ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் எம்.எல்.ஏ தேர்தலில் தொடர்ந்து ராஜதுரையே வென்று வந்தார்.
அது நேர்வழியிலா என்று கேட்டால் கேள்விக்குறி தான்.
ராஜதுரையை எதிர்த்து தேர்தலில் நின்றவர்கள் தம் சொத்தை இழந்து அல்லது குடும்பத்தை இழந்து இல்லாவிடில் உயிரையாவது இழந்து நிற்பர் என்பது திருவம்பட்டியில் எழுதப்படாத விதி.
அதனாலே யாருக்கும் அவரை எதிர்த்து நிற்க துணிவு வந்தது இல்லை.
ராஜதுரையின் கட்சியும் கூட சாதியை அடிப்படையாக வைத்து தொடங்கியது தான்.
ராஜதுரையின் தாத்தா தொடங்கிய கட்சி அவரைப் போலவே உள்ள சாதி வெறியர்களின் உதவியால் முன்னேற, அவருக்குப் பின் ராஜதுரையின் தந்தை, ராஜதுரை என தொடர்ந்து அக் கட்சியை நடத்தி வருகின்றனர்.
ராஜதுரையின் கட்சியில் அவரின் கீழ் பொறுப்பில் இருந்த ஒருவன் அவரை எதிர்த்து நிற்பதை அறிந்து தான் அன்று மாரி அவனைக் கொன்று போட்டான்.
இம்முறையும் தன் பெயரை நாமினேஷனில் பதிவிடுவதற்காகவே மாரியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் ராஜதுரை.
ஆனால் அங்கு அவர் அறவே எதிர்ப்பார்க்காதது முத்துராசுவைத் தான்.
முத்துராசு ராஜதுரையையும் மாரியையும் இகழ்ச்சியாகப் புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்க, அவனை முறைத்தவாறு ராஜதுரை வந்தார்.
அவருக்குப் பின்னால் நின்ற மாரியின் கை தானாக அவன் முகத்தில் இருந்த வடுவில் பதிய, முத்துராசுவின் இதழ்கள் கேலியாகப் வளைந்தன.
ராஜதுரை, “எலேய் கலெக்டரு… சீக்கிரம் நாமினேஷன ஆரம்பிலே… எடு அந்த பத்திரத்தை கையெழுத்த போட…” என அதிகாரமாகக் கூறினார்.
அந்த ஆட்சியர் கூட ராஜதுரையின் ஆள் தான். அதனால் தான் ராஜதுரைக்கு அவ்வளவு இளக்காரம்.
ஆட்சியர், “அது வந்துங்க ஐயா…” என இழுக்க, “என்னலே இழுத்துட்டு இருக்குறீய..” என ராஜதுரை கோபமாகக் கேட்கவும், “இவரும் இந்த தடவ உங்களுக்கு எதிரா தேர்தல்ல நிக்கிறாருங்கய்யா..” என ஆட்சியர் பதிலளிக்கவும் அவ் அறையே அதிரும்படி சிரித்தார் ராஜதுரை.
அவரைத் தொடர்ந்து மாரியும் சிரிக்க, “என்னண்ணே.. இவியலுக்கு பைத்தியம் முத்திருச்சாலே… அந்தாளு ஏதோ காமெடி பண்ணிட்டான் போல இம்புட்டு கேவலமா சிரிக்கிறாய்ங்க..” என கஜா முத்துராசுவிடம் கோபமாகக் கேட்க, “இருலே… நல்லா சிரிச்சிக்கட்டும்… இனிமே இவியல சிரிக்க முடியாதபடி செய்ய தான் நான் இருக்கேன்..” என்றான் முத்துராசு புன்னகையுடன்.
ராஜதுரை, “என்னலே நீயி… நாமினேஷன்ல பேர குடுத்தா மட்டும் போதுமா… எவன்லே இந்த ***சாதிக்காரப் பயலுங்களுக்கு வோட் போடுவாய்னுங்க..” எனக் கேலியாகக் கூறவும் அவரை அடிக்கப் பாய்ந்தான் கஜா.
“யாரப் பார்த்துலே ****சாதிக்காரன்னு சொன்னீய…” என கஜா எகிற, “எலேய் விடுலே… நாய் நம்மள பார்த்து குறைச்சா அதுக்கு தான்லே வாய் வலிக்கும்… நமக்கு ஒன்னும் ஆகாது…” என முத்துராசு கூறவும் மாரி கோபத்தில் பல்லைக் கடிக்க, “அதையும் தான் பார்ப்போம்லே… யாரு நாய் போல தெருவுல அடிபட்டு சாக போறான்னு… எலேய் கலெக்டரு… எடுலே அந்தப் பத்திரத்தை…” என்றார் ராஜதுரை.
உடனே ஆட்சியர் பெயர் பதிவுப் பத்திரத்தை எடுத்து நீட்டவும் ராஜதுரை கையெழுத்திட, அவரைத் தொடர்ந்து கையெழுத்து இட்டான் முத்துராசு.
பின் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனைவரும் வெளியே வந்ததும் தன் மோட்டார் சைக்கிளை இயக்கச் சென்ற முத்துராசுவைத் தடுத்த ராஜதுரை, “எலேய்… அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில என்னையே எதிர்த்து நிக்க வந்துட்டியாலே… பார்க்கலாம் உனக்கு எவன் வோட்டு போடுறான்னு… உன் சாவு என் கையால தான்…” என்று மிரட்டி விட்டுச் செல்ல, அதனைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத முத்துராசு கஜாவுடன் கிளம்பினான்.
_______________________________________________
அருணிமா கூறியதால் துருவ் எங்கும் செல்லாமல் அவ் இடத்திலேயே நிற்க, சற்று நேரத்திலே அங்கு வந்த அருணிமா துருவ்வைக் கண்டு புன்னகைத்தவள், “நீயி போயிடுவேன்னு நினைச்சேன் மாமா…” என்கவும் அவளுக்கு பதிலளிக்காது அவளின் முகத்தையே வெறித்தான் துருவ்.
எப்போதும் புன்னகையுடன் பளிச்செனத் தெரியும் முகம் இன்று ராஜதுரையின் கைங்கர்யத்தால் சிவந்து வீங்கி இருந்தது.
ராஜதுரை அறைந்ததில் உதடு கிழிந்து வந்த இரத்தம் கூட காய்ந்து அப்படியே இருந்தது.
அதனைக் கூட கண்டு கொள்ளாது காயத்திற்கு மருந்திடாது தன்னைத் தேடி வந்தவளின் காதலுக்கு தான் என்ன கைமாறு செய்ய முடியும் என நினைத்து வருந்தினான் துருவ்.
“என்ன மாமோய்… உன் பொஞ்சாதி லட்சணமா இருக்கேனாக்கும்…” எனப் புன்னகையுடன் அருணிமா கேட்கவும் அவசரமாக தன் பார்வையை வேறு பக்கம் திரும்பினான் துருவ்.
அருணிமா, “எதுக்குலே மூஞ்ச திருப்பிக்குறீய… நீயி பார்க்காம வேற யாரு பார்க்க போறாய்ங்க.. ஜாரிய பக்கத்துல வெச்சிட்டு சும்மா இருக்கியேலே..” என்றாள் கேலியாக. (ஜாரி – அழகான பெண்)
துருவ் பெருமூச்சு விட்டு விட்டு அமைதியாக இருக்கவும் சில நொடி அவனையே உற்று நோக்கினாள் அருணிமா.
திடீரென, “உனக்கு இன்னைக்கு ஏதோ ஆகிடுச்சு மாமோய்…” என அருணிமா கூறவும் அதிர்ந்த துருவ் புரியாமல் அவளைப் பார்க்க, “நீயி என் மாமன் இல்லலே…” என்க, “என்ன உளரிட்டு இருக்க..” என்றான் துருவ் முறைப்புடன்.
“நெசமா தான்லே… நீயி என் மாமன் இல்ல… என் மாமன் எப்பப்பாரு என்னை வையுறதே சோலியா வெச்சிருப்பார்… ஆனா எனக்கு அவிய கிட்ட அது தான்லே பிடிச்சது… அவிய திட்டுறது கூட அப்படியே என்னைக் கொஞ்சுறது போல இருக்கும்…” என அருணிமா புன்னகையுடன் கூறியவள்,
“ஆனா நீயி வந்த நேரத்துல இருந்து என்னை ஒன்னும் சொல்லவே இல்லலே… பாரு எம்புட்டு நேரமா அமைதியாவே இருக்கீய..” என்றாள்.
துருவ், “நிரு… ப்ச்… அருணிமா… ஒரு தடவ நான் சொல்றத அமைதியா கேளு… ப்ளீஸ்…” என்கவும், “வாவ்… நிரு… என்னை இது வரை யாருமே அப்படி கூப்பிட்டதில்லலே… மாம்ஸ்… சூப்பர்… இனிமே அப்படியே கூப்பிடுலே…” என அருணிமா கண்கள் மின்னக் கூற,
“அருணிமா…” என பல்லைக் கடித்துக் கொண்டு அழுத்தமாகக் கூறிய துருவ் பெருமூச்சு விட்டவன், “ஃபர்ஸ்ட் உன்ன திட்டினதுக்கு எல்லாம் சாரி… ஆனா தயவு செஞ்சி நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ… இது சரி வராது… வீணா ஆசையை வளர்த்து உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காதே… இது நடக்காத ஒரு விஷயம்… நீ ரொம்ப நல்ல பொண்ணு அருணிமா… நீ ரொம்ப உயரத்துல வாழ வேண்டியவ… ஆனா என்னை லவ் பண்ணினா நீ….” என்று நிறுத்தியவன், “விட்டுரு… ப்ளீஸ்…” என்றவன் அருணிமா, “மாமா… ஹேய்… மாமா… நில்லுலே..” என்று கத்தக் கத்த கேட்காமல் அங்கிருந்து சென்றான்.
துருவ்வின் தலை மறைந்ததும் புன்னகைத்த அருணிமா, “உனக்கு என்னை நெசமாலுமே பிடிக்கலையோன்னு மனசுல ஒரு மூலைல சந்தேகமா இருந்ததுலே… ஆனா இன்னைக்கு அந்த சந்தேகம் கூட சுத்தமா போயிடுச்சு… எனக்கு நீயி என் மேல வெச்சி இருக்குற காதல் புரிஞ்சி போச்சு… இனிமே நீயி என்ன… யாராலுமே நான் உன்ன காதலிக்கிறத தடுக்க முடியாதுலே..” எனக் கூறிக் கொண்டாள்.
_______________________________________________
“எலேய்… என்னலே இன்னும் அப்படியே நிக்கிறீய…” என சென்னியம்மாள் முறைப்புடன் கேட்க, “என்ன புள்ள இப்படி பேசுறீய… நெசமாலுமே உனக்கு என்னை பிடிக்கலயாலே…” என ஜெய் கேட்கவும் அவனுக்கு பதிலளிக்காது அமைதியாக இருந்தாள்.
ஜெய், “ஒரு வேளை நீயி நான் கீழ் சாதில பொறந்தவன்னு என்னை வேணாம்னு சொல்றியாலே…” என வருத்தத்துடன் கேட்க,
அவசரமாக மறுப்பாகத் தலையசைத்த சென்னியம்மாள், “இல்லலே… எனக்கு இந்த சாதியெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல… ஆனா… இந்த வூருக்காரங்களுக்கு சாதிங்கிறது அவிய ரத்தத்துல ஊறி போய் கிடக்குது… நெசமா சொல்லவாலே… உன்னோட கள்ளங்கபடமில்லாத பேச்சு எனக்கு பிடிக்கும்… ஆனா அவிய நம்மள வாழ விட மாட்டாய்ங்க… அதனால வேணாம்லே.. நீயி போயிடு… நீயி என் கூட பேசிட்டு இருக்குறத யாராவது பார்த்தாலே பெரிய பிரச்சினை ஆகிடும்…” என்றாள்.
ஜெய், “ஹேய்… நெசமா தான் சொல்றியாலே… நெசமாலுமே உனக்கு என்னை பிடிக்குமா… ஹுஹூ… எலேய்… எம்புட்டு சந்தோஷமா இருக்குது தெரியுமா… இங்க பாருலே… உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே… எனக்கு அது போதும்லே… எந்தக் கொம்பன் வந்தாலும் பார்த்துக்கலாம்…” என மகிழ்ச்சியுடன் கூற, “இல்லலே.. நான்…” என சென்னியம்மாள் ஏதோ கூற வரவும் அவள் வாயில் விரல் வைத்துத் தடுத்தவன், “நீயி எதுவும் சொல்ல வேணாம் புள்ள… அதான் சொல்லிட்டியேலே என்னைப் பிடிச்சிருக்குன்னு… மிச்சத நான் பார்த்துக்குறேன்… சரிலே நீயி போ… நாம நாளைக்கு சந்திக்கலாம்…” என்று கூறவும் புன்னகைத்த சென்னியம்மாள் ஜெய்யைத் திரும்பிப் பார்த்தபடியே அங்கிருந்து சென்றாள்.
சென்னியம்மாள் சென்றதும் ஜெய்யும் அங்கிருந்து கிளம்பினான்.
_______________________________________________
“எலேய்… ஏன்லே அந்த ****சாதிக்காரன் என்னை எதிர்த்து தேர்தல்ல நிக்க போறான்னு என் கிட்ட சொல்லல…” என ராஜதுரைகோபமாகக் கேட்க,
“எனக்குமே தெரியாதுங்க ஐயா… இப்போ தான் எனக்கும் தெரிஞ்சது…” என மறுபக்கம் கூறப்படவும், “அந்தப் பயலு பண்றது எல்லாமே எனக்கு உடனுக்குடனே தெரியப்படுத்துலே… அவன் எப்படி என்னை எதிர்த்து ஜெய்க்கிறான்னு நானும் பார்க்குறேன்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார் ராஜதுரை.
பின் ராஜதுரை அருணிமாவின் அறைக்குச் சென்று அறைக் கதவைத் திறக்க முயற்சிக்க அது உள்ளே தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது.
“எலேய்… கதவை தெறலே..” என ராஜதுரை கத்தவும் சத்தம் கேட்டு அங்கு வந்த மாரி, “என்னாச்சுங்கய்யா…” என்க, “அந்தக் கழுதையோட ரூம் பூட்டி கிடக்குதுலே… எங்குட்டாவது தப்பிச்சி போய்ட்டாளான்னு தெரியல…” என்றார் ராஜதுரை கோபமாக.
மாரி, “நான் பார்க்குறேன்லே…” என்ற மாரி கதவை இடித்துத் திறக்கவும் அருணிமா குளியலறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
திடீரென கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த தந்தையையும் சகோதரனையும் அருணிமா கேள்வியாகப் பார்க்க, “இம்புட்டு நேரம் என்ன செஞ்சிட்டு இருந்தீயலே..” என ராஜதுரை கேட்க, “குளிச்சிட்டு இருந்தேன்பா… ஏன்.. என்னாச்சு..” என அருணிமா கூறவும் அவளை முறைத்து விட்டு அறையிலிருந்து வெளியேறினார் ராஜதுரை.
ராஜதுரை சென்றதும் மாரி அருணிமாவைப் பார்த்து மர்மப் புன்னகையை உதிர்த்து விட்டுச் செல்ல, ஆனால் அருணிமாவின் கெட்ட நேரம் அவள் அதனைக் கவனிக்கவில்லை.
இருவரும் சென்றதும் பெருமூச்சு விட்டாள் அருணிமா.
ராஜதுரையும் மாரியும் வருவதற்கு சற்று முன்பு தான் மதில் மீது ஏறிக் குதித்து தன் அறை ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்நிருந்தாள் அருணிமா.
கீழே தந்தையின் சத்தம் கேட்டதுமே நிச்சயம் அவர் தன்னைத் தேடித் தான் வருவார் எனத் தெரிந்து வைத்தவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.
_______________________________________________
“எலேய் துருவா…” என ஜெய் கத்திக் கொண்டே வீட்டினுள் நுழையவும், “இங்க தான்டா இருக்கேன்… எதுக்கு சும்மா கத்திட்டு வராய்…” என ஹாலில் அமர்ந்திருந்த துருவ் கடுப்பாகக் கேட்க, “டேய் மச்சான்… இன்னைக்கு நான் எம்புட்டு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமாலே…” என ஜெய் கேட்க, “சொன்னா தான்டா தெரியும்..” என்றான் துருவ் முறைப்புடன்.
ஜெய், “எலேய்… நான்… நான்… ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்லே…” என்று விட்டு வெட்கத்தில் முகத்தை மறைத்துக் கொண்டான்.
“ச்சீ.. கருமம் கருமம்… முதல்ல கைய எடுடா… கன்ட்றாவியா இருக்கு…” என துருவ் கூறவும் அவசரமாக ஜெய் தன் கரத்தை விலக்க, “தெளிவா சொல்லு… என்ன உளறிட்டு இருக்க…” எனக் கேட்டான் துருவ்.
ஜெய் சென்னியம்மாளைப் பார்த்தது, பார்த்ததும் அவளைப் பிடித்தது முதல் தற்போது நடந்தது வரை அனைத்தையும் கூற, அவனைப் புரியாமல் பார்த்த துருவ், “என்னடா சொல்ற… விளையாடுறியா… சரி பார்த்ததும் உனக்கு காதல் வந்ததை கூட கொஞ்சம் ஒத்துக்கலாம்டா.. ஆனா அந்தப் பொண்ணும் எப்படிடா… டேய் ஜெய்… வீணா எந்தப் பிரச்சினைலயும் மாட்டிக்காதேடா…” என்கவும் அவனை முறைத்த ஜெய், “போலே… உனக்கு பொறாமை நான் காதலிக்கிறத நெனச்சி…” என்று விட்டு சென்றான்.
துருவ், “இவனைத் திருத்த முடியாது…” என்று தலையிலடித்துக் கொண்டவன் தன் வேலையைப் பார்க்க கிளம்பினான்.
_______________________________________________
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிளம்பியதுமே முத்துராசு செய்த முதல் வேலையே தாய் அலமேலுவிடம் தன் முடிவைப் பகிர்ந்து கொண்டது தான்.
அலமேலு, “எனக்கு உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குலே… நீயி நம்ம சனத்துக்காக தானே இதை செய்யப் போறீய.. நிச்சயம் நீயி இதுல ஜெய்ப்பேலே..” என்று ஆசிர்வதிக்க, துருவ்வும் ஜெய்யும் முத்துராசுவைக் கட்டித் தழுவி தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின் முத்துராசு கஜாவிடம் கூறி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் பார்த்து தனது குறிக்கோளை முன்வைத்து வாக்களிக்க வேண்ட, அவர்களோ முத்துராசுவைக் கீழ்த்தரமாகப் பேசி அவமானப்படுத்தினர்.
சிலர் அழுகிய பழங்கள், குப்பைகள் என அவன் மீது எறியவும் முத்துராசு எதுவுமே செய்யாமல் பொறுமை காத்தான்.
கீழ் சாதி மக்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை ஒன்று கூட்டி அவர்களுக்காகத் தான் அவன் தேர்தலில் நிற்பதாகக் கூற, அவர்களோ ராஜதுரைக்குப் பயந்து சம்மதிக்காமல் அங்கிருந்து கிளம்பினர்.
முதல் முயற்சியே தோல்வி அடையவும் மனம் வருந்திய முத்துராசு கஜாவுடன் தன் வீட்டை நோக்கிச் செல்லப் பார்க்க, அவனைக் கேலியாகப் பார்த்து விட்டு சென்றான் மாரி.
மாரியின் செயலில் கோபம் கொண்ட முத்துராசு தன் முயற்சியைக் கை விட எண்ணியதை நினைத்து தன்னையே கடிந்து கொண்டவன் ஒரு முடிவாக அங்கிருந்து கிளம்பினான்.
_______________________________________________
இரண்டு வருடங்களுக்குப் பிறகு
ராஜதுரையின் வீடே கோலாகலமாக இருக்க, அங்கு வாசலில் ஒரு மூலையில் விரித்து விட்ட கூந்தல், அழுது வடிந்த முகம் என பார்க்கவே பரிதாபமான நிலையில் விஜயா சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவரின் தலைக்கு மேலே ஒரு புகைப்படத்துக்கு மாலையிட்டு விளக்கேற்றி வைக்கப்படிருந்தது.
அதில் தன் பளீர் புன்னகை முகத்துடன் காணப்பட்டாள் அருணிமா.
_______________________________________________
இருட்டிக் கிடந்த வீட்டினுள் நுழைந்து விளக்குகளை ஒளிரவிட்ட துருவ்வின் கண்கள் தானாகவே கண்ணீரை சிந்த, அவனின் பார்வையோ தன் முன் இருந்த சுவற்றையே வெறித்தது.
அங்கு தன் வழமையான குறும்புப் புன்னகையுடன் நின்றிருந்த ஜெய்யின் புகைப்படம் பெரிதாக மாட்டி மாலையிடப்பட்டிருந்தது.
அப் புகைப்படத்தின் அருகே சென்ற துருவ் ஜெய்யின் முகத்தை விரல்களால் வருடியவன், “இன்னும் எத்தனை பேர இழப்பேன்டா…” என்று கதறி அழுதான்.