஒன்று வட்டமிட்டு பறந்தது. அதனின் ஓசை அந்தகாரத்தில் அச்சத்தை கொடுக்கும் அளவிற்கு கொடூரமாக இருந்தது.
பாறையின் மீது அமர்ந்திருந்த நைருதி பட்டென்று எழுந்து செம்பனை உரசி விடுமளவிற்கு அருகில் வந்து நிற்க, அவனோ வேகமாக இரு அடிகள் தள்ளி நின்றான்.
“பயமா இருக்குன்னு கிட்ட வந்தா ரொம்பத்தான்” என்று நொடித்துக் கொண்டவள், “போலாம் வாங்க” என்று அடி வைத்தாள்.
“வேண்டாம் இராணி” என்றவன், அவள் இமைக்கும் நேரத்தில் சரசரவென்று அருகிலிருந்த உயரமான மரத்தின் மீது ஏறியிருந்தான்.
அவன் ஏறிய வேகத்திற்கு அப்பறவை தன்னுடைய உயிர் நீத்து நைருதியின் காலுக்கடியில் வந்து விழுந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
25
+1
1
+1