அத்தியாயம் 20
இறுதிநிலை வரை வந்திட்ட ஆய்வு தோல்வியில் முடிந்தது அறிந்து கணவனை வருத்தத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள் நைருதி.
முந்தைய தினம் தான் அத்தனை மகிழ்வாய் பகிர்ந்துக் கொண்டிருந்தான்.
“ஃபைனல் ஸ்டேஜ் வந்தாச்சு நதி. இதுவரை எல்லாமே பக்கவா வொர்க் ஆகியிருக்கு. இன்னும் ஒரே ஒரு மூவ்… ஓகே ஆகிட்டா… எக்ஸ்பிரிமென்ட் பண்ணிடலாம்” என்ற தேவித், “எத்தனை வருஷ கனவு தெரியுமா நதி” என அவளைக் கட்டிக்கொண்டு துள்ளி குதித்து ஆர்ப்பரித்திருந்தான்.
அவனது மகிழ்வில் அவளது சந்தோஷம் பரவியிருந்தது.
“உனக்கு பாஸ்ட்ல எப்போ எங்க போகணும்?” என்று தேவித் கேட்க, அவளோ அவனது மகிழ்வை உள்வாங்கியவளாக, அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“எனக்கு கவின், மதி மேரேஜ் நடந்த தினத்துக்கு போகணும். என் நதி எனக்குள்ள வந்த அந்த நொடி, அவள் மேல காதல் வந்த நிமிஷம்… திரும்ப ஒருமுறை உணரனும். ரசிக்கணும்” என்றான். குரலில் மட்டுமல்ல அவனது முகத்திலும் அக்கணம் காதல் உணர்வுகள் கொட்டிக் கிடந்தன.
அதன் தாக்கம் தற்போது நைருதியின் மனதை கணக்கச் செய்தது.
எத்தனை ஆசையாய் அவன் எதிர்பார்த்த செயல்… இப்படி இறுதி நிலையில் தோல்வியை அடைந்திருப்பது அவளுக்கே என்னவோப் போலிருந்தது.
தன்னுடைய செயல்முறைகள் சிறு அசைவு என்றாலும் அதனை குறிப்பாய் எழுதி வைக்கும் தேவித், வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த செயல்முறை தோல்வியில் முடிந்ததையும் எழுதி வைத்திருக்க, அதனை படித்து அறிந்த நைருதி, கணவனுக்காக வருந்தினாள்.
“என்னத்தைப் போட்டு உடைச்ச?” என்று கவின் கேட்க, ஏமாற்றத்தின் தாக்கத்தால் காலத்தை சுழற்றும் சக்கரம் போன்று வடிவமைத்திருந்த கருவியை தேவித் உடைத்திருக்க, அதில் நைருதியின் பார்வை தொட்டு அவனின் படிந்தது.
அவள் முகத்தில் தென்பட்ட கவலையின் சாயல் கூட தேவித்தின் முகத்தில் இல்லை.
மாறாக,
எப்போதும் அவன் முகத்தில் வீற்றிருக்கும் அதே நீண்ட விரிந்த புன்னகை. இப்போதும் நிலைத்திருந்தது.
தேவித்தின் இதழின் ஓரம் துடித்த மெல்லிய புன்னகை, பலமுறை தொற்று மீண்ட திடத்தினை பிரதிபலிக்க, கவின் இருப்பதையும் மறந்து ஓடிவந்து கணவனை அணைத்துக் கொண்டாள் நைருதி.
“உங்களால முடியும் மாமா!” என்றாள்.
“தெரியும்.” அதீத தன்னம்பிக்கையாய் வெளிவந்தது தேவித்தின் ஒற்றை வார்த்தை.
“பலமுறை செய்து பார்த்திருக்க போல” எனக் கேட்ட கவின்,
“ஒருமுறை கூட முழுசா முடிக்க முடியல அப்படிங்கிறப்போவே… இது சாத்தியமற்றதுன்னு புரியலையா தேவா?” என்றான்.
“ஒவ்வொரு முறையும் முடியாம போகும் போது தான்… என்னால முடியும்ன்னு தோணுது கவின். இருக்கிற ஒன்னை கண்டுபிடிக்கிறதா வெற்றி? இல்லாததை, யாருமே செய்து பார்க்கவே யோசிக்கக்கூடிய ஒன்னை செய்யணும். உயிரைக் குடுத்து செய்யணும். அப்போ தான் அதன் மூலமா வெளியுலகுக்கு என் பெயர் தெரியும் போது கெத்தா இருக்கும்” என்றான். தானாக சுட்டு விரல் உயர்ந்து, மீசை நுனி உராய்ந்து கன்னம் ஊர்ந்தது.
“இயற்கைக்கு எதிரா நம்மோட நிழலைக் கூட நம்மால் மாத்த முடியாது தேவா… இது காலத்தையே அசைத்துப் பார்க்கக் கூடியது. மாத்தக் கூடியது. நீ கடந்த காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ போகும் போது அங்கு உன்னால் நடக்கக் கூடிய சின்ன அசைவு கூட, நிகழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். அதன் விளைவு ரொம்பவே பெரிதாக இருக்கும்” என்றான் கவின்.
தேவித் பலவிதமான விளக்கங்கள் கொடுத்த போதும், கவினால் ஏனோ ஏற்க முடியவில்லை. கனவு நம்மை, நம் ஆற்றலை வெளிப்படுத்தும் காரணியாக இருக்க வேண்டுமே தவிர, நம் அழிவுக்கு காரணமாக இருந்திடக் கூடாது.
தேவித்தின் கனவும் நிலையில்லா ஒன்றை எட்டிப் பிடிக்கும் முயற்சி தான். முன் முடிந்த நோடியையே நம்மால் சரி செய்திட முடியாத போது, மீட்டெடுத்திட முடியாது போது… மொத்த காலநிலையையும் கட்டுக்குள் வைத்து, நம் அசைவுக்கேற்ப வழி நடத்துவது முடியும் காரியமா?
அதைவிட இதில் தேவித்திற்கு எதுவும் விபரீதம் நேருமோ எனும் பயம் தான் அதிகம் உண்டானது.
“பிளீஸ் தேவா… உன்னை உயிரா நினைச்சு தான் நம்ம குடும்பம் இருக்கு. நீ இல்லாம ஒரு நொடி கூட மாமா இருக்க மாட்டார்… நாங்கெல்லாம் உன் நினைவில் இருக்கோமாடா? எங்களை யோசிச்சாவது இந்த வேண்டாத வேலையை விட்டுட்டு, வேற வேலையை பாரு” என்றான்.
“இது என்னோட…”
தேவித் சொல்லும் முன்பு, கை நீட்டி தடுத்த கவின்…
“கனவு, ஆசை, லட்சியம்… இப்படி எதையும் சொல்லாத தேவா. இதைத்தாண்டி எனக்கு, எங்களுக்கு நீ முக்கியம்… ரொம்பவே முக்கியம்” என்றான்.
“அண்ணா பிளீஸ்… பிடிச்சதை, நினைச்சதை செய்ய முடியாத வாழ்க்கை வாழ்ந்து மட்டும் என்ன யூஸ்… அடுத்த முறை மாமா கண்டிப்பா ஜெயிப்பாங்க” என்றாள் நைருதி.
“அப்போ இப்போ செய்தது சக்ஸஸ் ஆகல… அதானே?” என்றான் கவின்.
“தோல்வியில் தானே தவறை கத்துக்க முடியும். இந்த தவறையும் அடுத்த முறை சரிசெய்து காட்டுவாங்க” என்று கவினுக்கு பதில் கொடுத்த நைருதியிடம் தென்பட்ட நம்பிக்கைகூட தற்போது தேவித்திடம் இல்லை.
இம்முறை வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியில் நிச்சயம் வெற்றி கிட்டும் எனும் தேவித்தின் அதீத நம்பிக்கை அதன் எதிர்பாராத தோல்வியில் மொத்தமாக சிதைந்திருந்தது.
ஆனால் மீண்டும் செய்துவிட வேண்டுமென்கிற உத்வேகம் மட்டும் முன்பைவிட அளவுக்கு அதிகமாக இருந்திடவே, அவனால் தோல்வியை ஏற்று நொடியில் கடந்து இயல்பாக நடக்க முடிந்தது.
தேவுத்திற்காக நைருதி தன் அண்ணனிடம் அத்தனை வாதாடினாள்.
இதுநாள் வரை அவனுக்கென்று இல்லாத துணை, ஆதரவு அவனவளிடமிருந்து கிடைக்க, காதலோடு மனைவியை பார்த்திருந்தான் தேவித்.
“உயிருக்கே ஆபத்தான ஒன்னை செய்துதான் ஆகணுமா ருதி?” என்று இறுதியில் கத்திய கவின், “இது வெளியில் தெரிஞ்சா, அவன் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் எப்படி அவனுக்கு நீ சப்போர்தட் பன்ற?” எனக் கேட்டான்.
“இங்க முயற்சி பண்ணாம எதையும் அடைய முடியாதே அண்ணா. நம்ம வயலில் இத்தனை மூட்டை விளைச்சல் வரும் நினைச்சு நெல்லு விதைக்கிறீங்க. நீங்க நினைச்ச விளைச்சல் கிடைக்கல… உழைப்பு தான் வீணாகுதுன்னு அடுத்த போகம் விதைக்காம விடுறீங்களா என்ன? அப்படி எல்லாருமே நினைச்சு விதைக்காம விட்டா உலகமே எப்படி சாப்பிடுறது?” எனக் கேட்டாள். கவினிடம் பதிலில்லை.
“எந்தவொரு புதுமைக்கும் முதல் படி தோல்வி தான். எல்லாருமே அந்த தோல்வியை நினைச்சு வருந்த மட்டுமே செய்திருந்தா… இப்போ நாம பயன்படுத்தும் ஒரு பொருள் கூட இருந்திருக்காது” என்றாள்.
“என்ன சொல்லியும் என்னை அமைதிப்படுத்தலாம் ருதி. ஆனால் இயற்கையை கட்டுபடுத்திறது முட்டாள்தனம். அதைவிட அது முடியும் அப்படின்னு நினைக்கிறது அசட்டுத்துணிச்சல்” என்றான்.
“தன்னம்பிக்கைன்னு ஒன்னு இருக்கே! அது உங்களுக்கு நினைவில் இல்லையா அண்ணா?”
“ரெண்டுக்கும் மெல்லியக் கோடு தான் வித்தியாசம் ருதி… முடியும் அபப்டிங்கிறதுக்கும், முடியவே முடியாதுங்கிறதை முடித்துக் காட்டுவேன் என்பதற்கும் அந்த கோடு தான் வித்தியாசம்” என்றான் கவின்.
முடிவை மட்டுமே பார்க்கும் இருவருக்கும்… அதனால் உண்டாகும் விளைவு பற்றி உணர்த்திட முயன்றான் கவின். விளைவு எப்படியானதாக இருந்தாலும் பாதிக்கப்போவது அவனது உயிரானவர்களாயிற்றே. தெரிந்தே என்னவும் செய்துகொள்… அதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டுமென்று அவனால் விடமுடியவில்லை.
“அண்ணா பிளீஸ்…” இதற்கு மேல் எப்படி அவனிடம் வாதம் செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை.
“உன் பிடிவாதத்தில் இதை பண்ணியே தீர்வேன் நீ இருந்தால், நான் மாமாகிட்ட சொல்ல வேண்டியதிருக்கும் தேவா. அவர் வேணாம் சின்னப் பார்வை பார்த்தால் கூட, நீ அடுத்த அடி வைக்க்கமாட்ட தெரியும்” என்றான்.
தேவித் புன்னகைக்க…
“உன் சிரிப்புக்கு காரணம் புரியுது. உன்னோட ஆசைக்கு மாமா எப்பவும் நோ சொல்லமாட்டார் தைரியமா தேவா?” என்ற கவின், “உன் உயிருக்கே இதில் ஆபத்து இருக்குன்னு சொன்னா!” என்று இடைநிறுத்தி, “அப்பவும் உன் விருப்பம்ன்னு சரி சொல்வாரா?” என்றான்.
இதற்கான பதில் தேவித் நன்கு அறிவானே!
“இன்னும் ஒருமுறை… என்னோட திருப்த்திக்காக. உச்சியில் கடைசி படியில் நின்னுட்டு திரும்ப கீழிறங்கினால் என்மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையே மொத்தமா சிதைஞ்சிடும் கவின். இந்த முறையும் சரியா வரலன்னா மொத்தமா விட்டுடுறேன். என்னோட தீசிஸ் சாத்தியமற்றதுன்னு நானே சர்டிஃபை பன்றேன்” என்றான்.
இதில் கவினுடைய அனுமதி தேவித்திற்கு தேவையே இல்லை. ஆனால் அவனுக்கு விருப்பமானவர்களின் சொல்மீறி செய்திட, அவனது மனம் இடம் கொடுக்கவில்லை.
அவ்வறையை ஒருமுறை சுற்றி வந்த கவின்… தேவித்தை மலைத்துப் பார்த்தான். அதிலிருக்கும் ஒவ்வொன்றும் தேவித்தின் முயற்சியை எடுத்துக்கூற, மொத்தமாக மறுக்க கவினுக்கு மனம் வராது போனது.
எத்தனை உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது. பார்க்கவே தலை சுற்றியது.
முன்பு அடமாக சொல்லிய மறுப்பை இக்கணம் ஏனோ சொல்ல முடியவில்லை.
“என்ன செய்யனும் நினைக்கிறியோ செய். ஆனால் இந்த ஒருமுறை மட்டும் தான். இதுதான் கடைசியா இருக்கணும். ஜெயிச்சாலும் சரி… தோற்றாலும் சரி” என்றான்.
அளவான அதே புன்னகையுடன் தலையசைத்தான் தேவித்.
அதற்கு பின்னான நேரம் ஒருவித அமைதியிலேயே கழிந்தது.
விடியலில் விமானநிலையம் சென்றனர்.
திருச்சி செல்லும் விமான நேரம் முன்னதாகவே இருந்திட, சென்னை செல்லும் நைருதி தவிர்த்து மற்றவர்கள் இருவரிடமும் விடைபெற்று சென்றிருந்தனர்.
செல்லும் முன்பு கவின் கையில் கொடுத்த அழுத்தம், அவன் சொல்ல நினைத்த பத்திரத்தை உணர்வால் கடத்தியிருக்க, தேவித் அவனை அணைத்து விடுத்திருந்தான்.
சென்னை விமானத்திற்கு இன்னும் ஒருமணி நேரமிருக்க, காத்திருப்போர் பகுதியில் நைருதியை வழியனுப்பி வைப்பதற்காக அவளுடன் தேவித் அமர்ந்திருந்தான்.
தேவித் நைருதியின் தோள் சாய்ந்து கண்களை மூடியிருந்தான்.
நேற்றைய இரவிலிருந்தே அவன் அமைதியாக இருக்கின்றான். அவனது வலியை அந்த அமைதியில் மறைக்கின்றான் என்பதை அவளால் உணர முடிந்தது.
“இவ்ளோ சைலண்ட் வேண்டாம் மாமா” என்ற நைருதி, “இந்த முறை கண்டிப்பா அச்சீவ் பண்ணிடுவீங்க” என்றாள்.
“அம் ஓகே நதி” என்று கண்களை திறக்காதுக் கூறிய தேவித், “எனக்கு இப்போ உன்னைவிட்டு இருக்கிறது தான் பெரிய டாஸ்க்கா தோணுது. இருந்திடுவேனா தெரியலையே” என்றான்.
அவனின் காதலில் அவள் தான் பிரம்மித்துப் போகிறாள். சாதாரணமாக சிறு வார்த்தையில் கொள்ளைக் காதலை காட்டிவிடுகிறான்.
“நாலே நாள் மாமா. வந்திடுவேன்” என்று அத்தனை நம்பிக்கையாக சொல்லியவளை காலம் கடந்து முன்னோக்கி சென்று தான் காணவிருக்கிறோம் என்பதை அக்கணம் அறியாத தேவித், மனைவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
விமான அறிவிப்பு ஒலித்திட…
சிறிய சங்கிலி ஒன்றை அவனின் கையில் அணிவித்தாள். காப்பு போன்று தடிமனாக இல்லாது, மெல்லிய சங்கிலியில் ஒற்றை இதயம் கோர்க்கப்பட்டிருந்தது.
“இந்த இதயம் ஒரு மணிக்கு ஒருமுறை உங்களை கூப்பிடும்” என்றாள்.
கையை உயர்த்தி அவ்விதயத்தை தேவித் ஒற்றை விரலால் அசைத்துப் பார்க்க…
“மொத்தமா எந்த நினைவும் இல்லாம, வேலையில் நீங்க மூழ்கியிருக்கும் சமயம், இந்த இதயம் உங்களுக்கு என்னை நினைவுப்படுத்தும்” என்றாள்.
நீங்க என்னை நினைக்கிறீங்க அப்படிங்கிறதை இந்த இதயம் எனக்குக் காட்டிக்கொடுக்கும்” என்று தன் மார்பில் தொங்கிய தாலியில் கோர்த்திருந்த சிறு இதயத்தைக் காண்பித்தாள்.
அந்நேரம் தேவித்தின் கையில் ஊசலாடிய இதயம், மென் இசையோடு “மகிழ்” என்று அழைக்க, தேவித் அதனை தொட்டு வருட, நைருதியின் தாலியில் கோர்க்கப்பட்ட இதயம் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து அடங்கியது.
அங்கே மகிழ் மேகோனின் அந்தப்புர அறையில் வீற்றிருந்த சிலையின் கழுத்தில் தடித்து தெரிந்த தாலி மின்னி ஒளிர்ந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
26
+1
3
+1