அமேலுவைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த முத்துராசு சுவற்றில் பெரிதாக மாட்டி மாலையிட்டு இருந்த புகைப்படத்தைக் கண்டு கண் கலங்கினான்.
அலமேலு பார்க்கும் முன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அங்கிருந்த கதிரையில் அமர்ந்தான்.
அலமேலு, “எலேய்… கண்ணுங்களா… நம்ம வூட்டுக்கு யாரு வந்திருக்காய்ங்கன்னு வந்து பாருலே…” என சத்தமாக அழைக்கவும் அறையிலிருந்து வெளியே வந்த இருவரும் முத்துராசுவைக் கண்டு அதிர்ந்தனர்.
ஜெய், “அண்ணே… எப்போ அண்ணே வந்தீய…” என்றவன் முத்துராசுவைக் கண்ட மகிழ்ச்சியில் அவனை அணைத்துக் கொள்ள,
பதிலுக்கு ஜெய்யை அணைத்து விடுவித்த முத்துராசு, “இப்போ தான்லே வந்தேன்…” என்றவன் இன்னும் அதிர்ச்சியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த துருவ்வைப் பார்த்து,
“எலேய் துருவா… என்னலே அப்படி பார்க்குறீய… அண்ணன் வந்தது உனக்கு பிடிக்கலயா…” எனக் கேட்டான் புன்னகையுடன்.
முத்துராசு அவ்வாறு கேட்கவும் உடனே ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்ட துருவ், “என்ன அண்ணா நீ இப்படி கேட்டுட்ட… நீ வந்தது எனக்கு எப்படி அண்ணா பிடிக்காம போகும்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா… ஆனா நீ ஊருக்கு வர மாட்டியோன்னு நினைச்சேன்… அதான் அண்ணா உன்னைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்…” என்க,
சிரித்த முத்துராசு, “என்னலே இப்படி கேட்டுப்புட்ட… இது என் ஊருலே… நான் எப்படி இங்குட்டு வராம இருப்பேன்…” என்றான்.
மூவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த அலமேலுவைக் கண்ட ஜெய், “என்ன ஆத்தா… இனிமே உன்னைக் கையிலயே பிடிக்க முடியாது போலயே… உன் மூத்த புள்ளயும் வந்துட்டான்… இனிமே எங்க ரெண்டு பேரும் உன் கண்ணுக்கு தெரியுமோ என்னவோ…” என்றான் கேலியாக.
அவனை முறைத்த அலமேலு, “போலே பொசக்கட்ட பயலே… வந்துட்டான் என் கிட்டையே லந்து பண்ணிட்டு… மூணு பேருமே இந்த ஆத்தாக்கு ஒன்னு தான்லே… நீயி மூணு பேரும் இல்லன்னா இந்த கட்டை எப்பவோ போய் சேர்ந்து இருப்பேன்…” எனக் கண் கலங்கக் கூற,
“ஆத்தா…” என சத்தம் போட்ட முத்துராசு, “நீயி இப்படியே பேசிட்டு இருந்தா நான் கிளம்பி சீமைக்கு போயிடுவேன் ஆத்தா..” என்றான் கோபமாக.
துருவ்வும் ஜெய்யும் அலமேலுவையே கவலையாகப் பார்த்துக் கொண்டிருக்க,
அலமேலு, “ஆத்தாவ மன்னிச்சிருலே… நான் ஒரு கூறு கெட்டவ… புள்ள வந்ததும் வராததுமா கண்டதையும் பேசி ஆத்திரப்படுத்திட்டு… மூணு பேரும் உக்காந்து பேசிட்டு இருலே… ஆத்தா இன்னைக்கு உங்களுக்கு பிடிச்சதா சமைச்சி போடுறேன்…” என்றவர் மறு புறம் திரும்பி மூவருக்கும் தெரியாதவாறு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றார்.
மூவரும் வெகு நாட்கள் கழித்து சந்தித்து உள்ளதால் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க,
சமயலறைக்கு வந்த அலமேலுவோ சமையல் கட்டின் மேல் மாட்டியிருந்த தன் கணவனின் மாலையிட்ட புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்தார்.
அதிக நேரம் அவர் சமையலறையிலேயே நேரம் கழிப்பதால் தன்னவனின் முகத்தை எப்போதும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவரின் புகைப்படத்தை அங்கு மாட்டியிருந்தார் அலமேலு.
அலமேலு, “எல்லாமே என்னை விட்டு போனதுக்கு அப்புறம் வாழ்க்கையே வெறுத்து போய் சாவுறது மேல்னு நெனச்சிட்டு இருக்கும் போது தான் இந்த புள்ளைங்க என் வாழ்க்கைல வந்தாய்ங்கயா… நீயி உசுரோட இருந்தா என்னை எப்படி பார்த்து இருப்பியோன்னு தெரியலையா.. ஆனா இந்த புள்ளைங்க மூணு பேரும் அவிய ஆத்தா சந்தோஷத்துக்காக நிறைய பண்ணிட்டாய்ங்கயா… அவிய மூணு பேரையும் இப்படி ஒன்னா பார்க்கும் போது எம்புட்டு சந்தோஷமா இருக்குது தெரியுமாயா… இப்போ எனக்கு இருக்கிறது ஒரே ஒரு ஆசை தான்யா… அவிய மூணு பேருக்கும் நல்ல வாழ்க்கைய அமைச்சி குடுக்கணும்யா… அதுக்கப்புறம் நானும் நிம்மதியா கண்ண மூடி உன் கிட்டயே வந்துருவேன்யா…” என்றவரின் விழி நீரை துடைத்து விட்டு அவரைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்ட துருவ்,
“ஏன்மா இப்படி பேசுறீங்க… உங்கள விட்டா எங்க மூணு பேருக்கும் யாரும்மா இருக்காங்க… நீங்களே ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க… நீங்க ஆசைப்படுறது போல நாங்க மூணு பேரும் நல்லா வாழ தான் போறோம்மா… அதை நீங்களும் எங்க கூடவே இருந்து பார்க்க தான் போறீங்க… இனிமே இப்படி எல்லாம் பேசாதீங்கமா… எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” எனும் போதே அலமேலுவின் தோள்ப்பட்டை ஈரமாகவும் அதிர்ந்தவர் துருவ் அழுவது புரிந்து அவன் புறம் திரும்பி,
“எலேய்… என்னய்யா நீயி… பொட்டப் புள்ள போல கண்ண கசக்கிக்கிட்டு… ஆத்தா இனிமே இப்படி எல்லாம் பேச மாட்டேன்… நீயி அழுவாதேலே… நான் ஒரு அறிவு கெட்டவ… சும்மா புள்ளைய அழ வெச்சிட்டு… இப்படி மூணு மகராசங்கள வளர்த்துட்டு நான் எதுக்குலே கவலை பட போறேன்… உங்க ஐயன் கூட மேல இருந்து உங்கள பார்த்து சந்தோஷப்படுறாரா இருக்கும்… முதல்ல கண்ணை துடைலே…” என்றவர் துருவ்வின் கண்களைத் துடைத்து விட்டார்.
“உங்க ரெண்டு பேரோட பாச மழையும் முடிஞ்சிடுச்சாலே… கொலைப் பசியில இருக்கேன் ஆத்தா… இன்னைக்கு சாப்பாடு கிடைக்குமா இல்லையா…” என அங்கு வந்த ஜெய் இருவரையும் பார்த்து கேலியாக கேட்க,
அலமேலு, “உனக்கு பொறாமை… என் புள்ளைய நான் கொஞ்சுறேன்… உனக்கு என்னலே வந்தது…” என்கவும், “சரி தான்..” என சிரித்தான் ஜெய்.
அவன் தலையில் தட்டிய முத்துராசு, “என்னலே நீயி… நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் ஆத்தா கிட்ட ரொம்ப தான் லந்து பண்ணிட்டு இருக்க… எனக்கு வெளிய ஒரு சோலி கிடக்குது… நீயும் என் கூட வாலே..” என்றவன்,
“அண்ணே… வேணாம்ணே… இந்தக் கொளுத்தி போடுற வெயில்ல உனக்கு என்னண்ணே சோலி கிடக்குது… நீ மட்டும் போண்ணே… நான் வரல…” என ஜெய் மறுக்க மறுக்க அவனை இழுத்துச் சென்றான் முத்துராசு.
அதனைக் கண்டு அலமேலுவும் துருவ்வும் சிரிக்க,
துருவ், “நானும் இன்னைக்கு உங்களுக்கு சமைக்க ஹெல்ப் பண்றேன் மா…” என்கவும் புன்னகையுடன் சம்மதித்தார் அலமேலு.
ஜெய்யை இழுத்துக் கொண்டு வந்த முத்துராசு வீட்டுக்கு வெளியே வந்ததும் அவன் கையை விட,
“என்னத்தண்ணே திங்குவ நீயி… இப்படி உடும்பு பிடியா பிடிக்கிற… ஆஹ்… வலிக்கிதுலே…” என முத்துராசு பிடித்த இடத்தைப் பார்த்து சிணுங்கினான் ஜெய்.
முத்துராசு, “நான் அந்த புள்ளைய உடனே பார்க்கணும்லே..” என்க,
அவனைப் புரியாமல் நோக்கிய ஜெய், “யாரண்ணே சொல்ற…” என்கவும்,
“அதான்லே… நம்ம துருவ் பின்னால ஒரு பொட்டப் புள்ள சுத்திட்டு இருக்கிறதா சொன்னியேல… அந்தப் புள்ளைய தான்லே…” என்றான் முத்துராசு.
ஜெய், “அருணிய சொல்றீங்களாண்ணே… பாவம்ணே அந்தப் புள்ள… இன்னைக்கும் இந்தப் பய அந்தப் புள்ளைய ரொம்ப வைஞ்சிட்டான்… எப்பப் பாரு அருணிய வையுறதே இவனுக்கு சோலியாப் போச்சு…” என்றவன் இன்று நடந்தவற்றைக் கூறினான்.
“அவன் ஆத்திரம் நியாயம் தான்லே… ஆனா அதை அந்தப் புள்ள மேல காட்டினது தான் தப்பு… சரிலே.. நீ எனக்கு அந்தப் புள்ளய காட்டு.. நான் கொஞ்சம் பேசணும்…” என முத்துராசு கூறவும் அவனை அருணிமாவைக் காண அழைத்துச் சென்றான் ஜெய்.
_______________________________________________
ஆற்றங்கரையில் அமர்ந்து ஓடும் நீரில் கல்லெறிந்து கொண்டிருந்தாள் அருணிமா.
கைகள் தன் பாட்டில் கற்களை எறிய மனமோ குழம்பிய குட்டையாய் அமைதியின்றி தவித்தது.
அவளது தந்தை இன்று அவளிடம் நடந்து கொண்ட முறை ஒரு பக்கம் வலியாய் இருக்க, அன்னையின் வார்த்தைகள் ஒரு புறம் அவள் மனதை வாட்டியது.
துருவ்வைப் பற்றி எதுவுமே தெரியாமல் தான் அவன் மீது காதலில் விழுந்தாள் அருணிமா.
ஆனால் இப்போது அவனைப் பற்றி தெரிந்தும் தன் காதலை விட அவளுக்கு மனம் வரவில்லை.
தன் காதலால் துருவ்விற்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தந்தையால் ஆபத்து ஏற்படும் என ஒரு மனம் கூற,
தந்தை சொன்னது போல் தன் காதலைக் கை விட்டால் தானும் சாதி பார்த்து காதலிப்பது போல் ஆகி விடும் என இன்னொரு மனம் வாதிட்டது.
என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தவளின் பின்னால், “அருணி..” என ஜெய்யின் குரல் கேட்டதும் அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டு போலிப் புன்னகையுடன் ஜெய்யின் பக்கம் திரும்பினாள் அருணிமா.
ஜெய்யுடன் வேறு ஒரு ஆடவனும் நிற்பதைக் கண்டு அருணிமா கேள்வியாக அவனை நோக்க,
ஜெய்யோ அருணிமாவின் கன்னத்தில் இருந்த கைத் தடத்தைக் கண்டு அதிர்ந்தவன், “ஹேய்.. அருணி… என்னாச்சு… உன் மூஞ்சி ஏன் இப்படி கிடக்குதுலே…” என்க,
அருணிமா, “அது ஒன்னுமில்ல அண்ணாத்த.. உனக்கு தான் என்னைப் பத்தி தெரியும்ல… ரோட்ட நேரா பார்த்து நடக்க மாட்டேனே… நிலைல இடிச்சிக்கிட்டேன்…” என வாய்க்கு வந்த பொய்யைக் கூறினாள்.
அவளை நம்பாத பார்வை பார்த்த ஜெய், “நெசமா தான் சொல்றியாலே… இது ஏதோ கை அச்சு போல இருக்கு… உண்மைய சொல்லுலே…” என்கவும் வேறு வழியின்றி இன்று வீட்டில் நடந்தவற்றைக் கூறினாள் அருணிமா.
“துருவ்வுக்கு உன் அப்பன் மேல உள்ள கோபம் சரி தான்லே.. ச்சே… அவிய எல்லாம் மனுஷங்க தானா… பெத்த பொண்ணையே கழுத்த நெறிச்சி இருக்காரு…” என ஜெய் கோபத்தில் பேச, அருணிமா எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.
முத்துராசு, “எலேய்… அமைதியா இருலே…” என ஜெய்யை அமைதியாக்கப் பார்க்க,
ஜெய், “இல்லண்ணே… எம்புட்டு வெறி அந்த மனுஷனுக்கு… அவிய எல்லாம் இந்த உலகத்துக்கே பாரம்ணே..” என்றான் கோபமாக.
“ஜெய்… நீ கொஞ்சம் நேரம் அங்குட்டு போய் நில்லுலே… இந்தப் புள்ள கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..” என முத்துராசு கூற,
ஜெய், “அது வந்துண்ணே… நான்…” என ஏதோ கூற வர,
முத்துராசு, “அண்ணன் சொல்றேன்ல… போலே…” என்றான் சற்று அழுத்தமாக.
முத்துராசுவைக் கோபப்படுத்த விரும்பாத ஜெய் அருணிமாவின் முகத்தைத் தயக்கமாகப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்.
அருணிமா என்ன நடக்கிறது எனப் புரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க, ஜெய் சென்றதும் அருணிமாவின் பக்கம் திரும்பிய முத்துராசு, “நான் துருவ், ஜெய்யோட அண்ணன்…” எனத் தன்னை அறிமுகப்படுத்தவும் புன்னகைத்த அருணிமா,
“வணக்கம்ணே… நான் இதுக்கு முன்னாடி உங்கள பார்த்தது கிடையாது… அதனால தான் சரியா தெரியல.. மன்னிச்சிருணே..” என்க,
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாத முத்துராசு, “எதுக்குலே என் தம்பி பின்னாடி சுத்துறீய..” என்றான் கடுமையாக.
“என்ன கேக்குறீய…” என அருணிமா புரியாமல் கேட்க,
முத்துராசு, “உன் அப்பன்காரன் சொல்லி தான் என் தம்பி பின்னாடி சுத்திட்டு இருக்கியாலே..” என்று அழுத்தமாகக் கேட்கவும் அதிர்ந்த அருணிமா,
“என்ன பேசிட்டு இருக்கியலே… துருவ நான் நெசமாலுமே காதலிக்கிறேன்..” என்றாள் அருணிமா கோபமாக.
ஏதோ நகைச்சுவை கேட்டது போல் சிரித்த முத்துராசு, “என்னலே… விளையாடுறியா… உன் அப்பன் தான் சாதி வெறியில ஊறி போய் கிடக்குறாரே… நீ மட்டும் எப்படிலே கீழ் சாதிக்கார பயல காதலிப்பீய… என்ன… உன் அப்பன் என் தம்பியை வெச்சி என்னைப் போட பார்க்குறானா…” என்க,
அருணிமா, “இங்க பாருங்கண்ணே… உங்களுக்கும் எங்க ஐயனுக்கும் இடைல என்ன பிரச்சினைனு எனக்கு நெசமாலுமே தெரியாது… துருவ்வ முதல் தடவை பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருச்சுலே… துருவ்வ பத்தி எதுவுமே தெரியாம தான் நான் காதலிச்சேன்… ஒவ்வொரு தடவையும் அவன் என்னை காதலிக்கலைன்னு சொல்லி துரத்தி விடும் போதும் திரும்ப திரும்ப அவன் பின்னாடியே போனேன்… ஆனா இப்போ சாதிக்காக என் காதல விட்டா என்னைப் போல கீழ்த்தரமானவ இந்த உலகத்துலயே கிடையாது… இப்போ சொல்றேன் கேட்டுக்கோலே… நீயி இல்ல எம்புட்டு பேரு என் காதல எதிர்த்தாலும் என் காதல் மாறாது… துருவ் மேல நான் வெச்சி இருக்குற காதல் நெசம்… அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்… எங்க ஐயன எதிர்க்க கூட பயப்பட மாட்டேன்லே… இம்புட்டு நேரமும் என் ஒருத்தி காதலால துருவ்வுக்கோ அவிய சார்ந்தவங்களுக்கோ ஆபத்து வரும்னு தான் பயந்துட்டு இருந்தேன்… ஆனா என்னமோ தெரியல.. உங்க கூட பேசினதும் ஒரு தைரியம் வந்திடுச்சு…” என்றாள் கண்களில் திமிருடன்.
அவள் பேச்சில் புன்னகைத்த முத்துராசு, “நம்ம பயலு சொன்னது நெசம் தான்லே… ரொம்ப வாயி தான் உனக்கு… ஆனா என் தம்பிக்கு சரியான ஆள் தான்லே நீயி.. மன்னிச்சிரு புள்ள… நீ ராஜதுரையோட பொண்ணுன்னு கேள்வி பட்டதும் ஒரு சந்தேகத்துல தான் அப்படி பேசிட்டேன்… ஆனா உன் வார்த்தையில பொய் இல்ல… நான் துருவ் கூட பேசுறேன்மா… அவன் நான் சொன்னா தட்ட மாட்டான்லே…” என்கவும்,
“வேணாம்ணே… என்னையும் மன்னிச்சிருங்க… நீயி என் காதல சந்தேகப்படவும் ஆத்திரம் வந்திடுச்சுலே… அதனால தான் அப்படி பேசிட்டேன்… நீயி எனக்காக உங்க தம்பி கூட பேசுறேன்னு சொன்னதே எனக்கு போதும்… ஆனா உங்க தம்பி நீங்க சொல்லி என் காதல ஏத்துக்குறது நல்லா இல்லண்ணே… என் காதல் நெசம்னா உங்க தம்பியே என்னை தேடி வருவான்லே… இம்புட்டு நாளும் எங்க ஐயனுக்கு பயந்து தான் நான் கம்முன்னு இருந்தேன்… ஆனா அவியலே என் கிட்ட அவிய நெசமான மூஞ்ச காட்டினதுக்கு அப்புறம் எனக்கு இருந்த பயமே போச்சு… அவிய சாதி வெறிக்கு என் காதல பழி கொடுக்க மாட்டேன்லே… இனிமே இந்த அருணிமா அவ ஐயனோட சாதி வெறிய அழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பா…” என்றாள் அருணிமா உறுதியாக.
பின் முத்துராசு ஏதோ கூறவும் அதிர்ந்த அருணிமாவின் கண்கள் தானாகவே கண்ணீரை சிந்த, அவளின் மனதிலோ தன் தந்தையின் மேல் தீராத வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட்டது.
அருணிமாவிடம் விடை பெற்றுக் கொண்டு முத்துராசு வர, அவ்வளவு நேரம் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என பொறுமையின்றி தவித்த ஜெய் முத்துராசு வந்ததும்,
“என்னாச்சுண்ணே… எதுக்குண்ணே அந்தப் புள்ள கிட்ட தனியா பேசணும்னு சொன்னீய… நீ ஏதாவது சொல்லிட்டியாண்ணே.. பாவம்ணே அது… ரொம்ப நல்ல பொண்ணுண்ணே… என்னை வேற தனியா போக சொல்லிட்டீய…” என்க,
“எலேய்… நிறுத்துலே… சும்மா அந்தப் புள்ளய பத்தி தெரிஞ்சிக்க தான் பேசினேன்… நல்ல பொண்ணா தான் இருக்கா… நம்ம துருவ்வுக்கு ஏத்த புள்ள தான்…” என்றான் முத்துராசு புன்னகையுடன்.
ஜெய், “ஆமாண்ணே… ஆனா அந்தப் பய சும்மா வீம்பு பண்ணிட்டு கிடக்குதுலே… அவனுக்கும் அந்தப் புள்ள மேல ஆசை இருக்கு… ஆனா காட்டிக்க மாட்டேங்குறான்…” என்கவும்,
முத்துராசு, “எம்புட்டு நாளைக்கு தான்லே மறைக்க முடியும்… எல்லாம் கூடிய சீக்கிரம் வெளிய வந்து தான்லே ஆகணும்…” என்றான் இரு பொருள் பட.
_______________________________________________
“என்னலே சொல்ற… யாரு அவன்… அந்த ****சாதிக்காரப் பயலுங்களுக்கு தங்க வசதி பண்ணி கொடுக்குற அளவுக்கு பெரிய ஆளாய்யா அவன்… அதுவும் இந்த ராஜதுரையையே எதிர்த்து நிற்கிற அளவுக்கு தைரியமாலே…” என ராஜதுரை ஆவேசமாகக் கேட்க,
அவரின் அடியாள் ஒருவன், “நம்ம ஊருக்காரன் தான்ணே… இம்புட்டு நாளும் சீமைல இருந்து இருக்கான்… இன்னைக்கு தான் இங்குட்டு வந்திருக்கான்… வந்ததும் அவன் ஆளுங்க கிட்ட சொல்லி அந்த கீழ் சாதிக்காரப் பயலுங்களுக்கு தங்க இடம் அமைச்சி கொடுக்குறான்ணே… அவன் பேரு கூட ஏதோ முத்துராசுன்னு சொன்னாய்ங்கண்ணே…” என்கவும் அதிர்ந்தார் ராஜதுரை.