முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 17
கயல் எப்போதும் போல கல்லூரிக்கு வர அனைவரும் அவளையே பார்ப்பது போல ஒரு எண்ணம். அதற்கு காரணங்கள் தான் என்ன என்று புரியவில்லை. வகுப்பிலும் இதே தொடர கயலுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இவளை பார்த்து தனக்குள் பேசி சிரித்து கொள்வது, கேவலமான பார்வை இதை எல்லாம் எதற்கு என புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் கயல். திவ்யா அழுது கொண்டே கயலிடம் வந்து அவளை தனியே அழைத்து சென்று தன்னுடைய போன்-ஐ காட்டினாள். அதில் கயலும் தேவா-வும் மிகவும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் அணைத்தபடி நின்று இருந்த புகைப்படங்கள் அவர்கள் கல்லூரி வெப்சைட் மற்றும் வாட்சப் முழுவதும் பகிரபட்டு இருந்தது. கயலிடம் ஒரு சாதாரண பட்டன் போன் மட்டுமே உள்ளது. அதனால் இந்த இரண்டு நாட்களில் நடந்தது எதுவும் அவளுக்கு தெரியவில்லை. அந்த புகைப்படங்கள் எல்லாம் இருவருக்கு பின்னால் இருந்து எடுக்க பட்டதால் அவர்கள் சாதாரணமாக நிற்பது கூட அணைத்து இருப்பது போல இருந்தது.
அனைத்திலும் கயலை பற்றி கேவலமாக கமெண்ட் அடித்து இருந்தனர். கல்லூரி முதல்வர் மகனையே வளைத்து போட்டுவிட்டாள், இனி பணத்திற்கு பஞ்சமே இல்லை, கல்லூரியே இனி இவள் கையில் உள்ளதால், படிக்கமாலையே பட்டம் கிடைத்துவிடும், எதற்கு இனிமேல் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும், பார்க்க ஒன்றும் தெரியாதவள் போல இருந்து கொண்டு முதல்வர் மகனையே வளைத்து போட்டுவிட்டாள், கைதேர்ந்தவள் தான், என எக்கச்சக்கமாக கயலை தூற்றி இருந்தனர்.
இதை எல்லாம் பார்த்து கயலுக்கு இன்னும் தான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும், என்ற எண்ணம் தோன்றி அவளை உயிருடன் வதைத்தது. கண்ணீரில் கரைந்தவளை திவ்யா தான் ஆறுதல் படுத்தினாள். அந்த ஆறுதல் கூட கயலை சென்றடையவில்லை. அழுது கொண்டு இருந்தவளை ஒரு பெண் பிரின்சிபால் வர சொன்னதாக சொல்லிவிட்டு செல்ல நடைபிணமாக அங்கே சென்றாள். சிவா ஊருக்கு சென்று விட்டு இப்போது தான் கல்லூரிக்கு வந்தவனுக்கு அனைத்தும் தெரியவர ஓடோடி வந்தான். திவ்யாவிற்கு சிவா-வை பார்த்ததும் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் எல்லாம் கரை புரண்டு ஓட சிவா ஆறுதல் படுத்தினான். திவ்யாவும் சிவாவும் தன் தோழியை நினைத்து இயலாமையுடன் பார்த்து கொண்டு இருந்தனர்.
அந்த ஆபீஸ் அறையில், கல்லூரி முதல்வர், பிரின்சிபால், சில ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். அவர்கள் பார்வையில் கூனி குறுகி நின்ற கயலை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. உள்ளே உள்ளம் எரிமலையாக அடங்காமல் ஆர்ப்பரித்து கொண்டு இருந்தது. அடக்க வழிகள் தான் தெரியவில்லை.
ஏன் மா… படிக்க வந்தியா இல்லை காதலிக்க வந்தியா… உன்னைய நல்ல பொண்ணுன்னு நினச்சா நீ இப்படி பட்ட பொண்ணா.. வசதியான விட்டு பையனை வளைச்சு போட்டு, காதல் என்கிற பேரில் வசதியா வாழலாம்னு நினைச்சியா… அதுக்கு என் பையன் தான் கெடைச்சானா… என்ன பண்ணி என் பையனை வளைச்சு போட்ட சொல்லு… எவ்ளோ பணம் வேணும் கேட்டு வாங்கிக்கோ… இனிமேல் அவன் கூட பேசாத… என நாக்கில் நரம்பு இல்லாமல் பேசி கொண்டே சென்றார் முதல்வர். எதிர் தரப்பு நியாயம், அவர்களின் சூழ்நிலை, எந்த பக்கம் நியாயம், உண்மையில் என்ன நடந்தது என எதற்கும் வாய்ப்பு வழங்காமல் பேசி கொண்டே சென்றார். கயலை பற்றி தெரிந்த ஆசிரியர் பேசி பார்த்தும் அவர்கள் கேட்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன் இயலாமையுடன் கைகளை பிசைந்து கொண்டு நின்றுவிட்டார்.
கயலும் நடந்ததை சொல்ல எவ்வளவு முயன்றும் அதற்கான சந்தர்ப்பங்கள் அவளுக்கு கொடுக்க படவில்லை. பாதிக்கபட்ட இருவரில் பெண்கள் மட்டும் தான் சூழ்நிலை கைதியாக நின்று அவமானம், அசிங்கம் என எல்லாம் படவேண்டியுள்ளது. எந்த விதத்திலும் ஆண்கள் பாதிக்கப்படுவது இல்லை. அந்த நிலைமை வந்தாலும் பணத்தை வைத்து நீதியை விலை கொடுத்து வாங்க தான் முடிகிறதே சுதந்திர நாட்டில். கயல் மட்டும் விதிவிலக்கா என்ன. தன் தரப்பு நியாயங்களை சொல்லவும் அதை கேட்கவும் முடியாத படி பலரின் காதுகளும், வாய்களும் பல காலங்களாகவே ஊமையாகி விட்டன.
அவமானபடுத்தி காயப்படுத்தி இனிமேல் இப்படி செய்ய கூடாது… படிப்பு கெடக்கூடாது என்பதற்காக மட்டும் உன்னை இத்துடன் விடுகிறேன்… இனிமேல் கவனமாக நடந்து கொள்.. என்று கட்டளை இட்டு தண்டனையாக ஒரு வாரம் சஸ்பெண்ட் என்ற பட்டத்தையும் வாங்கி கொண்டு வெளியில் கண்கள் சிவந்து வந்தவளை பார்க்க முடியாமல் மனதிற்குள் அழுது வெளியில் ஆறுதலாய் மாறி போயினர் நண்பர்கள். அவர்கள் பேசுவது எதுவும் கயலின் காதுகளை போய் எட்டவில்லை. ஜடமாக அமர்ந்து இருந்தாள். சிவா கோவமாக இதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள கயலுக்கு துணையாய் திவ்யாவை விட்டுவிட்டு சென்றான்.
திவ்யா எவ்வளவு பேசியும் பெரிதாக முன்னேற்றம் இல்லை. அவளுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கயல் ஒரு கட்டத்திற்கு மேல் திவ்யாவை பார்த்து, ஐம்.. ஓகே.. நான் வீட்டுக்கு கிளம்புறேன்… என சொல்ல கூட வருகிறேன் என்று சொல்லவும் தான் பார்த்து கொள்வதாக சொல்லிவிட்டு சென்று விட்டால் கயல். போகும் அவளை இயலாமையுடன் பார்த்து கொண்டு இருந்தால் திவ்யா. சிறிது நேரம் கழித்து சோர்ந்து போய் வந்தான் சிவா. அவனிடம் விசாரிக்க யாரு என்று தெரியவில்லை.. கூடிய சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம் என சொல்லிவிட்டு கயலை பற்றி கேட்க இவளும் சொன்னாள். அவனுக்கும் மனது முழுக்க தன் உடன்பிறவா சகோதிரியை நினைத்து கலக்கமாக இருந்தது.
மாலை மயங்கிய நேரம். பறவைகள் அனைத்தும் தன் கூட்டிற்கு திரும்பி கொண்டிருந்தது. அந்த பார்க்கில் கண்களில் கண்ணீருடன் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் கயல் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள். அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவளிடம் கேட்பதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் தான் யாருக்கும் மனதும் இல்லை நேரமும் இல்லை. அவளின் கண்ணீர் தெரிந்த கண்களுக்கு அதற்கு பின்னாடி இருந்த வலிகள் கடைசி வரை தெரியாமலே போய்விட்டன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் சில மனிதர்களின் மனங்கள் தான் மாற்றம் இல்லாமலே கடந்து விடுகிறது.
ஒரு ஓரமாக கல் பெஞ்சில் அமர்ந்து இருந்த அவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது. எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத ஒரு அவமானம் அவளுக்கு கல்லூரியில் நடந்துவிட்டது. அதை மட்டும் அவளால் சிறிதும் ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் கொஞ்சமேனும் நிம்மதியாக இருப்பது அந்த கல்லூரியில் தான். ஆனால் அங்கும், காலையில் நடந்த நிகழ்வால் யாரையும் பார்க்கும் திராணி அற்று கூனி குறுகி நின்றது, மற்றவர் கண்களுக்கு கேவலமாக தெரிந்தது இதெல்லாம் யாரோ அவளின் இதயத்தில் ஈட்டியை இறக்கிய ஒரு வலி. இதற்கு இறந்து போயிருக்கலாம் என்ற எண்ணம் நூறாவது முறையாக தோன்றாமல் இல்லை. அதிலும் இது அவளின் சித்திக்கு தெரிந்தால் நினைக்க நினைக்க அவளுக்கு கால்கள் வீட்டிற்கு செல்ல மறுத்தது. மனதின் ஓரத்தில் சிறிது நம்பிக்கை இது சித்திக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என. ஆனாலும் அவளால் முழுமையாக பயத்தை விட்டு வெளியில் வர முடியவில்லை. பயம், பதட்டம், அழுகை, என எல்லாம் அவளை கொல்லாமல் கொன்றது.
நேரம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது. அந்த பார்க்கின் காவலாளி பெரியவர் வந்து சொல்லும் வரை சுற்றம் மறந்து அமர்ந்து இருந்தாள். அதன் பிறகு தளர்ந்த நடையுடன் கிளம்பி பார்க்கை விட்டு வெளியில் வந்து பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள். எவ்வளவு நேரம் தான் வீட்டிற்கு போகாமல் தவிர்க்க முடியும். எப்படியும் போய் தான் ஆக வேண்டும். இவ்வளவு தாமதம் ஆனதற்கே என்ன விடை கூற வேண்டும் என்று தெரியவில்லை அந்த பேதைக்கு. இவள் கூறும் விடைகள் ஏற்று கொள்ள படுமா? என்பது வேறு விஷயம். தனக்கான பேருந்து வந்ததும் கெளம்பி வீட்டுக்கு சென்றாள். இனிமேல் தன் வாழ்க்கையை கேள்வி குறியாக போகிறது தெரியாமல் சென்று கொண்டிருந்தாள் கயல்.
ஒருவித பதட்டத்துடன் வீட்டிற்கு வந்த கயலுக்கு பெரிதாக ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை. எப்போதும் போல இருந்ததால் தன் மனபாரத்தை ஓரம் கட்டிவிட்டு வேலை செய்து கொண்டு இருந்தாள். அனைத்தும் சுமதி அழைக்கும் வரை தான். ஒரு வித பதட்டத்துடநும் பயத்துடனும் சென்றவளுக்கு ஏமாற்றம் மட்டுமே. சுமதி ஏன் நேரம் கழித்து வந்தாய் என கேட்டு வழக்கம் போல திட்டிவிட்டு இன்னும் சில வேலைகளை சொல்லிவிட்டு சென்று விட்டாள். கயலுக்கு அப்போது தான் மூச்சே வந்தது. இப்போதைக்கு இது ஒரு ஆறுதலாக இருக்க தன் வேலையை செய்ய சென்றுவிட்டாள். அதன் பிறகு வந்த நாட்கள் ஏன் கல்லூரி செல்லவில்லை என கேட்க அனைவரும் ஒரு வாரம் சுற்றுலா சென்று விட்டனர். அதனால் வராதவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை.. என ஏதோ பேசி சமாளிக்க சுமதியும் வீட்டுவேலை செய்ய ஆள் வேண்டும் என்பதால் அத்துடன் விட்டுவிட்டாள். யார் அழைத்தும் அதை ஏற்க வில்லை. நண்பர்களும் அழைத்து ஓய்ந்து போய்விட்டனர். பகலில் வேலை இரவில் அழுகை என கழிந்து கொண்டு இருந்தது நாட்கள்.
சுமதி வெளியில் தன் விளங்காத தோழிகளை பார்க்க சென்ற பொது ஒரு தர்பூசணி சொல்லிவிட்டது அனைத்தும். கல்லூரியில் நடந்தது முதல் சஸ்பென்ஷன் வரை. அவளின் மகளும் அதே கல்லூரியில் படிப்பதால் இவளுக்கு தெரிந்து கடைசியில் சுமதிக்கு தெரிந்துவிட்டது. கோபத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தால் சுமதி. இது எதுவும் தெரியாமல் தன் அன்னையின் புகைப்படத்தில் ஆறுதல் தேடி கொண்டு இருந்தால் பேதை. இனி என்ன ஆகுமோ….??
ஆதி எப்போதும் போல அலுவலக வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான். அவன் மனம் ஏனோ ஒரு வித பதட்டமாகவே இருந்தது. இனம் புரியாத வலி ஒன்று நெஞ்சின் ஓரத்தில். காரணம் விளங்காமல் சுற்றி கொண்டு இருந்தான். வெண்பாவின் நிகழ்விற்கு பிறகு இப்போது எல்லாம் கவனமாகவே இருக்கிறான். தன் குடும்பம் நண்பன் என அனைத்தையும் பார்த்து கொள்பவன் தன்னவளை பற்றி யோசிக்காமல் போனது தான் யார் செய்த பிழை…??
காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.
Acho pavam kayal…. Ethavathu chinna scene kidacha kuda Kannu kaathu mooku vachu unmainmayhiriye build-up panni pesiruvanga… Cha… Ipo chiti ku Vera terunju pochu antha Amma enna saami aada poghutho teriyalaye…
Thanks sis….