அத்தியாயம் 21
ஒவ்வொரு முறையும் ஆராய்ச்சியைத் துவங்கும்பொழுது, தன்னுடைய செயல்முறை சிறிதாக இருப்பினும் அதில் அதீத கவனத்தையும் நேர்த்தியையும் கடைபிடிக்கும் தேவித், வெற்றியை நோக்கியே தன் பாதையை வகுத்திடுவான்.
ஆனால் எங்கோ ஓர் புள்ளியில் தவறவிடும் சிறு செயல், மொத்த ஆராய்ச்சியையும் தோல்வியடையச் செய்திடும். அடுத்தமுறை அந்த தவறு நேர்ந்திடக் கூடாது என்பதில் பெரும் சிரத்தைக் கொண்டு, தவறினை கண்டறிந்து மீண்டும் முயற்சித்திடுவான்.
அப்படி தன்னுடைய செயல்முறையில் நேர்ந்த அனைத்து தவறுகளையும் சரி செய்யும் விதமாக கையாண்ட ஆராய்ச்சி தான் முந்தையது. அதில் எப்படி வெற்றி நிச்சயம் என்ற அவனது உறுதி நேற்றைய இரவில் மொத்தமா உடைந்திருக்க… மீண்டும் தன் முயற்சியை தூக்கி நிறுத்த துணிந்துவிட்டான்.
இங்கு விழுவோம் என்று சொல்லிக் கொடுக்கத் தெரிந்த பலருக்கு… விழுந்தால் எழ வேண்டுமென்ற வெற்றியின் மந்திரத்தை சொல்லிக் கொடுக்கத் தெரிவதில்லை.
ஆனால் பல தோல்விகளை கண்டதாலோ என்னவோ வெற்றியின் சூட்சமத்தை சரியாக தெரிந்து வைத்திருந்த தேவித், சற்றும் அசராது மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டான்.
நைருதியை விமானம் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீடு வந்தவன், நேராகச் சென்றது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடமிருக்கும் அறைக்குள் தான்.
ஒரு மணிநேரம் சென்றிருக்க… அவனது கையில் தொங்கிக் கொண்டிருந்த சிறு இதயம்…
“மகிழ்” என்று விளித்தது.
அதில் நைருதி தன் குரலை பதிவு செய்திருக்க, அவளின் அழைப்புக்கு அவனது இதயம் நின்று துடித்தது.
“நதி” என்று உச்சரித்த தேவித், மென் புன்னகையுடன் அவ்விதயத்தை தன் விரலால் வருடினான்.
“நீங்க இந்த உலகத்தில் எந்த மூளையிலிருந்து இதை தொட்டாலும், எனக்கு இங்க சிக்னல் வரும்” என்று விமான நிலையத்தில் வைத்து, தன் மார்பில் உரசும் இதயத்தை தொட்டுக் காண்பித்து நைருதி சொல்லியது நினைவில் எழ, அவனின் மீசை சுருங்கி விரிந்தது. முகம் விரவிய மலர்ந்த சிரிப்பில்.
“இது முழுக்க AI டெக்னாலஜி யூஸ் பண்ணி நானே டிசைன் பண்ணது.” இதனை சொல்லும் போது மனைவியின் முகம் காட்டிய பெருங்காதலில் அக்கணம் போன்று இந்த நொடியும் கட்டுண்டான். அவனது கை மெதுவாக மேலெழும்பி நெஞ்சத்தை அழுத்தமாக நீவியது.
தேவித் இதயத்தை வருட,
சிலையின் தாலி மின்னி ஒளிர்ந்தது.
“இன்னும் இரு தினங்களில் இயற்கை உறையும் காட்சி அரங்கேற இருக்கிறது. நின் உயிர் மீட்டு, வதனம் தீண்டிட… நம் குழந்தையை ஸ்பரிசித்திட… யுகங்கள் நீண்டு காத்திருந்த எம் காதலால் இன்னும் கொஞ்சமே மிச்சமிருக்கும் நாழிகைகள் பல காத்திருக்க முடியவில்லை.”
ஒளிர்ந்த தாலியை வருடியவனாக மேகோன் கற்சிலையுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
“யான் செய்த தவற்றை சரி செய்திடும் காலம்… உம்மை மீட்டெடுக்க நன் ஜீவன் காலம் கடந்து வரவிருக்கிறது நதி… மேகோனின் நதி…” என்றவனின் கண்களில், தன்னவளுக்காக தன்னிடமே யுத்தம் புரிந்திட தூண்டும் வேட்கை. காதல் வேட்கை. யுகங்கள் நீளும் நேச யுத்தமதில், அவனே அவனுடன் போர் புரியும் விந்தை. இங்கு கால மாற்றம் மட்டும் முரண் அல்ல… காலத்தை மாற்றி அமைக்க இருப்பவனும் முரண் வாய்ந்தவனே!
“உன்னுடன் நேசத்தோடு ஒரு வாழ்வு வாழ்ந்திட வேண்டும்… எனது நேசமெல்லாம் நின் நினைவுகளுடன் நீட்சிகொள்கிறது.”
காதல் சாமானியனை மட்டுமல்ல முடி சூடிய வேந்தனையும் கசிந்துருகச் செய்திடுமாம். அதில் மகிழ் மேகோன் மட்டும் விதிவிலக்கா என்ன?
செய்த தவறு மனதை அழுத்தவே, சரி செய்திட வேண்டி, மீண்டும் பிறப்பெடுத்த தன்னை பின்னோக்கி இழுக்கும் விந்தை. நினைக்கையில் காலத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாக விளங்கிட… இம்முறை தன்னுடைய தவறுகள் யாவும் நேர்பெற்றுவிடும் நம்பிக்கை மட்டும் தீவிரம் கொண்டது.
சென்னை சேர்ந்து விட்டதாக தெரிவிக்க நைருதி அழைத்திட, ஆராய்ச்சிக் கூடத்தில் தன் தவறை அறிய தீவிரமாக ஆழ்ந்திருந்த தேவித் அழைப்பினை ஏற்கவில்லை. அதன் ஓசை அவனது செவி நுழையவில்லை என்பதே சரியாக இருக்கும்.
தன்னுடைய அழைப்பை தேவித் எடுக்கவில்லை என்றதுமே, அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்று யூகித்துவிட்ட நைருதி, தான் வந்து சேர்ந்ததை தகவல் அனுப்பி வைத்தாள்.
ஓரளவு தற்போதைய செயல்முறையில் தான் செய்த தவறு பிடிபடவே… நெற்றியில் தட்டிக் கொண்டான்.
அங்கு மேகோன் தன் நெற்றியில் எழுந்த வலியை விரல் கொண்டு தேய்த்து சரிசெய்ய முனைந்தான்.
மேகோன் தன் ராஜ்ஜியம் காக்க எதிர்காலம் நோக்கி பயணம் செய்ய முயல… தன் மனைவியை மீட்டு ராஜ்ஜியம் கைப்பற்ற கடந்தகாலம் நோக்கி செல்லவிருக்கிறான் தேவித்.
இவன் தேவித் மகிழ் மேகோன்.
மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் சிம்ம சொப்பனம். அரியணை காக்கும் அரிமா அவன். வேங்கையின் இரத்த நாளங்கள் யாவும் தேசம் காக்க துடித்திட, தன் நேசத்தையே பணயம் வைத்த வேந்தனவன் உயிர் காக்க இயற்கையின் நியதி மீறி பார்(உலகம்) போற்றும் வரலாற்றை படைக்கவிருக்கிறான்.
கடந்த வரலாறு மறைந்த/மறைத்த தன் சுயசரிதையை வருங்காலத்தில் வரலாறாய் மாற்றிட முயலும் வித்தகன் இவன்.
“சீன தேசத்து தாவினோ தங்களின் ஆராய்ச்சி பட்டயத்தை முயன்று பார்த்தபோது உமது நாமத்தை மேற்கோள் காட்டியிருந்தால்… நீரே மீண்டும் அவதரிக்க வேண்டிய காலம் நீண்டிருக்காதில்லையா அரசே?”
ராஜகுரு கேட்டிட… தன் வதனம் தவழ்ந்த புன்னகையை கன்னக் கதுப்பில் பதுக்கிய மேகோன்…
“நன் பிறப்பென்று கண்டு கொண்டீரோ?” என்றான்.
“முன் ஜென்ம தேடலின் நியதி, மறுபிறப்பில் தான் முற்றுபெறுமென்று அறிந்திருக்காவிட்டால், யான் எப்படி இப்பெரும் அரசவையில் அரசனுக்கு ஆலோசனை வழங்கும் ராஜகுருவாக இருந்திட முடியும்?” என்று தன் மீசையை முறுக்கினார் அவர்.
“நீண்டிடும் நேச யுத்தத்தில் நன் எதிரி யான் எனும் விந்தை அரங்கேற இருக்கிறது தந்தையே!” மேகோனின் தந்தை எனும் விளிப்பே, மகனின் காத்திருப்பிற்கான மகிழ்வு அவனை எட்டிவிட்டதென்று புரிய வைத்திட… அவர் கலங்கும் தன் கண்களை இமைகள் மூடி சமன் செய்தார்.
எப்போதும் அரசனாகவே வலம் வருபவன் காலங்கள் பல சென்று, அண்டம் மாற்றம் பல நிகழ்ந்த பின்னர் தந்தை என்றழைக்கின்றான். மறந்திருந்த நினைவை சுயம் பெறச்செய்திருக்கிறான்.
“முன் செய்த உறவுகளின் சதியில் இம்முறை சிக்கிக்கொள்ளக் கூடாது. சதியில் சிலையென உறைந்துவிட்ட தேசத்தின் அடுத்த வாரிசினை மீட்டெடுக்கும் காலம் நெருங்கிவிட்டது.” மேகோனின் வார்த்தைகள் கனக்கச் செய்திட, பெண்ணவளின் சிலை வயிற்றை முதியவரின் பார்வை தொட்டது.
திசையெங்கும் பரந்து விரிந்திருக்கும் தேசமதின் அடுத்த அரசனவன் கருவாக உறைந்திருக்கும் மேடிட்ட வயிற்றில் மென் அசைவு.
‘எம்மை மீட்டெடுக்க யுகங்கள் பல நீண்டதுவோ… காலத்தை முன்னோக்கி உம்மால் கடக்க முடியுமெனில்… உம் மறுபிறப்பை பின்னோக்கி இழுத்திட முடியாதா?’ கண்ணிற்கு புலப்படாத சூல் கேள்வி கேட்பதாகத் தோன்றிட…
“இயற்கையின் விதிப்படி… இவை இப்படித்தான் நடக்க வேண்டுமென்று இருக்கையில் வித்தகனாயினும் எம்மால் மட்டும் மாற்றி அமைத்திட முடியுமா?” மனம் உணர்ந்த கருவின் கேள்விக்கு வாய்விட்டு பதில் கூறினான்.
“ஒருமுறை காலத்தை மாற்ற நினைத்ததன் விளைவு தானே இது.” மகனின் உள்ளக் குமுறலுக்கு பதில் கொடுத்தார் ராஜகுரு.
“சரிசெய்திட நானே மீண்டும் செய்த தவறின் வழி பயணிக்க வேண்டுமென்பது தான் எனது வெற்றி.” மேகோனின் கூற்று உண்மையும் கூட.
முற்காலத்தில் தோல்வி கண்ட அவனது ஆராய்ச்சி, பிற்காலத்தில் வெற்றிவாகை சூடவிருக்கிறது. வெற்றியின் புள்ளி, தேவித் மேகோனின் ராஜ்ஜியம் வருதலில் உலகறியும்.
விஸ்த்திரமான மண்டபம் அதிர ஆர்ப்பாட்டமாய் சத்தமிட்டு சிரித்தான். பொறுமையின் எல்லை கரை உடைத்ததின் வெளிப்பாடு அரங்கம் நிறைந்த அச்சிரிப்பு.
“நமது வம்சம் தொடர்ந்திருப்பாயின் நீரே மீண்டும் வர யுகங்கள் கடந்திருக்காதோ?” ராஜகுருவின் கேள்விக்கு மேகோனின் புருவம் உயர்ந்தது.
“ஜனனம்(பிறப்பு) நம் வம்சாவழி இல்லையென்று தான்… அவன் யானில்லையென்று நினைத்தீரோ?” மேகோனின் இக்கேள்விக்கு அவரால் பதில் சொல்லிட முடியவில்லை. உண்மையும் அதுதானே!
“எமது பட்டயத்துடன் தாவினோ கடல் கடந்து பயணம் செய்தபோதே… அது யாரின் கையில் கிடைக்கிறதோ எதிர்காலத்தில் அதுதான் நன் வம்சமென்று யாமறிவோம் தந்தையே” என்ற மேகோன், “எம் செயல்முறை சரியான பாதையில் பயணித்திருந்தால்… எமது பத்தினியின் அகம் மலர்ந்த சூல் நன் வம்சத்தின் அடுத்த தலைமுறையாய் உருவாகியிருப்பின்… நமது வம்சாவழியின் தொடர்ச்சியை யாம் அறிந்திருப்போம்” என்றான்.
மேகோனின் வாரிசு பிறப்பெடுத்திருப்பின்… அடுத்தடுத்தென்று தலைமுறை நீண்டு வம்சம் தழைத்திருக்க… தேவித்தின் தலைமுறை மேகோனின் வம்சமென்று யூகங்களின் கணிப்பென்றில்லாமல், தெள்ளென தெரிந்திருக்கும்.
இங்கு மேகோனின் ராஜ்ஜியம் சூல் தாங்கிய பேதையவள் கல்லுக்குள் உறைந்த கணமே தன் இயக்கத்தை, இசைவினை நிறுத்திவிட்டிருந்ததே.
நடுவில் சில பக்கங்களை காணவில்லை என்பதைப் போன்று தான்… மகிழ் மேகோனின் வாழ்விலும் சில பக்கங்கள் காணாமல் போயிருக்க, அவனது வம்சத்தின் வழிவழி புதைந்து போனது.
“இங்கு நின்று போனது மேகோனின் வாழ்க்கைச் சக்கரம் மட்டுமே! சிறிய தந்தையும் நமது வம்சத்தின் வழியென்று மறந்துவிட்டீரா?” என்ற மேகோனின் கேள்வியில், நடு மண்டை உடைந்து மூளையில் காலத்தின் விளையாட்டு விளங்கப் பெறுவதாய். ராஜகுருவின் சிந்தையின் தடம் கண்களில் பிரதிபலித்தது.
“தயாராகுங்கள் தந்தையே! நின் ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க இருப்பவளின் பயணம் நமது தேசத்தில் தொடங்கவிருக்கிறது” என்றான்.
“யான் இப்பொழுது செய்ய வேண்டிய காரியம்?”, ராஜகுரு.
“மேமகிழதேசத்தின் எல்லையில் நின்று உம் மருமகளின் வரவிற்காகக் காத்திருப்பது.” சொல்கையிலேயே மேகோனின் முகம் ஒளியால் வசீகரித்தது.
“எல்லை நின்று அரண்மனை வருவதற்குள் அனைத்தும் பெண்ணவள் அறிந்து கொள்வாள் அல்லவா?”
“அறிந்திட வேண்டும் தந்தையே! அதற்கே உம்மை நேரடியாக பணிக்கின்றேன். நன் முகம் கண்டுவிட்டால் நடப்பின் பாதை மாறிட வாய்ப்புள்ளதே. உம்மை அவள் பார்க்கையில் யாவும் தானாக அறிய நேரிடும்” என்ற மேகோன்…
“மிக மிக பத்திரம் தந்தையே” என்றான்.
“அரசியார் மாயமாகியிருக்கும் சூழலில்… வருபவளை பிறர் பார்க்க நேரிட்டால் நிகழும் விபரீதம் யானும் அறிவோம் அரசே” என்ற ராஜகுரு, “பத்திரமாக உம்மிடம் சேர்ப்பிப்போம்” என்றார்.
“அவள் யாரென்று அறிவீர் தானே?”
“அறியாமல் இல்லையே! எதிர்காலத்தில் உம் மனைவியாயிற்றே” என்றவர் சிலையை பார்வையால் வருடி மீண்டார்.
“அவள் தேவித்தின் நைருதி அன்று தந்தையாரே…”
சொல்லிய மகனை என்ன என்பதைப் போன்று கூர்மையாகப் பார்த்தார் ராஜகுரு.
முக்காலத்தையும் கணிக்கும் ஆற்றல் மிக்கவனால் தந்தையின் பார்வைக்கான அர்த்தத்தையா விளங்கிக்கொள்ள முடியாது.
“தம் சிந்தையின் கூற்றை கட்டவிழ்த்தால் எம் சந்தேகம் நீர்த்துப் போகும்.” மகனின் பதில் என்னவாக இருக்குமென்று தெரிந்துகொண்டே வினவினார்.
“வஞ்சியவள் சாதாரண அறிவியல் ஆராய்ச்சியாளன் தேவித் மகிழோனின் மணையாட்டி நைருதி அன்று தந்தையாரே… மங்கையவள் மேமகிழ்தேசத்தின் அரியணையின் வாசம் செய்திடும் அரிமா தேவித் மகிழ் மேகோனின் மணையாட்டி இளவேனில் மேகநதி… நன் நதியவள்” என்றான். காதலாக… நேசம் கரைபுரள மென் மொழியாய் உச்சரித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
18
+1
2
+1
1