Loading

இன்றும் பிடிவாதமாக அருணிமா துருவ்வின் மடியில் படுத்திருக்க, அவளின் நிலையை எண்ணி எதுவும் கூறாது அமைதி காத்தான் துருவ்.

 

துருவ்வின் பார்வை தொலைக்காட்சியில் இருக்க, கால்களை ஆட்டி ஆட்டி தாடையில் விரல் பதித்து ஏதோ யோசித்த அருணிமா திடீரென, “அது யாருலே மாமா? ஏன் அவிய ஃபோட்டோ நம்ம வூட்டுல மாட்டி கிடக்குது?” என ஜெய்யின் மாலையிட்ட புகைப்படத்தைக் காட்டிக் கேட்கவும், வெளி வரத் துடித்த கண்ணீரை கடினப்பட்டு அடக்கிய துருவ், “உனக்கு அவர் அண்ணன் போல… என்னோட ப்ரதர்… இப்போ இல்ல… இறந்துட்டான்…” என்றான் ஜெய்யின் புகைப்படத்தை வெறித்தபடி.

 

“ஓஹ்… அண்ணாத்த…” என அருணிமா கூறவும் அதிர்ந்த துருவ், “எ…என்ன சொன்ன நிரு… உனக்கு அவன ஞாபகம் இருக்கா?” என ஆர்வமாகக் கேட்கவும் முழித்த அருணிமா, “இல்ல மாமா… நீ தானேலே சொன்னீய அவர் எனக்கு அண்ணாத்தன்னு…” எனப் பயந்தவாறு கூறவும் முகம் வாடிய துருவ், “ஓஹ் சாரி… நீ தூங்கு…” என்கவும் துருவ் இன்று வாங்கித் தந்த பார்பி பொம்மையை அணைத்துக் கொண்டு துருவ்வின் மடியிலே உறங்கினாள் அருணிமா.

 

அவளின் முகத்தையே வெறித்தவனின் கண் முன் தன் சிறு வயதில் நடந்த சம்பவமொன்று வந்து சென்றது.

 

_______________________________________________

 

சாதிக் கலவரத்தில் துருவ்வின் தந்தை இறந்து சில நாட்கள் கழித்து துருவ் கோவில் தெப்பக்குளத்துப் படிக் கட்டில் அமர்ந்து குளத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்‌.

 

அப்போது அவனுக்கு ஐந்து வயது. அலமேலுவுடன் கோவிலுக்கு வந்திருந்தவன் அவர் ஏதோ நேர்த்திக்கடனை முடித்து வரும் வரை அங்கு காத்திருந்தான்.

 

துருவ்வின் தந்தை இறந்து விட்டதை அறிந்தவன் முதலில் தனிமையிலேயே நேரத்தைக் கழிப்பான்.

 

ஆனால் அலமேலு என்ன கூறினாலும் மறுக்காது கேட்பான்.

 

திடீரென அவன் அருகில் பாவாடை சட்டை அணிந்த ஐந்து வயது சிறுமி ஒருத்தி வந்து அமர்ந்தாள்.

 

அவளின் தோற்றமே அவள் வசதியான வீட்டுப் பெண் என்பதைக் காட்டிக் கொடுக்கவும் தயங்கியவாறு அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்தான் துருவ்.

 

“ஏன்லே நீயி இங்குட்டு தனியா உக்காந்துட்டு இருக்கீய? உனக்கு யாரும் இல்லையா? உன் ஆத்தா எங்கலே?” என அச் சிறுமி அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்க, துருவ்வோ அவள் முகத்தை ஒரு நொடி பார்த்து விட்டு பதிலளிக்காது தலை குனிந்தான்.

 

ஆனால் பார்த்த அந்த ஒரு நொடியிலேயே அவன் மனதில் பதிந்து போனது அவள் உதட்டிற்கு மேலே ஓரமாக இருந்த சிறு மச்சம்.

 

துருவ்விடமிருந்து பதில் வராததால் அச் சிறுமியே மீண்டும், “உனக்கு யாரும் சேக்காளி இல்லையாலே? அதான் நீயி சோகமா இருக்கியா?” எனக் கேட்க, துருவ்வின் மூளையோ தனக்கு நண்பனாக ஜெய் இருக்கிறான் எனக் கூறக் கூறியது.

 

ஆனால் அவனின் தயக்கம் துருவ்வை பதிலளிக்க விடவில்லை.

 

“நீயி ரொம்ப அழகா இருக்கியேலே… எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு…” என அச் சிறுமி வெகுளித்தனமாகக் கூறவும் துருவ்வின் இதழில் ஒரு வெட்கப் புன்னகை. கூடவே அவனின் கன்னங்களும் சிவந்தன.

 

இது வரை தனித்தே இருந்தவனிடம் திடீரென ஒருத்தி இவ்வாறு கூறவும் அவனின் மனம் மகிழ்ந்தது.

 

“நீயி பெரிய பயலா ஆனதும் என்னைக் கட்டிக்கிறியாலே?” என திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத சிறுமி ஏதோ தனக்குத் தெரிந்ததை வைத்து துருவ்விடம் கேட்கவும் அவனுக்கு என்ன பதில் கூற என்றே தெரியவில்லை.

 

ஆனால் அவனின் தலை தானாக அவளைப் பார்த்து சம்மதமாக ஆடியது.

 

அதனைக் கண்டு அச் சிறுமி புன்னகைக்க, “நீயி இங்குட்டு தான் இருக்கியாலே? ஒரு இடத்துல ஒழுங்கா இருக்க முடியுதா உன்னால? வெறசா வாலே வூட்டுக்கு போலாம்… உன் ஐயன் வந்தாருன்னா நம்மள வையுவாறுலே…” என அங்கு வந்த அச் சிறுமியின் தாய் அவளை அழைக்கவும் துருவ்விற்கு கை காட்டி விட்டு சென்றாள் அச் சிறுமி.

 

துருவ் அச் சிறுமி செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருக்க, சற்று தூரம் சென்றவள் தன் தாயிடம் ஏதோ கூறி விட்டு துருவ்வை நோக்கி ஓடி வந்தாள்.

 

துருவ் அவளை என்னவெனப் பார்க்க, “இனிமே நீயும் நானும் சேக்காளி…” என்ற சிறுமி தன் கையில் கட்டியிருந்த திருவிழாவில் வாங்கிய மணிகளால் ஆன பிரேஸ்லெட்டைக் கழற்றி துருவ்வின் கையில் மாட்டி விட்டு தன் தாயிடம் ஓடினாள்.

 

ஆனால் அது தான் துருவ் அந்த சிறுமியை முதலும் கடைசியுமாகப் பார்த்தது. அடுத்த ஒரு வாரத்திலேயே மோகன் கொல்லப்பட, தன் சகோதரர்களை அழைத்துக்கொண்டு சென்னை கிளம்பினான் முத்துராசு.

_______________________________________________

 

தன் பாக்கெட்டில் இருந்த அந்த மணியால் ஆன பிரேஸ்லெட்டைக் கையில் எடுத்த துருவ் அதனையே சற்று நேரம் வெறித்து விட்டு தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த அருணிமாவின் முகத்தை நோக்கியவன் அவளின் உதட்டுக்கு மேல் இருந்த சிறு மச்சை தன் விரலால் வருடினான்.

 

அருணிமாவைக் கல்லூரியில் சந்தித்து அவள் பற்றிய தகவல் தெரிய வந்ததுமே துருவ்விற்கு புரிந்தது அவள் தான் அவன் சிறு வயதில் சந்தித்த சிறுமி என்று.

 

முதன் முறை தன்னிடம் ஒருத்தி வந்து தான் அழகாக இருப்பதாகக் கூறி வளர்ந்ததும் தன்னைத் திருமணம் செய்யக் கேட்கவும் அது துருவ்வின் மனதில் ஆழப் பதிந்து போனது.

 

ஆனால் அருணிமாவிற்கு தன் தந்தையின் அட்டூழியங்களைக் கண்டு கண்டே இப்படி ஒருவனை சந்தித்தோம் என்பதையே மறந்து விட்டாள்.

 

பின் அருணிமாவைத் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டவன் விளக்கை அணைத்து விட்டு தனது அறைக்குச் சென்று உறங்கினான்.

 

_______________________________________________

 

இரவு போதையில் மாடியிலே உறங்கி விட்ட ராஜதுரை விடிந்து பல மணி நேரம் கழித்தே எழுந்து வந்தார்.

 

அவர் கீழே வரும் போது ஹாலில் அமர்ந்து இருந்தவளைப் பார்த்தவர், “எப்போலே நீயி வந்தீய? கொஞ்சம் நாளா வீட்டுப் பக்கம் வரவே இல்லயே நீயி… உன் அப்பன்காரன் ஏதாவது சொல்லிட்டானா?” என ராஜதுரை கேட்கவும், “இப்போ தான் மாமா வந்தேன்… அவிய சொல்லி நான் எப்போ கேட்டு இருக்கேன்… ஆமா மாமா… எங்கலே உன் மயேன்?  எம்புட்டு நேரமா அந்தாளுக்கு கால் பண்றேன்… பய ஃபோன தூக்க மாட்டேங்குறானேலே…” என அவள் கூற,

 

“எங்குட்டாவது குடிச்சிட்டு மட்டையாகி இருப்பானா இருக்கும்லே… வந்துருவான்… எப்போலே உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை வெக்கிறது… என் தலைல இருந்த பிரச்சினைல மாரி கிட்ட அதை பத்தி கேட்கவே முடியல..” என்றார் ராஜதுரை.

 

“எனக்கு இப்போவே கல்யாணம் நடந்தாலும் சரி தான்லே மாமா… ஆனா உன் மயேன் தான் அவியல பழி வாங்கணும் இவியல பழி வாங்கணும்னு இழுத்தடிச்சிட்டு இருக்கான்… ஒரு வேளை உன் மவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையோ என்னவோலே…” என அப் பெண் சலித்துக் கொண்டு கூற, 

 

ராஜதுரை, “என்னலே நீயி… அவன பத்தி உனக்கு தெரியாதா… எடுத்த காரியத்த முடிக்காம அவனுக்கு தூக்கம் போகாதுலே… அதுவுமில்லாம உன் மேல அந்தப் பயலுக்கு அம்புட்டு பாசம்… உன் அப்பன் பேசின பேச்சுக்கு உன்னை என் வூட்டுக்குள்ளயே விடக் கூடாதுலே… ஆனா என் மயேனுக்கு உன்ன பிடிக்கும்னு சொன்னதால தான் நானும் சம்மதிச்சேன்…” என்றார்.

 

“ஐயா… ஐயா…” எனக் கத்திக் கொண்டு அவரின் அடியாள் ஒருவன் திடீரென ஓடி வரவும், “என்னாச்சுலே… எதுக்கு இப்போ கத்திட்டு வரீய?” என ராஜதுரை கேட்க, “ஐயா… நம்ம சின்னய்யாவோட ஃபோனு தோட்டத்துல உடஞ்சி கிடந்துச்சுலே…” என அவன் மாரியின் கைப்பேசியை ராஜதுரையிடம் வழங்கவும் ராஜதுரையும் அப் பெண்ணும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

_______________________________________________

 

பல மணி நேரம் கை கால்களை எல்லாம் சங்கிலியினால் கட்டி வைத்ததால் மாரியின் உடல் காயமாகி இருக்க, அவ் அறையில் இருந்த துர் வாடையால் இரவு மாரிக்கு உறக்கமும் வரவில்லை.

 

அவனுக்கு முத்துராசு மேல் வெறி ஏறிக் கொண்டே போக, “எலேய்… ****சாதிக்கார நாயே… உன்னை நான் கொல்லாம விட மாட்டேன்லே…” என ஆவேசமாகக் கத்தவும் அவ் அறையினுள் நுழைந்த முத்துராசு மாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டவன், “இம்புட்டு ஆகியும் இன்னும் உன் திமிரு குறையலயா… கொன்னுருவாராம்லே… த்தூ… வாயை மூடிட்டு கம்முன்னு இருலே…. எலேய்… அதை எடுத்துட்டு வாடா…” என முத்துராசு கூறவும் மூகமூடி அணிந்த இருவர் அவ் அறையினுள் நுழைந்தனர்.

 

முத்துராசு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தவன், “நேத்து தானேலே உன்னை தூக்கிட்டு வந்தது… அதான் ஜஸ்ட் ஒரு சின்ன கீறா போட்டு சேம்பிள் மட்டும் காட்டினேன்… இனிமே தான் உன்ன வெச்சி செய்ய போறேன்லே…” என விஷமத்துடன் கூறவும் அங்கு வந்த இருவரும் மாரியின் உடலில் ஏதோ உபகரணத்தைப் பொறுத்தினர்.

 

மாரி என்ன நடக்கிறது எனப் புரியாமல் ஆவேசத்துடன் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராட, “எலேய்… நீயி எம்புட்டு தான் போராடினாலும் உன்னால தப்பிக்க முடியாதுலே… இது என் இடம்… ரொம்ப ஆட்டத்தைப் போட்டு உன் உடம்புல இருக்குற சக்தி எல்லாம் இழந்துடாதே… எப்படியும் செத்த நேரத்துல உனக்கு பேசக் கூட தெம்பு இருக்காது…” என்ற முத்துராசு, “இது என்னன்னு தானேலே யோசிக்கிறீய… இரு… சின்னதா ஒரு டெமோ காட்டுறேன்…” என்கவும் முகமூடி அணிந்த ஒருவன் தன் கையிலிருந்த ரிமோட்டில் ஒரு பட்டனை அழுத்தவும் உடலில் மின்சாரம் தாக்கி, “ஆஹ்…….” என அலறினான் மாரி.

 

அவனின் அலறலைக் கேட்டு சிரித்த முத்துராசு, “புரிஞ்சுதாலே என்னன்னு… ஷாக் ட்ரீட்மெண்ட்…” என்கவும் அவனை முறைத்தான் மாரி.

 

ஒரு தடவைக்கே தன் உடலில் பாதி சக்தியை இழந்தது போல் உணர்ந்தான் மாரி.

 

மாரி, “ஏய்…” என ஏதோ கூற வரவும் மீண்டும் ஒரு ஷாக்.

 

“உனக்கு சாப்பாடெல்லாம் கிடையாதுலே… மூணு நேரமும் சாப்பாட்டுக்கு பதிலா இதை தான் தரப் போறேன்… எம்புட்டு பேரை துடிக்க துடிக்க கொன்னீய… அதெல்லாம் நீயி அனுபவிக்க வேணாமா?” என்ற முத்துராசு, “இம்புட்டு நேரத்துக்கும் உன் ஐயனுக்கு உன்ன காணோம்னு தெரிஞ்சு இருக்கும்லே… நீயி இல்லாம அந்தாளால ஒன்னும் பண்ண முடியாதாமே… அதையும் பார்க்குறேன்லே…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

 

மின்சாரம் உடலில் பாய்ந்ததில் சில நொடிகளிலே மயங்கி விட்டான் மாரி.

 

_______________________________________________

 

“என்னலே சொல்ற… போய் தேடு என் மயேன் எங்குட்டுன்னு…” என ராஜதுரை கோபமாகக் கட்டளை இடவும் அவரின் அடியாட்கள் மாரியைத் தேடிக் கிளம்பினர்.

 

“மாமா… எனக்கு பயமா இருக்குலே… அவியலுக்கு என்ன ஆச்சோ தெரியலயே…” என அப் பெண் கலக்கமாகக் கூறவும், “என் மயேன எந்தப் பயலாலேம் ஒன்னும் பண்ண முடியாதுலே… நீ பயப்படாம இரு புள்ள… நான் போய் அவன் எங்குட்டு போய்ட்டான்னு பார்த்துட்டு வரேன்…” எனக் கூறிய ராஜதுரை மாரியைத் தேடிக் கிளம்ப, அவரை வழி மறித்த ஒருவன், “ஐயா… அந்தக் கலெக்டரு நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் நடக்குற இடத்த சீல் வெச்சிட்டாரு…” என்கவும் ஆத்திரம் அடைந்த ராஜதுரை, “அவன் அளவுக்கு மீறி போறான்லே… இன்னைக்கு அவனா நானான்னு பார்த்துருவோம்…” என்றவர் கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு தன் அடியாட்களுடன் சென்றார்.

 

ராஜதுரை வரும் முன்னரே செய்தியாளர்கள் அங்கு வந்திருந்தனர்.

 

துருவ் அவர்களிடம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

துருவ், “இது விவசாய பூமி… அதிகமா தண்ணீர் ஊற்று எடுக்குற இடம்… இங்க பில்டிங் கட்டினா கொஞ்சம் காலத்துலயே அது உடைஞ்சி விழ வாய்ப்பு இருக்கு… அது மக்களுக்கு தான் ஆபத்தா முடியும்… ஏற்கனவே இப்படியான இடங்களில் பில்டிங் கட்டினதால நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கு…” என்க,

 

“அப்போ எம்.எல்.ஏ. இதை பத்தி தெரிஞ்சே தான் இந்த கட்டிடத்தை கட்டுறாருன்னு சொல்றீங்களா சார்?” என ஒரு பத்திரிகையாளர் கேட்க, “இருக்கலாம்… அவருக்கு இது மூலமா இலாபம் தானே கிடைக்க போகுது…” என்றான் துருவ் ஏளனமாக.

 

ராஜதுரை துருவ்வையே முறைத்துக் கொண்டிருக்க, பத்திரிகையாளர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது.

 

அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வி அம்புகளால் தாக்க, அவரால் யாருக்கும் பதிலளிக்க முடியவில்லை.

 

இத்தனை வருடங்களில் அவர் அரசியலில் கட்டிய சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து வீழக் காரணமான துருவ் மேல் அவருக்கு இருந்த வன்மம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

 

ராஜதுரை, “எந்தப் பயலோட கேள்விக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்லே…” எனக் கோபமாகக் கூறியவர் அங்கிருந்து துருவ்வை‌ முறைத்து விட்டு செல்ல, அவரை பார்த்து கேலியாகப் புன்னகைத்தான் துருவ்.

 

தன் கட்சி ஆபீஸிற்கு ராஜதுரை வரவும் அங்கு ஒரே பரபரப்பாக இருந்தது.

 

“என்னலே நடக்குது இங்குட்டு… எதுக்கு இந்தக் கூட்டம்?” என ராஜதுரை அங்கிருந்த ஒருவனிடம் கேட்கவும், “நம்ம கட்சித் தலைவர் வந்திருக்காய்ங்கய்யா… உங்க மேல அம்புட்டு காண்டுல இருக்காரு… உள்ள உங்களுக்காக தான் காத்துட்டு கிடக்குறாரு…” என்கவும் அவசரமாக கட்சித் தலைவரைக் காணச் சென்றார் ராஜதுரை.

 

“வணக்கமுங்கய்யா..” என்ற ராஜதுரை கட்சித் தலைவர் முன் கை கட்டி நிற்க, “என்னலே பண்ணிட்டு இருக்கீய? எவனோ ஒரு பொடிப் பயலு உன்னை எதிர்த்து இம்புட்டு பண்ணிட்டு இருக்கான்… நீயி வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறியேலே… அதுவும் கீழ் சாதிக்காரன் ஒருத்தன்… உன்னால நம்ம கட்சி மானமே போகுதுலே…” எனக் கட்சித் தலைவர் கோபமாகக் கூறவும், “மன்னிச்சிருலே ஐயா… அவன நான் பார்த்துக்குறேன்…” என ராஜதுரை பணிவாகக் கூற,

 

“என்னலே பார்த்து கிழிக்கிறீய? இம்புட்டு நாள் என்னத்த பண்ணீய? ஒரு கீழ் சாதிக்காரன் கிட்ட தோத்து போய் நிக்கிறீய… இங்கப் பாருலே… இது உன் தாத்தன் ஆரம்பிச்ச கட்சியா இருக்கலாம்… ஆனா என்னால தான்லே இது இன்னைக்கு இந்த நிலமைக்கு உசந்து இருக்கு… என் கட்சி பேரு போறன்னா உன்ன பதவில இருந்து தூக்கவும் தயங்க மாட்டேன்… மருவாதையா அந்தக் கலெக்டரோட கொட்டத்த அடக்குற வழிய பாருலே… இல்ல நான் வேற ஆள் பார்க்க வேண்டி வரும்…” என கட்சித் தலைவர் கோபமாகக் கூறி விட்டு அங்கிருந்து செல்ல, அவர் சென்றதும் இவ்வளவு நேரம் அடக்கிய ஆத்திரத்தை தன் முன்னிருந்த பொருட்களிடம் காட்டினார் ராஜதுரை.

 

சத்தம் கேட்டு அவரது தொண்டர்கள் போன்று இருக்கும் அடியாட்கள் இருவர் வர, “அந்தாளுக்கு எம்புட்டு தெணாவட்டு இருந்தா என்னையே இப்படி பேசிட்டு போறான்லே… அந்தக் கீழ் சாதிக்கார நாய் தான்லே அம்புட்டுக்கும் காரணம்… அவன மொத்தமா அழிச்சிட்டு இவனுக்கு பால் ஊத்துறேன்லே…” என்றார் ஆவேசமாக.

 

_______________________________________________

 

“மயக்கத்தில் இருந்த மாரியின்‌ மேல் முகமூடி அணிந்த ஒருவன் குளிர் நீரை ஊற்றவும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தான் மாரி.

 

அவன் முன் முத்துராசு அமர்ந்திருக்கவும் அவனைப் பார்த்து முறைத்த மாரி, “மருவாதையா என்னை விடுலே… இல்ல உன்ன சும்மா விட மாட்டேன்…” என அதே பல்லவியைப் பாடவும் சலித்துக் கொண்ட முத்துராசு, “ப்ச்… அடப் போலே இவனே… எப்பப்பாரு அதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கீய… இருலே உனக்கு தரமான செய்தி ஒன்னு காட்டுறேன்…” என்றவன் அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் ராஜதுரை பற்றியே எல்லா செய்திகளிலும் காட்டிக் கொண்டு இருந்தன.

 

அதைக் கண்டு மாரி அதிர, “பார்த்தியாலே? பேப்பர், டீவின்னு உன் சாதி வெறி பிடிச்ச ஐயன் பேரும் உங்க கட்சி பேரும் எம்புட்டு நாறுதுன்னு… நான் தான் சொன்னேனே… எங்க குடும்பத்தை சிதைச்சதுக்கும் எங்க சனத்துக்கு பண்ணின அநியாயத்துக்கும் உங்க யாரையும் சும்மா விடப் போறதில்லன்னு… என் துருவ்வ என்னலே நெனச்சியே நீயி? ரெத்தமும் சதையுமா ஒன்னா சுத்திக்கிட்டு இருந்த உசுர அவன் கண் முன்னாலயே கொலை பண்ணிட்டியேலே பாவி… அவன் உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்…” என்றான் முத்துராசு ஆவேசமாக.

 

_______________________________________________

 

ஆட்சியர் அலுவலகத்தில் அன்றைய மனுக்களைப் படித்துக் கொண்டிருந்த துருவ் திடீரென ஏதோ நினைவு வந்து அதிர்ந்தவன், “ச்சே… இதை எப்படி மறந்தேன்…” என்றவன் அவசரமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

 

துருவ் வீட்டை அடையும் போது வீடு விளக்குகள் கூட போடாது ஒளி இழந்து காணப்பட்டன.

 

அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து விளக்கை ஒளிர விட்டவன் கண்டது சோபாவில் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து தொலைக்காட்சித் திரையையே வெறித்துக் கொண்டிருந்த அருணிமாவைத் தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்