Loading

இன்ஸ்பெக்டர் அழைத்ததற்கு இணங்க மோகனும் முத்துராசுவும் அவருடன் செல்ல, போலீஸ் ஜீப் சென்று நின்ற இடமோ ராஜதுரையின் குடோன்.

 

முத்துராசுவிக்கு ஏதோ தவறாகப்பட, “இங்குட்டு எதுக்குலே கூட்டிட்டு வந்திருக்கீய…” எனக் கோபமாகக் கேட்க, “அட… தம்பிக்கு ரொம்ப தான் ஆத்திரம் வருது… இங்குட்டு தான்லே எம்.எல்.ஏ இருக்காரு… ரெண்டு பேரும் வாலே… அவர அரெஸ்ட் பண்ண வேணாமா?” என விஷமப் புன்னகையுடன் கேட்க, “எலேய் முத்து… கம்முன்னு இருலே…” என முத்துராசுவை அமைதிப்படுத்தினார் மோகன்.

 

குடோனுக்கு வெளியே ராஜதுரையின் அடியாட்கள் நிற்க, இன்ஸ்பெக்டரைக் கண்டதும் அவர்கள், “என்ன தல.. ஒரு வாரத்துக்கு முன்ன தானேலே வந்து துட்டு வாங்கிட்டு போனீய… கமிஷன் பத்தலயா… திரும்ப வந்திருக்கியேலே…” என்றதும், “எலேய்… செத்த வாய மூடுலே…” என்றார் இன்ஸ்பெக்டர்.

 

முத்துராசுவும் மோகனும் இவர்களை விட்டு சற்று தள்ளி வந்து கொண்டிருந்ததால் இவர்களின் உரையாடல் அவர்களின் செவியை எட்டவில்லை.

 

இருவரையும் அழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் குடோனினுள் நுழைய, “எலேய் பாண்டி… சொன்னது போலவே கூட்டிட்டு வந்துட்டியேலே…” என இன்ஸ்பெக்டரை அணைத்துக் கொள்ளவும் மோகன், முத்துராசு இருவருமே அதிர்ந்தனர்.

 

முத்துராசு, “நான் தான் சொன்னேனே ஐயா எனக்கு இவிய மேல சந்தேகமா இருக்குன்னு… இவனும் அந்தாளோட ஆளு தான்யா…” எனக் கோபமாகக் கூற,

 

அவனைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்த ராஜதுரை, “பொடிப்பயலுக்கு எம்புட்டு ஆத்திரம் வருதுன்னு பாருலே பாண்டி…” எனக் கூறவும், “ஆமாங்கய்யா… இங்குட்டு வரும் வரை இந்த பய தொல்லை தாங்க முடியல..” என்றார் இன்ஸ்பெக்டர்.

 

“எலேய்… அந்தாளோட கூட்டா சேர்ந்து எங்களை ஏமாத்திட்டியேலே… உங்களை சும்மா விட மாட்டேன்… இப்பவே உங்களுக்கு ஒரு வழி பண்ணுறேன்…” எனக் கோபமாகக் கூறிய மோகன் அங்கிருந்து செல்லப் பார்க்கவும் ராஜதுரையின் ஆட்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

 

முத்துராசு, “அப்பா…” எனக் கத்திக் கொண்டு மோகனிடம் செல்ல முனைய, பின்னாலிருந்து அவனைப் பிடித்துக் கொண்டான் மாரி.

 

“எலேய்… விடுலே..” என முத்துராசு கத்த, தன் பிடியை இறுக்கினான் மாரி.

 

“சரியான சமயத்துல தான் வந்து இருக்கியேலே மவனே…” என ராஜதுரை புன்னகையுடன் கூறியவர், “ஐயனும் மவனும் ரொம்ப தான்லே துள்ளுறீய… இந்த ராஜதுரைக்கு எதிராவே கம்ப்ளைன் பண்ணுறதுக்கு அம்புட்டு தில்லு பார்த்தியா…” எனக் கேலியாகக் கூறவும் சுற்றியிருந்த அவரின் அடியாட்கள் அனைவரும் சிரித்தனர்.

 

மாரி கண்காட்டவும் இன்னும் இரண்டு அடியாட்கள் வந்து முத்துராசைப் பிடித்துக் கொள்ள, ராஜதுரையிடம் சென்ற மாரி, “என்னய்யா பார்த்துட்டு நிக்கிறீய… உங்களையே எதிர்த்த இந்த ****சாதிக்காரப் பயலுவல போட்டுத் தள்ளி இருக்கலாம்ல…” என்க,

 

“என் கையால கொல்லுற அவளுக்கு அம்புட்டு பெரிய பயலுலாம் இல்ல… நீயே போட்டுருலே…” என விஷமப் புன்னகையுடன் கூறவும் மோகனிடம் சென்ற மாரி, “எம்புட்டு தில்லு இருந்தா கீழ் சாதிக்காரப் பய நீயி எங்க ஐயன் மேலயே கம்ப்ளைன் கொடுப்பியேலே…” என்றவன் மோகனை எட்டி உதைக்கவும் கீழே விழுந்தார் மோகன்.

 

“எலேய்… எங்க ஐயன் மேல கைய வெச்சா உன்ன சும்மா விட மாட்டேன்லே…” முத்துராசு ஆவேசமாகக் கத்த, யாரும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

 

கீழே விழுந்த மோகன், “நீயி என்னை என்ன பண்ணினாலும் என் மயேன் உன்ன சும்மா விட மாட்டான்லே..” என்க, சிரித்த ராஜதுரை, “நீயி முதல்ல போலே… அப்புறம் உன் பின்னாடியே அந்தப் பயலையும் அனுப்பி வைக்கிறோம்…” என்ற ராஜதுரை, “எலேய் மாரி… இன்னைக்கு இவனக் கொல்லுற மாதிரிய பார்த்து இனிமே எந்தப் பயலுக்கும் நம்மள எதிர்க்குற தில்லு வரக் கூடாதுலே…” என்றார்.

 

மோகனின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்ற மாரி அவரை அங்கிருந்த ஒரு தூணில் கட்டியவன் அவரைப் போட்டு சாட்டையால் வெளுத்தான்.

 

மோகன் பல்லைக் கடித்துக் கொண்டு தன் வலியைப் பொறுத்துக் கொள்ள, முத்துராசுவோ தன் தந்தையின் நிலையைப் பார்த்து கதறினான்.

 

“எங்க ஐயன விடுலே… எலேய்… அடிக்காதேடா… உங்கள சும்மா விட மாட்டேன்…” எனக் கதறிய முத்துராசு தன்னை விடுவித்துக் கொள்ளப் போராட, ராஜதுரையின் அடியாட்கள் அவனை நகர முடியாதபடி பிடித்துக் கொண்டனர்.

 

“செத்தது என் உன் சொந்தமா… அம்புட்டு துடிக்கிறியேலே… நீயி கம்முன்னு இருந்திருந்தா நீயும் உன் புள்ளையும் உசுரோட இருந்து இருப்பீய… இப்பப் பாருலே…” என்ற மாரி, “எலேய்… அந்த மண்ணெண்ணெய எடுத்துட்டு வாலே… இந்தப் பயலுங்க தடயம் கூட இங்க மிச்சம் இருக்க கூடாது…” என்கவும் ராஜதுரையின் அடியாட்கள் மண்ணெண்ணெய்யை எடுத்துக் கொண்டு வந்தனர்.

 

இன்ஸ்பெக்டர், “பார்த்தியாலே… அப்பன் கூட சேர்ந்து அம்புட்டு துள்ளுனீய… கடைசில அப்பனும் மவனும் அநாதையா சாக போறியேலே…” எனக் கேலி செய்ய, “ச்சீ… நீயெல்லாம் எதுக்குலே படிச்சி போலீஸ் ஆனீய… இப்படி கண்ட நாய்க்கும் சொம்பு தூக்கவா… அசிங்கமா இல்லயாலே உனக்கு?” என முத்துராசு இன்ஸ்பெக்டரைப் பார்த்து கோபமாகக் கேட்கவும் அவன் கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.

 

முத்துராசு ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, மண்ணெண்ணெய்யை எடுத்து மோகனின் மீது ஊற்றினான் மாரி.

 

“எலேய் வேணாம்… எங்க ஐயன விடுலே… என்னை என்ன வேணா பண்ணிக்கோ… அவர விடு…” என ஒரு கட்டத்தில் அழுதான் முத்துராசு.

 

மோகன், “நான் செத்தாலும் எனக்கு அப்புறம் ஒருத்தன் வருவான்லே… உன்னையும் உன்னைப் போல சாதி வெறி பிடிச்ச அம்புட்டு பயலையும் அழிச்சி எங்க சனத்துக்கு நியாயம் வாங்கி கொடுப்பான்…” என்றார் ஆவேசமாக.

 

அந் நேரம் இன்ஸ்பெக்டரின் கைப்பேசி ஒலி எழுப்பவும் அதனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார் அவர்.

 

மாரி தன் பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை வெளியே எடுக்க, “இதே போல தான்லே அவனையும் போட்டு தள்ளுவேன்… இந்த ராஜதுரைய எதிர்க்குற ஒரு பயலும் உசுரோட இருக்கக் கூடாதுலே…” என ராஜதுரை கூறும் போதே எரியும் தீக்குச்சியை மோகனின் மீது வீசினான் மாரி.

 

மோகனின் உடல் தீயில் எரிய, தன் தந்தை துடிப்பதைக் கண்ட முத்துராசு, “அப்பா…” என அதிர்ச்சியில் கதற, “மாரி…” எனக் கத்தினான் அங்கு ராஜதுரைக்கு உணவு கொண்டு வந்த விஜயா.

 

விஜயாவின் குரலில் முத்துராசுவைப் பிடித்து வைத்திருந்தவர்களின் பிடி ஒரு நொடி விடுபடவும் அதனைப் பயன்படுத்தி தன்னை விடுவித்துக் கொண்ட முத்துராசு ராஜதுரையின் அடியாள் ஒருவனின் கையிலிருந்த கத்தியைப் பறித்தவன், “ஏய்….” எனக் கத்திக் கொண்டு அதனை மாரியை நோக்கி எறிய, அக் கத்தி மாரியின் கன்னத்தைக் கிழித்தது.

 

தன் மகனின் செயலில் அதிர்ச்சியில் நின்றிருந்த விஜயாவைக் கோபமாகப் பார்த்த ராஜதுரை, “நீயி எதுக்குலே இங்குட்டு வந்த? யாரு உன்ன வர சொன்னது? போலே முதல்ல இங்கிருந்து..” எனக் கத்தவும் அங்கிருந்து அழுது கொண்டே ஓடினார் விஜயா.

 

மோகனின் உடல் தீயில் எரிய, “அப்பா… ஐயோ… அப்பா…” என அவரின் அருகில் நின்று கதறினான் முத்துராசு.

 

முத்துராசுவின் கண் முன்னே அவனின் தந்தை சாதி எனும் தீயில் எரிய, அவரைக் காக்க வழியின்றி அங்கே மடிந்து அமர்ந்து கதறி அழுதான் முத்துராசு.

 

“எலேய்… இவனையும் போட்டு தள்ளுலே… இவியல உசுரோட விட்டா நம்மளுக்கு தான் பிரச்சினை…” என ராஜதுரை கூறவும் ஏற்கனவே தன் கன்னத்திலிருந்து வடியும் இரத்தத்தைக் கண்டு மாரி முத்துராசு மீது ஆத்திரத்தில் இருக்க, தன் கையிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு முத்துராசுவை நோக்கிச் சென்றான்.

 

முத்துராசு கீழே அமர்ந்து அழுது கொண்டிருக்க, மாரி அவன் பின்னால் நின்று கத்தியை ஓங்க, அதற்குள் அங்கு வந்த இன்ஸ்பெக்டர், “எலேய்… அவன விடுலே… ஏ.சி இங்க தான்லே வந்துட்டு இருக்காய்ங்க… எவனோ ஏ.சிக்கு தகவல் கொடுத்துட்டாருலே… ஐயா.. தம்பி இங்குட்டு இருந்தா பிரச்சினை ஆகும்லே… அவர உடனே எங்குட்டு சரி தலைமறைவா அனுப்புங்க… மிச்சத நான் பார்த்துக்குறேன்…” என்கவும் ராஜதுரை, “எலேய் மாரி… நீ போலே இங்குட்டு இருந்து… எல்லாம் சரியானதுக்கு அப்புறம் நான் உன்ன கூப்பிடுறேன்… எலேய்… வெறசா இந்த இடத்த சுத்தம் பண்ணுலே… இந்தப் பயல தூக்கி வெளியே போடு… இவன் கதைய அப்புறமா பார்த்துக்கலாம்…” என்றார்.

 

இறுதியில் முத்துராசுவிற்கு தன் தந்தையின் சாம்பலே எஞ்ச, கதறி அழுதான் தன் நிலையை எண்ணி.

 

அவனின் மனதில் ராஜதுரையின் மீதும் மாரியின் மீதும் வன்மம் உண்டாகியது.

 

அந்த வன்மம் வளர்ந்து விருட்சமாய் மாறும் போது இந்த சாதி வெறி பிடித்த மிருகங்களின் நிலை தான் என்னவோ?

 

_______________________________________________

 

“துருவ் கண்ணா… ஜெய் கண்ணா… உள்ளாற வாப்பா… கொளுத்துற வெயில்ல ஆட்டம் போட்டுட்டு இருக்குறீய… திங்க வாலே…” என முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த துருவ்வையும் ஜெய்யையும் அலமேலு அழைக்கவும் இருவருமே ஒருவரையொருவர் முந்திக் கொண்டு உள்ளே ஓடி வந்தனர்.

 

“ஆத்தா பசிக்குதுலே… வெறசா திங்க தா…” என வயிற்றைத் தடவியபடி கூறிய ஜெய் வந்து உணவு மேடையில் அமர்ந்து கொள்ள, அவனின் பிடரியில் தட்டிய துருவ், “முதல்ல போய் குளிச்சிட்டு வாடா… வெளிய விளையாடிட்டு வந்ததுல உடம்பெல்லாம் சேறா இருக்கு…” என்ற துருவ் குளிக்க செல்ல, “அடப் போலே… அது கிடக்குது… முதல்ல திங்கணும்… சோறு தான் முக்கியம்… சேறாம்லே சேறு…” என்றவன் அலமேலு உணவை எடுத்து வரும் வரை மேசையில் தட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

சற்று நேரத்திலே அலமேலு உணவை எடுத்து வந்தவர், “எலேய்… தலைய நனைக்கலயா? எப்படிலே திங்க போறீய… இரு நானே ஊட்டி விடுறேன்…” என்றவர் அவனிற்கு ஊட்டி விட்டுக் கொண்டிருக்கும் போதே குளித்து முடித்து விட்டு வந்த துருவ்வும் ஊட்டி விடக் கூறி வாயைத் திறக்க, புன்னகையுடன் அவனுக்கும் ஊட்டி விட்டார் அலமேலு.

 

அலமேலு, “அண்ணனையும் ராசுவையும் இன்னும் காணலியேலே…” என வாசலைப் பார்த்தவாறே ஊட்டி விட, துருவ்வும் ஜெய்யும் ஏதோ தமக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

சில மணி நேரத்தில் அழுது வடிந்த முகத்துடன் முத்துராசு வீட்டினுள் நுழைய, அவனைக் கண்டு அதிர்ந்த அலமேலு, “எலேய் கண்ணா… ஏன்லே இப்படி உடஞ்சி போய் வரீய… என்னாச்சுலே..” எனக் கேட்க, “ஆத்தா…” என அவரை அணைத்துக் கொண்டு கதறி அழுதான் முத்துராசு.

 

துருவ்வும் ஜெய்யும் என்ன நடக்கிறது எனப் புரியாமல் முழிக்க, “கண்ணா… அண்ணா எங்கலே… ஸ்டேஷன்ல ஏதாச்சும் பிரச்சினை ஆச்சா…” என அலமேலு கேட்கவும், “ஐயன அவிய என் கண்ணு முன்னாலயே எரிச்சிட்டாய்ங்க ஆத்தா…” என நடந்தவற்றைக் கூறியவன் கதறி அழவும் இடிந்து நின்றார் அலமேலு.

 

“எங்களுக்கு நல்லது பண்ண போய் அநியாயத்துக்கு அண்ணன பறி கொடுத்துட்டோமேலே…” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் அலமேலு.

 

முத்துராசு கூறியது பாதி புரிந்தும் புரியாமலும் நின்ற துருவ்வும் ஜெய்யும் வந்து முத்துராசுவை அணைத்துக் கொள்ளவும் அவர்களை அணைத்துக் கொண்ட முத்துராசு, “அவியல நான் சும்மா விட மாட்டேன்லே ஆத்தா..” என ஆவேசமாகக் கூறவும், அவனின் முகத்தை வருடிய அலமேலு, “வேணாம் கண்ணா… ஆத்தாவால உன்னையும் இழக்க முடியாதுலே…” என அழ, “இல்ல ஆத்தா… எனக்கு எதுவும் ஆகாது… ஆனா அவியல நான் சும்மா விட மாட்டேன்லே… அவியல பதுங்கி நின்னு தான் தாக்கணும்… தம்பிங்கள நான் சீமைக்கே கூட்டிட்டு போய் படிக்க வைக்கிறேன் ஆத்தா… இவிய ரெண்டு பேரும் அந்த மிருகங்க கண்ணுல பட வேணாம்லே… என் படிப்பு முடியட்டும்… நான் சீமைல எனக்குன்னு ஒரு இடத்த உருவாக்கிட்டு இங்குட்டு வரேன்… என் ஐயன் உட்பட எங்க சனங்க அம்புட்டு பேரோட கண்ணீருக்கும் அவியல நான் பழி வாங்குவேன்லே… நீயும் வா ஆத்தா…” என உறுதி எடுத்த முத்துராசு அலமேலுவிடம் கூற, “ஆத்தாக்கு மனசு ஆறல ராசா… ஆனா என் புள்ள சொன்னா ஒரு காரணம் இருக்குன்னு ஆத்தா நம்புறேன்லே… நீ தம்பிங்களை கூட்டிட்டு சீமைக்கு போ கண்ணா…‌ ஆத்தாவால இந்த மண்ண விட்டுட்டு அங்குட்டு வந்து இருக்க முடியாது… நான் இங்குட்டே இருக்கேன்லே…” என்றார்.

 

அன்றே மோகனின் இறுதிக் கிரியைகளை முடித்து விட்டு அலமேலுவின் ஆசிர்வாதத்துடன் துருவ்வையும் ஜெய்யையும் அழைத்துக் கொண்டு சென்னை சென்றான்.

 

மாரியின் செயலால் விஜயா அவனை முழுதாகவே தலை முழுகி விட, அதனைக் கண்டு கொள்ளாத ராஜதுரை போலீஸிடம் மாட்டாமல் இருக்க மாரியை தலைமறைவாக இருக்க வைத்தார்.

 

துருவ் அலமேலுவின் இறந்த மகன் முத்துராசுவின் ஆட்சியர் ஆகும் கனவை நனவாக்கப் படிக்க, ஜெய்யும் தன்னால் முடிந்த அளவு துருவ்விற்கு உதவியாகவும் இருந்தவன் ஓரளவுக்கு படிக்க, முத்துராசு தன் மேற்படிப்பை முடித்தவன் சென்னையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்