கிட்டத்தட்ட அறையில் இருந்த பாதி பொருட்கள் தரையில் சில்லு சில்லாய் உடைந்திருந்தது. சப்தம் கேட்டு பத்மா வேகமாக அங்குவர, அவரை அறை வாசலிலேயே நிற்க வைத்து, “ஒன்னுமில்ல ம்மா, கைத் தவறி பூ ஜாடி கீழ விழுந்துருச்சு, அந்த சத்தம் தான்” என சமாளித்தான் ஹரிஹரன்.
நம்பாத பார்வை பார்த்த பத்மா, “கிளீன் பண்ண கலாவ அனுப்புறேன்” என நகரப் போனவரிடம், “இல்ல ம்மா, நாங்களே பாத்துக்கிறோம், இந்த நேரத்துல அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என அவரை அனுப்பிவிட்டு அறைக் கதவை சாற்றினான் ஹரிஹரன்.
யாழினியோ கோபத்தினூடே கட்டில் அருகே செல்லப் போக, “அங்க போகாத பட்டர்பிளை” என அவன் கத்திய கத்தில் அவள் அதிர்ந்து நிற்க, “ஒரு நிமிஷம்” என்றவன், கீழே நொறுங்கி இருந்த பொருட்களைக் காண்பிக்க, அதன்பின் மெதுவாக காலடி எடுத்து வைத்து கட்டிலில் அமர்ந்தாள் யாழினி.
நடப்பதற்கு வசதியாக ஒரு ஓரம் மட்டும் உடைந்திருந்த பொருட்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.
“என்ன மா உன் பிரச்சினை? எதுக்கு இவ்ளோ கோபம்” என சிறுப்பிள்ளையிடம் விசாரிப்பது போல் விசாரிக்க அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“நீ பாரி பிரதர காதலிச்சியா யாழு?” என்றவனின் குரல், ‘இல்லை‘ என்ற பதிலை எதிர்நோக்கி இருந்தது. தன் கணவனே இப்படியொரு கேள்வியை கேட்பான் என அவள் எதிர்பார்த்திராததால், அதிர்ச்சியுடன் அவனை நோக்க, “ஏன் கேட்கிறன்னா இன்னிக்கு பாரி பிரதர நீ பார்த்ததுல இருந்தே சரியில்லாம இருந்த, தேவையில்லாம கோபப்படறது, எரிஞ்சு விழறது. அதுக்கு சாட்சி தான இதெல்லாம்!” என கீழே உடைந்து கிடந்த பொருட்களை காண்பிக்க, அவள் தலை இடதுவலதாக ஆடியது.
“இப்படி தலையாட்டுனா என்ன அர்த்தம் யாழு?” என்றான் ஹரிஹரன். அவனின் கேள்வியிலேயே புரிந்து கொண்டாள் இன்று அவன் ஒரு தீர்க்கமான முடிவுடன் இருப்பதை.
“எனக்கு மாமாவ பிடிக்கும்…” என அவள் தயங்க, “அவர பிடிச்சதால தான் அவரோட காதல பிரிக்கணும்னு நினைச்சியா யாழு?” என்ற கேள்வியில் அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“எனக்கு எதுவும் தெரியாதுனு மட்டும் நினைச்சிறாத யாழு, உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே உன்னைப் பத்தி முழுசா தெரிஞ்சு தான் உன்னை கட்டிக்கிட்டேன்” என்றான் ஹரிஹரன். அவளின் இதழ்கள் கேலிப் புன்னகையை உதிர்த்தது.
“உங்க ஆருயிர் தோழி சொன்னாளா!” என நக்கலாக வினவ, “இப்பவும் நீ தப்பா தான் யோசிப்பியா யாழு, சத்தியமா ஃபிளவர் என்கிட்ட உன்னைப் பத்தி எதுவும் பேசுனதே இல்ல” என்க, அவளோ, “தோழிய காப்பாத்துறீங்க” என்றவள், எழுந்து ஜன்னலோரம் போய் நின்றுக் கொண்டாள்.
சாளரத்தின் வழியே தெரிந்த நிலவு தன் ஒளிக்கதிர்களை அவள் முகத்தில் படரவிட்டது. “என் வாழ்க்கைல நான் அதிகமா அன்பு செலுத்துன, நேசிச்ச ஒருத்தர்னா அது என் அப்பா தான். எல்லா பொண்ணுகளுக்கும் அவ அப்பா தான முதல் ஹீரோ. அப்படி தான் எனக்கும், ஆனா அவருக்கு…” என சற்று இடைவெளி விட்டவள், “நான் இரண்டாம் பட்சம் தான். அவரு சாமி தான் எல்லாம் அவருக்கு, என்னோட அப்பாவ என்கிட்ட இருந்து பிரிச்சவ அவ தான்… எப்ப பார்த்தாலும் சாமி சாமினு தான் உருகுவாரு, அதே அன்பு எனக்கும் கிடைக்கணும்னு நான் நினைச்சது தப்பா?” என்றவள் வெளியே வெறித்துக் கொண்டிருக்க, திரும்பி நின்றிருந்தவளின் உணர்வுகளை அவன் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
“என் அப்பாவுக்கு அடுத்து நான் நேசிச்ச ஒருத்தர்னா அது பாரி மாமா தான். இயற்கையா அத்தை பையன் மேல உள்ள பாசம் நேசம் தான் எனக்கும் அவர் மேல இருந்துச்சு. ஆனா… அவருக்கும் நான் இரண்டாம்பட்சமாகிட்டேன். அந்த இடத்தையும் பறிச்சது மலர் தான். அதுனாலயே எனக்கு அவமேல என்னிக்குமே பாசம் வந்தது இல்ல. என் நேசத்திற்குரியவங்கள தட்டிப் பறிக்க வந்தவளா தான் பார்த்தேன். இங்க யாருமே நேசத்தையும் பாசத்தையும் சரிவிகிதத்தில பங்கு போட்டுக் கொடுக்கிறது இல்லையே.
நான் என்ன தப்பு பண்ணேன், என் அப்பாவோட பாசம் எனக்கு வேணும்னு நினைச்சது தப்பா? ஆனா மத்தவங்க பார்வைக்கு நான் வில்லி தான! பரவால்ல, என் உணர்வுகள புரிஞ்சுக்கிட்டவரா என் கணவரா பாரி மாமா வேணும்னு தான் அப்பாகிட்ட நான் அன்னிக்கு அப்படி கேட்டேன்” என்றவளின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
அவளது படிப்பு முடியும் தருவாயில் தன் தந்தையின் முன் நின்றாள் யாழினி. “என்ன மா யாழு, படிப்பெல்லாம் எப்படி போகுது?” என கனிவாக சுந்தரபாண்டியன் விசாரிக்க, அவளோ அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், “அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்” என்றாள்.
“வா, வந்து பக்கத்துல உட்காரு மா” என அவளை தன்னருகே அமர வைத்துக் கொண்டவர், “என்ன சொல்லணும் யாழு மா?” என்றார் சுந்தரபாண்டியன்.
“அம்மா மாப்பிள்ளை பார்க்க தரகர்கிட்ட ஜாதகம் கொடுத்ததா சொன்னாங்க!” என்க, “ஆமா மா, உனக்கும் இருபத்தி இரண்டு ஆகுது டா. காலாகாலத்துல அததது நடக்கணும்ல” என அவள் தலையை வருடிவிட,
“எனக்கு பாரி மாமாவ பிடிச்சுருக்கு ப்பா” என்றாள் யாழினி. அவரின் அதிர்ச்சி முகத்தில் தெரிந்தது. பாரிவேந்தன் மலரை விரும்புவது ஓரளவுக்கு அவருக்கும் தெரியும். அதனால் தான் யாழினிக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருந்தார். தற்போது அவளும் அவனை விரும்புவதாக கூற என்ன பதில் அளிப்பது எனப் புரியாமல் தவித்தார்.
“என் ஆசைய நீங்க கண்டிப்பா நிறைவேத்துவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு ப்பா. ப்ளீஸ் ப்பா, எனக்காக இந்த ஒன்ன மட்டும் செய்ங்க” என தன் முன் கெஞ்சும் மகளுக்கு என்ன பதிலுரைப்பது எனத் தெரியாமல் குழம்பிப் போனார் சுந்தரபாண்டியன்.
“அதுவந்து மா…” என அவர் தயங்க, “எனக்கு மாமா வேணும் ப்பா, இல்லனா நான் உயிரோட இருக்க மாட்டேன்” என்றவள் அத்துடன் பேச்சு முடிந்ததாய் அங்கிருந்து எழுந்து செல்ல, சுந்தரபாண்டியன் பேச்சற்றுப் போனார்.
சந்தையில் இந்த பொம்மை தான் வேண்டும் என அடம்பிடிப்பது போல் யாழினி பாரியை வேண்டி அடம்பிடிக்க, சுந்தரபாண்டியனின் நிலை மோசமானது.
இதுவரை யாழினிக்காக எதுவும் செய்ததில்லை என்பதால் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற கெஞ்சாத குறையாக பாரிவேந்தனை சம்மதிக்க வைத்தார். மரியாதைக்குரியவராக தன் மனதில் இருப்பவரின் வேண்டுதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்தான் அவன்.
அவர்களை அதிகம் அச்சுறுத்தியது அவளின் “நான் உயிரோட இருக்க மாட்டேன்” என்ற வார்த்தைகள். தன் மாமனுக்காக சம்மதம் கூறிய பின் தான் திருமணம் நிச்சயமானது.
***
நினைவுகளில் மூழ்கி இருந்தவளின் கண்களில் கண்ணீர் அரும்ப, “எனக்குத் தெரியும் யாழு” என்றான் ஹரிஹரன். “ஆனா அதுவும் நடக்கல… என் வாழ்க்கைல மட்டும் நான் நேசிக்கிறவங்களுக்கு நான் எப்பவும் இரண்டாம்பட்சமாகிறேன். உங்களுக்கும் நான் அப்படித் தான!” என்றவளை என்ன பதில் சொல்லித் தேற்றுவது எனத் தெரியவில்லை.
“என் அப்பாவுக்கும் அவ தான் மொத, அடுத்து நான் நேசிச்ச என் மாமாவுக்கு அவ தான் முதல்ல, இப்போ என் கணவனா இருக்கிற உங்களுக்கும் உங்க ஆருயிர் தோழி தான முக்கியம். நான் இரண்டாம் பட்சம் தான… எல்லா இடத்துலயும் நான் இரண்டாவது இடத்துலயே தான இருக்கேன்” என்றவளின் வார்த்தைகளில் தெரிந்த விரக்தியை அவன் உள்வாங்கிக் கொள்ள சற்று சிரமப்பட்டான்.
அவள் தேவையில்லாமல் கோபப்படுகிறாள் என்று மட்டுமே யோசித்தவனுக்கு, அவள் அன்புக்காக தான் போராடுகிறாள் என்று புரியாமல் போனது.
“இன்னிக்கு என்னோட கோபம் முழுக்க உங்க மேல மட்டும் தான். நான் உங்க பக்கத்துல நின்னாலும் உங்க கண்கள் உங்க தோழிய மட்டும் தான் தேடுது, அப்போ நான் எதுக்குங்க இங்க இருக்கணும். ஏதோ ஜவுளி கடைல அலங்கரிச்சு வச்ச பொம்மையா தான என்னை எல்லாரும் பார்க்குறீங்க. உங்க யார் கண்ணுக்கும் நான் உயிருள்ள மனுஷியா தெரியல தான!” என்றவளின் வார்த்தைகளில் சுக்கு நூறாகிப் போனான் ஹரிஹரன்.
உண்மை தான், தன் தோழியை சமாதானப்படுத்தவும் அவளை சந்தோசப்படுத்தவும் நினைத்தானே தவிர, தன்னருகே தன் நிழலாய் நின்றிருந்தவளை கண்டுகொள்ளாமல் தானே விட்டான். அவளின் கோபம் கூட நியாயமற்றது என்று தானே அவள்மேல் கோபம் கொண்டான்.
“பட்டர்பிளை…!” என அவன் தயங்க, கைநீட்டி தடுத்தவள், “எல்லா இடத்துலயும் ரெண்டாவது இடத்துலயே இருக்கிறது இங்க வலிக்கிதுங்க, இப்போ எனக்கு மட்டுமே சொந்தமான உறவுக்கு கூட நான் இரண்டாம் பட்சம் தான்னு தெரியும்போது…” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசாமல் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் யாழினி.
ஹரிஹரனுக்கோ தலை வலித்தது. அவள் பாரியும் மலரும் சந்தோசமாக இருப்பதைக் கண்டு தான் கோபம் கொண்டாள் என்று நினைத்திருக்க, அவளோ இப்பொழுது அவன் மீதல்லவா மொத்த பழியையும் சுமத்திவிட்டுச் செல்கிறாள்.
அவன் எண்ணியதுபோல் பாரிவேந்தன் மேல் அவளுக்கு காதல் இல்லை என்பது புரிந்தது. அவளின் ஒரே நோக்கம் அவர்கள் அன்பு முழுக்க தனக்கு மட்டுமே வேண்டும் என எண்ணியது தான், அதனை செயல்படுத்த அவள் செய்த செயல்கள் தான் தவறானவை. உடன்பிறந்த சகோதரிகளாய் இருந்தாலும், “எல்லாமே அவளுக்கு தான் பண்றீங்க… அவ தான உங்களுக்கு உசத்தி” என தனக்கு முக்கியத்துவம் நிராகரிக்கப்படுகின்றது என்ற கோபம் வெளிப்படத் தான் செய்கின்றது.
அப்படி இருக்கையில், இரு தாய்க்கு பிறந்த இந்த சகோதரிகளுக்கும் அன்பு சரிசமமாய் கொடுக்கப்படாததால் வந்த விளைவு யாழினியை தவறானவளாக காட்டியது. ஒரு விதத்தில் இது உரிமைப் போர் என்றுகூட கூறலாம்.
இந்த யோசனைகளுக்கிடையே ஏதோ ஒன்று அவனை யோசிக்க வைக்க, “ஏய், என்ன சொன்ன… என்மேல தான் கோபமா! பட்டர்பிளை உண்மைலயே என்மேல தான் கோபமா உனக்கு” என மெத்தையில் குதித்தவன், “அப்போ என்கிட்டயும் நீ உரிமை கொண்டாடுற தான!” என குதித்துக்கொண்டே கத்தினான்.
அவனின் கத்தலில் குளியல் அறையில் இருந்து வேகமாக யாழினி வெளியே வந்தவள், அவன் மெத்தையில் ஏறி சிறுபிள்ளை போல் குதிப்பதைப் பார்த்து கேவலமான பார்வை ஒன்றை பார்க்க, “ஹி…” என இளித்தவண்ணம் கீழே இறங்கினான்.
அவனை முறைத்தவள், கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டாள். அவள் அருகில் படுத்தவன், “யாழு உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்க, “ம்…” என்றவாறே அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள் யாழினி.
“ஒருவேள பாரி பிரதருக்கும் உனக்கும் கல்யாணம் ஆகி இருந்தா பாரி பிரதர் உன்னை காதலிச்சுருப்பார்னு நீ நினைக்கிறியா?” என்க, அவனின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் தடுமாறினாள் யாழினி.
“உனக்கு ஒன்னு தெரியுமா, பாரி பிரதர் இந்த அஞ்சு வருஷத்துல ஃபிளவர மறந்துருப்பார்னு நீ நினைச்சு தான இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண” என்க, அவளின் எண்ணமும் அன்று அதுவாக தான் இருந்தது. நேராக திரும்பிப் படுத்தாள் அவனின் பதில் வேண்டி.
“அவங்க பார்க்காம இருந்தா காதல மறந்துருவாங்கனு நீ நினைச்சது தப்பு யாழு… இந்த அஞ்சு வருஷத்துல மலர் வேணும்னா அவர பார்க்காம இருந்திருக்கலாம். ஆனா, பாரி பிரதர் அவள பார்த்துட்டுத் தான் இருந்தாரு” என்க, அவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.
“அவரு அடிக்கடி இங்க வந்து அவள பார்த்துருக்காரு யாழு… அப்போ எனக்கு அவரு யாருனு தெரியாது, ஆனா அடிக்கடி அவர் மலர ஃபாலோ பண்ணத நான் கவனிச்சுருக்கேன். அப்ப எவ்ளோ முயற்சி பண்ணியும் அவர பத்தின தகவல்கள் எனக்குக் கிடைக்கல, அவர் முகத்தை கூட நான் ஒழுங்கா பார்த்தது இல்ல. ஆனா, உங்க ஊர்ல அவர முதல் தடவை பார்க்கும்போதே அவர எங்கேயோ பார்த்த ஃபீல், ஒருநாள் அவர்கிட்டயே நான் நேரடியா கேட்டதுக்கு அப்புறம் அவரே ஒத்துக்கிட்டாரு” என்றான் ஹரிஹரன்.
இது யாழினிக்கு புதுத் தகவல். ஐந்தாண்டு இடைவெளி அவளை மறக்க செய்திருக்கும் என்று தான் இவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவனோ, மலரை தேடி கோயம்புத்தூர் வரை அடிக்கடி சென்றுள்ளான் என்பது அதிர்ச்சியாக தான் இருந்தது.
“இப்போ எதுக்கு உன்கிட்ட இத சொல்றன்னா ஒருவேள உனக்கும் பிரதருக்குமே கல்யாணம் ஆகி இருந்தா கண்டிப்பா அவர் மனசளவுல உன்கூட வாழ்ந்திருக்க மாட்டாரு” என்க, அவள் உடல் பதறியது.
அவன் மலரை காதலித்தது தெரியும் தான். ஏன் அவர்களின் பிரிவுக்கு அவள் தான் காரணமாய் இருந்தாள். ஆனால், கால இடைவெளி அனைத்தையும் மாற்றி இருக்கும் என்று தான் எண்ணி இருந்தாள் யாழினி. ஆனால், அவள் நினைத்தது எல்லாம் தவறானது என்று ஹரிஹரனின் சொற்கள் அவளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தது.
“உன்கிட்ட நான் எதையும் மறைக்கக் கூடாதுனு தான் இத இப்போ சொன்னேன் பட்டர்பிளை… கண்டிப்பா உனக்கு இது கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும் தான், ஆனா இந்த கஷ்டத்தை தாண்டி நீ எனக்கு நீயா வேணும் யாழு” என்றவன், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான் ஹரிஹரன்.
அவனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள் யாழினி. அவளால் இன்னமும் ஹரிஹரனை புரிந்துகொள்ள முடியவில்லை தான். தன் மனைவி வேறொருத்தனை மணக்க இருந்து, சந்தர்ப்ப வசத்தால் அவனின் மனைவியாகி இருந்தாலும், தன்னை குறை கூறாமல் தன் தவறை சுட்டிக்காட்டி, அதனை உணர வைத்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. ஆனால், ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.
கண்களை இறுக மூடி உறங்க முயற்சி செய்தாள். அவளின் மனமாற்றத்திற்கு சற்று கால தாமதம் ஆகும் என்றெண்ணியவன், அமைதியாக கண்களை மூடினான் ஹரிஹரன்.
வரவேற்பு விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் மலர் ஊருக்கு கிளம்ப ஆயுத்தமாக, பத்மா அவளைத் தடுத்தார். “நாளைக்கு கேம்ப் இருக்கு டார்லிங், அவன் வேற இல்லாததால இப்போ நாங்களே தான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணனும். நாங்களும் இந்த நேரத்துல லீவு போட்டா நல்லா இருக்காதுல்ல, காலைல கிளம்பிப் போனா ரொம்ப லேட்டாகிரும். இப்பவே கிளம்புறோம் டார்லிங்” என அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“இல்ல மலர், இந்த நேரத்துல எப்படி டிரைவ் பண்ணுவாங்க? கஷ்டம் டா” என்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல டார்லிங். செந்தில் இருக்கான், இரண்டு பேரும் மாத்தி மாத்தி டிரைவ் பண்ணிக்குவாங்க. மூணு மணி நேரத்துல ஊருக்குப் போய்ருவோம்” என அவரை சமாதானப்படுத்திவிட்டு, ரேவதியிடமும் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.
அவர்களுடன் சண்முகமும் வருவதாகக் கூற, ஆறு பேரும் கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கிப் புறப்பட்டனர்.
முன்சீட்டில் சண்முகம் அமர்ந்துகொள்ள, பாரிவேந்தன் வண்டியை ஓட்டினான். பின்னால் இருக்கையில் மற்ற நால்வரும் அமர்ந்துகொள்ள வண்டி மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
இந்திராவிற்கு உறக்கம் வராததால், மலரை நோண்டியவள், “தூங்காத டி” என்றாள். “தூக்கம் வருது டி இந்து, நீயும் கொஞ்சம் நேரம் தூங்கு” என்றவாறே அவள் கண்ணயர, அவளோ, ‘என்னை விட்டுட்டா நீங்க தூங்குறீங்க‘ என நினைத்தவாறே தண்ணீர் பாட்டிலை எடுத்து அதனை மூவரின் முகத்திலும் ஊற்றிவிட, மொத்த தூக்கமும் கலைந்து போய் அவள்மேல் கொலை காண்டில் அமர்ந்திருந்தனர்.
‘ஹி…’ என பல்லை காதுவரை இளித்து வைக்க, “உன்னை” என முதுகில் நான்கு அடி வைத்தாள் மலர்விழி. “அண்ணா பாவம்ல டி, கண்ணு முழிச்சு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காரு, நீங்க என்னடான்னா இப்படி சொகுசா தூங்குறீங்க… அதான் எழுப்பி விட்டேன்” என்க, “அப்படியே அண்ணன் மேல பாசம் பொத்துக்கிட்டு ஆறா ஓடுது” என முறைத்தாள் மலர்விழி.
செந்திலும் சிலம்புவும் காதல் சேட்டைகள் செய்து கொண்டிருக்க, “இதுங்க தொல்லை நம்மள விடவே விடாது போல” என தலையில் அடித்துக் கொண்டாள் இந்திரா.
சிறிது நேரம் பேசிக் கொண்டே வந்தவர்கள் அப்படியே உறங்கி விட, பாதி தூரம் வரை வண்டியை ஓட்டிய பாரிவேந்தன் சண்முகத்தை ஓட்டச் சொல்லிவிட்டு பின்சீட்டைப் பார்த்தான்.
இந்திரா மட்டும் உறக்கம் வராமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருக்க, மலரோ அவள் தோளில் சாய்ந்து உறங்கி இருந்தாள். அவளுக்கு அருகில் சிலம்பு செந்திலில் தோளில் தலைசாய்ந்திருக்க, அவன் அவள் தலையில் தன் தலையை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
பாரிவேந்தனின் பார்வை மலரின் மீது இருக்க, அதனைக் கண்ட இந்திரா, “இங்க வந்து உக்காருறீங்களா ண்ணா?” என்றாள். அவனும் சம்மதிக்க, தான் எழுந்து முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பாரிவேந்தன் தன்னவள் அருகே அமர்ந்து கொண்டான்.
அவனது தோளில் சாய்ந்து அவள் உறங்க, அவளது கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் அவள்மேல் லேசாக சாய்ந்தமர்ந்தான்.
அதனைக் கண்ட இந்திரா மென்புன்னகையுடன், திரும்பியவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தை, ‘என்ன‘ என ஒற்றைப் புருவம் உயர்த்தினாள்.
‘ஒன்னுமில்ல‘ என தலையாட்டியவன், இதழ்களில் புன்னகை உறைய வண்டியை இயக்க, இந்திராவின் கன்னங்கள் நாணமேற, கண்ணாடி வழியே வெளியே பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.