Loading

முசுடும் முயலும் ! 6  😾😻

ஆசையோடு வந்தாலும், மனதிற்குள் பாட்டு ஓடிக் கொண்டிருந்தாலும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் உணவகத்திற்கு, அதுவும் தனி ஆண்மகனுடன் அதோடு யாருமில்லா இடத்தில் இருப்பது மனதை மெலிதாக அச்சுறுத்தியது. இருந்தும் அதனை காண்பிக்காமல்  அங்கும் இங்கும் கண்களோடு மனதையும் அலைபாய விட்டாள் .

ஆனால், அவளின் மனதினில் காலை ஒன்பது மணிக்கு சென்றடைந்தது.

😾❤️😻

காலையில் சுப்ரபாதம் ஒலிப்பதிற்கு பதில்  அனைவரின் குரல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது. பிள்ளைகள் இரண்டும் டி.வியில் சத்தத்தை அதிகம் வைத்து கார்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர். தென்றல் சமைக்கிறேன் என்கின்ற பேர்வழியில் பாத்திரங்களை சத்தத்துடன் உபயோகம் செய்துக் கொண்டிருந்தார்.

வைரமணி வழக்கம் போல் எழுந்து அலைபேசியில் அனைவருக்கும்  காலை வணக்கம் புகைப்படத்தை அனுப்பிக் கொண்டிருந்ததோடு இரண்டு மணி நேரத்தில் மூன்றாவது டீ கேட்டு விட்டார். அதனில் வந்த கோபத்தில் தான் தென்றல் வைரமணியோடு  சண்டை போட முடியாததால் பாத்திரங்களோடு சண்டையிட்டு கொண்டிருந்தார்.

மைத்ரேயி தன் பிள்ளைகளுக்கும் அம்மாவிற்கும் மாறி மாறி உதவி செய்துக் கொண்டிருந்தாள். உத்ரா தலையை எப்பொழுதும் போல் பின்னல் போட விரும்பாமல் போனி டெய்ல் போட்டாள் அதுவும் வீட்டினர் கண்களுக்கு வித்தியாசமாக தென்படாதவாறு.

உள்ளே எதார்த்தமாக வந்த மைத்ரேயி “ஏண்டி ஒன்னு பின்னு இல்லையா போனி டெய்ல் போடு. எதுக்கு இப்படி அந்த முடியை கொடுமப்படுத்துற ?”

” இதுக்கு தான் நான்  வெட்டிக்கிறேனு சொன்னேன். மாதாஜி கேட்குதா? ” உத்ரா அங்கலாய்த்துக் கொண்டாள்.

பின்பு, எவ்வாறோ பேசி முதலில் சந்திக்கும் பொழுது தலை விரித்து செல்லாதே என்று கூறி , அவளே குழம்பி வழக்கம் போல் பின்னிலிட்டு சென்றுவிட்டாள்.

அவளும் மைத்ரேயியும் ஆட்டோவில் இறங்க, வெளியில் அவர்களை அழைக்க வந்த யமுனாவோடு பின்னிருந்த வந்த சங்கரனைக் (அபி தந்தை) கண்டு மனம் திக்கென்று ஆகியது இருவருக்கும்.

ஆனால், அவரோ மிகவும் மகிழ்வுடன் “வாங்க , வாங்க ” என மைத்ரேயியை மரியாதையுடனும், “வாடா, வாடா “என  நீ என் மருமகள், மகள் போல் தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார். யமுனா தான் நெளிந்தாள் தந்தையின் பேச்சில். ஆனால், மற்ற இருவரும் அவரின் சகஜமான பேச்சில் மகிழ்ந்தனர் .

மைத்ரேயி சிரிக்க, உத்ரா ” எஸ் டாடா ” எனக் கூற , இம்முறை மைத்ரேயி நெளிந்தாள். யமுனா சிரிக்க, சங்கரனுக்கு பேரானந்தமாக இருந்தது. அதன் வெளிப்பாடாக மருமகளின் தோளில் தட்டிக் கொடுத்தார்.

பின்பு அனைவரும் லிப்டில் ஏற , முன்னே நின்று கொண்டிருந்த உத்ராவிற்கு படப்படப்பு வெகுவாக இருந்தது. ஆனால், பட்டென்று செகண்ட் ஃப்ளோர் எனக் கூறி, லிப்ட் திறக்க, உத்ராவின் முன்னாள் அபிமன்யூ.

அவளின் கண்கள் அவனைக் கண்டு வெட்கி வேறு திசை திரும்புவது போல், பின்னால் நின்றுக் கொண்டிருந்த சங்கரன், யமுனா மற்றும் மைத்ரேயிக்கு வழி விட்டாள். பின்பு  எதார்த்தமாக பார்ப்பது போல் அவனைப் பார்க்க, அவனின் பார்வையில் எந்த சலனமும் இல்லாமல் அவளை மட்டுமே கண்டு கொண்டிருந்தது.

அவனின் கருநிறத்திற்கும், கருகருவென வளர்ந்திருந்த தாடிக்குள் அழகான நேர்த்தியான சிவந்த உதடு பளிச்சென தென்பட்டது. அதோடு அவனின் குண்டு கண்களும் இம்சையித்தது. தனது எண்ணத்தை அவளே அதிர்ந்து குனிந்துக் கொண்டே யமுனா மற்றும் மைத்ரேயியின் நடுவில் நின்றுக் கொண்டாள்.

” உத்ரா…. இவன் என் பையன் ” என சங்கரன் கூற, பொதுப்படையாக சிரித்தாள். அவன் சிரிக்கிறானா இல்லையா என்பது கூட தெரியவில்லை. அந்த அளவிற்கு அவனின் எதிர்வினைகள் இருந்தது.

அனைவரும் உணவகத்திற்குள் நுழைய, சங்கரன் ஒரு டேபிளிற்கு செல்ல, அனைவரும் பின்னோடு சென்றனர். பின்பு, யமுனா ஒரத்தில் அமர , அருகில் சங்கரன் அமர்ந்து கொண்டார். மைத்ரேயியைக் கண்டு எதிரில் அமர சொல்ல, அபி அருகில் இருக்கும் டேபிளில் இருந்து ஒரு நாற்காலியை எடுக்க செல்வதைக் கண்ட  உத்ரா, சட்டென்று மைத்ரேயியின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

பின்பு, பொதுப்படையாக சங்கரன் மற்றும் யமுனா உத்ரா மற்றும் மைத்ரேயிடம் கேள்வி கணைகளை தொடுக்க, உத்ராவிற்கு எப்படி பேச வேண்டும் என்பது போல் வாயை திறக்கக் கூட முடியவில்லை. அவளுக்கே அது ஆச்சர்யம் தான். அவனின் பார்வை வீச்சு இவளை இம்சித்தது.

இருந்தும் கடினப்பட்டு தலையை ஆட்டுவதும், ஒரு  வார்த்தையில் பதில் கூறுவதுமாக இருந்தாள். மைத்ரேயியும் அபிமன்யூவிடம் சில பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனிடம் நடுக்கம் இல்லை. தெளிவாக பதில் கூறிக் கொண்டிருந்தான். ஆனால், பார்வை என்னவோ அவளின் மேல் தான்.

பார்வையில் காதல் இருந்ததா என்று கண்டறிய முடியவில்லை. ஆனால், கண்ணியம் இருந்தது. இருவரின் பார்வை வீச்சுகளையும் புரிந்த இளசுகளுக்கு, பெரியவரான சங்கரன் எப்போதடா பேச்சை நிறுத்துவார் என்று இருந்தது. ஆனால், அவரோ உத்ராவிடம் வளவளத்துக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் உத்ரா வாயைத் திறக்க, “அங்கிள் .. ” அதே நேரம் ” அப்பா .. “என்ற  குரலும் ஒருங்கே கேட்டது. அனைவரும் உத்ராவையும், அபியையும் பார்க்க,  உத்ராவும், அபியும் கூட மாறி மாறி பார்க்க, அபி பார்வையில் சலனமில்லாமல் பேசு என்பது போல் அமைதியாகி விட்டான்.

உத்ராவிற்கு அவனின் பார்வை கொய்தது. காதல் தானோ என்று ஒரு மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஒரு நிமிடம் அவனின் கண்ணின் மொழியில் மெய் சிலிர்த்து விட்டாள். தன்னை மறந்து அமர்ந்து இருந்தவளை மைத்ரேயி நினைவுக்கு கொண்டு வர, உத்ரா சங்கரனிடம் திரும்பி ” உங்ககிட்டேயே அவ்வளவு கதையும் சொல்லிட்டா நாங்க என்ன பேசுறது ? ” எனக் சிரித்து கொண்டே கூற, மைத்ரேயி பயத்தில் வெடவெடக்க , யமுனா ஆச்சர்யத்தில் வெடவெடத்தாள்.

சங்கரன் சிரித்தார். அரை நொடி நிகழ்ந்த நிகழ்வில் அபி எழுந்து நின்றதும் உட்பட்டது. அவள் கூறியவுடன் சட்டென்று எழுந்து நின்றான். உத்ரா இம்முறை அவனை ஏற இறங்க பார்த்து விட்டு இவளும் எழ, சங்கரன் ” வந்து அரை மணி நேரமாச்சு. இப்பாவாச்சும் உங்க இரண்டு பேருக்கும் சொல்ல தோணுச்சே  “எனக் கூறி, அருகிலிருக்கும் வெயிட்டரிடம் இவர்களுக்கு முன்பே புக்கிங் செய்த இடத்தை காண்பிக்குமாறு கூறி விட்டு, இவர்களது உணவிற்கு ஆர்டர் செய்துக் கொண்டனர்.

மஞ்சள் லைட்டில் பட்டும் படாமல் தெரிந்த வெளிச்சத்தில் ஆங்காங்கே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு கருப்பு கண்ணாடி கதவைத் திறக்க, சில்லென்ற காற்று முகத்தில் அடித்தது. அவ்விடம் ரம்மியமாக இருந்தது.

அதனை ரசித்துக் கொண்டே இவள் அவன் கூட செல்ல, இருபதுக்கும் மேற்பட்ட டேபிள்களில் ஒரு ஈ கூட அமரவில்லை என்பதை உணர்ந்து அவள் முகத்தில் ஈயாடவில்லை. இத்தகைய உணவகத்திற்கு அவள் வந்து பழக்கம் இல்லாததால் தனது உடையை சரி செய்து கொண்டாலும் மனதில் தன்னையும், தனது ஒப்பனை மற்றும் ஆடைகளும் இவ்விடத்திற்கு  ஒப்பாதவாறு தான் இருந்தது.

அதனை வெளியில் காட்டக்கூடாது என்று நினைத்தாலும் முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது. ஒரு வழியாக ஒரு ஓரத்தில் இருவரும் நேர் எதிரில் அமர, வெயிட்டரிடம் ஜூஸ் மற்றும் கூறி போதும் என்று கூறியவனை “அடப்பாவி . சாப்பாடு கூட வாங்கி தர மாட்டுறான் . கஞ்சப் பய ! இப்போ நம்மளும் ஜுஸ் தான் சொல்லனுமா ? சொல்லுவோம் சொல்லி தொலைப்போம் ” என மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டே ஜூஸை ஆர்டர் செய்து விட்டு, இம்முறை அவனின் கண்களை நேராக கண்டாள். அவனும் கண்டான். எவ்வளவு நேரம் நீண்டது எனத் தெரியவில்லை. அவனின் அலைப்பேசி அழைத்த பின்பு தான் சுயத்திற்கு வந்தனர்.

அவன் காலை கட் செய்யாமல் அட்டெண்ட் செய்ததே ஒரு மாதிரியாக இருக்க, பேசி விட்டு “ஒரு நிமிடம்  ” எனக் கூறி விட்டு , அவன் பாட்டிற்கு சென்று விட்டான்.

“இப்போ இவன் திரும்பி வருவானா ? மாட்டானா? நம்பலாமா? நம்ப கூடாதா? ஒன்னும் புரியலையே “என வடிவேலு தோணியில் நினைக்க, ஜீஸும் வந்து விட்டது.

“இவன் வர வரைக்கும்  குடிக்க வேற கூடாதா? ச்சை…. என்ன வாழ்க்கை இது ? இருந்தாலும் ஆளு செம்மையா இருக்கான். ஐ….. நமக்கும் லவ்வர் இருக்கு ” என மனதிற்குள் அவளாக கற்பனைச் செய்ய , அவன் வந்தான் கையில் ஒரு கவருடன்.

அதனை அமரும் முன் அவளிடம் கொடுக்க, மறுக்காமல் சிரித்தே கொண்டே வாங்கியவள் “நான் வாங்குன கிப்ட் அக்கா கிட்ட  இருக்கு. அங்க போகும் போது தரேன்.”

“ஓகே ஓகே “எனக் கூறி தலையை அசைத்தான். மறுபடியும் அமைதி . அதனை கலைக்கும் விதமாக அவனின் அலைபேசி அடித்தது.

“மீண்டும் மீண்டுமா ” என இவள் நினைக்க, இம்முறை அதனைக் கட் செய்தவன், டேபிளின் அருகில் அமர்ந்து, கையை டேபிளில் வைத்து, ” உன்னை பத்தி எதாச்சும் சொல்லு ? ” எனக் கேட்டவுடன் , மனம் சில்லிட்டது.

“நானா ….. நான் என்ன சொல்ல ? நீங்க கேளுங்க சொல்லுறேன் ? ” என அவள் வெளியில் பவ்யமாக கூற, மனதிற்குள்ளோ “டி…. என்ன பண்ணுற ? “என மனசாட்சி கேட்க, ” எனக்கு வேணும் …. அவனுக்கு ஏத்த மாதிரி நான் போய்க்குவேன். நீ கம்முனு இரு ” ,

“இது உன் இயல்பே இல்லை “என மனசாட்சி கேட்க, “இனிமே அப்படி மாத்திக்கலாம் ” என இவள் அவனுக்கு துணையாகவும் , மனசாட்சிக்கு வினையாகவும் பதில் அளித்தாள்.

” ஹம்ம்…. பேரு உத்ரா தெரியும்… என்ன படிச்சிருக்க? “

” நான் இன்ஜினியரிங் குமரகுருல முடிச்சிருக்கேன் .  கம்யூட்டர் சயின்ஸ் தான். வேலை கிடைச்சது அப்பா விடலை. அப்புறம் வரைய ரொம்ப பிடிக்கும் . இன்ஸ்டாகிராம்மில பேஜ் கூட இருக்கு “

“ஓ….. அப்படியா ” என இவன் ஆர்வமாக  கேட்க, இவளுக்கு அது புத்துணர்ச்சியாக மாறி தனது பேஜைப் பற்றிக் கூறினாள். பின்பு, அவன் “நான்  மும்பைல படிச்சேன் . அப்புறம் உற்பத்திக்காக  நார்த் சைட் போய் படிச்சேன். அப்பறம் இங்க அப்பா, சித்தப்பா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு தனியா பிஸ்னஸ் ஆரம்பிச்சுட்டேன். நம்ம பேமிலி பிஸ்னஸ் தான் பண்ணுறாங்க. உனக்கு அது சரியா வரும்ல? “

அவன் உன்னை பிடித்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொன்னதை நினைத்து அவள் உச்சத்திற்கே சென்று விட்டாள். ஆனால், அவன் சாதாரணமாக தான் கூறினான். அதோடு ” உனக்கு என்ன ஆசை? அத கேட்காம நானா பேசுறேன் “

“நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் ” அவனை இம்பரஸ் செய்வதற்காக சொல்ல, அபிக்கு தனிச்சையாக செயல்பட மாட்டாளோ என்கின்ற எண்ணம் மெலிதாக தலை தூக்கியது. இருந்தும்  அவளின் மேல் உள்ள ஈர்ப்பு எதுவோ செய்ய, பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி விட்டான் . பின்பு அனைத்தும் பேசி முடித்து விட்டு சங்கரன் இருக்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர். சம்மதம் என்று இருவரும் கூறிவிட்டனர். இருவர் வீட்டாருக்கும் சந்தோஷம் தாளவில்லை. 

இறுதியாக கிளம்பும் நேரம் , அபி உத்ராவின் அருகில் சென்று போன் நம்பரை பகிர்ந்ததோடு அனைவர் பார்த்தாலும் இருவரையும் தனியாக செல்ஃபியாக எடுத்துக் கொண்டான். இவளும் அவனுக்குரிய கிஃப்டை கொடுத்தாள்.

லாஜ்ஜிகல் உலகத்தில் இருக்கும் அபியும் , கிரேய்டிவ் உலகத்தில் வாழும்
உத்ராவும் இனைவதற்கு காதல் ஒரு பாலமோ ?

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
23
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. உத்ரா அபிக்காக மாற நினைக்கிறா அது அவளுக்கு செட்டாகுமா??

      1. Author

        காத்திருந்து பார்ப்போம்

    2. உத்ரா கவுந்துட்டாள்