472 views

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 10

சென்னை மாநகரம்.. அதிகாலையில் எப்போதும் இருக்கும் பரபரப்புடன் இயங்கி கொண்டு இருந்தது. ஆனால் ஒரு வீட்டில் மட்டும் எந்த பரபரப்பும் இல்லாமல் AC-யை அதிகமாக வைத்து இழுத்து பொத்திக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தது ஒரு ஜீவன். வேற யாரு நம்ம கார்த்திக் தான். அவனின் தொலைபேசியும் விடாமல் தொல்லை பண்ண அதை தூக்கி எரிந்து விட்டு அவனின் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தான் (அதான் பா தூங்குறது).

அழகான கனவு அதை கலைக்க தான் மனம் வரவில்லை அவனுக்கு. கனவில்…. அழகான மேக கூட்டங்கள், பறவையின் இனிய கீதங்கள், பனி படர்ந்த சாலை, விடிந்தும் விடியாத காலை பொழுதில், மயங்கி கிடக்கும் இவன் மேல் மலை சாரல் தூவ, மெதுவாக கண் திறந்து பார்த்தால் இவனுக்கு அருகில் ஒரு பெண்ணின் முகம். வட்ட வடிவ முகம், பிறை போன்ற நெற்றி, அதில் சின்னதாக ஒரு போட்டு, கண்களில் ஒருவித கனிவு, பரிதவிப்பு, ஏமாற்றம், சிரித்தால் கன்னத்தில் விழும் குழி, அதில் விழுகாமல் இருந்தால் தான் அதிசயம். உதட்டில் எப்போதும் இருக்கும் புன்னகை, உதட்டின் கீழ் உள்ள மச்சம், கழுத்தில் சின்ன கருகமணி பாசி, காதில் ஒரு செம்பு தோடு என்று மலை கிராமத்து குயில் என்று சொன்னால் மிகையாகாது.

இவனுக்கு தான் பார்க்க பார்க்க திகட்டவில்லை. கனவிலும் நிஜத்திலும் மெல்லிய சிரிப்பு இதழ் ஓரத்தில். இவன் எழுந்ததும் அந்த பெண் இவனை திரும்பி பார்த்து கொண்டே ஓட இவன் அவளை பிடிக்க முயற்சிக்க, ஒரு கட்டத்தில் தவறி விழுந்து விட்டான். அப்போது தான் தெரிந்தது கட்டிலில் இருந்து விழுந்தது. ‘பரவாயில்ல யாரும் பார்க்கல…’ என சிரிப்புடன் எழுந்து நேரத்தை பார்க்க அது கொஞ்சமும் கருணை இல்லாமல் 9 மணி என காட்ட ‘ஐயோ… ஒரு கனவுல மயங்கி இவ்ளோ நேரம் தூங்கிட்டோம். அவன் வந்தான் நான் செத்தேன்.. அதுக்குள்ள சீக்கிரமா ரெடி ஆகி ஆபீஸ் ஓடிற வேண்டியது தான்…’ என அரக்க பரக்க தயராக ஓடி விட்டான்.

இங்கே ஆதி கார்த்திக் போன் பண்ணி பார்த்து ஓய்ந்து விட்டான். ‘வரட்டும் இருக்கு அவனுக்கு…’ என்று நினைத்து விட்டு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான். அப்போது தான் கார்த்தி குளித்து முடித்து தயாராகி கொண்டு இருக்க அவனின் தொலைபேசியின் சத்தம் நானும் இங்கு தான் இருக்கிறேன் என்று காட்டியது. அப்போது தான் அதன் நியாபகம் வர தேடினான். அந்தோ பரிதாபம்..!!! கட்டிலுக்கு கீழ் ஒரு ஓரத்தில் கிடந்தது. அதை பார்த்து “அச்சோ உன்னைய தூக்கி போட்டுட்டானா… சாரி… கோவப்படாத…” என்று அதனுடன் பேச்சு வார்த்தை முடிந்து அதை திறந்து பார்க்க பல தவற விட்ட அழைப்புகளும், கடைசியாக ஒரு குறுஜெய்தியும் இருந்தது. அனைத்தும் ஆதி இடம் இருந்து தான். அந்த குறுஞ்செய்தியை பார்த்தும் செல்லாமல் இருக்க அவன் என்ன முட்டாளா…. அடுத்த நிமிடம் ஆதியின் முன்னாள் ஒன்றும் தெரியாத அப்பாவி போல நின்று கொண்டு இருந்தான்.

ஆதி அவனை குறுகுறுவென பார்க்க, இவன் தான் குனிந்த தலை நிமிரவே இல்லை… ஆதியும் இருக்கும், இனிமேலே வரப்போகும் அனைத்து நல்ல வார்த்தைகளையும் சொல்லி கழுவி ஊத்தி கொண்டு இருந்தான். அனைத்தையும் துடைத்து விட்டு மச்சி பசிக்குது… சாப்பிட்டே பேசலாமா… என இளித்து வைக்க அதற்கும் சேர்த்து வாங்கிகொண்டான். அப்படி இருந்தும் அவனை சாப்பிட அழைத்து சென்றான்.

ஒருவழியாக சமாதானம் ஆகி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போதும் கார்த்தி சும்மா இல்லாமல் “மச்சி மீட்டிங் நல்ல படியா முடுஞ்சது தான…” என கேட்டு வைக்க அதற்கும் முறைப்பை பரிசாக வாங்கி கொண்டான். அதன் பிறகு சாப்பிட மட்டும் தான் வாயை திறந்தான் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.

ஆதியின் கோவத்திற்கு காரணம் இன்று இதே ஹோட்டல்-இல் ஒரு மீட்டிங் இருந்தது. அதை இருவரும் தான் அட்டென்ட் பண்ண வேண்டும் இவன் தான் தூங்கி விட்டானே. எப்படியோ ஒரு வழியாக சமாளித்து மீட்டிங்கும் நல்ல படியாக முடிந்தது. மீட்டிங் தேவையான அனைத்து பைலையும் இவன் காரில் தான் கார்த்தி வைத்து விட்டு சென்றான். நாளை மறந்து விட்டால் கஷ்டம் என்று. அது தான் ஆதியை இன்று காப்பாற்றியது. இல்லை என்றால் அவ்வளவுதான். அதனால் தான் வந்ததும் வாங்கி கட்டி கொண்டான்.

சாப்பிட்டு விட்டு இருவரும் காரில் கிளம்ப “அப்படி என்னதான்டா பண்ண காலையில எருமை” என்று ஆதி கேட்க, “நைட் தூக்கம் வரலை மச்சி… ரொம்ப நேரம் தூங்காம விடியற சமயத்துல தான் தூங்குனேன்… அதா எழுந்துக்க டைம் ஆயிடுச்சு… சாரி மச்சி…” என்க அவனும் அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. கார்த்தி எப்போதும் இப்படி செய்பவன் இல்லை. அவன் கடமையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்பவன். அதானல் தான் ஆதியும் விட்டு விட்டான். கார்த்திக்கு திடீரென நேற்று இரவு ஏன் என்று தெரியாத ஒரு தனிமை, மனது முழுக்க ஒரு வெறுமை. இதனால் என்னவோ தூக்கம் வராமல் நெடுநேரம் கழித்து தான் உறங்கினான். கனவை பற்றி நண்பனிடம் சொல்லி இன்னும் வாங்கி கட்டிக்க வேண்டாம் என்று விட்டுவிட்டான்.

கனவில் வந்த பெண்ணின் முகம் அவனுக்கு இதயத்தில் பதித்த பச்சை போல நன்கு பதிந்து விட்டது. அதை அழிப்பது என்பது முடியாத காரியம் தான். மீண்டும் எப்போது பாப்போம், அவளை நேரில் சந்திப்போமா ஏதும் தெரியாமல் அவனின் கனவு தேவதையை நினைத்து கொண்டே வந்தான். ஆதியும் ஏதோ யோசனையில் இருந்ததால் இவனிடம் உள்ள வேறுபாட்டை கவனிக்கவில்லை.

கார்த்திக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை… அவனின் வாழ்க்கையை திசை மாற்ற ஒருத்தி மிக விரைவாகவே வரப்போகிறாள் என…

***************************************

கயலும் திவ்யாவும் எப்பொழுதும் போல அவர்களின் இடத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். எல்லாம் சிவாவை பற்றி தான். கயல், “விடு திவி… அவன் ஏதும் சொல்லாம போய்ட்டானு நினைக்காத… அவன் ஏதும் பேசாம போனதுக்கு கண்டிப்பா காரணம் இருக்கும்… நீ படிப்ப பாரு… எக்ஸாம் நல்லா பண்ணு… அவன் உனக்குன்னு இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது… அவனை தொந்தரவு பண்ணாம இரு.. அவனே உன்னைய தேடி வருவான்… சரியா… ” என கேட்க அவளும் தலையை ஆட்டி வைத்தாள்.

“தலையை மட்டும் ஆட்டு… என்ன புருஞ்சுதோ தெரியலை… சரி வா… அவன் வரல நாம போலாம்…” என கூட்டி சென்றாள். ஆனால் இதெல்லாம் சிவா மரத்தின் பின்னால் நின்று கேட்டு கொண்டு தான் இருந்தான் என இவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அவனும் சென்று விட்டான். அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் வெளிப்படையாக இவர்களை விட்டு விலகி விட்டான். கயல் சென்று பேசினாலும் முகம் கொடுத்து பேசவில்லை. அதனால் அவளும் விட்டு விட்டாள். அவனே வரட்டும் என.

திவ்யாவிற்கு அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் கண்ணீரிலும், ஏக்கத்திலும் தான் கடந்தது. தந்தை கேட்டதற்கு கூட ஏதோ காரணங்கள் சொல்லி மழுப்பி விட்டாள். அதனால் தந்தை முன்னாள் மட்டும் எப்போதும் போல இருப்பதாக காட்டி கொண்டாள். அவருக்கும் புரிந்தது தன் செல்ல மகள் எதையோ மனதிற்குள் வைத்து கஷ்டபடுகிறாள் என்று. ஆனால் தன் குட்டிமாவே சொல்லட்டும் என்று ஏதும் தெரியாதது போல இருந்து விட்டார்.

கார்த்திக் பார்ப்பதற்கு தூரமாக சென்றாலும் அவர்களை சுற்றி தான் இருந்தான். அவர்களுக்கு தேவையானது எல்லாம் பார்த்து பார்த்து செய்தான் அவர்களுக்கு தெரியாமல். திவ்யாவை பற்றி தான் அவனால் யோசிக்க கூட முடியவில்லை. என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் தான் ஓடி கொண்டு இருக்கிறான். அவளின் கண்ணீர், காதல், பரிதவிப்பு, அவனை பார்க்கும் போது மட்டும் வரும் ஏக்கம் எல்லாம் அவனை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. இதற்கு எல்லாம் சீக்கிரமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என நினைத்து கொண்டான்.

நாட்கள் எப்போதும் போல சென்று கொண்டு இருந்தது…

தேர்வு முடிந்து எப்போதும் போல வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தது. சிவாவும் பேசாமல் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்தான். திவ்யாவும் அவனை பார்த்து கொண்டு இருந்தால் போதும் என்று இருந்து விட்டாள். அவள் பார்ப்பதும் பார்த்து கொண்டே இருப்பதும் இவனுக்கும் தெரியும். இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தான்.

எக்ஸாம் நேரத்தில் இது எல்லாம் நடந்ததால் வகுப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியவில்லை. எப்போதும் போல ஏதோ சண்டை தான் என நினைத்து விட்டு விட்டார்கள். இவர்கள் எப்போதும் இப்படி சண்டை போட்டு சிறிது நாட்கள் பேசாமல் இருந்து மறுபடியும் பேசி கொள்வார்கள். இவர்களின் நட்பில் யாரையும் விடவும் மாட்டார்கள். அதனால் மற்றவர்களுக்கு இது பெரிதாக தெரியவில்லை.

கயல் எப்போதும் போல காலையில் எழுந்து தன் பணிகளை செய்து கொண்டு இருந்தாள். அவளின் சித்தி சுமதி எப்போதும் இல்லாமல் இன்று நேரமே எழுந்து தயாராகி கொண்டு இருந்தாள். கயல் அவளுக்கான தேனீரை கொடுக்க வந்தவள், சுமதி சீக்கிரமாக எழுந்ததில் சற்று ஆச்சர்யபட்டாலும், தனக்கு இது தேவை இல்லாத வேலை என்று நினைத்து விட்டு சென்று விட்டாள். சுமதி இவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் தயாராகி கொண்டு இருந்தாள்.

கயலும் தன் வேலையை செய்து விட்டு அவள் கல்லூரி செல்ல தயாராகி கொண்டு இருக்கும் போது கீழே இருந்து சுமதியின் குரல் ஆங்காரமாக ஒலித்தது. அந்த குரலில் உள்ள கோவத்தை பார்த்து கயலே பயந்து விட்டாள். பயந்து கொண்டே இறங்கி வர அங்கே சுமதி முழு கோபத்துடன் நின்று கொண்டு இருந்தாள். இவளின் சத்தம் கேட்டு அருண், செல்வா எல்லோரும் வந்து விட்டனர்.

கயல் ஒரு வித பயத்துடனே வர, சுமதி விட்ட ஒரு அரையில் சுருண்டு விழுந்து விட்டாள். அருண் பயந்து விட்டான். செல்வாவிற்கு கோவம் வர “ஏய் சுமதி இப்போ எதுக்கு நீ என் பொண்ண அடிக்குற.. என்ன நினைச்சுட்டு இருக்க… ஏதோ நீ பண்றது எல்லாம் பாத்து எல்லாம் தலை எழுத்து-னு பொறுத்து போனா நீ ரொம்ப தான் பண்ற…” என இவர் திட்ட… கயலும் கையை கன்னத்தில் தாங்கி கண்ணீருடன் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

“யோ… நிறுத்தியா…. உன் பொண்ணு என்ன பண்ணா தெரியுமா? எவ்ளோ தைரியம் இருந்தா திருடியிருப்பா… இது எத்தனை நாள் பழக்கம்… உன் அம்மா புத்தி தான உனக்கும் வரும்… ” என செல்வாவிடம் ஆரம்பித்து கயலிடம் முடித்தாள். கயல் திகைத்து விட்டால், “சித்தி நிஜமா சொல்ற நான் ஏதும் திருடல… தேவை இல்லாம எங்க அம்மாவை பத்தி எல்லாம் பேசாதீங்க…” என சொல்ல, செல்வாவும் “என் பொண்ணு அப்படிபட்டவ இல்ல. என் வளர்ப்பு தப்பா போகாது… நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற…” என சொல்லவும் சுமதிக்கு தான் அதெல்லாம் ஏறவே இல்லை.

கயலின் முடியை பிடித்து தூக்கி, அவள் வலியில் அலறுவதையும் பொருட்படுத்தாமல் மிருகத்தனமாக நடந்து கொண்டாள். “என்னடி என்னைய எதிர்த்து பேசுற… உங்க அம்மாவை பத்தி பேசுனதும் கோவம் பொத்துக்கிட்டு வருது… திருட்டு நாயே… எங்க டி என்னோட நகை…. எவன்கிட்ட கொடுத்த… சொல்லுடி… அதை எங்க வெச்ச… வாய திறந்து பேசுனு சொன்னேன்ல…” என கத்தி கொண்டே இருக்க கயல் கண்கள் முழுக்க கண்ணீருடன் “சித்தி, சத்தியமா சொல்றேன் அது எப்படி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது… என்னைய விட்ருங்க…. நான் எதுவும் திருடல…. என்னைய நம்புங்க…” என எவ்வளவு கதறியும் சுமதிக்கு புரியவில்லை.

“அட அட அட… என்ன நடிப்பு… என்ன நடிப்பு…. இதெல்லாம் உங்க அப்பன் நம்பலாம்… நான் நம்ப மாட்டேன்… இந்த நீலி கண்ணீர் விட்டா உன்னைய விட்ருவேனு நினைச்சியா… அதெல்லாம் நடக்காது… என் கோவத்தை கிளறாத டி… ஒழுங்கா உண்மையா சொல்லு… எவன்கிட்ட கொடுத்த?… நகையை மட்டும் தான் குடுத்தியா இல்லையா உன்னையே குடுத்திட்டியா காசுக்காக…… சொல்லு டி திருட்டு நாயே…” என கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பேசி கொண்டே சென்றாள்.

இதுவரை இருந்த பொறுமை இப்போது கயலுக்கு இல்லை. தன்னை பற்றி இப்படி ஒரு வார்த்தை சொன்னால் யாரால் தான் தாங்க முடியும். “என் கேரக்டர் பத்தி பேசுற வேலை வெச்சுக்காதீங்க… உங்களுக்கு அவ்ளோதான் தான் மரியாதை… நான் தான் எடுக்கலைனு சொன்னாலே… திரும்ப திரும்ப என்னைய பத்தி எதாவது தப்பா பேசுனீங்க…” என்று மிரட்ட சுமதி பயந்து போனது என்னமோ உண்மை தான். ஆனால் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் கோவப்பட்டு, “என்னைய எதிர்த்து பேசுறியா… எவ்ளோ திமிரு இருக்கும்…” என மறுபடியும் அடிக்க போக…. செல்வா “சுமதி” என்று கத்த, அடிக்காமல் பின் வாங்கிவிட்டாள்.

கயலை முறைத்து கொண்டே “நீ என்ன பண்ணுவியோ தெரியாது… சாயங்காலம் நான் திரும்பி வரும்போது நகை இருக்கனும்… இல்ல அவ்ளோதான்…” என மிரட்டி விட்டு சென்றாள். செல்வாவிற்கு தன் மகளின் நிலை எண்ணி கண்ணீர் நிற்காமல் வந்தது. கயலும் தன் கஷ்டத்தை மறைத்து கொண்டு “அப்பா நீங்க ஏன் அழுகுறீங்க… சித்தியை பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல…. விடுங்கப்பா… வாங்க போலாம்…” என அழைத்து சென்றாள். அவரை வற்புறுத்தி சாப்ட வைத்து அருண்-யும் பள்ளிக்கு அனுப்பி விட்டு இவளும் தனது அறைக்கு சென்றாள்.

கதவில் சாய்ந்து தன் கண்ணீர் மொத்தத்தையும் கரைத்து கொண்டு இருந்தாள். தன் தாயின் புகைப்படத்தை பார்த்து “அம்மா… இதெல்லாம் நீ பாத்துட்டு தான இருக்க… என்னால முடியல மா… உன்கூட என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல… தனியா விட்டுட்டு ஏன் மா போன…. உன் பொண்ண பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டாங்க பாத்தியா…. நீ இருந்தா என்னைய யாராவது எதாவது சொல்லிருப்பாங்களா… ” என தன் துக்கத்தை கண்ணீரில் கரைத்து கொண்டு இருந்தாள். இதற்கு மேல் இங்கே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று கிளம்பிவிட்டாள் கல்லூரிக்கு. அவளுக்கான ஆறுதலும், கண்ணீரை துடைக்கும் கைகளும் அங்கு தானே உள்ளது.

சற்று முன்பு…

சுமதி வெளியில் கிளம்பி கொண்டு இருந்தாள். குடும்பத்தை கெடுப்பதற்கே சில நல்ல உள்ளம் கொண்ட தோழிகள் உண்டு அல்லவா சுமதிக்கு. அவர்களை சந்திக்க கிளம்பும் போது தான் தன்னிடம் இருக்கும் நகையில் விலையுயர்ந்த நகையாக போட்டு அவர்களிடம் தன்னுடைய தகுதியை காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஒரு வாரம் முன்னாடி வாங்கி வைத்த நகையை அதற்கான பெட்டியில் தேட… அந்தோ பரிதாபம்… அதை தான் காணவில்லை… எல்லாம் இடமும் தேடி கிடைக்காததால்… யாரு எடுத்துருப்பாங்க… என யோசிக்க பாவம் அதில் சிக்கியவள் தான் கயல். அதன் பிறகு தான் இவ்வளவும் நடந்தது.

கயல் தான் கண்களில் கண்ணீருடன், நடந்து கொண்டு இருந்தாள். மனம் எரிமலையாக குமுறி கொண்டு இருந்தது. சுமதியின் வார்த்தை தான் காதிற்குள் ஓடி கொண்டே இருந்தது. தன்னை பற்றி என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். நினைக்க நினைக்க நெஞ்சின் ரணம் அதிகம் ஆகி கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் தலை சுத்த கண்கள் இருட்டி மயங்கி சரிந்தாள் கயல். உடனே அவளை ஒரு கரம் தாங்கி கொண்டது… அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க லேசாக கண்களை திறந்தவளால் எதிரில் தன்னை பார்த்து கொன்று இருக்கும் முகத்தை பார்த்து விட்டு முழுவதுமாக மயங்கினாள். மன சோர்வு, உணவும் உண்ணாதது, வெயில், அழுகை எல்லாம் சேர்ந்து அவளை முழுமையாக ஆட்கொள்ள சுத்தமாக சுயநினைவு இழந்தாள்.

இனி கயலின் நிலைமை என்ன….??

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Sangusakkara vedi

      Adhi vanthuchu…. Ini kayal pathina payam ila … Epdiyum left and right vankiruvan. …. Super ud sis….. Antha Sumathi ku perusa aappu vakanum sis…. Ithu ennoda small request…