Loading

அத்தியாயம் 25

சூரியன் சுள்ளென்று முகத்தை சுருங்கச் செய்த போதும் கண்கள் திறக்க முடியாது மண் தரையில் மயங்கிக் கிடந்தாள் நைருதி.

இருக்கும் இடம், சூழல் யாவும் கண்கள் மூடியிருந்த நிலையிலும் அவளால் உணர முடிந்தது.

பளிச்சென்ற மின்னல் விழிகளை கூச செய்திட, என்ன நடக்கிறதென்று அறியும் முன்பு எதனுள்ளோ இழுபட்டுச் செல்லும் உணர்வு.

சுழல் போன்ற காற்றின் பாதையில் பல மின்னல் துகள்களுக்கு நடுவே பயணிக்க, வெப்பமும், குளிரும் ஒருங்கே நிகழ்ந்தது. ஆறுகால மாற்றங்களும் நொடிப்பொழுதில் மாறிமாறி காலத்தைக் கட்டி இழுத்திட, சுவாசம் தடைபட்டது.

எங்கு செல்கின்றோம் எனும் அறிய முடியாத மாய சுழற்சியில் காற்றோடு காற்றாய் பயணித்தவளின் மூளை அறியத் துடித்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

மேகோனின் புத்தகத்தை புகைப்படம் எடுக்கும் போது தான் கவனித்தாள், ஒரு தாளில் வெண்ணிற சிலை வீற்றிருக்க, அதன் மார்பில் உறவாடிய தாலி மின்னுவதை.

‘இதெப்படி சாத்தியம்?’

முதல் முறை பார்த்திடும் போது வெறும் படமாக மட்டுமே தெரிந்தது. இன்று ஒளிரும் மாயம் அறிந்திட அப்பக்கத்தை திறந்து வைத்து அச்சிலைக்கு கீழே எழுதியிருக்கும் வாசகத்தை வாசிக்க முயன்றாள்.

பண்டைய எழுத்துருக்களில் பல எழுத்துக்கள் என்னவென்றே தெரியாததால், அதனை படித்து பொருள் விளங்கிக்கொள்ள முடியவில்லை அவளால்.

மெல்ல விரல் கொண்டு அச்சிலையின் உருவத்தை வருடியவளின் மேனி சிலிர்ப்பை உணர்ந்தது. தன் பிம்பத்தை தானே தீண்டும் உணர்வு. சிலையின் முகம் மண்ணால் அரித்திருக்க, முழு முகம் அடையாளம் காண இயலாது போனது.

அந்நேரம் தேவித்தின் இதய வருடலால் நைருதியின் தாலியோடு உறவாடிய இதயம் ஒளிர, அதன் வெளிச்சத்தில் தாலியை வெளியில் எடுத்த நைருதியின் முகத்தில் அத்தனை காதல்.

‘பார்க்கணும் போலிருக்கு மாமா!’ தேவித்திடம் அவள் காட்டிடாத தவிப்புகளுக்கு மனதில் வார்த்தை வடிவம் கொடுத்தாள்.

அவளின் அகக் குரல் அண்டம் கடந்து காலத்தோடு பயணித்து கேட்க வேண்டியவனின் செவி தீண்டியதுவோ!

இரு தாலிகளுக்கு உரிமைப்பட்டவன் ஒருவனாக இருந்திட, தாளில் மின்னும் தாலியும், பெண்ணவளின் மார்பில் ஒளிரும் தாலியும் ஒரே கோட்டில் சீரான ஒளிக்கதிரில் சந்தித்துக்கொள்ள… அவ்விடத்தை கருவிழிகள் கூசும் வெளிச்சம் நிறைத்தது.

நைருதி ஒளியின் வருகையின் மார்க்கம் உணரும் முன், வளி அமைத்த சுழற் பாதையில் காலத்தை பின்னோக்கிக் கடந்து வந்திருந்தாள். தன்னுடைய முன்ஜென்ம சிறை உடைக்க, தானே மார்க்கமாய் மன்னன் மனம் குளிரச் செய்திட மீண்டும் வந்திருந்தாள் நைருதியாய் பிறப்பெடுத்த மகிழ் மேகோனின் இளவேனில் மேகநதி.

மென் மேகம் அவள்… மேமகிழ் தேசம் முழுக்க வான்வெளியில் அரண் அமைத்து தன் மக்களை பாதுகாக்கும் மேகப் பெண்ணவள். வீரனவன் மனதை நேசத்தால் கொள்ளைக் கொண்டு, தினம் தினம் அவனை அவளுள் களவாடிக் கொண்டவள்.

சூரியனின் வெப்பம் உடல் பரவ, குளிர்ந்த காற்று நிழலாய் குடை பிடித்தது. புல்வெளி மெத்தையில் விழுந்து கிடந்த மங்கையவள் சில்லென்ற சாரல் துளிகள் முகத்தில் பட்டுத் தெறித்த குளிர்ச்சியில் இமை சுருக்கினாள். கேட்கும் மத்தள ஓசையில் நீர்த் திவலைகளின் பிறப்பிடம் அருவியின் தலைமை என்று புரிய, காற்றின் சலசலப்பு அடர்ந்த அடவியின் சூழலை பறைசாற்றியது. நாசி தீண்டி நுரையீரல் நிரம்பிய சுவாசம், மாசற்ற இளந்தென்றலை உணர்த்தியது. அகம் தொட்டவை யாவும் இயற்கையின் பேரினத் தன்மையாய் இருந்திட… சுற்றம் பார்க்க விழிகள் திறக்க முயன்றவளின் ஐம்புலன்களும் இதுவரை கண்டிராத உலகமது. அத்தனை சுகந்தமான சூழல்.

சட்டென்று ஒலித்த சருகுகள் மிதிபடும் சத்தத்தில் பட்டென்று விழி மலர்ந்தாள் நைருதி.

காணும் காட்சிகளை நம்பமுடியாது ஆச்சரியத்தில் விழிகளை அகண்டு விரித்தவளிடம் பெரும் அதிர்ச்சி.

அருவிக்கரை பாறையில் நீண்ட தோகை விரித்த மயில் சாரலின் குளுமையில் மெல்ல அசைந்தாடிக் கொண்டிருக்க, இரு புள்ளி மான்கள் தரை ஓடும் நதியில் நீர் அருந்திக்கொண்டு இருந்தன. கரையில் முயல்கள் தாவி ஓடிட, அம்பு ஏந்திய வேடன் ஒருவன் மான்களை நோக்கி மென் அடிகள் வைத்து புதர்களுக்கு நடுவே முன்னோக்கி நடந்தான்.

வேடன் உடுத்தியிருந்த மேல்கச்சை இன்றி, இடை சுற்றி முட்டி வரை அணிந்திருந்த ஆடை, அவள் வாழ்ந்த காலத்திற்கு சற்றும் பொருந்தாது இருக்க, அவ்விடத்தை சுற்றியும் பார்வையால் அலசினாள்.

“என்ன ஊர் இது?” கேட்டவாறு எழுந்தமர்ந்தவள்… திடீரென கேட்ட சிங்கத்தின் உறுமலில், அமர்ந்த நிலையிலேயே நகர்ந்து சென்று மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

வேடன் மறைந்திருந்த புதருக்கு அப்பால், காட்டின் உள்பகுதியை நோக்கிச் செல்லும் சிங்கத்தின் வால் மட்டும் தெரிந்திட, அச்சத்தில் இரு கைகளாலும் வாயினை இறுக மூடிக்கொண்டாள்.

“சர்க்கஸில் சிங்கத்தை பார்க்கவே பயப்படுற ஆளு நானு… என்னை இப்படி நேரில் பார்க்க வச்சு கொலை நடுங்க வைக்கிறீங்களே கடவுளே” என்று வானோக்கி புலம்பினாள்.

“எதுவும் கனவா இருக்குமோ?” என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்தாள்.

“அம்மா… வலிக்குது” என்று கிள்ளிய பகுதியை தேய்த்துவிட்டாள்.

“எங்க இருக்கேன் தெரியலையே! மாமா என்னை வந்து கூட்டிட்டுப் போங்களேன்” என்று முனகியவள், ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

நேரம், அலைக்கற்றை, காலநிலை மாற்றம் என்று திரை தெரியும் யாவும் அதில் இடம்பெறவில்லை. அதிலிருக்கும் செயலிகளும் திறக்க இயலாது போனது.

“மொபைல் எதும் ஆகிடுச்சோ?” என்றவள், “இப்போ என்ன பண்றது தெரியலையே” என சுற்றி பார்வையை ஓட்டினாள்.

வேடன் ஒருவன் மட்டுமே தன் இரையின் மீது கண்ணாக நின்றிருந்தான். அதுவும் அவளின் இருப்பை உணராது.

அடர்ந்த வனத்தில் தனித்து மாட்டிக்கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது.

காற்றில் பயணித்து காலத்தின் எல்லைகள் கடந்து வந்த சுழற்சியால் ஆடைக்கு வெளியில் தாலி வந்திருக்க, அதில் கோர்க்கப்பட்டிருந்த இதயம் மின்னி ஒளிர்ந்தது.

“மாமா நீங்க என்னை தேடுறீங்களா?” என்றவளின் கண்கள் கலங்கியது. இருக்கும் இடம், சூழல் வைத்து வேறெங்கோ வந்துவிட்டோம் என்பது மட்டும் புரிந்தது. அதனாலேயே கணவனின் தேடுதலில் தான் இருக்கிறோம் எனும் எண்ணம் அவளை நிலைக்குலைய வைத்தது.

அவர்களின் இதயங்கள் காதல் எனும் உணர்வுகளால் பிணைந்திருக்க, நேசத்தின் ஆழம் எல்லை கடந்து மட்டுமல்ல அண்டம் பல நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கின்றது.

“மாமாகிட்ட… இல்லைன்னா வீட்டுல யார்கிட்டவாது பேசிட்டால் போதும்” என்றவள் தன் கையிலிருந்த அலைபேசியை உயர்த்தி பிடித்து அலைக்கற்றை வருகிறதா எனப் பார்த்தாள்.

கிணற்றிலிட்ட கல்லாக அப்படியே இருந்தது. நேரம் கூட காட்டவில்லை என்பதில் சோர்ந்து போனாள்.

“எந்த இடம் கடவுளே இது” என்று புலம்பியவள் வேடனின் அசைவை உணர்ந்து அவன் புறம் திரும்பினாள்.

நீர் அருந்திக் கொண்டிருந்த மான்களை நோக்கி குறி வைத்த வேடன் அம்பினை எய்திட முற்பட…

“அச்சோ… வேணாம்” என்றிருந்தாள்.

திடீரென தனக்கு பின்னால் ஒலித்த பெண்ணின் குரலில் திரும்பியவனின் கை அசைவில் நாணேறிய அம்பு குறி விலகி நீரில் விழ, மான்கள் மின்னலென ஓடி மறைந்திருந்தன.

“யார் அவ்விடம்?” இரும்பென ஒலித்த குரலில் நைருதியிடம் மெல்லிய நடுக்கம். அக்கணத்திலும் வேடனின் பேச்சு வழக்கை கவனித்தவளாக,

‘இதென்ன சிவாஜி நடிச்ச ராஜராஜ சோழன் படத்துல, அவர் பேசுற மாதிரியே நாடக டைப்பில் பேசுறார்’ என்று எண்ணினாள்.

“கேட்டது செவிகளில் விழவில்லையா?” புதரின் மறைவிலிருந்து வெளிவந்திருந்த வேடன், வில்லில் அம்பினை ஏற்றியவனாக நைருதி நின்றிருந்த மரம் நோக்கி இரண்டு அடிகள் வைத்திட…

“அய்யோ அம்பு விட்டு என்னை கொன்னுடாதீங்க” என்று வேகமாக மரத்தின் பின்னாலிருந்து வெளிவந்து வேடனின் முன் நின்றாள்.

நைருதியை கண்டதும்…

“நீவீர் யாரும்?” என்று கேட்க வந்த வேடன், சட்டென்று அவள் முன் ஒரு கால் குத்திட்டு சிரம் தாழ்த்தி மண்டியிட்டவனாக…

“இராணியார் யான் மதியிழந்த செயலை மன்னிக்க வேண்டுகிறேன்” என்றான்.

“எதே இராணியா?” வாய்விட்டே அவள் அதிர்ந்து கேட்க…

“இராணியாரின் வினா அடியேனுக்கு விளங்கவில்லை அன்னையே!” என்றான் அவன்.

‘எதே அன்னையா? என்னைவிட வயசு பெரியவங்களா இருப்பீங்க நீங்க… இதெல்லாம் அநியாயமா தெரியலையா? நான் உங்களுக்கு அம்மாவா?’ அவளின் கேள்விகள் யாவும் மனதோடு மட்டுமே! வெளியில் கேட்டாலும் பதில் வருமா எனும் சந்தேகம் அவளிடம்.

வேடன் மண்டியிட்ட நிலையில் சிரம் தாழ்த்தியே இருக்க…

“எழுந்திருங்க” என்றாள்.

“நன்றி அன்னையே” என்ற வேடன், “தாங்கள் நன் வன பதம் வந்ததன் காரணம் என்ன அரசியாரே?” எனக் கேட்டான்.
(வனம் – காடு, பதம் – நிலப்பரப்பு, நாட்டின் எல்லைப்பகுதி. பேச்சு என்ற ஒரு பொருளும் உள்ளது.)

அவன் கேட்டதில் பாதி புரியாது அவள் விழித்து நின்றாள்.

‘தமிழ் தான் பேசுறார். ஆனால் பாதிக்கு பாதி புரியமாட்டேங்குது. இவர்கிட்ட வழிகேட்டு நான் எப்படி திருச்சிக்கு போறது. இது என்ன ஊருன்னு சொல்லு தெய்வமே!’ என்று உள்ளுக்குள் அரற்றினாள்.

‘இப்போ நான் எப்படி இவர்கிட்ட கேட்கிறது? நான் கேட்டாலும் புரியுமா?’ என நினைத்தவளுக்கு தேவையில்லாது ரஜினி நடித்த முத்து படத்தின் காட்சி ஒன்று நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது. வெளிக்காட்டிடாது மறைத்துக்கொண்டாள்.

‘அந்த மாதிரி சீன் எதும் ஆகிடுமோ’ என நினைத்த நைருதி, ‘முதலில் அவர் பேசுறதை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுவோம்’ எனத் தீர்மானித்தாள்.

“பாதை மாற்றம் கொண்டு வந்துவிட்டிரா?” அவளின் அமைதி வைத்து வேடனாக ஒன்றை தீர்மானித்துக் கேட்க அவளோ வேடனின் வார்த்தைகளை மொழி பெயர்த்துக் கொண்டிருந்தாள்.

‘பாதை – வழி, மாற்றம் – இடத்துக்கு தகுந்த பொருள். அப்போ இந்த இடத்தில் தவறி… ஊஃப்ப்ப்… தமிழுக்கே தமிழை டிரான்ஸ்லேட் பண்ண வச்சிட்டியே ஆண்டவா’ என மேல்நோக்கி பார்த்தவள், வேடனின் கேள்வி புரிந்தவளாக…

“ம்ம்” என்றாள்.

“நீவீர் விருப்பம் கொள்ளுமாயின் நன் குடிலுக்கு வாருங்கள் தாயே!” என்றான்.

அவர் அவ்வாறு கேட்டதும் அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த சிரிப்பினை சத்தமாக சிதறவிட்டாள்.

“வேணும்னு தானே நீங்க இப்படி பேசுறீங்க?” அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தபடி கேட்டாள்.

வேடன் அவளின் சிரிப்பையும், அவளையும் விசித்திரமாக நோக்கினான். அதுவரை தேசத்தின் ராணி எனும் எண்ணத்தில் பார்த்துக் கொண்டிருந்தவன் கருத்தில் அவளின் தோற்றம் அப்போதுதான் பதிந்தது.

அவரின் பார்வை தன்னில் வித்தியாசமாக படிவதை உணர்ந்தாள்.

“எதுக்கு அப்படி பாக்குறீங்க?” மனதில் தோன்றும் அச்சத்தை லாவகமாக வெளிக்காட்டிடாது வினவினாள்.

“தங்களின் உரை நம் மொழி போன்றும் உள்ளது… மொழியில்லாது போன்றும் உள்ளது. பாதி பதங்கள் விளங்கவில்லை” என்றான்.

“சத்தியமா புரியல.” தலையில் கை வைத்தாள். முகம் சுருக்கி. பாவமான பாவனையில்.

“தங்களின் வஸ்திரம் வித்தியாசமாக உள்ளது இராணி… இதென்ன நம் பண்டையத்திற்கு சற்றும் பொருந்தாத துகில்” என்றான்.

அவளுக்கோ அவனின் வார்த்தைகள் சற்றும் பொருள் புரியவில்லை.

“என்ன பேசுறீங்க சுத்தமா புரியல” என்றவள், “வஸ்திரம், துகில் அப்படின்னா என்ன?” எனக் கேட்டாள்.

வேடன் அவளின் நாகரிக பேச்சுத் தமிழ் புரியாது… அவளையே கூர்ந்து நோக்கினான்.

அவனின் பார்வை மிரட்சியை உண்டாக்க… அசையாது சிலையென நின்றவள், வேடன் நொடிப்பொழுதில் தன்னை நோக்கி எய்திய அம்பில் கீழே சரிந்திருந்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்