Loading

அத்தியாயம் 22

செய்த தவறு இன்னதென்று தெரிந்து… அதற்கான தீர்வை அறிந்துகொண்ட பின்னர் தான் சுற்றம் உணர்ந்தான் தேவித்.

இதற்கிடையில் அவனது மனதை அமைதிப்படுத்தும் வழியை செய்தது, இதயம் ஒலித்த மகிழ் எனும் நைருதியின் விளிப்பு தான்.

அந்த இரு நொடி மனைவியின் நினைவில் லயிப்பவன், தன்னுடைய தேடலை சிறு வருடலில் காண்பித்து மீண்டும் தன் வேலையில் மூழ்கிடுவான்.

கிட்டத்தட்ட விடியலின் போதுதான் அவனது தவறு என்னவென்று பிடிபட, அவ்வறைவிட்டு வெளியில் வந்தான்.

இரு பாதத்தையும் தரை ஊன்றியவனாக மெத்தையில் விட்டத்தை பார்த்தவாறு படுத்து கண்கள் மூடியவன், நெற்றி முனையில் பெருவிரல் வைத்து ஊன்றியவனாக, நான்கு விரல்களால் நெற்றியின் மையத்தில் அழுத்தம் கொடுத்து தேய்த்தான்.

அந்நேரம் சரியாக நைருதியின் குரல் ஒலிக்க, இதயத்தை மென்மையாக இரு விரல்களில் பிடித்துக் கொண்டவன், நேரத்தை பார்க்காது மனைவிக்கு அழைத்திருந்தான்.

“மாமா!” சில நொடிகளில் அழைப்பை ஏற்று, நைருதியின் குரல் செவி நுழைந்ததும்…

“இம்சை பன்றடி! அவஸ்தையா இருக்கு” என்றான்.

“அப்படி என்ன பன்றாங்களாம்?” என்ற நைருதியின் குரல் தூக்கத்தில் கிசிகிசிப்பாய் ஒலிக்க…

“படுத்துறடி” என்று புலம்பினான்.

“இப்போதான் லேப் விட்டு வெளியில் வந்தீங்களா?”

“எப்பிடி கரெக்ட்டா சொல்ற?”

“சயின்டிஸ்ட் இன்னும் என் மெசேஜ் பாக்கலையே. பார்க்காம கால்… அதுவும் இந்த நேரத்துக்கு” என்றாள்.

“என்ன மிஸ்டேக் பண்ணேன் கண்டுபிடிச்சிட்டேன் நதி. அதை எப்படி சரி பண்ணலாம் ஒரு கால்குலேஷன். இன்புட் பண்ணி பார்க்கணும். சரி வந்தா என்னோட லக்” என்றான்.

“லக் இல்லை. முழுசா உங்க திறமை, முயற்சி தான் காரணம்” என்ற நைருதி…

“நான் வேணும்னா மேகோன் அவங்க புத்தகம் எடுத்துக் கொடுக்கவா?” எனக் கேட்டாள். அதற்கே அத்தனை தயக்கம் அவளிடம்.

என்ன தான் தோல்வி பழகியிருந்தாலும், அதிலிருந்து உடனடியாக மீண்டு அடுத்து என்ன என்று… முன் அடி வைத்திட்டாலும், தேவித்தின் புன்னகைக்கு பின்னாலிருந்த ஏமாற்றத்தை, அது உண்டாக்கிய வலியை நைருதியால் உணர முடிந்தது.

நைருதி அவ்வாறு கேட்க, தேவித்திடம் ஆழ்ந்த அமைதி.

“அவருடைய வரலாற்றை அவரே, அவர் கட்டிய சிவன் கோவிலில் கல்வெட்டா செதுக்கி வைத்தது மட்டுமல்ல, பனை ஓலை புத்தகமாக எழுதியும் வைத்திருந்திருக்கார். கிங் மேகோன் அவரே கைப்பட எழுதிய புத்தகத்தின் சில பக்கங்கள் மட்டும் கிடைச்சிருக்கு. அதோடு அந்த கோவில் கல்வெட்டு சிறு சிறு துண்டுகளாகக் கிடைச்சிருக்கு. கிடைத்த துண்டுகளை வைத்து தான் அந்த புத்தகத்தில் என்ன இருக்கு என்பதையே முழுசா தெரிஞ்சிக்க முடிந்தது. முழுசா மீன்ஸ் அந்த புத்தகத்தில் அவரோட வரலாற்றை எழுதியிருக்கிறார் என்பது. பண்டைய தமிழ் எழுத்துக்கள்… சோ முழுசா டீகோட் பண்ண முடியல. சில எழுத்துக்கள் சுத்தமா என்ன எழுத்தா இருக்கும் அப்படின்னு கண்டுபிடிக்க முடியாததால் சரியா இது இந்த வார்த்தை தான் அப்படின்னு படிக்க முடியல. பனை ஓலை… கிடைத்ததில் பாதி அரித்து வேற போயிருந்தது” என்றாள்.

அப்போதும் அவனிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.

“எங்களுக்கு கிடைத்தது ஐந்தாரு பக்கங்கள் தான். அதில் தான் இந்த தாலி டிசைன் இருந்தது. அதில் என்ன எழுதியிருந்தது தெரியல. ஆனால் அவர் காலத்தை முன்னோக்கி கடக்க முயற்சி செய்ததாகவும், அதில் எதோ நடந்து, அவரோட மனைவி சிலையாகிட்டதாகவும் இருந்தது. அதுக்குமேல அதை என்னால் படிக்க முடியல. பட் எங்க சீஃப் கிடைத்ததை முழுசா படிச்சார். இப்படியொரு அரசர் இருந்தது நமக்கெல்லாம் தெரியணும் அப்படின்னு அவரோட வரலாறை அவரே எழுதியிருக்கார் அப்படின்னு பொதுவாக சொன்னார். அவர் டைம் டிராவல் பண்ண முயற்சி செய்திருக்கார் அப்படின்னா, எப்படியெல்லாம் செயல்முறை படுத்தினார் அப்படின்னும் எழுதியிருப்பார் தானே! நாளைக்கு செக்கிங் அப்போ, அதை நான் தான் வெளியெடுக்க முடியும். அப்போ முடிஞ்சா போட்டோ எடுக்கப் பார்க்கிறேன். மே பீ உங்களுக்கு அதிலிருக்கும் எழுத்துக்களை படிக்க முடியும். இதுக்காக நீங்க எல்லாம் கத்துக்கிட்டிங்க தானே” என்றாள்.

………

“என்ன மாமா எதுவும் பேசாம இருக்கீங்க?”

“எனக்காகவா நதி?” ஆழ்ந்த குரலில் கேட்டிருந்தான்.

“உங்களுக்கு யூஸ் ஆகுமே!”

“இது தப்புன்னு உனக்கும் தெரியும். வேண்டாம்” என்றான்.

“மாமா…”

“எனக்கு எடுத்துக் கொடுத்துட்டு உன் வேலைக்கு உண்மையா இல்லைன்னு ஃபீல் பண்ணுவ. உன்னால நிம்மதியா இருக்க முடியாது. தெரிஞ்சே எதுக்கு தப்பு பண்ணனும். உன்மேல இருக்க நம்பிக்கை தான், உன் வேலைக்கான பொறுப்பு” என்றான்.

அவனால் எழுதப்பட்டது. உரிமையாய் வைத்திருக்க அவனைவிட யாருக்கு அதிகாரம் இருந்திட முடியும்? பார்த்திடக் கூட முடியாது தொலைவில் இருக்கின்றான். அவன் வரலாற்றை அவனே அறியும் போது, அவன் மனம் நம்புமோ?

“நீங்க இப்படி சொல்லுவீங்க தெரியும். இருந்தாலும் ஒரு செக்… உங்களை அப்படி பார்க்க முடியல. அதான் ஹெல்ப் பண்ணலாம் நினைச்சு…” என்று இழுத்த நிறுத்தினாள்.

“எனக்கு புரியுது” என்ற தேவித், “இவ்வளவு தூரம் எப்படி வந்தனோ… அப்படியே இன்னும் மீதமிருக்கும் தூரத்தையும் கடப்பேன்” என்றான்.

“பெஸ்ட் விஷ்ஷஸ் மாமா” என்றவள், “கொஞ்ச நேரமாவது தூங்குங்க… மூளையும் மனசும் அமைதி ஆனாலே எல்லாம் சரியா நடக்கும்” என்றாள்.

“சரிங்க மேடம்” என்றவன், “நீ எப்போ வருவ?” எனக் கேட்டான். ஹஸ்கி குரலில்.

“எதுக்காம்?”

“தூங்குறதுக்குதான்.” பட்டென்று சொல்லியிருந்தான்.

“ஆஹான்…”

“என்னடி… உனக்கில்லையா அப்படி?” என்றான்.

“எப்படி?”

“மிஸ் பன்ற ஃபீல்…”

“என்னவோ மொத்தமா உங்களை விட்டு தூரமா போயிட்ட மாதிரி பேசுறீங்க. நாலே நாள் அங்க வந்திடுவேன்” என்றாள்.

“சத்தியமா முடியலடா… நதி இல்லாம இந்த ரூமில் இருக்க முடியல” என்றான். ஏக்கமாக.

“கிங் வெயிட் பண்ணிட்டே இருங்க. குயின் பறந்து வந்திடுறேன்” என்ற நைருதி, “அந்த மூணு வார்த்தை சொல்லணும் போலிருக்கு. ஆனால் இப்போ சொல்லமாட்டேன். நேரில் வந்து உங்க கண்ணை பார்த்து சொல்லணும்” என்றாள்.

அவளிடம் பேசிக்கொண்டே, இரவு முழுக்க விழித்திருந்த சோர்வில் தேவித் தானாக உறங்கியிருக்க, அவனிடமிருந்து எந்தவொரு சத்தமும் இல்லாமலிருக்க, காற்றின் வழி முத்தத்தை அவனிடம் சேர்ப்பித்தவள் நேரத்தை பார்த்தவளாக அலுவலகம் செல்ல ஆயத்தமாகினாள்.

முந்தைய இரவும் கவினுடனான விவாதத்தால் தேவித்திற்கு சரியான உறக்கமில்லை. இன்றும் தன் தவறை கண்டுபிடிக்கும் வேலையில் உறக்கத்தையே மறந்திருக்க, விடியலில் உறக்கம் கொண்டிருந்தவன், நண்பகல் கடந்தும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

அவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போயிருந்தான் கவின்.

வீட்டின் அழைப்புமணி எங்கோ தூரத்தில் ஒலிப்பது போலிருக்க… மெல்லிய அசைவு மட்டுமே தேவித்திடம்.

அங்கு கவின் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்க… அவனது கை, விடாது தேவித்திற்கு அழைத்துக் கொண்டிருந்தது. கவினுடன் பயணித்துக் கொண்டிருந்த மாமன்னன் மற்றும் ஆவுடை கலங்கி அமர்ந்திருந்தனர்.

“புள்ளைக்கு ஒண்ணுமில்லையே?” கேட்ட ஆவுடைக்கு என்னவென்று முழுதாக தெரியாது… பதில் சொல்ல முடியாது கடினமாக இருந்தான் கவின்.

“ஒரு அவசரத்துக்கு கூட கிடைக்க முடியாத அப்படியென்ன வேலை அவனுக்கு. இதுக்காகத்தான் ருதியை கட்டிக்கொடுக்க ஆயிரமுறை யோசிச்சேன். காதல்ன்னு என் வாயை அடைச்சிட்டாள். மொத்த கோபத்தையும் தேவித்தின் மீது காட்டினான் கவின்.

அவனின் பேச்சை மாமன்னனால் மறுத்து பேச முடியவில்லை. அவருக்கும் ஒரு அவசரமென்றால், பேச வேண்டுமென்றால் எளிதாக தொடர்புகொள்ளும் நிலையில் மக்கனில்லையே என்கிற வருத்தம் பலமுறை இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் அவனின் உயரம் வைத்து தன்னை சமாதானம் செய்து கொள்பவருக்கு… இன்று இந்நிலையில் அப்படி இருக்க முடியவில்லை.

விடயம் என்னவென்றே முழுதாக தெரியாதபோது… பெரும் சிக்கலில் சிக்கி உள்ளோம் என்பது மட்டும் விளங்க, மனம் வெகுவாக மகனின் அண்மையை நாடியது.

தொடர்ந்து அழைப்பு மணி ஒலிக்கவே மெல்ல எழுந்தான் தேவித், அப்போது தனக்கு அருகில் அலைபேசி ஓசையின்றி ஒளிர்ந்து கொண்டிருக்க… கவினின் அழைப்பை ஏற்றவனாக வாயில் கதவை திறந்தான்.

வீரட் நின்றிருந்தான். அதீத பதட்டம் அவனிடம்.

“என்னடா?” அலைபேசி தொடர்பிலிருந்த கவினுக்கும், தனக்கு முன்னால் நின்றிருந்த வீரட்டுக்கும் பொதுவாகக் கேட்டிருந்தான்.

“நீயெல்லாம் ஃபோன் எதுக்கு வச்சிருக்க… தூக்கி தூரப்போடு. விடாம கூப்பிடுறாங்க அப்படின்னா ஏதோ எமர்ஜென்சின்னு தானே அர்த்தம். அதைக்கூட புரிஞ்சிக்க முடியாம உனக்கெல்லாம் எதுக்கு ஃபோன்” என்று கவின் காட்டுக் கத்தலாக பொரிந்திட…

“எதுக்கு இவ்வளவு கோவம் கவின்?” என்றான் தேவித்.

“நீதான்டா பிரச்சினை” என்ற கவின், “வீரட் உன் முன்னாடி தானே நிக்கிறாங்க. விஷயம் தெரிஞ்சுக்கிட்டு வந்து சேரு” என்று சற்றும் தன் ஆத்திரம் தீராது சொல்லிவிட்டு வைத்தான்.

“என்னடா நடக்குது? அவன் அவ்ளோ டென்ஸ்டா பேசுறான். உனக்குத் தெரியும் சொல்றான். நீ என்னவோ யாரையோ கொலை பண்ணிட்டு வந்திருக்கவன் மாதிரி நிக்கிற” என்ற தேவித்தின் மார்பில் கை வைத்து வீட்டிற்குள் தள்ளியவனாக உள்ளே நுழைந்த தேவித், தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, செய்தி அலைவரிசையை வைத்தான்.

“இப்போ இதுதான் இந்தியாவுல பிரேக்கிங் நியூஸ்” என்றான்.

திரை தெரிந்த காணொளியிலும், கீழே ஒளிர்ந்த வரிகளிலும் தேவித் பெரிதும் அதிர்ந்தான்.

“இஸ் திஸ் ட்ரூ?” நம்ப முடியாத ஒன்றை, கண் முன்னே காணும் நேரம் தோன்றும் உட்சக்கட்ட அதிர்வு அவனிடம்.

“டி.என் நியூஸ் சேனலில் மட்டுமில்ல, இங்க பிபிசி நியூசில் கூட இதுதான்” என்று அலைவரிசையை மாற்றி காண்பித்தான்.

தேவித்தின் கைகள் தன்னுடைய அலைபேசியை இறுக்கி பிடித்தது. அடுத்த கணம் மனைவியின் எண்ணுக்கு அழைத்தான். அழைப்பு செல்லவே இல்லை.

அடுத்து சற்றும் யோசிக்காத, தன்னுடைய பதவியின் உயரம் வைத்து, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் தலைமை அதிகாரிக்கு நேரடியாக அழைத்துவிட்டான்.

தேவித் யாரென்று அறிந்துகொண்டவரும்…

“நீங்க நேரில் வாங்க சார்… பேசிக்கலாம்” என்று சொல்லிட, வீரட்டையும் அழைத்துக்கொண்டு சென்னை புறப்பட்டிருந்தான்.

விமான நிலையம் செல்வதற்குள், தேவித் கவினுக்கு பலமுறை அழைத்திட, ஒன்றையும் கவின் எடுக்கவில்லை.

மாமன்னனுக்கு வந்த அழைப்பையும் எடுக்கவிடாது தடுத்த கவின்,

“ஒருமுறையாவது நம்ம கஷ்டம் என்னன்னு புரியட்டும். பட்டா தான் தெரியும் வலியும் வேதனையும்” என்றிருந்தான்.

வீரட் கிளம்பிவிட்டோம் என்று அனுப்பிய தகவல் கவினுக்கு போதுமானதாக இருந்திட, தேவித்தை மறந்தவனாக கவின் சாலையில் கண்ணாக, வாகனம் ஓட்டுவதில் கவனம் வைத்தான்.

விமானத்தின் இருக்கையில் அமர்ந்து, தலையை பின் சாய்த்து கண்கள் மூடிக்கொண்ட தேவித்தின் விழித்திரையில் தொலைக்காட்சியில் பார்த்த காணொளி காட்சியாக வலம் வர, மனதில் பல்வேறு காட்சிகளின் அணிவகுப்பு.

அவனின் மனம் எங்கெங்கோ பயணிக்க… சட்டென்று இமைகள் திறந்தவன், அலைபேசியில் தொல்பொருள் ஆராய்ச்சி துறை வெளியிட்டிருந்த காணொளியை எடுத்துப் பார்த்தான்.

அக்கணம் அவன் மனம் கேட்ட ஒரே கேள்வி…

‘இதெப்படி சாத்தியம்?’

மீண்டும் கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்தவனுக்கு…

‘தன்னுடைய ஆசை தான் காரணமோ?’ என்ற எண்ணம் எழாமலில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்