Loading

அத்தியாயம் 23

சென்னை…

அரசு தொல்லியல் இரசாயன ஆய்வுக்கூடம்.

அன்று ஆய்வுக்கூடத்தில் காலை ஒன்பது மணியளவில் வருடாந்திர சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது.

பொருட்கள் பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரி நைருதி. அங்குள்ள சிறு துரும்பிற்கும் அவள் சிறப்பு அதிகாரிகளிடம் கணக்கு காட்டிட வேண்டும்.

அங்கு பாதுகாக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அவளின் கட்டுப்பாட்டின் கீழ் தான் பாதுகாக்கப்படுகிறது.

ஒன்பது மணிக்கு தொடங்கும் ஆய்விற்கு முன்னதாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்கிற கணக்கிடலுக்காக ஏழு மணியளவிலேயே தன்னுடைய உதவியாளருடன் மியூசியம் வந்துவிட்ட நைருதி, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு உள்ளே சென்றாள்.

பெரும்பாலான உலோக படிமங்கள் இரசாயனத்தால் மூழ்கடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

அவற்றின் பெயர் பட்டியல் அடங்கிய குறிப்பேட்டை தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்தவள், பண்டைய வரலாற்றுடன் தொடர்பு கொண்ட முக்கியமான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

உதவியாளர் குறிப்பேட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்துக் கொண்டிருக்க… உள் அறைக்குள் சென்ற நைருதி இரண்டு மணிநேரம் சென்றும் வெளியில் வரவில்லை.

கண்காணிப்பு காமிராவில் பதிவாகிய காட்சிகளை உன்னிப்பாகக் கவனித்து பார்த்த தேவித்…

“அந்த ரூமில் காமிரா இல்லையா?” எனக் கேட்டான்.

தொல்லியல் துறை சிறப்பு அதிகாரி மல்கோத்ரா, கணினியை இயக்கிக் கொண்டிருந்த நபரிடம்,

“அதையும் காட்டுங்க” எனக்கூற, நைருதி அவ்வறையின் உள்ளே நுழைந்தது முதலான பதிவு காட்சிகளை அவன் ஓடவிட்டான்.

மேகோன் சம்பந்தபட்ட பொருட்கள் சில வாரங்களுக்கு முன்பு தான் கண்டறியப்பட்டன. அப்படியொரு அரசன் நம் வரலாற்றில் இருந்ததே, கிடைத்த படிமங்கள், கல்வெட்டுகள், பட்டய ஓலை புத்தகத்தின் சில பக்கங்கள் வைத்துதான் முதன்முறையாக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களே அறிகின்றனர்.

இவை எந்தளவிற்கு உண்மை என்பதற்கான வலுவான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்காததால், உண்மைத் தன்மையை அறியும்வரை ரகசியமாக வைத்திருக்க நினைத்து, மேகோன் எனும் அரசனின் பெயரைக் கூட செய்தி உலகிற்கு அவர்கள் தெரிவிக்காமல் வைத்திருந்தனர்.

அப்படிப்பட்ட நிலையில், கிடைக்கப்பெற்ற மேகோனின் கல்வெட்டையும், புத்தகத்தையும் நைருதி புகைப்படம் எடுத்ததற்கான காரணம், காணொளியை பார்வையிட்டுக் கொண்டிருந்த மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், தேவித்துக்கு நன்கு தெரிந்தது.

‘நிச்சயம் எனக்காக இல்லை.’ கண்களை மூடித்திறந்தான்.

“இங்கிருந்து சின்ன விஷயம் கூட வெளியப்போகக் கூடாதுங்கிறது தான் முக்கியமான விதி. ரொம்ப நேர்மையானப் பொண்ணு. பட் இப்படி பண்ண என்ன காரணம் எங்களுக்கேத் தெரியல” என்றார் மல்கோத்ரா.

‘எங்கடி இருக்க… நதி!’ உள்ளுக்குள் தவித்தவனின் விழிகள் திரையை விட்டு அகலவில்லை.

“ஓகே சார்… எங்க பொண்ணு தப்பு பண்ணதாவே இருக்கட்டும். இப்போ எங்க பொண்ணு எங்கே?” எனக் கேட்டான் கவின்.

கவினுக்கு சமூக ஊடங்களில் தங்கையைப் பற்றி பரவும் செய்தி, அவளுக்கு பலவகையில் ஆபத்தை உண்டாக்கிவிடுமோ எனும் பயம்.

“நம் வரலாற்றுச் சான்றினை திருடிக்கொண்டு, தொல்லியல் துறையில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்த பெண் ஊழியர் மாயம்.” இவ்வரிகளுடன், நைருதி புகைப்படம் எடுத்த காட்சி மட்டும் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது.

கிட்டத்தட்ட நம் வரலாற்றுச் சான்றினை வெளிநாட்டவருக்கு விற்பது தான் நைருதியின் நோக்கமென்ற வகையில் அக்காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.

“எப்பவும் உங்களோட டிஜிட்டல் நோட்ஸ்க்காக இந்த மாதிரி ஃபோட்டோஸ் எடுப்பது வழக்கம் தானே?” எனக் கேட்டான் தேவித்.

மல்கோத்ரா ஒரு நொடி தயங்கி சீரானார். அவரின் முகம் மெல்லிய பதட்டத்தை வெளிக்காட்டியது. அவரையே துல்லியமாக பார்வையிட்டுக் கொண்டிருந்த தேவித்தின் கண்களில் அவரின் தயக்கமும், பதட்டமும் தவறாது மாட்டிக் கொண்டது.

“அப்படி பதிவு செய்தலுக்காக எடுப்பதென்றால் எங்களுடைய பார்வையில் எடுக்க வேண்டியது தானே?” என்ற மல்கோத்ரா, “அவங்க ஃபோட்டோ எடுத்ததுக்கு அப்புறம் அவங்களையும் காணோம். ஓலைத்தாள்களும் காணோம். இதை வைத்து வேறெப்படி நினைக்க முடியும்?” என்றார்.

அவரின் தடுமாற்றமானப் பேச்சே, அவரிடம் உண்மையில்லை என்பதை தேவித்திற்கு காட்டிக்கொடுத்தது.

“அப்படிங்களா?” என்ற தேவித்,

“ஃபோட்டோ எடுத்ததுக்கு அப்புறமான ஃபுட்டேஜ் காட்ட சொல்லுங்க” என்றான்.

“ஃபோட்டோ எடுத்திட்டு இங்கிருந்து போயிட்டாங்க. அவ்ளோதான். அதுக்கு அப்புறம் அவங்களை ஆளை காணோம். செக்கிங் ஸ்டார்ட் பண்ண அப்போ அவங்க இல்லை. எப்படியும் வந்திடுவாங்க நினைச்சு நாங்க எங்க வேலையை பார்த்தோம். அப்போதான் அந்த ஓலைத்தாள்கள் இல்லைன்னதும் சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணியதில் வசமா மாட்டிக்கிட்டாங்க” என்றான்.

“எங்க பொண்ணு அப்படி பன்ற ஆளில்லைங்க.” மாமன்னன் சொல்லிட,

“அப்போ காமிரா பொய் சொல்லுதா?” என்று காட்டமாக வினவினார் மல்கோத்ரா.

“காமிரா பொய் சொல்லல… நீங்கதான் பொய் சொல்றீங்க” என்ற தேவித்திடம் இங்கு வரும்போதிருந்த பதட்டம் தற்போது சுத்தமாக இல்லை. அதற்கு மாறாக அழுத்தமான நிதானம் அவனிடம் தென்பட்டது.

தேவித்திற்கு மனைவி காணவில்லை, அவளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென்பதைவிட, அவள் மீது பொய்யாக வலம் வரும் செய்தியை பொய்யென்று நிரூபிக்க வேண்டும். இந்த கணம் அது அவசியமும் கூட.

திருட்டுப் பட்டத்துடன், நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டாள் எனும் பெயர், அவள் காணவில்லை என்பதில் வலுப்பெற்றிருக்க, தவறான செய்தியை முதலில் முறியடிக்க வேண்டிய நிலை.

மனைவிக்காக போராட முயன்றுவிட்டான் தேவித்.

“என்ன சொல்ற தேவா?”

மல்கோத்ரா பொய் உரைக்கிறார் என்று தேவித் சொல்லியதும், அதுவரை கண்கள் பார்த்த காட்சியை நம்ப முடியாது சிலையாகியிருந்த கவின் நிகழ் மீண்டிருந்தான்.

“நான் எதுக்கு பொய் சொல்லணும்? அதுக்கு எனக்கென்ன அவசியம்?” என்ற மல்கோத்ரா, கைக்குட்டை கொண்டு தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தார்.

“ஓகே நீங்க பொய் சொல்லல” என்ற தேவித், “நைருதி உள்ள வந்த வீடியோஸ் மட்டும் வரிசையா காட்டினீங்க… வெளியப்போனதை காட்டலையே! அப்படி வெளியப்போன வீடியோஸ் காட்டுங்க. இப்போ நைருதி கிடைப்பது உங்களுக்கும் அவசியம் தானே? ஃபுட்டேஜ் செக் பண்ணா எப்படி எங்க வெளியப்போனாங்க தெரியும். அவங்க எடுத்துக்கிட்டு” என்று நிறுத்திய தேவித், “திருடிட்டு… கரெக்ட்?” என்று மல்கோத்ராவை பார்த்து சுட்டு விரலால் நெற்றியை கீறியவாறு, “அந்த பேப்பர்ஸும் கிடைச்சிடும்” என்றான்.

“நீங்க பெரிய ஆளா இருக்கலாம் சார். அதுக்காக நீங்க கேட்டதும் எல்லாம் செய்திட முடியாது. இதுவரை உங்ககிட்ட அமைதியா பேச காரணம், அவங்க உங்க மனைவி. உங்களுக்கு சரியான தகவல் கொடுக்க நாங்க கடமைப்பட்டிருக்கோம். அதுக்காகத்தான்” என்றார்.

“எஸ்… அதேதான் மிஸ்டர் மல்கோத்ரா… எனக்கு போதுமான சரியான விளக்கம் நீங்க கொடுத்தே ஆகணும். பிகாஸ் ஷீ இஸ் மை ஒய்ஃப்” என்றான்.

தேவித்தின் உயரம் தெரியும். அவனை அளவுக்கு அதிகமாக பகைத்துக்கொள்ளவும் முடியாது. அதே சமயம் அவன் கேட்பதற்கெல்லாம் சரியென்றும் தலையசைக்க முடியாது. அப்படி செய்தால் மல்கோத்ரா மாட்டுவது உறுதி. அவருக்கு பின்னால் அமைதியாக நின்று கொண்டிருந்த, அவருக்கு இணையான இன்னும் இரு அதிகாரிகளும்.

“மொத்தமா இப்படி எல்லா தகவல்களும் சொல்ல முடியாது. அது இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆபத்தாக அமையலாம்.” மொத்தமாக தேவித்தின் வாயடைக்க அவ்வாறு கூறினார் மல்கோத்ரா.

“இங்க வேலை பார்ப்பவர்கள் பாதுகாப்புக்கான பொறுப்பு நீங்க தானே? அப்போ என் மனைவி எங்கன்னு உங்ககிட்ட தானே கேட்க முடியும்” என்ற தேவித், அங்கு கணினி முன்பு அமர்ந்திருந்த நபரிடம் திரும்பினான்.

“அவங்க ஃபோட்டோ எடுத்ததுக்கு அப்புறம் பிளே பண்ணுங்க” என்றான். அவனோ மல்கோத்ராவை பார்த்தான்.

“அவங்க வெளியில் திருடிட்டு போறது தெரியக் கூடாதுன்னு, போகும் போது காமிராஸ் ஃப்ரீஸ் பண்ணிட்டாங்க. சோ, வீடியோஸ் ரெக்கார்ட் ஆகல” என்று வேகமாக சமாளித்தார் மல்கோத்ரா.

தேவித் அங்கு வந்ததுமே நகரத்தின் தலைமை காவல் அதிகாரிக்கு தகவல் அளித்திருந்தான். அவரும் மல்கோத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் நைருதி எங்கு சென்றிருக்க முடியுமென்று தன்னுடைய காவல்துறை ஆட்கள் வைத்து தேடுதல் நடத்திக் கொண்டிருக்க, அப்போதுதான் அங்கு வந்தார். அதுவும் தேவித்தின் பதிவியால், அவரே அங்கு நேரில் வரும்படி ஆனது.

நடந்து கொண்டிருக்கும் சூழலை தேவித் டிஜிபி’க்கு விவரிக்க… அவரும் காணொளியைக் காட்ட சொல்லிக் கூறினார்.

“அவங்க ஃபோட்டோ எடுத்ததுக்கு அப்புறம் வீடியோஸ் பதிவாகல” என்று மல்கோத்ரா கண்காட்ட, அவருக்கு துணையாக மற்றொருவர் கூறினார்.

“ஓகே வேலை செய்யல. நைருதி தான் காமிராஸ் ஜாம் பண்ணிட்டாங்க வச்சிப்போம்” என்ற தேவித், “வெளியில் போகும் போது மாட்டிக்கக் கூடாதுங்கிறதுக்காக ஜாமர் யூஸ் பண்ணவங்க, திருடுவதற்காக ஃபோட்டோஸ் எடுக்கும் போதே அதை யூஸ் பண்ணியிருக்கலாமே. அவங்க ஃபோட்டோஸ் எடுத்ததும் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்குமே” என்றான்.

மனைவியின் மீது தவறு இருக்காது என்று தேவித்தின் மனம் அழுத்தமாக நம்புவதற்கு காரணமும் இதுதான்.

என்ன தான் உனக்காக அந்த தகவல்களை எடுத்து தருகிறேன் என்று நைருதியே சொல்லியிருந்தாலும், அப்படியொரு செயலை ஒருபோதும் அவளால் செய்ய முடியாது என்று அவன் நன்கு அறிவான். அந்த நம்பிக்கையில் தான் மல்கோத்ராவின் மீது தேவித்தின் சந்தேகமும் உறுதியானது.

தேவித் கேட்ட கேள்வியில் அங்கிருந்த அத்துறை சார்ந்த அனைவருக்கும் பயம் சூழ்ந்தது.

“அவர் கேட்பதும் சரிதானே மல்கோத்ரா” என்ற டிஜிபி, “வன்ஸ் அவங்க செக் பண்ணிக்கட்டும். காணாமல் போயிருப்பது அவங்க மனைவி” என்றார்.

“நாங்க இருக்கும் துறை ரொம்பவே பாதுகாக்கப்பட வேண்டியது. இப்படி எடுத்ததும் எல்லா தகவலும் கொடுக்க முடியாது சார்” என்றார் மல்கோத்ரா. அவர் மறுக்க மறுக்க தான் தேவித்தின் பிடிவாதம் அதிகமாகியது.

“வெல்…” வலது கையால் இடது பக்க கன்னத்தை தேய்த்த தேவித், “இந்த இடத்தை இன்ச் பை இன்ச் சர்ச் பண்ண பி.எம் ஆர்டர் வாங்கி தரட்டுமா?” எனக் கேட்டான்.

மல்கோத்ராவின் பின்னால் நின்றிருந்த இருவருக்கும் உடல் வெளிப்படையாக நடுங்கியது.

அதுவரை அமைதியாக கைகளை பிசைந்தபடி தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பயந்தபடி தள்ளி நின்றிருந்த, நைருதியின் உதவியாளரான மனோ என்ற பெண் தேவித் முன்வந்து நின்றாள்.

“மேம் அந்த ரூமுக்கு போகும்போது, புதுசா கிடைச்ச மெட்டீரியலுக்கெல்லாம் டிஜிட்டல் நோட்ஸ் கம்ப்யூட்டரில் ஃபீட் பண்ணவே இல்லை. இப்போ செக்கிங் பண்ணா, அது தான் ரொம்ப முக்கியம். முதலில் அந்த வேலையை முடிச்சிடுவோம் சொன்னாங்க சார். அதுக்காகத்தான் அவங்க ஃபோட்டோஸ் எடுத்ததும். என்னென்ன இருக்குன்னு எழுதி வைப்பதோடு, அந்தப் பொருட்களோடு ஃபோட்டோஸ் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பது வழக்கம்” என்றாள்.

தேவித் மல்கோத்ராவை அழுத்தமாக முறைத்திட, மனோ தொடர்ந்தாள் என்றாள், அவள் முதலில் பேச ஆரம்பித்ததுமே தேவித் கண்காட்டியதில் வீரட் அங்கு நடப்பது அனைத்தையும் தன்னுடைய அலைப்பேசியில் காணொளியாக பதிவு செய்யத் தொடங்கியிருந்தான்.

“இதை நீங்க காலையிலே ஏன் விசாரணையின் போது சொல்லவில்லை?” டிஜிபி மனோவிடம் கேட்க, அவள் மல்கோத்ராவை அச்சத்தோடு ஏறிட்டாள்.

அவளின் விழி வழி என்ன நடந்திருக்கிறதென்று நொடியில் யூகித்து விட்டான் தேவித்.

“சிசிடிவி வீடியோஸ் முழுசா செக் பண்ணிட்டா உண்மை எல்லாம் தெரிஞ்சிடும்” என்று தேவித் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கணினியின் முன் அமர்ந்திருந்தவன், மல்கோத்ராவின் சிறு அசைவுக்கு மற்றவர்கள் உணரும் முன்பு, காணொளி பதிவுகள் மொத்தத்தையும் அழித்திருந்தான்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
22
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்