“இன்றைய முக்கிய செய்திகள். திருவம்பட்டி எம்.எல்.ஏ. ராஜதுரை அவர்கள் நடாத்தி வரும் அழகப்பர் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் கல்லூரி மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் அம் மாணவரின் பெற்றோரிடம் விசாரித்ததில் அம் மாணவர் கல்லூரியில் சேரும் போது தன் சாதியினை மறைத்ததாகவும் பிற்பாடு அது பற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததில் அம் மாணவரை தங்கும் விடுதியிலிருந்து வெளியேற்றியதாகவும், அவரது உதவித்தொகையை நிறுத்தியதாகவும், மேலும் அம் மாணவரை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. அம் மாணவரின் தற்கொலைக்கு இச் சாதிப் பிரச்சினையே காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது பற்றிய மேலதிக விசாரணைகளுக்காக கல்லூரி நிர்வாகி எம்.எல்.ஏ. ராஜதுரை அவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.”
“திருவம்பட்டி கீழ் சாதி மக்களுக்கும் ஆளுங்கட்சி தொண்டர்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கீழ் சாதி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கலவரமாக மாறியுள்ளமை அறியக் கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக திருவம்பட்டி எம்.எல்.ஏ. ராஜதுரை அவர்களின் சாதிக் கொள்கை என்றும் கூறப்படுகிறது.”
“சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சாதிக் கலவரத்திற்கு நியாயம் கேட்டு காவல்துறையினரிடம் புகார் அளிக்க வந்த சமூக சேவகரான மோகன் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டமை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து விசாரித்ததில் திருவம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை மேலாளர் பாண்டி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.”
“திருவம்பட்டி சர்க்கரைத் தொழிற்சாலையில் பணி புரியும் கீழ் சாதி மக்கள் ஊதியத்தை உயர்த்திக் கேட்டதற்காக உயர் சாதி மக்களால் கீழ் சாதி மக்களின் நூற்றுக் கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டு உள்ளன. அச் சர்க்கரைத் தொழிற்சாலை எம்.எல்.ஏ. ராஜதுரை அவர்களின் பெயரில் இருப்பதாகவும் இதனால் ஆத்திரமுற்ற அவரின் தொண்டர்களே இக் காரியத்தை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.”
“நேற்று நடந்த திருவம்பட்டி தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ. ராஜதுரை அவர்களை எதிர்த்து திருவம்பட்டி கீழ் சாதி மக்களின் சார்பாக தனி தொகுதியில் நின்று பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியடைந்த முத்துராசு அவர்களின் சகோதரர்களான துருவ், ஜெய் என்பவர்கள் மற்றும் அருணிமா என்ற பெண் என மூவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டமை அவ் ஊர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொல்லப்பட்ட அருணிமா எனும் பெண் எம்.எல்.ஏ. ராஜதுரையின் மகள் எனவும் அவர் கொல்லப்பட்ட துருவ் என்பவரைக் காதலித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இக் கொலைச் சம்பவம் சாதி மாறி காதலித்ததால் இடம்பெற்று இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.”
என இந்த சில வருடங்களில் நடந்த வன்முறைகள் பல பெயர் குறிப்பிடப்படாத நபர் ஒருவரால் ஆதாரத்துடன் துருவ்விற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் முக்கியமாக அனைத்து ஆதாரங்களும் ராஜதுரைக்கு எதிராகக் காணப்பட்டது தான் துருவ்விற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த செய்திகள் அனைத்துமே ஒரே நாளில் ஒளிபரப்பப்பட்டு மறுநாளே ராஜதுரையின் அரசியல் அதிகாரத்தின் மூலம் மறைக்கப்பட்டவை.
யாரோ தனக்கு உதவ முயல்வதைப் புரிந்து கொண்டவனுக்கு அது யார் என்று தான் தெரியவில்லை.
சற்று நேரம் அதைப் பற்றி சிந்தித்தவனுக்கு திடீரென ஒரு திட்டம் உதயமாக அதனை செயற்படுத்த வேண்டி புறப்பட்டான் துருவ்.
_______________________________________________
முத்துராசுவும் ஜெய்யும் அனைத்தையும் கூறி முடிக்கவும் மாரியும் சென்னியம்மாளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
ஜெய், “உன் ஐயனுக்கு எதிரா அம்புட்டு ஆதாரத்தையும் சேர்த்து வெச்சி இருக்கேன்லே… அதை துருவ்வுக்கு அனுப்பி வெச்சிட்டு தான் உன் கூட பேசிட்டு இருக்கேன்… உங்க ரெண்டு பேரு கதையையும் நாங்க முடிக்குறோம்… உன் அப்பன என் துருவ் பார்த்துப்பான்லே… எம்புட்டு பண்ணீய ரெண்டு பேரும் சேர்ந்து… சின்னக்கின்ன ஆட்டமா போட்டீய? உன் ஐயன துடி துடிக்க வைப்பான்லே என் துருவ்…” என ஆத்திரமாகக் கூறியவன் மாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
முத்துராசு, “எலேய்… இவிய ரெண்டுத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்லே…” என்கவும் மாரியும் சென்னியம்மாளும் அவர்களைப் புரியாமல் பார்க்க, ஜெய்யோ விஷமச் சிரிப்புடன், “ஆமாண்ணே… ஒருத்தருக்கு மட்டும் வாய்ப்பு…” என்றான்.
“இங்குட்டு நான் ஒரு கத்திய வைப்பேனாம்லே… உங்க ரெண்டு பேருக்கும் தானே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அம்புட்டு காதல்… அதனால தானே ஒன்னா கொலையே பண்ணுறாப்புல… எலேய் மாரி… நீயி இந்த புள்ளய காதலிக்கிறேன்னு தானே கட்டிக்க போறவன்னு கூட பார்க்காம இன்னொருத்தனுக்கு கூட்டிக் கொடுத்தியேலே… அதை வெச்சி ஜெய்யை கொல்ல பார்த்தீய… அப்புறம் இந்த பொட்டச்சி… நீயி உன் அத்தான் சொன்னங்குறதால தானே என் தம்பிய காதலிக்கிற பேர்ல நடிச்சி ஏமாத்துனீய… உன் அத்தானுக்காக எதை வேணாலும் பண்ணுவியேலா?” என முத்துராசு ஏளனமாகக் கேட்டவன், “யாருக்கு மத்தவிய மேல காதல் கூட இருக்குதோ அவிய மத்தவியலுக்காக இந்தக் கத்திய எடுத்து நீங்களே குத்திட்டு சாவுலே… அப்போ மத்தவியல உசுரோட விட்டுடுறேன்…” என்கவும் இருவருமே அதிர்ந்தனர்.
ஜெய், “ஏய் புள்ள… உன்னை கட்டி வெச்சி இல்லன்னு சொல்லி ஏதாவது பெரிய வேலை பார்க்க முயற்சி பண்ணியேன்னா நானே உன்ன முழுசா போட்டுருவேன்லே…” என்க,
மாரி, “ஏய்… என்னலே… நடிக்கிறியாலே? கயித்த அவுத்து வுட்டுட்டு ஒன்னுக்கு ஒன்னு நின்னு சண்டை பிடி… கோழை போல பண்ணுறியா?” எனக் கோபமாகக் கேட்கவும் முத்துராசுவும் ஜெய்யும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர்.
“அண்ணே… பார்த்தியாலே? யாரு கோழைத்தனத்த பத்தி பேசுறான்னு… ஏய்… வாயை மூடிட்டு சொன்னத செய்லே…” என்ற ஜெய் இருவர் முன்னும் ஒரு கத்தியைப் போட்டவன் மாரியின் ஒரு கரத்தை மட்டும் அவிழ்த்தான்.
மாரி கோபத்தில் பல்லைக் கடிக்க, சென்னியம்மாளோ அக் கத்தியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, ஜெய் அவளை ஏளனச் சிரிப்புடன் நோக்கினான்.
ஜெய்யின் பார்வை சென்ற இடத்தை அவதானித்த மாரி, சென்னியம்மாள் அக் கத்தியையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தவன், “ஏ..ஏய்… புள்ள… எதுக்கு அதையே பார்த்துட்டு இருக்கியேலே? அவிய சொல்றத நம்பாதே… பொய் சொல்றாய்ங்க… அவிய நம்ம ரெண்டு பேரையும் கொல்ல பார்க்குறாய்ங்க…” எனப் பயத்துடன் கூறியவன் அவசரமாக அந்தக் கத்தியை எடுக்க முனைய, அதற்குள் பாய்ந்து அக் கத்தியை எடுத்த சென்னியம்மாள் மாரியையே கண்ணீருடன் ஏறிட்டாள்.
மாரி, “வேணாம் புள்ள…” என பதட்டத்துடன் கூற, தன் கழுத்தில் கத்தியை வைத்த சென்னியம்மாள், “இல்ல அத்தான்… நான் செத்தா அவிய உங்கள விட்டுடுவாய்ங்க… நீயி நல்லா இருக்கணும்லே…” என்றவள் ஜெய்யையும் முத்துராசுவையும் பார்த்து, “என் அத்தானுக்காக தான்லே உன்னைய காதலிக்கிறத போல நடிச்சேன்… அவியலுக்காக தான் உன்னை கொன்னேன்… இப்போ கூட என் அத்தானுக்காக தான் என் உசுர விட போறேன்லே… இன்னொன்னு… உங்களைப் போல கீழ் சாதிக்காரங்க கையால சாவுறத விட நானே சாவுறது மேல்…” என இறக்கும் போது கூட தன் சாதி வெறியை விடாதவள் மாரி அதிர்ந்து பார்க்கும் போதே தன் கழுத்தை அறுத்துக் கொண்டாள்.
மாரி, “சென்னி…” எனக் கத்த, கழுத்திலிருந்து இரத்தம் பாய்ச்ச மாரியின் கால் அடியிலேயே கண்கள் மேல் குத்தி நிற்க விழுந்தாள் சென்னியம்மாள்.
ஜெய் சென்னியம்மாளின் முகத்தையே வெறித்துக் கொண்டிருக்க, அவனையும் மீறி ஒரு துளி கண்ணீர் அவன் கண்களில் இருந்து வெளியேறியது.
சென்னியம்மாள் ஜெய்யைக் காதலிப்பது போல் நடித்திருந்தாலும் கூட ஜெய் உண்மையாகவே அவளை தன் உயிருக்கும் மேலாக காதலித்தான் அல்லவா. அதனால் வந்த கண்ணீர் தான் அது.
மாரி, “ஐயோ… பாவி… இப்படி பண்ணிட்டியேலே…” எனக் கதற, அவனின் கதறலைக் கேட்டு முத்துராசுவிற்கும் ஜெய்யிற்கும் உள்ளம் குளிர்ந்தது.
“எலேய் ஜெய்… எப்படிலே சரியா சொன்னீய இந்த புள்ள தான் சாகும்னு…” என முத்துராசு கேட்கவும், “அந்தப் புள்ள நெனச்சிட்டு இருக்குதுலே அவியலோடது காவியக் காதல்னு… ச்சீ… இதைக் காதல்னு சொன்னா அது காதலுக்கே அசிங்கம்ணே…” என ஜெய் கூற, கண்களில் கண்ணீருடன் அவனை முறைத்தான் மாரி.
“என்ன முறைக்கியேலே?” என்ற ஜெய் மாரியின் கன்னத்தில் அறைந்தவன், “த்து… இதெல்லாம் காதலாலே? கருமம்… கட்டிக்க போறவளையே இன்னொருத்தனுக்கு கூட்டிக் கொடுக்க வெக்கமா இல்லயா? உங்க ரெண்டு பேரோடதும் முதல்ல காதலே இல்ல… நீயி நெசமா அவள காதலிச்சி இருந்தியேன்னா இன்னொருத்தனுக்கு அவள கூட்டிக் குடுக்க நெனச்சி இருக்க மாட்ட… இதோ சாகும் போது கூட சாதிய கட்டிப் பிடிச்சிக்கிட்டே செத்த இவ கூட உன்ன நெசமா காதலிச்சு இருந்தா நீயி என்னத்த சொல்லி இருந்தாலும் கண்டவன் கூட நடிப்புக்கு கூட கூத்தடிக்க மாட்டா…” என்றான்.
முத்துராசு, “ஆனாலும் நீயி வெவரமா தான்லே இருக்கீய… எப்படி சரியே கண்டுபிடிச்ச நாங்க உங்க ரெண்டு பேரையும் வுட மாட்டோம்னு..” என்றவன், “உன்னையும் நாங்க எங்க கையால போட போறது கிடையாதுலே… உன் ஐயன் நாங்க உனக்கு ஒன்னும் செய்ய மாட்டோம்னு நெனச்சிக்கிட்டு எங்க சனத்துக்கு அம்புட்டு அடிப்படை வசதியையும் செஞ்சி குடுக்குறாரு… சாகும் போது சரி மனுஷன் நல்லது செஞ்சிட்டு சாகட்டும்… ஆனா பாரு… உனக்கு தான்லே அந்தக் கொடுப்பினை இல்ல…” எனக் கூறும் போதே அந்த இரண்டாவது முகமூடி அணிந்தவன் அவ் அறையினுள் நுழைந்தான்.
மாரி அதிர்ச்சியுடன் அது யார் எனப் புரியாமல் முழிக்க, அங்கு வந்தவனோ முத்துராசு கண் அசைக்கவும் தன் முகமூடியைக் கழட்டினான்.
_______________________________________________
முத்துராசு மாரிக்கு ஏதாவது செய்து விடுவதாக மிரட்டவும் பயந்த ராஜதுரை அவன் கூறியது போலவே கீழ் சாதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தார்.
ஒரு பக்கம் அவரின் அடியாட்கள் மாரியை முத்துராசு அடைத்து வைத்திருக்கும் இடத்தைத் தேடியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
கீழ் சாதி மக்கள் ராஜதுரையின் செயலை ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென மீடியாவுடன் அங்கு வந்தான் துருவ்.
ஏற்கனவே சில மீடியாக்கள் தகவல் அறிந்து அங்கு வந்திருந்தனர்.
கீழ் சாதி மக்களை பத்திரிகையாளர்கள் மாற்றி மாற்றி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
இவை அனைத்தும் துருவ்வின் வேலை தான் எனத் தெரிந்தும் ராஜதுரை வேறு வழியின்றி அமைதியாக இருந்தார்.
“இங்குட்டு யாருமே பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்ல அண்ணே… எனக்கும் என் சேக்காளிங்களுக்கும் மத்த பயலுங்கள போல பள்ளிக்கூடம் போக ஆசையா இருக்கும்ணே… ஆனா யாருமே எங்கள அவிய பள்ளிக்கூடத்துல சேர்த்துக்க மாட்டேங்குறாய்ங்க…” என ஒரு எட்டு வயது சிறுமி பத்திரிகையாளர்களிடம் கூறினாள்.
“இம்புட்டு காலமா எங்க சனத்துக்கு ஒரு அடிப்படை வசதியும் இருக்கல… இதுக்கு முன்னாடி கூட நாம எம்.எல்.ஏ. ஐயா கிட்ட எங்க கஷ்டத்த சொல்லி உதவி கேட்டு இருக்கோம்லே… ஆனா இன்னைக்கு திடுதிப்புன்னு வந்து இப்படி எதுக்கு செய்யிறார்னு தான் புரியல… ஏதோ எங்களுக்கு நல்லது நடந்தா சரி…” என ஒரு நடுத்தர வயதுப் பெண் கூறினார்.
ஒரு வயதானவர், “இதைப் பார்த்தியாலே?” என ஒரு அழுக்கடைந்த குளத்தைக் காட்ட, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்தக் குளத்திலிருந்து வந்த துர்நாற்றத்தில் முகம் சுழிக்கவும் சிரித்தவர், “இங்குட்டு வந்ததுக்கே அதுல இருந்த வர நாத்தம் உங்களுக்கு குடல புரட்டுதேலே… ஆனா எங்க ஆத்தா ஐயன் காலத்துல இருந்து இப்போ எங்க பேரன் பேத்தி வரை இந்தத் தண்ணிய தான் குடிக்கிறாய்ங்க… நல்ல தெம்பா ஆரோக்கியமா வளர வேண்டிய புள்ளைங்க இந்தத் தண்ணிய குடிச்சு சின்ன வயசுலயே எல்லா நோய்க்கும் ஆளாகுறாய்ங்க… அப்படி ஒரு நோய் வந்தா கூட்டிட்டு போறதுக்கு ஹாஸ்பிடல் கூட எங்க சனத்துக்கு இல்ல… இங்குட்டு இருக்குற ஹாஸ்பிடலுக்கு போனா கீழ் சாதின்னு சொல்லி எங்கள உள்ள எடுக்க மாட்டாய்ங்க… சரின்னு எத்தனையோ கிலோமீட்டர் நடந்து சீமைல இருக்குற ஹாஸ்பிடலுக்கு போனா அங்குட்டு கேக்குற காசுக்கு எங்க தலையை அடகு வெச்சாலும் கொடுக்க முடியாதுலே…” என்றார் கண்ணீருடன்.
ராஜதுரையின் சேவைகள் என இவ்வளவு நேரமும் நேரலையாக செய்திகளில் காட்டிக் கொண்டிருந்தவர்கள் தற்போது கீழ் சாதி மக்களின் வறுமையையும் அவர்களுக்கு நடக்கும் அநியாயங்களையும் நேரலையாகக் காட்டவும் ராஜதுரையால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
அவரின் தொண்டர்கள் கீழ் சாதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை தம் கையாலேயே செய்து கொடுத்துக் கொண்டிருக்க, பத்திரிகையாளர்களின் பார்வையில் படாமல் ராஜதுரை அங்கிருந்து செல்லப் பார்க்க, அதனை கண்டு கொண்ட துருவ், “இது பத்தி நீங்க எம்.எல்.ஏ. கிட்டயே கேட்கலாமே…” என ராஜதுரையை மாட்டி விடவும் அனைவரும் ராஜதுரையை சூழ்ந்து கொண்டனர்.
“இதை பத்தி நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?”
“இந்த அடிப்படை வசதி செய்து கொடுக்குற வேலை ஏதாவது கண் கட்டு திட்டமா?”
“இதுவரை இந்த மக்களை திரும்பி கூட பார்க்காத நீங்க இப்போ திடீர்னு நீங்களாவே வந்து இந்த மக்களுக்கு உதவ காரணம் என்ன?”
“இதுக்கு பின்னால ஏதாவது அரசியல் சதித்திட்டம் இருக்கா? “
“நீங்க சாதி பார்த்து தான் மக்களுக்கு உதவுவதா பேசிக்குறாங்களே… அது உண்மையா? “
“உங்க பொண்ண கூட நீங்க வேற சாதி பையன காதலிச்சதால கொன்னுட்டதா சொல்லுறாங்களே…”
“இன்னும் நீங்க அமைதியா இருக்கக் காரணம் என்ன? உங்க மௌனத்த இது எல்லாம் உண்மைன்னு நாங்க எடுத்துக்கலாமா? ”
என ராஜதுரையைக் கேள்விக் கணைகளால் தாக்க, அவரோ பேச்சற்று நின்றார்.
ஆனால் இவற்றுக்கு காரணமான துருவ் மீதும் தன்னை மிரட்டி இக் காரியத்தை செய்ய வைத்த முத்துராசு மீதும் அவருக்கு கொலைவெறியே வந்தது.
ராஜதுரையின் நல்ல நேரம் சில தொண்டர்கள் வந்து அவரை சுற்றி வளைத்துக் கொள்ளவும் யாருக்கும் பதிலளிக்காமல் அவசரமாக அங்கிருந்து செல்ல, அவரை ஏளனச் சிரிப்புடன் நோக்கினான் துருவ்.
ஆனால் ராஜதுரை தன் வண்டியில் ஏறி அங்கிருந்து புறப்படும் போதே கட்சித் தலைவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.