Loading

அருணிமா மருத்துவமனையில் கண் விழிக்கும் போது அவளைச் சுற்றி சகோதரர்கள் மூவருமே கவலையாக அமர்ந்திருந்தனர்.

 

தன் அருகில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த துருவ்வை பாய்ந்து அணைத்துக்கொண்ட அருணிமா, “மாமா… உனக்கு ஒன்னும் இல்லயேலே… நீயி நல்லா தானே இருக்க?” எனப் பதட்டமாகக் கேட்க,

 

துருவ், “எனக்கு ஒன்னும் இல்ல நிரு… பாரு… நான் நல்லா இருக்கேன்… உனக்கு எப்படி இருக்கு? தலை ஏதாவது வலிக்கிதா?” என வருத்தமாகக் கேட்கவும், “இல்ல மாமா…” என்றாள் அருணிமா.

 

முத்துராசுவிற்கும் ஜெய்யிற்கும் அருணிமா கண் விழித்தது நிம்மதியாக இருந்தது.

 

துருவ்விடம் இருந்து விலகிய அருணிமா தன் பார்வையைத் திருப்ப, ஜெய்யைக் கண்டு அதிர்ந்தவள், “அண்ணாத்த… நீயி… நீயி உசுரோட தான் இருக்கியாலே? எங்க அண்ணனும் சென்னியும் சேர்ந்து உன்ன கொன்னாய்ங்களே…” என்க, சகோதரர்கள் மூவருமே அதிர்ந்தனர்.

 

முத்துராசு, “அருணி… நீயி சரி ஆகிட்டியாலே? உனக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?” என அவசரமாக வினவ, “ஆமாண்ணே… முதல்ல என்ன நடந்துச்சுன்னு யாராவது சொல்லுலே… எங்க ஐயன் உங்கள கொல்ல வந்தார் தானே மாமா… எப்படிலே தப்பிச்சீய?” என வருத்தமாகக் கேட்டாள் அருணிமா.

 

மூவரிடமும் கனத்த அமைதி நிலவ, அதனைக் கலைத்த அருணிமா, “உங்க கிட்ட தான் கேட்குறேன்… சொல்லுலே… எங்க ஆத்தா எங்கலே? அவிய என் பின்னாடி தானே வந்தாய்ங்க…” என்க, “நிரு… உனக்கு டயர்டா இருக்கும்… நீ ரெஸ்ட் எடு… நாம அப்புறம் வரோம்…” என்ற துருவ் அங்கிருந்து கிளம்பப் பார்க்க, அவனின் கைப் பிடித்து தடுத்த அருணிமா, “தயவு செஞ்சி சொல்லிட்டு போலே மாமா… எனக்கு என்னவோ மனசுக்கு தப்பாவே படுது… முடியல… தலை வெடிக்க போறது போல வலிக்கிது…” எனத் தன் தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு கூறவும் மீண்டும் அருணிமாவிற்கு ஏதாவது ஆகி விடும் என்று பயந்த துருவ், “நிரு… எதுவும் இல்ல… நீ டென்ஷன் ஆகாதே…” என அவளை சமாதானப்படுத்தினான்.

 

தன் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்ட துருவ், “நிரு… அது வந்து…” எனத் தயங்க, “என்ன ஆச்சுலே… மாமா… உன்ன தான் கேட்குறேன்… சொல்லுலே…” என அருணிமா கத்தவும் இதுவரை நடந்த அனைத்தையும் மூவரும் கூற, அருணிமாவிடம் கனத்த மௌனம் நிலவியது.

 

துருவ், “நிரு…” என அவள் தோள் தொட, “ஆஹ்…….. ஆத்தா…” எனக் கதறினாள் அருணிமா.

 

துருவ் அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் திகைக்க, “எனக்குன்னு இருந்த ஒரே சொந்தமும் போயிடுச்சே மாமா… நான் என்னலே பண்ணுவேன்…” என தலையில் அடித்துக்கொண்டு அழ, “நிரு… ப்ளீஸ்… அழாதே…” என்றான் துருவ் கண்கள் கலங்க.

 

அவனின் கரத்தை தட்டி விட்ட அருணிமா, “நீங்க மூணு பேருமே அங்குட்டு தானேலே இருந்தீய… ஏன் அவியல தடுக்கல… ஐயோ… ஆத்தா… கடைசி வரை புருஷன், புள்ளைங்களுக்காகவே வாழ்ந்து உனக்குன்னு எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமலே போய்ட்டியேலே ஆத்தா… ஏன் மாமா நீயி அவியல சாக வுட்டுட்டு பார்த்துட்டு இருந்தீய… சொல்லுலே… சொல்லு…” என்று கதறினாள் துருவ்வின் சட்டையைப் பிடித்தபடி.

 

சற்று நேரம் சகோதரர்கள் மூவரும் அவளை அழ விட, “நான்… நான் ஆத்தாவ பார்க்கணும்லே… என் ஆத்தாவ நான் கடைசியா ஒரு தடவ பார்க்கணும்…” என்ற அருணிமா கட்டிலை விட்டு கீழிறங்கி வெளியே ஓடினாள்.

 

துருவ்வும் அவசரமாக அவள் பின்னே ஓட, அருணிமாவோ அங்கு நின்ற மருத்துவர் ஒருவருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள்.

 

அருணிமா, “எங்க என் ஆத்தா? சொல்லுலே… நான் பார்க்கணும் அவியல…” எனக் கதற, “சாரி சாரி டாக்டர்…” என்றபடி துருவ் அருணிமாவை அங்கிருந்து நேராக விஜயாவின் உடலை வைத்திருந்த பிரேத அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

விஜயா துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டதுமே அவசர அவசரமாக அவரை மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.

 

ஆனால் ஏற்கனவே அவரின் உயிர் இவ் உலகை நீத்திருக்க, காவல்துறையினரின் விசாரணை, பிரேத பரிசோதனை என நேரம் சென்றது.

 

பிரேத பரிசோதனை முடிந்து விஜயாவின் உடலைக் கொண்டுவந்திருக்க, அருணிமாவை துருவ் அங்கு அழைத்துச் செல்லவும் தன் தாயின் உயிரற்ற உடலைப் பிடித்தபடி கதறி அழுதாள் அருணிமா.

 

அருணிமா, “ஆத்தா… எந்திரிலே… நீயி கொஞ்சம் கூட உன் பொண்ண பத்தி யோசிக்கலயே… அதனால தானே என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டீய… இருக்குற வரைக்கும் அந்த சாதி வெறி பிடிச்ச மனுஷனுக்காகவே எல்லாம் பண்ணீய… இப்போ அவரு போனதும் நீயும் போய்ட்டியேலே… அப்போ உனக்கு உன் மவள விட அந்த பாவிங்க மேல தான் அம்புட்டு பாசமாலே?” என விஜயாவின் உடலைப் பிடித்து உலுக்க, “நிரு…” என அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான் துருவ்.

 

முத்துராசுவிற்கும் ஜெய்யிற்கும் அருணிமாவை எண்ணி கவலையாக இருந்தது.

 

துருவ்வை அணைத்துக்கொண்டு அழுத அருணிமா, “மாமா… ஆத்தாவ எந்திரிக்க சொல்லுலே… எனக்கு அவிய வேணும்… வர சொல்லு…” என அழுதாள்.

 

முத்துராசு, “எலேய் துருவா… நேரம் போய்ட்டே கிடக்குதுலே… சீக்கிரம் ஆக வேண்டிய காரியத்த பார்க்கணும்… அருணி… நீயி வருத்தப்படாதேலே… உனக்கு நாங்க அம்புட்டு பேரும் இருக்கோம்… உன் ஆத்தா எங்குட்டு இருந்தாலும் உன் கூட தான்லே இருப்பாய்ங்க…” என அருணிமாவை சமாதானப்படுத்தவும் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு ஜெய்யின் பக்கம் திரும்பிய அருணிமா, “அண்ணாத்த… நீயி எங்க ஆத்தாக்கு மயேனா இருந்து கொள்ளி வைக்குறியாலே?” எனக் கேட்க,

 

ஜெய், “எலேய்… என்ன புள்ள நீயி… இப்படி கேட்டுப்புட்ட… நீயி என்னை அண்ணாத்தன்னு வெறும் பேச்சுக்கு தானாலே சொல்லுறீய? நீயி எனக்கு தங்கச்சின்னா அவிய எனக்கும் ஆத்தா தான்… நீயி சொல்லாட்டியும் நான் இதை செஞ்சி இருப்பேன்லே…” என அருணிமாவின் தலையை வருடியபடி கூறவும் கண்ணீருடன் அவனை அணைத்துக்கொண்டாள் அருணிமா.

 

பின் விரைவாக விஜயாவின் இறுதிக் கிரியைகள் நடக்க, ஜெய் தான் மகன் ஸ்தானத்தில் அனைத்தையும் செய்தான்.

 

விஜயாவின் உடலை எரிக்கும் போது அருணிமா கதறிய கதறலில் அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கியது.

 

ராஜதுரை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததால் காவல்துறையினர் விசாரணை நடத்த, கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்ததால் அவ் வழக்கு விரைவாக முடிவுக்கு வந்தது.

 

விஜயாவின் இறுதி சடங்குகள் முடிந்து மருத்துவமனைக்கே மீண்டும் அருணிமாவை அழைத்து வர, அவளோ அமைதியே உருவாக சுவற்றை வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்.

 

முத்துராசுவிற்கு ஏதோ அழைப்பு வரவும் எடுத்து பேசி விட்டு வைத்தவன், “அருணி… உங்க ஐயாவோட பாடிய விசாரணை முடிஞ்சு தந்துட்டாய்ங்க… அவருக்கு…” என ஏதோ கூற வந்தவன் தயங்கி நிற்க, முத்துராசுவின் பக்கம் கோபமாகத் திரும்பிய அருணிமா, “சொல்லுண்ணே… எதுக்குலே நிறுத்திட்டீய? அந்த சாதி வெறி பிடிச்ச மிருகத்தோட கடைசி காரியத்த நான் செய்யணுமா? சொல்லுலே… முடியாதுண்ணே… எம்புட்டு பேர அவரோட சாதி வெறிக்கு பலி கொடுத்து இருக்குராரு அந்த மனுஷன்… யாருக்குமே எந்த நல்லதும் பண்ணலயே… அது அநாதை பொணமாவே போகட்டும்லே… கட்டின பொண்டாட்டின்னு கூட பார்க்காம எங்க ஆத்தாவையும் பொண்ணுன்னு கூட பார்க்காம என்னையும் அந்த ஆளும் அவிய மயேனும் சேர்ந்துட்டு என்னவெல்லாம் கொடுமை பண்ணாய்ங்க… எம்புட்டு பேரோட உறவுகளை கொன்னு அநாதை ஆக்கி இருப்பாருலே அந்த சாதி வெறி பிடிச்ச மிருகம்… அம்புட்டு பேரோட சாபமும் தான்லே அந்த ஆளுக்கு இன்னைக்கு இந்த நிலமை… அந்த ஆளோட பொணம் அநாதையாவே கிடக்கட்டும்..‌.” என்றாள் ஆவேசமாக.

 

யாருமே அருணிமாவின் முடிவை எதிர்த்து பேசவில்லை.

 

சகோதரர்கள் மூவருமே அருணிமாவிற்காகத் தான் யோசித்தனர். ஆனால் அவளே கூறிய பின் அவர்களுக்கு என்ன கவலை?

 

சற்று நேரம் அங்கு அமைதியே நிலவ, திடீரென துருவ், “அண்ணா… அம்மா கிட்ட இன்னும் உண்மைய சொல்லலயேண்ணா… ஜெய்யும் நிருவும் உயிரோட இருக்குறத சொன்னாலே அவங்க குணமாகிடுவாங்கண்ணா…” என்கவும் முத்துராசுவும் சம்மதமாய் தலையசைக்க, அவர்களைப் புரியாமல் நோக்கிய அருணிமா, “அத்தைக்கு என்னாச்சுலே… அவிய நல்லா தானே இருக்காய்ங்க? என்ன குணமாகணும்னு சொல்றீய…” எனக் கேட்க, முத்துராசு அலமேலுவின் நிலையைக் கூறவும் அதிர்ந்தாள் அருணிமா.

 

பின் நால்வருமே அலமேலுவைக் காணச் செல்ல, அவரோ உறக்கத்தின் பிடியில் இருந்தார்.

 

அவரின் அருகில் அமர்ந்த முத்துராசு, “ஆத்தா…” என மெதுவாக அழைக்கவும் கடினப்பட்டு கண்களைத் திறந்த அலமேலு எப்போதும் போலவே கண்ணைக் கசக்கிக்கொண்டு ஜெய்யைப் பற்றியே கேட்டார்

 

அலமேலு, “ராசா… என் புள்ளய பார்க்கணும் போலவே இருக்குலே… என் மயேனுக்கு பதிலா இந்தக் கட்டை போய் சேர்ந்து இருந்தா கூட பரவாயில்ல… உங்க ரெண்டு பேருக்காவது பாரம் இல்லாம இருந்து இருப்பேன்லே…” என்க, “அம்மா… என்ன பேச்சு பேசுறீங்க நீங்க… நீங்க எப்படிம்மா எங்களுக்கு பாரமா இருப்பீங்க… அன்னைக்கு மட்டும் நீங்க எங்கள பாரமா நெனச்சி விட்டு இருந்தீங்கன்னா நாங்க இவ்வளவு நல்லா வளர்ந்து படிச்சு உங்க முன்னாடி நின்னு இருப்போமாம்மா?” என்றான் துருவ் வருத்தத்துடன்.

 

அலமேலு அவனைப் பார்த்து கண் கலங்க, “ஆத்தா… உனக்கு ஒன்னு காட்ட போறோம்… நீயி ரொம்ப சந்தோஷப்படுவீய… அப்புறம் பாருலே உன் கை கால் எல்லாமே சரி ஆகிடும்…” என்ற முத்துராசு அலமேலுவை எழுப்பி கட்டிலில் சாய்த்து அமர வைக்க, “என் மயேனே இந்த ஆத்தாவ வுட்டு போய்ட்டான்… இதுக்கு மேல இந்த ராசி கெட்ட சிறுக்கிக்கு என்ன சந்தோஷம்லே கேட்குது?” எனக் கவலையாகக் கூறியவரின் பேச்சு அவரின் முன் வந்து நின்ற ஜெய்யைக் கண்டதும் அதிர்ச்சியில் தடைப்பட்டது.

 

ஜெய், “ஆத்தா…” என அவரை நெருங்க, அலமேலுவின் கண்கள் கண்ணீர் மழையைப் பொழிய, “து…துருவ்… கண்..ணா… இது… இது கனவு இல்..லயேலே… நெச..மா… என் புள்ளயா… இது… என்… ஜெய் கண்ணாவாலே?” அதிர்ச்சியில் திக்கித் திணறிக் கேட்க, துருவ்வும் முத்துராசுவும் புன்னகையுடன் ஆம் எனத் தலையசைத்தனர்.

 

“ஆத்தா… நான் தான்லே… உன் மயேன்… உன் ஜெய்… எனக்கு ஒன்னும் ஆகல ஆத்தா… நான் நல்லா இருக்கேன்லே…” என ஜெய் கூறவும், “என் புள்ள…” எனக் கதறியவாறு அலமேலு ஜெய்யைப் பிடிக்கப் பார்க்க, அவரின் கையும் காலும் சமநிலையில் இல்லாததால் விழப் பார்த்தவரை பாய்ந்து பிடித்துக்கொண்டான் ஜெய்.

 

“கண்ணா… கண்ணா… நீயி நல்லா தான் இருக்கியாலே? இம்புட்டு நாளா இந்த ஆத்தாவ வுட்டுட்டு எங்கலே போய் இருந்தீய? இவிய எல்லாம் நீயி செத்துட்டதா சொன்னாய்ங்க… ஆத்தா துடிச்சு போய்ட்டேன்… எலேய் ராசு… துருவா… என் மயேன் வந்துட்டான்லே… ஆத்தா கிட்ட வந்துட்டான்… அவனுக்கு ஒன்னும் இல்ல… என் மயேன்… என் மயேன் நல்லா இருக்கான்லே…” என அலமேலு கண்ணீர் சிந்த,

 

“ஆமா ஆத்தா… உன் மயேன் தான்லே… ஜெய் இம்புட்டு நாளா உசுரோட தான் இருந்தான்… உங்க பக்கத்துல தான் இருந்தான்…” என்ற முத்துராசு அனைத்தையும் கூறவும் மகிழ்ச்சியில் தன் புதல்வர்கள் மூவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டார் அலமேலு.

 

அனைவரும் மகிழ்ச்சியின் பிடியில் இருக்க, “ஆத்தா.. இன்னொருத்தங்களும் உன்ன பார்க்க வெளிய காத்துட்டு இருக்காய்ங்க…” என்ற ஜெய் வெளியே சென்று அருணிமாவை அழைத்து வரவும் அலமேலுவிற்கு மகிழ்ச்சியில் பேசுவதற்கு நா எழவில்லை.

 

அருணிமா, “அத்த… நல்லா இருக்கியாலே?” என்க, “அருணி கண்ணு… நீயும் உசுரோட தான் இருக்கியாலே? உன் ஐயன் உன்னையும் கொன்னுட்டதா சொன்னாய்ங்க…” என அலமேலு வருத்தத்துடன் கூறவும் அவரை அணைத்துக்கொண்ட அருணிமா, “கெட்டவங்க எப்பவுமே ஜெய்க்க மாட்டாய்ங்க அத்த… அவியலுக்கு கடவுள் கொடுக்குறது போலவே கொடுத்துட்டு ஒரேயடியா எல்லாத்தையும் பறிச்சிக்குவாரு… ஆனா நல்லவியலுக்கு பொறுமையா தான் கொடுப்பாரு… அவியலுக்கு தண்டனை கிடைச்சிடுச்சுலே… இனிமே எனக்கோ உங்களுக்கோ நம்ம சனத்துக்கோ எந்தப் பிரச்சினையும் இருக்காது… இங்குட்டு இனிமே எந்த பயலுக்கும் சாதிய பத்தி பேச தைரியம் வராதுலே…” எனப் புன்னகையுடன் கூறினாள்.

 

_______________________________________________

 

அருணிமா தானே இனி அலமேலுவைப் பார்த்துக்கொள்வதாகக் கூறவும் அவரை மருத்துவமனையில் இருந்து அவர்கள் முதலில் இருந்த வீட்டிற்கே அழைத்து வந்தனர்.

 

அருணிமா தன் தாயைப் போல அலமேலுவிற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து அவரைப் பார்த்துக்கொள்ள, அனைவருக்குமே அது மகிழ்ச்சியாக இருந்தது.

 

ஆனால் துருவ் தான் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல் முன்பு இருந்தது போலவே அருணிமாவிடமிருந்து விலகி இருக்க, அதனைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டான் ஜெய்.

 

ஜெய் துருவ்வின் கூத்தைப் பார்த்து ஒரு நாள் முடியாமல் அவனிடமே கேட்டு விட்டான்.

 

“எலேய்… என்னலே நீயி… அந்தப் புள்ள தலைல அடி பட்டு மனநிலை சரியில்லாம இருந்தப்போ நிரு நிருன்னு அவ பின்னாலயே கிடந்தியேலே… இப்போ தானே அது நல்லா இருக்கு…” என்க, “அதான் நீயே சொல்லிட்டியேடா… அந்த நேரம் தலைல அடி பட்டு சின்ன குழந்தை போல நடந்துக்கிட்டா… அதான் அவள நான் பார்த்துக்கிட்டேன்… அது மட்டும் இல்லாம அவளுக்கு என்னை மட்டும் தான் ஞாபகம் இருந்தது… இப்போ தான் அவ நல்லா இருக்காளே… பின்ன என்னடா?” என துருவ் சமாளிக்க, “உன் கூட எல்லாம் பேச முடியாதுலே… அந்தப் புள்ள தான் உனக்கு சரிப்பட்டு வரும்…” என ஜெய் கூறவும் அவனுக்கு பதில் அளிக்காது அங்கிருந்து கிளம்பினான் துருவ்.

 

ஆனால் அருணிமாவிற்கும் துருவ்வின் நடவடிக்கை கண்ணில் பட, வேண்டும் என்றே அவனை சீண்ட அடிக்கடி, “மாமோய்… நீயி தானேலே எனக்கு தினமும் ஊட்டி விடுவீய… இப்போ மட்டும் ஏன் ஊட்டி விட மாட்டேங்குறீய?” என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்க, அவளை முறைத்து விட்டு செல்வான் துருவ்.

 

ஆனால் அருணிமா மீண்டும் பழையபடி ஆனதில் துருவ்வை விட யாரும் மகிழ்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளே பூட்டிக் கொள்வான் அந்தக் கள்வன்.

 

அன்று மாலை முத்துராசுவும் துருவ்வும் எங்கோ சென்று விட்டு வீட்டிற்கு வர, அலமேலுவிற்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்த அருணிமா, “மாம்ஸ்… அண்ணே… இங்குட்டு வாலே ரெண்டு பேரும்… உங்க கூட கொஞ்சம் பேசணும்…” என்கவும் என்னவென்று புரியாமல் அவர்கள் வர, அருணிமா, ஜெய், அலமேலு மூவருமே ஏதோ கண்களால் பேசிக்கொண்டனர்.

 

துருவ், “எங்க கூட பேசணும் சொல்லிட்டு நீங்களே ஏதோ பேசிக்குறீங்க… என்னம்மா? என்ன சொல்லணும்?” என அலமேலுவிடம் கேட்க, ஜெய் அலமேலுவிடம் கண்களாலே கூறுமாறு கூற, அதனை அவதானித்த முத்துராசு, “எலேய்… ஜெய்… என்னலே… யாராவது சொல்லுங்க…” என்கவும், “உங்களுக்கு நாம மூணு பேருமே பொண்ணு பார்த்து இருக்கோம் அண்ணே…” என அருணிமா பட்டென போட்டு உடைக்கவும் முத்துராசு அதிர, துருவ் மகிழ்ச்சியில் புன்னகைத்தான்.

 

அலமேலு, “ஆமா கண்ணா… உனக்கும் வயசு ஏறிட்டே போகுது… ஆத்தாக்கு என் மூத்த மயேனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசையா இருக்குலே… உனக்கு அடுத்தது தம்பிங்க வேற இருக்காய்ங்க… எல்லாருக்கும் காலங்காலத்துல எல்லாம் நடக்கணுமேலே…” என்க,

 

“என்ன ஆத்தா நீயி… எனக்கு ஒன்னும் இப்போ கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்ல..‌. உனக்கு வேணும்னா இதோ தம்பிங்களுக்கு கல்யாணம் பண்ணி வைலே… துருவ்வுக்கு தான் பொண்ணு தயாரா இருக்கே…” என முத்துராசு அருணிமாவைக் காட்டிக் கூற, அருணிமா கண்களில் காதலுடன் துருவ்வை நோக்க, அவனின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது.

 

அருணிமா துருவ்வைப் பார்த்து கண் அடிக்க, அவசரமாக தன்னிலை அடைந்து தன் பார்வையைத் திருப்பிக்கொண்ட துருவ், “அண்ணா… நீ தான் முதல்ல கல்யாணம் பண்ணிக்கணும்… ஆமா அம்மா யாரு பொண்ணு?” என்க,

 

ஜெய், “எல்லாம் உனக்கு தெரிஞ்சவிய தான்லே…” என்கவும் துருவ்வும் முத்துராசுவும் புரியாமல் முழிக்க, “உள்ள வரலாமா?” என வாசலில் ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் அதிர்ந்தான் முத்துராசு.

 

அருணிமா, “ஹை… அக்கா வந்துட்டாய்ங்கன்னு நினைக்கிறேன்… நான் போய் அவியல கூட்டிட்டு வரேன்…” என்று ஓடியவள் சில நிமிடங்களில் அருணிமாவின் மருத்துவர் ஷாலினியை அழைத்து வரவும் துருவ் அவர்களைப் புரியாமல் நோக்க, அலமேலுவும் ஜெய்யும் ஷாலினியைப் பார்த்து புன்னகைத்தனர்.

 

ஷாலினி, “எப்படி இருக்கீங்கம்மா?” என்க, “எனக்கு என்னலே? என் பசங்க எல்லாரும் கூடவே இருக்காய்ங்க… நல்லா இருக்கேன்லே நானு…” என அலமேலு பதிலளித்துக்கொண்டிருக்க, “ஆத்தா… எனக்கு முக்கியமான சோலி ஒன்னு கிடக்குது… போய் வெறசா வந்துடுறேன்…” என முத்துராசு அங்கிருந்து செல்லப் பார்க்க, அவனைப் பிடித்துக்கொண்ட ஜெய், “எங்கண்ணே கிளம்பிட்டீய? இருலே… ஆத்தா உன்ன பத்தி தானேலே பேசிட்டு கிடக்குது…” என்கவும் முத்துராசு வேறு வழியின்றி அங்கேயே இருந்தான்.

 

அருணிமா அதனைக் கண்டு வாயை மூடி சிரிக்க, துருவ்வோ என்ன நடக்கிறது எனப் புரியாமல் பார்த்தான்.

 

“மாம்ஸ்…” என அருணிமா துருவ்வை தன்னிடம் வருமாறு கண் காட்டவும் துருவ் அதிர, அருணிமா யாருக்கும் கேட்காமல் மெதுவாக, “எலேய் மாமோய்… இம்புட்டு பேருக்கு மத்தியில உன் கூட ஒன்னும் ரொமான்ஸ் பண்ண கூப்பிடல… ஆசை தான் துரைக்கு… பாரு மூஞ்சி போன போக்க…” என முணுமுணுத்தவள் உதட்டை சுழிக்க, “என்ன நடக்குது இங்க? உன் டாக்டர் எதுக்கு இங்க வந்து இருக்காங்க?” என்றான் துருவ் புரியாமல்.

 

அருணிமா அவனின் காதில் ஏதோ கூறவும் முதலில் அதிர்ந்த துருவ்வின் முகத்தில் தானாவே புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

 

அலமேலு, “ஷாலினி கண்ணு… என் மூத்த மயேன் கல்யாணத்த பத்தி தான் பேசிட்டு இருந்தோம்லே…” என ஷாலினியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு கூற, முத்துராசுவைக் கடைக் கண்ணால் பார்த்த ஷாலினி, “ஓஹ்… அவருக்கு பிடிச்சிருக்காம்மா? ஓக்கே சொல்லிட்டாங்களா?” என வருத்தமான குரலில் கேட்கவும், 

 

“இன்னும் இல்ல அண்ணி… ஒரு வேளை பொண்ணு யாருன்னு சொன்னா அண்ணன் கண்ண மூடிட்டு சம்மதிப்பாரோ என்னவோலே…” என ஜெய் கூறவும் முத்துராசுவும் ஷாலினியும் அதிர்ந்தனர்.

 

ஷாலினி அதிர்ந்து விளிக்கும் போதே, “என் மயேன கட்டிக்குறியாலே?” என அவளிடம் அலமேலு கேட்கவும் மகிழ்ச்சியில் அவள் கண்கள் கண்ணீரை சுரந்தன.

 

முத்துராசு, “ஆத்தா… என்னலே இது?” என்க, “அண்ணே… அத்தைக்கு எல்லாம் தெரியும்லே… அக்கா என்னை பார்க்க நம்ம வீட்டுக்கு வரும் போதெல்லாம் அதிகமா நீங்களும் வந்து இருக்கீய… அக்கா பார்க்காத நேரம் நீங்க அவியல ஏக்கமா பார்த்தத கூட நான் பார்த்தேன் அண்ணே… ஆனா அப்போ ஏன்னு சரியா தெரியல… நீங்க அவியலுக்காக தானேலே வந்தீய… அக்கா அடிக்கடி உங்கள பத்தி என் கிட்ட கேட்டு இருக்காய்ங்க… அப்போ தான் அக்காக்கும் உங்கள பிடிக்கும்னு தெரிஞ்சது… அதான் நானும் அண்ணாத்தயும் அத்த கிட்ட உங்களுக்காக பேசினோம்லே…” என அருணிமா புன்னகையுடன் கூறவும் முத்துராசு தலை குனிந்தான்.

 

துருவ், “அண்ணி… உங்களுக்கு எங்க அண்ணன பிடிச்சிருக்கா?” என ஷாலினியிடம் கேட்க, “உங்க அண்ணனுக்கு முன்னாடி எனக்கு தான் துருவ் அவரை பிடிச்சது… அவருக்காக தான் நான் இந்த ஊருக்கே போஸ்டிங் கேட்டு வந்தேன்…” என்கவும் முத்துராசு அதிர, ஷாலினி நடந்ததைக் கூறினாள்.

 

_______________________________________________

 

முத்துராசு சென்னை கலை மற்றும் விஞ்ஞானக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்க, அதே கல்லூரியில் தான் ஷாலினியும் படித்தாள்.

 

யாரிடமும் பெரிதாக ஒட்டாமல் எப்போதும் ஒரு வித இறுக்கத்துடனே சுற்றுபவனை பார்த்த முதல் பார்வையிலேயே ஏனோ ஷாலினிக்கு பிடித்து விட, அதனைத் தன் வீட்டில் உடனே பகிர்ந்தாள் ஷாலினி.

 

ஷாலினியின் குடும்பம் சற்று வசதியானதாக இருந்தாலும் அவர்கள் யாருமே மகளின் விருப்பத்தை மறுக்கவில்லை.

 

முத்துராசுவைப் பற்றி தேடி அவனைப் பற்றித் தெரிந்து கொண்ட ஷாலினியின் குடும்பத்தினரே அவனின் கடந்த காலத்தை எண்ணி வருத்தப்பட்டனர்.

 

ஷாலினியோ என்ன நடந்தாலும் முத்துராசுவின் கரம் பிடிக்க உறுதி எடுத்தவள் அன்றிலிருந்து முத்துராசுவே அறியாமல் அவனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தாள் தன் குடும்பத்தின் உதவியுடன்.

 

திருவம்பட்டியில் ராஜதுரையை எதிர்த்து தேர்தலில் நிற்கும் போதெல்லாம் அவனுக்கு உதவியது ஷாலினியின் குடும்பம் தான்.

 

ஆனால் ஷாலினியே எதிர்ப்பார்க்காதது முத்துராசுவிற்கும் அவளைப் பிடித்துப் போனது தான்.

 

ஷாலினி முத்துராசுவைப் பற்றி கூறிய சில நாட்களிலே அவனுடன் ஷாலினியின் அண்ணன், தந்தை என முத்துராசுவுடன் தற்செயலாக பழகுவது போல் பழக, அவனுக்கும் அவர்களை எல்லாம் மிகவும் பிடித்து விட்டது.

 

ஏதாவது உதவி என்றால் அவர்கள் தான் முதலில் முன் வருவார்கள்.

 

முத்துராசுவிற்கே முதலில் அவர்கள் தனக்கு ஏன் இவ்வளவு உதவி செய்கிறார்கள் என சந்தேகமாக இருக்க, அவர்கள் பழகும் விதம் முத்துராசுவைக் கவரவும் அவன் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

 

ஒரு நாள் அவர்கள் ஷாலினியை அறிமுகப்படுத்தவும் முத்துராசுவே அறியாமல் அவன் மனதில் நுழைந்து விட்டாள் ஷாலினி.

 

முத்துராசு திருவம்பட்டி வந்ததும் ஷாலினியும் அங்குள்ள மருத்துவமனையிலேயே பணியில் சேர்ந்தாள்.

 

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவத்தில் அங்குள்ள மருத்துவர்கள் ஷாலினியையே அருணிமாவிற்கு சிகிச்சை அளிக்க அழைத்து வந்த போது அவர்கள் முத்துராசுவின் சொந்தங்கள் என்றதும் இன்னும் கவனம் எடுத்து ஷாலினி அருணிமாவைப் பார்த்துக்கொண்டாள்.

 

அருணிமாவை வீட்டிற்கு அழைத்து வந்த பின் முத்துராசுவிற்கும் அருணிமாவின் மருத்துவர் என்ற முறையில் ஷாலினிக்கும் இடையில் நல்ல நட்பொன்று உதயமானது.

 

நாட்கள் கடக்க ஷாலினி அருணிமா மீதும் மருத்துவமனையில் இருக்கும் அலமேலு மீதும் காட்டும் அன்பும் பாசமும் முத்துராசுவின் மனதை ஏதோ செய்ய, தான் அவளை விரும்புவதை உணர்ந்த முத்துராசு அதிர்ந்தான்.

 

ஆனால் தனக்கு இவ்வளவு உதவி செய்யும் குடும்பத்திற்கு தான் துரோகம் செய்யக் கூடாது என்று தான் ஷாலினியிடம் இருந்து விலகியே இருந்தான் முத்துராசு.

 

ஆனால் அடிக்கடி அவன் பார்வை ஷாலினியின் மீது ஏக்கமாகப் படிவதை அவதானித்து இருந்த அருணிமா அதனைப் பற்றி அலமேலுவிடமும் ஜெய்யிடமும் கூறவும் அனைத்து இரகசியங்களும் வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

 

_______________________________________________

 

ஷாலினி அனைத்தையும் கூறி முடிக்கவும் முத்துராசுவைத் தவிர அனைவருமே மகிழ்ச்சியின் பிடியில் இருந்தனர்.

 

அவர்கள் அனைவருக்குமே முத்துராசுவிற்கு நல்ல வாழ்வு மட்டுமன்றி அவனுக்கு பிடித்த வாழ்க்கை கிடைக்கப் போவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

 

முத்துராசுவோ என்னவென்று கூற முடியாத ஒரு உணர்வில் சிக்கிக்கொண்டு இருந்தான்.

 

ஒரு பக்கம் மகிழ்ச்சி… இன்னொரு பக்கம் இந்தப் பெண் தன் மேல் இவ்வளவு காதலை வைத்துள்ளாளா என்ற அதிர்ச்சி… தான் அவளது காதலுக்கு தகுதியானவன் தானா என்ற சந்தேகம்… என பல மனநிலையில் இருந்தான் முத்துராசு.

 

அலமேலு, “அம்மாடி… அப்போ உன் வீட்டுல பேசவாலே?” என்க, கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் சம்மதமாய் தலையசைத்தாள் ஷாலினி.

 

“எலேய்… முத்து கண்ணா… ஆத்தா கிட்ட வாலே…” என அலமேலு அழைக்கவும் முத்துராசு அவரின் மறு பக்கத்தில் வந்து அமர, தலைகுனிந்து அமர்ந்து இருந்தவனின் தாடையைப் பிடித்து தூக்கிய அலமேலு, “கண்ணா… இந்த ஆத்தாக்காகவும் உன் தம்பிங்களுக்காகவும் நீயி நிறைய பண்ணிட்டியேலே… உன் சின்ன சின்ன சந்தோஷத்த கூட நீயி விட்டு குடுத்துட்டீய… இப்போ ஆத்தா என் மயேனுக்கு பிடிச்சத பண்ணி குடுக்க விரும்புறேன்லே… உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா ராசா?” என்க, முத்துராசு பதிலேதும் கூறாமல் அமைதி காத்தான்.

 

அனைவரும் முத்துராசுவின் பதிலையே எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, ஷாலினியோ எங்கு தன்னவன் மறுத்து விடுவானோ என்ற அச்சத்தில் இப்போது வெளி வரவா எனத் துடிக்கும் கண்ணீருடன் அவனின் முகத்தையே நோக்க, அலமேலுவின் கரத்தைப் பிடித்த முத்துராசு, “உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் ஆத்தா… இந்த கல்யாணத்துல எனக்கு முழு சம்மதம்லே…” என்கவும் அனைவருமே புன்னகைத்தனர்.

 

ஆனால் ஷாலினியின் முகமோ இன்னும் வாடி இருக்க, அதனைக் கவனித்த அருணிமா, “அண்ணே… அப்போ நீயி அத்தைக்காக தான் சம்மதிக்கிறியாலே? அக்காவ உனக்கு பிடிக்கலயா?” என்கவும் ஷாலினி முத்துராசுவின் முகத்தைப் பார்க்க, அப்போது தான் அவளின் முகத்தில் தெரிந்த கவலையைக் கவனித்த முத்துராசு சில நொடி அமைதியின் பின் புன்னகையுடன், “எனக்கு உன் அக்காவையும் பிடிச்சிருக்குலே அருணி…” என்கவும் ஷாலினியின் கண்கள் கண்ணீர் மழையைப் பொழிந்தன.

 

ஜெய், “ஹூ… எங்க அண்ணனுக்கு கல்யாணம்…” எனக் கத்தவும் அனைவரும் புன்னகைக்க, ஜெய்யைப் பொய்யாக முறைத்த முத்துராசு அனைவரும் தன்னையே பார்ப்பதைக் கண்டு வெட்கத்தில் தலை குனிந்தான்.

 

“அண்ணே… இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்குற ரேஞ்சுக்கு கம்முன்னு இருந்திருக்கியேலே… அண்ணி மேல அம்புட்டு காதலையும் வெச்சிக்கிட்டு சும்மா சிங்கிள்னு ஊர ஏமாத்திட்டு கிடந்து இருக்கீய நீயி… இப்போ புரியிதுலே அண்ணே இந்த துருவ் பயலுக்கு எங்குட்டு இருந்து இந்த பழக்கம்னு…” என ஜெய் கேலியாகக் கூறவும் துருவ் அவனை முறைக்க, முத்துராசுவும் ஷாலினியும் ஒருவரையொருவர் காதலுடன் நோக்கிக் கொண்டனர்.

 

எப்போதோ தமக்கான வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அருணிமா, “அத்த… இனிமே இங்குட்டு நமக்கு சோலி இல்ல… பேசாம கிளம்பிற வேண்டியது தான்லே…” என்றவள் ஜெய்யின் உதவியுடன் அலமேலுவை சக்கர நாற்காலியில் அமர்த்தி வெளியே அழைத்துச் செல்ல, இன்னும் அங்கிருந்து நகராமல் நின்றிருந்த துருவ்விடம் சென்ற அருணிமா, “மாமோய்… ஜாரிய பக்கத்துல வெச்சிட்டு உனக்கு தான் ரொமான்ஸ் பண்ண தெரியாம சாமியார் கணக்காட்டம் இருக்க… அவியலாவது சந்தோஷமா இருக்கட்டும்லே…” எனக் கேலியாகக் கூற, துருவ், “அடிங்கு… பேசுற பேச்சை பாரு…” என முறைப்புடன் கூறவும் காற்றில் அவனுக்கு ஒரு முத்தத்தை பறக்க விட்டு விட்டு ஓடினாள் அருணிமா.

 

தன்னவளின் செயலில் வெட்கத்தில் தலையில் அடித்துக் கொண்ட துருவ்வும் அவர்களைத் தொடர்ந்து அங்கிருந்து சென்றான்.

 

_______________________________________________

 

“மாமா… மாமா… மாம்ஸ்… மாமோய்…” என்ற அருணிமாவின் கத்தலில் கடுப்புடன் அவளை நெருங்கிய துருவ், “ஏய்… உனக்கு எத்தனை தடவ சொல்றது என்னை இப்படி கூப்பிடாதே… எனக்கு பிடிக்கலன்னு…” எனத் திட்ட, ‘மூஞ்சயும் முகரையும் பாரு… நான் அம்புட்டு நாள் கழிச்சி உன்ன மாம்ஸ்னு கூப்பிட்டதும் நல்ல சந்தோஷமா இளிச்சிட்டு இப்போ சும்மா நடிக்கிறியாலே? உனக்கு நல்ல வேலை செய்றேன் பாரு…’ எனத் தன்னவனை மனதில் திட்டிய அருணிமா துருவ் இன்னும் தன்னையே முறைத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு, “எனக்கு கல்யாணத்துக்கு என்ன ட்ரெஸ் போடன்னு தெரியல மாமா… அதான் உனக்கே செலக்ட் பண்ணி தர சொன்னேன்லே…” எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற, 

 

துருவ் அவளை முறைத்தபடியே சென்று ஒரு இளஞ்சிவப்பு நிற புடவையை எடுத்து வந்து அருணிமாவின் கரத்தில் திணிக்க, அதனைக் கண்டு அவளின் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன.

 

ஏனென்றால் அவளும் அதே புடவையை அணியத்தான் யோசித்து இருந்தாள். துருவ்வை சீண்டுவதற்காகவே அவனிடம் கேட்க, அவனும் அவளுக்குப் பிடித்ததையே எடுத்துக் கொடுக்கவும் இதை விட்டால் அருணிமாவிற்கு வேறு என்ன வேண்டும்?

 

அருணிமா அந்த சேலையைப் பார்த்து தனியே புன்னகைத்துக்கொண்டிருக்க, அங்கிருந்து சென்ற துருவ் தன் கெத்து குறையாமல் இருக்க மீண்டும் அருணிமாவிடம் திரும்பி வந்தவன், “இங்க பாரு… இது தான் உனக்கு கடைசியா சொல்றேன்… என்னமோ உனக்கு தாலி கட்டின புருஷன் போல என் கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காதே… அம்மாக்காக மட்டும் தான் நீ சொல்றதை எல்லாம் கேட்குறேன்… திரும்ப மாமா கீமான்னு ஏதாவது உளறிட்டு பின்னாடியே வந்த அவ்வளவு தான்…” என மிரட்டி விட்டுச் செல்ல, அவனின் முதுகைப் பார்த்து நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்டிய அருணிமா, ‘ஓஹ்… உங்க ஆத்தாவுக்காக தான் என் மேல அக்கறை இருக்குறது போல நடிக்கிறியா? அதையும் தான் பார்ப்போம்லே மாமோய்…’ என நினைத்தவள், “ஆஹ்… மா…மாமா… வலிக்கிதுலே… ரொம்ப வலிக்கிது மாமா…” என தன் தலையைப் பிடித்துக் கொண்டு வலியில் கதறியபடி மயங்கிச் சரிவது போல் நடிக்க, 

 

அருணிமாவிடம் பதட்டமாக ஓடி வந்த துருவ் அவளைத் தாங்கிப் பிடித்தவன், “நி…நிரு… நிரு… ஹேய்… என்னாச்சு டி… நிரு… கண்ண திறந்து பாரு நிரு… நான்… உன் மாமா சொன்னா கேட்ப தானே… பாரு நிரு… என்னாச்சு…” எனப் பதறியவனின் கண்கள் தன்னவளுக்கு ஒன்று என்றதும் சட்டென கலங்கி விட்டது.

 

மனதுக்குள் சிரித்த அருணிமா தன்னவனை இதற்கு மேலும் கலங்க வைக்க விரும்பாதவளாய் மெதுவாக விழிகளைத் திறக்க, “நிரு… நீ நல்லா தானே இருக்க…” எனப் பதட்டமாகக் கேட்ட துருவ் அருணிமாவை தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டான்.

 

சில நொடிகள் அவனின் அணைப்பில் கண் மூடிக் கிடந்தவள், “உன் வாயாலயே ஒத்துக்க வெச்சிட்டேன்லே மாமோய்…” என்கவும் பட்டென அருணிமாவைத் தன்னிடமிருந்து விலக்கிய துருவ் அவளின் முகம் நோக்க, “எனக்கு ஒன்னும் இல்ல மாம்ஸ்…” என அருணிமா கண்ணடிக்கவும் கோபமாக அவளை விட்டு விட்டு துருவ் அங்கிருந்து செல்லப் பார்க்க,

 

அவசரமாக அவனைப் பிடித்துக்கொண்ட அருணிமா துருவ்வின் கண்களை நோக்கியவள், “சாரி மாமா… நான் இம்புட்டு நாள் வரைக்கும் என் மனசுல உள்ள காதல உன் கிட்ட ஒழுங்கா வெளிப்படுத்தவே இல்ல… ஏதோ விளையாட்டுத்தனமா உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன்னு நெனச்சியாலே? இல்ல மாமோய்… எனக்கு உன்ன அம்புட்டு பிடிக்கும்லே… அதை வார்த்தையால சொல்ல தெரியாது… சின்ன வயசுல இருந்தே அருவாள்… ரத்தம்… சாதின்னு பார்த்து பார்த்து வெறுத்து போய் தான் எங்க ஐயன் கிட்ட சண்டை போட்டு சீமைக்கு படிக்க வந்தேன்லே… சொல்லப்போனா அந்த சாதி வெறி பிடிச்ச மிருகங்க கிட்ட இருந்து தப்பிச்சு சுதந்திரமான காத்த சுவாசிக்கணும்னு வந்தேன்… எங்க ஊருல இருக்கும் போது காதலிச்ச பயலுங்கள சாதிக்காக கொன்னுட்டதா கேட்கும் போதெல்லாம் இந்த காதலே வெறுத்துடுச்சுலே… ஆனா உன்ன முதல் தடவ பார்த்ததுமே உன்னோட நேர்மை… தைரியம்… அமைதி எல்லாமே என்னை உன் பக்கம் விழ வெச்சிடுச்சு… நெசமா சொல்லணும்னா எங்க ஐயன எதிர்க்குற தில்லு இருக்குற ஒரு ஆம்பளையா தான்லே உன்ன முதல்ல ரசிச்சேன்… ஆனா அதுவே காதலா மாறி போச்சு… உனக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு தோணிச்சு… உன் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமாலே… இந்த ஒத்த புருவம் உயர்த்தி பார்க்குற மேனரிசம் இருக்கே… அது தான்லே… மாமா… என் காதல் நெசம்லே… அதை உனக்கு வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது…” என்றவள் தன்னவனின் இதழ்களை சிறை பிடிக்க, முதலில் அதிர்ந்த துருவ் தன்னவளுடன் இணைந்து முத்தச் சண்டை நடத்தினான்.

 

அருணிமா மூச்சு விட சிரமப்படவும் துருவ் அவளை விலக்க, அருணிமாவைக் கண்களில் காதல் சொட்ட நோக்கியவனைப் பார்த்தவள், “நெசமாவே என் மேல காதல் இல்லாமயா…” என அருணிமா ஏதோ கூற வரவும் தன் இதழ்களால் அவளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் துருவ்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்