104 views

காலையில் , எண்ணெயில் குளித்த வடையை வழுக் வழுக்கென்று உண்டது…வயிற்றை பிரட்டி விட்டது. அதன் விளைவு தான் இது. ஒரு பாதுகாப்பிற்காக எடுத்து வைத்திருந்த பொலித்தீன் பை இருந்ததால் பிரச்சினை இல்லாமல் போனது. ஆனால் அவள் தான் சோர்ந்து போய் இருந்தாள். கண்கள் வேறு கலங்கி இருந்தன. அத்தோடு அவன் முன் தான் இருக்கும் நிலை உணர விம்மி விம்மி அழுதாள்.

 

அவளின் தவிப்பை உணர்ந்தவன் ,” ஹே கேர்ள்! ரிலாக்ஸ். இது சாதாரண விஷயம் தான். இன்னும் ஐஞ்சு நிமிஷத்தில சாப்பிடுறதுக்காக நிப்பாட்டுவாங்க. அங்க போய் ரிஃபெரஷ் ஆகலாம். ஓகே?” என்று தன்மையாக பேசினான். அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அமைதி கொள்ளச் செய்தது. மெதுவாக நிமிர்ந்து அவனை பார்க்க  முகத்தில் எந்த அருவெறுப்பும் தெரியவில்லை. மாறாக ஒரு அமைதி. அந்த ஒரு நிமிடம் மாருதியை வியக்கச் செய்தது. 

 

அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் பார்த்தவனுக்கு ஒரு குழந்தையாய் தெரிந்தாள். தன் பையிலிருந்த வெட் டிஷுவை எடுத்து அவளிடம் தந்து முகத்தை துடைக்கச் செய்தான். 

 

“தேங்க் யூ”என்று சன்னமாக கீழே குனிந்தபடியே சொல்ல அவன் முகத்தில் அதே வசீகர புன்னகை. 

 

“இட்ஸ் ஓகே”என்றவன் பேரூந்து நிற்கும் நேரத்திற்காக காத்திருந்தான். 

 

நெடுநேர பயணத்தில் பேரூந்தும் ஓய்வு பெற பயணிகள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டனர். சிலர் இருக்கையில் நன்றாக சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். 

 

“போலாமா?”

 

“ம்ம்” என்று அவனோடே கீழ் இறங்கினாள். 

 

“அதோ…அங்க போய் ரிஃபெரஷ் ஆகலாம்” என்று ஒரு இடத்தைக் காட்டினான். அவள் தயக்கமாய் அவன் முகம் பார்க்க ” பயப்படாதீங்க. அங்க ஒரு ஆன்ட்டி போறாங்க பாருங்க. அவங்களோட போங்க. நான் இந்த கடைல வெயிட் பண்றேன்” என்றான்.

 

மாருதி சம்மதாய் தலையசைத்து அவன் காட்டிய இடத்திற்கு சென்றாள். 

 

காத்திருந்தவனுக்கு, சற்று நேரம் முன் அவளைப் பார்த்தது நினைவு வந்தது. 

அன்னையிடம் சாக்லெட் கேட்டு அடம் பிடித்த குழந்தையை சமாதானப் படுத்திய போது தன்னை யாரோ குறு குறு வென்று பார்ப்பது போல் உணர்ந்தான். ஆனால் நிமிரும் போது யாரும் தெரியவில்லை. இயல்பாக தோளைக் குலுக்கி விட்டு நடந்து தரிப்பிடத்தை அடைந்த போது மீண்டும் அதே பார்வை…ஹெட்ஃபோன்ஸை எடுத்து மாட்டி பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க சற்று பதட்டமாய் கெமராவை கழுத்தில் மாட்டி கெத்தாக நிற்கிறேன் என்று காமெடி செய்து கொண்டிருந்தவள் கண்ணில் விழ முதலில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அதை அவள் அறியும் முன் திரும்பிக் கொண்டான். 

அவள் தன்னையே கடிந்து கொள்வதும் பேரூந்து வரும் வழியை பார்ப்பதுமாக நிற்பது தெரிந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பேரூந்தில் ஏறியதும் தன் இருக்கையின் இலக்கத்தை தேடும் போது அதுவோ அவளின் அருகே இருக்கிறது என்று தெரிந்தவுடன் மனதின் ஒரு மூலையில் மகிழ்ச்சியாய் உணர்ந்தான். ஆனால் அவளோ யாரையோ தேடுவதும் பின் திரும்பிக் கொள்வதுமாக இருக்க சற்று ஏமாற்றமாய் உணர்ந்தான். பின் அவளை விலகி அமர சொல்லும் போது அவள் விட்ட ஜொல்லு , தன்னைத்தான் தேடினாள் என்று பறைசாற்ற உள்ளுக்குள் பூரித்து போனான். தன்னை ஒருவள் தேடுகிறாள் என்பதே ஒரு மகிழ்வை கொடுத்தது. எத்தனையோ பெண்களை கடந்து வந்தவன் தான் ஆனாலும் ஏன் மனம் அவளிடம் தஞ்சம் அடைகின்றது என்று புரியவில்லை.

 

யோசித்து நின்றிருந்தவனை அவளின் மென்கரம் தட்டி தெளிய வைத்தது. 

“எல்லாம் ஓகே வா? ஃபீலிங் பெட்டர்?”

 

“ம்ம்” என்றவாறு கைகளை இரண்டையும் இறுக்கி கட்டிக் கொண்டாள். அசதியும் குளிரும் போட்டி போட கைகள் நடுங்கத் தொடங்கியது. 

 

அவளின் நிலையை அறிந்தவன் “ஓஹ்…நோ…” என்று அவளின் வலக் கரத்தை இறுகப் பற்றி கடையின் அருகே அழைத்துச் சென்றான். சூடாக இரண்டு டீயும் பன்னும் வாங்கி அவனுக்கொன்று எடுத்து அவளுக்கும் கொடுத்தான். 

“வேணாங்க”

 

“குடிங்க. குளிருக்கு நல்லா இருக்கும். “

 

“இல்லை பயமா இருக்கு. மறுபடியும் வாந்தி வந்தா?”

 

“இனி ரோட்ல வளைவு குறைவா தான் இருக்கும். அதனால பயப்பட வேண்டாம். ” என்றும் தயங்கியவளை பார்த்து ஒரு புருவத்தை உயர்த்தி முறைக்க உடனே எடுத்து குடித்தாள். அவளின் வேகத்தைப் பார்த்து “மெதுவாங்க….மெதுவா…” என்க அசடு வழிந்தபடி குடித்து முடித்தாள்.

 

“ஆல் ஓகே? கிளம்பலாமா? பஸ் எடுக்க போறாங்க னு நினைக்கிறேன். “

 

“ஓகே…போலாம்” என்று அவனோடு சேர்ந்து நடந்தாள். உள்ளே ஏறி அமர முழுதாக இரண்டு நிமிடம் கூட இல்லை. ஆனால் இருவரும் மூன்று நிமிடத்திற்கு மேல் நடந்து சென்றனர். ஏனோ இந்த பாதை நீளாதோ என்று தோன்றியது. 

 

இருக்கைக்கு வந்தவன் தன் மொபைலை எடுத்துப் பார்க்க பத்து மிஸ்ட் கால்கள். திடீரென்று தலையில் கைவைத்தவனை அவள் கேள்வியாய் பார்க்க அவனோ ஒரு நிமிடம் என்று சைகையால் காட்டி அழைப்பை தொடுத்திருந்தான். 

 

“சொல்லு மச்சான்”

 

“சாரி சாரி. சாப்பிட இறங்கி இருந்தேன். அதான் பாக்கல.” 

 

“அது…சும்மா தோனுச்சு அதான் இறங்கி வந்து சாப்பிட்டேன். “

 

அவன் பேசுவதை கவனிக்காவிட்டாலும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

“சரி….. சரி…. இன்னும் ஒரு ஹாப் என்ட் ஆர் ல வந்துடுவேன். நீ இப்போ கிளம்பினா சரியா இருக்கும். “

என்று கடைசியாக சொன்னது மட்டும் கேட்க ‘அவ்ளோ தானா?’ என்று தோன்றியது. 

 

‘நாம பெயரைக் கூட கேக்கலயே’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளை பார்த்து “என்ன யோசனை பலமா இருக்கு?” 

 

“அது… உங்க பேரு???”

 

“இதை கேக்க தான் இவ்ளோ நேரமா? இளம்பரிதி”

 

“உங்க  நேம் ஆ? அழகான தமிழ் பெயர்”

 

“தேங்க் யூ. நீங்க மிஸ்???”

 

“மாருதி” என்க அவன் ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தான். 

 

“என்னாச்சு? பெயர் வித்யாசமா இருக்குனா?”

 

“இல்லை இல்லை ஒன்னும் இல்லை” 

 

“ம்ஹும்…. சரி விடுங்க. நீங்க எங்க பயணம்?”

 

“நுவரெலியா தான்.” என்றவுடன் உள்ளுக்குள் மகிழ்ந்தான். வெளியில் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான்.

 

“வேலையா வந்திங்களா?”

 

“ஆமாங்க.  அந்த குருவி மண்டையன் குடுத்த வேலை.” என்று தன் பயணத்தின் ஆதி முதல் அந்தம் வரை சொல்லி முடித்து விட்டாள். இவளின் படபட பேச்சைத் தான் முன்பே இரசித்தவனாயிற்றே. எங்கே மீண்டும் இவள் குரல் கேட்காதா என்று ஏங்கியவனுக்கு இன்று விருந்தே படைத்து விட்டாள். 

 

“சரி நீங்க?”

 

“நான்… மார்க்கெட்டிங் ஹெட் ஆ வெர்க் பண்றேன். ஒரு மாசம் லீவ் போட்டு என்ஜாய் பண்ணலாம் னு வந்து இருக்கேன்”

 

“ஓ… சூப்பர். ” என்று இப்படியே இருபது நிமிடங்களுக்கு கதை தொடர்ந்தது. ஒவ்வொரு பேச்சிற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை ஆனால் தொடர்ந்தது. 

இருவருக்கும் முழுதாக ஒருவரையொருவர் தெரியாது. ஆனால் ஒரு அழகிய நட்பு உருவாகியது. இடம் வந்ததும் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது 

மாருதி,”எப்போ மீட் பண்ணலாம்? ” என்க ஒரு நிமிடம் நின்று அவளை அமைதியாக பார்த்தான்.

 

“இல்லை…ஃபோன் நம்பர் கூட குடுக்கலையே” என்று தயங்கி கேட்க

 

“வேண்டாம். விதி நம்மல கண்டிப்பா மீட் பண்ண வைக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம். எனக்கு இந்த ஃபீல் பிடிச்சிருக்கு. ஆனா அது இன்னும் ஆழமா மாறனும் னு ஆசை படுறேன். ஓகே?” என்றான். பாவம் இவள் தான் ‘ஃபோன் நம்பர் தானே கேட்டேன். அதுக்கு ஏன் இவ்ளோ பேசுறாங்க’ என்று விழித்துக் கொண்டிருந்தாள். 

 

அவளின் தலையில் வலிக்காதவாறு கொட்டி ” கண்டிப்பா திரும்பவும் மீட் பண்ணுவோம். ஆனா இப்போதைக்கு இல்லை. பாய். டேக் கேயர் ” என்று அவளை கடந்து விட இவள் தான் கொஞ்ச நேரம் புரியாமல் நின்று பின் தன் பயணத்தை தொடர்ந்தாள்.

 

—————————————————————————-

 

“ஏங்க இந்த ஒரு வாட்டியாச்சும் அவளை வீட்டுக்கு கூப்பிடுவமே. பாவம்ங்க. புள்ளை தனியா என்ன கஷ்டப் படுதோ” என்றவரை கோபமாய் உறுத்து விழித்தார்  சிவனேஷ்வர்.

 

“இங்க பாரு. நம்ம பேச்சை கேட்காம தானே வீட்டை விட்டு வெளிய போனா? பட்டுட்டு வரட்டும். அப்போ தான் நாம ஏன் சொன்னோம் னு புரியும். அதுவரைக்கும் நீ அவகிட்ட பேச கூடாது.” என்று மாடிக்குச் செல்ல பாக்கியவதி கவலையாக தன் மாமனாரைப் பார்த்தார்.

 

“கவலை படாத மா. பேத்தி விட்ட சவால் ல கண்டிப்பா ஜெயிச்சுடுவா.  அவ என்னென்ன கஷ்டம் படுறாலோ னு தான் மனசு தவிக்குது. ஆனா நம்பிக்கை இருக்கு. உன்னை திரும்ப வந்து பாக்க வேண்டியே கடுமையா உழைப்பா. “

 

” என்னவோ மாமா. நான் அந்த ஆண்டவன் மேல தான் பாரத்தை போட்டுருக்கேன்” 

 

“இந்த கூறு கெட்ட மனுசன் தான் இப்பிடி பேசறார் னு பாத்தா அவளும் இவரை மாதிரியே வீம்பு பிடிச்சு தான் சுத்துறா”

 

“ஹா ஹா” என்று இரண்டு மூன்று பற்கள் விழுந்த வயசிலும் சிரித்தவர் கண்களில் சிறு ஏக்கம் எட்டிப் பார்த்ததோ என்னவோ.

 

பாக்கியவதியோ தன் மகளின் ஆளுயர படத்தை ஒரு முறை பார்த்து விட்டு சமையலறைக்குச் சென்றாள். 

 

இங்கு அவரின் மகள் மாருதியோ குளிரில் நடுங்கிய படியே பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். கூடவே அவனோடு இருந்த நினைவுகளை மனப்பெட்டகத்தில் அடுக்கிக் கொண்டிருந்தாள். 

 

தொடரும்…..

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  2 Comments

  1. Vino Malar

   பாரேன் அவ தான் அவனுக்கு தெரியாம சைட் அடிக்கறானு பாத்தா இளா அவள விட கேடியா இருக்கானே.. 😉😉 மாருதி யாருனு இளாக்கு ஏற்கனவே தெரியும் போல இருக்கே🤔 சீக்கிரம் மீட் பண்ணட்டும்.. சவால்ல ஜெயிக்க மாருதி தீயா வேலை செய்யணும் போல..

   அருமையான பதிவு..💐💐