Loading

அத்தியாயம் 5 

இத்தனை நேரம் பாறை போல் இறுகி நின்ற முகமா?? என எண்ணுமளவிற்கு புன்னகை முகமாக நின்றான். அபியின் புன்னகை முகத்தை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமோ ‘எதுவுமே பண்ணாத மாதிரி சிரிக்கிறான் பாரு. எல்லாம் பணமிருக்கற திமிரு. இவளால என்ன பண்ணிட முடியுன்னு நினைச்சிட்டான் போல… பணக்கார பரதேசி…’ என்று திட்டித் தீர்க்க, அது “அபி கேக் கட் பண்ணு ப்பா, மெழுகு உருகிட்டே இருக்கு…” என்ற சீதாவின் பேச்சில் நின்றது.

சீதா அப்படிக் கூறியதும் குழந்தைகளை விட்டுப் பிரிந்தவன் இருவருடனும் இணைந்து கேக்கை கட் செய்தான். இந்நேரம் அவனவள் இருந்தால் கேக் கட் செய்வதற்குள் அத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். மூன்று வருடங்களுக்கு பிறகு அவள் இல்லாமல் இந்த இனிப்பு அப்பத்தை வெட்டவேப் பிடிக்கவில்லை அபிக்கு.

பெருமூச்சுடன் கேக் கட் செய்து குழந்தைக்களுக்கு ஊட்டி விட்டவன் தாயிற்கும் கேக்கைக் கொடுத்தான். 

“ஆனந்திக்கும் கொடுப்பா…” கையில் இனிப்பு அப்பத்தை வாங்கியப்படி கூற.

“ம்ப்ச்…” என சலித்துக் கொண்டவன் டேபிளில் வைத்திருந்த அட்டைக் கத்தியை கையில் எடுக்கவும் “இல்லை மேம் எனக்கு கேக் பிடிக்காது…” என ஆனந்தி சொல்லவும் சரியாக இருந்தது. அவள் அப்படிக் கூறியதும் சிறு தோள் குலுக்களுடன் குளியலறை நோக்கி நடந்தான். அவனின் அந்த செயல் மென்மேலும் ஆனந்திக்கு எரிச்சலைக் கூட்டியது. 

****

இரவு அங்கயே தங்கிக் கொள்ளலாம் என்று முன்பே சீதா கூறிவிட்டதால் மூவருக்கும் தேவையானதை இங்கு வரும் போதே எடுத்து வந்துவிட்டாள்.. தற்போது சோழாவும், குந்தவியும் அபியுடன் அறையிலயே உறங்கிக் கொள்ள சீதாவும், ஆனந்தியும் ஹாலில் படுத்துக் கொண்டனர்… 

“தூங்கிட்டியா பொண்ணு…” என்ற சீதாவின் மெல்லிய குரலில் 

“இன்னும் இல்லை மா…” அதே மெல்லிய குரலில் சொல்லவும்

“புது இடத்துக்கு தூக்கம் வரலையா…” என ஆதுரியமாகக் கேட்டார்

“ஆமாங்க மா, அங்க வந்து இடம் பழகவே ஒரு வாரம் பிடிச்சுது. இங்க டக்குன்னு தூக்கம் வரல…” என்றதும் “சரி கொஞ்ச நேரம் என்கூடப் பேசிட்டு இரு, தன்னால தூக்கம் வந்துரும்…” என்றவர் அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்… ஆனந்தி கூற கூற அவள், அண்ணன் அண்ணி மேல் மரியாதையே வந்தது சீதாவுக்கு.. 

“பரவாயில்ல மா, இந்த காலத்துல இந்தளவுக்கு படிக்க வைச்சதே ரொம்ப பெரிய விஷயம் தான்…” என்றதும் அவளும் ஆமென்பதைப் போல் தலையாட்டினாள். 

“எனக்கும்,என் அண்ணாக்கும் பத்து வயசு டிஃபரண்ட், அதனாலயே அண்ணா என்னைக் குழந்தைப் போல பாத்துக்குவான். அண்ணியும் அப்படி தான்… என்ன தான் அவங்களுக்கு குழந்தைகள் வந்திருந்தாலும் என்னை தனியான்னு பார்த்தது இல்லை…” எனக் கூறியப்படியே சீதாவைப் பார்க்க, அவரோ நல்ல உறக்கத்தில் இருந்தார். 

மெல்லிய புன்னகையுடன் அவரை பார்த்தவள் உறங்க முயற்சித்தாள். என்ன தான் கண்களை மூடிக் கொண்டாலும் தூக்கம் வர மாட்டேன் என அடம் பிடித்தது. போர்த்தியிருந்த போர்வையை விலக்கியப்படி மெல்ல எழுந்தவள் கதவைத் திறக்க கிரீச் என்ற சத்தத்துடன் கதவு திறந்துக் கொண்டது.

மெல்ல அடியெடுத்து வெளியே வந்தவளின் முகத்தை ஜில்லென்ற காற்று வருடி விட, அதனை கண் மூடி ஆழ்ந்து சுவாசித்தவள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்துக் கொண்டாள்.

 அவள் வெளிவந்த சில நிமிடங்களிலயே அவளுக்கு துணையாக காள மேகங்கள் மழையாக மாறி தரணியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருந்தது.மெல்ல ஆரம்பித்த தூரல் மழை இப்போது பலமாக பெய்ய அதனை முகச் சுளிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஏனோ விடாமல் கொட்டித் தீர்க்கும் மழையைக் கண்டாலே எரிச்சலாக வந்தது ஆனந்திக்கு.

அதே எரிச்சல் இப்போது அபியின் மீதும் எழுந்தது… நிமிடத்தில் அவன் செய்ததை மாற்றி தன் மேல் தவறு என்பதைப் போல் கூறியது அத்தனைக் கோபம் வந்தது ஆனந்திக்கு. அந்த கோபத்தை வெளிக்காட்டும் முன்பே சீதா வந்துவிட, அதை அப்படியே அடக்கிக் கொண்டாள்.

கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டதாலோ என்னவோ தன் மேலயே கோபம் வந்தது.அவன் பேசியதற்கு பதில் பேசாமல் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தால் இந்நேரம் மனம் சமன் பட்டு இருக்குமோ என்னவோ? இப்போது மனம் அடங்க மறுத்தது… 

முகத்தைக் கடுகடுவென வைத்தபடி அமர்ந்திருந்தவளின் முகத்தில் மழை சாரல் மெல்ல வருடிக் கொடுத்து அவளின் கோபத்தையும், எரிச்சலையும் தணிக்க முயற்சித்து தோற்று போனது… 

தன்னால் அவளின் கோபத்தை தணிக்க முடியவில்லையே என்ற கோபம் கொண்ட காளமேகங்களோ ஒன்றோடு மோதி சத்தத்தைக் கொடுத்தாலும் அதைக் கண்டுகொள்ளும் மனநிலையில் தான் பாவை இல்லை. மனம் முழுவதும் கோபம் கோபம் மட்டுமே, அதை போக்கும் வழி தான் அவளுக்கு தெரியவில்லை. கைகள் இரண்டையும் திண்ணையில் ஊன்றி, கால்களை ஆட்டியப்படியே மழையை வெறித்தவளின் இதழ்கள் தன்னாலேயே 

“அவன் ரூம்குள்ள போனா கட்டிப் பிடிப்பானா மா, இதுவே நான் இல்லாம வேற யாராவது போயிருந்தாலும் இது தான் பண்ணிருப்பானா மா. ச்ச இவனெல்லாம் என்ன மனுசனோ தெரியல. விடிஞ்சும் விடியாம இங்க இருந்து கிளம்பிடனும். கண்டிப்பா இங்க நான் இருக்கறது சேஃப் இல்லை…” என வெறுப்பாகப் பேசியது.

இங்கு அவளின் வெறுப்பிற்கு காரணமானவனோ ஜன்னலின் வழியே மழையை வெறித்தபடி நின்றிருந்தான். அவனின் மனமோ நிலை இல்லாமல் தவித்தது… “எவ்வளவு பெரிய தப்பை செஞ்சுட்டேன் நான்…” என எண்ணியவனின் மறுபக்கம்

“அதை மட்டுமா செஞ்ச…” எனக் கேலியாக கேட்டது. கேசத்தை அழுந்தக் கோதியவன் “இல்லை, அந்த நேரத்துல ஏதோ…” என முனகலாக கூறினான்.  

“ ஆயிரம் சொன்னாலும் இன்னைக்கு நீ பண்ணது ரொம்ப தப்பு. பண்ணதெல்லாம் நீ, ஆனால் பழியை தூக்கி அந்த பொண்ணு மேல போட்டுட்ட ..” அவனது மனம் அவனை குற்றம் சாட்டியது.

“இல்லை நான் எதுவும் பண்ணல, நான் அம்முன்னு நினைச்சு தான் அப்படி பண்ணேன்…” 

“ஓ அம்முன்னு நினைச்சு யாரை வேணும்னாலும் என்ன வேணாலும் பண்ணிடுவீயா? இதுவே அந்த இடத்துல உன் அம்மாவோ, உன் தங்கச்சியோ இருந்தா இப்படி தான் கட்டிப் பிடிச்சிருப்பியா? உன்னால, நீ பண்ணத ஏத்துக்க முடியல… உன்னோட உணர்ச்சியை, உன்னோட உடம்பு புழுக்கத்த கட்டுப்படுத்த முடியாம இப்படி பண்ணிட்ட…”மென்மேலும் குற்றம் சாட்ட உண்மையாவே அதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை… அந்த இடத்தில் தன்னவள் இல்லாமல் ஆனந்தி இருந்ததால் ஏற்பட்ட ஏமாற்றம் அவனை அப்படி பேச வைத்ததென்று கூறினாலும் அதனை ஏற்க அவனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை. 

மனதின் கேள்விகளும், குற்ற சாட்டுகளும் ரணமாய் வலித்தது. கேசத்தை அழுத்திக் கோதியவனின் கண்களில் பெண்ணின் நிழல் உருவம் தெரிந்தது. ‘இந்த நேரத்துல வீட்டுக்கு வெளிய யாரு இருக்கா…’ என நினைத்தவன் தன் அறையை விட்டு வெளி வந்தான்.

****

உனக்காக நான் இங்கிருக்க 

உன் நினைவோ வேறு ஒருவரிடம் இருக்கிறது என்பதை போல்

காள மேகங்களோ இம்முறை பலமாகவே ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர சத்தத்தை கொடுத்தது.

அவன் மேலிருந்த எரிச்சலில் அமர்ந்திருந்தவளின் காதில் இடியின் சத்தம் பலமாகக் கேட்க இரண்டு காதையும் அடைத்துக் கொண்டவள் நீருபத்தைப் பார்த்து 

“கொஞ்சம் கூட அறிவே இல்லையா? ஏற்கனவே எரிச்சல்ல இருக்கேன். இதுல நீ வேற கடுப்பக் கிளப்பாத,…” என சற்று சத்தமாகக் கூறியவளின் காதில் ஆடவனின் சிரிப்பு சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் ஆடவனின் சிரிப்பு என்றால் அது அபியின் சிரிப்பாக தானே இருக்கும்.

அவனின் சிரிப்பு மேலும் எரிச்சலைக் கொடுக்க,அவளின் கோபம் எல்லையைக் கடந்தது. 

கண்களில் அதை அப்படியே வெளிக்காட்டியப்படி வாசற்படியில் நின்றிருப்பவனைப் பார்த்தாள். 

அவளின் முறைப்பில் அவனின் சிரிப்பு மாயமாய் மறைய திண்ணையில் அமர்ந்திருப்பவளை தயக்கத்துடன் பார்த்தான்.

அவனின் தயக்கமும், பார்வையும் அவளுக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்திருக்க வேண்டும். திண்ணையை நன்றாகவே இறுக்கி பிடித்துக் கொண்டாள். இவ்வளவு நேரமிருந்த தைரியம் இப்போது சுத்தமாக வடிந்திருந்தது. ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த சீதாவைக் கத்தி அழைக்கலாம் என நினைத்தாலும் இப்போது மழை வலுவாகப் பிடித்திருந்தது. 

இவளின் குரல் நிச்சியம் சீதாவிற்கு கேட்காது என நினைத்தவள் திண்ணையை இறுக்கமாகப் பிடித்து கொண்டாள். பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தானே தைரியம் அதை தான் இப்போது ஆனந்தி செய்துக் கொண்டிருந்தாள்.

அவள் திண்ணையை இறுக்கி பிடித்திருந்த விதமேக் கூறியது அவளின் பயத்தை… சிறிய பெண் பயந்து நடுங்கும் அளவிற்கா நடந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் எழ, தன்னை தானே கடிந்து கொண்டவன் 

“சாரி,மிஸ் குளோரி. நான் அப்ப ஏதோ ப்ச் சாரி…” கேசத்தை அழுந்த கோதி அவளையே பார்த்தபடிக் கேட்டான். தன் மன்னிப்பை அவள் துளியும் எதிர்ப் பார்க்கவில்லை என்பது அவளின் விழி விரிப்பே கூறியது. 

அந்த ஆச்சரியப் பார்வை கூட நிமிடம் மட்டுமே அடுத்த நிமிடம் அவனை அலட்சியமாக பார்த்தாள். 

அவளின் அலட்சிய பார்வை அவனுக்கு கோபத்தை உண்டாக்க, இறங்கி நின்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. “இப்படி தயங்கி தயங்கி மன்னிப்பு கேட்பேன்னு நினைச்சீங்களா மிஸ் ஆனந்தி…” அவளின் அலட்சிய முகத்தை விட பலமடங்கு அலட்சியத்தை தன் முகத்தில் வெளிக்காட்டியப்படி கேட்டான். 

அபியின் பேச்சில் கடுப்பானவள் 

பற்களை கடித்தபடி “நானும், உங்க சாரியை எதிர்ப் பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா மிஸ்டர் அபிநயன்…” இதழ்களை சுழித்து எகத்தளமாக கேட்டாள். 

“பாத்தா அப்படி தெரியலையே, நான் எப்ப வெளிய வருவேன்னு காத்திட்டு இருக்க போல தான் இருக்கு. எப்ப டா இவன் வெளிய வருவான் எப்படா நம்ம கேம்மை ஆடுவோமுன்னு யோசிச்சு யோசிச்சு பண்ண மாதிரி தான் இருக்கு…” என்றான் கடுப்பாக. 

அவன் அப்படி கூறியதும் வந்ததே கோபம் சட்டென திண்ணையை விட்டு எழுந்தவள் “ரொம்ப பேசறீங்க சார். நானும் போன போகுதுன்னு பார்க்குறேன் ரொம்ப பண்றீங்க. இதுக்கு மேல எதாவது சொன்னீங்க. இப்ப பேசற மாதிரி பேசிட்டு இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள். 

“அப்படியா? என்ன பண்ணுவ நீ? ஹான் வேலையை விட்டு போக போறயா?தாராளமா போகலாம்…” என்றான் கையை வாசலை நோக்கி நீட்டியபடி. அவனின் இந்த செய்கை மென்மேலும் கோபத்தை கொடுக்க

“நீங்க சொன்னாலும் சொல்லல்லைன்னாலும் நான் வேலையை விட்டு போக தான் போறேன்…” என்றவள் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்