Loading

 

அத்தியாயம் 18

நள்ளிரவு கடந்தும் உறவுகளுடனான தேவித்தின் பேச்சுக்கள் நீண்டது.

குடும்ப உறவுகளுடனான இதுபோன்ற இனிமையான தருணங்களை அனுபவித்து பல வருடங்கள் ஆயிற்றே! இன்று ஒரே நாளில் அள்ள அள்ள குறையாது அனுபவிக்க முடிவு செய்திட்டான் போலும்.

கவின் தேவித்துடன் வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கட்டிக் கொண்டிருக்க… வான்மதி அவனின் தோளில் சாய்ந்தே உறங்கியிருக்க,

“இன்னும் ரெண்டு நாளுக்கு இங்கதானே நிக்கப்போறோம். காலையில பேசிக்கலாம்” என்று ரமா மருமகளை எழுப்பிக் கூட்டிச் சென்றார்.

செல்லும்போது, “இவ்வளவு பாசம் இருக்குன்னா… அடிக்கடி ஊர் பக்கம் வந்து போகணும்” என்று முணுமுணுத்தார்.

அவர் பேசிச் சென்றது அனைவருக்கும் கேட்டது.

“மகளை இவ்வளவு தொலைவு அனுப்பி வைத்திட்ட வருத்தம் அவளுக்கு.” ரமாவின் பேச்சில் மகன் வருத்தம் கொண்டிடுவானோ என்று அருணா சொல்ல,

“அவன் இதுக்கெல்லாம் அசரும் ஆளில்லை. குடும்பமா, வேலையா கேட்டா கொஞ்சமும் யோசிக்காம வேலைதான்னு நம்மளை டீலில் விட்டுடுவான்” என்று தேவித்தை முறைத்துக் கொண்டே கவின் கூறிட, தேவித்திடம் அட்டகாசமான சிரிப்பு.

அதே சிரிப்பின் மகிழ்வு மகிழ் மேகோனிடம்.

சித்தரமாக தன் கண் முன் நின்றிருக்கும் உருவத்தினை மெல்ல வருடிய மேகோன்,

“எப்பொழுதும் உம் குணத்தில் மாற்றமில்லை. எனை மீட்க வந்திடுவாயா நயனா?” எனக் கேட்டவனின் குரல் தழுதழுப்பு, தன் செவி தீண்டிய பாதச்சுவட்டின் ஓசையில் மறைந்தது.

“அனுமதியின்றி வருமளவுக்கு அவசர காரியமோ?” கையில் ஊசலாடும் வஸ்திரம் நீண்டு விரிய வேகமாக திரும்பினான் மேகோன்.

“தந்தையார் தங்களிடம் பேச வந்து கொண்டிருக்கிறார் அரசே!”

“ஹோ… சொந்தம் விலக்கி தேசத்தின் அரச சபை பணி நிமித்தம் எம்மை சந்திக்க வேண்டுமாயின், சபை கூடும் நேரம் வரை காத்திருக்க வேண்டுமென்று, மந்திரியாரின் காரியதரிசிக்கு சட்டம் தெரியாதுவோ” என்ற மேகோன்… “இப்பொழுது அனுமதி மறுக்கப்படுகிறது” என்றான்.

“சோதரரே…!” அவன் அதிர்ந்து விளித்தான்.

“தாங்கள் இங்கே வந்த கணம் உறவுகளின் நிமித்தமில்லையே” என்றான் மேகோன். உடல் கொண்ட கம்பீரம் குரலில் காட்டவில்லை. ஆனால் ஓசையில் அடர்த்தி.

“வருவது எம் தந்தை. உம் சிறிய தந்தை. இம் பெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைமை மந்திரியார்” என்றான் அவன்.

“நினைவு கூறுகின்றாயா?” என்று தன் நாடி நீவிய மேகோன்…

“உமக்கு யாமும் நினைவு கூறுகிறோம்… யான் இப்பெரும் சாம்ராஜ்ஜியத்தின் செங்கோல் ஏந்தி, முடி சூடிய மாமன்னன் மகிழ் மேகோன்” என்று ஒருமுறை சுற்றி சுழன்று ஈரடி தாவலில் அங்கிருந்த ஆசனத்தில் ராஜ தோரணையில் மிடுக்காய் அமர்ந்து, முன் வைத்த ஒற்றை பாதத்தின் சுவட்டில் கொடுத்த அழுத்தம் அவ்விடத்தை தரைவழி அதிர வைத்திருந்தது.

அவ்வதிர்வு நின்று கொண்டிருந்தவன் உடலில் தாக்கத்தை உண்டாக்க… விறைத்து நின்றான். பொய்யாக முகத்தில் கடுமையை காட்டி.

“யான் என்ன செய்யட்டும் அரசே?” தழைந்து வந்தது பணிவான வார்த்தைகள். அவனிடம்.

“நாளை சபை கூடும்வரை காத்திருக்கச் சொல்லுங்கள்” என்ற மேகோன், “எனது அறைக்கதவும், மனக்கதவும் எம் உறவுகளுக்கன்றி, மக்களுக்கன்றி வேறொருவருக்கு திறப்பது நடவாத காரியம்” என்றான்.

“புரிந்துகொண்டோம் சோதரரே” என்றவன் திரும்பி நடந்து, ஒரு கணம் நின்று தலையை மட்டும் திருப்பி, மேகோனை பார்த்தான்.

நெஞ்சம் முட்டும் அன்பு கண்களில் கரை புரண்டிட, வார்த்தைகளாக உருவகம் கொள்ள உதடுகள் துடித்தன.

“உம் சித்தம் ஈடேறிட நன் அகம் உம்மை மகிழ்விக்கும் அரசே” எனக்கூறி அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

கோமான் அவனின் வதனம் விஷமப் புன்னகையில் சுளித்தது.

“மகிழ் வேந்தருக்கு புன்னகைக்கவும் தெரியுமென்று எமக்கு இன்று தான் தெரிகிறது.” மேடிட்ட வயிற்றில் தங்க காப்புகள் நிறைந்த கையை அணைவாக வைத்து, அலங்கரித்த தேர் அசைந்தாடி வருவதைப்போல் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மனையாட்டியின் வார்த்தைகளில் அரசனின் அதரம் மேலும் நீண்டு விரிய… கண்களின் காட்சியாய் தெரிந்த உருவம், காற்றாய் மறைந்திருந்தது.

உள்ளம் துடிக்க மனைவியின் மதிமுகம் கண்டிடத் துடித்தவனாக, தன்னுடைய பள்ளியறை நோக்கி நீண்ட எட்டுக்கள் வைத்துச் சென்றான்.

அனைவருக்கும் உறக்கம் கண்களை சொக்க வைத்திட, தங்களுக்கென ஒதுக்கிய அறைக்குள் சென்று முடங்கியிருந்தனர்.

அவர்களின் வசதியை உறுதி செய்துகொண்டு, தன்னுடைய ஆராய்ச்சிக்கூடம் சென்று வந்த தேவித் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் முகத்தில் தன் சோர்வு அனைத்தும் நீங்கியவனாக, அவளின் அருகில் படுத்தான்.

“படுத்ததும் தூங்கிடுறாள்” என்று நைருதியின் மூக்கின் நுனி நிமிண்டியவன், “நதி எழுந்துக்கோ” என்று அவளை இழுத்து தன் மார்பில் போட்டுகொண்டான்.

“தூக்கம் வருது மாமா” என்று சிணுங்கிய போதும் அவனின் இசைவுக்கு அசைந்து உடன்பட்டாள்.

“இப்போ தூக்கம் முழுசா போயிருச்சே?” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தவனின் பிடரி கேசம் பிடித்து விலக்கினாள்.

“என்னடி?” என்று தன்மீது சரிந்தவனின் முகம் தாங்கி, கண்கள் சந்தித்தவள், “நானும் அவங்களோடவே கிளம்புறேன்” என்றாள்.

வேகமாக விலகி படுத்த தேவித்,

“இப்போ இதை சொல்ல சொன்னாங்களா?” என்றதோடு அவள் முகம் பார்த்தவாறு ஒருபக்கமாக ஒருக்களித்து, கையை தலைக்கு வைத்து படுத்தான்.

“இயர் எண்ட் செக்கிங். கட்டாயம் நான் அங்கிருக்கணும். நெக்ஸ்ட் மன்த் தான் இருக்கும் நினைச்சேன். என்ன தெரியல இப்போவே வச்சிருக்காங்க. எங்க டிபார்ட்மெண்ட் சேர்ந்த ஹெட் வரை எல்லோரும் இருப்பாங்க. அவாய்ட் பண்ண முடியாது மாமா” என்றாள்.

“செக்கிங் என்னைக்கு?”

“மண்டே.”

“அப்போ நீ இவங்களோடவே போனா தான் சரியா இருக்கும்” என்ற தேவித், அவளை இறுக்கி அணைத்துக்கொண்டவனாக, “நீயில்லாம எப்படிடா?” என்றான். கிசுகிசுப்பான குரலில்.

“நானில்லாம இருந்ததே இல்லையாக்கும்.” குவிந்த அவளின் உதட்டை வலிக்க கிள்ளினான்.

“இதுவரை ஓகே. இனி கஷ்டம் நதி” என்ற தேவித், அவளின் கன்னத்தில் தன் பற்கள் பதிய கடித்து… “உன்னால முடியுமாக்கும்?” எனக் கேட்டான்.

“நம்ம லைஃப் இப்படித்தான்னு தெரியுமே மாமா. அப்புறம் என்ன? போகப்போக பழகிடும்” என்று சாதாரணமாக சொல்லியவளுக்கும் திருமணமான ஒரு வாரத்தில் அவனை பிரிந்து செல்வது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் காட்டிக்கொள்ளவில்லை. இல்லையென்றாலும் அவனுக்கு அவளை தெரியுமே!

“ரொம்பவே மிஸ் பண்ணப்போறேன்” என்று அணைப்பின் பிடியை இறுக்கினான்.

“வீக்கெண்ட் வந்துடுறேன் மகிழ்” என்று சொல்லியவளும், இப்போதே அவள் சொல்லிய அடுத்தவார இறுதி நாளை எதிர்பார்க்கத் தொடங்கிய அவனும் அறிந்திருக்கவில்லை, இனி அவர்களின் சந்திப்பு அத்தனை எளிதானது அல்ல. சந்திப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் பின்னோக்கி அவர்களின் வாழ்வியலை சுழற்ற உள்ளதென்றும்… அப்பயணம் அவர்களுக்கு பல ஆச்சரியங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளதென்றும்.

“உனக்கு என் நினைவு வருமா?” எனக் கேட்டவனை முறைத்தவள், “இந்த செக் உங்க லேபுக்கு போனீங்கன்னா நான் உங்க நினைவில் இருக்கமாட்டேன். நீங்க என்னை மிஸ் பண்றதை பத்தி புலம்பிட்டு இருக்கீங்க” என்று கேலி செய்தாள்.

அவள் சொல்லும் உண்மையை ஏற்பவனாக தலையசைத்து சிரித்த தேவித், இனி நகரும் ஒவ்வொரு நொடியையும் மனையாளின் நினைவில் தான் கழிக்க இருக்கின்றான்.

“இப்படியே பேசிட்டே இருக்கணும் போல தோணுது நதி. மேகத்துக்குள் வற்றாத மழை மாதிரி, இந்த மகிழுக்குள் வற்றாத மேகநதி என்னோட நதி” என்று காதலாய் அவன் பிதற்றுவதையெல்லாம் காதலாய் ரசித்திட்டாள் பெண்ணவள்.

“உங்களுக்கும் லவ் பண்ண வருது மாமா” என்ற நைருதி, அவனின் மீசை நுனி பிடித்து இழுக்க…

“இருந்திடுவேனாடா?” எனக் கேட்டான். தவிப்பாய்.

தேவித்தின் முகம் காட்டிய தவிப்பில், தன் திடம் தொலைத்தவள்,

“யோவ்… பேசாம தூங்குங்க” என்றாள். அதட்டலாக.

“யோவ்வா?” தேவித் அவளின் அதட்டலில் அதிர்ந்தான்.

“பின்ன என்ன? நானே உங்களைவிட்டு எப்படி போறதுன்னு தவிச்சிட்டு இருக்கேன். இதுல நீங்க வேற லவ் பண்றேன்னு, உங்களைவிட்டு போகமுடியாத மாதிரி பண்றீங்க” என்றாள்.

“இவ்வளவு நேரம் ஒரு ஃபீலும் இல்லங்கிற மாதிரி பேசின!” தேவித்தின் உடல் சிரிப்பில் குலுங்கியது.

“ஹான்… அது சும்மா…” என்று இழுத்த நைருதி, “நீங்களும் ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க. நானும் ஃபீல் பண்ணா உங்களுக்கு இன்னும் கஷ்டமா இருக்குமே” என்றாள்.

“கேடி.” அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

“இட்ஸ் ஓகே நதி. சமாளிச்சிடலாம்” என்ற தேவித், “வொர்க் முடிஞ்சதும் வந்திடு” என்றான்.

இப்படியே அவர்களின் பேச்சு, தங்களின் திருமணம் முடிந்த குறுகிய நாட்களிலேயே உண்டான முதல் பிரிவு குறித்து நீண்டு கொண்டே இருக்க, தன்னைப்போல் உறங்கியிருந்தனர்.

கண்ணாடி முன்பு நின்றிருந்த தேவித்திற்கு தன் தோற்றமே புதிதாகத் தெரிந்தது. தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை. அவனாலே பிம்பம் தெரியும் விம்பம் தான் தானென்று ஏற்க முடியவில்லை.

கன்னம், முகம், கைகள் என்று தன்னை தொட்டு தடவிப் பார்த்தான். சாட்சாத் அவன் கண்கள் காணும் ரச உருவம் அவனே! ஆனால் அவனால் தான் அதை ஏற்க முடியவில்லை.

“பிரிவு நேசத்தை வலுபெறச் செய்யும். அன்பின் ஆழத்தை அதிகரிக்கும். ஆழ்கடல் கொண்ட ஆழ நேசமெல்லாம் வலி சுமந்து கரை கண்டவையே! நீயும் பழகிட வேண்டும். உமக்கு துணை உம் கண்கள் காணும் யான்…” என்ற குரல் கனவில் மட்டுமல்ல நிஜத்திலும் செவிகளை நிறைக்க, தன்னுடைய நதி, தன்னைப்போல் தோற்றம் கொண்டவனுடன் வெண் புரவியில் பயணம் செய்திட,

“நதி” என்று கத்திக்கொண்டு, அவளைப் பற்றிட கரம் நீட்டியவனின் பிடி சிக்காது தூரப் புள்ளியாய் மறைந்து, காற்றோடு மறைந்தாள்.

நிஜத்தில் எழுந்தமர்ந்திருந்த தேவித், தனக்கு அருகில் அமைதியாய் துயில் கொண்டிருக்கும் மனைவியின் முகம் கண்ட பின்னரே ஆசுவாசம் கொண்டான்.

காணும் கனவுகள் யாவும் அவனின் நதியை அவனிடமிருந்து தூரப்படுத்தும் காட்சிகளாகவே இருந்திட, மனதில் அலைப்புறுதல் கொண்டான்.

கணவனின் அசையா பார்வையை தூக்கத்திலும் உணர்ந்த பெண்ணவள், கண்கள் திறந்து பார்க்க… இருளில் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த கணவனின் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையில் பதறி எழுந்தமர்ந்தாள்.

“என்னாச்சு மாமா?” எனக் கேட்டுக்கொண்டே, தன்னுடைய கைகளால் அவனின் முகம் துடைத்தாள்.

நொடியில் அவளை இழுத்து தனக்குள் புதைத்திருந்தான். தன்னவளை தனக்குள் ஆழமாக ஊடுருவிக் கொள்ளும் வேட்கை அவனிடம்.

“மாமா… வலிக்குது” என்று அவள் சொல்லிய பின்பே அவனின் அழுத்தம் குறைந்தது.

அன்றைய கனவும், இன்றைய கனவும் அவனை மனதோடு போராட வைத்தது. வெறும் கனவென்று அவனாலே சொல்ல முடியாதளவுக்கு தத்ரூபமாக தன் கண் முன்னே நடந்ததை போலிருக்க… அவனுள் மெல்லிய அச்சம்.

அச்சத்திற்கு காரணம், அவன் எதிரே எதிரியாய் நிற்பதும் அவனே எனும் மாயை. அந்த மாயை தான் எனும் நிலையில் தன்னால் தன்னவளுக்கு ஆபத்தா எனும் எண்ணம்.

கனவுகள் நடக்க இருப்பதை உணர்த்துவதாக அவன் நினைக்க… நடந்த நிகழ்வைத்தான் அவன் அவனது ஆதியின் மூலமாக அறிகிறான் என்று தெரியவில்லை.

அறியும் கணம் அவனுக்கு எதிரியாய் எதிரில் நிற்க காத்திருக்கின்றான் அவனே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
27
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்