Loading

மெல்லினம் 27:

கோபலசுவாமியின் குலதெய்வ கோவிலில் அனைவரும் கூடியிருந்தனர்.

முல்லையில் அம்மா, அப்பா, காலையில் வந்தவர்கள், முல்லையின் அம்மாவான மங்கையின், பிறந்த ஊரும் இது என்பதால் அங்கிருந்த அவர்களின் உறவுகளின் வீட்டில் இருந்து விட்டு இங்கே வந்திருந்தனர்.

முதலில் குழந்தைகள் இருவருக்கும் மொட்டை அடித்து விட்டனர். அதற்கே ரியாஸ் படுத்தி எடுத்து விட்டான்.

பின் காதுகுத்திற்கு வர, தாய்மாமன் மடியில் அமர வைப்பது தான் முறை என்பதாலும், ஊர்க்காரர்கள் ஸ்ருதியின் அண்ணன் அரவிந்தனை பார்க்காததால் அவன் வரவில்லை என நினைத்து,

“யாரோட மடியிலபா குழந்தைகள உட்கார வைக்கிறது??” என கேள்வி எழுப்ப,

“இதென்ன கேள்வி கேட்குறீங்க? இதுக்கு உரிமைபட்டவர்‌ எங்க அண்ணன் தான, அவரு மடியில தான உட்காருவாங்க‌ குழந்தைங்க” என ஸ்ருதி முந்தி கொண்டு பதில் அளிக்க,

“ஆனா அவரை நேத்து இருந்து காணலயே??”

“அவருக்கு என்ன வேலை வெட்டி இல்லையின்னு நெனைச்சுட்டீங்களா?? இப்போ தான் வந்துட்டு இருக்காரு அவருக்காக தான்‌ காத்துட்டு இருக்கோம்” என அவள்‌ கூற,

“அப்படியா” என்பது போல உறவுகள் அனைவரும் கதிர் குடும்பத்தினை பார்க்க “ஆமாம்” என தலையசைத்தனர்.

ஸ்ருதியின் அண்ணனை அழைக்க வேண்டும், என ஒரு பிரளயத்தை வீட்டினுள் நடத்தி முடித்திருந்தாள் ஸ்ருதி.

அவர் மடியில் தான் வைத்து காது குத்து வேண்டும் இல்லையென்றால், விஷேஷமே வேண்டாம் என ஒரே சண்டை பிரகாஷிடம்..

பிரகாஷின் அதட்டல் எல்லாம் இந்த விஷயத்தில் எடுபடவில்லை. அவள் பிடியிலயே இருக்க, பிரகாஷை கொண்டு அனைவரும் அதற்கு ஒத்து கொண்டிருந்தனர்.

நேரம் தான் தாண்டியதே தவிர‌ அரவிந்தன் வந்தபாடாய் இல்லை.

“ஏய், என்னப்பா நல்ல நேரம் முடிய போகுது. இன்னமுமா வர்றாங்க??ராகு காலத்துலய புள்ளைங்களுக்கு காது குத்த முடியும்??” என வந்திருந்தவர்கள் சத்தமிட,

பிரகாஷ் ஸ்ருதியை முறைக்க,

‘அய்யோ இவரு வேற முறைக்கிறாரே, இந்த அண்ணன் இன்னமுமா வர்றாங்க’ என மனதில் அலறிய ஸ்ருதி, அரவிந்தனுக்கு அழைப்பு விடுக்க, பத்து நிமிடங்களில் வந்து விடுவோம் என கூறி அவன் வைத்துவிட்டான்.

அவன் கூறிய பத்து நிமிடங்கள் கிட்டதட்ட ஒன்றரை மணி நேரமாக மாறி, அங்கிருந்தவர்கள் பொறுமையை இழந்து நொடி வந்து சேர்ந்திருந்தான்.

அரவிந்தனோடு சேர்த்து அவனின் பெற்றோரும் வந்து இறங்க, கூடவே பின்னால் இருந்து சுரபியும் இறங்கி வர, அவளை யாரும் எதிர்பார்க்காததால் சற்றே திகைத்து தான் போயினர்.

கதிரின் முந்தைய திருமண வாழ்க்கை அங்கிருப்பவர்களுக்கு தெரியுமாதலால் சுரபியை இனம் கண்டு கொண்டவர்கள்,

“ஏய் என்னப்பா இந்த பிள்ளையும் வந்து நிக்குது” என மெதுவாக பேச தொடங்கிய உறவுகளின், பேச்சு சீக்கிரமே சூடு பிடித்து கொண்டது.

பிரகாஷ் ஸ்ருதியை விட்டால் அடித்து விடும் ஆத்திரத்தில் தான் நின்றிருந்தான்.

அரவிந்தனையும், ஸ்ருதியின் அம்மா அப்பாவை அழைக்க மட்டுமே அவன் அனுமதித்தது. ஆனால் ஸ்ருதி அதனை மதியாது சுரபியையும் அல்லவா அழைத்திருக்கிறாள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா, நான் அவ்வளவு சொல்லியும் உன் தங்கச்சிய அழைச்சிருப்ப, அப்போ என் பேச்சுக்கு அவ்வளவு தான மரியாதை உன்கிட்ட” என அவன் இறுகிய முகத்துடன் கேட்க,

பதறி போன ஸ்ருதி, ” இல்லைங்க நான் அவள கூப்பிடவே இல்லை, அம்மா அப்பா அண்ணாக்கு மட்டும் தான் சொன்னேன்” என்றவளின் கண்கள் லேசாக கலங்கி விட்டது.

எங்கோ அவள் மகன்களின்‌ விஷேஷத்தில் பிரச்சனை ஏற்பட்டு எதுவும் விபரீதமாக நடந்து விடுமோ என்று, அதுவும் இல்லாமல் பிரகாஷின் கோபத்திற்கு இந்த நல்ல நாளில் அவள் ஆளாக விரும்பவில்லை.

ஸ்ருதியின் கண்ணீரில் அவள்‌ உண்மையை தான் உரைக்கிறாள் என தெரிந்து கொண்டவனிற்கு நிம்மதியே! ஏனெனில் ஸ்ருதி கோபத்தில் சண்டையிட்டு வார்த்தைகளை கொட்டுவாளே தவிர, பிரகாஷ் வேண்டாம் என்று மறுத்த ஒன்றை எப்போதும் அவள் செய்ததே இல்லை.

“சரி வா அவுங்களை போய் அழைக்கலாம்” என மனைவியின் கரம் கோர்த்து அவள் பிறந்த வீட்டினரிடம் அவன் செல்ல,

கதிரின் குடும்பத்தில், கதிரை தவிர அனைவரும் சில நிமிடங்களே திகைத்தது. அதுவும் உறவுகளின் பேச்சை நினைத்து தான், பின் தங்களை சமாளித்து கொண்டவர்கள் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கினர்.

“வாங்க, வாங்க எல்லாரும். நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரம் வாங்க” என பிரகாஷ் அவர்களை அழைக்க,

“என்ன டி சுரபி, நீ வர்றேன்னு சொல்லவே இல்லை??” என் ஸ்ருதி கேள்வி எழுப்ப,

“ஏன் க்கா? என்னோட அக்கா பசங்க விஷேஷத்துக்கு நான் வர கூடாதா??நீ தான் என்னை கூப்பிடலை, அதுக்காக உன்னை விட்டு கொடுக்க முடியுமா??” என‌ அவள் பதில் கேள்வி எழுப்ப, ஸ்ருதியால் பதில் சொல்ல முடியாத தர்மசங்கடமான நிலை.

மனைவியின் மனநிலை புரிந்தவன் “சரி வாங்க எல்லாரும் நேரம் ஆச்சு” என்றவன், ஸ்ருதியை அழைத்து கொண்டு முன் சென்று விட்டான்.

அரவிந்தன் வந்ததும், அடுத்தடுத்த வேலைகள் மளமளவென்று நடக்க ஆரம்பிக்க, உறவுகள் எல்லாம் கதிரையும் சுரபியையும் மாறி மாறி பார்த்து தங்களுக்குள் பேசி கொண்டனர்.

உறவுகளின் வாய்களுக்கு அவன் அவல் ஆவதை உணர்ந்தாலும், அதனை‌ எல்லாம் கண்டு கொள்ளாது, அத்வியுடன் ஐக்கியமாகி இருந்தான் கதிர்.

அரவிந்தனின் மடியில் குழந்தைகள் அமர்த்தப்பட, அதுவரை பெற்றோருடன் மங்கையின் அம்மா வழி கோவிலுக்கு சென்றிருந்த முல்லை சரியாக உள்நுழைய, அவள் கண்களில் முதலில் பட்டது சுரபியே.

‘இவளா’ என யோசித்தவள் அப்போது தான் அரவிந்தனையும் அவன் குடும்பத்தையும் கண்டவளிற்கு புரிந்து விட்டது.

இருந்தும் சுரபியின் பார்வை இவர்களை எல்லாம் தாண்டி விழ, முல்லையும் அவ்வழியே பார்க்க அங்கே கதிரும் அத்வியும் நின்றிருந்தனர்.

வந்ததிலிருந்து சுரப்பியின் பார்வை முழுவதும் அவன் மேல் தான். லைட் ஆரஞ்சு வண்ண சட்டையும் அதே கலரில் பார்டர்‌ வைத்த வேட்டியும் அவன் கட்டியிருக்க, அவனின் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.

அத்விக்கும் அவனை போலவே அதே வகையில் வேஷ்ட்டி சட்டை அணிவிக்கப்பட்டிருக்க, தந்தை மகன் என சொல்லாமல் சொல்லியது அவர்களின் உடை.

சுரபியின் கண்வெட்டா பார்வையை கண்டு முல்லைக்கு கோபம் பெருக “இவளை!!!” என் பல்லை கடித்தவளிற்கு அப்போது தான் வந்திருந்த உறவுகள் நினைவு வர சட்டென அவர்களை பார்க்க.

அவள் நினைத்தது போல், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில் உறவுகளின் பார்வை எல்லாம் இவர்கள் மூவரையுமே வட்டமிட, அதில் இன்னும் கொதித்தவள் நேராக சென்று அத்வியை கதிரிடம் இருந்து வாங்கி கொண்டு, அவள் தோள்கள் அவன் மார்பை உரசும் அளவிற்கு நெருங்கி நின்று ‘இவன் என்னவன்’ என்ற பார்வையை அங்கிருந்தவர்களுக்கு அவள் கொடுக்க,

அது அவர்களை அழகிய குடும்பமாக காட்டியதில், சுரபி முல்லையை முறைத்து நின்றாள். அப்போது தான் முல்லையின் புடவையை கவனித்தாள் கதிருக்கு ஏற்றாற் போல் அவளும் அதே நிறத்தில் அணிந்திருப்பதை.

சுரபியின் முறைப்பில், தானும் பதிலுக்கு முறைத்த முல்லை இன்னும் இன்னும் அவனை நெருங்க “இதுக்கு மேல என் சட்டையை பிச்சுட்டு தான் நீ உள்ள வரணும்” என கதிர் அவளின் பொறாமையை ரசித்து கிசுகிசுப்பாக கூற,

அதில் அவனை முறைத்தவளிற்கு சுரபியின்‌ பார்வையின் தீவிரம் அவளிற்கு ஒரு வித பயத்தை உண்டு பண்ணியது.

அதுவரை முல்லை மறந்திருந்த, கதிர் அவளை மறக்க வைத்திருந்த! அன்று இரவு நடந்த உரையாடல்கள் எல்லாம் சுரபியை கண்டதும், அவளிற்கு நினைவு வர அங்கே நிற்க முடியாமல் அவளின் தவிப்பு கூடிற்று.

கதிரின் அலட்சியம், மேலும் மேலும் சுரபியை அவனை பார்க்க தூண்ட, விடாது அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள்.

ஒருவழியாக விஷேசம் நல்லபடியாக நடந்து முடிய, காலையில் சீக்கிரம் எழுந்ததில் அத்விதன் அழுகைக்கு சிணுங்க ஆரம்பிக்க,

“முல்லை, நீ இவனை தூக்கிட்டு வீட்டுக்கு போ. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என கதிர் அவளை அங்கிருந்து அனுப்ப முயல,

சுரபியுடன் அவனை தனித்து விட பயந்தவளாக “ம்ஹீம் இல்லை நீங்களும் வாங்க” என அவனையும் அழைக்க,

“முல்லை, சொந்தக்காராங்க எல்லாம் சாப்பிட போய்ட்டு இருக்காங்க. பிரகாஷ் மாமாவும் ராகேஷீம் மட்டும் சமாளிக்க முடியாது, கதிர் இங்க இருக்கட்டும். அவன் இல்லையினா ஏதாச்சும் பேசுவாங்க, இந்தா ரேஷ்மியையும் பிடி ரெண்டு பேரையும் கூட்டிட்டு வீடு போய் சேரு. கொஞ்ச நேரத்துல நான் கதிர அனுப்பி விடுறேன். உங்களுக்கு சாப்பாடு கொடுக்குற மாதிரி” என சுரபியின் பார்வையையும் முல்லையையும் கண்ட சீதா முல்லையிடம் கூற,

மனமே இல்லாது அங்கிருந்து கிளம்பினாள் முல்லை.

கோவிலில் இருந்து சிறிது தூரத்திலே வீடு என்பதால் நடந்தே வந்து விட்டிருந்தனர்.

குழந்தைகள் இருவரையும் படுக்க வைத்தவளிற்கு, மனம் நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்திருந்தது.

வெறுமனே அந்த அறையை சுற்றி பார்வையை சுழல விட்டு கொண்டிருந்தவளுக்கு, சட்டென அந்த எண்ணம் தோன்ற வேகவேகமா எழுந்து, அந்த அறையில் இருந்த இரு மர பீரோல்களையும் திறந்து, சுரபி சொன்ன பொருட்கள் இங்கே கிடைக்குமா என தேட ஆரம்பித்தாள்.

ஏனெனில் நேற்று இரவு தான் ஞானம் சொல்லியிருந்தார் இது முழுதும் கதிரின் அறை என்று.

ஒரு நற்பாசையில் தேட ஆரம்பித்தவளிற்கு, எதுவும் கிடைக்காமல் போக ஏமாற்றம் அடைந்தவளிற்கு, அறையில் இருந்த ஷெல்ப்பில் இருந்த ஒரு இரும்பு தகர பெட்டி கண்ணில் பட, யோசியாது அதனை இழுத்து எடுத்து விட்டாள்.

இரும்பு பெட்டியில் பூட்டு எதுவும் இல்லாமல் கிளிப் போன்ற அமைப்பை வைத்து பூட்டப்பட்டிருந்தது (90’ஷ் கிட்ஸ்க்கு தெரியும்.இந்த மாதிரியான மாடல்)

இருபக்கமும் இருந்த அந்த கிளிப்பை பலம் கொண்டு மட்டும் திறந்தவளிற்கு ஏனோ இதயம் துடிக்க ஆரம்பித்தது.

அவள் தேடியது கிடைக்க போகிறதோ???

பெட்டியின் உள்ளே நிறைய பொருட்களும், சில புத்தகங்களும் நிறைந்திருக்க, அவற்றை அலசி ஆராய்ந்தவளின் கண்கள் ஒரு பொருளின் மீது கூர்மையாக படிய, அதனை எடுத்தவளிற்கு கைகள் தன் போல் நடுங்க ஆரம்பித்தன.

அழகிய வெண்கலத்தால் ஆன ராதையின் சிலை ஒன்று கவரில் சுற்றபட்டிருந்தது. அந்த கவர் லேசாக தூசி படிந்து கிடந்தது. தூசியினை தட்டியவள் அந்த சிலையின் வெளியே எடுத்து அடிப்புறம் திருப்பி பார்க்க 

“தேன்முல்லை” என்ற அவள் பெயர் அழகிய வெண்ணிற பொடி கற்களால் மின்னி கொண்டிருக்க அதன் கீழே “கதிரழகன்” என்ற பெயரும் இருக்க, கண்டவளின் கண்கள் தாரை தாரையாய் கண்ணீரை கொட்ட ஆரம்பித்தன.

ஆக அவள் நினைத்த விடயம் பொய்யில்லை. அன்று சுரபி சொன்னதும் பொய்யில்லை.

கதிர் தன்னை விரும்பிருக்க கூடாது, என வேண்டுதல் வைத்திருந்தவளை பார்த்து நகைத்தது அவள் கையில் வைத்திருந்த சிலை!

பின்னே இதுவே பறைசாற்றி கூறிற்றே, அவனின் காதலை!

இதோ அவள் கைகளில் இருப்பதே அதற்கு அத்தாச்சி.

 முன்பு ஒருமுறை மங்கையின் அம்மா உயிரோடு இருந்த காலத்தில், முல்லை அவளின் பதினான்காவது வயதில் இவ்வூருக்கு திருவிழாவிற்கு வந்திருந்தவள், அன்று நடந்த நடன நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடி வென்ற பரிசு!!

வாங்கியே அடுத்த நாளே, தொலைத்தும் விட்டிருந்து பரிசு அஃது.

இதை தொலைத்து விட்டு அவள் அழுத அழுகை. அதற்கு மாறாக தான் அவளிற்கு அந்த கண்ணன் சிலை கிடைத்தது.

இத்தனை நாள் அச்சிலையை கொடுத்தவரை, தெரியாமல் இருந்தவளிற்கு இன்று தெரிந்து விட்டது அதை கொடுத்தவர் யாரென்று.

அதனை கீழே வைத்தவள் மேலும் தேடியதில், சில பொருட்கள் அவனின் காதலை பாறைசாற்றும் விதமாக கிடைக்க பெற்றது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
31
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஹோ திருவிழால பார்த்து லவ் பண்ணியிருக்கானா🥰🥰🥰🥰🥰 கதிர்