Loading

அத்தியாயம் 19

இரண்டு நாட்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தாக அமைந்தது.

டெல்லியில் சுற்றி பார்க்க வேண்டிய அனைத்து இடங்களுக்கும் குடும்பத்துடன் இணைந்து சென்றாலும், பெரியவர்கள் இளையவர்களுக்கு தனிமை கொடுத்து விலகியே நின்றனர்.

கவின் மனைவியின் கரம் பிடித்து, அவளின் பேறுநிலை மனதில் வைத்து நடந்திட, தேவித் மனைவியுடனான பிரிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய திடம் பெறுவதற்காக, ஒவ்வொரு நொடியையும் காதலாக நகர்த்தினான்.

தேவித்தின் வெளிப்படையான காதலில் நைருதி அகம் மகிழ்ந்ததை காட்டிலும் கவின் தான் பேருவகைக் கொண்டான்.

தேவித்துடனான தங்கையின் வாழ்வு எப்படி இருக்குமோ என்ற கவினின் பயத்தை இரண்டு நாட்களில் தன்னைப்போல் தன் செயல்களால் விரட்டியிருந்தான் தேவித்.

அடுத்தநாள் காலை அவர்கள் கிளம்ப வேண்டும்.

“ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க முடியுதா? உன் வேலையை மாத்திக்க இல்லைன்னா விட்டுடு ருதி” என்றார் ரமா.

“வேலையை மாத்திக்கிறது சிக்கல் ம்மா” என்று நைருதி சொல்லிட, “அப்போ வேலையை விட்டே ஆகணும்” என்று கண்டிப்புடன் கூறினார்.

நைருதி பாவமாக தேவித்தை ஏறிட…

“நான் என் வேலையை விட்டுடுறேன் அத்தை” என்றான். பட்டென்று.

ஒரு கணம் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர்.

“எதுக்கு இத்தனை ஷாக்?” என்ற தேவித், “என் பொண்டாட்டியால முடியலன்னா, அவளுக்காக நான்தானே செய்யணும்” என்றான். ரமாவை கூர்மையாக பார்த்தபடி.

“அதெப்படி தேவா… எம்புட்டு பெரிய வேலை. அத்தனை ஈசியா என்ன? சட்டுன்னு விட்டுடுரேன் சொல்ற” என்றார் ரமா.

இதைத்தான் தேவித் எதிர்பார்த்தான்.

“அதேதான் நதிக்கும். வேலையில் சின்னது பெருசுன்னு எதுவும் கிடையாது. கொஞ்சநாள்… வேலை விஷயத்தில் அவளே ஒரு முடிவு வச்சிருப்பாள்” என்றான்.

“இப்படி எதாவது சொல்லியே என் வாய் அடைக்க வச்சிடுற நீ” என்ற ரமா, “குழந்தை உண்டானா ரொம்ப கஷ்டமாச்சே” என்றார்.

அவரின் அப்பேச்சில் தேவித்தின் முகம் புன்னகையால் நிரம்ப, நைருதி அவனைப் பார்த்து உதடு சுருக்கி கண்கள் சிமிட்டினாள். பிறர் அறியாது.

“அதை நடக்கும்போது பார்த்துக்கலாம் அத்தை” என்று சமாளித்து நகர்ந்த தேவித்தின் முகம் சிவந்திருந்தது.

அவனைப்போன்றோ, அவனவள் போன்றோ குட்டியாக ஒரு உருவம் நினைக்கவே தேகம் சிலிர்த்திட மென்னகையுடன் தன்னுடைய ஆராய்ச்சி கூடத்திற்குள் நுழைந்துவிட்டான்.

“எல்லாம் எடுத்து வச்சிட்டு படுங்க. காலையில் கிளம்ப சரியா இருக்கும்” என்று மாமன்னன் சொல்ல அடுத்து என்ன என்று கலைந்து சென்றனர்.

நைருதி டெல்லியிலிருந்து நேராக சென்னை செல்வதால், தனக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துவிட்டு தேவித் வருவதற்காகக் காத்திருந்தாள்.

வான்மதி உறங்கியிருக்க கவின் முழு உறக்கமின்றி எழுந்தமர்ந்தான். மனம் யாரோ ஒருவரின் அழைப்பை உணர்ந்தது. ஓசையின்றி உணர்வால் ஓர் விளிப்பு.

தேவித் அழைப்பதை போலிருக்க… அறையைவிட்டு வெளியில் வந்தான்.

நைருதி கூடத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

“இன்னும் என்ன தூங்காம இருக்க?” தங்கையின் அருகில் வந்து அமர்ந்தான் கவின்.

“மாமா லேப் ரூம் போயிருக்கார்” என்றாள்.

“இந்நேரத்தில் லேபுக்கு” என்ற கவின், “அடங்கமாட்டான் போலயே. எப்போ வருவான். மறந்திடப்போறான். மார்னிங் கிளம்பணும்” என்றான்.

“இங்க… இந்த வீட்டில் தான். அதுவும் எங்க ரூமில் தான் சீக்ரெட் லேப் இருக்கு” என்ற தங்கையை உனக்கு தெரியாதா எனும் கேள்வி பொதிந்த பார்வை பார்த்தான்.

“நேரம் வரும்போது காட்டுறேன் சொன்னாங்க” என்ற நைருதி, கவின் பார்வையில் சூடு பரவுவதை உணர்ந்து, “நானும் இங்க வந்து நாலு நாள் தானே அண்ணா ஆச்சு” என்றாள். சமாளிப்பாக.

“நாலு நாளில் வீட்டுக்குள்ள இருக்க ஒரு அறையை உன்னால் தெரிஞ்சிக்க முடியாதா? அப்படியென்ன ரகசியம்? பொண்டாட்டிக்கு கூட காட்ட முடியாம அப்படியென்ன பண்றான் அங்க?” என்று காட்டமாக வினவினான்.

“அண்ணா இப்போ எதுக்கு இவ்வளவு கோவம்? கண்டிப்பா மடைக்கணும் நினைச்சு இல்லை. அப்படியே அதை எனக்கு காட்டினாலும் எதாவது புரியுமா?” என்றாள்.

“அவனை விட்டுக் கொடுத்திடாதத்தா நீ” என்ற கவின், வீடே அதிரும் வகையில் எதுவோ உடையும் சத்தம் கேட்டு திடுக்கிட்டான். நைருதிக்கும் உடல் தூக்கிப்போட்ட உணர்வு.

“என்ன சத்தம் அது?” என்ற கவின், “உன் ரூமிலிருந்து தான் வருது. நல்லவேளை மத்தவங்க இருக்க ரூம் லாக் பண்ணியிருக்கு. இல்லைன்னா பயந்திருப்பாங்க. நாம முதலில் என்னன்னு பார்ப்போம் வா” என்று நைருதிக்கு முன் சென்றான் கவின்.

கதவு திறந்தே இருக்க உள் சென்ற கவினுக்கு அறையில் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. பொருள் விழுந்து உடைந்ததற்கான தடமுமில்லை.

“எதுவுமில்லையே அண்ணா.”

இருவரும் அறையை ஆராய்ந்திட…

“என்ன தேடிட்டு இருக்கீங்க?” என்ற தேவித்தின் குரலில் திரும்பிப் பார்த்தனர்.

அன்று போல் இன்றும் தேவித் எங்கிருந்து எப்படி வந்தானென்று நைருதிக்குத் தெரியவில்லை.

“நீ எங்கிருந்து வர?” கவின் முறைத்துக் கொண்டு வினவினான்.

“எதுக்குடா எப்போ பாரு முறைச்சிக்கிட்டே இருக்க நீ?” என்று கேட்ட தேவித், “தூங்கலையா?” என்றவாறு மெத்தையில் தளர்வாக அமர்ந்தான்.

“நான் தூங்கிறது இருக்கட்டும். நீ பேச்சை மாத்தாத. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று தேவித் முன் அடமாக நின்றான் கவின்.

தேவித் நைருதியை ஏறிட்டுப் பார்க்க…

“எதோ உடைஞ்ச சவுண்ட். அதான் அண்ணா பயப்படுறாங்க” என்றாள்.

“கேட்டது நான்” என்ற கவின், “அப்படியென்ன கட்டுன பொண்டாட்டிக்குக் கூட காட்ட முடியாத ரகசியம்?” என்றான்.

“ரகசியம் தான்” என்று சிறு இடைவெளிவிட்டு, “ரகசியமா இருக்க வரை தான் என் உயிருக்கு பாதுகாப்பு” என்று தேவித் சொல்லியதில் இருவரும் அதிர்ந்தனர்.

நொடியில் தன்னை மீட்டுக்கொண்ட கவின்,

“அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியறதில் உனக்கு ஒன்னும் ஆகிடப்போறதில்லை. என்னன்னு காட்டி” என்றான்.

தேவித் அமைதியாக நின்றிருந்தான்.

கவினும் இன்று உன்னை நான் விடமாட்டேன் எனும் விதமாக பிடிவாதம் காட்டினான்.

“அண்ணா விடுங்க.” இருவரின் பிடிவாதத்திலும் தவித்தது நைருதி தான்.

“விட முடியாது தேவா. இதில் என் தங்கச்சி வாழ்க்கை மட்டுமில்லை, என் தேவா வாழ்க்கையும் இருக்கு. எனக்குத் தெரிஞ்சே ஆகணும்” என்றான். அழுத்தத்தில் அடர்த்தியாக.

“அண்ணா இது அவங்க ஜாப்…” என்று சொல்ல வந்த நைருதியை கையைகாட்டி தடுத்த தேவித்,

“வாங்க” என்று உள் அறைக்குள் நுழைந்தான்.

அங்கிருந்த வார்ட்ரோப் திறந்து, தொங்கிக் கொண்டிருக்கும் ஆடைகளை விலக்கி, சுவற்றோடு பதிந்திருந்த கதவை திறந்தான்.

“என்ன ருதி இவன் பழைய படத்தில் வர மாதிரி பண்ணிட்டு இருக்கான்” என்ற கவின், தங்கையுடன் மச்சானின் பின் சென்றான்.

கதவுக்கு பின்னால் நீண்ட நெடிய பாதை தெரிந்தது.

தேவித் அடி வைக்க வைக்க அப்பாதையில் விளக்கு ஒளிர்ந்து வெளிச்சம் காட்டியது.

“இப்போ அண்டர் கிரவுண்ட் போகப்போறோம்… ப்ரீத் ஈஸி ஆகும் வரை சஃபகேட்டிங்கா இருக்கும். மேனேஜ் பண்ண முடியலன்னா சொல்லுங்க” என்ற தேவித், “பாதை முடிஞ்சிருச்சு” என சுவற்றில் கை வைத்திட, கீழே ஒரு ஆள் இறங்கும் அகலத்திற்கு தரை திறந்தது. அதற்கு கீழே நீண்ட ஏணி தெரிந்தது.

“எதும் கடத்தல் பொருள் உள்ள பதுக்கி வச்சிருக்கியாடா? எதுக்கு இத்தனை ரகசியமா ஒரு அறை?” எனக் கேட்ட கவின், தேவித் உதிர்த்த அர்த்தமானப் புன்னகையில், “காட்டுற பில்டப்புக்கு எதும் மொக்கையா இருந்துச்சு. அவ்ளோதான்” என்றவனாக தங்கையின் கை பிடித்து, “மெல்ல இறங்கு ருதி” என்றான்.

முதலில் இறங்கிய தேவித்தின் பாதம் தரை பதிந்ததும் அவ்விடம் மெல்லிய நீல நிற விளக்குகளால் பளிச்சென்று ஒளிர்ந்தது.

நிறம் மாறிய வெளிச்சம் கண்களை கூசச் செய்திட… இமை மூடி விழிகள் கசக்கி திறந்திட்ட கவின் அவ்வறை இருந்த தோற்றத்தில் நெஞ்சில் கை வைத்து, அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்திட்டான்.

கிட்டத்தட்ட முழுதாக ஐந்து நிமிடங்கள் அவ்வறையை இருந்த இடத்திலிருந்தே பார்வையால் வலம் வந்தவனுக்கு, பார்த்ததும் புரிந்த ஒன்று சத்தியமான நிஜமென்று விளங்கியது.

அவ்வறையின் ஒவ்வொரு அடியும் இயற்பியல், பால்வழி அண்டம், காலநிலை கோட்பாடுகள் யாவற்றையும் பிரதிபலிக்கும் அத்தனை வகை பிம்பங்களும், செயல்முறை கருவிகளும் இடம்பெற்றிருந்தன.

அதைவிட ஒரு பக்கம் முழுக்க, நவகிரகங்கள் அமைத்து அதற்கு இணையாக மேல் தளத்தில் தொங்கிக் கொண்டிருந்த கோள்களின் வடிவங்கள், அவை தற்போதைய நேரத்திற்கு ஏற்ப சீராக சுழலும் காட்சி பிரமிக்க வைத்தது.

தனக்கு உண்டான ஆச்சரியம் நைருதியிடம் இல்லையென்றதும், தேவித்தின் இத்தகைய ஆராய்ச்சி அவளுக்கு முன்பே தெரிந்திருக்கிறதென்று புரிந்து கொண்டான்.

“இது இல்லீகள் இல்லையாடா?” அதிர்வோடு வினவினான் கவின்.

“லீகலா பண்ண நிறைய சிக்கல் இருக்கு கவின். அதோடு இப்படித் தெரியாம பண்றது தான் என் உயிருக்கு பாதுகாப்பு. பல நாடுகள் இது உண்மையா பொய்யா அப்படிங்கிற ஆராய்ச்சியில் இருக்கும்போது, இது சாத்தியம் அப்படின்னு நான் பிராக்டிக்கலா செய்துகிட்டு இருக்கேன் தெரிஞ்சா அவ்ளோதான். டைம் டிராவல் பண்ண முடியும் அப்படின்னு ப்ரூஃப் பன்ற ஸ்டேஜ் வரவரை யாருக்கும் தெரியாமதான் செய்தாக வேண்டும்” என்றான்.

“இப்போ புரியுதுடா… அன்னைக்கு நான் எதேர்ச்சயா முட்டாள்தனம் சொன்னதுக்கு நீ ஏன் சாப்பிடாம கூட அவ்ளோ கோபமா எழுந்து போனன்னு” என்ற கவின், “ஆபத்து தெரிஞ்சும் எதுக்குடா?” என்றான்.

“ஆசைக்கு அளவில்லையே மச்சான். கனவுக்கு பயம் தெரியாது” என்றான்.

“ஆனா உன் கனவு, ஆசையெல்லாம் விட உயிர் ரொம்ப முக்கியம்டா” என்றான்.

கவின் முகத்தில் தென்படும் கலக்கம் துளியும் நைருதியின் முகத்தில் இல்லை. மாறாக கணவனின் அதி கூர்மை வாய்ந்த புத்திசாலித் தனம் ஒருவித வியப்பை, கர்வத்தை கொடுத்தது அவளுக்கு.

இதை மட்டும் தேவித் சாத்தியப்படுத்திக் காட்டிவிட்டால் உலக வரலாற்றில் அவன் பெயர் உயர்ந்து நிற்பது உறுதி.

தன்னவன் எனும் பெருமை அவளின் கண்களில் தூக்கலாகவே தெரிந்தது.

“அப்போ வந்த சத்தம் இங்கிருந்து தானா?” எனக் கேட்டான் கவின்.

“ம்ம்… வழி மட்டும் தான் எங்க ரூமில். பட் இதுக்கு மேல லிவ்விங் ஏரியா இருக்கு. அதான் இங்கிருந்து வந்த சத்தம் அங்க கேட்டிருக்கு” என்றான்.

“ஹோ…” என்ற கவின், “அவ்ளோ சவுண்ட் வரளவுக்கு என்னத்த போட்டு உடைச்ச?” என்றான்.

அவ்விடத்தை பார்த்துக் கொண்டிருந்த நைருதியின் பார்வை அங்கு திறந்திருந்த குறிப்பேட்டில் பதிந்தது.

அதில் தேவித் சற்று முன்னர் எழுதிய குறிப்பு… இறுதிநிலை வரை வந்திட்ட ஆய்வு தோல்வியில் முடிந்தது அறிந்து கணவனை வருத்தத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள்.

எப்போதும் அவன் முகத்தில் வீற்றிருக்கும் அதே நீண்ட விரிந்த புன்னகை. இப்போதும் நிலைத்திருந்தது.

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
26
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்