Loading

ஜெய் யாருடனோ கைப்பேசியில் பேசி விட்டு வைத்து விட்டு தன் முன் இருந்த கண்ணாடியையில் தெரிந்த தன் விம்பத்தையே சற்று நேரம் வெறித்தவன் முத்துராசு வருவதைக் கண்டு அவசரமாக முகத்தை மாற்றிக் கொண்டு, “அண்ணே..” என்றவாறு எழுந்து நின்றான்.

 

முத்துராசு, “என்னலே.. இன்னும் கோவமா தான் இருக்கியா?” என்க,

 

ஜெய், “என்னண்ணே நீயி… அவன் பண்ண காரியத்துக்கு தான்லே அம்புட்டு ஆத்திரம் வந்தது… அதான் சட்டுன்னு யோசிக்காம அடிச்சுப்புட்டேன்… அந்தப் புள்ள‌யோட நிலமையை பார்த்ததும் வேற என்ன பண்ணன்னு தெரியலை அண்ணே…” என்றான் வருத்தத்துடன்.

 

முத்துராசு, “எனக்கு உங்க ரெண்டு பேரையும் பத்தி தெரியும்லே… அவன் நம்மள போல இல்ல… சின்ன விஷயத்த பத்தி கூட பெரிசா யோசிப்பான்… சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டுருவான்லே.. அம்புட்டு பட்டு இருக்கான் அவன்…” என்கவும்,

 

“நீயி சொல்லணுமாண்ணே… எனக்கு தெரியாதா துருவ் பத்தி… நான் பேசுறேன்லே… ஆனா அந்த புள்ளய நெனச்சா தான்ணே பயமா இருக்கு… அந்தாளு என்ன பண்ணிட்டானோ தெரியலண்ணே…” என ஜெய் கூறவும், “அந்தப் புள்ளக்கி எதுவும் ஆகாதுலே… நான் பார்த்துக்குறேன்… நீயி கொஞ்சம் நேரம் கழிச்சி போய் பயலு கூட பேசு…” என்று விட்டு வெளியேறினான் முத்துராசு.

 

முத்துராசு சென்றதும் பெருமூச்சு விட்ட ஜெய் எங்கோ வெளியே கிளம்பிச் சென்றான்.

 

_______________________________________________

 

அருணிமாவை அறைக்குள் அடைத்ததும் அவள் எவ்வித குழப்பமும் போடாமல் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

 

மூடிய அவள் விழிகளைத் தாண்டி கண்ணீர் கசிய அவள் எண்ணவோட்டங்களோ கல்லூரி நாட்களை நோக்கிச் சென்றன.

 

அருணிமா துருவ்விடம் தன் காதலை வெளிப்படுத்தி விட்டுச் செல்ல, அவனோ எந்த எதிர்வினையும் ஆற்றாமல் புத்தகத்திலே கண்ணாக இருந்தான்.

 

அருணிமா துருவ்வின் பதிலை எதிர்ப்பார்க்காமல் கேன்டீனுக்கு வர, அங்கு அவளுக்காக காயத்ரி காத்திருந்தாள்.

 

காயத்ரி, “எங்க போயிருந்த டி… கேன்டினுக்கு வரலைன்னு சொன்ன…” என்க,

 

“என் ஆளு கிட்ட ப்ரபோஸ் பண்ண போயிருந்தேன்லே…” என அருணிமா கூறவும் காயத்ரி குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறி அதனை அருணிமாவின் முகத்திலே துப்பி விட்டாள்.

 

“ஏய்.. ச்சீ… கருமம்… என்னலே பண்ணுறீய…” என அருணிமா முகத்தைத் துடைத்துக் கொண்டு கோபமாகக் கேட்க,

 

“ஹேய் சாரி டி… நீ சீரியஸா காமெடி பண்ணவும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன் டி…” என்றாள் காயத்ரி.

 

அருணிமா, “எலேய்… யாரு புள்ள காமெடி பண்றது… நெசமா தான்லே சொல்றேன்…” என்கவும், “விளையாடாதே டி.. உனக்கு எங்க இந்த லவ் எல்லாம் செட் ஆக போகுது… நீ தானே லவ்னு சொன்னாலே தூர ஓடிருவ…” என காயத்ரி கேலி செய்ய,

 

“லந்தா… உன் க்ரஷ்ஷுக்கு தான்லே ப்ரபோஸ் பண்ணிட்டு வரேன்…” எனக் கூறிய அருணிமா அவசரமாக அருகில் இருந்த காயத்ரியின் பேக்கை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்ள, இம்முறை காயத்ரி துப்பிய காஃபி அவளது பேக்கையே அழுக்காக்கியது.

 

காயத்ரி, “என்ன டி சொல்ற…” என அதிர்ந்து கேட்க, “ஆமாலே… எனக்கு அவியல ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றாள் அருணிமா புன்னகையுடன்.

 

காயத்ரி, “எப்படி டி இவ்வளவு சீக்கிரம் போய் ப்ரபோஸ் பண்ணிட்ட… பார்த்ததும் எப்படி டி காதல்…” என்க, “பார்த்ததும் அவிய மேல வந்தது காதலான்னு தெரியல புள்ள… ஆனா அவியல எனக்கு பிடிச்சிருந்தது… அவிய கூட இருந்தா லைஃப் நல்லா இருக்கும்னு தோணிச்சுலே…” என ரசனையுடன் அருணிமா கூற,

 

“நல்லா இருந்தா சரி தான்… ஆனாலும் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அருணி…” என்றாள் காயத்ரி.

 

“என்னலே…” என அருணிமா புரியாமல் கேட்க, 

 

காயத்ரி, “பின்ன என்னடி… என் க்ரஷ்ஷ இனிமே நான் அண்ணான்னு தானே கூப்பிடனும்… ரொம்ப வேதனையா இருக்கு…” எனறாள் வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

 

“அடச்சீ… நான் கூட நீயி அவியல லவ் பண்ணிட்டியோன்னு ஒரு செக்கன் பயந்துட்டேன்லே…” என்ற அருணிமா காயத்ரியின் தோளில் அடிக்க, “ச்சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்…” என காயத்ரி கூறி விட்டு சிரிக்க அவளுடன் இணைந்தாள் அருணிமா.

 

அடுத்த வந்த நாட்களில் அருணிமா துருவ்வைத் தொந்தரவு செய்யாது அவனே அறியாது அவன் செல்லும் இடங்கள் எல்லாம் பின் தொடர்ந்தாள்.

 

அன்றும் அது போலவே அருணிமா துருவ்வைப் பின் தொடர்ந்து நூலகத்திற்குச் செல்ல, திடீரென அவளின் பார்வையில் இருந்து மறைந்தான் துருவ்.

 

அருணிமா, “எங்க போய்ட்டான்லே இந்தப் பயலு…” என்றவாறு சுற்றியும் கண்களால் அலச, திடீரென ஒரு கரம் அவளைப் பின்னிருந்து இழுத்து சுவற்றில் சாய்த்து பிடித்துக் கொள்ளவும் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தாள் அருணிமா.

 

அருணிமாவின் முன் அவளை முறைத்தபடி நின்றிருந்தான் துருவ்.

 

துருவ், “ஸ்டாக்கிங் பண்றது தப்புன்னு தெரியாதா?” எனக் கடுமையாகக் கேட்க, அருணிமாவின் கண்கள் அதிர்ச்சி மாறி தன்னவனை ரசிக்கத் தொடங்கின.

 

அருணிமா பதிலேதும் கூறாமல் இருக்கவும், “இங்க பாரு… இந்த லவ் எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது… எனக்கு அதுக்கு டைமும் இல்ல… முதல் விஷயம் நீ நினைக்கிற ஆள் நான் இல்ல… அதுக்குன்னே எவனாவது சுத்திட்டு இருப்பான்… போய் அவன லவ் பண்ணு…” எனக் கடுமையான குரலில் கூறினான் துருவ்.

 

அருணிமாவிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைக்கவும் துருவ் அவளின் முகத்தைப் பார்க்க, தன்னையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருப்பவளைக் கண்டு அதிர்ந்தவன் அப்போது தான் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை உணர்ந்து அவசரமாக அருணிமாவை விட்டு விலகினான்.

 

அதில் தன்னிலை அடைந்த அருணிமா வெட்கத்தில் முகம் சிவக்க நிற்க, 

 

துருவ், “நா…நான்…” என்று வார்த்தைகள் வராது திணறியவன் அங்கிருந்து செல்ல, “மாம்ஸ்… உனக்கு இன்னும் இந்த அருணிமாவை பத்தி தெரியாதுலே… நான் உன்ன தான் லவ் பண்ணுவேன்…” எனக் கத்தவும் ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அமைதியில் இருந்த நூலகத்தில் அவளது குரல் சத்தமாக எதிரொலித்தது.

 

அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து துருவ்வையும் அருணிமாவையும் மாறி மாறிப் பார்க்க, கோபத்தில் பல்லைக் கடித்த துருவ் அவசரமாக அங்கிருந்து வெளியேறினான்.

 

திடீரென அறைக் கதவு திறக்கப்படவும் கண் திறந்த அருணிமா அறையினுள் நுழைந்த ராஜதுரையைக் கண்டு எழுந்து நிற்க, அவளின் கரத்தை வெளியே இழுத்து வந்து தள்ளிய ராஜதுரை,

 

“என் மயேன் சொன்னதுக்காக தான்லே உன்ன வெளிய விட்டேன்… இல்ல அப்படியே சாகட்டும்னு விட்டு இருப்பேன்…” என்கவும் அருணிமா சந்தேகமாக தன் சகோதரனைப் பார்க்க, மாரியோ அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

 

ஆனால் அப் புன்னகையின் பின்னால் மறைத்து வைத்திருந்த வன்மத்தை அவன் மட்டுமே அறிவான்.

 

ராஜதுரை, “ஆத்தாளுக்கும் மவளுக்கும் வேணா என் மயேன் வேண்டாதவனா இருப்பான்லே… ஆனா அவன் தான் எனக்கு எல்லாமே… என் வாரிசுலே… எலேய் விஜயா… உனக்கு மயேன் மேல இருந்த ஆத்திரத்துல இம்புட்டு நாளும் எனக்கு ஒரே புள்ள தான்… அது இந்த கழுதை தான்னு சொன்னதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன்… ஆனா இனிமே நீயி அப்படி சொல்றது கேட்டா கம்முன்னு இருக்க மாட்டேன்…” என்று விட்டு மாரியுடன் வெளியேறினார்.

 

அவர்கள் சென்றதும் தன் மகளை நெருங்கிய விஜயா அமைதியே உருவாக இருந்தவளை உலுக்கி, “என்னலே பண்ணி வெச்ச இன்னைக்கு… அவிய இம்புட்டு ஆத்திரப்படுறாய்ங்க… சொல்லுலே… வாய திறந்து பேசுலே…” எனக் கேட்க, “கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடுறியா ஆத்தா…” எனக் கத்தி விட்டுச் சென்றாள் அருணிமா.

 

விஜயா, “ஆமாலே… எல்லாருக்கும் இப்போ நான் இருக்குறது தான்லே பிரச்சினை… ஆளாளுக்கு என்னையே வையுறீய… பாருலே.. ஒருநாள் இந்த ஆத்தா இல்லன்னா தான்லே என் அருமை புரியும்…” என்றார் விஜயா.

 

_______________________________________________

 

வீட்டிலிருந்து தனியே வெளியே வந்த ஜெய் கால் போன போக்கில் நடக்கத் துவங்கியவனின் விழிகள் ஒரு இடத்தில் நிலைத்து நின்றன.

 

பாவாடை தாவணி அணிந்த இளம் பெண் ஒருத்தி‌ தன் தாவணி நுனியை இடுப்பில் சொறுகி விட்டு ஒரு சிறுவனுடன் ஒரு மிட்டாய்க்காக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள்.

 

ஜெய் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க,

 

“எலேய் கார்த்தி… நான் உன் அக்கா தானே… குடுலே…” என அவள் கெஞ்ச,

 

“முடியாதுலே… நீயி எம்புட்டு தரம் வேணும்னே எனக்கு இந்த ஆரஞ்சு மிட்டாய காட்டி காட்டி சாப்பிட்டு இருப்பீய… பாரு… இன்னைக்கு ஐயன் கிட்ட கெஞ்சி காசு வாங்கிட்டு போய் ஆரஞ்சு மிட்டாய் வாங்கி வந்ததே உன்ன கடுப்பேத்த தான்லே…” என்றான் அவளது தம்பி.

 

உதட்டை சுழித்தவள், “நீயே அதைத் திங்குலே… யாருக்கு வேணும் உன் மிட்டாய்… ச்சீ… அது நல்லாவே இருக்காது…” எனக் கூறவும் அவளது தம்பியின் முகம் போன போக்கைப் பார்த்து ஜெய் தன்னையும் அறியாது வாய்‌ விட்டு சிரித்து விட இருவரின் பார்வையும் அவனிடம் திரும்பியது.

 

“எலேய்… யாருலே நீயி… எதுக்கு எங்களைப் பார்த்து சிரிக்கிறீய..” என அவள் கோபமாகக் கேட்கவும், “நீயி சண்டை போடும் போது ரொம்ப கியுட்டா இருந்ததுலே…” என பதிலளித்த ஜெய் அவளைப் பார்த்து புன்னகைக்க, “அடிங்கு….” என அடிப்பது போல் கை ஓங்கியவள், “என்னலே… எங்க ஊருக்கு வந்து எங்க கிட்டயே லந்து பண்ணுறியா…” எனக் கேட்கவும்,

 

“சாரி பியுட்டி… லந்து பண்ண வரல… லவ்வு பண்ண வந்தேன்…” என்றான் ஜெய்.

 

அதில் அதிர்ந்தவள், “என்னது லவ்வா… மவனே உன் ஆட்டத்த என் கிட்ட காமிச்சன்னா பொலி போட்டுருவேன்லே… வந்துட்டான் பியுட்டி கியுட்டின்னு… வாலைச் சுருட்டிட்டு இருலே…” என்க,

 

ஜெய், “அப்போ உன் பேர சொல்லிட்டு போ புள்ள…” என்கவும், “ஹேய் ச்சீ பே…” என உதட்டை சுழித்து கூறி விட்டுச் செல்ல, “எலேய் சென்னியம்மாள்… மிட்டாய் வேணாமா…” என அவளது தம்பி கத்தவும் பற்களைக் கடித்துக் கொண்டு திரும்பிப் பார்க்க, அவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.

 

சென்னி, “நீயே திங்குலே…” என்று கோபமாகக் கூறி விட்டுச் செல்லவும் “சென்னியம்மாள்… சென்னி..” என அவளின் பெயரைத் தனக்குள் கூறிப் பார்த்து புன்னகைத்தான் ஜெய்.

 

_______________________________________________

 

தன் அறையில் கட்டிலில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் கண்கள் மூடி இருக்க, அருணிமாவின் கலங்கிய கண்களே அவனுக்குள் தெரிந்தன.

 

எழுந்து அமர்ந்த துருவ் தன் அலமாரியைத் திறந்து அந்த புகைப்படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அமர, “என்னால தான் இன்னைக்கு அவ அவளோட அப்பா கிட்ட அடி வாங்கினா… என்னால தான் எல்லாப் பிரச்சினையும்… அவ எதுக்கு என்னை லவ் பண்ணணும்… நான் அவளுக்கு தகுதியானவனே இல்ல… அவ எப்படி வாழ வேண்டியவ… ஆனா என்னை லவ் பண்ணி இவ்வளவு கஷ்டப்படுறா… எனக்கு உங்க ஆசையையும் கனவையும் நிறைவேத்தணும்… வேற எதுவுமே அவசியமில்ல… அதனால தான் அவ காலேஜுல என் பின்னாடியே சுத்தி வந்தும் கண்டுக்காம இருந்தேன்… நான் வேணும்னு அவள கஷ்டப்படுத்தல… அவ என்னை வெறுக்கணும்.. ஆனா என்னால அவள அந்த நிலைமைல பார்க்க முடியல… ஆரம்பத்துல எனக்கு அவளை பிடிக்காது தான்… ஆனா… ஆனா கொஞ்ச நாள்ள அவளோட குழந்தை மனசு எனக்குள்ள…” என்றவாறு தன் நெஞ்சைப் பிடித்தவன், 

 

“இல்ல வேணாம்… நான் இப்படியே இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது… நான் வேணாம் அவளுக்கு… உங்க ஆசையை நிறைவேத்த எதுவும் தடையா இருக்கக் கூடாது…” என்றவன் அப் புகைப்படத்தை தன் விரல்களால் வருட, அதில் ஒரு சிறுவன் இடுப்பில் கை வைத்து பற்கள் தெரிய சிரித்தவாறு நிற்க, அப் புகைப்படத்தின் கீழே கொட்டை எழுத்துக்களால் ‘முத்துராசு – IAS’ என்று எழுதி இருந்தது.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்