Loading

ஐயர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்க, மணமேடையில் அமர்ந்திருந்த முத்துராசுவோ மணமகளின் அறையின் மீது பார்வையைப் பதித்தபடி ஐயர் சொல்லும் மந்திரங்களை பிழை பிழையாக உச்சரிக்க, “அம்பி… இங்குட்டு பாருங்கோ… உங்க ஆத்துக்காரிய செத்த நேரத்துல இங்குட்டு அழைச்சிருவேன்… ஒழுங்கா மந்திரத்த சொல்லுங்கோ அம்பி…” என்று ஐயர் சற்று கடுப்புடன் கூறவும் சுற்றி இருந்தவர்கள் முத்துராசுவைப் பார்த்து கேலியாக சிரிக்கவும் அவர்களைப் பார்த்து இளித்து வைத்தான் முத்துராசு.

சற்று நேரத்திலே அருணிமாவும் இன்னொரு பெண்ணும் கைப் பிடித்து ஷாலினியை மணமேடைக்கு அழைத்து வர, துருவ்வாலும் முத்துராசுவாலும் தன்னவள்களை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை.

ஷாலினியின் மறு பக்கம் வந்த பெண்ணின் மீது ஒரு நொடி தன் பார்வையைப் பதித்த ஜெய் அவசரமாக மீண்டும் மணமேடையின் பக்கமே திருப்பிக் கொண்டான்.

ஐயர், “கட்டிமேளம்… கட்டிமேளம்…” என்கவும் முத்துராசு ஷாலினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரி பாதி ஆக்கிக் கொள்ள, அனைவருமே அர்ச்சதை தூவி அவர்களை ஆசிர்வதித்தனர்.

மணமேடையின் அருகில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அலமேலுவின் கண்கள் கலங்கியிருந்தன.

முதலில் அலமேலுவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய புதுமணத் தம்பதி பின் ஒவ்வொரு பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்க,

அவர்களை மனம் குளிர கண்டு களித்த அலமேலு கண்களை மூடியவர், ‘அண்ணே… நீயி ஒரு பெரிய வரமா தான்லே உன் புள்ளய எனக்கு விட்டுட்டு போனீய… இப்போ தான் எனக்கு மன நிறைவா இருக்குலே… இதே போல மத்த ரெண்டு பயலுங்களும் நல்லா இருக்கணும்…’ என மோகனிடம் வேண்டிக் கொண்டார்.

அருணிமா ஷாலினியை மணமேடையில் அமர்த்தி விட்டு வந்தவள் துருவ்வின் கரம் கோர்த்து அவனின் தோளில் சாய்ந்து கொள்ள, அதனை அவதானித்த ஜெய், “சரி தான்லே… அந்தப் புள்ள உன் பக்கம் வந்தாலே பாதி தூரம் ஓடிடுவ… என்னலே இது… இப்போ என்னன்னா அம்புட்டு பேரு முன்னாடியும் கையைப் பிடிச்சிட்டு நிற்கிறீய…” என்க, துருவ்வோ அருணிமாவைப் பார்த்து புன்னகைத்தான்.

“ஓஹ்… அப்படி போகுதா சங்கதி… சரி தான்… நமக்கு இனி இங்குட்டு என்னலே சோலி…” என்றவாறு திரும்பிய ஜெய் ஷாலினியுடன் நின்றிருந்த பெண் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவன், ‘அடி ஆத்தி… என்னலே இந்த புள்ள இப்படி ஆள முழுங்க போற மாதிரி பார்த்துட்டு இருக்குலே… எலேய்… ஜெய்… ஓடுறா…” என அவசரமாக அங்கிருந்து தப்பித்தான்.

அனைத்து சடங்குகளும் முடிந்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வர, அருணிமா தான் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள்.

முத்துராசுவையும் ஷாலினியையும் அணைத்துக்கொண்ட அலமேலு, “இப்போ தான் ராசா இந்த ஆத்தாவுக்கு சந்தோஷமா இருக்கு… அடுத்து உன் தம்பிங்களையும் கல்யாணம் பண்ணிக்கொடுத்து கரை சேர்த்துட்டா நிம்மதியா இந்தக் கட்டை கண்ண மூடிடுவேன்லே…” என்க, “அம்மா… என்னம்மா இது?” என்றான் துருவ் வருத்தத்துடன்.

முத்துராசு, “ஆத்தா… எதுக்குலே வருத்தப்படுறீய? தம்பிங்க ரெண்டு பேருக்குமே பொண்ணு ரெடியா தானேலே இருக்கு… அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்த ஜோரா பண்ணிடலாம்…” எனப் புன்னகைக்கவும் அருணிமா வெட்கத்தில் தலை குனிய, “என்னண்ணே சொல்லுறீய? துருவ்வுக்கு தானேலே பொண்ணு ரெடியா இருக்கு…” எனப் புரியாமல் கேட்க, “உனக்கும் தான்லே…” என அலமேலு கூறவும் அதிர்ந்த ஜெய், “எதே… எனக்கு பொண்ணு பார்த்து இருக்கியேலா? ஆள விடு ஆத்தா… ஒரு தடவ பொழச்சி வந்ததுக்கு ஒவ்வொரு தடவயும் பொழச்சி வர முடியாதுலே…” என்று விட்டு ஓட அனைவருமே சிரித்தனர்.

வெளியே வந்த ஜெய் வீட்டினுள் இருந்து வந்த சிரிப்பலைகளைக் கேட்டு மகிழ்ந்தவன் வானில் தனியே இருக்கும் நிலவினை ரசிக்க, “துணையே இல்லாம வானத்துல தனியே இருக்குல்ல அந்த நிலா… பாவம்…” என ஒரு பெண் குரல் கேட்கவும் தன்னை மீறி நிலவின் அழகில் மூழ்கிக் கிடந்த ஜெய், “தனியா இருக்குறது தானேலே அதோட அழகே…” என்க, “அதுக்கும் துணை வேணும்னு ஆசை இருக்காதாலே? உங்களைப் போலவே…” என்கவும் தன்னிலையடைந்தவன் திரும்பி தன்னருகில் இவ்வளவு நேரம் நின்று பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்க்க, ஜெய்யைப் பார்த்து புன்னகைத்தாள் அவள்.

‘ஆத்தி… இது அந்த பொண்ணுல்ல… எலேய்… அது கண்ண மட்டும் பார்த்துடாதேலே… ஏதோ பண்ணுது…’ என மனதில் நினைத்த ஜெய் அங்கிருந்து செல்லப் பார்க்க, அவனின் கரம் பிடித்து தடுத்தாள் அவள்.

ஜெய் தன் கரத்தையும் அப் பெண்ணின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்க்க, “அக்கா என்னை பத்தி உங்க கிட்ட சொல்லலயாலே?” என்க, ஜெய் புரியாமல் முழித்தான்.

“என் பேரு அர்ச்சுஸ்ரீ…” என அவள் கூறவும் ஜெய்யின் பிறவிக் குணம் தலை தூக்கி சட்டென, “என்ன பேரு புள்ள இது… அர்ச்சுவாம் ஸ்ரீயாம்…” எனக் கூறிச் சிரித்தவன் அவசரமாக தன் நாக்கைக் கடித்துக்கொண்டு, “சாரி…” என்றான்.

அர்ச்சுஸ்ரீ, “பரவால்ல… நீயி சிரிச்சா அழகா இருக்கீய…” என்கவும் ஜெய்யிற்கு வெட்கம் வர, “நான் ஷாலினியோட தங்கச்சி… அவ உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா… உங்க ஆத்தா என்னை பத்தி தான் உங்க கிட்ட சொன்னாய்ங்க…” என அர்ச்சுஸ்ரீ புன்னகையுடன் கூறவும் அதிர்ந்தான் ஜெய்.

ஜெய், “என்ன? அண்ணியோட தங்கச்சியா நீங்க? அப்போ இவ்வளவு நல்லா எங்க ஊர் பாஷை பேசுறீங்க…” என அதிர்ச்சியாகக் கேட்க, “தனக்கு பிடிச்சவியலுக்காக ஒன்னு கத்துக்கணும்னா அது எம்புட்டு கஷ்டமா இருந்தாலும் நமக்கு ஈஸியா தான் இருக்கும்… என்னைப் பார்க்குறீய? புரியலயா? வேற என்ன? காதல் தான்…” என ஒரு நிமிடம் நிறுத்திய அர்ச்சுஸ்ரீ, “உங்களுக்கு நடந்தது எல்லாமே தெரியும்ங்க எனக்கு… அக்கா உங்கள பத்தி சொல்லி சொல்லி எனக்கு உங்கள பார்க்கணும் போல இருந்தது… இங்குட்டு பார்த்ததுமே பிடிச்சு போச்சுலே… நீங்களும் என்னை பார்த்தத நான் பார்த்தேன்… எனக்கு உங்கள பிடிச்சிருக்கு… எங்க வீட்டுல கூட சம்மதம் தான்லே… உங்களுக்கு ஓக்கேன்னா சொல்லுங்க…” என்று விட்டு அவள் அங்கிருந்து செல்லத் திரும்ப, அவசரமாக அவளின் கரத்தைப் பிடித்துக்கொண்ட ஜெய், “காதலிக்கிறது ஒரு சுகம்னா காதலிக்கப்படுறது அதை விட பெரிய சுகம்… நான் ஆசைப்பட்ட வாழ்க்கை தான் தப்பா போச்சு… என்னைத் தேடி வந்து இருக்குற வாழ்க்கையாவது நல்லதா அமையும்னு நம்புறேன்லே… எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுக்க முடியுமா புள்ள? காயம் பட்ட இதயம்… அது ஆற கொஞ்ச நாள் போகும்…” என்றான்.

உடனே அவனின் கரத்துடன் தன் கரம் கோர்த்த அர்ச்சுஸ்ரீ, “உங்களைப் போல ஒருத்தரோட கைய பிடிக்க என் ஆயுசுக்கும் காத்திருக்க கூட நான் தயார்லே…” என்கவும் மனம் நிறைய புன்னகைத்த ஜெய் கோர்த்த கரங்களுடனே உள்ளே செல்ல, அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியில் கூக்குரலிட்டனர்.

************************************

சில வருடங்களுக்கு பின்

“கயல்விழி சிறுவர் இல்லம்” என்ற பெயர்ப்பலகை வெளியே பெரிதாக மாட்டியிருக்க, சின்னஞ் சிறுசுகளால் அவ் இல்லம் நிறைந்திருந்தது.

வெற்றி, “எலேய்..‌. எல்லாரும் வெறசா வாலே… எம்.எல்.ஏ. கலெக்டர் எல்லாம் அவிய குடும்பத்தோட வராய்ங்க…” எனக் குரல் கொடுக்கவும் அனைத்து பிள்ளைகளும் வெளியே ஒடி வந்தனர்.

சற்று நேரத்திலேயே அவ் இல்லத்தின் முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்க, ஒன்றிலிருந்து முத்துராசு தன் நான்கு வயது மகன் ராமுடன் இறங்க, அவனைத் தொடர்ந்து அலமேலுவும் ஷாலினியும் இறங்கினர்.

அடுத்த வண்டியிலிருந்து ஜெய் முதலில் இறங்க, அன்று தான் தன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜெய்யின் மகள் சங்கவியுடன் இறங்கினாள் அர்ச்சுஸ்ரீ.

ஜெய் தன்னவளின் கரத்தைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்ல, சில நிமிடங்களில் அதே வண்டியிலிருந்து துருவ் இறங்க, அவனுக்கு பின்னே தன் நிறைமாத வயிற்றுடன் தன் காதலனை கரம் பிடித்து தற்போது அவனின் உயிரையும் சுமக்கும் மகிழ்ச்சியில் முகத்தில் பொழிவுடன் இறங்கினாள் அருணிமா.

அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வர, ராஜதுரை மற்றும் மாரியின் இறப்புக்கு பின் திருவம்பட்டியில் சாதி பற்றி பேச யாருமே இருக்கவில்லை.

ஏதோ ஒரு மூலையில் யாராவது சாதியைக் காட்டி சண்டையை மூட்டி விட்டால் காவல்துறையினர் வந்து அவர்களை வெளுத்து வாங்குவர்.

எல்லாமே புதிய எம்.எல்.ஏ. மேலும் ஆட்சியர் மேலும் இருந்த பயமே.

அனைவரின் ஆதரவுடனும் முத்துராசு திருவம்பட்டி எம்.எல்.ஏ. ஆக தெரிவு செய்யப்பட, அவன் முதலில் செய்த வேலையே கீழ் சாதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது தான்.

துருவ் – அருணிமா, ஜெய் – அர்ச்சுஸ்ரீ தம்பதியருக்கும் சில நாட்களிலே ஒரே மேடையில் திருமணம் நடக்க, அவர்களின் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்கவில்லை.

மருமகள்களின் கவனிப்பில் அலமேலுவும் விரைவில் குணமடைந்து நடக்கத் தொடங்கினார்.

முத்துராசு கயல்விழியின் கனவை நிறைவேற்றுவதற்காக அவளின் பெயரில் ஒரு சிறுவர் இல்லத்தை அமைத்து வெற்றியையே அதற்குப் பொறுப்பாகப் போட, அங்கு வந்த சேர்ந்த உறவுகளற்ற அனைத்து சிறுவர்களையும் தன் குடும்பமாகவே எண்ணி தன் சகோதரியின் ஆசை போன்று பல சகோதர சகோதரிகளின் ஆசையை நிறைவேற்றினான் வெற்றி.

அந்த இல்லம் தான் அவனுக்கு எல்லாமே. அங்கு இருந்த சிறுவர்களுக்கும் வெற்றி தான் எல்லாமே.

அன்று ஜெய்யின் மகள் சங்கவியின் பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடவே அனைவரும் வந்திருந்தனர்.

வண்டியை விட்டு இறங்கிய அருணிமா துருவ் தன்னை நோக்கி கரத்தை நீட்டி இருப்பதைப் பார்த்தவள் அவனைப் பார்த்து உதட்டை சுழித்து விட்டு முன்னே நடந்தாள்.

தன்னவளின் செல்லக் கோபம் கண்டு புன்னகைத்த துருவ் வேக நடையுடன் அருணிமாவை அடைந்து அவளின் தோளைச் சுற்றி கரத்தைப் போட்டுக் கொண்டான்.

சிறுவர்களுடன் சேர்ந்து அனைவரும் சங்கவியின் பிறந்தநாளைக் கொண்டாட, அங்கிருந்தவர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்டு அலமேலுவிற்கு மன நிறைவாக இருந்தது.

அங்கிருந்த சிறுவர்களின் முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்டு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியவன், ‘கயலு தங்கம்… அண்ணாத்த உன் ஆசையையும் கனவையும் நிச்சயம் நிறைவேத்துவேன்லே… இங்குட்டு இருக்க பசங்க அம்புட்டு பேரும் மூலமா நீயி நினைச்சதை நடத்துறேன் புள்ள… நீயி எங்குட்டு இருந்தாலும் சந்தோஷமா இரு கயலு…’ என்றான் மனதினுள்.

அவனின் தோளில் ஆதரவாகக் கரம் பதித்த அலமேலு, “எதுக்கு கண்ணா நல்ல நாள் அதுவுமா கண்ணைக் கசக்கிக்கிட்டு… இந்த புள்ளைங்க மூஞ்ச பாரு… எம்புட்டு சந்தோஷமா இருக்குதுங்க… உன் தங்கச்சி மேல நீ எம்புட்டு பாசம் வெச்சி இருக்கியோ அதை விட பல மடங்கு பாசத்தை அந்த கடவுள் வெச்சி இருக்கான்லே… அதான் கடவுள் கயல அவன் கூட கூட்டிக்கிச்சு… மேல இருந்து அந்த புள்ள உன்ன பார்த்துட்டு தான் இருக்கும்லே‌… நீயி இப்படி அழுதா புள்ள மனசு கஷ்டப்படாதா?” என்கவும் மறுப்பாகத் தலையசைத்த வெற்றி அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டான்‌.

ராம் அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாட, சங்கவியை முத்துராசுவும் ஷாலினியும் வைத்துக்கொண்டனர்.

ஜெய் கிடைத்த இடைவெளியில் அர்ச்சுஸ்ரீயை அழைத்துக்கொண்டு ஒரு ஓரமாக சென்று காதல் லீலை செய்ய, துருவ்வோ தன்னவளின் முகத்தையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

அருணிமாவோ அவனை முறைக்க “எதுக்கு இப்போ மூஞ்ச தூக்கி வெச்சிட்டிருக்க நிரு?” எனக் கேட்டான் துருவ்.

“ஓஹ்… உங்களுக்குத் தெரியாதா நான் ஏன் கோபமா இருக்கேன்னு? புள்ளத்தாச்சி பொண்ணு ஆசைப்படுறது எல்லாம் மறுக்காம வாங்கி கொடுக்கணும்னு அத்த சொல்லிச்சு… ஆனா நீயி எனக்கு ஆசையா ஒரு ஐஸ் க்ரீம் கூட சாப்பிட விட மாட்டேங்குற…” என அருணிமா முகத்தைத் திருப்பிக்கொள்ள, “நிரு… நிஜமா சொல்லு… நீ ஒரு ஐஸ் க்ரீமா கேட்குற? ஆல்ரெடி ஒரு ஐஸ் க்ரீம முடிச்சிட்டு திரும்பவும் கேட்கவும் தான் முடியாதுன்னு சொன்னேன்…” என துருவ் கூறியதை அருணிமா காதிலே வாங்கவில்லை.

அவளின் தாடை பற்றி தன் முகம் காண வைத்த துருவ், “நிரு… எனக்கும் நீ கேட்குறது எதையும் மறுக்க பிடிக்கல டி… ஆனா அது உனக்கு நல்லதா இருக்கணும்னு நினைக்கிறேன்… உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன விட கஷ்டப்பட போறது நானா தான் இருப்பேன்…” எனக் கண் கலங்கவும் அவனைக் காதலுடன் நோக்கிய அருணிமா, “சாரி மாமா… இனி உன்ன இப்படி எல்லாம் கேட்டு கஷ்டப்படுத்த மாட்டேன்…” என்கவும் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் துருவ்.

அருணிமா, “எலேய்‌ மாமா… என்னலே லுக்கு இது…” எனத் தன்னையே காதலுடன் நோக்கிக் கொண்டிருந்தவனிடம் கேலியாகக் கேட்க, “என் பொண்டாட்டி… நான் பார்க்குறேன்..‌. உனக்கு என்னலே?” என துருவ் பதிலுக்கு கேட்கவும், “பாருலே… ஐயா நம்ம ஊரு பாஷை பேசுது…” எனக் கூறிச் சிரித்தாள் அருணிமா.

அப்போது தன்னிடம் இருந்த அருணிமா சிறு வயதில் தந்த பிரேஸ்லெட்டை துருவ் அவள் முன் காட்டவும் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்த அருணிமா, “மாமா… இது எப்படிலே உங்க கிட்ட? இந்த பிரேஸ்லெட்டை காணோம்னு எங்க ஆத்தா என்னை எம்புட்டு வைஞ்சிச்சு (திட்டுதல்) தெரியுமா?” என்க, “நீ தான் தந்த நிரு… நல்லா யோசிச்சு பாரு…” என துருவ் கூறவும் தான் சிறு வயதில் நடந்தவை அருணிமாவிற்கு நினைவுக்கு வந்தது.

“மாமோய்… அது நீயாலே?” என அருணிமா இன்னும் நம்பாமல் கேட்க, “ஆமா நிரு… நீ ஆசைப்பட்டபடியே பெரிய பையன் ஆனதும் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… இப்போ உனக்கு சந்தோஷமா?” எனக் கேட்டான் துருவ்.

அருணிமா புன்னகையுடன் ஆம் எனத் தலையை மேலும் கீழும் ஆட்ட, அந்த பிரேஸ்லெட்டை அவள் கரத்தில் மாட்டி விட்ட துருவ், “இந்த மச்சம் தான் நீ தான் அந்த குட்டிப்பொண்ணுன்னு எனக்கு காட்டி கொடுத்தது… நீ காலேஜ்ல என் கிட்ட வந்து லவ்வ சொன்னதுமே உன்ன பத்தி நான் விசாரிச்சுட்டேன் நிரு… அப்புறம் திரும்ப உன்ன மீட் பண்ணும் போது இந்த மச்சத்தை கண்டதும் என் சந்தேகம் உறுதி ஆகிடுச்சு… சின்ன வயசுல நீ உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் கிட்ட கேட்டப்போவே நீ என் மனசுக்குள்ள நுழைஞ்சிட்ட டி… ஆனா நான் தான் அதை ஒத்துக்க முடியாம உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்… சாரி நிரு…” என்கவும் அவனின் கன்னத்தில் இதழ் பதித்த அருணிமா, “நீயி எதுக்கு மாமா சாரி கேட்குற? நெசமாலுமே எனக்கு உன் மேல எந்த வருத்தமும் கிடையாதுலே… எல்லாத்துக்கும் மேல அப்படியே என் மனசுல சின்னதா ஏதாவது வருத்தம் இருந்து இருந்தாலும் என் மாமா மனசுல சின்ன வயசுல இருந்தே நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சதுமே அது காணாம போயிடுச்சு…” என்றாள் புன்னகையுடன்.

தன்னவளின் புன்னகையில் ஒரு நிமிடம் தன்னைத் தொலைத்த துருவ் அருணிமாவின் முகத்தைக் கையில் ஏந்தி, “நிரு… நீ எனக்கு கிடைச்ச வரம் டி… ஐ லவ் யூ…” என்கவும் அவனைக் காதலுடன் நோக்கினாள் அருணிமா.

“நிரு… எப்பவும் கேட்ப ஜாரிய பக்கத்துல வெச்சிட்டு சும்மா இருக்கேன்னு… இப்பவும் சும்மா இருக்கணுமா…” எனக் கிறக்கமாகக் கூறிய துருவ் அருணிமாவின் இதழ்களை நோக்கிக் குனிய, “போலே மாமோய்… எனக்கு வெக்கமா இருக்கு…” என வெட்கத்தில் தன்னவனின் மார்பிலே தஞ்சமடைந்தாள் அருணிமா.

*****சுபம்*****

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்