Loading

மனம் 6

அடுத்த நாள் காலை எழுந்த முகில் தனது அறையை சுத்தம் செய்து விட்டு, அழுக்கு துணிகளை கொண்டு வந்து கீழே அதன் இடத்தில் போட்டு விட்டு குளித்து விட்டு வந்தான்.

அதற்குள் அவன் தாயும் சமைத்து இருக்க காலை உணவை அவரவர் நேரத்திற்கு தக்க உண்டனர். அதன் பின் அன்றைய நாளை டிவி பார்த்து போன் பார்த்து என்றே ஓட்டினான் முகில்.

சனி கிழமை இப்படி அப்படி என்று கழிந்து அடுத்த நாளும் வந்து விட்டது. ஞாயிறு அன்று அசைவ உணவை சாப்பிட்டு விட்டு அசைய முடியாமல் உருண்டு கொண்டிருந்தனர் நிவியும், முகிலும்.

டிவியில் பட்டி மன்றம் ஓடி கொண்டிருக்க வெங்கட கணபதி, கண்ணதாசன் மற்றும் ருக்மணி பார்த்து கொண்டிருந்தனர்.

“என்னங்க இன்னிக்கு நிவிக்கு மேட்ரிமோனியில் பதிவு பண்ணிடலாமா??” என்று ருக்மணி அதை பற்றி நினைவுப்படுத்தினார்.

கணபதியிடமும், நிவி மற்றும் முகிலிடமும் சொல்லி விட்டு அந்த செயல்களில் ஈடுபட்டனர் அனைவரும்.

“சரி மா பண்ணிடலாம்” என்று கணபதி சொல்ல, “நான் போய் காலண்டர் எடுத்துட்டு வரேன்” என்று ருக்மணி சென்று எடுத்து வந்தார்.

அதை பார்த்து விட்டு, “இன்னும் ஒரு அரை மணி நேரத்துல பண்ணிக்கலாம்” என்று வெங்கட கணபதி சொன்னார்.

அதன்படி பதிவு செய்ய, பெயர் என்ன?? அம்மா பெயர்?? அப்பா பெயர்?? அவர்களின் வேலை?? முதல் திருமணா?? மறுமணமா?? உடன் பிறப்புகள் எத்தனை?? அவர்கள் திருமணம் ஆனவர்களா?? நிறம் என்ன?? உயரம் என்ன?? கல்வி தகுதி, வேலை, வருமானம், சொத்துபத்து, ஜாதகம் என அப்பப்பா!! எத்தனை எத்தனை கேள்விகள். எதற்கடா இத்தனை கேள்விகள் என்று இருந்தாலும், அத்தனைக்கும் பதிலளித்து, இறுதியாக எதிர்பார்பில் வந்து நின்றது.

அதற்கு அவர்கள், “சென்னையில் வேலை/பிசினஸ்” என்று மட்டும் போட்டு விட்டார்கள்.

“ஏம்மா… சொந்த வீடு காடு தோட்டம் இத்யாதி இத்யாதி எல்லாம் வேண்டாமா??” என்று கேட்டான் முகில்.

“இரண்டு பேரும் வேலைக்கு போவாங்க… அவங்க சம்பளமே அவங்களுக்கு போதாதா எல்லாம் பண்ணிக்க??” என்று கேட்டார் ருக்மணி.

“அப்ப அந்த மாப்பிள்ளைக்கு அவங்க குடும்பத்துல எதாவது கடமை இருந்ததுனா??” என்று அவன் இழுக்க, “இருந்துச்சினா… அஞ்சு வருடத்துல பண்ணறத பத்து வருடத்துல பண்ணிப்பாங்க” என்று முடித்தார் ருக்மணி.

“ஏன் சென்னையில வேல?? வேற ஊருல இருந்தா ஆகாதா??” மீண்டும் முகில் கேட்க, “அக்காவுக்கு இங்க தான வேல… வேற பக்கம்னா இரண்டு பேருல யாராவது ஒருத்தர் மாறனும். நீ பண்ணு நான் பண்ணுனு இருக்கும். நமக்கும் கொஞ்சம் பக்கமா இருக்கும் எதாவதுனா பாக்க” என்று தன் எண்ணத்தை கூறினார்.

“இப்ப நீ பாத்துடுவ அதுக்கு அப்பறம் அவங்க வேற எங்கையுமே வேலைக்கு மாற மாட்டாங்களா??” என்ற முகில் அடங்குவதாய் இல்லை.

“உங்க அக்காவே ஒன்னும் சொல்லல உனக்கு என்ன டா??” என்று மீண்டும் அவர் கேட்க, “அவளுக்காக நான் தான கேக்கனும்!!” என்று சட்டையை தூக்கி விட்டு கொண்டு சொன்னான் முகில்.

அதை கேட்டு எல்லோருக்கும் ஆனந்தமாக இருந்தாலும் அவனை கதறடிக்கவென்றே, “அப்பறம் காலைல மட்டன் சூப் எலும்புக்கு சண்ட போட்டது எதுக்காம்??” என்று கணபதி கேட்க, “அது சோறு… சொத்த கூட பங்கு கொடுத்துடுவேன் ஆனா சோத்துல நெவர்” என்று தோரனையாக சொன்னான் முகில்.

“எனக்கு சொத்து எல்லாம் வேண்டாம். எலும்பு தான் வேணும்” என்று நிவி மேலும் சொல்லி கொண்டு வர, “அந்தா அங்க குப்பையில தான் இருக்கு எலும்பு போய் பொறுக்கி திண்ணு” என்று முகில் சொல்ல, அவனை அவள் அடித்து வைக்க, அதற்கு அவன் “எறும்பு கடிச்சா கூட கொஞ்சம் வலிக்கிற மாறி இருக்கும்” என மீண்டும் அவளை நக்கல் பண்ண என அங்கே ஒரே கலவரமாக தான் இருந்தது.

அந்த பேச்சுகளின் ஊடே அந்த படிவத்தில் கேட்டதை எல்லாம் நிரப்பி, எந்த புகைபடத்தை வைப்பது என அதற்கு ஒரு குட்டி கலாட்டாவும் பண்ணி பிறகு பணத்தையும் கட்டி முடித்து விட்டு மதிய உணவையும் காலி செய்து விட்டு குட்டி தூக்கம் போட்டு எழுந்தனர் அனைவரும்.

அன்று மாலை ஒரு நான்கு மணியளவில் முகிலுக்கு போன் செய்த சக்தி, “டேய் மச்சான்… இன்னிக்கு ஷட்டில் காக் (இறகு பந்து) விளையாட கோர்ட் புக் பண்ணி இருக்கு… 6 டூ 7 அஆஇஈ ஸ்டேடியம்ல… சரியான நேரத்துக்கு வந்து சேரு” என்று சொன்னான்.

“என்கிட்ட கேக்காம எதுக்கு புக் பண்ண?? எனக்கு வேல இருக்கு!! என்னாலலாம் வர முடியாது. நான் ரொம்ப பிஸி” என்று பிகு செய்தான் முகில்.

“அப்படி சார்வாள் என்ன பிஸி… புக்லாம் ஏற்கனவே பண்ணியாச்சி வந்து சேருர வழிய மட்டும் பாரு” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் சக்தி.

அதே போல் ஸ்டேடியத்துக்கு விளையாட சென்றார்கள் சக்தி, கணேஷ் மற்றும் முகில். விஷாலையும் அழைத்து இருந்தனர். அவன் பணியின் காரணமாக வரவில்லை என்று சொல்லி விட்டான். அவனது பணியோ வற்புறுத்தி அழைக்க முடியாத போல இருந்ததால் சரி என ஒப்பு கொண்டனர் அனைவரும்.

விஷால், முகிலின் பள்ளி தோழன். பல்மோனாலஜி (Pulmonology – நுரையீரல் மருந்துவம்) மருத்துவராக இருக்கிறான். முகிலின் மூலமே இவன் இவர்களின் நட்பு வட்டத்தினுள் வந்தான்.

கணேஷ் கார்க்கை(cork) சர்வ் செய்ய, அதை எதிர் கொண்டதோ முகில் தான், ஒருவர் மாற்றி ஒருவர் ஓடி ஓடி அடித்து அந்த கார்க்கை தவிக்க விட்டு கொண்டே பேசி கொண்டிருந்தனர். சக்தி அங்கே அமர்ந்து அவர்கள் விளையாடுவதை பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு ஜோடி இல்லாததால், மூவரும் மாற்றி மாற்றி விளையாட முடிவு செய்திருந்தனர்.

“என்னடா நரேன்கிட்ட பேசிட்டயா?? யாரு எவருன்னு தெரிஞ்சதா??” என்று ஆர்வமாக கேட்டான் கணேஷ்.

“என்ன கேக்கனும்??” – புரியாமல் குழப்பமாக முகில் கேட்டான்.

“என்னடா சொல்லறான் இவன்??” என்று அதிர்ச்சியான கணேஷ் தன் அருகில் வந்து விழுந்த சிறகு பந்தை கூட கவனிக்காமல் சக்தியிடம் சொல்ல, “உண்மைய சொல்லு எங்களுக்கு தெரியாம வேற யார் கூடவாவது போய் கிரிகெட் விளையாண்டயா?? மண்டையில அடிபட்டு விஜய் சேதுபதி மாறி மறந்துட்டயா??” என்று சக்தி கேட்டான்.

“டேய்… பைத்தியமாட்டாம் உலறாம என்னனு சொல்லுங்கடா” முகில் சொல்ல, “யாருடா பைத்தியம்??” என்று எகிறி கொண்டு கேட்டவர்கள், “ஆமா உன் கூட ப்ரெண்ட்ஸ்ஆ இருக்கோம்ல நாங்க பைத்தியம் தான்” என்று சொன்னார்கள்.

“டேய்… என்னனு சொல்லலைனா பேட்டாலயே அடிச்சி சேது விக்ரம் மாறி கதற விட்டுடுவேன்” என்று முகில் கோபமாக கேட்டான்.

“டேய்… உன் டாவுடா… உன் ஆளு” என்று சக்தி சொல்ல, “நேத்து பாத்தமேடா” என்று கணேஷ் வேறு எடுத்து கொடுத்தான்.

சட்டென அவளின் முகம் நினைவு வர, ‘ஆமா… எப்படி மறந்தேன். அது அந்த நேர நினைப்பாய் இருக்குமோ!!. சின்ன ஈர்ப்பு’ என்று அதை தவிர்த்தவன், “லூசுல விடுங்க. அதொன்னும் அவ்ளோ பெரிய மேட்டர் இல்ல” என்று சொல்லி விட்டு, “கொடுத்த காசுக்கு கொஞ்சம் விளையாடுவோமா??” என்று கேட்டு அடுத்த அரை மணி நேரம் வியர்க்க விருவிருக்க விளையாடி விட்டு சரியாக 7 மணிக்கு வெளியே வந்தனர். இல்லை என்றால் அடுத்து விளையாட வருபவர்கள் அடித்து துரத்தி விட்டு விடுவார்கள் அல்லவா…

வெளியே வந்தவர்களில் சக்தி, “மச்சி ஒரு டீ குடிச்சிட்டு போலாமா??” என்று கேட்க, மற்ற இருவரும் சரி என்றனர்.

சட்டை நனைந்து ஈரமாய் இருக்க, தலை முடியும் கூட ஈரமாய் தான் இருந்தது. ஆனால் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தார்கள் மூவரும். ஏதோ பேசி சிரிக்க, அய்யோ அத்தனை அழகு. அழுக்கு பசங்களாய் இருந்தாலும் அழகு பசங்களாய் தான் இருந்தனர். வழி போக்கர்களில் சிலர் கூட இவர்களை திரும்பி பார்த்து விட்டு தான் சென்றனர்.

இந்த நேரத்தில் விதி உன்னை சும்மா விடுவேனா என்று எண்ணி தனது விளையாட்டை தொடங்கியது. முகிலுக்கு மேகம் அல்லது வளிமண்டலத்தில் உள்ள நீர் துளிகள் என்று பொருளாம். அந்த குளிர்ச்சியான முகிலையே, சூரியனை போல் தகிக்க செய்ய முடிவெடுத்து அவளை அவனின் கண் முன் காட்டியது. அவளை பார்த்த கணம், அடங்கியிருந்த எண்ணங்கள் மீண்டும் எழ அவனுள் அவளை பற்றிய ஆராய்ச்சி தொடங்கி விட்டது.

அங்கே இருந்த பழசாறு கடைக்குள் நுழைந்தாள் அவள். தனியாய் அல்ல ஒரு ஆணுடன். அவனுடன் தான் இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்தாள். அவள் அவனை கடந்த ஓரிரு நொடிகளில் அவள் வதனத்தை முழுதாய் ஸ்கேன் செய்து விட்டான் முகில். வீட்டில் இருக்கும் போது அணியும் இரவுடையை தான் போட்டு இருந்தாள். வெள்ளை சட்டை அதில் ஏதோ ஒரு பொம்மை அச்சிடப்பட்டு இருந்தது. அதை ஒரு துப்பட்டாவை போட்டு மறைத்து இருந்தாள். காப்பி கொட்டை நிற கால் சட்டை, அதில் அங்கங்கே வெள்ளை புள்ளிகள். தலையில் முடியை பின்னவில்லை. ஒரு கொண்டை தான் போட்டு இருந்தாள். சாதாரணமாய் பார்பவர்கள் ‘ஜஸ்ட் லைக் தட்’ என கடந்து விடுவார்கள். ஆனால் முகிலுக்கு அது முடியுமா??

அவளை ரசித்த ஒரு மனதிடனும், அவளுடன் வந்தது யாரென்று அறிய துடிக்கும் மனதுடனும் அவள் பின்னயே தனது தோழமைகளை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்து விட்டான் இவனும். ஒரு வெறி அவனுக்குள், அது யார் அவளுக்கு என்று அறிய வேண்டி அவனை தூண்டி கொண்டே இருந்தது.

மாறும்…

 

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…

 

நன்றி!!!

 

இங்ஙனம்
திரா ஆனந்த்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சாருக்குள்ள அப்போ அப்போ அம்பியும் ரெமோ மாத்தி மாத்தி வந்துட்டு போறான். அது பெரிய மேட்டர் இல்ல அப்படி சொல்லிட்டு இப்போ என்னலாம் பண்றான் ❤️❤️❤️❤️super akka waiting next epi ❤️❤️

      1. Author

        ரொம்ப நன்றி மீரா மா 🥰😍🥰