Loading

இது மாயவலை அல்லவா…

மாயவலை 01…

 

இருள் கவிழ்ந்திருந்த அந்த மாலை வேளையில், வழக்கமான முறையில் இயங்கிக் கொண்டிருந்தது, அந்தக் காவல் நிலையம். ஒரு அதிகாரியின் முன்பு, தளர்ந்து போய் ஒருவர் அமர்ந்திருக்க, அவர் அருகே கண்ணீர்த் தடங்களுடன், விசும்பியபடி அமர்ந்திருந்தார் ஒரு பெண்மணி.

இரு இளைஞர்களும், ஒரு இளம் வயது பெண்ணும் அவர்களின் பக்கவாட்டில் நின்றிருந்தனர்.

“பொண்ணு பேர் என்ன?” அந்த காவலதிகாரி கேட்க,

“வைஜெயந்தி” மெல்லிய குரலில் சொன்னார் அந்த மனிதர்.

“வயசு?”

“இருவத்தி ஒன்னு”

“எப்போ இருந்து காணோம்?” விசாரணைத் தொனியில் அவர் கேட்க,

“நேத்து சாயந்திரம் வெளில போனவ சார். இன்னும் வீட்டுக்கு வரல…” சொல்லும்போதே தொண்டை அடைத்தது அந்த மனிதருக்கு.

“என்ன பண்ணிட்டு இருந்தா?”

“பி.இ ஃபைனல் இயர் படிச்சுட்டு இருந்தா”

“ம்ம், எங்க?”

“ஸ்ரீமதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி”

“பொண்ணு ஃபோட்டோ வச்சுருக்கீங்களா?” நெற்றியைத் தேய்த்தபடி அவர் கேட்க,

“இருக்கு சார், இந்தாங்க” என மொபைலைக் கொடுத்தார் அவர்.

அதனை வாங்கிப் பார்த்தவர், “அந்தப் பொண்ணு ஃபோட்டோ குடுக்க சொன்னா, இங்க நிக்குற பொண்ணு ஃபோட்டோவக் குடுக்குறீங்க?” என,

அங்கு நின்றிருந்த பெண், “நாங்க ட்வின்ஸ் சார். அவ என் அக்கா…” என்றாள்.

“அது வேறயா? ம்ம், அந்த பொண்ணு யாரையாச்சும் லவ் பண்ணிட்டு இருந்துச்சா?”

“ஐயோ, அதெல்லாம் இல்ல, சார்”

“இருந்தா மட்டும் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கவாப் போகுது?”

“என் பொண்ணு அப்டில்லாம் கெடையாது, சார்”

“எல்லா பேரன்ட்ஸும் இதத் தான் சொல்லுவாங்க. விசாரிச்சுப் பாத்தா தான் தெரியும், உங்க பொண்ணு ஒழுக்கம் என்னன்னு. காணாம போச்சோ, ஓடிப் போச்சோ யாருக்குத் தெரியும்?”

“சார் அவ ஓடியெல்லாம் போயிருக்க மாட்டா” அருகில் நின்றிருந்த அவளின் சகோதரி அழுத்தமாகக் கூற,

“ஓ, அதெப்டி உனக்குத் தெரியும்?” என்றார் அவர்.

அருகில் நின்றிருந்த இருவரையும் அழுத்தமாகப் பார்த்தவள், “ஏன்னா அவ காதலிச்சது, இதோ நிக்குறானே இவனத் தான்…” என்றாள் அவள்.

அவள் சுட்டிக்காட்டியவன், சங்கடத்துடன் அவள் பெற்றோரை ஏறிட, அவர்கள் அவனை நம்பமுடியாத பார்வை பார்த்தனர். மற்றொருவன் அவளை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏளன சிரிப்புடன் அவர்களைப் பார்த்து, “பார்த்தீங்கள்ல உங்க பொண்ணோட லட்சணத்த, அவ இவன மட்டும் காதலிச்சாளோ, இல்ல இன்னும் எத்தன பேர காதலிச்சாளோ?” என நாக்கில் நரம்பில்லாமல் பேச,

“சார், கொஞ்சம் பார்த்துப் பேசுங்க. நா ஒத்துக்குறேன், அவ என்னைத் தான் லவ் பண்ணா. பட், இப்போ அவளக் காணோம். அந்த சரவுண்டிங்ல இன்னும் சில பொண்ணுங்களையும் காணோம். இதுக்கெல்லாம் லிங்க் இருக்கும்னு நீங்க ஏன் யோசிக்கக் கூடாது?” எனக் கூறினான், தொலைந்து போன பெண்ணின் காதலன்.

“ஓ, லிங்க்… நீங்க அப்டி வர்றீங்க… எனக்கே க்ளாஸ் எடுக்குறியா நீ? உனக்கும், அந்தப் பொண்ணுக்கும் லிங்க் இருந்துருக்கு. அதே மாதிரி காணாம போன மத்த பொண்ணுங்க கூடயும் உனக்கு லிங்க் இருந்துருக்குமோ? இந்த கேஸுக்கும் உனக்கும் கூட ஏதாச்சும் லிங்க் இருக்கலாம்ல… பேசாம உன்னத் தூக்கி உள்ள வச்சா, எல்லா லிங்கும் தெளிவா தெரிஞ்சுரும்…” என்று வன்மமாகப் பேச,

குறுக்கே புகுந்த மற்றவன், “சார் ப்ளீஸ், அவ காணாம போன சோகத்துல அவன் ஏதோ பேசிட்டு இருக்கான். அத மனசுல வச்சுக்காம, தயவு பண்ணி அவளக் கண்டுபிடிச்சுக் குடுங்க, ப்ளீஸ்” எனக் கெஞ்சலுடன் கேட்டான்.

“ஆமா, நீ யாரு?” என அவர் கேட்க,

பெருமூச்சு விட்டவன், “நா வைஜெயந்தியோட ஃப்ரெண்டு. அவ எனக்குக் கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி…” என்றான்.

“தங்கச்சியா? இங்க பார்றா” என எள்ளலாக மொழிந்துவிட்டு, “இப்பல்லாம் அண்ணன் மாதிரி, தம்பி மாதிரினு சொல்லிப் பழகுறவய்ங்களத் தான் நம்ப முடில” என மேலும் ஏதோ கூற வர,

அவரை இடையிட்டு, “சார், எங்கக்கா எப்ப கெடைப்பா? அத சொல்லுங்க ஃபர்ஸ்ட்டு” என்றாள் அப்பெண்.

“கம்ப்ளெயிண்ட் குடுத்துருக்கீங்கள்ல, கெடைச்சா சொல்றோம். இப்ப கிளம்புங்க மொதல்ல, வந்துட்டானுங்க இம்சையக் கூட்டுறதுக்குன்னே…” என சலிப்புடன் சொல்லிவிட்டு, வேறு வேலையில் மூழ்கிவிட்டார் அவர்.

அனைவரும் வெளியில் வர, விறுவிறுவென முன்னே போன அவள் தந்தையை நிறுத்தியவள், “அப்பா நா சொல்றதக் கொஞ்சம் கேளுங்க, ப்ளீஸ்” என்றாள்.

அவரோ, “வேணாம்மா வேணாம். நீ ஒன்னும் சொல்ல வேணாம். உங்க வாழ்க்கைய தான் நீங்களே பார்த்துக்க ஆரம்பிச்சுட்டீங்களே. பார்த்துக்கோங்க, நல்லா பார்த்துக்கோங்க. நீயும் யாரையாச்சும் லவ் பண்ணு. அப்டியே அவன் கூடயே போயிரு. உங்களப் பெத்த பாவத்துக்கு, நாங்க வயிறெரிஞ்சு சாகுறோம்” என்றார்.

“அப்பா என்னப்பா? அவ அப்டி யாரோடயும் போயிருப்பான்னு நெனைக்கிறீங்களா? ஜெய், விஷ்வாவ லவ் பண்ணாலும், உங்க சம்மதம் இல்லாம அவனோட வாழ நெனைக்கல. அவ நல்ல பொண்ணுப்பா” என்றாள் அவள்.

“ஆமாமா, நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்ல பொண்ணுங்க. நாங்க தான் நல்ல அப்பா, அம்மாவா இல்லாம போயிட்டோம் போதுமா? தயவுசெஞ்சு நீயும் வீட்டுப் பக்கம் வந்துடாத, ச்ச…” என எரிச்சலுடன் அங்கிருந்து நடந்தார் அவர்.

“அப்பா, அப்பா…” எனக் கத்தியவள், “அம்மா நீயாச்சும் புரிஞ்சுக்கோம்மா…” என்று, அவருக்கு சற்றும் குறையாத, எரிச்சல் மண்டிய குரலில் கூறினாள்.

“நீ புரிஞ்சுக்கோ. அவளக் காணோம்குறதுலயே அவரு ரொம்ப பதறிட்டாரு. இப்போ லவ் பண்றது தெரியவும் மனசொடிஞ்சு போயிருப்பாரு. அவருக்கு உங்க மேல ரொம்ப பாசம் இருக்கு. நீ கொஞ்ச நாள் மட்டும் வெளில தங்கிக்கோ. அவரு கோவம் கொறைஞ்சதும் வா. வைஜு கெடைச்சிரணும்னு சாமிய நல்லா வேண்டிக்கோடி…” கடினப்பட்டு உறுதியாகப் பேசிக் கொண்டிருந்தவரின் குரல் கடைசி வார்த்தையில் உடைந்து, அழத் தொடங்கினார்.

இதழ்களை அழுந்தக் கடித்து, கோபத்தை அடக்கியவள், “என்னமா புரிஞ்சுக்கணும்? ரெண்டு பேரும் பொண்ணா பொறந்ததுக்கு, உன்ன கஷ்டப்படுத்துனாரே அதையா? இல்ல பொண்ணா பொறந்த பாவத்துக்கு, அவ வாழ்க்கையையே அழிக்கப் பார்த்தாரே அதையா? நீ நெனைச்சுக்கிட்டு இருக்கியா, அவரு நம்ம மேல எல்லாம் பாசம் வச்சுருக்காருன்னு. இப்ப கூட அவளக் காணோம்னு அவரு தேடல. பேசி வச்ச பெரிய வீட்டு மாப்பிள்ளக்கு, பதில் சொல்லணுமேன்னு தான் தேடுறாரு. கொஞ்ச நாள் இல்ல, என் ஜெய் கெடைக்குற வர நா வீட்டுக்கு வரமாட்டேன். நீ பத்திரமா, தைரியமா இரு. அவ எங்க இருந்தாலும் இந்த நிமிஷம் வரை தைரியமா தான் இருப்பா. கண்டிப்பா நம்மகிட்ட திரும்பி வருவா” எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.   

பேசி முடித்த வைஷாலி, இவர்கள் புறம் வர, “உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா வைஷு?” எனக் கத்தினான் ஒருவன்.

“நா என்ன பண்ணேன் வெற்றி?” என்று அவள் கோபக் குரலில் கேட்க,

“என்ன பண்ணனும்? இன்னும் என்னடி பண்ணனும்? ஜெய், விஷ்வாவ லவ் பண்ணானு எங்களுக்குத் தெரியாதா? வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? அவன் இதான் சாக்குன்னு, எல்லாப் பழியையும் தூக்கி விஷ்வா மேல போட்டா என்ன பண்றது?” எனப் பொரிந்தான் வெற்றி.

எரிச்சலுற்ற வைஷாலி, “ப்ச், நீ எப்போ இருந்து இவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்ச? அவன், ஜெய்யோட கேரக்டரப் பத்தி அவ்ளோ கேவலமாப் பேசுறான். பெருசா ஃப்ரெண்டு, ஃப்ரெண்டுனு சொல்லுவியே, அந்த ஃப்ரெண்டு அசிங்கப்படுறது உனக்கு பரவால்லையா?” என்று தானும் கத்தினாள்.

“நீ சொன்னப்புறம் மட்டும் அவள மாதர்குல மாணிக்கம்னா சொன்னான்? இல்லைல்ல… இன்னும் கேவலமா தான பேசுனான்? எதையும் யோசிக்கவே மாட்டியாடி?” என்று வெற்றி திட்ட,

“ரெண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுறீங்களா?” என்று உறுமினான் விஷ்வஜித்.

“நீங்க ரெண்டு பேரும் இப்டி மாத்தி, மாத்தி கத்திக்கிட்டா அவ கெடைச்சுருவா, அப்டி தான? திட்டிக்கோங்க, அடிச்சுக்கோங்க, நல்லா மானக்கேடா சண்ட போட்டுக்கோங்க…” என கர்ஜித்துவிட்டு அருகிலிருந்த கல்லில் அமர்ந்தான்.

ஒருகையால் தலையைப் பிடித்தவன், மறுகையால் அவன் கழுத்தில், அவனவள் அணிவித்திருந்த செயினை இறுகப் பற்றிக் கொண்டான்.

“டேய் விஷ்வா…” என வைஷு அவன் தோளைத் தொட,

நிமிர்ந்தவன் “எதுக்கு வைஷு என்கிட்ட வர்ற? உனக்கு இப்போ இவனோட சண்ட போடுறது தான முக்கியம்? போய் அத கன்டினியூ பண்ணு” எனக் காட்டமாகக் கூறினான்.

“விஷ்வா…” என வெற்றி ஏதோ சொல்ல வர,

“ப்ச், இவள என் ஃப்ளாட்டுக்குக் கூட்டிட்டுப் போய் விடு, வெற்றி. இவ வீட்டுக்குப் போற வரை நீயும் அங்கேயே தங்கிக்கோ” என்று சட்டையில் இருந்து வீட்டு சாவியை எடுத்துக் கொடுத்துவிட்டு, பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் விஷ்வா.

போகும் விஷ்வாவையே, வைஷாலி இயலாமையுடன் பார்க்க, வெற்றி, “வந்து வண்டில ஏறு வைஷூ…” என அவளை அழைத்தான். அவள் ஏறியதும், வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்ல, இருவரும் ஏதும் பேசிக் கொள்ளாமல் நேரம் கழிந்தது.

பின்னிருந்த கம்பியை அழுந்தப் பற்றியபடி அமர்ந்திருந்தவள், “அழக்கூடாது, அழக்கூடாது…” என தனக்குள்ளேயே கூறியபடி, இதழ்களை இறுக்கமாகப் பூட்டியிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல், அடக்கமுடியாமல் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, வெற்றியைப் பின்னிருந்து இறுகக் கட்டிக்கொண்டு, அவன் முதுகிலேயே புதைந்து கொண்டாள்.

ஒரு கையால், அவள் கைகளைப் பற்றியபடி, “அழணும்னா அழுடி… எவ்ளோ நேரம் இப்டியே இறுகி இருக்கப் போற?” என்றவனின் குரல், முன் பேசியதிற்கு சிறிதும் தொடர்பின்றி, மென்மையாக வெளிவந்தது.

“ம்கூம், ஜெய்க்கு அழுதா சுத்தமாப் பிடிக்காது, அதனால அழ மாட்டேன்…” என்றவளின் வார்த்தைகளும், சிறு குழந்தையைப் போல் மாறி இருந்தது.

அதன்பின் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பற்றியிருந்த கைகளையும் விடவில்லை. அந்த அப்பார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தவர்கள், வீட்டிற்குள் நுழைந்து கொள்ள, “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு வெற்றி. நேத்து நைட்டெல்லாம் நீ தூங்கவே இல்ல…” என்றாள் வைஷூ.

“ப்ச், விஷ்வாவும், நீயும் மட்டும் தூங்குனீங்களா? அவனும் வரட்டும். அப்புறம் பார்க்கலாம்…” என வெற்றி கூற,

“எப்பவும் அவன் கூட சண்ட தான போடுவ… உன் எனிமி தான அவன்? இப்ப என்ன புது அக்கறை?” என ஆச்சரியத்துடன் நோக்கினாள் வைஷூ.

சிறிதாய் முறுவலித்தவன், “எனிமி தான். ஆனா, என் ஃப்ரெண்டோட ஆளாச்சே… அவ திரும்பி வந்து, என் ஆள ஏண்டா பார்த்துக்கலன்னு கத்துவா. தேவையா எனக்கு?” என்றான்.

அவன் கூறியதில், வைஷூவின் இதழ்களிலும், ஒரு குறுஞ்சிரிப்பு தோன்ற, “ரொம்ப பயந்தவன் தான்…” என்றாள்.

இலகுவாகப் பேச முயற்சித்தாலும், இருவருக்குள்ளும் வைஜெயந்தி எந்த பாதிப்புமின்றி, மீண்டும் திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.  

எழுந்து சென்று, பால்கனியின் கண்ணாடிக் கதவில் கன்னத்தை அழுத்தியபடி வைஷூ நின்றுகொள்ள, சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்தான் வெற்றி. இருவருக்குமே கல்லூரி நாட்களை கனாக் காலமாக மாற்றிய, அவர்களின் ‘ஜெய்’ நினைவில், கண்கள் தங்களை மீறி கலங்கியது.

_________________________________________________________________________________

இறுக்கமாய் மூடியிருந்த இமைகளை, சுத்தமாகப் பிரிக்க முடியவில்லை வைஜெயந்தியால். தலையெல்லாம் வெகு பாரமாக வலித்தது. கைகளைப் பின்னே சேர்த்துக் கட்டியிருப்பார்கள் போலும், அசைவின்றி வைத்ததில் கைகளும் மரத்துப் போயிருந்தது.

கடினப்பட்டு விழிகளைப் பிரித்தவளுக்கு, சூழ்ந்திருந்த இருளில் எதுவும் புலப்படவில்லை. கைகள் இரண்டையும் அசைத்து சமநிலைக்குக் கொண்டு வந்தவாறே, சுற்றுமுற்றும் பார்த்தவள், என்ன நடந்ததென்று நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டிப் பார்த்தாள். இரவில் தனது தெருவிற்குள் நுழைந்தது தான் நினைவில் இருந்தது.

அதன் பிறகு என்னானது…

அதன் பிறகு…

பிறகு…

பிறகு என்ன நடந்ததென்று யோசித்தவளுக்கு, ஏதும் நினைவிற்கு வரவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. நடந்தது எதுவாக இருப்பினும், அது நல்ல விஷயம் அல்ல என்பது.

தன் நிலையை சிந்தித்துப் பார்த்தவளின் ஆழ்மனம் அடித்துக் கூறியது, அவள் பெண்மைக்கு எந்தவித பங்கமும் இல்லையென்று. பின் எதற்கு இந்த கடத்தல்? தன்னைக் கடத்தி வைத்துப் பணம் கேட்டால், ஒரு பிரயோஜனமும் இருக்காது. ஒழிந்தது தொல்லை என தன்னைப் பெற்றவர் விட்டு விடுவார், என அவளுக்கு நன்றாகத் தெரியும்.

‘ஒருவேளை, இப்போது பார்த்த, அந்த வீணாய்ப் போன மாப்பிள்ளை தேடுவானோ?’ என்ற எண்ணம் தோன்ற, ‘நிச்சயம் இல்லை’ என அவள் மனமே மறுதலித்தது.

‘இவள் இல்லை என்றால், இன்னொருத்தி என போயிருப்பான். ஒருவேளை வைஷூவை அவனுக்குக் கேட்டால்… அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று தான் தோன்றியது. ‘அவளின் கோபத்திற்கு முன் யாராக இருந்தாலும், ம்கூம்… காலி தான்’ என எண்ணியவளுக்கு, அந்த நேரத்திலும், நினைவில் வந்த உடன்பிறந்தவளின் கோப முகம், புன்னகையைத் தோற்றுவித்தது.

அப்படியிருந்தும் இந்த சூழ்நிலையில் தான் இருக்க என்ன காரணம், என யோசித்தவள் உணர்ந்தது ஒரு விஷயம் தான். அவளைக் கடத்திய மிருகங்கள், ஏதோ ஒரு விதத்தில், அவளைக் கொண்டு சம்பாதிக்கப் போகின்றன. இப்போது இருட்டுக்குப் பழகியிருந்த கண்களில், புலப்பட்ட வரிவடிங்கள், அவளைப் போல அங்கு இன்னும் சிலர் இருப்பதையும், அவள் எண்ணவோட்டங்கள் சரி தான் என்பதையும் உணர்த்திக் கொண்டிருந்தது.

செய்தியில் படித்த நிகழ்வுகளைப் போல், இன்று தானும் ஆகப் போகிறோம் என எண்ணியவளுக்கு, தன்னை நேசித்தவர்களின் நினைவு தோன்றி மனம் வலித்தது. அவள் தாய் நிச்சயம் உடைந்து போயிருப்பார். அவரின் பரிதவிப்பை எப்படி சரிசெய்வது, என்றெண்ணியவளுக்குத் தன் மீதே சுய இரக்கம் தான் தோன்றியது.

தன்னை சுற்றியிருக்கும் இந்தப் பெண்களுக்கும், இதேபோல் குடும்பமும், நட்பும், காதலும் இருக்கும். அனைவரும் இங்கிருந்து சென்றே ஆக வேண்டும். தன் உயிரில் கலந்தவனும், உயிருக்கு உயிரான தோழனும், தன்னுடனே உயிர் ஜனித்தவளும் நிச்சயம் தன்னைத் தேடி வருவார்கள். அவர்கள் சிக்கலில் சிக்காமல் இருக்க வேண்டுமெனில், அவர்கள் வரும் முன்னே இங்கிருந்து மீள வேண்டும், என உறுதியாக எண்ணினாள் வைஜெயந்தி.

ஆனால், இங்கிருந்து மீள முடியுமா, என்பது தான் அவளுக்குப் புரியவில்லை. தற்போது எங்கிருக்கிறோம் என்று, தனக்கே தெரியாத நிலையில், தானும் என்ன தான் செய்வது, என யோசித்துக் குழம்பியவளுக்கு, மயக்க மருந்தின் வீரியம் குறைந்ததில், தலை இன்னும் அதிகமாய் வலிக்கத் தொடங்கியது.

வைஷூ இந்நேரம், தன்னைக் காணோம் என்றதிலேயே, சூழ்ந்திருக்கும் அனைவரின் மீதும், ஒட்டுமொத்த கோபத்தையும் இறக்கி இருப்பாள். வெற்றி, எத்தகு பிரச்சினை என்றாலும், கொஞ்சம் நிதானமாக இருப்பான். அவன், வைஷூவை சமாளித்துக் கொள்வான். அடுத்து என்ன செய்யலாம், எனத் தெளிவாக முடிவெடுத்து விடுவான்.

விஷ்வா… அவனைப் பற்றி எண்ணும்போதே, உயிரை யாரோ பறித்துச் செல்வது போல் வலித்தது. ஏற்கனவே அவனை, உயிருடன் புதைப்பது போன்று நடந்திருந்தவளுக்கு, இந்த நொடியில் அவன் நிலையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

மொத்தமாய் நொறுங்கிப் போயிருப்பான். அவன் நினைவில் தான் உழல்வது போல், அவனும் தன்னைப் பற்றி மட்டுமே இப்போது சிந்தித்துக் கொண்டிருப்பான். மீண்டும் தன்னைக் கண்டுபிடிக்க, எந்த எல்லைக்கும் அவன் போவான் என்பது திண்ணம். இந்தளவு காதலையும், நம்பிக்கையையும் வைத்துக்கொண்டு, அவனை எப்படி வேண்டாமென வேரோடு வெட்டி விட்டு வந்தாள், என அவளுக்கே புரியவில்லை.

“ஐ’ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி விஷ்வா. உன்னத் தூக்கி எறிஞ்சது, ஏன்னு சொல்ல முடியுமான்னு கூட தெரிலடா. இங்கருந்து உயிரோட வருவேனோ, இல்ல இப்டியே செத்துருவேனோ? பட், என்ன ஆனாலும், என் மனசுல நீ மட்டும் தான் இருக்க… ஐ லவ் யூ டா… ஐ லவ் யூ சோ மச் கண்ணாளா…” என்று மனதினுள் குமைந்தவாறு, அவன் நினைவுகளுக்குள்ளாகவே மூழ்கியவளின் விலோசனங்களில், அவள் கண்ணீருக்கு, அவன் மட்டுமே தகுதியானவன் என்பது போல், விழி நீர் பெருகி, கன்னங்களில் வழிந்தோடியது.

_____________________________________________________________________________________

பைக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்த விஷ்வா, சோர்ந்து போய் கடற்கரையில் சென்று நிறுத்தினான். ஓரிடத்தில் அமைதியாய் சென்று அமர்ந்தவனின் மனம், அவனவளின் நினைவுகளில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

இதே இடத்தில் வைத்து தான், அவன் காதலை முறித்து விட்டுச் சென்றாள். அன்று அவள் கண்களில் தெரிந்த வலியில் தானே, போதும் இந்த உறவென்று முடிவெடுத்து, முழுதாய் அவளைப் பிரிந்து சென்றான். இன்று எத்தனை வலியில் இருக்கிறாளோ, என்று எண்ணுகையிலேயே உயிரை யாரோப் பிழிவது போல் வலித்தது. பிரிவின் துயரை செரிக்கும் முன்னமே, அவளை மொத்தமாய் தொலைத்து இருந்தவனுக்கு, மீண்டும் அவளைக் கண்டறியும் வழிதான் புலப்படவில்லை.  

“முடில ஜெய். எங்கடி போன? என்ன பிரச்சினையா இருந்தாலும், உன்ன விட்ருக்கக் கூடாது. நா கூட இருந்திருந்தா, உனக்கு எதுவும் ஆகிருக்காதோன்னு தோணுது. ஏன் டி என்ன விட்டுப் போன? என் கிட்டயே வந்துரு ஜெய்… ஐ டெரிப்லி நீட் யூ கண்மணி… நீ இல்லாத லைஃப நெனைச்சு கூட பார்க்க முடில…” என மானசீகமாய் அவளிடம் பேசியவனின் நேத்திரங்கள், துயரில் நீரைச் சொரியத் தொடங்கியிருந்தது.

 

                                       -மாயவலை சூழும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்