Loading

துருவ் மறுநாள் தான் கண் விழிப்பான் என மருத்துவர் கூறியதால் அனைவரும் அன்று இரவு ஹாஸ்பிடலிலேயே தங்கினர்.

 

துருவ்வின் கட்டிலின் அருகில் இருந்த இருக்கையில் அலமேலு அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருக்க, அவரின் மடியில் படுத்திருந்தான் ஜெய்.

 

ஒரு மூலையில் மோகன் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் முத்துராசு.

 

திடீரென, “அப்பா எந்திரிங்கப்பா… எனக்கு பயமா இருக்குது… அடிக்கிறாங்கப்பா… வலிக்கிதுப்பா… வாங்கப்பா போலாம்…” என துருவ் உளற ஆரம்பிக்கவும் அவனின் சத்தத்தில் அலமேலுவும் மோகனும் கண் விழித்தனர்.

 

அலமேலு, “ஒன்னுமில்ல கண்ணா… பயப்படாதேலே… அழாதே… என் ராசால்ல…” என துருவ்வை சமாதானப்படுத்த, பயத்துடன் அலமேலுவைப் பார்த்த துருவ், “யாரு நீங்க… எனக்கு அப்பா கிட்ட போகணும்…” என்று அழுதான்.

 

“அண்ணே… இந்தப் புள்ள கிட்ட என்னலே சொல்றது?” என அலமேலு மோகனிடம் கவலையாகக் கேட்கவும், “இப்போ தான்லே பயலுக்கு ஹார்ட் சர்ஜரி முடிஞ்சிருக்கு… இப்போ அவிய அப்பாவ பத்தி சொன்னா இந்தப் புள்ளயால தாங்கிக்க முடியாதுலே… கொஞ்சம் நாள் கழிச்சி சொல்லலாம்…” என்றார் மோகன்.

 

“கண்ணா.. உன் பேர் என்னலே?” என அலமேலு கேட்கவும், ‘துருவ்’ என்றான் தயங்கியபடி.

 

அலமேலு, “அப்பா ஒரு சோலியா போய் இருக்காருலே… வெறசா சோலிய முடிச்சிட்டு வந்துருவாரு… அது வரைக்கும் இந்த ஆத்தா கூட தங்கிக்குறியா தங்கம்?” என ஏக்கமாகக் கேட்க, அவரின் முகத்தையே நோக்கிய துருவ்விற்கு என்ன தோன்றியதோ, “சரிம்மா…” என்றான்.

 

மோகன், “அம்மாடி… புள்ளைய வெச்சிட்டு இப்போ உங்க வீட்டுல தனியா இருக்குறது கஷ்டமா இருக்கும்லே… நீயி எங்க வீட்டுலயே கொஞ்சம் நாள் தங்கிக்கோ…” என்கவும் அலமேலு தயங்க, அந்த நேரத்தில் எழுந்த முத்துராசு, “ஆமா ஆத்தா… நீயும் எங்க கூடயே இருந்துடுலே..” என்கவும் அவனின் பேச்சைத் தட்ட முடியாது புன்னகையுடன் சம்மதித்தார் அலமேலு.

 

துருவ்வின் தந்தை சென்னையைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்தில் திருவம்பட்டியில் நடந்த ஊர்த்திருவிழா ஒன்றிற்கு திருவம்பட்டியில் இருக்கும் தன் நண்பன் அழைத்ததால் வந்த சமயம் துருவ்வின் தாயைக் கண்டு பார்த்த நொடியே காதல் கொண்டார். முதலில் அவளுடன் நட்பாகப் பேசிப் பழகி பின் தன் காதலை வெளிப்படுத்தவும் துருவ்வின் தாயும் சம்மதிக்க இருவரின் காதலும் எந்தவித பிரச்சினையும் இன்றி சென்று கொண்டிருந்தது. அப்போது தான் துருவ்வின் தாயிற்கு அவரின் வீட்டில் திருமணம் பேசுவதை அறிந்து அவளின் வீட்டிற்கு சென்று பெண் கேட்க, அவர்களோ சாதியைக் காரணம் காட்டி மறுத்து விட்டனர். இருவரும் எவ்வளவு கெஞ்சியும் துருவ்வின் தாயின் குடும்பத்தினர் மனமிறங்காது இருக்க, வேறு வழியின்றி வீட்டில் இருந்து ஓடிச் சென்று பெற்றோர் சம்மதமின்றியே திருமணம் முடித்தனர். திருவம்பட்டியில் இருந்தால் ராஜதுரையின் ஆட்களால் தமக்கு ஆபத்து வரும் என்று உடனே தன் மனையாளைக் கூட்டிக்கொண்டு துருவ்வின் தந்தை சென்னை கிளம்பினார். ஆனால் அங்கும் துருவ்வின் தந்தையின் குடும்பம் அவர்களின் திருமணத்தை எதிர்க்க, தன்னை நம்பி வந்தவளை பாதியில் விட மனம் வராது குடும்பம் இருந்தும் இருவரும் தனியாக வாழ்ந்தனர். அவர்களின் காதலின் பரிசாக துருவ் பிறக்க, இருவரின் மொத்த அன்பையும் அக் குழந்தைக்கு வாரி வழங்கினர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அதிக காலம் நிலைக்கவில்லை. துருவ்விற்கு இரண்டு வயதாக இருக்கும் போது அவனின் தாய் மீண்டும் கருவுண்டாகினார். ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்னரே திடீரென அவருக்கு வலிப்பு வந்து தாய் சேய் இருவருமே உயிர் துறக்க, தந்தையும் தனயனும் அநாதை ஆகினர்.

 

தன் மனையாளுடன் அவ் வீட்டில் சந்தோஷமாக கழித்த நாட்கள் துருவ்வின் தந்தையைப் பாடாய்ப்படுத்த, அதனைத் தாங்கிக்கொள்ள இயலாமல் தன் மனைவியின் சொந்த ஊரான திருவம்பட்டிக்கே துருவ்வையும் அழைத்துக்கொண்டு வந்தார்.

 

அதனால் தான் துருவ் திருவம்பட்டி மக்கள் பேசும் பாஷை பேசாது சாதாரணமாக பேசினான்.

 

தாய் இல்லாத குழந்தையை தாயுமானவனாகி அவர் வளர்க்க, துருவ்விற்கு எல்லாமே அவன் தந்தை என்று ஆகிப் போனார்.

 

துருவ்வின் நான்கு வயதில் விதி மீண்டும் அவன் வாழ்வில் புயலை வீச, இறுதியில் தனக்கு எல்லாமுமாக இருந்த தந்தையையும் இழந்து நிற்க, அதனைத் தீர்க்கும் விதமாக தாய், தந்தை, சகோதரர்கள் என ஒரு அழகிய குடும்பத்தையே இறைவன் அவனுக்கு வழங்கியது.

 

துருவ் கண் விழித்ததிலிருந்து யாருடனும் பெரிதாக ஒட்டவில்லை. அமைதியாகவே இருந்தான்.

 

அடிக்கடி அலமேலுவிடம் தன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்பான்.

 

அந் நேரமெல்லாம் ஏதாவது ஒன்று கூறி சமாளிப்பார் அலமேலு.

 

“ஏன்லே நீயி பேச மாட்டேங்குறீய… நீயி ஊமையா?” என ஜெய் கேட்க, “இல்ல நான் பேசுவேன்…” என அவசரமாகப் பதிலளித்தான் துருவ்.

 

ஜெய், “சரிலே.. அப்போ நீயி என் சேக்காளியா இருக்குறியா… எனக்கு யாருமே இல்ல…” என்கவும் துருவ் அலமேலுவின் முகத்தைப் பார்க்க, அவர் சரி எனத் தலையசைக்கவும் துருவ் ஜெய்யுடன் நட்பாகினான்.

 

ஒரு வாரம் ஹாஸ்பிடலிலேயே இருக்க, துருவ் முத்துராசு மற்றும் ஜெய்யுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான்.

 

முத்துராசு இருவருக்கும் அண்ணனாக மாறிப் போக, அதனைக் காணும் போது அலமேலுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

பின் துருவ்வை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யவும் மோகன் அனைவரையும் தன் வீட்டுக்கே அழைத்துச் சென்றார்.

 

மோகனின் வீட்டுக்குச் செல்ல முன் அலமேலுவின் உடைமைகளை எடுப்பதற்காக அவரின் வீட்டுக்குச் செல்ல, உள்ளே நுழைந்ததுமே அங்கு இருந்த முத்துராசுவின் பொருட்களைக் கண்டு மடிந்து அமர்ந்து கதறி அழுதார் அலமேலு.

 

அதில் துருவ் பயந்து மூலையில் ஒடுங்க, ஜெய் என்ன நடக்கிறது எனப் புரியாமல் பார்த்தான்.

 

தன் தம்பிகளின் மனநிலையைப் புரிந்து கொண்ட முத்துராசு அலமேலுவிடம் சென்று, “ஆத்தா… அழாதேலே… பாருங்க துருவ்வும் ஜெய்யும் பயப்படுறாப்புல… நீயி என்னை பார்த்தா உன் புள்ள போல இருக்குதுன்னு சொன்னியே… அப்போ அது பொய்யா…” எனக் கேட்கவும், “இல்லலே… நெசமா உன்ன பார்த்தா என் புள்ள ஞாபகம் தான் வருது… வாய் வார்த்தைக்கு உங்க மூணு பேரையும் புள்ளன்னு சொல்லல ராசா… நெசமா நீயி மூணு பேரும் இல்லன்னா நான் என்ன ஆகி இருப்பேனோ தெரியலலே…” என்று தன் கண்களைத் துடைத்தவர், “இனிமே ஆத்தா அழ மாட்டேன்லே… எனக்கு தான் ஒன்னுக்கு மூணு புள்ளைங்க இருக்காய்ங்களே…” என்றார் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

 

பின் தனக்கு அவசியமான பொருட்களை மட்டும் எடுத்து வைத்தவரின் கண்ணில் பட்டது முத்துராசுவின் புகைப்படம். 

 

ஒரு முறை ஊர்த்திருவிழா நடைபெறும் போது அலமேலுவிடம் கெஞ்சிக் கூத்தாடி அவருடன் திருவிழா பார்க்கச் சென்றிருந்தான் முத்துராசு.

 

அங்கு ஒரு இடத்தில் பணம் வாங்கி புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் இடம் இருக்க, முத்துராசுவின் பார்வை ஏக்கமாக அங்கு படிவதைக் கண்டு அவனை அங்கு அழைத்துச் சென்றார் அலமேலு.

 

தன் சேலை நுனியில் முடிச்சிட்டு வைத்திருந்த கொஞ்சம் பணத்தையும் கொடுத்து தன் மகனை புகைப்படம் எடுக்கக் கூறவும் முத்துராசுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

 

துள்ளிக் குதித்து சிரித்துக் கொண்டு புகைப்படத்துக்கு நின்றவன் அப் புகைப்படத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததுமே தன் கொட்டை எழுத்தில் ‘முத்துராசு – IAS’ என எழுதினான்.

 

தற்போது அப் புகைப்படத்தைக் கையில் எடுத்த அலமேலுவின் மனதை சொல்லொணாத் துயரம் அடைத்தது.

 

அப் புகைப்படத்தை நெஞ்சில் வைத்து அணைத்தவர் சத்தம் வராமல் கண்ணீர் விட்டார் எங்கு தன் பெறா புத்திரர்கள் வருத்தப்படுவார்கள் என்று.

 

ஆனால் அங்கு வந்த துருவ் அதனைப் பார்த்து விட்டான்.

 

முத்துராசுவின் புகைப்படத்தை அலமேலு அங்கேயே வைத்து விட்டுச் செல்ல, அங்கு வந்த துருவ் அப் புகைப்படத்தைக் கையில் எடுத்தான்.

 

உடனே அவன் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்க, ஆழ்ந்த மூச்சை விட்டவன் அப் புகைப்படத்தைத் தன்னுடனே வைத்துக் கொண்டான்.

 

பின் மோகனின் வீட்டிற்குச் செல்ல, சாதாரண வசதியுடன் இருந்த அவ் வீட்டை ஜெய், துருவ் உட்பட அலமேலுவும் கண்கள் விரித்து நோக்கினர்.

 

ஜெய், “ஆஹ்…. எம்புட்டு பெரிய வூடு… ஆத்தா… சோக்கா இருக்குதுலே…” என மகிழ்ச்சியாகக் கூறவும் புன்னகைத்த மோகன், “எலேய் ஜெய்… இனிமே இது தான்லே உங்க வூடு… உங்க இஷ்டப்படி இங்குட்டு இருக்கலாம்…” என்றார்.

 

நாட்கள் கடக்க துருவ் அனைவருடனும் ஓரளவு நெருக்கமாகி இருந்தான்.

 

ஆனால் அடிக்கடி தன் தந்தையைப் பற்றியும் விசாரிப்பான்.

 

மோகனும் அலமேலுவும் ஏதாவது கூறி சமாளித்துக் கொண்டிருந்தனர்.

 

ஒருநாள் துருவ்வும் ஜெய்யும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்க, எங்கோ செல்லத் தயாராகி வந்த மோகனைக் கண்ட அலமேலு, “எங்கண்ணே கிளம்புறீய… ஏதாவது சோலி கிடக்குதாலே…” என்க, “ஆமாம்மா… அந்த சாதி வெறி பிடிச்ச ராஜதுரை மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இருக்கேன்… அந்தப் பயலுங்கள பாருலே… ஜெய்யாவது இனிமே அவிய ஆத்தா திரும்ப வர மாட்டாய்ங்கன்னு புரிஞ்சிக்கிட்டு இருக்கான்… ஆனா நம்ம துருவ்… தினமும் அவிய ஐயன பத்தி கேட்டுட்டு இருக்கான்… எம்புட்டு நாளைக்கு தான் அவன் கிட்ட பொய் சொல்ல முடியும்லே… அவன் ஒருநாள் வளர்ந்து அவன் ஐயன் செத்துட்டார்… இனிமே திரும்ப வர மாட்டாருன்னு தெரிஞ்சா என்னலே நெனப்பான்… இம்புட்டு நாளா நாம அவன ஏமாத்திட்டோம்னு நினைக்க மாட்டான்… அந்தப் பயலுங்க அவிய பெத்தவங்கள இழந்ததுக்கும் நீயி உன் புள்ளைய இழந்ததுக்கும் அந்த ராஜதுரை பதில் சொல்லியே ஆகணும்… இதுக்கு ஒரு முடிவு கிடைக்காம நான் வர மாட்டேன்லே…” என மோகன் ஆவேசமாகப் பேசவும் கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்ட அலமேலு மோகனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவர், “உங்களுக்கு எம்புட்டு நன்றி சொன்னாலும் பத்தாதுண்ணே…” என்றார்.

 

மோகன், “அட என்னலே நீயி… இதுக்கெல்லாம் போய் கண்ணைக் கசக்கிக்கிட்டு… தெம்பா இரும்மா.. நல்லதே நடக்கும்… சரிலே… புள்ளைங்கள பார்த்துக்கோ… நான் வரேன்…” என்று விட்டுச் செல்ல, “அப்பா… நானும் வரேன்…” என முத்துராசுவும் அவருடன் கிளம்பினான்.

 

ஆனால் ராஜதுரைக்கு ஒரு முடிவு கட்டாமல் திரும்ப மாட்டேன் எனக் கூறிச் சென்ற மோகன் அதன் பின் வீடு திரும்பவே இல்லை.

 

அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வேகமாக வெளியேற, அவ்வளவு நேரமும் வாசலில் நின்று அவர்கள் பேசுவதைப் கேட்டுக் கொண்டிருந்த துருவ் அலமேலுவிடம் வந்து, “எங்கப்பா இனிமே வர மாட்டாராம்மா? எங்க அம்மாவைப் போலவே அப்பாவும் சாமி கிட்ட போயிட்டாரா?” என கவலை தோய்ந்த குரலில் கேட்க, “என் ராசா… உனக்கு நான் இருக்கேன்லே…” என துருவ்வை அணைத்து அழுத அலமேலு இதற்கு மேல் மறைக்க முடியாது என அவனிடம் நடந்த அனைத்தையும் கூறியவர் தன் மகன் முத்துராசுவின் இதயத்தைத் தான் அவனுக்குப் பொருத்தியிருப்பதாகக் கூறவும் எந்தப் பதிலும் கூறாமல் சற்று நேரம் அவரின் அணைப்பிலேயே இருந்த துருவ் மெதுவாக அலமேலுவிடமிருந்து விலகி தன் அறைக்குச் சென்றவன் முத்துராசுவின் புகைப்படத்தைக் கரத்தில் எடுத்து வெறித்துப் பார்த்தான்.

 

_______________________________________________

 

“தம்பி… நல்லா இருக்கியாலே…” என்ற குரலில் பழைய நினைவுகளிலிருந்து மீண்ட துருவ் அவசரமாகத் தன் கண்களைத் துடைத்தவன் முத்துராசுவின் புகைப்படத்தை மேசை மீது வைத்தான்.

 

துருவ், “வாங்க… வந்து உட்காருங்க…” என்கவும் அவன் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார் ராஜதுரையினால் கீழ் சாதிக்காரர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களில் ஒருவர்.

 

“உன்னையும்‌ கொன்னுட்டதா சொன்னாய்ங்க… எம்புட்டு கஷ்டமா போச்சின்னு தெரியுமாலே… உன் கூடவே சுத்துற பயலு தான் பாவம்… அநியாயத்துக்கு அந்தப் புள்ளைய கொன்னுட்டாய்ங்களே…” என வருத்தத்துடன் கூறவும் வெளி வரத் துடித்த கண்ணீரைக் கடினப்பட்டு அடக்கிய துருவ், “உங்க பிரச்சினைய சொல்லிட்டு மணு கொடுத்துட்டு போங்க.. நான் பார்க்குறேன்…” என்க,

 

“உனக்கு தெரியாததாலே… இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு ஒரு நல்லதும் நடந்தது இல்ல தம்பி… கீழ் சாதின்னு சொல்லி ரொம்ப கீழ்தரமா நடத்துறாய்ங்க… எங்க சனத்துக்கிட்ட இருந்து அம்புட்டு வேலையையும் வாங்கிட்டு எங்க உழைப்புக்கு சரியான சம்பளத்த கூட தரதா இல்லலே… அதைக் கேக்க போய் தான் எங்க வூட்டையெல்லாம் கொளுத்தி போட்டுட்டாய்ங்க… எம்புட்டு பேரு உசுரு அவியலோட சாதி வெறிக்கு பலி ஆகி இருக்குதுலே… இதுக்கு ஒரு முடிவு வராதான்னு தான் எங்க சனம் காத்திட்டு இருக்கு..” எனக் கண் கலங்கக் கூறியவர்,

 

“ஆனா உன்ன பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்திடுச்சுலே… நீயி எங்க உரிமையை வாங்கித் தந்துருவியே…” என்றார்.

 

துருவ், “கவலைப்படாம போய்ட்டு வாங்கய்யா… நான் பார்த்துக்குறேன்…” என்கவும் அவர் கிளம்ப, அதன் பின் ஒவ்வொருவராக வந்து தங்கள் பிரச்சினைகளைக் கூறினர்.

 

_______________________________________________

 

கோபமாக தன் வீட்டிற்குள் நுழைந்த ராஜதுரை கண்ணுக்கு எட்டிய பொருட்களை எல்லாம் தட்டி விட்டவர் அருணிமாவின் புகைப்படத்துக்கு கீழே படுத்துக் கிடந்த விஜயாவின் முடியைப் பற்றி இழுத்து வந்து ஹாலில் தள்ளியவர், “எல்லாம் நீ பெத்து தொலைச்ச கழுதையால வந்ததுலே… அவன அன்னைக்கே போட்டுருக்கணும்லே… ஆனா எப்படியோ தப்பிச்சு திரும்ப வந்துட்டான்… உன் பொண்ணு இடைல வந்து செத்துத் தொலையாம இருந்திருந்தா அவன் போய் சேர்ந்திருப்பான்… ச்சே…” எனக் கத்த,

 

பைத்தியம் பிடித்தது போல் சிரித்த விஜயா, “வந்துட்டானா… என் புள்ளைய அநியாயத்துக்கு கொன்னுட்டியேலே பாவி மனுஷா… உன்ன நிச்சயம் அவன் பழி வாங்குவான்லே…” என்கவும் அவரை ஓங்கி அறைந்த ராஜதுரை, “எம்புட்டு தெணாவட்டு இருந்தா என் கிட்டயே இப்படி சொல்லி இருப்பியேலே… உன்னை இன்னும் உசுரோட வெச்சி இருக்கேனே… அதான்லே இம்புட்டு பேசுறீய… உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்…” என்றவர் மேசையில் இருந்த பூச்சாடியை எடுத்து தன் மனைவி என்றும் பாராது விஜயாவை அடிக்கப் பார்க்க, அதற்குள் ஓடி வந்து அவரைத் தடுத்த மாரி, “என்னய்யா செய்யுறீய… ஏற்கனவே நிறைய பேர போட்டுட்டோம்… இப்போ ஆத்தாவையும் போட்டுட்டா பிரச்சினை ஆகும்லே… நான் இவியல பார்த்துக்குறேன்…” என்கவும் தன் கையிலிருந்த பூச்சாடியை விஜயாவின் அருகில் எறிந்து விட்டு சென்றார் ராஜதுரை.

 

ராஜதுரை சென்றதும் மூலையில் ஒடுங்கிக் கிடந்த தன் தாயின் அருகில் சென்ற மாரி, “என்னை உன் புள்ளையே இல்லன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு சுத்தினீய… பார்த்தியாலே.. இப்போ உன் பொண்ணையே உனக்கு இல்லாம ஆக்கிட்டேன்…” எனக் குருரச் சிரிப்புடன் கூறவும் அவன் சட்டையைப் பிடித்த விஜயா, “சொந்தத் தங்கச்சின்னு கூட பார்க்காம என் புள்ளைய அநியாயத்துக்கு கொன்னுட்டியேலே பாவி… நீயெல்லாம் நல்லா இருப்பியா… நல்லா இருப்பியா…” எனக் கதறவும் அவரைத் தள்ளி விட்டுச் சென்றான் மாரி.

 

_______________________________________________

 

துருவ் பணியில் சேர்ந்த முதல் நாளே கீழ் சாதி மக்கள் அனைவரின் பிரச்சினையையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க, திடீரென அவன் கைப்பேசி ஒலித்தது.

 

முத்துராசு அழைத்திருக்கவும் துருவ் அழைப்பை ஏற்று காதில் வைக்க, “எலேய்… வேலையா இருக்கியாலே…” என மறுபக்கம் முத்துராசு கேட்கவும், “இல்லண்ணா.. வீட்டுக்கு கிளம்பலாம்னு இருக்கேன்… என்னாச்சுண்ணா..” எனக் கேட்டான் துருவ்.

 

“டேய்… கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் வந்துட்டு போறியாலே…” என முத்துராசு கேட்கவும் பதறியவனாக இருக்கையில் இருந்து எழுந்த துருவ், “அம்மாவுக்கு என்னாச்சுண்ணா… ஒரு பிரச்சினையும் இல்ல தானே…” என பதட்டமாகக் கேட்க, “டேய் பயப்படாதேலே… ஆத்தாவுக்கு நெசமா ஒன்னும் இல்ல… நீ கொஞ்சம் வந்துட்டு போயிடுலே..” என முத்துராசு கூற, “சரிண்ணா… நான் உடனே வரேன்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் துருவ்.

 

பின் துருவ் அவசரமாகக் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்ல, மருத்துவமனை வாசலிலேயே அவனுக்காகக் காத்திருந்தான் முத்துராசு.

 

“அம்மாவுக்கு என்னாச்சு அண்ணா… எதுக்காக அவசரமா கிளம்பி ஹாஸ்பிடல் வர சொன்னீங்க…” என துருவ் பதட்டமாகக் கேட்க, “ஒன்னும் இல்லலே… இன்னைக்கு கொஞ்சம் அதிகமாவே அடம் பிடிக்குறாய்ங்க… உன்ன எல்லாம் பார்க்கணும்னு சொன்னாய்ங்க… அதான்லே உடனடியா வர சொன்னேன்… வாலே உள்ளாற போலாம்…” என துருவ்வுடன் மருத்துவமனையினுள் நுழைந்தான் முத்துராசு.

 

அலமேலுவை அனுமதித்திருந்த அறையினுள் நுழையும் போதே வாடிய கொடியாய் படுத்திருந்த தன் தாயைக் கண்டு தனயனின் விழிகள் கலங்க, அதற்குள் துருவ்வைக் கண்டு கொண்ட அலமேலு, “எலேய் துருவ் கண்ணா… வந்துட்டியா… என் புள்ள எங்கலே… எனக்கு ஜெய்ய பார்க்கணும் போல இருக்கு… பாவம்லே என் புள்ள… பசி தாங்க மாட்டான்…” என உளற, முத்துராசுவாலும் துருவ்வாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை.

 

முத்துராசு அலமேலுவின் ஒரு பக்கம் அமர்ந்து அவரை சமாதானப்படுத்த முயல, மறுபக்கம் அலமேலுவை அணைத்துக்கொண்ட துருவ், “அவன் இனிமே வர மாட்டான்மா… நீங்க அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்…” எனக் கண்ணீருடன் கூற,

 

தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுத அலமேலு, “எல்லாம் என் ராசிலே… என் புள்ளைங்க எல்லாம் என்னை விட்டு போயிடுறாய்ங்க…” என்க, “அழாதீங்கம்மா… உன்ன இப்படி பார்க்க முடியல… அவன் எப்பவும் நம்ம கூட தான்மா இருப்பான்…” என துருவ் கூறவும், “எலேய் துருவ் கண்ணா… இனிமே யாருலே என் கூட ஒன்னுக்கு ஒன்னு வாயடிச்சிட்டு இருப்பான்…” என அலமேலு கேட்கவும் அவரை இறுக்க அணைத்துக் கொண்டு அழுதான் துருவ்.

 

சற்று நேரத்திலேயே அழுத மயக்கத்தில் அலமேலு உறங்கி விட,

 

முத்துராசு, “எலேய் துருவா… நீயே இப்படி இருந்தா எப்படிலே… ஆத்தாவ சமாதானப்படுத்து… மருந்தொன்னும் குடிக்க மாட்டேங்குறாய்ங்க…” எனக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு கூற, “என்னால முடியலண்ணா… இதுக்கெல்லாம் நான் அந்த ராஜதுரைய பழி வாங்காம விட மாட்டேன்…” என ஆவேசமாகக் கூறினான் துருவ்.

 

“எலேய்… அதுக்கு தான்லே நான் இருக்கேன்… அவன நான் சும்மா விட மாட்டேன்… நம்ம ஜெய் உன் கிட்ட வாங்கின சத்தியம் ஞாபகம் இருக்கு தானேலே… நீ உன் இலட்சியத்த பாரு…” என முத்துராசு கூறவும் சரி எனத் தலையசைத்தான் துருவ்.

 

சற்று நேரம் அலமேலுவின் அருகில் இருந்து விட்டு முத்துராசுவின் கட்டளைக்கு இணங்க அங்கிருந்து கிளம்பினான் துருவ்.

 

நன்றாக இருட்டி விட்டிருக்க, வரும் வழியில் ஹோட்டலில் வாங்கிய உணவுடன் துருவ் தன் வீட்டின் கதவைத் திறக்கவும் ஓடி வந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அருணிமா.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்